• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண் மூடினேன் மெய் தீண்டினாய் 3

Nirosha Karthick

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 24, 2024
Messages
25

அத்தியாயம் 3​



விக்ரம் காரில் இருந்து இறங்கவுமே, நங்கையும் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு யாரை முறைக்கிறான் என்று பார்க்க, அங்கே ஷாலினி…திரும்பிப் பார்த்துக் கொண்டே வேகநடையிட்டு செல்வது தெளிவாகத் தெரியவும் தம்பியை பார்த்து சிரித்தவள்," ஷாலினி மாறவே இல்ல.. சாந்தி அத்தை பேச்சை கேட்டுக்கிட்டு, உன்னை பார்த்து எப்படி ஓடி ஒளிஞ்சாளோ.. அதே மாதிரி இப்போவும் ஓடிக்கிட்டே இருக்கா..!! என்ன இப்ப கொஞ்சம் மெதுவா ஓடுறா "என்று கேலி செய்தபடி தம்பியை பார்க்க,



"அவளை பத்தின பேச்சு எதுக்கு..? கோவிலுக்கு வந்த இடத்தில கொஞ்ச நேரம் நிதானமா இருக்க விடாம அவசரமா கிளம்ப வச்சிட்டா..!"என்று திட்டியபடி காரை எடுக்க, சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள்.



அதற்குள் காரை வழிமறித்தபடி," நிறுத்துங்கடா.. டேய் காரை நிறுத்தங்கடா "என்று தள்ளாடியபடி வந்து நின்றவரை பார்த்து,சட்டென்று பிரேக் போட்டவன்,



"இந்நேரம் கொலை கேஸ்ல உள்ள போயிருந்திருப்பேன். இந்த மனுஷனால நமக்கு எப்பவுமே நிம்மதி இல்லை. என்ன வேணுமாம் இவருக்கு "என்று சலித்தபடி காரை விட்டு இறங்க, மொட்டை போட்டிருந்தாலும் தன் மகனை அவருக்கு அடையாளம் தெரியாமல் போகுமா..!!



"என் குலசாமி" என்றபடி விக்ரமை அணைக்க வந்தவரை,ஆள்காட்டி விரலை வைத்து தள்ளி நிற்க வைத்தவன்,



" என்ன வேணும் "என்று கேட்க,



"இந்த ஏழு வருஷத்துல ஒரு தடவை கூட அப்பாவை பார்க்கணும்னு தோணலையா தம்பி..! உங்கள எல்லாம் பார்க்காமல் நான் தவிச்சு போயிட்டேன்..!! நங்கையும் கூட வந்திருக்களாமே..! பிள்ளை இருக்குதுன்னு கேள்விப்பட்டேன். ஒரே ஒரு தடவை பார்த்துட்டு போயிடுறேன் "என்றவர் மகனின் அனுமதி எதிர்பார்க்காமல்,



"நங்கை.. நங்கை "என்று அழைக்க, நங்கையால் தன்னுடைய பாசத்தை கட்டுப்படுத்தி வைக்க முடியவில்லை.



குழந்தையை அணைத்து பிடித்தபடி காரிலிருந்து இறங்கியவள்," அப்பா "என்று அழுகையோடு அவரை நெருங்கி வர, அஞ்சலி.. அம்மா அழுகவும் தானும் அழுக ஆரம்பிக்க செல்வம்," என் தாயீ "என்று மகளிடம் விரைய,



விக்ரம் அவரின் நாடகத்தை பார்த்து சலித்துக் கொண்டவன், அஞ்சலி அழுகவும் அக்காவிடம் இருந்து வாங்கிக் கொண்டவன், எதுவும் பேசாது சற்று தள்ளி நின்று கொள்ள, விஷ்வா காரில் இருந்து இறங்கிக் கொண்டான்.



தூரத்தில் இருந்தே தன்னுடைய மனைவியையும், மாமனாரையும் பார்த்துக் கொண்டிருந்தவன், நங்கை அழுகையை நிறுத்தாமல் இருக்கவும்,அவள் அருகே சென்று தோளில் கையை வைக்கவும் தான், சுய உணர்வை அடைந்தவள்," அப்பா.. இவர் தான் உங்க மாப்பிள்ளை "என்று அறிமுகப்படுத்தி வைக்க,



"கல்யாணத்துக்கு கூட கூப்பிடலையே தாயீ.. நான் அந்த அளவுக்கா பாவம் பண்ணிப்புட்டேன் "என்று கண்ணீரை துடைத்துக் கொள்ள,அவரது அருகில் வந்தவுடனேயே விஷ்வாவிற்கு சரக்கின் நாற்றம் தெரிய பல்லை கடித்தவன்,



நங்கையை அவரிடம் இருந்து முழுவதுமாக விலக்கி," குடிச்சிருக்கார்டி. நீயும் அறிவில்லாம அவர் பக்கத்துல நின்னு பேசிட்டு இருக்க"என்று திட்டவும்,



"குடிச்சிருந்தா அவர் என்னோட அப்பா இல்லைன்னு ஆகிடுமா "எனவும்,அவளின் கேள்வியில் அவளை முறைத்து விட்டு அவர் தன்னை ஆர்வமாக பார்ப்பதை உணர்ந்து பதிலுக்கு வலுக்கட்டாயமாக சிரித்து வைத்தவன்,



"பேசிட்டு சீக்கிரம் வா. நான் கார்ல இருக்கேன் "என்று காரில் சென்று அமர்ந்து கொண்டான்.



கணவனின் கோபத்தில் சுய உணர்வுக்கு வந்த நங்கை, கண்களை துடைத்துக் கொண்டு," எப்படிப்பா இருக்கீங்க "என்று கேட்க,



"நீங்க இல்லாம நான் நல்லாவே இல்ல சாமி. என்னையும் உன்னோட கூட்டிட்டு போயிடறியா "என்று கேட்கவும் நங்கைக்கு தூக்கி வாரிப்போட்டது.



தங்கள் மேலுள்ள பாசத்தில் வருகிறேன் என்கிறாரா.. இல்லை குடிப்பதற்கு யாரும் பணம் கொடுக்காததால், தங்களுடன் வர விரும்புகிறாரா என்ற சந்தேகம் பிறக்க,"தம்பி என்ன சொல்வான்னு தெரியலையே.. நீங்க தம்பிகிட்ட கேட்டுடுங்கப்பா..!! நானே அவனோட வீட்ல தான் இருக்கேன் "என்றுவிட்டு அப்பாவி போல முகத்தை வைத்துக் கொள்ள,தங்கள் பேச்சைக் கேட்டும் கேட்காதது போல தள்ளி நின்ற மகனை ஒரு ஆர்வத்துடன் தான் பார்த்தார்.



சில வருடங்கள் கழித்து பார்ப்பதால், தான் செய்த தவறுகளை மறந்து, மன்னித்து தன்னை உடன அழைத்துச் சென்று விடுவான் என்று தப்பு கணக்கு போட்டவர்,"நான் விக்ரம் கிட்ட கேட்கிறேன். நான் கேட்டா சரின்னு சொல்லிடுவான் "என்றவர்,



தள்ளாடியபடியே விக்ரமின் அருகே செல்ல அவன் கையில் இருந்த குழந்தையை வாங்க அவர் கையை நீட்டவும் அஞ்சலி,"மாமா.. இது பேட் தாத்தா போல.. குளிக்கவே மாட்டாங்களா "என்று கேட்டு மூக்கை பிடித்துக் கொள்ள,அவளின் செயலால் விக்ரமிற்கு சிரிப்பு வர பார்த்தாலும், ஒருவகையில் வருத்தமாக தான் இருந்தது.



அவரிடம் வந்த சரக்கு நாற்றத்தை, அவள் அப்படி சொல்ல, சுந்தரத்தின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே..!!



அவசரமாக அவர்," நான் ஒரு நாளைக்கு மூன்று தடவை குளிப்பேன் குட்டி. என்ன பார்த்து இப்படி சொல்லிப்புட்டியே "என்று அங்கலாய்க்க,அவள் அவரின் நெருக்கத்தை விரும்பாமல் விக்ரமிடம் இருந்து நழுவ முயற்சி செய்ய,அவளை விக்ரம் இறக்கி விடவும், விஷ்வா காரில் இருந்து இறங்கி வந்து ஓடி வந்த குழந்தையை தூக்கிக்கொண்டு காருக்குள் அமர்ந்து கொண்டான்.



ஓடும் பேத்தியை ஆர்வமாக அவர் பார்த்துக் கொண்டிருக்க, அக்காவுடன் அவர் நடத்திய பேச்சு வார்த்தை தெளிவாக அவனுக்கும் கேட்டதால்," என்னால உங்களை எல்லாம் கூட்டிட்டு போக முடியாது.நாங்க ஒரு இடத்துல கௌரவமாக வாழ்ந்துட்டு இருக்கோம். அங்க வந்து பிரச்சினை பண்ணனும்னு நினைக்காதீங்க. உங்களால ஏற்கனவே நாங்க பட்ட அவமானம் எல்லாம் போதும். தயவு செஞ்சு எங்க கூட வரணும்னு நினைக்க கூட செய்யாதீங்க.. "எனவும் செல்வம் அழுவது போல் ஆகிவிட்டார்.



"நான் செத்தா.. நீதானய்யா கொல்லி வைக்கணும். என் மூச்சு அடங்கின பின்னாடி, நீ வந்தா நல்லா இருக்குமா..?? கடைசி காலத்துல உன் கூடவே இருக்கணும்னு நினைக்கிறேன் சாமி..! உன்னோடவே வந்துடறேன் "என்று கெஞ்ச, சிறுவயதில் தான் கம்பீரமாக பார்த்த தகப்பனை இப்படி பார்க்க அவனுக்கும் பிடிக்கவே இல்லை.



நேரடியாக," மாசம் மாசம் செலவுக்கு காசு வேணுமா "என்று கேட்க,



அவர் கொஞ்சமும் யோசிக்காமல்," ஆமாம் தம்பி.எதுக்கெடுத்தாலும் உன்னோட அண்ணன் கிட்ட போய் நிற்க சங்கடமா இருக்கு. அவனும் இப்போ எல்லாம் மட்டு மரியாதை இல்லாம, எங்க அப்பன் சொத்துல உனக்கு எதுக்கு கொடுக்கணும்னு பேசிடறான்.



"நானும் மானங்கெட்டத்தனமா வேற வழி இல்லாம அங்கேயே கஞ்சி குடிச்சிட்டு, அவன் கொடுக்கிற காச வாங்கிக்கிட்டு, ஏதோ வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கேன். எப்போதான் எனக்கும் விதி வந்து சேரும்னு தெரியலை "என்று பேசிக்கொண்டே செல்ல,



மறுவாழ்வு மையம் கொண்டு சென்று, அவரை திருத்தும் நிலைமை எல்லாம் தாண்டி விட்டது அவனுக்கும் புரிய, அந்த எண்ணத்தை கைவிட்டவன்," நான் ரெண்டொரு நாளில் திரும்பி வருவேன். அப்போ உங்களுக்கு மாசம் மாசம் பணம் அனுப்புற மாதிரி ஏற்பாடு பண்ணி கொடுத்துடறேன். இப்போ கிளம்புங்க "என்று அவரை அனுப்ப பார்க்க,அவரோ நம்பிக்கை இல்லாமல் மகனை பார்த்தார்.



"உங்கள எங்களோட கூட்டிட்டு போறதுக்கு எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை. உங்களுக்கு பெரியப்பா வீட்டில் இருக்க விருப்பம் இல்லைன்னா சொல்லுங்க. தனியா ஒரு வீடு பார்த்து தரேன். சமைக்கிறதுக்கும், வீட்டு வேலைக்கும் ஆள் ஏற்பாடு பண்ணி கொடுத்துடுறேன். நீங்க தனியாவே ராஜா மாதிரி இருக்கலாம் "என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த சாலையில் ஆட்டோ ஒன்று வர,



அதிலிருந்து இறங்காமலேயே ஒரு பெண்மணி," இங்க என்ன அண்ணே பண்ணிட்டு இருக்க "என்று எட்டிப் பார்த்தபடியே கேட்க, திருதிருவென்று விழித்தார் சுந்தரம்.



ஆட்டோவை விட்டு இறங்கியவர்," புதுசா ஊருக்குள்ள வர்றவங்க கிட்ட காசு கேட்டு வம்பு பண்ணிக்கிட்டு இருக்கியா..? இரு..வீட்ல போய் சொல்றேன்.என் மருமகன் உன்னை ரொம்ப நல்லா கவனிச்சுப்பார் "என்று சொல்லவும் சுந்தரத்தின் முகத்தில் ஒரு பதட்டம் வர,அவரைப் பார்க்கவே விக்ரமிற்கு பரிதாபமாக இருக்க, அதற்கு மேல் நங்கையால் காரில் அமர்ந்திருக்க முடியாமல் இறங்கியவள்,



வேகமாக அவரின் அருகே வந்து," என் தம்பி கூட தான் அப்பா பேசிட்டு இருக்கார் அத்தை "என்று சொல்லவும்,நங்கையை பார்த்தவர்,விக்ரமையும் அதற்கு பின்பு அடையாளம் தெரிந்து கொண்டவர், தன்னை சுதார்த்திக் கொண்டு,



"சரி.. சரி.. பேசிட்டு வா. புதுசா மகனையும் மகளையும் பார்த்த சந்தோஷத்துல, இத்தனை நாள் சோறு போட்ட அண்ணனையும், அண்ணன் மகனையும் மறந்துடாத "என்று குத்தி காட்டியபடி சென்று விட, தங்களை பார்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்ற அத்தையை நங்கை கவலையோடு பார்க்க,



விக்ரம்," இந்த ஊருக்கு வந்தா இதெல்லாம் பார்த்து ஆகணும்னு, நமக்கு தெரியாதா..?நீ கவலைப்படாதக்கா"என்று நங்கையை சமாதானம் செய்தவன்,



அப்பாவிடம்," நாங்க ஊருக்கு போறதுக்கு இன்னும் ரெண்டு மூணு நாளாவது ஆகும். சாயந்திரம் போன் பண்றேன். போன் இருக்கு தானே "என்று கேட்டு அவரின் தலையசைப்பில் அவரிடமிருந்து நம்பரையும் வாங்கிக் கொண்டு செல்ல,



"உன்னோட அத்தக்காரி வீட்ல போய் சொன்னா, என்னோட அண்ணன் பிரச்சனை பண்ணுவான் தம்பி. நானும் உங்க கூடவே வந்துடறேன் "என்று பயத்தில் பேச,



"நாங்க வந்த விஷயம் வீட்ல இருக்கவங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். நீங்க பார்த்தத அத்தை இல்லைன்னாலும்,யாராவது சொல்லிடுவாங்க. நீங்க தைரியமா போங்க.



"அதுக்கு மேல இருக்க வேணாம்னு சொன்னா, சாயந்திரம் நான் போன் பண்ணும் போது சொல்லுங்க..பார்த்துக்கலாம். இப்போ நான் கிளம்புறேன். கொஞ்சம் வேலை இருக்கு "என்றவன் மனம் கேட்காமல் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து சில நூறுகளை மட்டும் கணக்காக எடுத்து அவரது கையில் கொடுக்க,



அதிலேயே பேரானந்தப்பட்டு போனவர்," நீ போயிட்டு வா தம்பி.. போயிட்டு வா "என்று சந்தோஷமாக அனுப்பி வைக்க,



பெற்ற தகப்பனை விட்டும் கொடுக்க முடியாமல், தன் தாய்க்கு செய்த துரோகத்தை மன்னிக்கவும் முடியாமல், பாரம் ஏறிய மனதுடன்,காரில் வந்து ஏற,



விஷ்வா" இதுக்கு மேல இங்க இருக்க வேண்டாம் விக்ரம். கிளம்பிடலாம்"எனவும்,



"திரும்பி வருவேன்னு அப்பாகிட்ட சொல்லி இருக்கேன் மாமா. இத்தனை நாள் நேருக்கு நேர் பார்க்கல. இப்போ வாடி வதங்கி போய் இருக்க மனுஷனை பார்த்தா, மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அப்படியே விட்டுட்டு போக முடியல. அவருக்கு ஏதாவது வழி பார்த்து கொடுத்துட்டு போவோம் "என்று சொல்ல, நங்கையும் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.



பெற்றவர் சரியில்லை என்றாலும், அவர் மீது கொண்ட பாசத்தை மறைத்து வைக்க தெரியாத நங்கையும்,விக்ரமும் தங்களது சிறுவயது நினைவுகளை அசை போட்டவாறு வர விஷ்வாவும்,அவர்களின் மனநிலை புரிந்தவனாய் அவர்களின் மோனநிலையை கலைக்காமல், தன்னுடைய மகளின் மேல் கவனத்தை செலுத்தலானான்.
 
Top