• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண் மூடினேன் மெய் தீண்டினாய் 2

Nirosha Karthick

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 24, 2024
Messages
25

அத்தியாயம் 2​



அஞ்சலிக்கு தங்கள் ஊரில் உள்ள அம்மன் கோவிலில் மொட்டை போடுவதற்காக காரில் பயணித்துக் கொண்டிருந்தார்கள் விக்ரமும், அவனது அக்காவின் குடும்பத்தினரும்..!!



செல்லும் வழியெல்லாம், தங்களது ஊர் புராணத்தை பற்றி விஷ்வாவிடம் நங்கை சொல்லிக்கொண்டே வர,விக்ரம் எதிலும் தலையிடாமல், அஞ்சலியை கொஞ்சிக் கொண்டு அவளுடனையே பேச்சு கொடுத்துக் கொண்டு வந்தான்.



விஷ்வாவும், நங்கையின் ஊருக்கு வருவது, இதுவே முதல்முறை என்பதால் அவனும் ஆர்வமாக ஊரில் உள்ள சிறப்பம்சங்களை பற்றி கேட்டுக்கொண்டே வந்தான்.



திருமணத்தின் பொழுது கூட, நங்கையின் நெருங்கிய உறவினர்கள் யாரையும் அழைக்கவில்லை.



அவளது அம்மா வீட்டு உறவினர்களையும் கூட புறக்கணித்து இருந்தார்கள்.



அதனால் அவர்களைப் பற்றிய அறிமுகம் எதுவும் இல்லாததால், நங்கையின் பெரியப்பா குடும்பத்தினர் எப்படி தங்களை எதிர்கொள்வார்கள் என்று யோசித்தபடி, ஊர் வந்து சேர, ஹோட்டலில் ரூம் எடுத்தவர்கள், சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு நேராக கோவிலுக்கு வந்து விட்டார்கள்.



ஊர் பொதுக் கோவில் என்பதால், கோவிலில் இருந்த பொறுப்பாளரிடம் விவரத்தை சொல்லிவிட்டு காத்திருக்க, அவர் முதலில் விக்ரமை அடையாளம் தெரியாமல் முழித்தவர், நங்கையை பார்த்ததும்," நம்ம வேங்கடப்பதியோட தம்பி பிள்ளைங்க தானே நீங்க..!! அடையாளமே தெரியல. இவன அரும்பு மீசையோட பார்த்தது. இப்போ ஓங்குதாங்க வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிட்டான் "என்று சந்தோஷமாக விக்ரமை பார்த்து சொன்னவர்,



அருகே இருந்த விஷ்வாவை பார்த்து யாரென்று கேட்க," என்னோட வீட்டுக்காரர் "என்று நங்கை அறிமுகப்படுத்தவும்,



"கல்யாணத்துக்கு கூட எங்களை கூப்பிடல பார்த்தியா. அந்த அளவுக்கு ஆகாதவங்களா போயிட்டோம் "என்றவரிடம்,



என்ன சொல்வது என்று புரியாமல்,மூவரும் அமைதியாக இருக்க, "சரி. வாங்க மொட்டை எடுக்குற இடத்துக்கு கூட்டிட்டு போறேன் "என்று அவர்களை அழைத்து சென்று, உடன் இருந்து அவரே அனைத்தையும் பார்த்துக் கொள்ள, எந்த சிரமமும் இல்லாமல் அஞ்சலிக்கு மொட்டை போட ஆரம்பித்தார்கள்.



தலையில் கத்தியை வைத்ததுமே அஞ்சலி அழ ஆரம்பிக்க, மடியில் வைத்திருந்த விக்ரம்," ஒன்னும் இல்லடா தங்கம்.. வலிக்காது.. மாமா கூட தானே இருக்கேன் "என்று சொல்லியபடி அவளை சமாதானம் செய்ய,



"மாட்டேன்.. வலிக்கும் "என்று கத்திக் கூப்பாடு போட ஆரம்பிக்க,



விஷ்வா," வலிக்காது அஞ்சு "என்று சமாதானம் செய்ய,நங்கையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.



"முடியாது.. அப்போ நீங்க மொட்டை போடுங்க.. அழகா இருக்கீங்களான்னு பார்க்கிறேன் "என்று விவரமாக மழலை குரலில் சொல்ல,



"விவரத்தை பார்த்தீங்களா..இவளுக்கு மொட்டை போட வந்தா,நமக்கு மொட்டை போட்டு விட்டுடுவா போல "என்று மகளை அடிக்க போக,



அவள்," வீல் "என்று அலறவும்,



"நீ கொஞ்சம் பேசாமல் இருக்கா "என்று அக்காவை அதட்டியவன்,



அஞ்சலியிடம்," மாமா மொட்டை போட்டுக்கிறேன். மாமாக்கு வலிக்கலைன்னா நீயும் மொட்டை போட்டுக்கணும் "என்று சமாதானம் செய்ய,



அஞ்சலியும் திருதிருவென்று விழித்தாலும்,"சரி "என்று சமாதானம் ஆகிவிட்டாள்.



நங்கை," அதெல்லாம் வேண்டாம் "என்று மறுத்தாலும்,



"முடி தான அக்கா. போனா போயிட்டு போகுது "என்று சொல்லியபடி,



"முதல்ல எனக்கு முட்டை போடுங்க "என்று அஞ்சலியை விஷ்வாவிடம் தூக்கி கொடுத்துவிட்டு, மொட்டை போட்டுக்கொள்ள, கூடவே அவனது மீசை முடியையும் எடுத்துவிட, பார்ப்பதற்கே சிறு பையன் போல இருந்தான்.



அதன் பின்பு அஞ்சலி சமாதானமாகி, அவளும் மொட்டை போட்டுக்கொள்ள, குளித்து முடித்து காது குத்தும் பொழுது,"உனக்கு காது குத்துனா தான்..நானும் காது குத்திக்குவேன்னு அஞ்சு சொன்னால் என்ன பண்ணுவ "என்று விஷ்வா சிரித்தபடி கேட்கவும்,



நங்கை" நீங்களே சொல்லிக் கொடுக்காதீங்க "என்று கணவரின் தோளில் அடித்தபடி,



குழந்தையை விஷ்வாவின் மடியில் அமர வைக்க,மொட்டை போட்டது போல," இதுவும் வலிக்காது "என்று நினைத்த அஞ்சலியும், அமைதியாக கொடுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டு கொண்டு இருக்கும் பொழுது, காதில் அழுத்தமாக வலி ஏற்படவும்," வீல் "என்று அலறியவள், விக்ரமின் கையை பிடித்து கடித்தே விட்டாள்.



"ஒன்னும் இல்ல தங்கம் "என்று அவளின் தலையை அழுத்திப் பிடிக்கவும், இன்னொரு காதிலும் வலி ஏற்பட மீண்டும் மாமனை கடித்தவள்,அழுது கொண்டே விக்ரமை அடிக்க.. அவளை சமாதானம் செய்து, அவள் அழுகையை நிறுத்துவதற்கு 15 நிமிடங்கள் ஆகிவிட்டது.



ஒரு வழியாக போராட்டத்துடன் காதுகுத்திவிட்டு, தன்னுடைய அக்கா மகளுடன் சேர்ந்து விக்ரமும் போட்டோ எடுத்துக் கொள்ள," மாமாவும் மொட்டை.. நானும் மொட்டை "என்று சொல்லி சிரிக்கவும் தான், மற்ற மூவரின் முகத்திலும் சிரிப்பே வந்தது.



அவளின் அழுகை மூவரையும் பாதித்திருக்க," கொஞ்ச நேரத்துல கதறடிச்சுட்டா "என்று விக்ரம் தன் கண்ணோரம் கசிந்து இருந்த கண்ணீரைத் துடைத்துக் கொள்ள,



விஷ்வா," ரொம்ப ஓவரா போறடா.. என் பொண்ணு அழும்பொழுது நானே பார்த்துட்டு இருக்கேன். உனக்கு எதுக்கு இவ்வளவு அழுகை "என்று கேட்க,



நங்கை," என் தம்பிக்கு இளகின மனசு. உங்கள மாதிரி கல் மனசு இல்ல "என்று மீண்டும் விஷ்வாவை திட்ட,



"உன் தம்பியை சொன்னா பொறுக்காதே "என்றவன்,



தன் மகளை வாங்கி குடும்பமாக போட்டோ எடுத்துக் கொள்ளவும், விக்ரம் இரண்டு போட்டோவிற்கு உடன் நின்றவன், அதன் பின் விலகி சென்று அங்கிருந்த கண்ணாடியில் தன்னுடைய முகத்தை பார்த்துக்கொள்ள,முடியில்லாமல் தான் வேறு ஆளாக இருப்பது போல இருக்கவும் சிரித்துக் கொண்டவன், சந்தனத்தை எடுத்து நெற்றியில் பூசிய படி கண்ணாடியிலேயே பார்க்க, அங்கே தனக்குப் பின்னே ஒரு உருவம் தெரிய,"யார் "என்று அடையாளம் தெரிந்து கொள்ள,அவனுக்கு சில நிமிடங்கள் பிடித்தது.



திரும்பிப் பார்த்தவன் அழகாக புன்னகைக்க, பதிலுக்கு சிரிப்பதா.. வேண்டாமா என்று யோசனையுடன்,யாரும் பார்த்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்துடன் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டாள்.



கிட்டத்தட்ட ஓடிவிட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.



அவளது கொலுசு சத்தம் கொடுத்த ஓசையில்," யார்டா விக்ரம்.. உன்னை பார்த்து இப்படி ஓடுறது "என்று கேட்டபடி நங்கை வர,



"ஷாலினி" என்றான்.



"அவளா..!! உன்ன பார்த்துட்டு பேசாம போயிட்டாளா..? ஒரு நிமிஷம் இரு. கோவிலுக்குள்ள தான் இருக்காளான்னு பார்த்துட்டு வரேன் "என்று வேகமாக செல்ல போனவளை தடுத்த விக்ரம்,



"வேண்டாம்-க்கா. நம்ம கூட பேசினாலே சண்டை வரும்னு நினைச்சுட்டு தான் பயந்து ஓடுறா..!! அவ வீட்டு சூழ்நிலை எப்படி இருக்கும்னு தெரியாது. நாம வந்த வேலையை மட்டும் பார்ப்போம் "எனவும்,



விஷ்வாவும்," இந்த கேரக்டர் பற்றி இதுவரைக்கும் சொன்னதே இல்லையே "என்று மனைவியிடம் கேட்க,



"எங்க பெரியம்மாவோட அண்ணன் பொண்ணு. இவளோட அக்கா பிரியாவை தான் என்னோட அண்ணனுக்கு கல்யாணம் பண்ணியிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்.



"இவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்னன்னு தெரியல. ஏன் விக்ரம் உச்சி வகிட்டில் குங்குமம் வைச்சிருந்தாளா "என்று ஆர்வமாக கேட்க,



"நான் கவனிக்கலையேக்கா. கல்யாணம் நடந்திருந்தால், உன்னோட பிரண்டு உனக்கு போன் பண்ணி விவரத்தை சொல்லி இருப்பாங்க இல்ல"என்று சொல்லவும்,



"ஆமாம்.இங்க என்ன நடந்தாலும், என்னோட பிரண்டு எனக்கு போன் பண்ணி சொல்லிடுவா. அப்போ அவளுக்கு கல்யாணம் நடக்கல" என்றவளின் மனதில் ஏதேதோ யோசனைகள் பிறக்க,அதை காட்டிக் கொள்ளாது நடந்தவள்,



கணவனிடம் கண்காட்டி விட்டு தம்பியிடம்," இவ்வளவு தூரம் வந்துட்டோம்.ஒரு ரெண்டு நாள் இங்கே இருந்துட்டு போகலாமா விக்ரம் "என்று கேட்க,



"தாராளமா இருந்துட்டு வா-க்கா. எனக்கு வேலை இருக்கு. நான் முன்னாடி போறேன். நீயும் மாமாவும் ஊரெல்லாம் சுத்தி பார்த்துட்டு அப்புறம் வாங்க" என்று பிடி கொடுக்காமல் பேச,



"நீ இல்லாம நாங்க மட்டும் எப்படி இருக்க முடியும். அப்பாவை பார்த்தால் எப்படி நான் சமாளிப்பேன். பெரியப்பா வீட்டுக்கே வந்து சண்டை போட்டாலும் போடுவார்.நீ இல்லன்னா என்னால சமாளிக்க முடியாது. நீயும் இங்கதான் இருக்கனும் "என்று பிடிவாதம் பிடிக்க,



"அஞ்சு பாப்பா கூட, உன்னோட அளவுக்கு பிடிவாதம் பிடிக்கிறது இல்ல "என்று திட்டியவன்,



"நாளைக்கு காலைல கிளம்பிடனும் "என்று சொன்னபடி நடக்க,



"அதுவரைக்கும் எங்க தங்குறது "என்று விஷ்வா கேட்கவும்,



நங்கை," என்னோட பிரண்டு கிட்ட போன் பண்ணி சொல்றேன்" என்றவள் உடனடியாக தன்னுடைய தோழிக்கு போன் செய்து,தாங்கள் வந்திருப்பதாக கூற,



"நானே உனக்கு போன் பண்ணலாம்னு நினைச்சேன். நீ வந்திருக்கிற விஷயம் உன்னோட பெரியப்பா வீட்டுக்கு தெரிஞ்சிடுச்சு. உன்னோட அப்பா உன்ன பார்க்கறதுக்கு கோவிலுக்கு கிளம்பிட்டு இருக்கார்"என்று சொல்ல,



"உனக்கு எப்படி தெரியும் "என்று கேட்க,



"உன்னோட பெரியப்பா வீட்டுக்கு, எதிர் வீட்ல தான் நான் இருக்கேன். மறந்து போச்சா உனக்கு "எனவும்,



"சரி நான் பார்த்துக்கிறேன் "என்று போனை வைத்துவிட்டு,தன் தம்பியை பாவமாக பார்க்க,



"என்ன "என்று கேட்கவும்,



"அப்பா" என்ற சொல்லிலேயே அவனுக்கு அனைத்தும் புரிந்துவிட்டது.



"கோவில் பொறுப்பாளர் சொல்லி இருக்க வாய்ப்பு இல்ல. இப்போ நம்மளை பார்த்துட்டு போனாலே.. அவதான் போன் பண்ணி வீட்டுக்கு தகவல் கொடுத்து இருக்கணும். தேவையில்லாத சிக்கலை இழுத்து வச்சுக்கிட்ட க்கா..!!



"வாங்க.. நாம கிளம்பலாம். நம்மள பார்த்தா சண்டைக்கு தான் முதல் ஆளா நிற்பார்.கையில குழந்தையை வச்சுக்கிட்டு எந்த பிரச்சினையும் வேண்டாம் "என்று கிளம்ப பார்க்க,



விஷ்வா," நாம ரெண்டு ஆம்பளைங்க இருக்கோம். நம்மளை என்ன பண்ணிட முடியும்னு நீ இப்படி பயந்து ஓட பார்க்கிற "எனவும்,



"இது பயமில்ல மாமா. பிடிக்கல.. யாரையுமே பார்க்க பிடிக்கல.. அவ்வளவுதான் "எனவும்

,அவனது பிடிவாதத்தை மாற்ற முடியாது என்பதால் தாங்களும் கிளம்ப,அவர்கள் காரில் ஏறியவுடன் காரின் பக்கவாட்டு கண்ணாடியில் அவள் நின்றிருப்பது அவன் கண்ணுக்குத் தெரிய,பார்த்த முதல் கணம் சிரித்தவன், இப்போது முறைத்தபடி காரில் இருந்து இறங்கி,



அவளை,"வா"என்று அழைக்க,



"மாட்டேன்" என்றவள் அங்கே இருந்து வேக நடையிட்டு திரும்பி பார்த்துக்கொண்டே சென்று விட்டாள்.
 
Top