• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 40 (இறுதி பகுதி)

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 40 (இறுதி பகுதி)

ஆரவ்வின் வீடு அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது, வீட்டின்
மாடிப்படிகள் எல்லாம் துலக்கப்பட்டு, வண்ணக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, வீட்டு வாசலில் தோரணமும், மணம் வீசும் மல்லிகை மலரும் அடர்ந்து தொங்கியது, அன்று ஆரவ்–நித்திலாவின் செல்லப் மகளுக்கு பெயர் சூட்டும் விழா என்பதால் வீடே அலங்காரத்தில் கண்களை கவரும் வகையில் இருந்தது,...

சித்ரா தான் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார், விருந்தாளிகள் இன்னும் வரவில்லை என்றாலும் முன்கூட்டியே முடிக்கும் வேலைகள் நிறைய இருந்ததால் அவர் படும் பிஸியாக இருக்க, கோமலமும், வீட்டின் சில பணியாளர்களும் தான் அவருக்கு உதவியாக இருந்தனர்,...

அனைவருக்கும் முன்பே ஆரவ்வின் நண்பர்களான தனிஷாவும், தீபனும் அவர்களது மகன் வினித்துடன் வருகை தந்திருக்க, அவர்களை கண்டு இன்முகத்துடன் வரவேற்றார் சித்ரா,.. சித்ராவுடன் அன்போடு சில நிமிடம் பேசியவர்கள்.. "ஆரவ் எங்கே இருக்கான்?" என்று கேட்டு, நேராக அவன் அறைக்கே சென்றார்கள்....

ஆனால் அறைக்குள் கால் வைத்தவர்களுக்கு, தாங்கள் கண்ட அந்த காட்சியை பார்த்து சில நொடிகள் அதிர்ந்தே விட்டனர், 'இது தன் நண்பன் தானா?' எனும் சந்தேகம் தான் அவர்களுக்கு,..

அப்படி அவர்கள் கண்டு அதிர்ந்த காட்சி வேறொன்றுமில்லை, ஆரவ் தன் செல்ல மகளுக்கு டையப்பர் மாற்றிக் கொண்டிருந்தான்,
அவன் முகத்தில் இருந்த அந்த அக்கறை, சிறு புன்னகையோடு அவன் கைகளில் இருந்த நுணுக்கம் அதையெல்லாம் பார்த்த தனிஷா, தீபன் இருவருக்கும் சொல்வதற்கே வார்த்தைகள் வரவில்லை...

சற்றுநேரம் அவனை கவனித்த படியே நின்ற தீபன், சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாமல்,
"ஏய்... எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்னு சொல்ற மாதிரி, நீ என்னடா இப்படி மாறி போயிட்ட!"
என்று கிண்டலாகக் கேட்டு அறைக்குள் நுழைந்த தீபனை தனிஷாவும் நுழைந்தாள்,..

ஆரவ்வோ சற்றேதயங்காமல் புன்னகையோடு, "என் பொண்ணுடா! இவளுக்கு நான் இதெல்லாம் பண்ணாம வேற யார் பண்ணுவா?"
என்று அழகாக பதில் சொல்ல,
அவனது குரலில் இருந்த அந்த பாசம், கண்களில் தெரிந்த அந்த பெருமை அதைக் கண்டு தனிஷாவும் தீபனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு புன்னகைக்க,.. ஆரவ்வோ நண்பனை அணைத்து வரவேற்று,... "அம்மா அப்பா வரலையா தனிஷா" என்றான் தோழியிடமும்,..

"கிளம்பிக்கிட்டு இருக்காங்கடா, நாங்க முதல்ல வந்துட்டோம்" என்றவளோ,.. மெத்தையில் கை கால்களை உதைத்தபடி கிடந்த குழந்தையை தூக்கி கொஞ்ச தொடங்கி இருந்தாள்,.. அவள் கொஞ்சுறதை கண்டு வினித்தும் தன் மழலை குரலில் அழகாக கொஞ்சி, குழந்தைக்கு முத்தம் ஒன்றையும் வைத்து விட்டு சிலாகிக்க,.. தனிஷாவோ,... "நித்திலா எங்கே" என்றாள்,...

"ட்ரஸ்ஸிங் ரூம்ல ரெடியாகிட்டு இருக்கா, அவ வரதுக்குள்ள பேபியை நான் ரெடிபண்ணிட்டு இருந்தேன்" அவன் சொல்லிக் கொண்டிருந்த நேரம்,.. "அட... அக்கா,.. அண்ணா எப்போ வந்தீங்க" என்று கேட்டபடி நித்திலாவும் அங்கு வந்திருந்தாள்,...

"என்ன நித்திலா,.. என் ஃபிரண்டை ஏன் இப்படி மாத்தி வச்சிருக்க" என்று தீபன் விளையாட்டாக வினவ,... "நான் எதுவும் மாத்தலப்பா, அதை அவர்கிட்டயே கேட்டுக்கோங்க" நித்திலா சொல்லவும்,.. "ஆனா நித்திலா,.. எனக்கும் கொஞ்சம் ஷாக்கிங் தான், ஆரவ் இந்தளவுக்கு சேஞ்ச் ஆவான்னு நான் நினைக்கவே இல்ல" என்ற தனிஷாவோ,... "எல்லாம் காதல் செய்யும் மாயம்" என்று கூறி புன்னகைக்க, மற்றவர்களின் இதழ்களிலும் அதே புன்னகை,...

"உட்காருங்கக்கா, உட்காருங்கண்ணா உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்து வரேன்" என்ற நித்திலாவிடம்,.. "எப்படியும் சாப்பிட்டு தான் போவோம், ஃபங்சன் முடியட்டும், பாப்பாவை முதல்ல ரெடி பண்ணலாம்" என்று சொன்ன தனிஷா,.. "பாப்பாவோட ட்ரஸ்ஸை எடுத்து கொடு" என்றாள்,..

நித்திலாவும் குழந்தைக்கான உடையை தனிஷாவிடம் கொடுத்து விட்டு, வினித்தோடு ஐக்கியமாகி விட்டாள்,... "அத்த அத்த..." என்று மழலை குரலில் உரிமையாய் அழைத்தவனை வாரிசுருட்டிக் கொண்டவள்,... "குட்டி பையன் நல்லா பேச ஆரம்பிச்சுட்டான்க்கா" என்று தனிஷாவிடம் பேச்சை வளர்க்க,.. ஆரவ்வும் தீபனும் ஒரு பக்கம் கடலை போட ஆரம்பித்திருந்தனர்,...

"அடடே,.. ஏஞ்சல் மாதிரி இருக்கா குட்டி" வெள்ளை நிற ஃபிராக்கில்
குட்டி தேவதையாய் இருந்த நண்பனின் மகளுக்கு திருஷ்டி கழித்தாள் தனிஷா...

அவளது அருகே வந்து குழந்தையின் கன்னத்தை தொட்டு முத்தமிட்ட தீபனும், "சின்ன ராஜகுமாரி மாதிரி இருக்கே, இந்தக் குட்டி யாரைப் போல இருக்கா? அப்பாவா? இல்ல அம்மாவா?" என்று சிரித்துக்கொண்டே கேட்க,... "ரெண்டு பேரையும் கலந்த கலவை தான் என் பேத்தி, முகம் ஆரவ் மாதிரி இருக்கும், ஆனா சிரிப்பு நித்திலாவோடது மாதிரி இருக்கும்," என்று அங்கு வந்த சித்ரா சொல்ல... "எனக்கும் கூட அப்படி தான் தோணுது ஆண்ட்டி" என்றாள் தனிஷா,...

"சரி.. இன்னும் கீழ வராம என்ன பண்ணுறீங்க, கெஸ்ட் வர நேரமாச்சு" என்று சித்ரா அவர்களிடம் வினவ,... "டென் மினிட்ஸ்ல வந்திடுறோம்மா" ஆரவ் தான் சொன்னான்,...

"சரிப்பா.. சீக்கிரம் வாங்க" என்றவரோ,... கனிவான புன்னகையுடன் சென்று விட, தீபனோ,... "ரெடி தானே போலாம்ல கீழ" என்றான்,...

"நான் இன்னும் ரெடியாகல, நீங்க பாப்பாவோட இருங்க, நாங்க வந்திடுறோம்" என்று ஆரவ் சொல்ல... "ஓஹோ அப்படியா? ஓகே ஓகே நீங்க மெதுவா ரெடியாகிட்டு வாங்க" அடக்கப்பட்ட புன்னகையுடன் கூறியவன்,.. "நாம போலாம் தனு" என்று மகனை தூக்கிக் கொள்ள,.. இருவரின் புறம் திரும்பிய தனிஷாவோ,... "லேட் பண்ணாம ஃபங்சன்க்கு கரெக்ட் டைம்க்கு வந்திடுங்கடா" என்று கேலி புன்னகையில் சொல்ல, நித்திலா கன்னம் சிவந்தால் என்றால் ஆரவ்வோ,.. "அதெல்லாம் வந்திடுறோம் கிளம்புங்க" என்று விரட்டாத குறையாக சொல்லவும்,.. "ம்ம்.. நீ நடத்து நடத்து..." என்று சொல்லிவிட்டு பாப்பாவுடன் கணவனை பின்தொடர்ந்தாள் தனிஷா,...

"எதுக்காக இப்படி சொன்னீங்க, பாருங்க அக்காவும் அண்ணாவும் கிண்டல் பண்ணிட்டு போறாங்க" நித்திலா சிணுங்க,... ""என்ன பண்ணுறது நிலா, என் ஃபீலிங்ஸை என்னால கண்ட்ரோல் பண்ண முடியலையே, இந்த புடவையில செமையா இருக்கடி" என்றான்

அவனது வார்த்தையிலும் "நிலா" என்ற பிரத்யேக அழைப்பிலும் வழக்கம் போல் உருகி போனவள், அவனது கழுத்தில் கரங்களை மாலையாக கோர்த்துக் கொண்டு மெதுவாக,.. "நிலான்னு நீங்க கூப்பிடும் போதெல்லாம் ஒரு மாதிரி புல்லரிக்குதுங்க… அந்த ஒரு சொல்லுக்காகவே நான் ஆயிரம் தடவை அழைக்கப்படணும்னு தோணுது," என்றாள் புன்னகையுடன்...

அவளது கண்களில் மிளிரும் அந்த உணர்வை கண்டு, அவனும் புன்னகைத்துக் கொண்டே, "அப்போ இனிமே நான் தினமும் ஆயிரம் தடவை கூட உன்னை நிலான்னு அழைக்க தயார் தான், ஆனா உனக்கு தான் இம்சையா இருக்கும்" என்றான்..

அவளோ புன்னகையோடு முகத்தை அவனது மார்பில் புதைத்துக் கொண்டு "இம்சையா? நிச்சயமா இல்ல, உங்க வாயிலிருந்து அந்த சொல்லைக் கேட்கும் ஒவ்வொரு தருணமும் எனக்கு ஒரு புதிய உயிர் ஊட்டுற மாதிரி இருக்கு," என்றாள் மெதுவாக....

அவளது வார்த்தைகளை கேட்டு அவனது உதடுகளில் ஒரு ஆழ்ந்த புன்னகை மலர, அவளை சற்றே விலக்கி அவள் முகத்தைப் பார்த்தவன்... "அப்படின்னா இனிமே தினமும் ஆயிரம் முறைக்கு மேலேயே கூப்பிடுறேன்.." என்றான் காதலோடு..

அவனது கண்களில் வெளிப்பட்ட அந்த அன்பின் ஆழம் நித்திலாவை மேலும் உருக்க,.. "நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையுமே என் வாழ்நாளை இன்னும் அழகாக்குது ஆரவ்…" என்று அவள் மெதுவாகச் சொல்லி அவனை அணைத்துக்கொண்டாள்....

அவனும் அவளது அணைப்பில் கொஞ்ச நேரம் கட்டுண்டிருந்தவன், மெல்ல அவளை விட்டு விலகி,... "சரி வா… உனக்கு ஒரு சின்ன சர்பிரைஸ்" என்று மெதுவாக அவளது கரத்தை பிடித்து கண்ணாடி முன் அழைத்து அமர வைத்தான்...

அவள் குழப்பமாக அவனை நோக்க, அவன் புன்னகையுடன் ஒரு சிறிய பெட்டியை எடுத்துக் காட்டி... "இது உனக்காக நான் வாங்கியது, இதுவரைக்கும் நான் உனக்கு எதுவுமே வாங்கித் தரல, அதான் நம்ம பாப்பாவின் ஃபங்க்ஷனுக்காவது தரணும்னு நினைச்சேன்," என்று சொல்லிக்கொண்டே, பெட்டியைத் திறந்து பளபளக்கும் டைமண்ட் நெக்லஸை எடுத்தான்...

நித்திலாவின் கண்கள் வியப்புடன் பெரிதாகியது, "ஆரவ்… இது எல்லாம் தேவையில்லையே…" என்றாள் குரல் நடுங்க...

"ஆசையா வாங்கிட்டு வந்திருக்கேன் வேண்டாம்னு சொல்லாத நிலா" என்று சொன்னவனோ அவளது கழுத்தில் அந்த நெக்லஸை தானே அணிவித்தான்...

கண்ணாடியில் மிளிர்ந்தது வைரம் மட்டும் அல்ல, அவனை நோக்கும் அவளது கண்களின் பிரகாசமும் தான், அவளுக்ளோ அந்த டைமண்ட் நெக்லஸின் ஒளி கண்களை பறிக்கவில்லை, அவனின் காதலும் அன்பும்தான் கண்களை பறித்து இதயத்தை நிறைத்தது...

அவளது கழுத்தில் நெக்லஸை அணிவித்தவுடன், கண்ணாடி வழியாக அவளது முகத்தை பார்த்தான் ஆரவ், சந்தோஷமும் நெகிழ்ச்சியும் கலந்த கண்ணீர் நித்திலாவின் விழிகளில் தேங்கியிருந்தது...

"இவ்ளோ பெரிய பரிசு… நான் இதற்கெல்லாம் தகுதி உள்ளவளா ஆரவ்?" என்று மெதுவாக அவள் கேட்க,.. அவனோ அவள் தோளில் கை வைத்தபடி, "நீ தகுதி இல்லாதவளா இருந்தா, நான் இன்னைக்கு இப்படி இருக்க முடியுமா நித்திலா? என்னோட வாழ்க்கையையே அற்புதமாக்குனவ நீ, இந்த பரிசெல்லாம் சின்னது தான் உன்னோட அன்புக்கு முன்னாடி"
அந்த வார்த்தைகள் அவளின் மனதைத் தொட்டு, அடக்க முடியாமல் அவனை அணைத்துக்கொண்டாள்.

"என்னை இவ்வளவு நேசிக்கறவங்க இருக்காங்கன்னு நினைக்கும் போதே மனசெல்லாம் ஒரு மாதிரி பறக்குது, நான் இவ்வளவு சந்தோசத்தை அனுபவிப்பேன்னு கனவுல கூட நினைக்கல" என்றாள் கண்ணீருடன் சிரித்தபடி...

அவள் சந்தோஷக் கண்ணீரை தன் விரல்களால் துடைத்தவன், தன் மார்பில் மீண்டும் புதைந்தவளை மெதுவாக வருடி கொடுத்து.., "நானும் தான் நினைக்கல, நான் மூச்சு விடுறது கூட உனக்காக மட்டும் தான்ன்னு தோணுற அளவுக்கு எனக்குள்ள உயிரா கலந்துட்ட நீ" என்றான்,.. அவன் வார்த்தையில் நித்திலாவின் உள்ளம் நடுங்கியது, அவனது இதயத்தோடு கலந்த தன் உயிரின் துடிப்பை உணர்ந்தவள் இன்னும் ஆழமாக அவனுள் புதைந்து கொண்டாள்,..

**************

பெயர் சூட்டும் விழா ஆரம்பமாகி, வீடு முழுக்க பண்டிகை கோலம் பூண்டிருந்தது, சிரிப்பு, சலசலப்பு, விருந்தினர்களின் வாழ்த்துகள் என வீடு ஆனந்தத்தில் ஒலித்தது, நித்திலா தன் கைகளில் குழந்தையை ஏந்தியபடி இருக்க,.. "பாப்பாவை தொட்டில்ல போடு நித்திலா…” என்று சித்ரா கனிவுடன் சொல்லவும்,.. "சரிங்கம்மா" என்ற தலையசைப்புடன்
மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் மெதுவாக குழந்தையை படுக்க வைத்த நித்திலாவின் கண்களில் மகிழ்ச்சி ததும்பியது...

அதன் பிறகு குழந்தைக்கான பெயரை ஆரவ் மற்றும் நித்திலா இருவரும் சேர்ந்து மெதுவாகச் சொல்லினர்...

"யாழினி… யாழினி... யாழினி..." என்று,...

அந்த இனிய பெயர் குழந்தையின் காதில் ஒலித்தவுடனே, குட்டி யாழினி தன் அப்பாவையும் அம்மாவையும் பார்த்தபடி, தன் பொக்கை வாயை திறந்து சிரிப்பை பரிமாற, அந்த புன்னகை, நித்திலா–ஆரவ் இருவரின் இதயத்தையே உருகவைத்தது, சுற்றி நின்ற விருந்தினர்களும் அந்த தேவதையின் சிரிப்பைக் கண்டு கைகொட்டி களித்தனர்....

"அடடே… பெயருக்கு ஏற்ற மாதிரி யாழ் இசை மாதிரி சிரிக்கிதே பாப்பா" என்று ஒருவர் சொல்ல, அந்தச் சொற்கள் போலவே குட்டி யாழினியின் சிரிப்பு அங்கு இருந்த ஒவ்வொருவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது....

குட்டி யாழினி சிரித்த தருணத்தில், நித்திலாவும் ஆரவ்வும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்,
அந்த ஒரு பார்வையில் சொல்லாமல் போன ஆயிரம் உணர்வுகள் இருந்தது,..

நித்திலாவின் இதழ்களில் புன்னகை, ஆரவ்வின் கண்களில் நிம்மதி,
அந்த நொடி அவர்கள்... 'இது தான் நம்ம வாழ்வின் இசை' என்று சொல்லிக் கொண்டனர்...

சுற்றிலும் கைகொட்டும் சத்தமும், வாழ்த்தும், சிரிப்புகளும், மலரின் மணமும், தொட்டிலின் மென்மையான அசைவோடும் வீடு முழுவதும் நிறைந்து இருந்தது,
ஆனால் அந்த கூட்டத்தின் நடுவில், நித்திலாவிற்க்கும் ஆரவ்விற்க்கும் உலகமே நின்றுவிட்ட உணர்வு தான்...

ஒரு பக்கம் குட்டி யாழினியின் தேவதைச் சிரிப்பு, மறுபக்கம் தாயின் மன நிறைவு,..

வாழ்க்கை எத்தனை சோதனைகள் கொடுத்தாலும், இன்றைய இந்த சந்தோஷம் அந்த வலிகளை எல்லாம் மறக்க வைத்து விட, இனி இவர்களின் வாழ்வும் இதே போல சந்தோசத்துடன் கடக்க வேண்டும் என்ற வாழ்த்தோடு நாமும் விடை பெறுவோம் மக்களே...

சுபம்...
 
  • Love
Reactions: shasri