• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலில் விதிகள் ஏதடி 14

Jul 31, 2021
71
54
18
Thanjavur
அத்தியாயம் 14

சிறு வயதில் இருந்தே ரம்யாவை பார்ப்பதால் ஆதிரைக்கு அவளை பற்றி நன்றாகவே தெரியும். பொதுவாகவே எங்கு என்ன தப்பு நடந்தாலும் அதை அவளால் தாங்கி கொள்ள முடியாது. அதனால்தான் சட்டப் பாதிப்பையே அவள் எடுத்ததும் கூட.

இதில் அவளது உயிர் தோழிக்கு ஒருவன் இவ்வளவு பெரிய தவறை செய்துள்ளான் என்றால் அதை அவள் சும்மா விட போவது இல்லை.
தோழியை நீண்ட நாட்கள் கழித்து பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ஆதிரை இதையெல்லாம் மறந்தாள். அதன் விளைவாக தற்போது என்ன செய்வது என்று புரியாமல் முழித்து கொண்டிருந்தாள்.


‘வீட்டிற்கு வரும்வரை அமைதியாக இருந்தால் கூட பேசிப் புரியவைக்கலாம் ஆனால் இப்போது?’ என்று அவள் யோசிக்கும் போதே அவர்கள் நிற்கும் இடத்திற்கு வந்த தேவா ஆதிரைக்கு எந்தவித சிரமும் கொடுக்காமல் ஆதிரையிடம்
“நான் சென்று காரை எடுக்கிறேன் ஆதிரை. நீங்கள் வாருங்கள்” என்றவன் ரம்யாவிடம் ஒரு வரவேற்பு தலையசைப்புடன் சிறிய புன்னகையையும் சிந்திவிட்டு அவளது பதிலுக்காக கூட நிற்காமல் அங்கிருந்து சென்றான்.

அவனது செய்கை ரம்யாவை இன்னும் கோபம் படுத்தியது, “ஒரு மட்டு மரியாதை கூட இல்லாதவனாக இருக்கின்றான்! இவன் வீட்டிற்கா நான் வர வேண்டும்?” என்றாள்.

ஆதிரை ரம்யாவின் பேச்சு புரியாமல், “என்ன நடந்தது இப்போ?” என்றாள்.

“என்ன நடந்ததா? அவன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளி தானே நான்? வந்தவளை வா என்று கூப்பிட்டால் துறை குறைந்து விடுவாராமா?” என்றாள்.

இவள் ஏன் இப்படி கத்திக் கொண்டே இருக்கின்றாள் என்று முதல் முறையாக தன் தோழியின் மீது ஆதிரைக்கு எரிச்சல் வந்தது.

அதை மறைக்காமல் அப்படியே தன் தோழியிடம் காட்டி கேட்டாள், "ஏன் இப்படி கத்திக் கொண்டே இருக்கின்றாய் ரம்யா. உனக்குத்தான் யார் அறிமுகமும் வேண்டாம் என்றாய் அல்லவா.. பிறகு என்ன? அவனே பேசவில்லை என்று மகிழ்ச்சி அடைவதை விட்டுட்டு.." என்றாள்.

"ஆமாம் என்னிடம் மட்டும் கத்து." என்று கூறிய ரம்யா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

இருவரும் அமைதியாக கார் இருந்த இடத்தை அடைந்தனர். அங்கு தேவா காரை தயார் நிலையில் வைத்திருக்கவும் இருவரும் பேசாமல் அதில் ஏறி அமர்ந்து கொண்டார்கள்.

தஞ்சாவூர் நகரத்தைத் தாண்டி அவர்கள் கிராமம் செல்லும் சாலையில் அவர்களது கார் நிதானமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

தேவா பொதுவாகவே யாரிடமும் சகஜமாக பேசும் குணம் உடையவன் ஆனால் ரம்யாவிடம் மட்டும் ஏன் பேசவில்லை பேசவில்லை என்றும் ஆதரிக்க குழப்பமாகவே இருந்தது.

'ஒருவேளை ரம்யா கூறியதை தேவா கேட்டு விட்டானோ' என்று ஆதிரை யோசித்தவள் தொடர்ந்து

'ரம்யா பேசிய உடனேயே தேவாவை நாம் பார்த்தோமே அவன் கடைக்குள் தானே சென்று கொண்டிருந்தான்? அவ்வளவு தூரத்தில் ரம்யா பேசியதை அவன் கேட்டிருக்க வாய்ப்பில்லை அதே நேரத்தில் அவனும் ரம்யாவிடம் மற்றவர்களிடம் பேசுவதைப் போல் பேசவில்லையே!' என அவளது மனதுக்குள் இந்த எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தது.

காரை ஓட்டிக் கொண்டிருந்த தேவா கண்ணாடி வழியே பின்னாடி அமர்ந்திருந்த ஆதிரையை பார்த்து விட்டு காரில் நிலவிய அமைதியை கலைத்து விட்டு,
"என்ன ஆதிரை சிந்தனை பலமாக இருக்கின்றது?" என்றான்.

திடீரென்று அவன் அப்படி கேட்கவும் ஆதிரை என்ன கூறுவதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். அதற்கும் மேல் ரம்யா ஏதாவது கூறி விடுவாளோ என்றும் பயந்தாள்.

ஆனால் ரம்யா ஆதிரை இருவருமே பதில் கூறுவதற்கு முன்பாக தேவா ஒரு ஓரமாக காரை நிறுத்தினான்.
'இப்பொழுது ஏன் இவன் காரை நிறுத்துகிறான்' என்று ஆதரை சிந்திக்கும் பொதே காரில் இருந்து இறங்கிய தேவா அருகில் இருந்து ஒரு இளநீர் கடைக்கு சென்று 3 இளநீர் வாங்கி ஆதிரையை அழைத்து அவளுக்கும் அவளது தோழிக்கும் கொடுக்கச் சொல்லிவிட்டு அவன் கடையில் நின்று குடிக்க தொடங்கினான். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பிய கார் அவர்களது வீட்டில் தான் நின்றது.

வீட்டிற்கு வந்த பிறகுதான் ஆதிரைக்கு மூச்சுவிட முடிந்தது. வழியில் எப்பொழுது ரம்யா என்ன கூறி விடுவாளோ என்ற பயம் ஆதிரைக்கு உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது.

வீட்டிற்கு வந்ததும் ரம்யாவிற்கு தன் அறையை காட்டி அதனுள் அனுப்பிவிட்டாள் ஆதிரை. அவளுக்கு அவளது தோழி யாரிடமாவது தவறாக பேசிவிடுவாளோ என்ற பயம். ஆதிரைக்கு இந்த நிலையை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. எப்படியும் இங்குள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அவளும் தன் அறைக்குள் சென்றாள்.

அங்கு அந்த தனிமைக்காக காத்திருந்த ரம்யா ஆதிரை உள்ளே வந்தவுடன் தன் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தாள்.

"எதற்காக இங்கு இருக்கின்றாய் ஆதிரை? உனக்கு நடந்தது திருமணம் என்றும் அதற்காக தான் இங்கு இருக்கின்றேன் என்றும் தயவு செய்து என்னிடம் பொய் கூறாதே நடந்தது அனைத்தையும் விக்ரம் மூலம் நானும் அறிந்தேன்." என்றாள்.

அப்போதுதான் ஆதிரைக்கு முழு விவரமும் புரிந்தது. ஆடிக் கொண்டிருப்பது ரம்யா என்றாலும் அவளுக்கு சலங்கை கட்டி விட்டவன் விக்ரம் என்று. இப்படி தன்னை மாட்டி விட்ட தம்பியை மனதிற்குள் திட்டி தீர்த்து கொண்டிருந்தாள் ஆதிரை. அவளிடம் இருந்து பதில் வராமல் போகவும் ரம்யாவே தொடர்ந்து

"உன்னிடம் தான் பேசி கொண்டிருக்கின்றேன் ஆதிரை" என்றாள்.

தன் முன் நின்று கத்தி கொண்டிருந்த தோழியை பார்க்கவும் ஆதிரைக்கு பாவமாக இருந்தது. ஏனெனில் அவள் இவ்வளது தூரம் தன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வந்து இப்படி கத்தி கொண்டிருப்பது ஆதிரை மீதிருந்த அன்பினால் தானே. அதனால் தன் தோழிக்கு நிலமையை பேசி புரிய வைக்க முற்சித்தாள் ஆதிரை.

"ரம்யா நீ ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எனக்கு விருப்பம் இல்லாமல் தான் இந்த திருமணம் நடந்தது. அது எப்படி நடந்தது என்று நிச்சயம் உன்னிடம் விக்ரம் கூறியிருப்பான். ஆனால் இந்த இரண்டு மாதங்களில் இது தான் என் குடும்பம் இது தான் என் வீடு என்று ஆகிவிட்டது. இதை நான் யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கே விருப்பப்பட்டுதான்...

ஏதோ ஒரு இடத்தில் எனக்கும் இந்த வாழ்க்கை பிடித்து தான் இருக்கின்றது. இந்த ஊர் இங்கிருக்கும் மக்கள் இந்த வீட்டில் இருப்பவர்கள் என அனைவரையும் எனக்கு பிடித்து தான் இருக்கின்றது. ஆனால் அதற்காக இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டேனா என்று என்னிடம் கேட்காதே, இந்த நொடி வரை இந்த திருமணத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை தான்.

அதற்காக இங்கிருந்து வந்து விடு என்று கூறினாலும் என்னால் இவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு வர முடியுமா என்றால் எனக்கும் அது சந்தேகம்தான். என்னை தயவு செய்து நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்" என்றாள்.

ரம்யா தன் தோழியை ஒரு மார்கமாக பார்த்து கொண்டே
"நீ கூறுவது உனக்காவது புரிகிறதா ஆதிரை" என்றாள்.

ஆதிரையிடம் இருந்து எந்தவித பதிலும் அதற்கு வராமல் போக ரம்யா தொடர்ந்து பேசினாள்
"நாம் ஒன்றும் அந்த காலத்தில் இல்லை ஆதிரை. உனக்கு யார் என்றே தெரியாத ஒருவன் உன் கழுத்தில் தாலி கட்டிய ஒரே காரணத்திற்காக அவனுடன் வாழ வேண்டும் என்று எந்தவித அவசியமும் இல்லை. இது முதலில் சட்டப்படியும் குற்றம் என்று உனக்கும் தெரியும். படித்திருக்கிறாய் தானே எதுவும் உலகம் தெரியாத பிள்ளை போல் நடந்து கொள்ளாதே." என்று தன் தோழியை திட்டி தீர்த்தாள் ரம்யா.

"அதுவெல்லாம் எனக்கும் தெரியும் ரம்யா. நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்றும் எனக்கு புரிகின்றது தான் ஆனால." என ஆதிரை கூறும் பொழுதே அவளது அறையை கதவை தட்டும் சத்தம் கேட்டது.

யார் என்று அறிய ஆதிரை சென்று பார்த்தால் அங்கு கயல் கையில் பழச்சாறுடன் நின்று கொண்டிருந்தால். அவளைப் பார்த்ததும் "வாங்க" என்று உள்ளே அழைத்து வந்தாள் ஆதிரை. உள்ளே ரம்யா கோபத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்தாள்.

இருவருக்கும் தான் கொண்டுவந்த பழச்சாறை கொடுத்துவிட்டு

"தோழிகள் இருவரும் சில மாதங்கள் கழித்து பார்க்கின்றீர்கள் நன்றாக பேசிக் கொண்டிருங்கள் நான் பிறகு வருகிறேன்" என்று கூறிவிட்டு கயல் அங்கிருந்து செல்லவும் ரம்யா "ஆமாம் இப்பொழுது இது ஒன்றுதான் குறைச்சல்" என்றாள்.

ஆதிரைக்கு ரம்யா ஏன் தான் தற்போது இங்கு வந்தாளோ என்று இருந்தது ஆனால் அவளால் எதையும் காட்டிக் கொள்ள முடியவில்லை இருவரும் தங்களது கோபத்தை காட்டும் விதமாக ஒருவரிடம் ஒருவர் பேசாமல் இரவு வரை அமைதியாக இருந்தனர்.

இரவு உணவுக்காக அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் போது ஆதிரை ரம்யாவையும் அழைத்து சென்றாள். அங்கும் ரம்யா யாரிடமும் பேசாமல் அமைதியாக உணவு உண்டு கொண்டிருந்தாள்.

மீனாட்சி ரம்யாவிடம் "என்னம்மா பயணம் எல்லாம் சவுகரியமாக இருந்ததா" என்றார்.

மீனாட்சி அம்மாளின் உபசரிப்பும் அவரது கனிவான பேச்சும் ரம்யாவை அவரிடமும் கோபப்பட தடுத்தது. எனவே அவர் கேட்ட கேள்விக்கு ஒரு சிறிய புன்சிரிப்புடன் "இருந்து ஆண்டி" என்றாள். ரம்யா மீனாட்சியிடமும் கோபப்படாமல் அமைதியாக பேசியதே ஆதிரைக்கு நிம்மதியாக இருந்தது. ஒரு வழியாக அனைவரும் இரவு உணவை முடித்து விட்டு அவரவர் அறைகளுக்குச் சென்றனர்.

ரம்யா முன்பாகவே அறைக்குள் சென்று விட ஆதிரை சில நேரம் கழித்து உள்ளே சென்றாள். அவள் செல்லும்போது ரம்யா ஏதோ தீவிர யோசனையில் இருந்ததைப் போல் இருந்தது. அதை பார்த்த ஆதிரை

'இப்பொழுது எதை யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லையே' என சிந்தித்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

அவள் யோசித்ததை போலவே ரம்யா ஆதிரையை பார்த்ததும் உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும் ஆதிரை என்றாள். கூறு என்று ஆதிரை கூறவும் ரம்யா

"உண்மையாகவே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ஆதிரை" என்றாள்.

அவள் அப்படிக் கேட்டதும் அவள் என்ன கேட்கிறாள் என்று ஆதிரைக்கு புரியாமல் அவளிடமே
"புரியவில்லை ரம்யா எதைப் பற்றிக் கேட்கிறாய்" என்றாள்.

"நான் உன் தோழி தானே என்னிடமாவது உன் மனதில் இருப்பதை கூறலாம் தானே? ஏன் இங்கு இருக்கின்றாய் என்று எனக்கு புரியவில்லை அவன் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கவில்லை.. எப்படி முன்பின் அறியாத ஒருவன் உன் கழுத்தில் தாலி கட்டினான் என்பதற்காக அவனுடன் வாழ்கிறேன் என்று கூறினாய்? அதுவும் அந்த நொடியே.. எனக்கு என்ன யோசித்தாலும் இதற்கெல்லாம் பதில் கிடைக்கவில்லை. அதனால் தான் உன்னிடமே கேட்கிறேன். உனக்கு தெரியும் தானே என்ன நடந்தது என்ன நடக்கின்றது என்று" என்றாள்.

ஆதிரை சில நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு எதையோ யோசித்தவளாக பேசத் தொடங்கினாள்.

"ரம்யா சில விஷயங்களுக்கு என்னிடமும் பதில் இல்லை ஆனால் எனக்குள் சில சந்தேகங்களும் கேள்விகளும் இருக்கின்றன. எனக்கு இங்கே யாரிடம் கேட்பது அல்லது யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று தெரியவில்லை" என்றாள்.

"சரியா ஆதிரை உன் மனதில் என்ன இருந்தாலும் தயங்காமல் என்னிடம் கூறு. நான் எதற்கும் உன்னிடம் சண்டை போடவில்லை. மனதுக்குள்ளேயே அனைத்தையும் வைத்து இல்லாமல் பகிர்ந்து கொள்" என்றாள்.

அதிரை சில நிமிடம் தரையையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பேசத் தொடங்கினாள்
"ரம்யா இந்த ஊருக்கு வருவதற்கு முன்பு எனது அம்மாவிற்கு ஒரு ஊர் இருக்கின்றது என்றும் இத்தனை உறவினர்கள் இருக்கின்றார்கள் என்றும் நான் அறியவில்லை. திடீரென்று ஒருவர் வந்து இங்கு அழைத்து வந்து விட்டார். எனக்கு தாலி கட்டும் வரை தேவை என்று ஒருவன் இருப்பதும் எனக்கு தெரியாது. ஆனால் அதற்கு முன்பு என்ன நடந்தது என்றால்" என்றாள்.
தொடரும்...