• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண் மூடினேன்..! மெய் தீண்டினாய் அத்தியாயம் 1

Nirosha Karthick

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 24, 2024
Messages
25

அத்தியாயம் 1​



அரைத்தூக்கத்தில் படுக்கையில் புரண்டவனின் பக்கத்தில் பூக்குவியலாய் குட்டி உருவம் படுத்திருக்க அதை உணர்ந்தவன், அந்த பூக்குவியலை தன் மார்பில் போட்டு தட்டிக் கொடுத்தபடி மெல்ல கண்விழித்தான்.


தூக்கத்தில் குழந்தையும் மெல்ல சினுங்க,"இன்னைக்கும் உன்னோட அப்பா ,அம்மா ரொமான்ஸ் பண்றதுக்கு இடைஞ்சலா இருக்கேன்னு, இங்க கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாங்களா? "என்று செல்லமாக சலித்தபடி குழந்தையின் குண்டு கன்னத்தில் முத்தமிட்டவன்,நேரம் மணி எட்டாவதை உணர்ந்து குழந்தையை மீண்டும் படுக்கையில் விட்டு, இரு பக்கமும் தலையணையை வைத்து விட்டு, தன்னுடைய கண் பார்வையில் குழந்தை இருக்கும்படி கவனித்த படி, தன்னுடைய மற்ற வேலைகளை பார்க்க தொடங்கினான்.


குழந்தை ஒன்பது மணிக்கு கண்விழித்ததும்," மாமா "என்று அந்த அறையை சுற்றிப் பார்த்து கண்ணை கசக்கி கொண்டே அழைக்கவும்,


சமையல் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு, தன்னுடைய அக்கா மகள் அஞ்சலியை தூக்கிக் கொண்டவன்," பிரஷ் பண்ணிட்டு அப்புறம் பால் குடிக்கலாம் "என்று சொன்னபடி அஞ்சலியை குளியலறைக்கு அழைத்துச் சென்று, குழந்தைக்கு பல் துலக்கி அழைத்துக்கொண்டு வந்தவன், அவளை கையில் வைத்தபடியே பாலை காய்ச்சி டம்ளரில் அஞ்சலி குடிக்கும் பதத்திற்கு ஆற்றிவிட்டு, தனக்கும் ஒரு டம்ளர் சத்துமாவு கஞ்சியை எடுத்துக் கொண்டு வந்து பால்கனியில் போடப்பட்டிருக்கும் சேரில் வந்து அமர்ந்தான் விக்ரம்.


பால்கனியில் இருக்கும் குட்டி சேரில் அமர்ந்து, அஞ்சலியும் சமர்த்தாக பாலை குடித்து முடித்துவிட்டு, கப்பை விக்ரம் முன் நீட்டவும்," வாயை துடைச்சுக்கோ அஞ்சு "என்று அங்கிருந்த டிஷ்யூவையும் எடுத்துக் கொடுக்க, மாமன் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல், அஞ்சலியும் வாயை துடைத்துக் கொண்டாள்.


"மாமாக்கு கொஞ்சம் வேலை இருக்கு தங்கம். டீவி பார்க்கறீங்களா "என்று கேட்க, அஞ்சலியும் தலையாட்டவும், டீவியில் கார்ட்டூன் படத்தை போட்டு விட்டு தயாராக சென்றவன், சரியாக பத்து பத்திற்கு குழந்தையை தூக்கிக் கொண்டு, மாடியில் இருந்த தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு கீழ்த்தளத்தில் இருக்கும் தன்னுடைய அக்காவின் வீட்டு காலிங் பெல்லை அடித்து விட்டு உள்ளே நுழைந்தான்.


"காலிங் பெல் அடிக்காமலேயே உள்ள வான்னு, உனக்கு எத்தனை தடவை சொல்றது? "என்று சத்தமிட்டபடி படுக்கையறையில் இருந்து நங்கை வெளியே வர, அவளின் பின்னே அவளது கணவன் விஷ்வாவும் வெளியே வந்தவன்,


"நாளப்பின்ன அவனுக்கு…கல்யாணம் ஆன பின்னாடி, நீ சரசரன்னு வீட்டுக்குள்ள போயிடாம காலிங் பெல் அடிச்சிட்டு தான் உள்ள வரணும்னு, உனக்கு இப்போ இருந்தே சொல்லாம சொல்றான் போல..அப்படித்தானே விக்ரம்..!! "என்று கேட்க,


அவனும் சிரித்தபடி," நீங்க சொன்னா சரிதான்" எனவும், நங்கை இருவரையும் முறைத்து விட்டு, போனில் கார்ட்டூன் பார்க்க தொடங்கிய அஞ்சலியின் கையில் இருந்து போனை பிடுங்க,அவளோ அழத் தொடங்கி விட்டாள்.


"வேலைக்கு கிளம்பும்போது பிள்ளைய அழ விடாதன்னு, எத்தனை தடவை சொல்றது "என்று விஷ்வா மனைவியை அதட்டி விட்டு, தன்னுடைய மகளை வாங்கி சமாதானப்படுத்த, இது தினமும் நடக்கும் வாடிக்கை என்பதால், விக்ரமும் கண்டு கொள்ளாமல் கிளம்ப போக,


"மதியம் உனக்கும் சேர்த்து தான் பிரியாணி செய்யப் போறேன். நீ வீட்டுக்கு வராமல் இருந்திடாத "என்று தம்பியிடம் சொல்ல,


"நான் காலையிலேயே மதியத்துக்கும் சேர்த்து எடுத்துக்கிட்டேன்-க்கா. நீ வேணும்னா நைட்டுக்கு எடுத்து வை. நான் வீட்டுக்கு வந்து சூடு பண்ணி சாப்பிட்டுக்கறேன் "என்று சிரிப்பு மாறாமல் சொன்னவனை முறைத்தவள்,


"சாதம் தானே.. அது அப்படியே இருக்கட்டும். நான் தண்ணி ஊத்தி ஊறவெச்சு நாளைக்கு ஆப்பத்துக்கு ஆட்டிக்கிறேன். நீ இன்னைக்கு மதியம் இங்கதான் சாப்பிடணும். கூடப் பிறந்த அக்கான்னு தான் பேர். ஒரு நேரம் இங்க சாப்பிட்டால் தான் என்ன..?? யார் என்ன சொல்லிட போறா..!


"எனக்கு கூடப் பிறந்தவன்னு இருக்கது நீ ஒருத்தன் தானே..!! உன்னை நல்லபடியா பார்த்துக்கணும்னு எனக்கும் அக்கறை இருக்காதா..? யாரோ போல நீயாவே சமைச்சு சாப்பிட்டு இருந்தா என்ன அர்த்தம் "என்று பேச ஆரம்பித்தவள், முடிக்கும் பொழுது அழுகவே ஆரம்பித்து விட,


"எனக்கு நான் செஞ்சு சாப்பிடுறது பிடிச்சிருக்குக்கா. அதனால செய்றேன். இதுக்காகவெல்லாம் நீ அழுக தேவையில்லை. நீ குழந்தைய பார்க்கறதே பெரிய விஷயமா இருக்கு. இதுல நானும் தொந்தரவு கொடுக்க விரும்பலை"என்று அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டு சமாதானம் செய்தவனின் கைகளை தட்டிவிட்டவள்,


"எனக்கு கல்யாணம் ஆனதிலிருந்து, நீ இதைத்தான் சொல்லிட்டு இருக்க..!! அப்பா, அம்மா இருந்தா அது வேற..! அம்மா எப்போவோ போய்ட்டாங்க!! அப்பா இருந்தும் இல்லாத நிலைமை.


"உன்ன நான் தான பார்த்துக்கணும். நீ தனியா எல்லாத்தையும் செய்யும்பொழுது எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு விக்ரம். நான் தூரத்திலிருந்தா கூட பரவாயில்ல.


"பக்கத்துல இருந்துக்கிட்டே, நீ தனியா சமைச்சு கஷ்டப்படுவதை பார்க்கும் பொழுது ரொம்ப கஷ்டமா இருக்கு. இதே நிலைமை தொடர்ந்தா நான் வேற வீடு பார்த்து போயிடுவேன்" என்ற அக்காவை முறைத்தவன்,


"சொந்த வீட்டை விட்டுட்டு வாடகைக்கு தங்க போறேன்னு சொல்றியா" என்று முறைக்க,


"நான் ஏன்டா வாடகை வீட்டுக்கு போக போறேன். என் புருஷன் நல்லா தான் சம்பாதிக்கிறார். எனக்குன்னு சொந்த வீடு வாங்கி தர மாட்டாரா "என்று பேச்சில் தன்னுடைய கணவனையும் இழுக்க,


"விக்கிற விலைவாசிக்கு, நீ நினைச்ச உடனே புதுசா வீடு வாங்க முடியுமா?" என்றபடி குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த விஷ்வா,


"அப்படியே புதுசா வீடு வாங்கினாலும், உன் தம்பிக்கு கல்யாணம் ஆகாம, நாம வேற வீட்டுக்கு போக போறது இல்ல. நீ ஏதாவது முட்டாள்த்தனமா பேசி என்னையும் கோபப்படுத்தி, அவனையும் கோபப்படுத்தாதே "என்று மனைவியை திட்ட, கணவனை முறைத்தவாறு நங்கையும் அமைதியாகிவிட்டாள்.


"வேலைக்கு போகும்போது சிரிச்ச படி இரு நங்கை"என்று மறுபடியும் மிரட்டவும்,


இருவரையும் மாறி மாறி பார்த்த விக்ரம்,"நீங்க சமாதானப்படுத்திட்டு வாங்க மாமா. நான் முன்னாடி போய் வேலையை பார்க்கிறேன்" என்றபடி விஷ்வாவின் பதிலை எதிர்பாராமல் கிளம்பி விட, விஷ்வா தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்தி குழந்தையை கொஞ்சி விட்டுக் கிளம்ப 11 மணியாகிவிட்டது.


சொந்தமாக எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் விஷ்வா, விக்ரம் சொந்தமாக கட்டி விற்கும் வீடுகளுக்கு, தானே எலக்ட்ரிக்கல் வேலைகளையும் ஒப்பந்த அடிப்படையில் செய்து தருகிறான்.


ஆரம்பத்தில் விக்ரம்..வீடு கட்டி விற்கும் தொழிலுக்கு வந்த புதிதில் அறிமுகமானவன் தான் விஷ்வா.


விஷ்வாவின் அப்பா சிறுவயதிலேயே இறந்து விட, அம்மா தான் அவனை நல்லபடியாக படிக்க வைத்து சொந்தமாக அவனுக்கு எலக்ட்ரிக்கல் கடையும் வைத்துக் கொடுத்திருந்தார்.


விக்ரமை சந்திக்கும் ஒரு வருடத்திற்கும் முன்புதான், தாயும் தவறியிருக்க, கடையை மட்டும் நம்பி ஒரே இடத்தில் உட்கார விரும்பாமல், தானும் இறங்கி வேலை செய்ய நினைத்தவனுக்கு சரியாக விக்ரமும் அவனது கடைக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்க, பேச்சுவார்த்தையில் இருவரும் நெருங்கி விட்டனர்.


அப்போது விக்ரமிற்கு 23 வயது தான் இருக்கும்.


அவனுக்கும் உறவாக அக்கா மட்டும்தான் இருப்பது பேச்சின் மூலமாக தெரிந்து கொண்டான்.


நங்கையின் மேல் அப்பொழுதெல்லாம் அவனுக்கு ஆர்வம் பிறக்கவில்லை.


மெல்ல இருவரும்.. தொழிலில் ஒன்றாக இணைந்து செய்தால் மேலும் லாபம் ஈட்டலாம் என்ற ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக தங்களது தொழிலை நடத்த ஆரம்பித்த ஒரு வருடத்திற்கு பின்பு தான், விக்ரமிற்கு விஷ்வாவையே தன்னுடைய அக்காவிற்கு பார்த்தால் என்னவென்று தோன்றியது.


அவளும் அப்பொழுது 25 வயதை நெருங்கியிருந்தாள்.


விஷ்வாவின் மேல் நம்பிக்கை இருந்தாலும், அக்காவை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், விஷ்வாவின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரிடமும் விஷ்வாவிற்கு தெரியாமல் விசாரித்து, அதன்பின்பே தன்னுடைய அக்காவை பற்றி விஷ்வாவிடமும் சொல்ல, அவனுக்கும் நங்கையின் போட்டோவை பார்த்த உடனேயே பிடித்து விட்டது.


அடுத்த ஒரு மாதத்திற்குள் திருமணம் முடித்து, இதோ நான்கு வருடங்கள் ஓடிவிட்டது.


அடுத்தது விக்ரமின் திருமணம் தான்..!


விஷ்வா பொறுப்பான அக்கா கணவனாக, விக்ரமிற்கு பெண் பார்க்க தொடங்க, விக்ரம்..தன்னுடைய அக்கா குடும்பத்தை அனுசரித்து போகும் பெண் தான் வேண்டும் என்பதை உறுதியாக சொல்லி விட்டான்.


ஒரு பெண்ணின் குணத்தை பற்றி முன்பே எப்படி கணிக்க முடியும் என்று புரியாவிட்டாலும், விக்ரமை நன்றாக கவனித்துக் கொள்ளும் பெண்ணாக இருந்தால் மட்டும் போதும் என்ற அடிப்படையில் புரோக்கரிடம் சொல்லி திருமணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறான்.


ஏற்கனவே இரண்டு ஜாதகம் வந்தது. பொருந்தவில்லை.


இன்றும் ஒரு ஜாதகம் வந்திருக்க, மதியம் உணவு வேளையில் விக்ரமுடன் பேசிவிட வேண்டும் என்ற முடிவோடு வேலையை முடித்துவிட்டு, இரண்டு மணி போல விஷ்வா வீட்டிற்கு வர, விக்ரமும் வந்து விட்டான்.


விக்ரம் நேராக மாடிக்கு சென்றால், அவனை பிடிக்க முடியாது என்பதால், தங்கள் வீட்டு வாயிலேயே காத்திருந்து தம்பியை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சாப்பிட அமர வைக்க," நான் தான் சரின்னு சொன்னேனேக்கா.இப்படி இழுத்துட்டு வந்தா என்ன அர்த்தம் "என்று கோபப்பட்டபடி வந்து அமர,


விஷ்வா," முதல்ல சாப்பிடு. அப்புறம் பேசிக்கலாம் "என்றவன், அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்து,


"ஒரு ஜாதகம் வந்திருக்கு விக்ரம். பார்க்கலாமா "என்று பெண்ணின் புகைப்படத்தையும், அவளின் விபரங்களையும் கொடுக்க வாங்கிப் பார்த்தவன்,


அக்காவிடம் கொடுத்து," உனக்கு பிடிச்சிருந்தா பாருக்கா "என்று கொடுத்துவிட,


"உனக்கு பிடிச்சிருக்கான்னு பார் "என்று விஷ்வா அதட்டவும்,


"போட்டோவை பார்த்தா அழகா இருக்காங்களா, இல்லையான்னு மட்டும் தானே தெரியும் மாமா. வேறென்ன தெரியப்போகுது.எனக்கு பொண்ணு ரொம்ப அழகா இருக்கணும்னு எல்லாம் அவசியம் இல்லை.


"என்னோட மனசு புரிஞ்சு,அனுசரணையா நடந்துக்கற பொண்ணா இருந்தா போதும். இவ்வளவு கலராக இருக்க வேண்டிய அவசியமில்லை "என்று சொல்ல,


நங்கையும்," நம்ம ஊர்ல..நம்ம சொந்தத்துல பொண்ணு கேட்டு பார்ப்போமா விக்ரம் "என்று ஆசையாக கேட்க,


"சரி" என்றான் உடனேயே…!!


"நிஜமாவா விக்ரம்.. உனக்கு பிடிக்காதுன்னு தான், நான் இவ்வளவு நாளா நம்ம ஊர்ல பொண்ணு தேடாமல் இருந்தேன் "என்றவள்,


"அஞ்சலிக்கு நம் ஊர் கோவிலில் மொட்டை போடணும்னு வேண்டி இருந்தேன். மொட்டை போட்டுட்டு அப்படியே பொண்ணு இருந்தா பார்த்துட்டு வந்துடலாம். என் பிரண்டு கிட்ட சொல்லி வைக்கிறேன் "என்று சந்தோஷத்தில் பேசிக்கொண்டே சென்றவள்,


ஒரு நிமிடம் தயங்கி,"நம்ம ஊர்ல பொண்ணு எடுத்தா, அடிக்கடி அங்க போயிட்டு வர வேண்டி இருக்கும். உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே விக்ரம் "என்று கேட்டாள்.


"எனக்கு எதுவும் பிரச்சனை இல்லக்கா. நம்ம பெரியப்பா நம்மள பார்த்த பின்னாடி பிரச்சனை பண்ணாம இருந்தா சரி. அவருக்கு தான் நம்மள கண்டா பிடிக்காது. அதுலயும் அப்பா… அவர நினைச்சா எரிச்சல் அதிகமாகுது.


"அவரோட மகன்னு தெரிஞ்சா யாரும் பொண்ணு கொடுக்கறதுக்கு கூட தயங்குவாங்க. எனக்குமே அந்த மனுஷனை பார்க்க விருப்பமே இல்லை. நீ நம்ம ஊர்ல பொண்ணெல்லாம் பார்க்க வேண்டாம். வெளியிலேயே பொண்ணு பார்த்துக்கலாம் "என்று திடீரென்று மனம் மாறியவனாக சொல்ல,


"அப்போ குழந்தைக்கு மொட்டை எடுக்கவும் போக வேண்டாமா "என்று பரிதாபமாக கேட்க,


"அதுல ஒரு பிரச்சனையும் இல்லக்கா. காலையில போயிட்டு சாயந்திரம் வந்துடலாம் "என்றவன்,


விஷ்வாவிடம்," உங்களுக்கு எந்த தேதி சரிப்பட்டு வரும்னு பார்த்து சொல்லுங்க மாமா.அப்போவே அஞ்சுக்கு மொட்டை போட்டுட்டு வந்துடலாம் "என்றவன்,


தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு கிளம்பி விட,விஷ்வா ,"உன்னோட பெரியப்பாவோட குணம் சரியில்லைன்னு நீயே சொல்லிட்ட. அவர் கிட்ட சண்டை போட்டு சொத்தை வேற பிரிச்சு வாங்கிட்டு வந்திருக்கீங்க..!!


"அப்படி இருக்கும்போது நீங்க திரும்ப போனா, அவர் எப்படி நடந்துக்குவார்னு தெரியாது. அதனால முதல்ல போய் குழந்தைக்கு மொட்டை எடுத்துட்டு வந்துடலாம்.அங்க நிலைமை சரியா இருந்தா,அதுக்கு அப்புறம் நாம மத்தத பத்தி யோசிக்கலாம். நீ எதையும் யோசிச்சு கவலைப்படாத "என்று சொல்லிவிட்டு சென்றுவிட, பிறந்து வளர்ந்த ஊரின் நினைவில் நங்கையும் ஆழ்ந்து விட்டாள்.
 
Top