• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் -05

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
855
378
93
Tirupur

அத்தியாயம் - 5



5
மீனாட்சிபுரம்:
உயிர், உணர்வு, அன்பு, பாசம், சொந்தம், பந்தம் என அனைத்தையும் விட ஜாதியும், அதனால் உண்டாகும் கௌரவமும் தான் முக்கியம் என்ற சாதி வெறியர்கள் வாழும் ஊர் அது.

பாண்டியன், முகுந்தன், கேசவன் மூவரும் நண்பர்கள், ஒன்றாகப் படித்தவர்கள், அதே ஊரும் கூட. இதில் முகுந்தன் மட்டும் வேறு இனத்தைச் சேர்ந்தவர். ஆனால், அதைச் சற்றும் மற்ற இருவரும் அவரிடம் காட்டியதில்லை.

முகுந்தன் பிறந்ததுமே அவரது தாய் இறந்துவிட, அடுத்த மூன்று மாதத்தில் அவருக்குச் சித்தியாக ஒருவர் வர, மகனின் வாழ்க்கையை முன் வைத்து முகுந்தனை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர், அவரின் தாத்தாவும் பாட்டியும். முகுந்தனின் பள்ளிபடிப்பு வரை இருந்தவர்கள், அடுத்த இரண்டு மாதத்திலேயே ஒருவருக்குப் பின் ஒருவர் என்று இவ்வுலக வாழ்வை விட்டுச் சென்று விட, வேறுவழி இல்லாமல் மீண்டும் தந்தையிடம் வந்து சேர்ந்தார், முகுந்தன்.

கல்லூரிப் படிப்பு வரை அனைத்தும் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது. அவர் படிப்பை முடித்த பிறகு, வேலையென்று எதற்கும் போகாமல் தீவிரமாக அரசு வேலைக்கு முயன்று கொண்டிருக்க,

இது தெரியாமல் அவர் சித்தியானவர் வெட்டியாக இருப்பதாகக் கரித்துக் கொட்ட, வீட்டில் இருக்கும் நேரங்களைக் குறைத்து, கேசவனின் வீட்டில் அதிகம் இருக்க ஆரம்பித்தார்.

அப்போது கேசவனின் தங்கை ரம்யாவை பார்க்க, அவர் வீட்டுக்கு வந்து சென்ற பவித்ராவின் மீது, முகுந்தனின் பார்வை விழ ஆரம்பித்தது. முதலில் காதல் என்று எல்லாம் அதற்கு பெயர் வைத்துக் கொள்ளவில்லை அவர். ஒரு ஈர்ப்பு அவ்வளவுதான் அதற்குப் பெயர். காதல் தவறு என்று அவருக்கும் புரிந்து தான் இருந்தது. கேசவனுக்கோ, பாண்டியனுக்கோ நண்பனின் பார்வைகளும் எண்ணங்களும் தெரியவில்லை.

இருவருக்கும் குடும்பத் தொழில் விவசாயம் வேறு இருந்ததால், படிக்கும் நேரம் தவிர, அவர்கள் வயக்காட்டில் இறங்கி வேலையையும் பார்க்க வேண்டியிருந்தது. இதில் முகுந்தனை முற்றிலும் கவனிக்கத் தவறியிருந்தனர்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. தோழிகள் இருவரும் கருப்பராயன் கோவில் சென்று விட்டு, மாந்தோப்பின் ஊடாக நடந்து வர, அப்போது அரவம் காட்டாத, சர்ப்பம் ஒன்று பவியை தீண்டி விட்டு, சரசரவென ஊர்ந்திருந்தது. சட்டென்று நடந்த இந்த விபத்தில் உடன் வந்த ரம்யாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

‘யாரச்சும் வாங்களேன்’ என்ற ரம்யாவின் அலறலில், அவர்களே அறியாமல் அவர்கள் பின்னே சுத்திக் கொண்டிருந்த முகுந்தன், ரம்யாவின் சத்தத்தில் ஓடி வந்தார். வந்தவர் உடனே நிலமையை ஊகித்து, பாம்பு தீண்டிய இடத்திற்கு சற்று மேலாக ஒரு துணியைக் கிழித்துக் கட்டிவிட்டு, மரத்தில் இருந்து ஒரு கிளையை ஒடித்து, அதைச் சற்றேக் கூர்மையாக்கி, அந்த இடத்தை சட்டென்று கீறித் தன் வாய் வைத்து உறிய ஆரம்பித்தார்.

அவரது செய்கையை விழியகலப் பார்த்துக் கொண்டிருந்தது, ரம்யாதான். அவருக்குத்தான் முதன் முதலில் முகுந்தனின் மேல் சந்தேகம் வந்தது.

காரணம் பவித்ராவை அந்த நிலையில் பார்த்த பிறகு, அவர் முகத்தில் தோன்றிய பரிதவிப்பும், அவளுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாதே என்ற பயமும் தான் அதற்குக் காரணம்.

'இது சரியில்லையே. இதை வளர விடக் கூடாதே.' என மூளை உறைக்க, கை, கால்கள் எல்லாம் உதற ஆரம்பித்தது.

முதலில் இங்கிருந்து போக வேண்டும். யாரேனும் பார்த்தால் பிரச்சனை வேறு மாதிரி ஆகவும் வாய்ப்பிருக்கிறது என்று மூளை அவரை உசுப்புவது புரிய, தன் பயத்தையும், படபடப்பையும் ஓரங்கட்டி,

“அண்ணா உடனே இங்கிருந்து போகலாம், இவ வீட்டுக்கு சொல்லனும். அசம்பாவிதம் எதுவும் நடக்குறதுகுள்ள கிளம்பலாம். விசம் தலைக்கு ஏறப் போகுது..” எனப் பயத்துடன் கூடிய ஒரு முடிவுடன் சொல்லிவிட்டாள்.

முகுந்தனுக்கும் அந்த பயம் ஏற்கனவே வந்து இருந்தது. ஏனென்றால் பவித்ரா மயக்கத்திறகுச் சென்றிருந்தார். கடித்த இடத்திற்கு கீழே உள்ள பகுதி நீல நிறமாகிக் கொண்டிருந்தது. அதனால் சற்றும் யோசிக்காமல், பவித்ராவைத் தூக்கித் தன் மேல் போட்டுக் கொண்டவர், வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

வேண்டாமென்றும் சொல்ல முடிய வில்லை, வேறுவழியும் இருக்கவில்லை. முகுந்தனைத் தடுக்க முடியாமல், ரம்யாவும் அவருக்குப் பின்னே ஓடினார். அடுத்து அந்த ஊரில் இருந்த வைத்தியரிடம் அழைத்துச் செல்ல, அவர் விசத்தை உறிஞ்சி விட்டுத் தேவையான அளவிற்கு முதலுதவியும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார்.

அன்றிரவு யாருக்கும் உறக்கமில்லை. பவித்ராவை அந்த இரவு உறங்க விடக்கூடாது என்று வைத்தியர் சொல்லியிருக்க, அறிந்தவர், தெரிந்தவர் என அனைவரும் அவளுக்கருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, தன் வீட்டு வெளித் திண்ணையில் படுத்திருந்த முகுந்தனுக்கு இருப்பே கொள்ளவில்லை.

பவித்ராவிற்கு ஏற்பட்ட இந்த விபத்தில் அவருக்கு ஏதேனும் ஆகியிருந்தால், நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை முகுந்தனால். அந்த நொடி பவித்ராவின் மீது தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, காதல் தான் என்ற முடிவுக்கு முடிவாக வந்துவிட்டார். ஆனால் இது கை கூடும் என்றெல்லாம் யோசிக்கவில்லை.

அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்த பிறகு, அந்தக் காதலைக் காப்பாற்றிக் கொள்ளக் கூட அவர் முயற்சிக்கவில்லை.

அதோடு பவித்ராவின் மனதில் இப்படியான எண்ணங்கள் துளியும் இருக்காது என்று தெரியும், அவரை வளர்த்த விதம், மற்றும் சூழ்நிலை கட்டுப்பாடுகள் என எழுதப்படாத விதிகள், இங்குள்ள பெண்களைப் பிணைத்திருந்தது. அப்படியிருக்க வீணாக ஒரு பெண்ணைத் தொல்லை செய்ய வேண்டாம், தன்னுள் முகிழ்த்த காதல் தன்னோடே போகட்டும், மேலும் இங்கிருந்தால் அவளைப் பார்க்கத் துடிக்கும் விழிகளையும், காதல் கொண்ட மனதையும் கட்டுப்படுத்த முடியாது என்பதால், ஒரு முடிவுடன் அன்றைய விடியலுக்கு முன்னமே தன் நண்பர்களுக்குக் கூடச் சொல்லாமல் அந்த ஊரை விட்டுச் சென்றிருந்தார்.

இது எதையும் அறியவில்லை, அரை மயக்கத்தில் இருந்த பவித்ரா. அவர் மிகவும் சோர்ந்து போயிருந்தார், அதோடு இறந்து விடுவோம் என்ற பயம் மனதை ஒருவழி செய்திருக்க, அதிலிருந்து வெளிவர முடியாமல் மயக்கத்திலே பொழுதைக் கழித்தார்.

அடுத்த நாள் விடியலில் முகுந்தனுக்கு நன்றி சொல்லலாம் என்று நண்பர்கள் இருவரும் தேட, அவர் ஊரில் இல்லை என்ற விபரம் தெரிய, ஏன் சொல்லாமல் போனான் எனக் குழம்பிப் போனார்கள்.

ஆனால் ரம்யாவிற்கு ஓரளவிற்கு விசயம் புரிபட, தன் அண்ணன் கேசவனிடம் நடந்ததைக் கூறி விட்டாள்.

கேசவனுக்கு முகுந்தனின் மேல் கோபமெல்லாம் வரவில்லை. ஒருவகையான பரிதாபமும், நன்றியும் தான் சுரந்தது. மூவரின் நட்பிற்கு மரியாதை கொடுத்தே, தன் காதலை நண்பன் விட்டு விட்டதாக நினைத்தார். அதனால் நண்பன் மேல் மதிப்பு கூடியது, சேற்றில் முளைத்த செந்தாமரையாகவே அவரை நினைத்தார்.

இதுபற்றி வெளியே சொன்னால் தேவையில்லாமல் அவனுக்குப் பிரச்சனை ஆகும் என்பதால், தங்கையிடம் யாரிடமும் இந்த விசயத்தைப் பற்றி மூச்சு விடக்கூடாது என்று விட்டார்.

ஆனால் விஷயம் அத்தோடு முடிய வில்லை. முகுந்தன் முடித்து விடலாம் என்றிருக்க, பவித்ரா ஆரம்பித்திருந்தார். அன்றைய சம்பவத்திற்குப் பிறகு எப்போதும் தனிமையிலேயே இருந்தார். வீட்டில் யாரிடமும் பேசுவதில்லை. கலகலப்பு குறைந்திருந்தது. பாம்பு தீண்டிய அந்த தோப்பின் பக்கம் அதிகம் தனியாக சுற்ற ஆரம்பிக்க,

ரம்யாவிற்கு தோழியின் மேல் சந்தேகம் எழ, அதை உறுதி செய்யும் பொருட்டு, ஒரு வெள்ளிக்கிழமை வழக்கம் போல இருவரும் அய்யனார் கோவிலுக்குக் கிளம்பியிருந்தனர்.

சாமி தரிசனம் முடிந்து படிக்கட்டுகளில் இறங்கியவரை “பவி கொஞ்சம் உக்காந்துட்டு போகலாம்..” என ரம்யா கைப்பிடித்து அமர வைக்க, சரியெனத் தலையசைத்து விட்டு, அமர்ந்து கொண்டார். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.

தோழியின் துறுதுறுப்பு முற்றிலும் காணாமல் போனதை வருத்தத்துடன் பார்த்தவர், “ஏன் பவி..? உனக்கு நீ செய்றது தப்புன்னு தோனலையா..? நாமெல்லாம் உயர் சாதில பிறந்ததே போன ஜென்மத்துல செய்த பாவத்துக்கான தண்டனை தான். இது நடக்கும்னு உனக்கு நம்ப முடியுதா.? உன்னையும் கொன்னுட்டு, அந்த அண்ணனையும் கொன்னு கம்மாயில வீசிடுவாங்க பவி..” என்ற ரம்யாவின் குரலில், வருத்தமும் அழுகையும் அப்பட்டமாகத் தெரிந்தது.

பதிலுக்கு பவித்ரா ஒன்றும் சொல்ல வில்லை, ரம்யாவின் மடியில் படுத்துக் கொண்டார். அவரது விழிகளில் இருந்து நீர் அருவியாய் கொட்டியதை, தன் உடை நனைவதை வைத்தே உணர்ந்து கொண்டார்.

முகம் இயலாமையில் வெதும்பியது, பின் ஒரு முடிவோடு “பவி.. பவி.. உனக்கு என்னால என்ன உதவி செய்ய முடியுமோ செய்றேன், ஆனா... அந்த அண்ணனை மறந்துடு. அது தான் உனக்கும் அவருக்கும் நல்லது. புரிஞ்சிக்கோ பவி.” என்றதும்,

“என்னால முடியும்னு தெரியல ரமி, முடியும்னு தெரியவே இல்ல. முதன் முதலா என்னைத் தொட்டுத் தூக்கின ஒரு ஆம்பள. நல்லதுக்கோ கெட்டதுக்கோ என் மனசு முழுக்க அவர்தான் இருக்கார். எப்படி அவர் என் மனசுல வந்தாருன்னு தெரியல, அவருக்கும் என் மேல விருப்பம் இருக்குன்னு, அன்னைக்கு அவர் துடிச்ச துடிப்பிலேயே புரிஞ்சது. ஆனா இதெல்லாம் நடக்காதுன்னு எனக்குத் தெரியும் பவி, தெரியும். என் புத்திக்குப் புரியுது, ஆனா இந்த பாழாப் போன மனசுக்குப் புரியல.. என்ன செய்ய..” எனக் குலுங்கிய தோழியை என்ன சொல்லித் தேற்ற என்றே தெரியவில்லை.

பின் ஒரு முடிவோடு “பவி.. எனக்கு என்ன சொல்லன்னு தெரியல, ஆனா.. உன்னோட ஆசை கண்டிப்பா நடக்காதுன்னு மட்டும் தெரியுது. உன்னைக் கூட அவங்க பொண்ணுன்னு நினைச்சு, நம்ம இனத்துலையே எங்கயோ தூர தேசத்துல கட்டிக் கொடுத்துடுவாங்க.

ஆனா... அந்த அண்ணனை உயிரோட எரிச்சிட்டு, அவர் சாம்பலைக் கூட நம்ம கண்ணுக்குக் காட்ட மாட்டாங்க. அது தான் உனக்கு வேணுமா..? அவரும் உன்னை விரும்பினார். அது உனக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். அவர் துடிச்ச துடிப்பைப் பார்த்தாலே தெரியும். அப்படி உயிரா விரும்பினவர் உன்னை விட்டுக் கொடுத்து போயி இருக்காருன்னா, அது உனக்காக மட்டும் தான் பவி.

நம்ம இனத்துல பொண்ணோ, பையனோ வேற சாதிப் புள்ளைங்க பின்னாடி போறாங்கன்னு தெரிஞ்சாலே, விசத்தை வச்சு கொன்னுடுவாங்க, அப்போ உன்னை.. உன்னை என்ன வேணும்னாலும் செய்வாங்க. அப்படி உன்னை யாரும் எதுவும் சொல்லி, செஞ்சிடக் கூடாதுன்னு பயந்து தான், யாருக்குமே சொல்லாம எங்கேயோ போயிருக்கார் முகுந்தன், அண்ணா. அவர் கூடவே சுத்தி, அவர் கூடவே இருந்த அவரோட சேக்காளிககிட்ட கூட சொல்லாமப் போயிருக்கார்னா அவரைப் புரிஞ்சிக்கனும், பவி. அண்ணன் உனக்காகப் பார்க்கும் போது, நீ அவருக்காக பார்க்கக் கூடாதா பவி.” என நீளமாகப் பேச,

“இது எல்லாம் எனக்கு புரியுது ரமி. புரியுது, மண்டைல ஆணி இறங்கின மாதிரி புரியுது.. ஆனா.. ஆனா.. என் மனசு அதை ஏத்துக்கவே மாட்டேங்குது. நான் என்ன செய்ய..” என கதறியழ,

அப்போது ரம்யாவிற்கு புரிந்தது ஒன்று தான். ஒரே நாளில் பேசி முடியும் கதை அல்ல இது. மெல்ல மெல்ல பேசி, அவள் மனதை மாற்ற வேண்டும் எனப் புரிந்து கொண்டார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்று சும்மாவா சொன்னார்கள், கரைத்து விடலாம் என்று முடிவெடுத்துக் கொண்டார்.

ஆனால் இது எதுவும் வீட்டிற்குத் தெரியாமல் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். பவியின் வீட்டில் தெரிந்தால், அவளது அப்பாவை விட அம்மா தான், தன் உடன் பிறந்தவர்களை வைத்து பிரச்சனையை பெரிசாக்குவார். அது மேலும் மேலும் கஷ்டங்களைக் கொடுக்கும். அதனால் இப்போதைக்கு இதைப்பற்றி யாரிடமும் மூச்சு விடுவதில்லை என்று உறுதியெடுத்து, ஒருவாராகத் தோழியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

பாம்பு கடித்த சம்பவத்திற்குப் பிறகு, தங்கையைத் தனியாக விடுவதில்லை, பாண்டியன். ரம்யாவோடு மட்டுமே தனியாக விடுவது.

ஆனால்.. அவர்களுக்குப் பின் கண்காணிப்பிற்கு ஒரு ஆளை வைத்திருந்தார் அவர்களுக்கே தெரியாமல். சில நாட்களாகத் தங்கையின் முகத்தில் தெரியும் சோகத்தை பயம் என நினைத்துக் கொண்டார். அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. ஆனால், இப்படியிருக்கும் என்று அவருக்கு துளி கூட சந்தேகம் வரவில்லை. ஒருவர் பவித்ரா அவருக்கு உயிரான தங்கை. மற்றொருவர் அவரின் உயிரான நண்பர். இருவரும் தவறு செய்ய மாட்டார்கள் என்று நம்பினார். அதனால் இப்படியிருக்கும் என்று அவருக்குத் தோன்றவே இல்லை. ஆனால் அது தெரிந்த போது பாண்டியனின் மனநிலை..?

பக்கத்தில் நீயும் இல்லை

பார்வையில் ஈரம் இல்லை

சொந்தத்தில் பாக்ஷை இல்லை

சுலாசிக்க ஆசை இல்லை

கண்டு வந்து சொல்வதற்கு

காற்றுக்கு ஞானம் இல்லை

நீலத்தைப் பிரித்து விட்டால்

வானத்தில் ஏதும் இல்லை

தள்ளித் தள்ளி நீ இருந்தால்

சொல்லிக் கொள்ள

வாழ்க்கை இல்லை
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
455
156
43
Dindugal
ரம்யா பேசுறது சரிதானே..
அவங்க டைலாக் எல்லாம் சூப்பர்
 
  • Like
Reactions: Vathani

Pavithra Shanmugam

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
21
11
3
Erode
என்னோட ஃபேவ் சாங்க்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே..
மிஸ் யூ spb sir

 
  • Like
Reactions: Vathani

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
855
378
93
Tirupur
என்னோட ஃபேவ் சாங்க்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே..
மிஸ் யூ spb sir


Thank u