• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் செய்யடா காந்தர்வா... - 4

ஹரிணி அரவிந்தன்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 5, 2023
25
28
13
Manalmedu
"ம்ம்……"

மெல்லிய வலி நிறைந்த முனங்கலோடு ஆருத்ரா கண்களை திறக்க முயற்சி செய்து மிகவும் சிரமப்பட்டு திறந்தாள். தலையில் பாறாங்கல் ஏற்றி வைத்ததுப் போல் ஒரு உணர்வு அவளுக்கு.

"நான் எங்கே இருக்கிறேன்…, நான் இறந்து விட்டேன் தானே?",

எண்ணிக் கொண்டே சுற்றும் முற்றும் அவள் தன் விழிகளை சுழல விட்டாள். அப்போது தான் அவள் ஒரு மெது மெதுவான படுக்கையில் தான் படுக்க வைக்கப்பட்டிருப்பது அவளுக்கு தெரிந்தது. அந்த படுக்கையில் அப்படி ஒரு மென்மை, அவளும் திரையில் வசனம் பேசி இருக்கிறாள், மலர் போன்ற படுக்கை என்று. இப்போது தான் அந்த மென்மையை அனுபவப் பூர்வமாக உணர்ந்தாள்.

"நான் எங்கே இருக்கிறேன்?",

அவள் தன் சிந்தனையை நிறுத்தி விட்டு எழுந்து அமர முயல அவளின் உடல் ஒத்துழைக்காது போகவே அவள் தளர்ந்து அந்தப் படுக்கையிலே விழுந்தாள். நெற்றிப் பொட்டில் யாரோ கல்லை எடுத்து அடித்ததுப் போல் அப்படி ஒரு வலி அவளுக்கு. அந்த அறையின் மேற்கூரையும் அதன் மையத்தில் தொங்கிக் கொண்டு இருந்த கண்ணைக் கவரும் லஸ்தர் விளக்குகளும் அரண்மனையை அவளுக்கு நினைவுப்படுத்தியது.
அந்த அறையின் ஒரே ஒரு சன்னல் மட்டும் தான் இருந்தது, அதுவும் தங்க நிறத்தில் உள்ள ஒரு திரைச்சீலையால் மூடப்பட்டிருந்தது. அந்த சிக்மகளூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏதுவாக காட்டிற்குள் ரிசார்ட்கள், ஹோட்டல்கள் என்று நிறைய இருக்கிறது தான், ஆனால் வனத்துறையினரே செல்ல அச்சப்படும் இந்த யாழிசை அருவிப் பக்கத்தில் இப்படி ஒரு அரண்மனை போன்ற பங்களாவா? அவள் மனதில் வியப்பு ஏற்படாமல் இல்லை.

"எழுந்துட்டீங்களா…?",

என்ற ஒரு ஆண் குரல் கேட்டு அவள் திரும்பும் முன்னே அவள் முகத்தில் குப்பென்று இதமான நறுமணம் வந்து தாக்கியதில் அதுவரை அவள் உடல் கொண்ட பாரங்கள் எல்லாம் மறைந்துப் போய் அவள் உடலும் மனமும் லேசாக மிதப்பது போல் அவளுக்கு தோன்றியது. அந்த உணர்வு அவளால் வார்த்தையால் விவரிக்க முடியாத அளவுக்கு உடலும் மனமும் எதோ ஒரு பேரானந்தத்தில் மூழ்கிக் கொண்டு இருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. அந்த நொடியில் பணம், காசு, புகழ், பெயர், அந்தஸ்து என்ற அனைத்தையும் தேடி மனிதன் தன் வாழ்நாளை வீணாக்கி கொண்டு இருக்கிறான் என்று அவள் மனம் தத்துவம் பேசியது. அவளுக்கு சிரமம் வைக்காது அவனே அவளை நோக்கி நடந்து வரவது ஒலிக்கும் அவனின் ஷுக்களின் சப்தத்திலே அவளுக்கு தெரிந்தது.

கோட் சூட்டில் அடைந்து இருந்த நல்ல ஆஜானுபாகுவான உடலுக்கு ஏற்ற உயரம், அவன் முகத்தில் இருந்த வசீகரம் அவன் முகத்தையே எத்தனை மணி நேரமாக இருந்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. அவனின் ஒளிரும் சிநேகப்புன்னகை சிந்தும் கண்கள் எதிரே இருப்பவர்களை கவருவது போல் இருந்தது. அவள் தன்னை பார்வையால் அளவிடுவதைப் ஒரு புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தான்.

"ஒருவேளை நாம இறந்துச் சொர்க்கத்தில் இருக்கிறோமோ!! இத்தனை அழகு உடைய ஒரு ஆண் பூமியில் இருப்பானா என்ன?",

அவள் தன்னையே கேள்விக் கொள்ள,

"நீங்க உயிரோட இருக்கீங்க! உங்களுக்கு ஒண்ணும் ஆகலை…",

அவள் மனதைப் படித்தவன் போல் அவன் சொன்னான். அதில் அவள் திடுக்கிட்டாள்.

"இவன் எப்படி என் மனதில் நினைப்பதைக் கண்டுப் பிடித்தான்?",

அவள் கோபத்தோடு கேட்டாள்.

"எதுக்கு சார் என்னைக் காப்பத்துனீங்க?",

"இது என்னுடைய இடம், இங்கே எல்லாரும் சந்தோஷமாக இருக்க வேண்டும், என்னால் அடுத்தவர் துன்பம் பார்க்க முடியாது….",

அவன் பதில் சொன்ன விதத்தில் அவள் முறைத்தாள் அவனை.

"ஓஹோ…அதுக்குனு காப்பாற்றி விடுவீங்களா? என்னோட பிரச்சனை என்னனு உங்களுக்குத் தெரியுமா? என்னுடைய நேரத்தை வீணாக்கி விட்டீங்களே….!!",

என்றப்படி அவள் எழுந்துக் கொள்ள முயல,

"இப்போ மறுபடியும் தற்கொலை செய்துக் கொள்ளப் போறீங்களா?",

அட! இப்போது கூட அவன் முகத்தில் அதே சாந்தம், புன்னகை.

"இந்த இடம் எவ்ளோ அழகான அமைதியான இடம், இதில் போய் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்ள நினைக்கிறீங்களே….இந்த இடத்தைப் பிடித்து தானே இங்கே வந்தீங்க?",

அவன் கேட்டான்.

"ஆமாம்….!!! எனக்கு இந்த சிக்மகளூர் காடும் திங்கள் நாதர் கோயிலும் ரொம்ப பிடிக்கும்…அதனால் தான் இங்கேயே என் உயிரைப் போக்கி கொள்ள வந்தேன்…, உங்க கோட் சூட்டை உங்க லுக்கை பார்த்தால் நீங்க ரொம்ப பெரிய ஆள் என்றுத் தெரிகிறது, உங்களைப் போன்ற பெரிய ஆட்கள் புழங்க தான் இதுப்போல் அழகான இடத்தை தடை செய்யப்பட்டப் பகுதினு போர்ட் வைத்து இருக்காங்க போல, சரி அது உங்கள் பாடு, அதற்காக என் வழியில் குறுக்கிடாதீங்க…மிஸ்டர்…..",

"தேஜஸ்….",

அவள் அவன் பெயர் என்னவென்று தெரியாது நிற்க, அவனேச் சொன்னான்.

'தேஜஸ். இவனுக்கு ஏற்றப் பெயர் தான். இவன் முகத்தில் தெரியும் அந்த வசீகரமும் ஒளியும் புன்னகையும் வீசும் அந்த கண்களும் கொண்ட இவனுக்கு இவனதுப் பெற்றோர் பொருத்தமாக தான் பெயர் வைத்து இருக்காங்க'

அவள் எண்ணிக் கொண்டாள்.

"உங்கள் வழியில் நான் குறுக்கிட வில்லை, நீங்க தான் எனக்குச் சொந்தமான இடத்தில் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்ள வந்து இருக்கீங்க….அப்போ நீங்க தானே என் வழியில் குறுக்கிட்டு இருக்கீங்க?",

அவன் கேட்டு விட்டு சிரித்தான்.

"இயற்கை எல்லாருக்கும் பொதுவானது, நீங்கள் எவ்ளோ பெரிய பணக்காரராக இருந்தால் என்ன? யாராலும் இயற்கையை வெல்ல, வாங்க முடியாது…, இது எல்லாமே உங்களுக்கோ எனக்கோ சொந்தம் இல்லை…",

"அப்படியா? அப்போ நீங்கள் போக்கிக் கொள்ள நினைக்கும் உங்க உயிர் உங்களைக் கேட்டுக் கொண்டு உங்க உடம்புக்கு வந்ததா?",

"இல்லை….",

"அப்படினா அது உங்களுக்கு சொந்தம் இல்லை என்று தானே அர்த்தம்! உங்களுக்கே சொந்தம் இல்லாத உங்க உயிரை போக்கிக் கொள்ள உங்களுக்கு ஏது உரிமை?",

அவன் கேட்டதில் அவள் விழித்தாள்.

"இன்னும் கொஞ்ச நேரம் இங்கே நின்றால் இவன் என்னைப் பேசியே மெண்டலாக்கி விடுவான்….",

அவள் எண்ணிக் கொண்டு நடக்க ஆரம்பிக்க, அவன் அவளைத் தடுக்க வில்லை. மாறாக தான் நின்றுக் கொண்டு இருந்த இடத்தில் இருந்துக் கொண்டேச் சொன்னான்.

"உங்க பெயர் ஆருத்ராவா? உங்களைத் தேடி மூன்று பேர் திங்கள் நாதர் கோயிலில் காத்துக் கொண்டு இருக்காங்க….",

அவன் சொன்னதில் அவள் திடுக்கிட்டுப் போய் அவனைப் பார்த்தாள்.

"எ….என்ன….????",

அவள் முகத்தில் சற்று முன் இருந்த கோபம் எல்லாம் காற்றோடு காற்றாக காணாமல் போக, அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது.

"உங்களை கெஞ்சிக் கேட்கிறேன்…அவங்களிடம் நான் இங்கே இருப்பது பற்றி சொல்லி விடாதீங்க….!!! பிளீஸ்…!!",

அவள் முகம் பயத்தில் வெளுத்தது. அதை அவன் உணர்ந்து இருக்க வேண்டும், அவளை அன்பு ததும்பிய ஒருப் பார்வைப் பார்த்தான்.

"நான் உங்க கூட இருக்கும் வரை யாரும் உங்களை நெருங்க மாட்டாங்க…என்னோட நம்பி வாங்க…!!",

அவன் அவளை நோக்கி கை நீட்ட, அவள் அவனைப் பார்த்தாள்.

"மிஸ்டர். தேஜஸ்….!! உங்கள் ஆதரவுக்கு நன்றி..ஆனால்
என் பிரச்சனை என்னோடு…எனக்கு உங்க ஆதரவு வேண்டாம், நான் என் வழியில் போகிறேன்…நன்றி"

அவள் விடுவிடுவென்றுப் போக, அதற்காகவே காத்திருந்ததுப் போல் ஆறடி நீளமுள்ள கோதுமை நாகம் ஒன்று அவள் வருகையை எதிர்ப் பார்த்துக் கொண்டு அவள் நடந்து வந்துக் கொண்டிருந்தப் பாதையில் தன் உடலை நெளித்துக் கொண்டு இருந்தது.


- தொடரும்

Screenshot_20230105-192132_Gallery.jpg