• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலில் விதிகள் ஏதடி 12

Malar Bala

Staff member
Jul 31, 2021
67
50
18
Thanjavur
அத்தியாயம் 12
தேவாவிடம் இருந்து விலகிவிட ஆதிரை முயற்சி செய்யவும் தேவா அவன் பிடியை இன்னும் இறுக்கி ஆதிரையின் காதுகளில்
“என்ன ஆதிரை? என்ன ஆகிற்று?” என்றான்.
“ஒ... ஒன்றுமில்லை..” என்றவள் அதற்கு மேல் அவனிடம் இருந்து விலகும் முயற்சியை கை விட்டாள்.
எப்படியும் விலகுவது என்பது முடியாது என்று தெரிந்து விட்டது. அப்படியே முயன்றாலும் அவனது பிடியின் இறுக்கம் தான் அதிகரித்து கொண்டிருந்தது. எனவே ஆதிரையும் தன்னை சுற்றி கவனம் செலுத்த தொடங்கினாள்.
வயல்களில் ஆங்காங்கே கும்பல் கும்பலாக பிரிந்து வேலை செய்து கொண்டிருந்தனர். சிலர் மட்டும் வயல்களில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் ஆதிரை
“அவர்கள் கிளம்பி விட்டார்களா? வேலை முடிந்ததா?” என்றாள்.
“நமது நிலம் பத்து வேலிக்கும் மேல் இருக்கும் ஆதிரை. அதனால் இந்த வேலைகள் முடிய எப்படியும் ஒரு வாரத்துக்கு மேல் ஆகும். அவர்கள் சாப்பிட போகிறார்கள்.” என்றான்.
இவர்கள் பேசி கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த சதாசிவம்
“சரிப்பா.. நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் நான் கிளம்புகிறேன்.” என்று தேவாவிடம் கூறியவர் ஆதிரையிடம்
“பத்திரமாக இரும்மா. நேரம் போகவில்லை என்றால் வயல் வீட்டின் உள்ளே தொலைகாட்சி இருக்கிறது அதை பார். அப்படியும் இங்கு பிடிக்கவில்லை என்றால் சொல் நான் அழைக்க ஆள் வர சொல்கிறேன். சரியா?” என அவளிடமும் பேசிவிட்டு சென்றார்.
சதாசிவத்தை பார்த்ததும் ஆதிரையை பிடித்திருந்த கையை விட்டுவிட்டு சிறிது தள்ளி நின்றவன் அவர் செல்லவும் ஆதிரையிடம்
“ஆதிரை. நீ வீட்டிற்குள் இரு. எனக்கு சில வேலைகள் இருக்கின்றன அதை எல்லாம் முடித்துவிட்டு வருகிறேன். அதன்பின் இங்கு சுற்றி காட்டுகிறேன். சரியா? அதுவரை தனியாக எங்கும் சென்று விட வேண்டாம்.” என்றான்.
ஆதிரை அதற்கு சரி என்று கூறவும் அவனும் வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்த சதாசிவத்துடன் சென்று இணைந்து கொண்டான். இருவரும் வரப்பில் சாதாரணமாக பேசிக்கொண்டு நடந்து செல்வதை பார்த்து கொண்டு நின்றவள் சில வினாடிகளில் வீட்டிற்குள் சென்றாள்.
அங்கு முத்தையாவை போலவே ஒரு வயதான முதியவர் ஒருவர் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். ஆதிரையை பார்த்ததும்
“வாருங்கள் பாப்பா. எப்படி இருக்கின்றீர்கள்? சிறு வயதில் பார்த்தது. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது?” என்றார்.
ஏற்கனவே தெரிந்ததை போல அவர் ஆதிரையிடம் பேசவும் அவள் குழம்பி போனாள். ‘இவர் தெரிந்ததை போல பேசிக்கிறாரே!’ என்று எண்ணியவள் அவரிடமே கேட்டு விடலாம் என
“என்னை உங்களுக்கு தெரியுமா?” என்றாள்.
அவரும் “என்ன பாப்பா இப்படி கேட்டுவிட்டாயே..” என்று அவர் கூறும் போதே அங்கு ஓடி வந்த மல்லி
“தாத்தா.... உங்களை ராணி அத்தை உடனே கூப்பிட்டார்கள்” என்று கூறினாள்.
“வருகிறேன் என்று சொல்லடி அம்பிகா” என்றவரை விடாமல்
“இல்லை.. இல்லை கையோடு கூட்டி வர சொன்னார்கள். அப்பறம் நான் மல்லிகா தாத்தா. அம்பிகா இல்லை. ஆளை மாற்றி கூறுவதே வேலையாக வைத்திருக்கிறீர்கள்” என்று கூறி கொண்டே அவரது கையை பிடித்து அழைத்து சென்றவள் ஆதிரையிடம்
“வரேன் அக்கா” என்று கூறிவிட்டு சென்றாள்.
மல்லியும் அந்த முதியவரும் பேசி கொண்டிருந்ததை கேட்ட ஆதிரை
‘வயதானதால் யாரையும் நினைவில் இல்லாமல் ஆள் மாற்றி கூறுகிறார் போல... ஆனால் நான் வருவதாக கூறினார்கள் என்று சொன்னாரே? ஒருவேளை கயல் அக்கா என்று நினைத்திருப்பாரோ? அதற்கும் வாய்பில்லையே.. கயல் அக்காவை எப்படி சிறு பிள்ளையாக பார்த்திருப்பார்’ என அவளுக்குள்ளையே விடையில்லா பல கேள்விகளை எழுப்பி கொண்டவள் கடைசியாக யாரையோ நினைத்துதான் கூறுகிறார் என அவளே முடிவுக்கு வந்துவிடாள்.
அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவள் அந்த வீட்டை சுற்றி பார்க்க தொடங்கினாள். இரண்டு அறைகளும் சமையலுக்கு என ஒரு சிறிய அறையும் இருந்தது. அவள் சமையல் அறையை பார்த்து கொண்டிருக்கும் போதே தேவா அங்கு வந்து விட்டான். வந்தவன் சும்மா இருந்திருக்கலாம். ஆனால் ஆதிரையை சீண்டவில்லை என்றால் அது தேவா இல்லையே.
“என்ன ஆதிரை? உனக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாத இடத்தில் நிற்கின்றாய்!” என்றான்.
வழக்கம் போல அவன் கூறியது முதலில் புரியவில்லை என்றாலும் ஓரிரு வினாடியில் புரிந்து கொண்டவள்
“என்ன கிண்டலா? நான் நன்றாக தான் சமைப்பேன். என் வீட்டில் கூட நான் சமைத்தது உண்டு” என்றாள்.
ஆனால் தேவா அவளை விடுவதாக இல்லை
“யாரிடம் பொய் கூறுகிறாய்? நான் உன்னை நம் வீட்டில் சமையல் அறையின் பக்கம் பார்த்ததே இல்லை. இப்போது இப்படி கூறுகிறாயே? எப்படியும் யாரும் சமைக்க கூற மாட்டார்கள் என்கின்ற தைரியம் தானே?” என்றான்.
“நான் எல்லாம் நன்றாகதான் சமைப்பேன். ஆனால் உனக்கு சமைத்து தர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்றாள்.
இதற்கு மேல் அவளை சீண்டினால் அவள் எதில் போய் நிற்பாள் என்று தேவாவிற்கு தெரிந்ததால் அவளை சீண்டுவதை விடுத்து
“சரி சரி... நான் சும்மா விளையாடினேன்” என்றவன் அவளை அழைத்து சென்று அவர்களது வயல் எதிலிருந்து எதுவரை என்றெல்லாம் காட்டியவன் அங்கிருந்த ஒரு கோவிலிற்கு அழைத்து சென்றான்.
கண்கள் எட்டும் வரையிலும் நான்கு பக்கமும் வயல்கள் இருக்க நடுவில் அந்த கோவில் இருந்தது. கோவிலை ஒட்டிய ஒரு குளம் ஒன்று இருந்தது. அதன் கரையில் ஆலமரம் ஒன்றும் இருந்தது. அதன் விழுதுகளை பிடித்து கொண்டு சிறுவர்கள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அந்த காட்சியே பார்ப்பதற்கு ஓவியங்களில் பார்ப்பதை போல் இருந்தது ஆதிரைக்கு.
கோவிலின் உள் சென்று சாமியை தரிசித்து விட்டு அங்கேயே அமர்ந்து இருவரும் அவர்களது சிறு வயது கதைகளை பறிமாறி கொண்டிருந்தனர். நேரம் செல்வதே தெரியாமல் ஒருவரின் பேச்சில் ஒருவர் மூழ்கியிருந்தனர். திடீரென ஆதிரைக்கு ஒரு சந்தேகம் உதிக்கவும்
“ஆமாம் நாம் இங்கு இருக்கின்றோமே! அங்கு வேலை?” என்றாள்.
“அதெல்லாம் ராமைய்யா பார்த்து கொள்வார் ஆதிரை.
“ஓ... சரி ராமைய்யா என்றால் யார்?” என்றாள்.
“அதுசரி.. நீ பார்க்கவில்லையா? வயல் வீட்டிற்குள் தான் இருந்தார். அதனால் தானே உன்னை உள்ளே போக சொல்லிவிட்டு நான் சென்றேன்.” என்றான்.
“அவரா... நான் பார்த்தேன் ஆனால் யார் என்று தெரியவில்லை அதற்குள் மல்லி வந்து அவரை யாரோ கூப்பிடுவதாக அழைத்து சென்று விட்டாள். அதனால் பேசவில்லை” என்றாள்.
“ஓ. அவர் முத்தையாவின் அண்ணன் ஆதிரை. அவர் இராமநாதபுரத்தை சேர்ந்தவராம். சிறுவயதில் பஞ்சத்தின் காரணமாக வேலை தேடி ஊர் ஊராக சுற்றி திரிந்த போது நம் தாத்தா எங்கோ பார்த்து வேலை தருவதாக அழைத்து வந்தாராம். அதிலிருந்து இங்கேயே இருக்கிறார்.” என்றான்.
“அப்படியா? அப்போ அவருக்கு திருமணம் ஆகவில்லையா?” என்றாள்.
“இல்லை திருமணம் நடந்தது. நம் வீட்டிற்கு வந்த பிறகு அவருடைய அத்தை மகளை திருமணம் செய்து கொண்டார். சிறு வயதில் இருந்தே இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு காதலாம். அவர்களது காதல் கதை மிகவும் அழகாக இருக்கும்” என்றவன் தொடர்ந்து
“சரி ஆதிரை நாம் கிளம்புவோமா? மாலை ஆகிவிட்டது அப்பா இன்று இங்கு தங்குவதாக கூறினார்” என்று கூறிக்கொண்டே எழவும் அவனை பின்பற்றி எழுந்த ஆதிரையும்
“ஏன் இங்கு தங்குகிறாராம்? அதான் இங்கு ராமையா இருக்கின்றாரே?” என்றாள்.
“அவர் கணக்கு வரவு செலவு எல்லாம் இங்கிருந்து தான் பார்ப்பார் ஆதிரை. தற்போது ஏதோ பார்க்க வேண்டுமாம்” என்றவன் அவளை அழைத்து கொண்டு அங்கிருந்து வயல் வீட்டிற்கு சென்றான்.
இவர்கள் செல்லவும் சதாசிவம் அங்கு வரவும் சரியாக இருக்கவும் இருவரும் அவரிடம் விடைபெற்று கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டனர். அடுத்த ஒரு வாரம் ஆதிரையின் வாழ்க்கையில் மிகவும் வேகமாக ஓடிவிட்டது. வீட்டில் அனைவருமே பரபரப்பாகவே இருந்தனர். வயலிலும் வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று கொண்டிருந்ததால் யாருக்கும் ஓய்வு என்று இல்லாமல் இருந்தது. நடுவில் இரண்டு முறை ஆதிரையும் வயலிற்கு சென்று வந்தாள். அவளையும் அறியாமல் தேவாவின் நெருக்கத்தை அவள் இரசிக்க தொடங்கி இருந்தாள். அவனுடன் அதிகமான நேரம் செலவிட ஏங்கி கொண்டிருந்தாள். ஆனால் பாவம் தேவாவிற்கு தான் அதற்கான நேரம் கிடைக்கவில்லை. ஒருவழியாக அனைத்து வேலைகளும் முடிந்து அன்று அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து காலை உணவு உண்டு கொண்டிருந்தனர்.
ஆதிரை மிகவும் சந்தோஷமாக இருந்தாள் என்றே சொல்ல வேண்டும். அவள் மனம் முழுவதும் தன் கணவனுடன் செலவிட போகும் நேரத்தை நோக்கியே இருந்தது. அவனிடம் என்ன என்ன பேச வேண்டும் என்று யோசித்து கொண்டிருந்தாள்.
மூர்த்த ஜோடியான சதாசிவமும் மீனாட்சியும் எழுந்து சென்றுவிட மற்ற இரு ஜோடிகளும் பேசி கொண்டே உணவு உட்கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த தலைப்பு அவர்களது பேச்சில் வந்தது.
தேவா ஆதிரையிடம் “உனக்கு ஒன்று தெரியுமா ஆதிரை? இவனுக்கு பெயர் ராம் என்று இருந்ததால் இவன் சிறுவயதில் இருந்தே இவனுக்கு வரும் பெண் சீதை என்னும் பெயரில் தான் வேண்டும் என்று கூறி கொண்டிருந்தான்.” என்றான்.
ஆதிரையும் “அப்படியா? பிறகு எப்படி அக்காவை?” என்று கேட்கவும் தேவா தொடர்ந்து
“அண்ணியை பார்க்கவே வர மாட்டேன் என்று விட்டான். பிறகு அம்மா தான் மிகவும் வற்புறுத்தி அழைத்து சென்றார். அங்கு வந்து அண்ணியை பார்த்ததும் அண்ணியை விட்டு வர மனம் இல்லை. வீட்டிற்கு வந்தவுடன் அடுத்த முகூர்த்ததிலேயே திருமணம் வைக்க சொல்லி ஒரே அடம்” என்றான்.
தேவா ராமை கிண்டல் செய்கின்றானா உண்மையை கூறுகிறானா என்று புரியாமல் ஆதிரை கயலை பார்க்க அவள் முகத்தில் இருந்த வெட்க்கம் அவன் கூறுவது அனைத்தும் உண்மையே என்று ஆதிரைக்கு புரிய வைத்தது. கூடவே ஒரு சந்தேகமும் தோன்ற
“ஏன் இராமாயணம் என்றால் அவ்வளவு பிரியமா?” என்றாள் ஆதிரை.
ஆதிரையின் இந்த கேள்விக்கு அனைவரையும் முந்தி கொண்டு ராம்
“என்ன இப்படி கேட்டுவிட்டாய் ஆதிரை. இராமாயணம் என்றால் எனக்கு உயிர். ராமைய்யா தாத்தா இருக்கின்றார் இல்லையா? அவரது மனைவிதான் எங்களை அமர வைத்து புராண கதைகள் எல்லாம் கூறுவார். அப்போதே ராமரை குறிப்பிடும் போது என் பெயர் தான் என்று கூறி கூறவும் எனக்கு அந்த கதை மிகவும் பிடித்து விட்டது. கதையை அவர் முடிக்கும் போது உனக்கான சீதை நிச்சயம் வருவாள் என்று கூறவும் அதே ஒரு ஆசையாக இருந்தது.” என்று அவன் கூறும் போதே கயல்
“என்ன? என்ன சொன்னீர்கள்” என்று கேட்கவும் ராம்
“அதுவெல்லாம் உன்னை பார்க்கும் முன் வரையில் தான்மா இப்போது இல்லையே.. யார் அந்த சீதை?” என்றான்.
அவன் கயலிடம் சரண் அடைவதை பார்த்து இளஞ்ஜொடியான தேவாவும் ஆதிரையும் சிரிக்க தொடங்கிவிட்டனர். அவர்கள் சிரிப்பதை பார்த்த ராம் தேவாவிடம்
“என்னை கூறுகிறாயே உனக்கும் இராமாயணம் பிடித்த கதை தானே?” என்று தம்பியை பார்த்து சிரித்து கொண்டே கேட்டான்.
ஆதிரை வேகமாக “அப்படியா?” என்றாள்.
ஆதிரைக்கும் சிறு வயதில் இருந்தே இராமாயணம் என்றால் மிகவும் பிடிக்கும். அவளுக்கு வரும் கணவன் ராமரை போல வேறு பெண்ணை நினைக்காதவனாக இருக்க வேண்டும் என்று தோழிகளிடம் கூறுவது அவளது வழக்கமே. இன்று தேவாவிற்கும் அந்த கதை பிடிக்கும் என்று கேட்டதும் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தேவாவின் பதிலால் அந்த மகிழ்ச்சி அவளுடன் ஒரு நொடி கூட இருக்கவில்லை.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️அப்பாடி என்னத்த இந்த தேவ் ஏழரைய இழுத்து வச்சிருப்பான் 🤔🤔🤔🤔🤔🤔🤔