• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 29

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 29

இரவில் நடந்த கூடலின் போது அவள் அவனுக்கு ஒத்துழைத்ததில் அவன் உணர்வுகள் எல்லாம் விடிந்த பின்னரும் பேயாட்டம் தான் போட்டன, அலுவலகம் வர கூட அவனுக்கு மனதில்லை, ஆனால் வர வேண்டிய கட்டாயம், அதனால் உறங்கி கொண்டிருந்தவளை பார்த்து ஒரு ஏக்க பெருமூச்சை விட்டுக் கொண்டு அலுவலகம் வந்திருந்தான், வேலை தலைக்கு மேல் இருந்தாலும் அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை, இப்போது அவனால் வீட்டிற்கு செல்லவும் முடியாத சூழ்நிலை, ஈவ்னிங் ஒரு மீட்டிங் வேறு இருந்தது, போனால் வர முடியாது என்பது தெரியும் அதனால் தான் அவளை வர சொல்லி இருந்தான்,...

கவனம் லேப்டாப்பின் மீது இருந்தாலும் பார்வை நிமிடத்திற்கு பல முறை அவளிடம் தான் வந்து நின்றது, அவளோ அவன் பார்வையை கவனிக்காமல் ஏதோ யோசித்தபடி இருக்கவும், அவனுக்கோ சற்று கோபம்,.. "ஏய்" என்று உரக்க அழைத்தான், அவன் அழைப்பில் திடுக்கிட்டு போனவள், அவனை மிரண்டு பார்க்க, அவளது மிரளும் விழிகளை கண்டு, 'உஃப்' என்று இதழ்களை குவித்து ஊதிக்கொண்டு, அவளை விழிகளால் தன் பக்கம் அழைக்க,... 'இப்போ எதுக்கு கூப்பிடுறார்' மனதில் நினைத்தபடி மெல்ல அடியெடுத்து வைத்து அவனருகில் வந்தவள்... "சொல்லுங்க சார்" என்க,... நொடியில் அவளது கரத்தினை பற்றி அவன் சுண்டி இழுக்கவும் மலர் செண்டாய் அவன் மீது வந்து விழுந்தாள் அவள், அதன் பிறகு இருவருக்கும் இடையே வார்த்தைகள் பேசவில்லை உணர்வுகள் மட்டுமே பேசின, இதயங்களின் மெதுவான இசை அந்த அறை எங்கும் எதிரொலித்தது,..

நாட்கள் சுமூகமாகவே கடந்தன, இப்போது அவர்களின் வாழ்க்கை முற்றிலும் தெளிவாகவும் அமைதியாகவும் நகரத் தொடங்கியது, ஆரவ், முன்பு காட்டிய வன்மையைச் சுமூகமாக மறந்து, நித்திலாவுடன் மென்மையான அணுகுமுறையோடு நடந்து கொண்டான், அவன் வார்த்தைகளிலும், செயல்களிலும் கவனம், அக்கறை மற்றும் மென்மை காணப்படுவதை உணர்ந்த நித்திலா பூரண நிம்மதியோடு அவனை அணுக ஆரம்பித்தாள்....

நித்திலாவின் உள்ளம் ஆரவ்வின் அக்கறைக்கும், அமைதியான செயல்களுக்கும் இசைந்து போய்
காதல் மெதுவாக, அதே சமயம் உறுதியோடு நித்திலாவின் மனதில் வேரிட்டு, வளரத் தொடங்கி இருந்தது,..

அவர்களின் ஒவ்வொரு நாட்களும் மென்மையான அன்பினாலும், பரஸ்பர மரியாதையினாலும் நிம்மதியை கொண்ட திசையில் நகர ஆரம்பித்தது....

இப்படி போய்க் கொண்டிருந்த தினத்தில் தான் அன்று அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த ஆரவ் மிகவும் சோர்வாக காணப்பட்டான், தலைவலியோடு சேர்த்து உடல்வலியும் படுத்தி எடுக்க, அன்று மாலை சீக்கிரமாகவே வீடு வந்து சேர்ந்திருந்தான்,..

வழக்கமாக இரவு எட்டு மணிக்கு மேல் வருபவன் இன்று சீக்கிரமே வந்ததில் குழம்பிய நித்திலா, அறைக்கு சென்ற நேரம், அவனோ உடையை கூட மாற்றாமல் படுக்கையில் விழுந்து கிடந்தான்,... 'என்னாச்சு இவருக்கு' புரியாமல் யோசித்தவள்,.. மெல்ல அவனருகில் வந்து,.. "சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா சார்" என்று கேட்டாள்,...

விழிகளை திறக்க இயலாமல் திறந்தவன், அவளை சோர்வுடன் ஏறிட்டு,... "வேண்டாம்… இப்போ சாப்பிட தோணல, கொஞ்சம் தூங்கணும்" என்று மெதுவாக சொன்னான்...

அவனது குரலில் இருந்த அந்த நொந்த சோர்வு, நித்திலாவின் உள்ளத்தை பதறவைத்தது, மெல்ல அவனருகில் வந்து கவலையோடு அவன் நெற்றியை வருடியவளுக்கு, அவன் உடல் சூடாக இருப்பதை உணரவும்,.." சார், உங்களுக்கு காய்ச்சல் மாதிரி இருக்கு நான் டாக்டரை கூப்பிடவா" என்றாள் அவசரமாக...

அவனோ மறுப்பாக தலை அசைத்து, "வேணாம்,.. கொஞ்ச நேரம் தூங்கினா சரி ஆயிடும்…" என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டான்...

நித்திலா சற்றே தடுமாறினாள், அவளின் பார்வையில் கவலை மட்டும் மிதந்தது, மெதுவாக எழுந்து சமையலறை சென்றவள், அவனுக்காக சூடான கஞ்சி தயார் செய்துவிட்டு, காய்ச்சலுக்கான மாத்திரையையும் எடுத்து கொண்டு அவனறைக்கு வந்தாள்,...

அவனோ காய்ச்சலினால் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு கிடக்க, அவன் தூங்கவில்லை என்பதனை அறிந்தவள்,.. "கொஞ்சம் இந்த கஞ்சியை குடிச்சிட்டு மாத்திரையை போட்டு படுங்க, இல்லைனா தூக்கம் வராது" என்று சொல்ல, அவனும் வம்பு பண்ணாமல் எழுந்து சாய்ந்த வாக்கில் அமர்ந்தான், அவள் தான் அவனுக்கு கஞ்சியை ஊட்டி விட்டு மாத்திரையையும் கொடுத்தாள், அவள் ஊட்டி முடிக்கும் வரை அவன் விழிகளை திறக்கவே இல்லை, அவனை திறக்க விட முடியாமல் சோர்வு அவனை மூழ்கடித்திருந்தது,..

அவனை உறங்க சொன்னவள், அவனுக்கு போர்வையை போர்த்திவிட்டு கீழே வந்த நேரம் சித்ராவும் வந்திருந்தார், அவரிடம் ஆரவ்விற்கு காய்ச்சலாக இருப்பதாக கூற, அவரோ பதறி தான் போய் விட்டார்,...

"பதறாதீங்க மேடம், இப்போ தான் கஞ்சி கொடுத்தேன், மாத்திரை போட்டு தூங்குறார், சரியாகிடும்" என்று ஆறுதல் சொல்ல,... "காய்ச்சல் வந்தா அவன் ரொம்ப சோர்ந்து போயிடுவான் நித்திலா, சின்ன வயசுல இருந்தே அப்படி தான், நான் அவனை பார்த்துட்டு வரேன்" என மகனை பார்த்து விட்டு வந்தவர்,... "உடம்பு இன்னும் சூடா இருக்கு நித்திலா, டாக்டரை வர சொல்லி இருக்கேன்" என்று கூற, அவளுக்கும் அதுவே சரியென்று பட்டது,...

கொஞ்ச நேரத்தில் மருத்துவரும் வர, ஆரவ்வை பரிசோதித்தவர் சாதாரண காய்ச்சல் என்று கூறி மாத்திரை கொடுத்தார், ஊசி போட்டால் காய்ச்சல் உடனே குறைந்து விடும் என்று மருத்துவர் எவ்வளவோ சொல்லியும் அவன் போட மறுத்து விட்டான்,...

"உனக்கு இன்னும் சின்ன குழந்தைன்னு நினைப்பா ஆரவ், இன்ஜக்சன் போட்டுகிட்டா என்ன" என்று சித்ராவும் கோபமாக கேட்டிருக்க,... அவனோ,... "ப்ளீஸ் மாம், என்னை பேச வைக்காதீங்க, வேண்டாம்னா விற்றுங்க, டேப்லட்ஸ் மட்டும் போதும்" என்று பிடிவாதமாக கூறியவனை ஒன்று செய்து விட முடியவில்லை அவரால்,..

மருத்துவர் ஈரத்துணியை நெற்றில் வைத்தால் சூடு குறையும் என்று சொல்லி சென்றிருக்க, சித்ராவிடம் தானே அதனை செய்வதாக கூறி இருந்தாள் நித்திலா,... மீண்டும் அவன் அறைக்கு வந்தவள், அவனது நெற்றியில் ஈரத் துணியை வைத்தாள், சோர்வாக கண்களை மூடிக் கிடந்தவனுக்கு அந்த தொடுதலில் சற்றே சுகமாக இருப்பது போலத் தோன்றியது..

நித்திலாவிற்கோ அவனது முகத்தை பார்த்து இதயம் மெதுவாக நெகிழ்ந்தது... 'இவர் எவ்வளவு கடுமையானவரா இருந்தாலும் என் மனம் ஏனோ இவர் பக்கம் தான் சாயுது' என்று உள்ளத்தில் எண்ணியவாறு அவனருகில் அமர்ந்து அவனை ரசித்தவள், அவனது நெற்றி மீது வைத்திருந்த ஈரத்துணியை மீண்டும் மாற்றியபடி, அவன் முகத்தை தான் ஆழமாக கவனித்தாள்....

சாதாரணமாக எப்போதும் கூர்மையாய், கடுமையாகத் இருக்கும் அந்த முகம், தூக்கத்தில் ஒரு சிறு பிள்ளையின் முகம் போலவே இருந்தது, அவனது மூச்சின் ஒலி கூட அவளது காதில் நிம்மதியாகக் கசிந்தது....

அந்த தருணத்தில், அவள் இதயம் அவனை வேறொரு கோணத்தில் பார்க்கத் தொடங்கியது... 'எத்தனை துன்பம் கொடுத்தாலும், எத்தனை காயம் கொடுத்தாலும் என்னால இவரை வெறுக்க முடியாது, எனக்கே அதிசயமா தான் இருக்கு, ஏன் என் மனசுக்கு இவரை இவ்வளவு பிடிச்சு போனதோ தெரியல' என்று நினைத்தபடி அவள் அவனை தான் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்...

அவன் தூங்கியதை உறுதி படுத்திக் கொண்டு மெதுவாக அவனது கேசத்தை வருடியவள்,.. 'நான் உங்களை ரொம்பவே காதலிக்கிறேன்ங்க, என்னை மாதிரி உங்களுக்குள்ளும் காதல் இருக்குமா? இருக்கும்னு தான் தோணுது, உங்க அக்கறை, உங்க பார்வை எனக்கு அதை தான் சொல்லுது' என்றவளின் மென்மையான சொற்கள் அந்த அறையின் அமைதிக்குள் கலந்து மறைந்தன,..

அவளது பார்வையிலிருந்த அந்த ஆழமான அன்பு, அவனின் தூக்கத்தைத் தொந்தரவு செய்ததோ என்னவோ, அவன் சற்றே அசைந்து திரும்பினான், அந்தச் சூழலில் அவளது விரல்கள் அவன் கரத்தின் மீது விழ, தூக்கத்திலேயே அவன் அவளது விரல்களைப் பிடித்துக் கொண்டான், அந்தச் சிறிய தொடுதலுக்கே அவள் இதயம் சிலிர்த்து, முழு உடலும் புது இசை கண்டது போல கண்கள் வழியே புன்னகை வழிந்தது…

சில மணி நேரங்களுக்கு பின் மெதுவாக விழிகளைத் திறந்தான் ஆரவ், சுற்றிலும் இருள் நிறைந்திருந்தது, பக்கத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் நித்திலாவை குழப்பத்துடன் பார்த்துவிட்டு.. "டைம் என்னாகுது" என்று சோர்வான குரலில் கேட்டான்...

"ஒரு மணியாக போகுது…" என்றாள் மெதுவாக.. "ஒன்னா? இன்னும் நீ தூங்காம என்ன பண்ணுற" என்று கேட்டவனுக்கோ உடல் குளிர, உடலை குறுக்கிக் கொண்டு,.. "அந்த ஃபேனையும் ஆஃப் பண்ணிடு" என்றான்...

அவளும் அணைத்தவள்,... அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல்,... "டாக்டர் டைம்க்கு மாத்திரை போட சொல்லி இருக்காங்க, நான் கஞ்சி எடுத்துட்டு வரேன், குடிச்சிட்டு மாத்திரை போடுங்க " என்று சொல்லி வெளியேறியவள், கையில் கஞ்சியோடு வந்தாள்,..

மெல்ல உட்கார முயன்ற அவனை, சற்றே சாய்ந்து அமர வைத்தவள், அவனுக்கு கஞ்சியை ஊட்ட ஆரம்பித்தாள், சோர்வில் சாப்பிட கூட மனம் இல்லாமல் இருந்த அவனோ, அவள் கண்களில் தெரிந்த அக்கறையைப் பார்த்து மெளனமாகக் கீழ்ப்படியத் தொடங்கினான்...

"மருந்து குடிச்சா சீக்கிரம் நல்லா ஆகிடுவீங்க" என்றாள் அவள் மெதுவாக, அவள் குரலில் இருந்த அன்பு அவனது மனதை என்னவோ செய்ய, சில நொடிகளுக்கு மேல் அவன் பார்வை அவளது முகத்தில் நிற்க அந்த பார்வையை தாங்க முடியாமல் தலை குனிந்து கொண்டவள்,... "தூங்குங்க,... நான் இதை வச்சிடுட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியேறி விட, அவனும் சோர்வில் உறங்க தொடங்கி இருந்தான்,...

இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆரவ், திடீரென குளிரில் நடுங்க ஆரம்பித்தான், உறங்கும் மனநிலை இல்லாது, விழிகள் மூடி படித்திருந்தவளுக்கு, அவனது துடிக்கும் உடலைக் கண்டு மனம் பதறியது, அவனின் மீது இருந்த போர்வையை சரியாக போர்த்திவிட்டாள், ஆனாலும்
அதுவும் போதவில்லை என்பது போல அவன் நடுங்கிக் கொண்டேயிருந்தான்...

மனம் தாங்காமல் மெதுவாக அவனருகே சென்று படுத்தவள், அவனது தோள்மீது கரத்தைச் வைத்து மெல்ல அணைத்துக் கொண்டு அவனது குளிரை போக்க முயன்றாள்...

அவள் நெருக்கத்தை உணர்ந்து விழிகளை சற்றே திறந்த ஆரவ் சோர்வான குரலில்,.. "தள்ளிப் போ… இல்லேன்னா என் ஃபீவர் உனக்கு வந்துடும்…" என்றான்...

அந்தச் சொற்களில் இருந்த அக்கறை அவளது உள்ளத்தைக் கிழித்து நெகிழச் செய்ய, முகம் மலர்ந்தவள் மெதுவான குரலில்,.. "அதெல்லாம் வராது… நீங்க பேசாம படுங்க…" என்று சொல்லி அவனோடு இன்னும் நெருங்கினாள்...

அவளது மென்மையான அணைப்பில் கதகதப்பை உணர்ந்தவனின் நடுக்கமும் சிறிது குறைந்தது,
அவனது மூச்சின் சூடு அவளது முகத்தில் பட்டு தெறிக்க, அவள் இதயம் துடித்தது, அவளுக்கே தெரியாமல் முழுக்க அவனைத் தழுவி நெருக்கமாக்கிக் கொண்டிருந்தவளின் இதழ்களில் சற்றே நடுக்கம், ஆனால் மனதிற்க்குள் ஒரு வித்தியாசமான அமைதியும் நிலவியது, அவனோ அவளது அருகாமையில் சோர்வை மறந்து அமைதியாகக் கண்களை மூடி தூங்கியிருந்தான்...
 
  • Love
Reactions: shasri