• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் தீ நீயே 5

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
அத்தியாயம் 5

மித்ரனின் வரவினை அங்கிருந்தவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

குறிப்பாக ஆருண்யாவிற்கு அவனின் வரவு சற்று சங்கடத்தையும், அதே சமயத்தில் கோபத்தையும் கொடுத்தது.

அவனை வறுத்தெடுப்பதற்காக காரணம் தேடிக்கொண்டிருந்தவளுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை, ப்ரியாவின் பெயரை பயன்படுத்தி அவன் தப்பித்துக்கொண்டதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவனை மனதாற திட்டி தீர்க்கவேண்டுமென்ற வெறியில் இருந்தவளது திட்டம் சிதைந்து போன கோபத்தில் என்ன பேசுகின்றோமென உணராமல்
“உங்களுக்கு தோன்றும் போதெல்லாம் மாத்துறதுக்கு இது நீங்க மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லை‌. உங்களுக்கு வேணா தேவைப்படும் போது பயன்படுத்திக்கிறதும், தேவையில்லைனா தூக்கி தூர எறியிறதும் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனா இங்க நீங்க இந்த முடிவை எடுக்கிறதுக்கு முதல்ல இந்த நிறுவனத்தோட உரிமையாளருக்கு தெரியப்படுத்தியிருக்கனும். உங்க இஷ்டத்துக்கு நீங்க நினைச்சதெல்லாம் செய்றதுக்கு இது உங்க மாமனார் வீடில்ல." என்று சம்பந்தமில்லாமல் சட்டம் பேசியவளை கேசவனோட அங்கிருந்த மற்றவர்களும் குழப்பமாக பார்க்க மித்ரனின் பாவனையிலோ எவ்வித மாற்றமும் இருக்கவில்லை‌.

கண்களில் கேலியுடன் அவளை பார்த்தவன் பின் கேசவனிடம் திரும்பி

"கேசவன் சார் உங்க ஸ்டாப்போட தொழில் பக்தி கொஞ்சம் அளவுக்கு அதிகமாகிடுச்சு போல‌. நான் சொன்ன விஷயத்தை புரிஞ்சிக்காமல் அவங்களுக்கு புரிந்த மாதிரி ஏதேதோ சொல்றாங்க. நான் சொன்னபடியே இந்த ப்ராஜெக்ட்டை சொன்ன தேதிக்குள்ள முடிச்சிடுவேன். இந்த விளம்பரத்தோட பீமேல் லீட்டாக மிசஸ் ப்ரியா ருத்ரன் நடிப்பாங்க. அதுக்கான எல்லா ஏற்பாடும் நடந்து முடிந்தாயிற்று." என்று மித்ரன் ஆருண்யாவிற்கு ஒரு குட்டு வைக்க, அவனை எதிர்த்து பேச முயன்ற ஆருண்யாவை இடைமறித்த கேசவன்

"சரி தம்பி‌. எங்களோட பட்ஜெட் தாண்டாத வரைக்கும் உங்களோட முடிவுகளை நிறுவனம் எந்தவிதத்திலும் எதிர்க்காது. ஏற்கனவே பேசியபடியே விளம்பரம் குறித்த தேதியில் முடித்து கொடுப்பீங்கனு நம்புறேன்." என்றவர் மற்றவர்களிடம் அவரவர் வேலைகளை கவனிக்கச் செல்லுமாறு உத்தரவிட்டார்.

மற்றவர்கள் அங்கிருந்து சென்ற போதிலும் ஆருண்யாவோ அங்கேயே நின்றிருந்தாள்.

தன்னை கேலி செய்தவனை எதிர்த்திட சந்தர்ப்பம் வழங்காத தந்தை மீது கோபமிருந்தாலும் இதற்கெல்லாம் காரணகர்த்தாவான மித்ரன் மீது கோபம்,வெறுப்பு என்று அனைத்தும் ஒன்றுக்கொன்று சமமான விகிதத்தில் எகிறத்தொடங்கியது.

அனைவரும் சென்றதும் கேசவன் கோபத்தில் கொதிகலனாய் கொதித்துக் கொண்டிருந்த தன் மகளை பார்த்தவருக்கு ஒரு புறம் பயமாயிருந்தாலும் மறுபுறம் மகிழ்ச்சியாயிருந்தது.

பல வருடங்களுக்கு பின் பழைய நிலையை அடைந்திருந்த தன் மகளின் இம்மாற்றத்திற்காக பல நாட்களாக ஏங்கியிருந்தவர், அவளின் கோபத்தை தணித்திடும் வழியினை அறிந்தேயிருந்தார்.

ஆனாலும் ஏதும் கூறாது மித்ரனிடம் பேசத் தொடங்கினார்.

"தம்பி என்னை மன்னிச்சிடுங்க. அந்த ஹீரோயினை நீங்க மறுத்த நேரமே நான் கேட்டிருக்கனும். அந்த நடிகர் சொன்னதை மறுக்க வழியில்லாமல் தான் நானும் அந்த பொண்ணு நடிக்கனும்னு சொன்னேன். ஒருவகையில் இந்த தாமதத்திற்கு நானும் ஒரு காரணம் தான்." என்று கேசவன் மன்னிப்பு வேண்டிட ஆருண்யா அவரை குழப்பமாக பார்த்தாள்.

"பரவாயில்ல சார். நானும் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலை. நாம பேசுனபடியே நீங்க எதிர்பார்த்த ப்ராஜெக்ட் குறித்த தேதியில் உங்க கையில் இருக்கும்." என்றவனது பார்வை ஆருண்யாவினை தொட்டு மீளவும் தவறவில்லை.

அப்போது கேசவனின் உதவியாளர் அவரை அழைக்க கேசவன் அங்கிருந்து செல்ல மித்ரனும் ஆருண்யாவும் தனித்துவிடப்பட்டனர்.
கேசவன் அங்கிருந்து சென்றதை உறுதிபடுத்திக்கொண்ட மித்ரன் அங்கிருந்த நாற்காலியில் சாய்வாய் அமர்ந்தவன், இடக்கையால் பின்னந்தலையை தடவிக்கொடுத்தான்.

அவனது செயல்கள் ஒவ்வொன்றையும் ஆருண்யா கவனிக்கிறாளென்று உணர்ந்தே மித்ரன் தன் நடவடிக்கைகளில் சற்று அலட்சியத்தை காண்பிக்க, பார்த்திருந்தவள் காதில் புகை வராத குறைதான்.
இங்கேயே இருந்தால் நிச்சயம் தன்னிடம் வம்புவளர்ப்பானென்று உணர்ந்தவள், அங்கிருந்து வெளியேற முயல அவனை தடுத்தது மித்ரனின் குரல்.

"என்ன மிஸ். ஆருண்யா எதுவுமே சொல்லாமல் போறீங்க?" என்று கேட்க அவனை திரும்பி உஷ்ணம் பார்வை பார்த்தாள் ஆருண்யா.

அவளின் பார்வையின் உஷ்ணத்தை உணர்ந்தவனுக்கு உள்ளுக்குள் சற்று பதட்டமாக இருந்தபோதிலும், வெளியே உல்லாசமாக அதனை அனுபவிப்பது போல் பாவனை செய்து அவளை மேலும் கடுப்பேற்றினான்.

"கண்ண கண்ண உருட்டி உருட்டி என்ன மிரட்டுறா நான் என்ன சிறு பிள்ளையா?" என்று திடீரென மித்ரன் பாட சட்டென சிரித்துவிட்டாள் ஆருண்யா.

யார் அங்கு நின்றிருந்தாலும் நிச்சயம் மித்ரனின் பாடும் திறனையும் பாடிய அழகினையும் பார்த்து சிரித்திருப்பார்கள்.

மித்ரனுக்கும் இசைக்கும் பிறப்பிலிருந்தே பத்துக்கு பதினொரு பொருத்தமும் ஏழாம் பொருத்தமாய் அமைந்திருக்க இசைவாணி அவனுக்கு இசையை வசையாக்கி கேட்பவர்களை தெறித்து ஓடச்செய்திடும், அரிய வரத்தினை அளித்திருந்தாள்.

அதன் விளைவாக அவன் பாடலை கேட்பவர்கள் அவ்விடத்தில் இரண்டு விநாடிகளுக்கு அதிகமாக நிற்கமுடியாமல் தெறித்து ஓடிவிடுவர்.

பேசும் போது கம்பீரமாக ஒலிக்கும் அவனது குரல், பாடும் போது பழைய இரும்பு கதவு தரையோடு உராயும் போது உண்டாக்கும் ஒலியை போல் காது சவ்வுகளை கண்ணீர் விடச்செய்யும் நாராசார தொனியாக மாறிவிடும்.

அதுவும் அவன் பாடும் போது தமிழ் வார்த்தைகளை ஆங்கில தொனியில் பாடுவது இருதய நோயாளர்களை தாமதமின்றி அவசரபிரிவில் அதிஅவசரமாய் அனுமதித்திடும் நிலைக்கு உந்தி விடும்.
தன்னால் சுற்றியுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்திடக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் மித்ரன் தன் பாடும் முயற்சிக்கு பலவருடங்களுக்கு முன்னேயே பிரியாவிடை நடாத்தியிருந்தான்.

பிரியாவிடை கொடுத்திருந்த தன் இசைத்திறமையை இன்று ஆருண்யாவை தடுப்பதற்காக திறப்பு விழா நடாத்தி கச்சேரியை ஆரம்பித்து வைத்தான்.

அவனின் ஒருவரி பாடலிலேயே தன் கோபத்தை மறந்து சிரித்தவளை சீண்டுவதற்காக

"பேசி பேசி வார்த்தையால என்னை தாக்குற நீ என்ன கிளிப்பிள்ளை யா?" என்று மீண்டும் பாடியவனை தடுத்திடும் முயற்சியில் இறங்கினாள் ஆருண்யா.

"உங்களுக்கு இப்போ என்ன வேணும்?" என்று கேட்டவளை மீண்டும் சீண்டும் பார்வை பார்த்த மித்ரனை கொன்றுவிடும் வெறியே வந்தது ஆருண்யாவிற்கு.

அவள் நிலை புரிந்ததோ என்னவோ தன் பார்வையை மாற்றாது அவளது கேள்விகளுக்கு பதிலளிக்க தயாரானான்.

"உன் கேள்விகளுக்கான பதிலை கேட்காமலே போறியே ஸ்வீட் ஹார்ட்..." என்றவனை உக்ரமாக முறைத்த ஆருண்யா

"ஹவ் டேர் யூ?" என்றவளிடம்

"ஐ லவ் டேர்ஸ்..." என்று கூலாக பதில் கூறியவன் எதிரிலிருந்தவளை வாயடைக்கச் செய்ததாய் நினைத்திருக்க அவளோ

"அப்போ போய் நீ ஒருத்திய சாரி சாரி நாலு பேரை சுத்தி வந்தியே அவங்க கூட விளையாடு." என்றுவிட்டு அவள் வெளியேற முயல அவள் கைபற்றி தடுத்தான் மித்ரன்.

தன் மீது படிந்த அவனது கரத்தை சட்டென உதறியவள்

"ஹவ் டேர்..." என்று ஆருண்யா ஆரம்பிக்க அவளை இடைமறித்த மித்ரன்

"ஓகே ஓகே கூல். தப்பு தான்... நீ என்னோட ஸ்வீட் ஹார்ட்டாக இருந்தாலும் உன்னோட பர்மிஷன் இல்லாமல் உன்னோட கையை பிடிச்சிருக்க கூடாது. ஆனா நீ இன்னும் உன்னோட கேள்விகளுக்கான பதிலை தெரிஞ்சிக்கல." என்ற கூற அவனை முறைப்பதை மட்டும் ஆருண்யா நிறுத்தவில்லை.

மித்ரனும் அதை கண்டுகொண்டதாய் தெரியவில்லை.
அவனின் பேச்சினை கத்தரிப்பது போல்

"எனக்கு தெரிஞ்சிக்க இன்ட்ரஸ்ட் இல்லை. ஏதாவது உருப்படியான வேலையிருந்தா போய் பாருங்க." என்றுவிட்டு நகரமுயன்றவளை தடுத்தான் மித்ரன்.

"நீ தெரிஞ்சிக்க விரும்பலைனாலும் சொல்லவேண்டிய கடமை எனக்கு இருக்கு." என்றவனின் பேச்சை கேட்ட அவள் அங்கு இல்லை.

தூரத்தில் அவள் நடந்து செல்வது தெரிய தன் இருக்கையில் அமர்ந்தபடியே மொபைலை எடுத்தான் மித்ரன்.

தன் அண்ணன் ருத்ரனுக்கு அழைத்தவன்

"டேய் அண்ணா அண்ணிகிட்ட பேசிட்டியா?" என்று கேட்க

"அதெல்லாம் பேசிட்டேன். அவ ஓகே சொல்லிட்டா. ஆமா என்ன திடீர்னு?" என்று கேட்க நடந்ததை சுருக்கமாக விளக்கினான் மித்ரன்.

"ஆமா ஆரு எப்படி இருக்கா? உன்கிட்ட பேசுனாளா?" என்று ருத்ரன் கேட்க

"இந்த அருண் பய சொன்னதை நம்பி அச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு இது நாலும் கலந்த ஆருவை எதிர்பார்த்து வந்தது தப்பா போச்சு." என்று மித்ரன் கூற

"என்னடா ஆச்சு?" என்று ருத்ரன் வருத்தத்துடன் கேட்க

"அவ அதே சொர்ணாக்கா பாதி, சவுண்டு சரோஜா மீதி கலந்து செய்த அதே பழைய ஆருவா தான் இப்போவும் இருக்கா. யம்மாடி என்னமா கோவம் வருது அவளுக்கு..." என்று கூற மறுபுறம் சிரித்தான் ருத்ரன்.

"இப்போ நீ என்கிட்ட சொன்னதை அவ கேட்டிருந்தா தெரியும் அவ யாருனு..." என்று ருத்ரன் கூற மித்ரனோ

"அந்த லைவ் ஷோவை நானும் பார்க்க தான் ஆவலோட வெயிட்டிங். ஆனா...." என்றவன் மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு அழைப்பை அணைத்தான்.

பின் அங்கிருந்து வெளியேறியவன் கேசவனை சந்தித்துவிட்டு தன் அலுவலகம் நோக்கி சென்றான்.

தன்னறைக்கு வந்த ஆருண்யாவிற்கு வேலைகள் குவிந்து கிடந்த போதிலும் எதிலும் கவனம் செலுத்தமுடியவில்லை.

பலநாட்களுக்கு பிறகு அவனுடன் வம்பு வளர்த்தது ஏனோ மனதிற்கு ஒருவகை நிம்மதியை கொடுத்தது. பல நாட்கள் கூட்டினுள் அடைந்து கிடந்த பட்சிக்கு கிடைத்த விடுதலை போன்ற இன்பத்தை உணர்ந்தது, அவள் மனது‌. அதற்கு காரணம் அவளது சுயத்தை இழந்திட காரணமானவனே.

யாரால் அவள் சுயத்தை துறந்தாளோ! அவனின் முன்னேயே அவளின் சுயம் மீண்டதை அப்போது தான் உணர்ந்தாள் ஆருண்யா.

அதை அவள் உணர்ந்தபோது அவளுக்கு தன்மீதே கோபம் வந்தது.

யாரை வேண்டாமென்று இத்தனை வருடங்களாய் வெறுக்கிறாளோ? அவனால் அவளின் மறந்திருந்த இயல்புகள் மீட்கப்பட்டிருப்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவளின் அந்த அழகிய நாட்களை வரட்சியாக்கி அதன் மூலம் தீராவடுக்களை ஏற்படுத்திய மித்ரனை அவளால் என்றுமே மறந்திட முடியாது.

அவளின் உணர்வுகளை உதாசீனப்படுத்தி கேலிப்பொருளாக்கிய அவனது அலட்சிய நடத்தையை, அவளால் அத்தனை சுலபத்தில் மன்னித்திட முடியாது. வெறுப்பும், வேதனையும் மட்டுமே மண்டியிருப்பதாய் அவள் எண்ணியிருந்த அவர்களின் உறவில் கிண்டலும் சீண்டலும் உள்ளதென்பதை உணர மறந்திருந்தாள் மித்ரா.
பல எண்ணங்களின் பிடியில் மூழ்கியிருந்தவளை வேலை அழைக்க தன் மனதை திசை திருப்புவதற்காக அதனை கவனிக்கத்தொடங்கினாள்.

தன் அலுவலகத்திற்கு வந்த மித்ரன், நாளை ஷீட்டிங்கான வேலைகளை கவனிக்கத்தொடங்கினான்.

எடிட்டிங்க வேலைகள் ஓரளவு முடிந்திருக்க நாளைய சூட்டிற்கான பரிவர்த்தனையை பற்றி தன் அசிஸ்டன்டோடு கலந்துரையாடியபடியிருந்தபோது ஒரு ஊழியர் வந்து ப்ரியா வந்திருப்பதை தெரிவித்துவிட்டு சென்றார்.

அசிஸ்டன்டிடம் கலந்துரையாடி விட்டு ப்ரியாவை பார்க்க சென்றான் மித்ரன்.

திடீரென மித்ரன் இது பற்றி தெரிவித்திருந்ததால் ப்ரியாவிற்கு சற்று தயக்கமாகவே இருந்தது.

ஏற்கனவே தன் மாமனாரின் தயாரிப்பில் புதுப்படமொன்றிற்கு ஒப்பந்தமாகியிருந்தபோதிலும் ஏனோ சில நாட்களாய் ஓய்விலிருந்ததால் அவளிடம் ஒரு தயக்கம் இருந்தது.

இந்த தயக்கத்தை தகர்க்கவே அவளது புகுந்த வீடு வேலை பார்த்துக்கொண்டிருந்தது.

இந்த ப்ராஜெக்ட்டை ஒப்புக்கொண்டபோது மித்ரன் ப்ரியாவை இதில் நடிக்க வைக்கவே எண்ணியிருந்தான்.

ஆனால் கேசவனின் விருப்பத்திற்கிணங்க லிஷா உள்ளே வந்தாகிற்று.

ஆனால் அவள் இப்போது வெளியேற்றப்பட்ட நிலையில் அவனின் விருப்பப்படி ப்ரியாவையே பெண் கதாபாத்திரத்திற்கு அரங்கேற்றிட முடிவு செய்து, ருத்ரன் மூலம் அதனை நடைமுறை படித்தியிருந்தான்.

தன் அண்ணியை வரவேற்ற மித்ரன்
"அண்ணி ஸ்க்ரிப்ட பார்க்கிறீங்களா?" என்று நேரடியாகவே கேட்க ப்ரியாவோ சற்று தயக்கத்துடன்

"மித்து நான்...." என்றவளை இடைமறித்து மித்ரன்

"அண்ணி உங்க தயக்கம் எனக்கு புரியிது. இதுல தயக்கப்பட எதுவுமில்லை. உங்க பட ஷூட்டிங் இன்னும் கொஞ்ச நாளில் ஆரம்பிக்க போது அதுக்கு ஒரு வாமப் செஷனாக இதை நினைச்சிக்கோங்க. அதோடு படத்துக்கான ப்ரோமோஷன் மாதிரியும் இருக்கும்." என்று அவன் சாதாரணமாக கூற ப்ரியாவிற்கு இன்னும் தயக்கம் இருந்தது.

"அண்ணி உங்களை நம்பி உங்க கொழுந்தன் வாக்கு கொடுத்திட்டேன். என் அண்ணி நடிப்பு புலி, மேட்சிங் க்யூன்னு இஷ்டத்துக்கு டயலாக்கை எடுத்து விட்டுருக்கேன். உங்க கொழுந்தனை அந்த டேன்ஜர் லைட்கிட்ட இருந்து காப்பாத்த முடியாதுனு சொல்லிடாதீங்க அண்ணி." என்று கூற பாவமாக கூறியவனை சுவாரஸ்யமாக பார்த்தாள் ப்ரியா.

"யாரு மித்து அது என் கொழுந்தனையே கதறவைக்கிற அந்த டேன்ஜர் லைட்?" என்று கேலியாக கேட்க மித்ரனோ

"நாளைக்கு பார்ப்பீங்க அண்ணி." என்றவனை யோசனையோடு பார்த்தாள் ப்ரியா.

அப்போது ருத்ரனும் அங்கு வர அவனை ப்ரியாவும் மித்ரனும் வரவேற்றனர்.

அப்போது மித்ரன்
"நீங்க பேசிட்டு இருங்க. நான் இதோ வரேன்." என்றுவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

அவன் சென்றதும் ப்ரியா ருத்ரனிடம்
"திரா நான் இதை செய்றது சரியா வருமா?" என்று கேட்டவளை ஆச்சரியமாக பார்த்தான் ருத்ரன்.

"ரியா நீ இப்படி கேட்குற? உனக்கு தெரியாததா?" என்று அவளை சகஜமாக்க முயல அவளோ

"ஏதோ கொஞ்சம் தயக்கமாக இருக்கு திரா." என்றவளை தோளோடு அணைத்து கொண்டவன்

"ஹேய் பொண்டாட்டி... குடும்பம் வேறு,தொழில் வேற. நம்ம வீட்டுல எல்லாருக்குமே இதை சரியாக பிரிச்சிப்பார்க்க தெரியும். நீயும் மித்துவும் இதுக்கு முன்னமே ஒன்னா சேர்ந்து வேலை செய்திருக்கீங்க. பிறகு என்ன?" என்று கேட்க அவளுக்கும் அவனின் கேள்வி சரியாக பட்டது.

"அப்போ நான் இதை செய்யலாம்னு சொல்றீங்களா?" என்று சிறு குழந்தைபோல் கேட்டவளை பார்த்து புன்னகைத்தவன்

"என் பொஞ்சாதியை நேருல பார்த்து போரடிச்சுப்போச்சு. அதனால கொஞ்ச நாளைக்கு ஸ்க்ரீன்ல பார்க்கனும்னு இந்த ஹஸ்பண்ட் ஆசைப்படுறாரு. நீ என்ன சொல்லுற ரியா?" என்று கேலியாய் கேட்டவனை செல்லமாய் முறைத்தாள் ப்ரியா.

ருத்ரனின் கிண்டலான பதிலே அவளது தயக்கத்தை முற்றிலுமாக தகர்த்தெறிய தன் கணவனை இறுக அணைத்துக்கொண்டாள் ப்ரியா.

அப்போது மித்ரன் உள்ளே வரும் அரவம் கேட்டு இருவரும் விலகி அமர்ந்தனர்.

உள்ளே வந்த மித்ரன்
"என்னடா அண்ணா ஆல் டன்னா ?" என்று கேட்க ருத்ரனும்

"எல்லாம் டன் நீ மத்த விஷயங்களை பற்றி உன் அண்ணி கூட டிஸ்கஸ் பண்ணு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் கிளம்புறேன்." என்றவன் இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

ருத்ரன் கிளம்பியதும் ப்ரியாவும் மித்ரனும் ஆட்ஷூட் தொடர்பாக கலந்துரையாடினர்.
ஆண் நடிகரின் ரெக் கோர்டிங்கை பார்த்தவள், தன்னுடைய பகுதி பற்றி மித்ரனோடு கலந்துரையாடினாள்.

ஏற்கனவே மித்ரனோடு வேலை பார்த்த அனுபவமிருந்ததால் அவனின் எதிர்பார்ப்புகள் பற்றி ப்ரியா அறிந்து வைத்திருந்தாள்.

தன்னுடைய உடை மற்றும் மேக்கப் பற்றி கலந்துரையாடியவள், அனைத்தையும் தெளிவு படுத்திய பிறகே அங்கிருந்து கிளம்பினாள்.

இங்கோ தான் வெளியேற்றப்பட்ட செய்தி கேட்டு லிஷா உச்சகட்ட கடுப்பில் இருந்தாள்.

சற்றுநேரத்திற்கு முன்பு தான் அவள் வெளியேற்றப்பட்ட செய்தி அவளுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
கிடைத்த வாய்ப்பு பறிபோனதே என்ற கவலை ஒருபுறம் , அத்தனை பேர் முன்னிலையில் தனக்கு நேர்ந்த அவமானம் மறுபுறமென்று எண்ணியவளுக்கு மித்ரன் மற்றும் ஆருண்யா மீது மொத்த கோபமும் திரும்பியது.

அவர்கள் மீது எழுந்த கோபத்தை வீட்டிலிருந்த பொருட்களை உடைத்து தீர்த்துக்கொள்ள முயன்றாள் லிஷா‌.

அப்போது உள்ளே வந்த பரத்
"ஹேய் லிஷா என்ன பண்ணிட்டு இருக்க? ஸ்டாப் திஸ் நான்ஸன்ஸ்." என்று கூற அவன் கூறுவதை கேட்கும் நிலையில் அவளில்லை.

இன்று மித்ராவிலிருந்து கடைநிலை பணியாளர்கள் வரை அவளை அவமானப்படுத்தியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கோபத்துடன் பூச்சாடியை எடுத்து உடைக்க முயன்றவளை கைபிடித்து தடுத்தான் பரத்.

"லிஷா இப்படி பண்ணா உன் கோபமும் தீராது. உன்னை அசிங்கப்படுத்துனவங்களுக்கும் தண்டனை கிடைக்காது." என்று கூற விருட்டென அவனை திரும்பி பார்த்தாள் லிஷா‌.

அவளின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவன்
"எனக்கு தெரியும்." என்று கூற அவன் பிடியை உதறிவள் அங்கிருந்த இருக்கையில் சோர்வுடன் அமர்ந்தாள்.

அவளை பின்தொடர்ந்து அவளருகே சென்று அமர்ந்த பரத்
"இட்ஸ் ஓகே லீவ் இட் லிஷா‌." என்று கூற அவளோ

"நோ.. அந்த ஆருண்யாவும் மித்ரனும் என்னை அத்தனை பேர் முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டாங்க. இதுக்கு அவங்க பதில் சொல்ல வரைக்கும் அவங்களை நான் விடப்போறதில்லை." என்று கூறினான்.

அதற்கு பரத்தும்
"சரி அதற்கான வேலையை பாரு‌. நானும் ஹெல்ப் பண்ணுறேன்." என்று கூற

"நிஜமாகவா?" என்று மகிழ்ச்சியுடன் கேட்வளை தோளோடு அணைத்துக்கொண்டவன்

"உனக்கொரு அவமானம்னா அது எனக்கும் அவமானம் தான். உனக்கு எதிரினா அவங்க எனக்கும் எதிரி தான்." என்று கூறியவன் கண்களிலிருந்த உறுதி அருகிலிருந்தவளது கோபத்தை சற்றே சாந்தப்படுத்தியிருந்தது.

அதன் வெளிப்பாடாக பரத்தை அணைத்த லிஷா அவன் மார்பில் சாய்ந்தபடியே அவர்களை எவ்வாறு தண்டிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்து விட்டாள்.
தொடரும்...​

எழுத்தாளர் : அணு சந்திரன்