• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
புன்னகையுடனே வந்தவள் நிமிர்ந்து பார்க்க அவளுக்கு முதலில் பட்டது என்னவோ தேவ் தான்.

தன்னைக் கண்டு அதிர்வாள் அல்லது விழிப்பாள் என எதிர்பார்த்தவனுக்கு கிடைத்தது ஏமாற்றமே..

எப்போதும் போலவே சாதாரணமாக வந்தவளை அழைத்த பெரியவருக்கு சிரிப்பொன்றை உதிர்த்தவளின் முகத்தில் ஜீவன் இல்லை. அதனை கவனிக்க வேண்டியவன் கவனித்து இருந்தான்.

"அம்மாடி இவங்க.." என பெரியவர் கூற வர முன்பே முந்திக் கொண்ட விக்ரம் "ஹாய்..மேடம்..." என துள்ளுடன் கையசைக்க தேவ் முறைத்த முறைப்பில் கப்சிப் அவன்.

"தம்பி உங்களுக்கு இவள தெரியுமா..?"என அவர் ஆச்சர்யத்துடன் கேட்க சிரிப்புடனே விக்ரம் "ஓஓ..தெரியுமே..இவ..."என ஏதோ கூற வர மீண்டும் தேவ் கண்களாலே எரிக்க அமைதியாக தலையை குனிந்து கொண்டான்.

பெரியவரும் சிரித்துக் கொண்டே அவளிடம் "வர்ஷினி மா இவங்கள ஏற்கனவே உனக்கு தெரியுமா மா..?"என வினவ, உடனே இல்லை என தலையாட்டி உதட்டை பிதுக்க விக்ரமிற்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்து விட்ட உணர்வு. தங்கையாகவே தன்னுள் உருவகிக்கப்பட்டவள் அல்லவா...

அவளிடம் என்ன எதிர்பார்த்தானோ அவளின் பதிலில் ஏதோ போல் இருந்தது தேவ்விற்கு. ஆனாலும் அதனை மறைத்து அவளது பதிலில் வெற்றிப் புன்னகை புரிந்தான்.

பின் தெரியாதது போல ஃபோனை எடுத்து அதனுள் தலையை புதைத்துவிட்டான்.ஆனால் காது என்னவோ அவர்களின் உரையாடலில் தான்..

ஆதித்ய தேவ்வை அறிமுகம் செய்தவர் விக்ரமையும் அறிமுகப்படுத்த சின்ன இதழசைப்பை பரிசளித்தவள் மறந்து கூட தேவ்வையோ விக்ரமையோ நிமிர்ந்து பார்க்கவில்லை.

"சரி மா..போ.."என்கவும் அப்படியே சென்றுவிட்டாள்.

தன்னை பார்ப்பாள் என்று நினைத்த தேவ்விற்குமே அவளின் புறக்கணிப்பு ஏன் என்றே தெரியாமல் கோபத்தை கிளப்பி விட்டது. விக்ரம் தான் ஓர் படி மேலே சென்று அதிர்ந்து நின்றான். பின்ன யாரென்றே தெரியாதது போல நடந்து கொள்கிறாளே என்று தான் தோன்றியது.

மனதுக்குள் வெந்து கொண்டே தேவ்வை பார்த்தவனுக்கு கோபம் கோபமாக வந்தது. கிடைத்த ஒரு தங்கச்சியையும் இழக்க வைத்துவிட்டானே என்பது தான். ஆனாலும் இந்த ஆதித்யாவை தாண்டி எதையும் செய்ய முடியுமா..பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டான் விக்ரம்.

அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஆனால் வர்ஷினி தான் அவன் கண்களுக்கு அகப்படவில்லை.


...


அங்கே அலங்காரத்துக்காக போடப்பட்டிருந்த கல் மேல் அமர்ந்திருந்தவளுக்குள் இன்னும் படபடப்பும் நடுக்கமும் குறையவில்லை.

எவன் வாழ்க்கையில் இனி நுழையக் கூடாது என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிவந்தாளோ அவன் முன்னே இறுதியாக விதி கொண்டு வந்து நிற்க வைத்ததை நினைத்து சிரிப்பதா அழுவதா என்றிருந்தது.

திடீரென இப்படி இவன் வந்து நிற்பான் என கனவா கண்டாள். அவனை பார்த்த மாத்திரமே பூமி தன் பாதத்தை விட்டு நழுவது போல் தான் தோன்றியது அவளுக்கு.

பயப் பந்து தொண்டையில் உருள சட்டென உடலில் மின்சாரம் தாக்கியது. சற்று தூரம் அவள் நின்றதால் அந்த நடுக்கத்தை அவன் கவனிக்கவில்லை. ஆனால் முகத்தில் வெகுவாக அச்சத்தை மறைத்தாள் என்று தான் கூற வேண்டும்.

வாழ்க்கை ஒரு வட்டம் என்பது தெரியும். ஆனால் ஆரம்ப புள்ளியிலே மீண்டும் வந்து நிற்போம் என்பதை மதியவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவர்களை தாண்டி செல்லச் செல்ல இறுதியாக அவன் பேசிய பேச்சும் தூற்றிய வார்த்தைகளையும் அவனின் அந்த கொடூரமான முகத்தையுமே அசைபோட்டுக் கொண்டு சென்றாள்.

நெஞ்செல்லாம் வலித்தது..வாழ்வே கசந்தது..மனதின் பாரம் தாங்க முடியாமல் தான் இதோ மரத்தடியில் அமர்ந்து இருக்கிறாள். மறக்க நினைக்கிறாள் தான், ஆனால் முடியாமல் அழுகை முட்டிக் கொண்டு வந்துவிடுகிறது. அதனால் இதோ தன் இயல்பை மறந்து ஜடமாய் இருக்கிறாள்.

கண்ணீர் சுரப்பி அதன் இயக்கத்தை நிறுத்திவிட்டதோ.. கடந்த காலம் அவளை அழ வைத்துப் பார்த்து இப்போது கண்ணீர் கூட வர மறுத்தது. இதழோரம் ஓர் கசந்த புன்னகை.. வலி..வலி.. அவளை விட்டு விலகிச் சென்ற காலம் அவளுக்கு இதொன்றை தான் கொடுத்து விட்டுச் சென்றிருந்தது.

...

தன் முன் நிழலாட அந்நாந்து பார்த்தவளுக்கு இதயம் வெளியே வந்துவிடும் போல் இருந்தது.

அச்சத்தில் கண்ணை அகல விரித்தவளை ஏளனமாக பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் ஆதித்ய தேவ்.

அதனை எல்லாம் உணர்ந்து கொள்ளும் நிலையில் அவள் இல்லை. சடாரென எழுந்து நின்றவள் பிடிமானம் இல்லாமல் விழப் போய் மீண்டும் தன்னை சமப்படுத்திக் கொண்டு நின்றாள்.

"ஹேய் பார்த்து.."என்றவனின் பேச்சில் முழுக்க எள்ளல் மட்டுமே.

கண்ணை கரித்துக் கொண்டு வந்தது காரிகைக்கு.

"ரொம்ப சந்தோஷமாக இருக்கிற போல.." என்றவனுக்கு அவளின் உடல்நிலையே அவளின் நலத்தை பறைசாற்றியது.

சற்று என்ன நன்றாகவே இழைத்துப் போய் தான் இருந்தாள். கன்னமெல்லாம் ஒட்டி கண்களில் உயிர்ப்பில்லாமல் உதட்டில் இரத்தமில்லாமல் பார்க்க பாவமாகத் தான் இருந்தாள். அதற்காக மனம் இறங்கினால் அவன் தேவ் இல்லையே..

அவனுக்கு பதிலளிக்க கூட அவளுக்கு தெம்பில்லை.

"உன்னைய என் கண்முன்னாடி வரக் கூடாது என்று சொன்னேன்ல..இருந்தும் வந்திருக்க.. அது தப்பாச்சே.." என தாடையை தடவ பல மாதங்கள் கழித்து அவனின் அக்மார்க் பேச்சில் பெண்ணவளுக்கு உடல் வெடவெடுத்தது.

அதனை உணர்ந்தவன் என்ன நினைத்தானோ பேச்சை திசை மாற்றினான். அதுவரை அவள் நிமிர்ந்தாள் இல்லை.

"தன்னை பார்க்கமாட்டாளாமோ.." என பல்லைக் கடித்தாலும் உயிர் குடிக்கவே சித்தம் கொண்டான் வேங்கை.

" ம்ம்.. நான் துரத்தி விட்டதும் இன்னொரு வாழ்க்கையை தேடி போய்ட போல.." என்று வார்த்தையால் பதம் பார்த்தான். ஆனால் அது சென்றடைய வேண்டிய இடம் தான் தவறாகிப் போனது.

மென்மையானவள் வெகுவாக தாக்கப்பட்டாள் அவ் வார்த்தைகளால். செத்துப் போன நரம்பு கூட உயிர் பெற்று கண்ணீரை சுரந்தது அவனின் பேச்சின் வீரியம் தாங்காமல்.

அவள் விட்ட கண்ணீரே அவனுக்கான பதிலை தர தன்னுள் புன்னகைத்துக் கொண்டான் வேங்கை.

எந்த அணிகலன்களும் அணிந்திராதவள் கழுத்தில் பாசி மணியில் செய்த தாலி போன்ற ஒன்றை மட்டும் கோர்த்து போட்டிருந்தாள். அது இந்த விஷம் நிறைந்த உலகில் இருந்து தன்னை காத்துக் கொள்ளத் தான்..அனுபவசாலி என்பதால் தாலி போல அதை காட்டிக் கொண்டாள். அதனை பார்த்தவனே இவள் மறுமணம் புரிந்து விட்டாளோ என்ற சந்தேகத்தில் சரியாக தவறாக கேட்டு வைத்தான்.

இருந்தும் விட மனம் இல்லாதவன் "என்ன பதிலையே காணோம்..எப்படி இவனிடமும் என்னைப் போல பணம் கொட்டிக் கிடக்கா..." என்றவனிடம் ஏதும் பேசாமல் மௌனமாக கண்ணீர் வடித்தவளிடம் மீண்டும் "இல்லை எதுக்கு கேட்கிறேன் என்றால்..நீங்க தான் பெரிய புளியங் கொம்பா பார்த்து புடிக்கிற ஆளாச்சே.. அது தான் கேட்கிறேன்" என இதுவரை யாரிடமும் விளக்கம் அளித்திராதவன் அவளிடமிருந்து ஒரு வார்த்தைக்காக விளக்கி வைத்தான். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியே என அவள் அமைதியின் மொத்த உருவமாய் நிற்க கோபத்தில் கையை உயர்த்தியவனை பெரியவரின் குரல் தடுத்திருந்தது கூடவே விக்ரமும்.

அப்படியே கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்து கோபத்தை தணிக்க துணிந்தான்.

இவனை காணவில்லை என தேடிய விக்ரம் எப்படியும் இவளை தாக்கத் தான் சென்றிருப்பான் என்பதை சரியாக கணித்து வந்து விட்டான். அதற்கிடையில் பெரியவரும் வந்து அவர்களின் பேச்சை கத்தரிக்க விக்ரம் பெருமூச்சு விட்டுக்கொண்டான். அவன் அறியாத ஒன்று அவளை ஏற்கனவே அவன் காயப்படுத்திவிட்டான் என்பது.

இவர்கள் வரவே விட்டென அவ்விடம் விட்டகழ்ந்தவளின் செயலில் இன்னும் கொந்தளித்தான் தேவ். இருந்தும் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் நின்றிருந்தவனை விக்ரமே கதை பேசி அழைத்து சென்றுவிட்டான்.

போகும் அவனோ தன்னுள் பல கணக்குகளை போட்டுக் கொண்டே சென்றான்.

அவளை மீண்டும் பந்தாட அவன் கிளம்பி விட்டான்.

...


தனதறைக்கு வந்தவள் கண்ணீர் வற்றுமட்டும் ஒரு மூச்சு அழுதுவிட்டாள்.

என்ன நினைத்துவிட்டான் என்னைப் பற்றி..!? பணத்துக்காக அழைந்து திரிபவள் என்றா..!? என நினைத்த மாத்திரமே தேங்கி நின்ற கண்ணீர் மறுபடியும் கன்னத்தை தழுவியது.

அழ அழ அழுந்த முகத்தை துடைத்து விட்டதில் முகம் சிவந்ததே தவிர விழிநீர் நிற்கவில்லை.

நெஞ்சமெல்லாம் காந்தியது.. மூச்செடுக்க கூட சிரமப்பட்டு எழுந்து வெளியே ஓடினாள்..

எதனால் விதி என்னை இப்படி நோக வைத்து சிரிக்கிறது.. மனதில் வெறுமை..!!

"என் தகுதிக்கு உனக்கிட்ட அமர்வதே பெரிது.. இதுல உன்னை கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்துவேன் என்று நினைச்சியா... "என்றவனின் அகங்கார பேச்சும் இறுதியில் தன்னை அனைவரும் திருடி என பட்டம் சூட்டி வெளியே அனுப்பியதும் மீண்டும் மீண்டும் காதில் வந்து விழுந்து நெஞ்சை தீயிட்டு எரியச் செய்ய "நோநோ....நோ..நோ" என காதை பொத்திக்கொண்டு தரையில் பொத்தென விழுந்தாள்.

எதேச்சையாக திரும்பியவனின் கண்களில் அந்தக் காட்சி தப்பாமல் விழுந்தது...

...


காரில் ஏறி புறப்பட சென்றவனுக்கு மனதில் ஏதோ வித்தியாசமாக பட உடனே மனதில் தோன்றியது என்னவோ வர்ஷினியின் முகம் தான்.

அவள் சென்ற திசையை பார்த்தவனுக்கு தான் தூரத்தில் அவள் அறையிலிருந்து வெளிப்பட்டதும் முகத்தை துடைப்பதும் பின் திடீரென காதை பொத்திக்கொண்டு ஏதோ கூறுவதும் தெரிய, நெற்றி சுருக்கி கூர்ந்து பார்க்கவே சரியாக அவள் முழங்காலிட்டு விழுந்தாள். அதன் பின் அப்படியே மயங்கி சரிந்து விட்டாள்.

அவன் அசையாமல் நின்றது ஓரிரு கணங்களே.அடுத்த நிமிடம் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பென ஏ..ஏய் என்ற கர்சனையுடன் ஓடினான்.

அனைவரும் புரியாமல் அவனை பார்த்து விட்டு அதன் பின்னே வர்ஷினியை கவனித்தனர். பரபரப்புடன் அவர்களும் அவனை பின்தொடர்ந்து சென்றனர்.

அந்தோ பரிதாபம் அவன் வருவதற்குள் அவள் விழுந்து அருகில் இருந்த கல் நெற்றியை பதம் பார்த்திருந்தது.

இரத்தம் ஒருபக்கம் ஓட மயங்கி விழுந்தவளை வலியுடன் தூக்கி கன்னம் தட்டினான் தேவ்.

"ஏய்..வர்ஷு..கண்ண தெறடி...ஏய்.."என தவிப்புடன் அவளை எழுப்பினான்.

இருந்த கலவரத்தில் அவளை வர்ஷு என்று அழைத்ததையும் தன் மனம் ஏன் பரிதவிக்கிறது என்பதையும் உணரவில்லை அந்த புதியவன்.

ஆக அவனுக்கு ஓர் மூலையில் அவள் மேல் ஏதோ அபிப்ராயம் இருக்கிறது.

இவன் இப்படி அவளை அழைத்து எழுப்பும் வரை விக்ரம் அவர்கள் அருகில் வரவில்லை. அதன் பின்னே வந்து சேர்ந்தனர்.

ஏதோ உலகத்தின் எட்டாம் அதிசயம் போல வாயை பிளந்து கொண்டு ஆதித்யாவை பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம். அவன் அறிந்தவன் இவன் இல்லையே.தன் அருகில் இருப்பவர்களுக்கே தகுதி பார்ப்பவன். அவன் செல்லும் இடங்களிலும் இருக்கும் இடங்களிலும் பணத்தின் செழுமை பிரதிபலிக்கும். அப்படிப்பட்டவன் தரையில் தூசில் மண்டியிட்டு அமர்ந்து இருக்கிறான். அதுவும் தான் வெறுக்கும் தகுதி பார்க்கும் ஒருத்திக்காக.. அப்படியே ஜெர்க்காகி நின்று விட்டான் விக்ரம்.

அதையும் தாண்டி அவனுள்ளத்தில் தோன்றியது "இப்போ இப்படி இருக்கிறவன் அதற்காக இவளை எப்படி பழிவாங்க போகிறானோ..." என்று தான்.

ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க வாங்கியவன் தன் மடியில் அவளை கிடத்திக் கொண்டே தெளிக்க ம்ஹூம் அவளிடம் அசைவில்லை.

அதற்கிடையில் அந்த பெரியவர் ஹாஸ்பிடல் செல்ல முச்சக்கர வண்டியை வரவழைத்திருக்க அதில் தேவ்வே தூக்கி கிடத்தினான். அவன் எதையும் உணரும் நிலையில் இல்லை. இப்போது அவள் மட்டுமே அவன் கண்களில் தெரிந்தாள். அசைவில்லா தன்னவளை கண்டவனின் மனம் துடித்தது. ஏன்..ஏன்... காரணம் தெரியவில்லை..தெரிந்தாலும் அவன் அதனை ஏற்றுக்கொள்ள போவதில்லை.

அவளை ஏற்றியவுடன் பெரியவருடன் மற்றுமொரு பெண்மணியும் ஏறிக்கொண்டு கிளம்பி விட்டனர்.

முழு குழந்தைகளும் தன் தேவதைப் பெண்ணை கண்களில் நீருடன் பார்த்து நின்றனர்.

விக்ரமிற்குமே அவர்களை பார்க்க பாவமாகி விட்டது. வர்ஷினிக்கு என்னானதோ என்று வருந்தவும் செய்தான். இருந்தும் பக்கத்தில் ஆதித்யா நிற்கும் போது இவன் என்ன தான் செய்திட முடியும்..

அவள் சென்ற வழியையே அசையாமல் பார்த்து நின்றான் தேவ். உடனே தன்னை மீட்டிக் கொண்டவனுக்கு தான் தானா இது என்று தான் இருந்தது. அவளின் இரத்தத்தை தன் சேர்டில் பார்த்தவனுக்கு வலியை மீறி கோபமாக வந்தது. அவளை தீண்டிவிட்டோமா... என்று தான் யோசித்தான் தகுதி பார்க்கும் அரக்கன்.

அனைத்து மனநிலையும் ஒன்றாக குவிந்து வர்ஷினியின் மேல் கோபமாக வந்து நின்றது..

அவனை பார்த்து நின்ற விக்ரமிற்கு "ஆஹா..பாஸ் ஃபோமுக்கு வந்துட்டார்.. விக்ரம் க்ரேட் எஸ்கேப் டா.."என கவுண்டர் கொடுத்துக் கொண்டே ஓடிவிட்டான்.

தொடரும்...

தீரா.
 
Top