• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலில் விதிகள் ஏதடி 3

Malar Bala

Staff member
Jul 31, 2021
67
50
18
Thanjavur
அத்தியாயம் 3
ஆதிரை ஒரு பக்கம் அந்த அறையை விட்டு வெளிவராமலும் உண்ணாமலும் இருந்தாள் என்றால் மறுபக்கம் தேவாவும் எதுவும் உண்ணவில்லை. மீனாட்சி அம்மாளுக்கும் நிலைமை புரியாமல் இல்லை. ஆனாலும் கூட மகனுக்கு ஆறுதல் கூறுவதா, மருமகளுக்குக் கூறுவதா எனக் குழம்பிப்போய் இருந்தார். அன்று இரவு அனைவரது மனதையுமே கவலை ஆட்கொண்டிருக்க, அனைவரும் நித்திரையைத் துறக்க நேர்ந்தது.
மறுநாளும் ஆதிரை உண்ண மறுத்ததும், இதற்கு மேல் இவள் உண்ணாமல் இருந்தால் மயக்கம் போட்டுவிடுவாள் என்றதால் மீனாட்சியும் விடாமல் அவளிடம் சாப்பிட சொல்லி வற்புறுத்தச் செய்தார். ஆதிரையும் ஒரு நிலைக்கு மேல் தன் பொறுமையை இழந்து ”எனக்கு இந்த அறையை விட்டு வெளியில் வர விருப்பம் இல்லை, போதுமா? எனக்கு யாரையும் பார்க்க வேண்டாம்” எனக் கூறி விம்பிவிம்பி அழத் தொடங்கி விட்டாள்.
மீனாட்சி எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் முடியாமல் போனதால், அமைதியாக உள்ளே சென்று அவளுக்கான உணவை அவளது அறைக்கே எடுத்து வந்து வைத்துவிட்டுச் சென்றார். அவள் அருகிலேயே இருந்து அவள் உண்கிறாளா இல்லையா என்று பார்க்கத்தான் அவருக்கும் ஆசை. ஆனால் அதற்கும் வீம்பு பிடித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்தாள் என்றால் என்ன செய்வது என்று அவருக்குள் பயம் எனவே அங்கிருந்து சென்று விட்டார்.
அவர் ஊகித்ததும் ஒரு வகையில் உண்மையே, அவர் நின்றிருந்ததால் நிச்சயம் ஆதிரை உண்டிருக்க மாட்டாள் தான். ஆனால் அவர் சென்றதும் அவர் வைத்த உணவை முழுவதுமாக உண்டுவிட்டாள்.
முதல் நாள் முழுவதுமாக எதுவும் சாப்பிடாமல் இருந்ததும், அவள் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும் அளவு நடந்த நிகழ்வுகளும் அவளை மிகவும் பாதித்திருந்தது. அவளது பசியைக் கூட அவள் அறிந்திடும் நிலையில் இல்லை, வைத்துச் சென்ற இட்லிகளை முழுதும் அத்தனை வேகத்தில் எப்படி தான் உண்டாளோ உண்டுவிட்டாள் உண்ட கலைப்பில் உறங்கியும் விட்டாள்.
சிறிது நேரத்தில் அவள் உண்டாளா என்று பார்க்க வந்த மீனாட்சி, அவள் உறங்குவதைப் பார்த்துச் சிறிது நிம்மதி அடைந்தார். குழந்தையைப் போல் உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்த அவருக்கு வேதனையாக இருந்தது. இவளது வாழ்க்கையில் ஒரே நாளில் எத்தனை மாற்றங்கள். அதற்கெல்லாம் காரணம் தன் மகன் தான் என்று எண்ணும் பொழுதே அவரது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இங்கே நின்று அவளது உறக்கத்தைக் கலைக்க மனமின்றி மெதுவாகப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறியவர் மகனுக்கும் உணவு எடுத்துச் சென்றார்.
என்ன தான் மகன் செய்த தவறினால் அவன்மீது கோபம் இருந்தாலும், தாய் மனம் மகன் நேற்றிலிருந்து உண்ணாமல் இருப்பதில் வேதனையாக இருந்தது.
தேவாவோ பனி, வெயில் எனப் பாராமல் ஆதிரை கூறிய இடத்திலேயே ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தான். சிறு வயதிலிருந்தே மிகவும் வசதியாக வாழ்ந்தவன் தேவா. கிராமத்து இளைஞர்களும், சிறுவர்களும் அவனைத்தான் முன்மாதிரியாக வைத்திருந்தனர். ஆனால் அவனது செயலால் இன்று அவனே தலை குனிந்து கூனிக்குருகிப் போய் இருந்தான்.
தன் தாய் தட்டுடன் வந்து நிற்பதைப் பார்த்தவன் மெதுவாக எழுந்து தரையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்தான். அவரது முகத்தை நிமிர்ந்து பார்க்க அவனுக்கே தயக்கமாக இருந்தது. அவன் ஏதும் பேசாமல் இருக்கவும் மீனாட்சியே
“தேவ்மா, இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படிச் சாப்பிடாமல் இருக்கப் போகிறாய்? இதில் இட்லி இருக்கின்றது கொஞ்சமாவது சாப்பிடுமா” என்றார்.
“இல்லை வேண்டாமா.” என்றவன் சிறிது வினாடிகளில்
“அவள் சாப்பிட்டாளா?” என்றான்.
மகனின் வேதனை புரிந்ததும்
“முதலில் வேண்டாம் என்று தான் கூறினாள். ஆனால் பிறகு சாப்பிட்டு விட்டு, இப்போது உறங்குகிறாள்” என்றார்.
ஆதிரை உணவு உண்டாளெனத் தெரிந்த பின் மகனும் உண்பானென நினைத்தால் அவன் எதுவும் கூறாமல் அமைதியாகவே அமர்ந்திருக்கவும்
“இங்கே பார் தேவ்மா, நீ எதையும் சிந்திக்காமல் இப்படிச் செய்திருக்க மாட்டாய் என நம்புகிறேன், விளைவுகளைப் பற்றியும் சிந்தித்திருப்பாய் தானே? அதன் படி அவள் உடனே நம்முடன் நன்றாகப் பழகுவாளென எதிர் பார்க்கக் கூடாது தானே?” என்றார்.
“நான் செய்தது தவறு தான் அம்மா, என் செயல்களை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. என் பயம் எல்லாம் அவள் என்னைப் புரிந்துகொள்வாளா? இல்லை அடியோடு வெறுத்து விடுவாளா? என்பது தான்” என்றான்.
“உண்மைகள் கடைசி வரை இருட்டிலேயே இருக்காது, ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்து தான் ஆகும் எனக் கேள்விப்பட்டதில்லையா? என்றாவது அவளுக்கும் உண்மைகள் தெரியும் போது அவள் சமாதானம் ஆகிவிடுவாள்” என்றவர் ஏதோ தோன்றியவராக
“ஏன் தேவ்மா... நாம் ஏன் அவளிடம் உண்மையைக் கூறக் கூடாது” என்றார்.
தேவா “இல்லை அம்மா. அந்தத் தவறை மட்டும் செய்து விடாதீர்கள். இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவளுக்கு உண்மைகள் தெரிந்தால் நமக்கு எதிராக மாறவும் வாய்ப்பு உள்ளது. சில காலம் போகட்டும் நானே அவளிடம் உண்மையைக் கூறுகிறேன்” என்றான்.
தேவா சொல்வது சரியாகவே மீனாட்சிக்குத் தோன்றியதால் அவர் அதற்கு மேல் அதைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் மீண்டும் தேவாவை சாப்பிடச் சொன்னார். அவரது கவலை அவருக்குச் சாப்பிடாமல் தன் தாய் விடப் போவதில்லையெனத் தெரிந்ததால் தேவா,
“சாப்பிடுகிறேன் அம்மா. ஆனால் அதற்கு முன் ஒரு உதவி” என்றான்.
உதவி என்றெல்லாம் மகன் கேட்கவும் பதறிய மீனாட்சி “என்ன பா... உதவி என்றெல்லாம் புதிதாக… என்ன என்று கூறு” என்றவரிடம்
“அவளது அறையில் உள்ள சன்னல்களைச் சிறிது நேரம் திறக்க முடியுமா” என்றான்.
இதற்கு அவர் என்னவென்று கூற முடியும்? மகனின் வேதனையும் அவருக்குப் புரியாமல் இல்லை. ஆனால் மருமகளுக்குத் தெரிந்தால் என்ன ஆவது என்று யோசித்தார். ஆனால் இரவெல்லாம் அழுதுவிட்டுக் கலைப்பில் உறங்குபவள் நிச்சயம் இப்போது முழித்துக் கொள்ள வாய்ப்பில்லை தான். மகனைப் பார்க்கவும் பாவமாக இருக்கவும் சரியென்று விட்டார்.
தயக்கத்துடனே மருமகள் அறைக்குச் சென்றவர், எதற்கும் உறங்கிக் கொண்டுதான் இருக்கின்றாளா என ஒருமுறை உறுதிப்படுத்துக் கொண்டு சன்னல்களைத் திறந்து விட்டார். வெளியில் நின்று சன்னல் வழியே ஆதிரை உறங்குவதை சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு அவனது இடத்திற்குச் சென்று அவனுக்கு வைத்திருந்த உணவை உண்டுவிட்டு உறங்கி விட்டான். இவர்கள் நிலையைப் பார்க்கப் பார்க்க மீனாட்சிக்குத் தான் வேதனையாக இருந்தது.
இரண்டு நாட்கள் எந்தவித மாற்றங்களுமின்றி இவ்வாறே சென்றனர், ஆதிரையும் அறையை விட்டு வெளிவரவில்லை, தேவாவும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.
ஆதிரை உறக்கமின்றி அறைக்குள்ளேயே உலாத்திக்கொண்டிருந்தாள். நீண்ட நேரமாக இருமல் சத்தம் கேட்கவும், எங்கிருந்து வருகிறது எனக் கவனித்தவள் வீட்டின் வெளிப்புறத்திலிருந்து சத்தம் வரவும் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள்.
இரவு நேரம் என்பதால் நிலவின் ஒளியில் நன்றாக உத்து பார்க்க வேண்டி இருந்தது. அவள் ஊகித்தது போலவே அங்கு இருமிக் கொண்டிருந்தவன் தேவா தான். முதலில் தயங்கியவள் அவனது இருமல் நிற்காமல் இருக்கவும், தன் அறையை விட்டு வெளியேறி அவன் இருக்கும் இடத்திற்குச் சென்றாள்.
தேவா அங்குக் கண்களை மூடிப் படுத்திருந்தபோதும் இருமல் மட்டும் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. ‘இவனிடம் என்னவென்று கேட்கலாம் என்று பார்த்தால் கண்களை மூடி வைத்திருக்கிறானே! இப்போது என்ன செய்வது?’ என்று நினைத்தவள் அவனை “இங்கே பார்... ஏய்... உன்னைத்தான் கூப்பிடுகிறேன்” என்று பலவாறு கூப்பிட்டுப் பார்த்தாள். ஆனால் அவனிடமிருந்து எந்த விதமான அசைவுகள் இல்லை.
சரி உள்ளே சென்று யாரையாவது அழைத்து வரலாம் என்று திரும்பியபோது தான் அவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது. இந்த இரவு நேரத்தில் யாரைப் போய் எழுப்புவது. அப்படியே எழுப்புவது என்றாலும் கூட, முதலில் இந்த வீட்டில் யார்யார் இருக்கின்றார்கள் எனவும் தெரியாது. இரண்டாவதாக இவ்வளவு பெரிய வீட்டில் யார் எந்த அறையில் இருப்பார்கள் என்றும் தெரியாதே! என முதல் முறையாக அந்த வீட்டைப் பார்த்துப் பிரமித்தாள்.
அவள் பிரமித்தது போலவே தேவாவின் வீடு மிகவும் பெரியதாகவும், பிரமாண்டமாகவும் அவள் முன் கம்பீரமாக நின்றது. அவளது அறை வீட்டில் நுழைந்தவுடனேயே முதலாவதாக இருந்ததாலும் அறையை விட்டு அவள் வெளியில் வராததாலும் அந்த வீட்டை அவள் கவனிக்கவே இல்லை என்பதே உண்மை. முதல் முறையாக அறையை விட்டு வெளிவராமல் இருந்ததை நினைத்துத் தன்னையே நொந்து கொண்டாள்.
அவள் சிந்தித்துக் கொண்டிருந்த வேலையில் தேவாவின் உடல்நிலை இன்னும் மோசமாகிக் கொண்டிருந்தது. அவனது இருமல் அதிகமாவதைப் போல் இருந்தது ஆதிரைக்கு. வேறு வழியில்லை நாமேதான் ஏதாவது செய்தாக வேண்டும் என நினைத்தவள்”தேவா” என அவனது நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். அவள் நினைத்ததைப் போலவே அவனுக்குக் காய்ச்சல் இருந்தது. ஆனால் அவள் லேசாக இருக்கும் என்றே நினைத்திருந்தாள், தேவாவின் உடலோ அனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் “தேவா... தேவா...” என்று அவனை எழுப்ப முயன்றாள், அவளது குரலில் எழுந்தானோ அல்லது அவள் அசைத்ததில் எழுந்தானோ என்று அவள் அறியவில்லை. ஆனால் மெதுவாகக் கண்களைத் திறந்தவன், தன் எதிரே நின்றவளிடம்
“ஆதிரை! இங்கே என்னடா செய்கிறாய்? பனியாக இருக்கின்றது பார்... காய்ச்சல் வந்து விடும் முதலில் வீட்டிற்குள் செல்” என்றான்.
இந்த நிலையிலும் தன் ஆரோக்கியத்தைப் பற்றி நினைக்கின்றானேயென நினைக்கவும், அவளது கண்களிலிருந்து கண்ணீர் பொங்கியது.
எப்படியோ ஒரு வழியாக அவனை எழுப்பியவள் மெதுவாக அவளது அறைக்கு அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்தாள். அடுத்து என்ன என்று யோசித்தவளுக்கு, சென்னையிலிருந்து கிளம்பும்போது
“புது இடத்திற்குச் செல்கிறோம், தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் உடல் நிலை சரியில்லாமல் போகவும் வாய்ப்பிருப்பதால் எதற்கும் காய்ச்சலுக்கு மாத்திரை எடுத்துக்கொள்” என்று மங்களம் கூறியதும், அவள் மாத்திரை எடுத்து வைத்ததும் அவள் நினைவுக்கு வந்தது.
இங்கு வந்தபிறகு விக்ரம் அவளது துணிப்பையைக் கொடுத்து விட்டுப் போயிருந்தான். அதில் தேடியபொழுது மாத்திரைகளும் இருந்தது. காய்ச்சலுக்கான மாத்திரையை எடுத்துத் தேவாவிடம் கொடுக்கவும், அதை வாங்கி உண்டவன் அப்படியே உறங்கி விட்டான்.
ஆதிரை ஒன்றும் சிறு பிள்ளை இல்லை, அவள் கூறியதற்காக வெயில், பனியெனப் பாராமல் வாசலிலேயே இருந்ததன் விளைவு தான் இந்தக் காய்ச்சல் என்று அவளுக்கும் புரியாமல் இல்லை. அதற்காகக் குற்றவுணர்ச்சியாக உணர்ந்தாலும் தேவாவின் மீது இருந்த கோபம் அதைப் பின்னுக்குத் தள்ளியது.
ஒருபுறம் காய்ச்சலில் முனங்கிக் கொண்டிருந்தவனைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், மறுபுறம் ‘இவனுக்கு எல்லாம் தேவைதான், எத்தனை திமிராக அன்று நடந்துகொண்டான்’ என்றும் தோன்றியது.
அவன் தூக்கத்தில் ஏதோ கூறுவதைப் போல் இருக்கவும் என்ன என்று கவனிக்களானாள், நீண்ட நேரம் கவனித்தும் அவன் ஏதோ ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் கூறுகிறான் அதில் ஒரு எழுத்து ‘மீ’ என்பதைத் தவிர அவளுக்கு வேறு ஒன்றுமே புரியவில்லை.
நீண்ட நேரமாக அவன் கூறும் அந்த ஒற்றை வார்த்தையைக் கண்டுபிடிக்க முயன்று அவளால் முடியாமல் போனதால் வேறுவழியின்றி
‘எங்கிருந்து இவனும் இவனுடைய இந்த ஊரும் வந்ததோ! உடல் நிலை நன்றாக இருந்தபோது திடீரெனத் தோன்றி தாலி கட்டுகிறேன் என்று என் வாழ்க்கையில் கிரிக்கெட் விளையாடினான். இப்போது காய்ச்சலில் படுத்துக் கொண்டு என் உறக்கத்தில் வாலிபால் ஆடுகிறான். இந்தக் குடும்பம் வேறு கும்பகர்ணன் வகையரா போல. ஒரு மனிதன் இருமுவது கூடத் தெரியாமல் உறங்குகிறார்கள்’ என்று அவளது அறையின் தரையில் அமர்ந்து கொண்டு தேவாவில் தொடங்கி அவனது பரம்பரையே திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தாள். பாவம்! அவளும் அவர்கள் வழி வந்தவள் என்பதை அப்போது அவள் மறந்துவிட்டாள்.
எப்பொழுது உறங்கினாளோ, தரையில் தரையில் படுத்து அப்படியே உறங்கியவள் காலையில் எழுந்து பார்த்தபோது அந்த அறையில் அவள் மட்டுமே இருந்தாள்.
‘இரவு ஒருவன் இங்கு இருந்தானே!’ என்று சன்னல் வழியாக வெளியில் பார்த்தாள். வாசலில் அமைதியாக அமர்ந்திருந்தவனைப் பார்க்க அவளுக்குக் கோபம் தலைக்கேறியது.
அவன்மீது வந்த கோபத்தை விடவும் அவள்மீதே அவளுக்கு அதிக கோபம் வந்தது.
‘இவன் யார் என்றே தெரியாது, காய்ச்சல் என்பதால் தான் அறைக்குள் விட்டதும் கூட, யாரோ ஒருவன் அறைக்குள் இருக்கும்பொழுது தூங்கியதே தவறு, இதில் அவன் எழுந்து வெளியில் சென்றது கூடத் தெரியாமல் தூங்கித் தொலைத்திருக்கிறாயே ஆதி! விக்ரம் சொல்வதைப் போல உனக்கு அறிவென்பதே இல்லை’ என்று தன்னைத் தானே மனதிற்குள்ளேயே வறுத்தெடுத்துக் கொண்டு அவன் இருக்கும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தாள்.
ஆதிரை எதையோ பலமாகச் சிந்தித்துக் கொண்டே வருவதைப் பார்த்த தேவாவோ நேற்றைய இரவுக்காக நன்றி கூறுவோமா? என்று யோசித்தான். நன்றி கூறினாள் உன் நன்றி தேவை இல்லை என்பாளோ என்ற ஐயமும் இருந்ததால் அமைதியாக அவளையே பார்த்த படி அமர்ந்திருந்தான்.
தன் முன் சோர்வாக அமர்ந்திருந்த தேவாவிடம் வந்து நின்றவள் சில வினாடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போகவும் அவளே
“ஒரு நன்றி கூடக் கூற இயலாதா?” என கோவமாகக் கேட்டாள்.
“அதற்காகத் தான் காத்திருந்தேன். நன்றி” என்றான். ஆனால் அதைக் கேட்ட ஆதிரையோ
“உன் நன்றிக்காக ஒன்றும் நான் செய்யவில்லை இருந்தாலும் நன்றியெல்லாம் தானாகச் சொல்ல வேண்டும் கேட்டபிறகு சொல்லக் கூடாது” என்றாள்.
அவன் நினைத்ததைப் போலவே அவள் கூறவும், அவனால் வந்த சிரிப்பை முதலில் அடக்கவே முடியவில்லை. ஆனால் இப்போது சிரித்தால் தன் மனைவி காளி அவதாரம் எடுத்து விடுவாளே என்பதால் மிகவும் முயன்று வந்த சிரிப்பைத் தரையைப் பார்த்து அடக்கினான், கணவனின் செயலுக்குப் பின் இருந்த காரணம் புரியாமல் ஆதிரை மேலே பேசத் தொடங்கினாள்.
“தலை குனியும் அளவு இது பெரிய தவறு இல்லை, சரி அதைவிடு, நீ உன் அறையிலேயே தங்கிக்கொள்” என்றவளை இடைமறித்து
“பரவாயில்லை என்றவனை முறைத்துவிட்டு
“நீ இங்கிருந்து இருமுவது என் உறக்கத்தைக் கெடுக்கின்றது. மற்றபடி உன்மீது அக்கறை என்றெல்லாம் ஒன்றுமில்லை”, உன் அறையில் தங்கிக்கொள். ஆனால் என் கண்முன்னே வராதே” என்று மூச்சுவிடாமல் கூறிவிட்டு அவனது பதிலைக் கூட எதிர் பார்க்காமல் வேகமாக உள்ளே சென்றுவிட்டாள். உள்ளே சென்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்களில் ஒரு சிறிய புன்னகை தவழ்ந்தது.
தொடரும்...​
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,612
668
113
44
Ariyalur
அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️ஆனால் சில இடத்தில் தூய தமிழில் பேசுவது போல் உள்ளவைகள் கொஞ்சம் நம்ம பேச்சு வழக்குல இருந்தா இன்னும் சூப்பரோ சூப்பர் 👍👍👍👍👍👍
 
  • Love
Reactions: Malar Bala

Malar Bala

Staff member
Jul 31, 2021
67
50
18
Thanjavur
அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️ஆனால் சில இடத்தில் தூய தமிழில் பேசுவது போல் உள்ளவைகள் கொஞ்சம் நம்ம பேச்சு வழக்குல இருந்தா இன்னும் சூப்பரோ சூப்பர் 👍👍👍👍👍👍
Nandri sago 🥰