• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் செய்யடா காந்தர்வா -9

ஹரிணி அரவிந்தன்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 5, 2023
25
28
13
Manalmedu
"இதோ சாமியே வந்துட்டு…!!",

அந்த பழங்குடியின தலைவர் தும்பு சொன்ன உடன் எதோ ஒரு மூலிகையை கையில் வைத்து அங்கே இருந்த ஒரு கூட்டத்திடம் சொல்லிக் கொண்டு இருந்த ஆருத்ரா கண்கள் தன்னை ஆவலோடு தேடுவதை ரசித்துக் கொண்டே தன் கோட் பாக்கெட்டில் கை விட்டுக் கொண்டு ஸ்டைலாக நடந்துக் வந்துக் கொண்டு இருந்த தேஜஸ் ரசித்தான்.

இத்தோடு அவள் அங்கே வந்து நான்கு நாட்கள் ஆகி விட்டது. இப்போதெல்லாம் அவள் முகத்தில் மகிழ்ச்சி மட்டுமே இருப்பதை அவன் உணர்கிறான். அவள் காலையில் எழுந்து தயாராகி அவளுக்காக கீழே காத்து இருக்கும் அவனோடு சேர்ந்து அந்த பழங்குடியினர் வசிக்கும் கிராமத்துக்கு வந்து அவனோடு சேர்ந்து எப்படி மருந்துகள் தயாரிப்பது என்று அந்த பழங்குடியின மக்களுக்கு சொல்லித் தருவாள். அதன் பின் மூலிகை பறிக்கச் செல்கிறேன் என்றப் பெயரில் அவனோடு அந்த சிக்மகளூர் வனப் பகுதியை சுற்றுவாள். அவளின் அருகாமையை அவன் ரசித்துக் கொண்டே அந்த சுற்றுப் புறத்தைக் காட்டி அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் அவன் சலிக்காது பதில் சொல்லுவான். இந்த நான்கு நாட்களில் அவள் ஏறக்குறைய பழகி இருந்தாள்.

"என்ன தேஜஸ் இது? உனக்காக நான் எவ்ளோ நேரம் காத்துக் கொண்டு இருந்தேன் தெரியுமா?",

"வெளியே வேலை கொஞ்சம் இருந்தது ருத்ரா…",

என்றவன் அவளின் கண்களில் தனக்காக இருந்த தவிப்பையும் ரசித்தான் அவன். அந்த நான்கு நாட்களில் அவளை அவனும் அவனை அவளும் ஒருமையில் வா போ என்று அழைக்கத் தொடங்கி விட்டனர்.

"தேஜஸ் உனக்கு வயது எத்தனை?",

அன்று ஒருநாள் அவள் அந்தக் கேள்வி கேட்டப் போது அவன் பதில் தெரியாது விழித்தான். கந்தர்வர்கள் என்றும் இளமையானவர்கள், அவர்கள் மனிதர்கள் போல் அல்லாது இந்த வயது, நரை, மூப்பு என காலத்தை வென்றவர்கள் என்று அவளிடம் அவனால் சொல்ல முடியுமா?

என்று அவன் எண்ணிக் கொண்டு இருக்கும் போதே, அவளே அவனுக்கு சிரமம் வைக்காது சொல்லி விட்டாள்.

"ஒரு டிவன்ட்டி ஃப்போர் இருக்குமா?",

அவன் அதற்கு ஆமாம் என்றும் சொல்லாது இல்லை என்றும் பதில் சொல்லாது மௌனமாக சிரித்தான். அதை அவள் உண்மையாக எடுத்துக் கொண்டு தன்னைப் பாராட்டி கொண்டாள்.

"ஆருத்ரா நீ பிரில்லியன்ட்..!!",

என்று சிரித்தவள், அவனைப் பார்த்தாள்.

"தேஜஸ்….நீ ரொம்ப ஹான்ஸ்சம் தெரியுமா? நீ மட்டும் பாலிவுட் பக்கம் வந்தால் நீ தான் அங்கே நம்பர் ஒன்..",

என்று அவள் புன்னகை செய்ய, அவன் சொன்னான்.

"அது வேற உலகம்…நாம் அதிலும் குறிப்பா நான் இருப்பது வேறு உலகம் ருத்ரா…",

"ஏன் நீ என்ன வானத்தில் இருந்து குதித்த கடவுளா? இல்லை தேவனா? ஹலோ பாஸ், நாம் ரெண்டு பேரும் ஒண்ணு தான், என்ன மத்த மனிதர்களை விட வித்தியாசப்பட்டு காட்டில் வாழுறோம்….இல்லை இல்லை ரசிக்கிறோம்….",

அவனின் "ருத்ரா" அழைப்பை ரசித்தவாறு அவள் சொல்லி விட்டு அந்த மரங்கள் அடர்ந்த காட்டின் பாதையில் உற்சாகமாக ஓட, அவனோ அப்படியே நின்றான்.

"நீயும் நானும் ஒன்றா பெண்ணே? இந்த பூலோகத்தில் வாழும் தேவதை நீ….நானோ நீ கனவில் கூட நீ வர முடியாத காந்தர்வ லோகத்தை சேர்ந்தவன்….",













"என்ன தேஜஸ்….!!! பகலிலே கனவா?",

நேற்று நடந்த நினைவுகளை தன் மனதில் ஓட விட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தவன், அவள் அருகே வர அவளைப் பார்த்து சிரித்தான்.

"அப்பா….!! என்ன ஸ்மெல்…!!!"

அவன் சிரித்தப்போது அங்கே நிரம்பிய பூக்களின் வாசனையை தன் மூச்சை ஆழ இழுத்து விட்டு அவள் ரசித்தாள்.

"தேஜஸ் எனக்கு இன்னைக்கு நீ இந்த பர்பியூம் பெயரை சொல்ற! ஆமா",

என்று உத்தரவு பிறப்பித்தாள். அவனோ அவளின் புன்னகையில் மயங்கி தலையாட்டினான். அவனுக்கு இந்த உணர்வு புதிது. அவன் உலகத்தில் அவன் சொல்லித் தான் மற்றவர்கள் தலையாட்டுவார்கள், இன்றோ அவன் அடிப்பணிகிறான் அதுவும் ஒரு மானுடப் பெண்ணுக்கு. அதை எண்ணிக் கொண்டு இருந்தவன் முன் அவள் தன் கை ஆட்டினாள்.

"என்ன இது கையில்?",

அவள் கேட்க, அப்போது தான் நினைவுக்கு வந்தவனாய் தன் கையில் இருந்த பார்சலை அவளிடம் நீட்டினான்.

"நீ கேட்டுக் கொண்ட ட்ரெஸ் உட்பட உனக்கு தேவையான எல்லாமே இதில் இருக்கு…இந்தா",

என்று அவன் நீட்டிய பார்சலைப் பார்த்தவள் முகம் சிரிப்புக்கு மாறியது.

"தேஜஸ் எனக்கு ஒரு சந்தேகம்…நீ யாரையாவது காதலிக்கிறியா என்ன?",

அவள் அந்தப் பார்சலைப் பார்த்துக் கொண்டே கேட்டாள். அந்த கேள்வியில் அவன் உடல் லேசாக தூக்கிப் போட அதில் பிரதேசத்தில் உள்ள மரங்கள் எல்லாம் வேகமாக அசைந்தது.

"மழை வரப் போகுதோ?",

அவள் அந்த மரங்களின் மாற்றத்தைப் பார்த்து விட்டுக் கேட்டாள்.

"ஏன் ருத்ரா அப்படி கேட்ட?",

அவன் அவளையேப் பார்த்துக் கொண்டு கேட்டான். ஒருவேளை தன் மனதை கண்டுப் பிடித்து விட்டாளோ என்ற எண்ணம் அவனுக்கு.

"இல்லை, நீ எனக்கு வாங்கி வரும் இந்த ட்ரெஸ் எல்லாமே அவ்ளோ சூப்பரா இருக்கு…ரொம்ப ரசனையாக எடுத்து இருக்க! இத்தனைக்கும் நீ அன்மேரிட், இது போன்ற ஷாப்பிங்கில் அனுபவமும் இல்லை..அதான் அப்படி கேட்டேன்..",

அவள் சொல்ல அவன் பெருமூச்சு விட்டான்.

"நமக்கு மனதுக்கு நெருக்கமானவங்களுக்கு எடுக்கும் போது நமது ரசனைகள் தானாக நமக்குள் ஊற்று எடுக்கும்…அது போல் தான் இதுவும்…",

அவன் சொல்லி விட்டு நடக்க, அவள் அப்படியே நின்றாள்.

"அப்போ நான் இவன் மனதுக்கு நெருக்கமானவளா?",

அவள் மனம் கேட்டுக் கொள்ள, ஏனோ அப்படியே இருக்க வேண்டும் என்று அவள் மனம் விரும்பியது. மரங்களும் செடிகளும் அடர்ந்த அந்த கரும் பச்சை நிற காட்டுக்குள் எவ்வித அடையாளமும் இன்றி அவள் தொலைந்து விட விரும்பினாள். அவள் துயரம், அவள் வலிகள் அனைத்தையும் அவள் மறந்து இருந்தாள். அதை தான் தேஜஸ் விரும்பினான். ஆனால் இப்போது அவன் விரும்பியது நடந்தது மட்டும் அன்றி அத்தோடு இன்னொன்றும் நடந்து விட்டது. அது தான் ஆருத்ராவின் தேடல் நிரம்பிய பார்வைகள், அவனைக் கண்டால் அவள் கண்களில் தோன்றும் மயக்கம். நான்கு நாட்களில் ஒருத்தியின் மனதை ஒருவனால் சிறைப் பிடிக்க முடியுமா? ஆனால் இங்கே முடிந்து விட்டதே…அவளின் மனதில் அவன் மெல்ல மெல்ல குடியேறி விட்டான். குறிப்பாக அவன் மேல் வரும் அந்த பர்பியூம் வாசனையில் அவள் மயங்கி விட்டாள்.இனி அவள் அதில் இருந்து விடுபட விரும்பவில்லை.

"எங்கேப் போறோம் தேஜஸ்…?",

அவள் அவனின் பெயரை ரசனையோடு சொன்னாள்.

"ஒரு அழகான இடத்துக்கு….",

என்றவன் இன்னும் அழகாக இருப்பதாக அவள் மனம் சொன்னது. அவளையும் அறியாமல் தன் மனதை தன் கண்களின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறாள், "ஒருவேளை அவன் அதை கவனிக்க தவறி விட்டானோ! ச்சே! என்ன நம் மனது இப்படி இருக்கிறது! இந்த நொடி நான் யாரும் எதுவுமே இல்லாதவள் இவன் தான் என்னை ஆதரிக்கிறான், இவன் மீது ஆசைப்படலாமா? வரம் கொடுக்கும் சாமியிடம் போய் சாமியையே கேட்பது போல், நான் ஒரு பைத்தியம்!, இவனின் பணத்திற்கு அழகிற்கு எத்தனை ராஜ குமாரிகள் உலகத்தின் எந்த மூலைகளில் காத்துக் கொண்டு இருக்கிறார்களோ!! ஆனால் இந்த நொடி இந்த சிக்மகளூர் திங்கள் நாதரிடம் வேண்டிக் கொள்வது ஒன்றே ஒன்று தான், இவன் நல்லவன், இரக்கம் நிரம்பியவன், அடுத்தவர் துன்பம் தாங்காதவன்…திங்கள் நாதா!!! இவன் நன்றாக இருக்க வேண்டும்…என் மனம் கவர்ந்த தேஜஸ் நன்றாக இருக்க வேண்டும்…இவன் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும்…"

அவள் மனம் பிராத்தித்துக் கொண்டே அவன் பின்னே நடந்தது.

"வந்துட்டோம் ருத்ரா….!",

என்றவன் குரல் கேட்டு அவள் நிமிர்ந்தாள். அங்கே பாசி படர்ந்த பச்சை நிறப் பாறைகளுக்கு மத்தியில் அருவி கொட்டிக் கொண்டு இருக்க, அதன் அருகே சிறிய கற்கோயில் போன்று எழுப்பப்பட்டு இருந்தது. அதன் உள்ளே போர்வீரன் போன்ற ஒரு சிலை இருந்தது, அவன் கழுத்தில் காட்டுப் பூக்களால் ஒரு மாலைகள் தொங்கிக் கொண்டு இருந்தன, அங்கே ஒரு சிறிய அகல் விளக்கு எரிந்துக் கொண்டு இருந்தது. அங்கே சில பழங்குடியின பெண்கள் அந்த சிலையை வணங்கிக் கொண்டு இருந்தனர்.

"இந்தப் போர்வீரன் தான் இவங்களையும் இந்த காட்டையும் காப்பாற்றிக் கொண்டு இருப்பதாக இவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ருத்ரா, இந்த காட்டில் பரவும் சூரிய ஒளியின் மூலமாக இவர்களை அவன் காப்பதாக அவர்கள் நம்புகிறார்கள், இப்போ நாம போகப் போற இடத்துக்கு இங்கே அனுமதி கேட்டு விட்டு தான் செல்ல வேண்டும்…",

என்று சொல்லி விட்டு அவளைப் பார்த்தான். அவளோ அதைக் கும்பிட்டுக் கொண்டு இருந்தாள். அதைப் பார்த்தவன் இதழ் புன்னகை செய்தது.









"ஸ்…ஆ…!!",

அவளின் குரல் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான்.

"பாத்து ருத்ரா….!! இந்தப் பாறை வழுக்கும்…",

வழுக்கி விழ சென்றவள் கையைப் பிடித்துக் கொண்டவன், அவளோடு இணைந்து நடக்க, அங்கே இருவரின் மனதிலும் இனம் புரியாத மகிழ்ச்சி.

"என்ன தேஜஸ் இது பாறையிலும் கல்லில் நடக்க வைத்து கூட்டிப் போற? நடக்கவே முடியலை…",

"இன்னும் கொஞ்ச தூரம் தான், கையை மட்டும் விட்டுறாத ருத்ரா"

என்றவன் கைகள் அவள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு இருந்தது.

"வாவ்…. ம்ஹா….",

அப்போது தான் தன் மூச்சை நன்றாக உள்ளே இழுத்து விட்டு அந்த வாசனையை உணர்ந்தாள் ஆருத்ரா. அது அவன் மேல் வீசும் அந்த பூக்களின் வாசனை. நிமிர்ந்துப் பார்த்தாள். இப்போது அந்தப் பாறைகள் நிறைந்த பாதை மறைந்து சிவப்பு நிறப் பூக்கள் அந்த பாதையில் தூவப் பட்டிருந்தது. இருபுறமும் ஓங்கி வளர்ந்த மரங்களும் செடிகளும் நிறைந்த அந்த பாதையில் மலர் படுக்கை போல் அந்த சிவப்பு நிற பூவிதழ்கள் கொட்டிக் கிடக்க, அதில் கைப் பிடித்து அவளோடு நடந்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் தேஜஸ்சுக்கு தோன்றியது. அவளுக்கோ எதோ புது உலகத்தில் நுழைவதுப் போல் இருந்தது.

"இங்கே தான் பூ இருக்கா?",

என்றவள் கண்கள் இருந்த ஆர்வத்தை ஆசையோடு பார்த்தான் அவன்.

"ஆமாம்…இங்கே தான்…இதோ பார்!!",

என்றவன் காட்டிய இடத்தைப் பார்த்த ஆருத்ரா மெய் மறந்து நின்றாள். அங்கே வித விதமான பூக்கள் வித விதமான நிறங்களில் பூத்து குலுங்கிக் கொண்டு இருந்தன. அந்த இடம் மிக மிக அற்புதமாக அழகாக இருந்தது. பூலோக சொர்க்கம் என்னும் சொல்லுக்கு அர்த்தம் அது தான் என்பது போல் இருந்தது. அதை விட அங்கே வந்துக் கொண்டிருக்கும் நறுமணம் மிக்க காற்று மதி மயக்கியது.

"வாவ்…இந்த பூ எவ்ளோ அழகா இருக்கு பாரேன் தேஜஸ்…!!",

"இதைப் பாரேன், இது சூப்பரா இருக்குல்ல?",

என்று அவள் ஒவ்வொரு பூக்களையும் ஆராய்ச்சி செய்ய, அவன் அவளின் உற்சாகத்தை ரசித்தான். இத்தனையிலும் அவன் அவளின் கையை விடவே இல்லை. காரணம்
பூக்கள் நிரம்பிய அந்த இடம் முழுக்க முழுக்க கந்தர்வர்களால் உருவாக்கப் பட்டது. அங்கே அவர்களை தவிர வேறு யாராவது குறிப்பாக மனிதர்கள் வந்தால் அங்கே நிலவும் பூக்களின் நறுமணமே அவர்களைப் பைத்தியம் பிடித்து அலைய வைத்து விடும். அவன் அவளைப் பிடித்து இருக்கும் அந்த கைப்பிடியை விட்டு விட்டால் அவளுக்கும் அதே நிலை தான் என்பதை உணர்ந்து அவளின் கையை இறுகப் பிடித்துக் கொண்டான் அவன்.

"தேஜஸ்…எனக்கு இந்தப் பூ வேணும்..நான் இதை தலையில் வைத்துக் கொள்ளணும்…ஆனால் பாரு எனக்கு எட்டவே மாட்டுது…",

அவள் பறிக்க முயன்று தோற்றதில் அவனுக்கு புரிந்தது. எதனால் அந்த பூக்கள் அவள் கைக்கு அருகே இருந்தும் எட்டவில்லை என்று. அது கந்தர்வர்களுக்கு சொந்தமான பூக்கள் நிறைந்த வனம், கந்தர்வர்களை தவிர வேறு யாராவது அந்தச் செடிகளை தொட முயன்றால் அது அவர்களின் கைக்கு அகப்படாது. அதை உணர்ந்து அவனே பறித்து அவளுக்கு நீட்ட, அவளோ திரும்பி தன் கூந்தலைக் காட்டி வைத்து விடும்படி அவனிடம் சொல்ல, அவன் அதில் திக்கு முக்காட, மனதில் காதலுடன் அவள் தலையில் அந்த பூவை சூட்டினான்.



"இது தாழம் பூ மாதிரியே இருக்கும்னு இந்த பூவை பொய் தாழைனு சொல்லுவாங்க…",

"இது பௌர்ணமி பாரிஜாதம், இதில் பௌர்ணமி நாளில் மட்டும் ஐந்து அடுக்கு இதழ் வரும்…",

"இது சூரியப் பிரபை…சூரியன் ஒளி செடி மேல் பட்டால் மட்டுமே பூக்கும் ருத்ரா…"

"இது சந்திரப் பிரபை, நிலா வெளிச்சத்தில் மட்டுமே பூக்கும், சூரியன் வந்தால் அதன் வெளிச்சம் பட்டு வாடி விடும்..இதை திங்கள் நாதருக்கு ஒவ்வொரு திங்கள் கிழமையும் சமர்ப்பித்து வேண்டிக் கொண்டால் நாம் நினைத்தது எல்லாம் நடக்கும்…",

அவன் ஒவ்வொரு செடியையும் பூவையும் காட்டி விவரிக்க, அவனின் கைப் பிடித்து கொண்டு அவள் ஆர்வத்தோடு கேட்டாள்.

"நான் சந்திரப் பிரபையைப் பறித்து சாமிக்கு சமர்பித்து ஒரு வேண்டுதல் வைக்கப் போகிறேன் தேஜஸ்….",

அவள் சொல்ல, அவன் என்ன என்பது போல் பார்த்தான் அவளை.

"இதுப் போல் உன் கையை கடைசி வரைப் பிடித்து இருக்க வேண்டும் என்று….",

அவள் சொல்ல அவன் புன்னகைப் புரிந்தான்.

"கண்டிப்பா…நான் எப்போதும் உனக்கு பாதுகாப்பா இருப்பேன், உன்னை சந்தோஷமாக இருக்க செய்வேன் ருத்ரா…",

அவன் சொல்லியவன் கைப்பிடி இறுகியது.

"பட்…..!!! படீர்…..!!",

அப்போது அந்தப் பிரதேசத்தை இரண்டாக கிழிப்பது போல வானில் மின்னல் மின்னி, ஒரு பெரிய இடி சப்தம் தோன்றி மறைந்தில் தேஜஸ் முகம் பதட்டத்திற்கு மாறியது.

- தொடரும்
 
  • Love
Reactions: Joss uby