• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலே 9

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 9

"என்னடா அங்கே எல்லாரும் இருக்காங்க நித்தியும் அங்கே தானே இருக்கா! நீ இங்கே என்னை பண்ற?" சத்யா உதயிடம் கேட்க,

"ஹ்ம் எல்லாம் உன் அத்தை மகளை பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன்" என்றான் உதய்.

"பார்றா.. என்ன டா ஒரே ரொமான்ஸ்சா பைக்ல!" - சத்யா

"அடேய் என் வாயை கிளறாதே! நானே செம்ம காண்டுல இருக்கேன்"

"ஹாஹா! அதானே பார்த்தேன். நீங்க சண்டை போடலைனா தானே அதிசயம். சரி சொல்லு என்னாச்சு?"

"நானே சொல்லணும் நினச்சேன். வா மேல மொட்டை மாடிக்கு போகலாம்" என உதய் சொல்லிவிட்டு செல்ல, சத்யாவும் உடை மாற்றி கொண்டு மேலே சென்றான்.

"என்ன ஆச்சு டா. அவ பேசுறதுக்கு எல்லாம் கோபப்படமாட்டியே?" என இருவரின் குணம் அறிந்து கேட்டான் சத்யா.

"கோபம் எல்லாம் இல்லை டா. வேற ஒன்னு யோசிச்சேன். சரி நீ சொல்லு மது என்ன சொல்றா?"

"அதை ஏன் கேட்குற! எப்பவும் போல தான். தாமரை இலை தண்ணீர் மாதிரி தான் என்னோட நிலைமை போய்ட்டு இருக்கு" என்றான் சத்யா.

"ஹ்ம்ம்" என்றவன் முகத்தில் தீவிர யோசனை தெரியவும் மீண்டும் என்ன பிரச்சனை எனக் கேட்டான் சத்யா. அதன் பின் பைக்கில் நித்தியுடன் வரும்போது நடந்ததை கூறினான் உதய்.

"வண்டியை ஓட்டுறியா? இல்லை உருட்டுறியா? இவ்வளவு மெதுவா போனா வீட்டுக்கு போக நாலு நாள் ஆகும். முதல்ல என் முதல் மாச சம்பளத்துல ஒரு ஸ்கூட்டி வாங்கணும்" என நித்தி உதயை பேச விடாமல் பேசிக் கொண்டே செல்ல,

"ஹேய்! இன்னும் ஜாயின் பண்ணவே இல்ல. அதுக்குள்ள ஸ்கூட்டி வாங்குற அளவுக்கு கனவு காண்பியா? ஆமா முதல் மாசத்துலயே உனக்கு சம்பளத்தை அள்ளி கொடுப்பாங்கனு நினைப்பா?" என்றான் உதய்.

"ஹலோ நான் தீயா வேலை செஞ்சு முதல் சம்பளத்தில ஸ்கூட்டி வாங்கி காட்டல என் பேரு நித்தி இல்லை" என்ன சபதம் எடுத்தாள்.

"நானே சொல்லணும் நினச்சேன். எவ்வளவு அழகான பெயர். உனக்கு எப்படி வச்சாங்கனு!. நீ வேணும்னா 'சுத்தி'னு வச்சிக்கோ" என கிண்டல் செய்தான்.

"இந்த வாய்க்கு மட்டும் உனக்கு குறையே இல்லை" என அடுத்து ஏதோ சொல்ல வந்தவள் பின் வேகமாக, "உதய் உதய்.. அங்கே பாரேன்" என்றதும்,

'என்ன மரியாதையா கூப்பிடுறா?' என நினைத்தபடி அவள் கைகாட்டிய பக்கம் பார்த்தான். அங்கே ஒருவன் பைக்கில் சாய்ந்து நின்று இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான். கண்களில் கண்ணாடி போட்டிருந்ததால் அவன் யாரை பார்க்கிறான் என இவர்களுக்கு தெரியவில்லை.

"அவனுக்கு என்ன?" என யோசித்தவாறே கேட்டான் உதய்.

"இவன் தான் அன்னைக்கு மது கூட ரோடுல நின்னு பேசிட்டு இருந்தான். மதுகிட்ட சத்யா மாமா பத்தி தான் கேட்ருக்கான். மாமாவை தெரியும்னா உனக்கும் தெரியணுமே" என அவள் கேட்க, அவனை திரும்பிப் பார்த்த உதய்,

"இல்லை நித்தி, அது பார்த்த முகமே இல்லை. தெரிஞ்சவங்கனு நினச்சு பேசியிருப்பான்" என்று கூறினாலும், இவன் திரும்பிப் பார்த்த போது அவனும் இவனை திரும்பிப் பார்ப்பது போல தான் தெரிந்தது.

"ம்ம் என்னவோ! ஆனால் ஸ்மார்ட்டா இருக்கான்ல" என்றதும், உதய் பல்ஸ் ஏறியது.

"இப்ப பேசாம வர்ரியா இல்ல இங்கேயே இறக்கி விடவா?" என அவன் கேட்டதும்,

"ஏன் கத்துற, அன்னைக்கு மாமாகிட்ட இப்படி சொன்னதும் மதுவையும் என்னையும் முறைச்சாங்க. அது கூட ஓகே நீ ஏன் முறைக்கிற?" என அவன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டே கேட்க,

'இதெல்லாம் தெரியும் ஏன்னு மட்டும் என்கிட்ட கேட்டு கடுப்படிப்பா' என முனகிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.

"யாரு டா அது? அவன் கண்ணாடி போட்டிருந்தாலும் என்னவோ எங்களை பார்த்த மாதிரி தான் இருந்துச்சி. மதுகிட்ட வேற பேசியிருக்கான். ஏன் என்கிட்ட எதையும் நீ சொல்லலை?" என உதய் கேட்டான்.

"ப்ச் எனக்கும் தெரியல டா. அன்னைக்கு நான் தூரத்தில தான் அவனை பார்த்தேன். அவன் முகத்தை சரியா பார்க்கல. சரி இன்னொரு முறை பார்த்தா நாம என்னனு கேட்டிடலாம்" என்றதும் உதயும் ஒத்துக் கொண்டான்.

"சரி கீழே போகலாம் டா. அம்மா வெயிட் செய்வாங்க" என்றதும், "சித்தி இங்க தங்குறதுக்கு ஓகே சொல்லிட்டாங்க. நீ ரிலக்ஸ்சா இரு" என்றான் சத்யா.

"அம்மாவையும் சமாளிச்சுட்டிங்களா டா? நல்ல குடும்பம்!" என்று சிரித்தபடியே சத்யாவுடன் கீழே சென்றான். அவர்களுக்கு தெரியவில்லை அந்த புதியவன் மூலம் இவர்கள் குடும்பமே கதற போகிறது என்று.

வாராயோ தோழி
வாராய் என் தோழி, வா
வந்து தின்னிடு டி....
வாரேவா கோழி
வயசான கோழி, வாய்
நிறைய அள்ளிவைடி....
தொல்லைக்கு நீயே
தொல்லையடி... அறிவுக்கும்
உனக்கும் தூரமடி,
ஏ பாட்டி... நீ
வேஸ்ட் டி.. நீ இருந்தால்
இன்னும் கொடுமையடி...

என்று ஜீன்ஸ் பட பாடல் மூலம் தனது பாட்டியை கொலை செய்து கொண்டிருந்தான் இனியன்.

சித்தி மற்றும் உதய் அண்ணனின் மனம் நோகும் படி பேசியது மட்டும் இல்லாமல் எப்போதும் மஞ்சுவை வார்த்தையால் காயப்படுத்தும் பாட்டியை என்ன செய்தால் தகும் என இனியா யோசித்துக் கொண்டிருக்க, குணசேகரன் சாப்பிடும் நேரம் சாப்பிட அமர்ந்த பாட்டியை பாட்டில் கொலை செய்தான்.

"என்ன டா பாட்டு இது? கேவலமா இருக்கு" என பாட்டி சொல்ல,

"எனக்கு கூட தான் கேவலமா இருக்கு. நான் ஏதாவது சொன்னேனா? பேசாம சாப்பிடு கிழவி" என இனியா இரு பொருளில் பதில் கூற, குணசேகரன் அவன் பாட்டின் அர்த்தம் புரிந்தாலும் அமைதியாக இருந்தவர், அவன் நேராக அன்னையை பேசியதும் முறைத்தார். அதில் பேச்சை மாத்தினான் இனியன்.

காலையில் நித்தி, ஹனி இருவரும் கல்லூரி கிளம்ப, உதய்யும் பார்வதியும் அங்கே தங்கி இருந்ததால் பார்வதி காலையிலே எழுந்து மஞ்சு பத்மாவுடன் சமையலில் ஈடுபட்டார். உதய் சத்யா அறையில் தூங்கி இருந்தவன் சத்யா குளித்து கிளம்பி எழுப்பும் வரை தூங்கி இருந்தான்.

ஆக காலை நேரத்தில் அந்த வீட்டில் வெட்டியாக இருந்தது இனியன் மட்டுமே. அதனால் தான் அந்த காலை நேரத்திலே பாட்டிக்கு பாட்டு கட்டிக் கொண்டிருந்தான்.

"இனியா எத்தனை நாள் லீவ்ல வந்த?" என கேட்டார் குணா.

"ஏன் பா நான் வந்தது பிடிக்கலையா?”

"என்ன பேச்சு டா பேசுற? நீ தானே ஹாஸ்டல் போவேன்னு அடம் பண்ணின. வந்து நாலு நாள் ஆச்சே அதான் கேட்டேன்" என்றார்.

"அதெல்லாம் நான் ஈசியா பிக்அப் பண்ணிக்குவேன் பா" என சொல்லிக் கொண்டு இருக்க, அங்கு நித்தி உடன் வந்த ஹனி,

"யாரை டா பிக்அப் பண்ண போற தடியா" என்றபடி சாப்பிட அமர்ந்தாள்.

மஞ்சு அவளுக்கு தோசை எடுத்து வர, பத்மா சமயல் அறையில் இருந்தே அவளை "வாய் பேசாமல் சாப்பிட்டு எழுந்து போடி" என்று திட்டினார்.

"அத்தை அவளுக்கு நெய் தோசை போடாதீங்க. அதான் வாய் கூடி போச்சு" என்று இன்னும் எடுத்து கொடுத்தான் இனியா.

பார்வதி அங்கு இருப்பதால் அங்கே இருக்க பிடிக்காமல் சாப்பிட்டு தன் அறைக்கு சென்றார் ராஜம்மாள். பின் சத்யா உடன் உதயும் சாப்பிட வர இனியா ஹனியுடன் சண்டையிடுவதை அனைவரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்.

பத்மாவை தவிர யாரும் அவர்களை தடுக்கவில்லை. அவர்களின் சண்டை எப்போதும் நடப்பது. இனியா ஹாஸ்டல் சென்ற பின் அமைதியாக இருந்த வீடு இன்று தான் அதிர்ந்து கொண்டிருந்தது. அதை கண்டு நிம்மதியுடன் சாப்பிட்டு விட்டு வங்கிக்கு கிளம்பினார் குணா.

ஹனி செல்லும் மருத்துவ கல்லூரி வீட்டில் இருந்து பத்து நிமிட பயணம் தான். இன்று இனியாவுடன் சண்டையிட்டு நேரம் ஆகிவிட, அழைத்து செல்ல வருமாறு இனியாவிடமே கேட்டுக் கொண்டிருந்தாள்.

"இவ்வளவு நேரம் என்னை கலாய்ச்சுட்டு என்கிட்டயே ஹெல்ப்பா? நான் ஈவ்னிங் கிளம்பனும் என்னால முடியாது போடி" என்றான்.

"டேய் பழி வாங்காதே. குணா மாமா வேற இல்ல. ப்ளீஸ் டா" என இறங்கி வந்து கெஞ்ச, இன்னும் கெஞ்சட்டும் என வீம்பு பிடித்தான் இனியா.

"பாப்பா உதய் அந்த பக்கம் தான் போறான். அவன்கிட்ட கேளு" என்றான் சத்யா.

"நீ கேட்கவே வேணாம் பாப்பா வா போகலாம்" என எழுந்து கொண்டான் உதய்.

ஒரு நிமிடம் தயங்கியவள் பின் "போடா குண்டா" என இனியாவை சொல்லிவிட்டு, உதயுடன் சென்றாள்.

அமைதியாக அவன் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க, ஹனி சிறிது நேரம் அமைதி காத்தவள் பின் ஒரு கேள்வி கேட்டதும் வண்டி சட்டென்று நின்றது.

"நீங்க நித்தியை விரும்புறீங்களா மாமா?"

திடீரென்று ஹனியிடம் இப்படி ஒரு கேள்வியை எதிர்பாராதவன் வண்டியை நிறுத்தி இருந்தான்.

"ஹனி.. உனக்கு..." என்று அவன் தயங்க, "ஐயோ மாமா ஏன் இவ்வளவு சீரியஸ் ஆகுறீங்க? நேத்து சத்யா மாமா ரூம்க்கு தற்செயலா வரும்போது கேட்டேன். அவ்வளவு தான். நான் யாருக்கும் சொல்லமாட்டேன். ப்ரோமிஸ் மாமா" என்றாள்.

"தேங்க்ஸ் பாப்பா. ப்ளீஸ் தப்பா நினைக்காதே. நித்திக்கு இன்னும் தெரியாது. நானே வீட்டில பேசுறேன்" என்றதும்,

"எனக்கு சந்தோசம் தான் மாமா. உங்களை பத்தி தான் எனக்கு தெரியுமே" என்றதும் ஒரு புன்னகையுடன் வண்டியை நகர்த்தினான்.

"அப்போ சத்யா மாமா? அவங்களை தான் நித்தி கட்டிக்கும்னு நினச்சேன்" என கவலையுடன் ஹனி கூற, முதலில் தயங்கியவன் பின் மதுவை வீட்டில் அனைவருக்கும் தெரியும் என்பதால் அவர்களை பற்றி கூறினான். ஹனியும் அதில் நிம்மதி அடைந்தாள். ஆனாலும் அவள் முகத்தில் இருந்த ஏதோ ஒன்றை உதயால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சத்யா, நித்தி மற்றும் மதுவுடன் அவர்கள் கல்லூரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தான். "ஹோவ் க்யூட்" என்ற சத்ததில் திரும்பி பின்னால் அமர்ந்திருந்த மதுவை பார்த்தான். அவள் காரின் வெளியே எதையோ ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

'அப்படி என்ன பாக்குறா?' என சத்யா அவள் பார்த்த திசையில் பார்க்க அங்கு ஒரு நாய்குட்டி நின்றிருந்தது. அதில் கடுப்படைந்தவன், மனதிற்குள் சொல்வதாக நினைத்து "என்கிட்ட இல்லாதது அந்த நாய்கிட்ட என்ன இருக்கு?" என்று கேட்டு விட, "மா....மா" என்ற நித்தியின் அலறலில் தான் உணர்வுக்கு வந்தான்.

தொடரும்..
 
Top