• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலில் விதிகள் ஏதடி 10

Malar Bala

Staff member
Jul 31, 2021
67
50
18
Thanjavur
அத்தியாயம் 10

பொறுமையாக என்று சதாசிவம் கூறவுமே ஆதிரை இவர் ஏதோ பெரிதாகக் கூறப்போகிறாரோ என்று எண்ணினாள். அவரும் அதற்கேற்ப தொடர்ந்து

“ஆதிரை நான் வீட்டில் இல்லை என்பதற்கான காரணத்தை உன்னிடமிருந்து மறைக்க காரணம் நீ அதைத் தவறாக எடுத்துக் கொள்வாயோ என்ற பயம் தானம்மா.” என்றவரை இடைமறித்து

“நான் ஏன் தவறாக நினைக்க வேண்டும்? புரியவில்லையே!” என்றாள்.

“நான் சென்றதற்குக் காரணம் உங்கள் திருமணம்” என்று கூறியவர் எதுவும் பேசாமல் அமைதியாக ஆதிரையைப் பார்த்தார்.

ஆதிரை “இந்தத் திருமணத்தில் உங்களுக்கு விருப்பமில்லையா? அல்லது என்னை திருமணம் செய்ததில் விருப்பமில்லையா?” என்றாள்.

“சரியாகத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாயே” என்று அவர் அவளைக் கிண்டல் செய்யவும் ஆதிரை அவரைப் புரியாமல் பார்த்தாள்.

ஆதிரையின் முகத்திலிருந்த புரியாத பாவனையைப் பார்த்து மெல்லியதாக சிரித்தவர் அவரே தொடர்ந்துப் பேசத் ஆரம்பித்தார்.

“ஆதிரை. உங்கள் திருமணத்தையோ அல்லது உன்னையோ பிடிக்காமல் இல்லை. மாறாக எனக்கு அதில் மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் அது நடந்த முறையில் தான் எனக்கு உடன்பாடு இல்லை. அது என் மகன் உனக்கு அளித்த அநீதி அல்லவா? எதனால் அல்லது எதை நினைத்து அன்று நீ அவனுடன் வாழச் சம்மதம் கூறினாய் என்று எனக்குத் தெரியாதுமா ஆனால் எப்படியோ நீ இந்த வீட்டில் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி தான்” என்றார்.

“நான் வீட்டில் இருப்பது மகிழ்ச்சி என்றால் பின் வெளியில் தங்கக் காரணம் என்ன?” என்று ஆதிரை கேட்கவும்

“தேவா செய்தது மிகப் பெரிய தவறு. அதை ஒரு தந்தையாகக் கண்டிப்பது எனது கடமை தானே?” என்று அவர் வினவவும் ஆதிரை அதற்கு “ஆம்” எனப் பதில் அளித்தாள். பிறகு அவரே தொடர்ந்து

“ஆனால் அவனைப் பற்றி முழுதாகத் தெரிந்த ஒரு மனிதனால் அதாவது என்னால் அவனை தண்டிக்க இயலவில்லை ஆதிரை. ஏனெனில் தேவா அத்தகைய தவறு செய்யக் கூடியவன் இல்லை. நீ நினைக்கலாம் மகன் என்பதற்காக நான் அவனை உயர்வாகக் கூறுகிறேன் என்று. ஆனால் தேவாவை போல் மகன் பெற்றதற்கு நான் என்றுமே பெருமைதான் பட்டிருக்கிறேன் இந்தத் திருமணம் ஒன்றைத் தவிர. அதற்கும் அவனிடம் தகுந்த காரணம் இருக்கலாம். அதை அவன்தான் கூற வேண்டும். அப்படியும் உன் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்தது என்னைப் பொருத்தவரை தவறு தான். அந்த அதிர்ச்சியிலிருந்தே என்னால் மீள முடியவில்லை அதற்குள் நீ அவனுக்கு அளித்த தண்டனை?” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போழுதே ஆதிரை

“நானா! நான் என்ன தண்டனை கொடுத்தேன்?” என்றாள்.

“அவனை வீட்டிற்கும் வெளியில் நிற்க வைத்தாயே…மறந்து விட்டாயா?” என்றார்.

“அதுவா!” என்று ஆதிரைக் கேட்கவும் சதாசிவம்,

“நான் உன்னைத் தவறாகக் கூறவில்லை ஆதிரை. உன் பக்கம் நியாயம் இருக்கிறது. ஆனால் என் நிலையிலிருந்து சிந்தித்துப் பார். ஒரு பக்கம் இதுவரை தவறே செய்யாத மகன் ஒரு பெரிய தவறை செய்துவிட்டு வந்து நிற்கிறான். மறுபக்கம் அவனால் பாதிக்கப் பட்ட பெண். அவளும் அவனுக்கான தண்டனையை கொடுக்கிறாள். அதற்காக அவன் அனைத்தும் இருந்தும் எதுவும், யாரும் இல்லாதவனைப் போல நடுத் தெருவில் நிற்பதைப் பார்த்தும் ஒரு தந்தையாக என்னால் எதுவும் செய்ய இயலவில்லையென என் மனம் வேதனை அடைந்தது. அதுதான் சில நாட்கள் வீட்டிற்கு வரவில்லை. ஒருவழியில் பார்த்தால் இதிலிருந்து தப்பிக்க முயன்றேன் என்று கூடச் சொல்லலாம்.” என்று முடித்தவரைப் பார்த்த ஆதிரைக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.

அவரது பேச்சிலிருந்த வேதனையும் குற்றவுணர்ச்சியும் அவளை ஏனோ பாதித்தது. எனவே ஆதிரை

“இதில் உங்கள் தவறு எதுவும் இல்லை மாமா. எனது செயல் உங்களை இந்த அளவு பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியவளை இடைமறித்து

“உன் செயல் எந்த வகையிலும் என்னைப் பாதிக்கவில்லை ஆதிரை. என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்கிற வருத்தம் தான்மா” என்றார்.

இருவரும் பேசிக் கொண்டே உண்டு முடித்தனர். ஆதிரைக்குச் சதாசிவமுடன் பேசப் பேசத் தன் தாயுடன் பேசுவதைப் போலவே இருந்தது. அவர் கூறியதில் ஒன்று மட்டும் உண்மை என்று ஆதிரைக்குத் தோன்றியது. அது தேவா தன்னை திருமணம் செய்ததற்குப் பின் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்பதே ஆகும்.

அதன் காரணமும் இங்கு அனைவருக்கும் தெரிந்திருக்கிறது ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அதைத் தன்னிடம் மறைக்கிறார்கள் என்றும் அவளுக்குப் புரிந்தது. இதைப் பற்றி யாரிடம் கேட்பது என்று சிந்தித்துக் கொண்டே வீட்டின் வாசலில் சிறிது நடந்து கொண்டிருந்தவளிடம் தேவா வந்து நின்றான். நின்றவன்

“ஆதிரை. உன்னிடம் நான் சிறிது பேச வேண்டும்” என்றவுடன்.

ஆதிரை “ஏன் இன்னும் பொய்கள் ஏதாவது மிச்சம் இருக்கிறதா?” என்றாள்.

அதற்கு அவனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. தேவாவிற்கும் இதற்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. ஏதாவது கூறினால் இவள் நம்புவாளா என்ற சந்தேகம் வேறு அவனுக்கு இருந்தது. அதற்கு ஏற்றவாறு அவளும் கேட்கவும் அவன் அப்படியே நின்றான். அவனை அங்குப் பார்க்கவும் ஆதிரைக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

‘ஏன் இவனிடமே நேரடியாகக் கேட்கக் கூடாது’ என்று யோசித்தவளுக்கு இவன் உண்மையைக் கூறுவானா என்ற சந்தேகமும் வந்தது. அதனால் அவனிடம் நேரடியாகக் கேட்காமல்

“என்ன? உண்மையைக் கூறிவிட்டேனோ?” என்றாள்.

“உன்னிடம் பொய் கூற வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை ஆதிரை.” என்றவனிடம்

“பின்னே?” என்றாள்.

“அன்று நீ கேட்டபோது எனக்கு வேறு வழி தெரியவில்லை. உன்னைத் திருமணம் செய்ததற்காகச் சென்றார் என்றோ அல்லது நீ என்னை வீட்டை விட்டு வெளியில் அனுப்பியதற்காகச் சென்றார் என்றோ என்னால் எப்படிக் கூற முடியும் அப்படியே கூறியிருந்தாளும் நிச்சயம் அதை நீ தவறாகத் தானே புரிந்திருப்பாய்?” என்றான்.

அவன் கூறுவது உண்மைதான் என்று ஆதிரையும் அறிந்ததால் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

சில சமயங்களில் விதி என்பது அவர் அவர் வார்த்தைகள் தான் என்று கூறுவதுண்டு. அதைப்போல்தான் தேவாவின் விதி என்பது அவனது வார்த்தையிலிருந்தது போல. அவன் இன்று பேசும் வார்த்தைகள் பின்பு ஒரு காலத்தில் ஆதிரையை அவனிடமிருந்து பிரிக்கப் போகிறது என்று அவன் அறியவில்லை.

“ஆதிரை எதையுமே உன்னிடமிருந்து மறைக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நீ நம்பமாட்டாய் என்று எனக்குத் தெரியும், இருந்தும் கூறுகிறேன். உன் மனதில் பல கேள்விகள் இருக்கலாம். அவை அனைத்துக்கும் என்னிடம் பதில் இருக்கிறது ஆனால் அதை இப்போது கூறும் நிலையில் நான் இல்லை ஆதிரை, அதுதான் உண்மை. வேண்டுமானால் உன்னைத் திருமணம் செய்தது என்னுடைய சுயநலம் என்று வைத்துக்கொள்ளேன். மற்றவற்றை நானே நேரம் வரும்போது கூறுகிறேன். தயவுசெய்து இப்போதே என்னிடம் எதுவும் கேட்காதே. உன்னிடம் உண்மையையும் கூறயியலாமல் பொய்யும் கூறயியலாமல் தவிக்கும் வேதனையை என்னால் தாங்க முடியவில்லைடா” என்றான்.

அவன் பேசி முடிக்கவும் ஆதிரை ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொண்டாள். திருமணத்திற்குப் பின்பு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது அதைத் தேவாதான் கூற வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் இவன் தற்போது பேசுவதைப் பார்த்தால் இப்போதைக்கு இவன் கூறும் எண்ணத்தில் இல்லை என்று தோன்றியது.

“அடுத்து எந்தப் பூதம் வெளிவரக் காத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் உண்மை என்னவாக இருந்தாலும், என்றைக்கோ ஓர் நாள் அது வெளிச்சத்திற்கு வந்துதானே ஆக வேண்டும்?” என்றவள் அதற்கு மேல் அங்கு நிற்காமல் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

அவள் சென்றதையே பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு சிறிய புன்னகையுடன் அவளைத் தொடர்ந்து வீட்டிற்குள் சென்றவனை வழிமறித்தது அவனது தமயன் ராம் தான்.

“என்னடா? அடி பலமாக விழும், நடக்கக் கூட முடியாமல் தவழுவாய் என்றல்லவா நினைத்தேன்?! நீ என்னடா என்றால் சிரித்துக் கொண்டே வருகிறாயே!” என்றான்.

ராம் வழிமறித்துக் கிண்டல் செய்யவும் தேவா அவனைப் பார்த்து முறைத்து விட்டு “என்ன கிண்டலா உனக்கு?” என்றான்.

ராமும் விடாமல் “கிண்டலா? நானே தம்பி, ஆதிரையிடம் போகிறானே! அடி விழுமே என்று பயந்து ஆம்புலன்ஸிற்கெல்லாம் சொல்லிவிட்டேன் தெரியுமா?” என்று அவன் முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு கூறவும் தேவா 'என்ன செய்வது?' என்று தெரியாமல், தன் கைகளால் தனது தலையிலேயே அடித்துக் கொண்டான். அந்நேரத்திற்கென்று அங்கு வந்த கயல்,

“என்ன தம்பி! 'என்ன ஆகிற்று' என்று இப்படி தலையிலேயே அடித்துக் கொள்கிறீர்கள்?” என்று வினவித் தள்ள...

“வாருங்கள் அண்ணி! உங்கள் கணவருக்கு ஏதோ ஒரு தொலைப்பேசியிலிருந்து அழைப்பு வந்தது. நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தார். கேட்டால் மழுப்புகிறார். என்னவென்று நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்” என்று தேவா கூறவும் ராம் பதற்றமாக,

“டேய்...!!! நான் உனக்கு என்னடா பாவம் செய்தேன்? ஏன் என் வாழ்கையில் மண் அள்ளிப் போடப் பார்க்கிறாய்?” என்று அவன் கேட்கும் போதே கயல்,

“யாரிடம் பேசினீர்கள்? உண்மையைக் கூறுங்கள். இது எத்தனை நாட்களாக நடக்கிறது?” என்று அவளது கண்களைப் பெரிதாக்கிக் கேட்கவும்... ராம்,

“அம்மா தாயே! அவனை நான் கிண்டல் செய்யப்போய் அவன் என்னை மாட்டிவிடுகிறான்” என்று கூறவும் அங்கு நின்ற மூவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

'இங்கு என்ன நடக்கிறது?' என்று கேட்டுக்கொண்டுவந்த சதாசிவமும் மீனாட்சியும் கூட இந்தக் கூட்டத்தில் ஐக்கியமாகிக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் வெளியில் அனைவரது பேச்சு குரலும் கேட்டுத் தன் அறையைவிட்டு வெளியில் வந்த ஆதிரையின் கண்களில் இந்தக் காட்சிகள் தென்பட்டன.

ராம் தனது தம்பியின் தோளில் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தான். கிட்டத்தட்டத் தொங்கிக்கொண்டிருந்தான் என்று கூடக் கூறலாம். அவர்கள் இருவரையும் சுற்றி, மற்ற மூவரும் நின்று, சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தனர். மீனாட்சியைக் கூட ஆதிரை, இந்த இரண்டு மாதங்களில் அப்படிச் சிரித்துப் பார்த்தது இல்லை. ஆனால் இன்று... அவரும் அங்கு நின்று சிரித்துக் கொண்டிருந்தார்! அவர்களின் பேச்சின் சத்தத்தை விடவும் அவர்களின் சிரிப்பின் சத்தமே அந்த வீடு முழுக்க நிறைந்திருந்தது.

முதல்முறையாக ஆதிரை அவர்களுடன், தன்னால் இந்தத் தருணத்தில் இணைய முடியவில்லையே என்று வருத்தப்பட்டாள். அந்தத் தருணத்தில் தன் கணவன் அருகில் நிற்பதற்காக ஏங்கினாள் என்றும் கூறலாம். அந்த ஏக்கம், அவளை மிகவும் பாதித்தது. 'என்ன செய்வது' என்று தெரியாமல் தன் அறைக்குள் சென்றவள், அவளது தொலைப்பேசியை எடுத்து விக்ரமை அழைக்க முயன்றாள்.

ஆனால் அவளது திருமணத்திற்குப் பிறகு ஆதிரை விக்ரமிற்கு எப்போது தொடர்புகொண்டாளும் ஒன்று எடுக்கமாட்டான் அல்லது எடுத்தாலும் ‘என்ன எப்போது நம் வீட்டிற்கு வருகிறாய்?’ என்றுதான் கேட்பான். அவனிடம் இருக்கும் மனநிலையில் பேசுவதும் கடினம் என்று நினைத்தவள் அப்படியே உறங்கியும் போனாள்.

மறுநாள் காலையில் வீடே பரபரப்பாக இருந்தது. யார் யாரோ வந்தும் சென்றும் கொண்டிருந்தனர். அப்படி வந்த ஒருவரிடம் வீட்டின் வாசலிலேயே சதாசிவம் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

முதல் நாள் ஆதிரையிடம் இனி வரும் நாட்களில் அவருடன் அமர்ந்து உணவு உண்ணுமாறு சதாசிவம் கேட்டுக்கொண்டிருந்தார். எனவே ஆதிரை தன் அறையிலிருந்து வெளி வந்தாள். தான் பேசிக் கொண்டிருந்த நபரை அனுப்பி விட்டு உள்ளே வந்தவர் ஆதிரை தன் அறையிலிருந்து வெளி வருவதைப் பார்க்கவும்

“வாமா… காலை வணக்கம். காலை உணவு என்னுடன் தானே?” என்றார்.

ஆதிரை பதில் ஏதும் கூறாமல் புன்னகை செய்யவும் ஆதிரையின் பதிலை அவர் தெரிந்து கொண்டார். இருவரும் சென்று உணவு உண்ண அமரவும் ராமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். இந்த இரண்டு மாதங்களில் ராமும் ஆதிரையும் பெரிதாகப் பேசியது கிடையாது. அதற்கான சந்தர்ப்பங்களும் அமையவில்லை என்றும் கூறலாம். இன்றுதான் இருவரும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாம் வந்து அமர்ந்ததுமே ஆதிரையிடம்,

“என்ன? இன்று ஆதிரையின் தரிசனம் காலையிலேயே கிடைக்கின்றதே, அதிலும் உணவு அருந்தும் இடத்தில்!” என்று வியந்தான்.

அதற்கு ஆதிரை பதில் கூறும் முன்பே சதாசிவம், “உன்னைக் கூடப் பல நாட்களில் சாப்பிடும் இடத்தில் தான் பார்க்க முடிகிறது” என்று அவர் கூறி முடிக்கும் முன்பே அங்கு வந்த தேவா

“பல நாட்களில் அண்ணி இருக்கும் இடத்தில் தான் பார்க்க முடியும் அப்பா” என்று கூறிக் கொண்டே வரவும் ஆதிரையும் சதாசிவமும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டனர்.

ராம் “நானாவது வீட்டிற்குள் மட்டும்தான்…” என்று கூறிவிட்டுச் சிரிக்கத் தொடங்கினான்.

ஆதிரை புரியாமல் தேவாவைப் பார்த்தால் அவனும் பதட்டத்துடன் ஆதிரையைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான். ஆதிரை பார்க்கவும் மெல்லியதாகச் சிரித்துச் சமாளித்தான்.

‘கல்லைக் கூட விழுங்கிவிட்டு அமைதியாக இருப்பவனையா பார்த்தோம்?!’ என்று எண்ணியவள் திரும்பிச் சதாசிவத்தைப் பார்த்தாள். அவரோ அங்கு எதுவுமே நடக்காததைப் போல அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

‘அவனாவது கல்லைத் தான் விழுங்குவான் போல. ஆனால் இவரோ பாறையையே விழுங்கிவிடுவார்’ என்று எண்ணியவள் ராமிடம்,

“ஏன் உங்கள் தம்பி என்ன செய்தார்?” என்று கேட்டாள்.

ராமோ “என் தம்பியா? அவன் என்ன செய்தான்?” என்று கேட்டான்.

‘அட பாவிகளா! குடும்பமே இப்படிதானா!’ என்று அவள் நினைக்கும் பொழுதே அங்கு வந்த மீனாட்சி அவசரமாகச் சதாசிவத்திடம்

“தேநீர் போட்டு விட்டேன் யார் முதலில் செல்கிறீர்கள்?” என்று கேட்டார்.
தொடரும்...