• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண் மூடினேன் மெய் தீண்டினாய் -5

Nirosha Karthick

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 24, 2024
Messages
19

அத்தியாயம் 5​


சாந்தி தன் மகளுக்கு, மறுநாளே மாப்பிள்ளை பார்த்து விட,அவர்களும் பெண் பார்ப்பதற்காக வருவதாக தகவல் சொல்லிவிட, சாந்தி பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்.


பிரியாவும் அவள் பங்கிற்கு தாய் வீட்டிற்கு வந்து உதவி செய்து கொண்டிருக்க, ஷாலினி யாருக்கு வந்த விருந்தோ என்பது போல குளிக்க கூட செய்யாமல் அழுக்கு நைட்டியோடு அமர்ந்திருந்தாள்.


அதிலேயே அவளை விருப்பமின்மை அப்பட்டமாக சேர்ந்தது.


ஆனாலும் சாந்தி கண்டு கொள்ளாமல் தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.


தங்கையை தயார் செய்ய வந்திருந்த ப்ரியா," நீ இன்னும் குளிக்கலையாடி "என்று கேட்டபடி அவளுக்கு குளிப்பதற்கு தயாராக உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமில் வைத்து விட்டு வந்தவள்,


"குளிச்சிட்டு வா "என்று அவளை எழுப்ப,


"ரொம்ப காய்ச்சலா இருக்குக்கா. குளிச்சே ஆகணுமா "என்று சோர்வாக கேட்க, தங்கையின் கழுத்தை தொட்டுப் பார்த்தவள்,


"என்னடி.. அனலா கொதிக்குது. முன்னாடியே காய்ச்சல்னு சொல்ல மாட்டியா" கோபப்பட்டவள்,


"நீ போய் டிரஸ் மாத்திட்டு வா. நாம ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம் "என்று அழைக்க


"மாத்திரை மட்டும் போதும் பிரியா. என்னால கொஞ்ச தூரம் நடக்க முடியும்னு கூட தோணல. ரொம்ப டயர்டா இருக்கு "என்றவள் அமர்ந்திருந்த நிலையிலிருந்து படுத்து விட பதறிப்போனவள்,


"அம்மா "என்று கத்தவும் சமையலறையில் இருந்து வெளியே வந்தவர்,


சின்ன மகள் இருந்த நிலையை பார்த்துவிட்டு,"என்னடி ஆச்சு "என்று கேட்க,


"காய்ச்சல் அனலா கொதிக்குது. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம். நீ ஆட்டோ வர சொல்லு "என்று சொல்ல,


அவரும் பதட்டமாகி போனவர் தன்னுடைய கணவரை அழைத்து சொல்ல, அவரும் வேலையை விட்டுவிட்டு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்து விட்டார்.


மருத்துவமனைக்கு அழைத்து செல்ல,"சாதாரண காய்ச்சல் தான். மாத்திரை சாப்பிட சொல்லுங்க. ஒரு மூணு நாளைக்கு ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும் "என்று ஊசி போட்டுவிட்டு மருந்து மாத்திரைகளை கொடுத்து அனுப்பி விட,ஆட்டோவிலேயே ஊசியின் தாக்கத்தால் ஷாலினியின் உடம்பெல்லாம் வேர்த்து கொட்டிவிட்டது.


வீட்டிற்கு வந்த பின்பு ஷாலினியின் அப்பா கபிலன்," பொண்ணு பார்க்கற விசேஷத்தை இன்னொரு நாள் வச்சுக்கலாம். நான் மாப்பிள்ளை வீட்டுக்கு போன் பண்ணி தகவல் சொல்லிட்டு வரேன் "என்றவர் மனைவியின் பதிலை எதிர்பார்க்காது சென்று மாப்பிள்ளை வீட்டிற்கு தகவல் கொடுத்து விட்டு வர, அதுவரை மகளுக்கு உடம்பு சரியில்லை என்பதில் கவனமாக இருந்த சாந்தி,


அதற்கு பின்பு மகளை சந்தேகமாக பார்த்தவர்," வேணும்னே காய்ச்சல இழுத்து வச்சுக்கிட்டியா ஷாலினி "என்று சந்தேகமாக கேட்க,


பிரியா," அது எப்படிம்மா.. காய்ச்சல நினைச்ச நேரத்துல வரவழைக்க முடியும். நீ மனசுல எதையோ நினைச்சுக்கிட்டு பேசாத "என்றாள்.


"உன் தங்கச்சிய பொண்ணு பார்க்க வரும்போது மட்டும் ஏதாவது நடந்துடுது. அப்படி இல்லன்னா மாப்பிள்ளை வீட்ல இருந்து,நாங்க வரலைன்னு செய்தி வந்துடுது.


"இது இயல்பா நடக்குதா.. இல்ல.. உன் தங்கச்சி வேணும்னே மாப்பிள்ளை வீட்டுக்கு போன் பண்ணி பிடிக்கலைன்னு சொல்லிடறாளா.. ஒன்னும் தெரிய மாட்டேங்குது. காய்ச்சல் விடட்டும். நாளைக்கு என்ன விஷயம்னு தெரிஞ்சுக்காம விடமாட்டேன் "என்று சொல்லிவிட்டு சென்றுவிட,


மயக்கத்தில் இருப்பது போல நடித்துக் கொண்டிருந்த ஷாலினிக்கு, அவளது அம்மா பேசியது தெளிவாக கேட்டாலும்,' இப்போதைக்கு தப்பிச்சாச்சு 'என்று எண்ணத்தில் நிம்மதியாக கண் மூட, அவளது கருவிழிகள் அசைவதை கண்ட ப்ரியா கவலையோடு தன் தங்கையை பார்த்தாள்.


தங்கையின் முகத்தில் இருந்த வேர்வைத் துளிகளை துடைத்து விட்ட பிரியா, மனக்கலக்கத்துடன்," அம்மா வெளியில போயிட்டாங்க ஷாலினி. கொஞ்சம் கண்ண திறந்து, நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு. உனக்கு விக்ரம பிடிச்சிருக்கா "என்று நேரடியாகவே கேள்வி கேட்க,ஷாலினி அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சுவற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, பிரியாவின் சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிவிட்டது.


"எப்போ இருந்து லவ் பண்ற "என்று கேட்க, அதற்கும் ஷாலினியிடமிருந்து பதில் இல்லை.


"நீ மனசு விட்டு பேசினால் தான், என்னால முடிஞ்ச உதவியை பண்ண முடியும் ஷாலினி. நீ மனசுக்குள்ளயே எல்லாத்தையும் போட்டு மருகிட்டுக் கிடந்தா ஒண்ணுமே பண்ண முடியாது.


"அம்மா அவங்க இஷ்டத்துக்கு மாப்பிள்ளை கொண்டு வந்து நிறுத்திட்டே இருப்பாங்க.. எவ்வளவு நாளைக்கு காய்ச்சல உன்னால இழுத்து விட்டுக்க முடியும். இல்ல மாப்பிள்ள வீட்டில போன் பண்ணி பிடிக்கலைன்னு சொல்ல முடியும்.


"ஒரு கட்டத்துல உன்னோட மனசு தெரிய வரும்போது, ஒருவேளை விக்ரமுக்கு கல்யாணம் ஆகி இருந்தா..?"என்று கேட்க, ஷாலினி பதட்டத்துடன் அக்காவை பார்க்கவும்,


"விக்ரமுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா, என்ன பண்றதுன்னு கேட்டா தான்.. என்ன பார்ப்பியா? எப்படியோ.. இப்படியாவது உன் மனசுல விக்ரம் இருக்கான்னு எனக்கு புரிய வைச்சியே.. அதுவே போதும் "என்றவள்,


"என் புருஷனுக்கு விஷயம் தெரிஞ்சா ஆடி தீர்த்திடுவார் மனுஷன். அவரை எதிர்த்து எப்படி உன்னோட கல்யாணத்தை பண்ண போறோம்னு நினைச்சாலே, எனக்கு திக்கு திக்குன்னு இருக்கு.


"விக்ரம் உன்ன லவ் பண்ணா கூட பரவாயில்லை. ஓடிப் போயிடுன்னு சொல்லி நானே உன்னை ஊரை விட்டு அனுப்பி வைச்சிடுவேன்.


"விக்ரமுக்கு உன்னை பிடிக்குமான்னும் தெரியலையே.. நான் முதல்ல ராணியக்கா கிட்ட இருந்து நங்கை மதினியோட நம்பரை வாங்கறேன். விக்ரமுக்கு பொண்ணு பார்க்கறாங்களா..ஏற்கனவே விக்ரம் யாரையும் லவ் பண்றானா.. எல்லாம் தெரிஞ்சதுக்கு பின்னாடி தான் உன்னோட விஷயத்தை நாம பேச முடியும் "என்று பிரியா, அவள் போக்கிற்கு திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்க,


"அம்மாவுக்கு சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன் அக்கா. நான் விக்ரம கல்யாணம் பண்ண மாட்டேன்" எனவும்,


"அப்புறம் காலம் முழுக்க தனியாவே இருக்க போறியா? "என்று கேலியோடு கேட்க,


"முடிந்த அளவுக்கு வர்ற மாப்பிள்ளைகளை வேண்டாம்னு சொல்வேன். முடியாத பட்சத்துல எனக்குன்னு ஏதாவது வழி கிடைக்கும் "என்று விரக்தியுடன் பேச,


"தற்கொலை பண்ணிப்பேன்னு மறைமுகமா சொல்றியாடி " பதறித்தான் போனாள் பிரியா.


"நான் அந்த அளவுக்கு கோழை இல்ல அக்கா. எனக்குன்னு ஒரு வழி கிடைக்கும்னு தான் சொல்ல வரேன். நீ இப்போதைக்கு இந்த பேச்சை யார்கிட்டயும் எடுக்க வேண்டாம்.


"என்னோட ரகசியம் எனக்குள் மட்டும் இவ்வளவு நாளா இருந்துச்சு. இனி உனக்கும் தெரிஞ்சுதா இருக்கட்டும். உன்னால முடிஞ்சா.. அம்மா பார்க்கிற மாப்பிள்ளைகளை, சரி இல்லைன்னு சொல்லி தட்டி விடு. எனக்கு இந்த உதவி போதும் "என்று விட்டு மீண்டும் விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்க,


"அம்மாக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாத்தணும்னு எந்த விதமான அவசியமும் இல்லை ஷாலினி. நம்ம மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழ்வதற்கு இடைஞ்சலா, எது வந்தாலும் எதிர்த்து போராடனும்.


"ஒரு சத்தியத்துக்காக எந்த விதமான முயற்சியும் செய்யாமல், மனசுக்குள்ளயே போட்டு புதைச்சிக்கிறேன்னு சொல்றது முட்டாள்தனம். இதுக்கு முன்னாடி எப்படியோ.. இனி நான் உனக்காக ஏதாவது செய்வேன்.


"என் புருஷனுக்கு உன்னோட காதல் விவகாரம் தெரிஞ்சு.. நான் உனக்கு ஆதரவா இருக்கேன்னு தெரிஞ்சா, என்கிட்ட சண்டை போட்டு, என்கூட பேசாம கூட இருக்க வாய்ப்பு இருக்கு.


"ஏன் நாளைக்கு உனக்கு கல்யாணமானா, நம்ம ரெண்டு பேரும் உறவா இருப்போமான்னும் தெரியாது. ஆனால் இந்த காரணத்தை வைத்து, உன்னோட மிச்ச வாழ்க்கையை வீணாக்க கூடாது.


"விக்ரம் ரொம்ப நல்ல பையன். அதனால தான் உன்னோட ஆசைக்கு நான் உதவி பண்றேன்னு சொல்றேன். இப்போதைக்கு என்னோட வேண்டுதல் எல்லாம், விக்ரமுக்கு யார் கூடயும் கல்யாணம் முடிவாகி இருக்கக்கூடாது. யாரையும் விரும்பியும் இருக்கக்கூடாது.


"நான் வீட்டுக்கு போயிட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு, உன்னோட மாமாவ அனுப்பி வச்சிட்டு,தனியா இருக்கும் பொழுது தான் ராணி அக்காகிட்ட பேச முடியும்.


"நீயும் மாத்திரை போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடு. மூணு நாளைக்குள்ள உனக்கு ஒரு நல்ல பதிலோட வரேன் "என்று விட்டு சென்றுவிட, ஷாலினி அக்கா சொன்னது நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று எண்ணியவள், விக்ரமுடன் திருமணம் நடப்பது போல கற்பனை செய்து பார்க்க அந்த கற்பனையே அவளை உயிர்ப்பித்தது.


எப்போது அவனை காதலிக்க ஆரம்பித்தாள் என்று அவளுக்கே தெரியாது.


என்று அவளது அம்மா சத்தியம் வாங்கினாரோ,அந்த நொடியில் இருந்து விக்ரம் நண்பன் என்ற நிலையில் இருந்து மாறி அடுத்த கட்டத்திற்கு போய்விட்டான்.


சில நேரம் பெற்றவர்கள் செய்யும் தவறு இதுதான்.


ஒரு விஷயம் உறுதியாக தெரியாமல், நீ உறுதியாக செய்திருப்பாய் என்று அவர்களாக நினைத்துக் கொண்டு ஒரு விஷயம் செய்யப் போக, பருவ வயதில் இருப்பவர்கள் மனதில், அதுவே கள்ளத்தனத்தை விதைத்து விடுகிறது.


ஷாலினியின் மனதிலும் விக்ரம் கள்ளத்தனமாய் புகுந்ததும் அன்றுதான்.


அதன் பின் அவனை பார்க்க நேர்ந்தாலும், அம்மாவிற்கு கொடுத்த சத்தியத்தோடு, தன் மனதில் எழுந்த குறுகுறுப்பை மறைக்க முடியாமல், அவனை பார்த்தாலே விலகிப் போய்விடுவாள்.


அவனை பார்க்கும் பொழுது மனதிற்குள் வரும் சந்தோஷத்தை மறைப்பதற்கு தன்னுடனே அவள் வெகுவாக போராட வேண்டியிருந்தது.


இதில் விக்ரம் அவனது பெரியப்பாவுடன் சண்டை போட்டுவிட்டு சென்றுவிட, தன்னுடைய காதல் நிறைவேறாக் காதல் என்று அவளாகவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.


முன்பாவது வீட்டினருடன் பேசி, எப்படியாவது சம்மதம் வாங்கி விக்ரமுடன் திருமணம் செய்திருக்க வழி இருந்திருக்க கூடும்.


இன்று விக்ரம்… பிரியாவின் கணவன் விஷ்ணுவிற்கு பரம எதிரியாக வந்து நிற்கிறான்.


எப்படித்தான் தன் காதல் நிறைவேறுமோ என்று நினைக்கும் பொழுது அவளுக்கு கண்ணீர் தான் வந்தது.


தன்னுடைய ஒரு தலைக் காதலை நினைத்து கண்ணீர் விடுவதை தவிர, அவளால் வேறு என்ன செய்ய முடியும்..!!
 
Top