விடிந்தால் மனோரஞ்சினியின் திருமணம். இத்தனை விரைவில் அனைத்தும் நடந்து முடியும் என்றெல்லாம் அவள் எண்ணியே இருக்கவில்லை.
அன்று அவனது குறுஞ்செய்திக்குப் பதில் அனுப்பியது மட்டும் தான் இறுதியாக அவனுடனான அவளது உரையாடல். அதன் பின் இதோ திருமணம் இத்தனை விரைவாய் நெருங்கி விட்டிருந்தது.
அந்தப்பக்கம் அவனிடமிருந்து எந்த வித பேச்சும் வந்திருக்கவில்லை.. இன்று மாலை மண்டபதுக்கு செல்ல வேண்டும். அதற்கான எல்லாம் தாய் கீதாஞ்சலியும் பாட்டி கோகிலாவும் தான் பார்த்துக் கொண்டனர்.
இதோ இப்போதும் தொலைபேசியைக் கையில் வைத்திருந்தபடி அவனுக்கு அழைப்போமா வேண்டாமா என்று அத்தனை யோசனை அவளுள்.
மெத்தையில் உருண்டு கொண்டிருந்தவளோ "மிஸ்டர் மனிதர் குல மாணிக்கம் ரொம்ப தான் பண்ணுறீங்க, எங்கிட்ட சிக்குன அப்பறம் உங்கள என்ன பண்ணுறேன்னு பாருங்க. ஒரு சின்னப் பொண்ணு மனச கலைச்சிட்டோம் ஒரு எண்ணம் இல்லாம சுத்துறீங்கல்ல, வெச்சிக்கிறேன்" என்று தனக்கு தானே பேசிக்கொண்டிருந்தாள். அப்போது சரியாய் தங்கையின் குரல் அருகில் கேட்டது.
அக்ஷயாவோ, "அதெப்படிக்கா கல்யாணமானாத்தான் புருஷன் ஆகிடுவாங்களே! அதுக்கப்பறம் எப்படி வெச்சுப்பியாம்?" என்று அதிமுக்கிய கேள்வியைக் கேட்க, பதறி எழுந்தாள் மனோரஞ்சினி.
"நீ எப்போடி வந்த? வரும்போது பெர்மிஸன் கேட்டுட்டு உள்ள வர மாட்டியா?" என்றவள் தங்கை தன்னை கண்டுகொண்டாளே என்ற பதற்றத்தில் உளறி வைத்தாள்.
அதில் அக்ஷயா மெத்தையை விட்டுப் படாரென்று எழுந்து "எதே பெர்மிஸன் கேட்கணுமா?" என்றவள் அக்காவின் தலையில் கழுத்தில் எல்லாம் கையை வைத்துப்பார்த்தவள் "ஹலோ மேடம், போர் யுவர் கைண்ட் இன்ஃபோர்மேஷன் என்னோட ரூமும் இதுதான்" என்று முடித்திருந்தாள்.
ரஞ்சினியோ அதற்கும் எரிச்சல் பட்டுத் தங்கையின் கையைத் தட்டி விட்டவள் "ப்ச் என்னடி இப்போ உன் பிரச்சனை?" என்க அக்காவின் குரலில் இருந்தது மாறுபாடு தங்கையாய் அவளுக்குப் புரியவே செய்தது.
"என்னடி அக்கா ஆச்சு? நீ எப்பவுமே இப்படி இருக்கமாட்டியே! எனி திங் சீரியஸ்?" என்று கேட்ட, தங்கையைப் பார்த்தவள் மெத்தையிலிருந்து எழுந்து கொண்டாள்.
"உன் மாமா காலேஜ் வந்தாராடி?" என்று கேட்க, அவளும் "ஆமா வந்தாங்களே அங்க ஸ்டுடென்ட், ஸ்டாப்ஸுக்கு எல்லாம் இன்விடேஷன் கொடுத்தாங்க. எங்கிட்ட கூட நல்லா பேசுனாங்க தெரியுமா? என் பிரண்ட்ஸ் நிறைய பேருக்கு அதில ஸ்டொமக் பர்னிங் ஆச்சு தெரியுமா?" என்றாள்.
"அவங்களுக்கு மட்டுமா? எனக்கும் தான்" என்று முனுமுனுக்க, அது அக்ஷயாவின் காதில் நன்கு விழுந்ததில் அவளுக்கோ புன்னகை.
'அட நம்ம டெரர் அம்மாக்கு காதோல் ஸ்டார்ட் ஆகிடுச்சுடோய்' என்று எண்ணியவள் "ஏன்க்கா மாமா உன்கூட பேசலயா என்ன?" என்று தெரிந்தும் வேண்டும் என்று கேட்க, அவளோ "இல்லையே பேசுனாங்களே" என்று சமாளிக்க, தங்கையோ குறுகுறுவென அவளையே பார்க்க, ரஞ்சினியோ முயன்று தன் உணர்வுகளை மறைக்கப் போராடினாள்.
அவள் போராட்டம் தாய்க்கு புரிந்ததோ என்னவோ காப்பாற்ற ஓடோடி வந்துவிட்டார்.
ரஞ்சினியின் அறைக்குள் வந்தவரோ அக்ஷயாவின் முதுகில் நச்சென்று அடி ஒன்றை வைக்க, இதை எதிர்பார்க்கதவளோ முதுகை தடவியபடி "ம்ம்மாவ், என்னமா இந்த அடி அடிக்கிற, நீ போலீஸ் பொண்டாட்டின்னு தெரியுது அதுக்குனு இப்படித்தான் அடிப்பியா? டாக்டர்ஸ் சாஃப்ட்னு சொல்லுவாங்களே அதெல்லாம் பொய்யா கோபால்? சூர்யாக்கு அக்கா மாதிரி ஓங்கி அடிச்சா ஒன்றடன் வெயிட்னு காட்டுறியாமா?" என்றாள்.
"இவ ஒருத்தி சம்மந்தம் இல்லாம தான் உளறுவா? உங்கிட்ட என்னடி சொல்லி அனுப்பினேன்?" என்று கேட்க, அவளும் "என்னமா சொன்ன?" என்று மீண்டும் முதுகையே தடவினாள்.
"நீ எல்லாம் என்னடி டாக்டர்? இரு உன் மேம் கிட்ட சொல்லிக் கொடுக்கிறேன். சொல்லுற ஒன்னையும் ஞாபகம் வெச்சிருக்கிறதில்ல" என்றவர் அவளை முறைக்க, அவளோ 'டாக்டரா இருந்தாலும் மம்மி மம்மி தான்' என்று எண்ணிக் கொண்டாள்.
"இப்போவும் உனக்கு ஞாபகம் வரலைல? அக்காவ சாப்பிட கூட்டிட்டு வானு உன்ன அனுப்பினா நீ இங்க அவகூட கூத்தடிச்சிட்டு இருக்க, அங்க அப்பாவும் தாத்தாவும் வெயிட் பண்ணிட்டு இருகாங்க" என்க அப்போது தான் அவளுக்கு எதற்காக வந்தோம் என்பதே ஞாபகம் வந்ததில் தலையில் கை வைத்து விட்டாள்.
"ஐயோ மம்மி, நீ வல்லாரை எல்லாம் எனக்குத் தராம தனிய சாப்பிட்டு எனக்கு மறதியை வர வெச்சிட்ட, இரு நானும் இனிமேல் கிலோ கணக்குல சாப்பிட்டு உனக்கே ஞாபகப்படுத்துறேன் பாரு" என்று வீர வசனம் பேசி, தொடையில் கையால் அடித்துச் சபதம் போல் சொல்லியதில் கீதா தான் தலையிலடித்துக் கொண்டார்.
அக்ஷயா இன்னும் அதே போஷில் நிற்க, கீதாஞ்சலியோ "இதுக்கு ஒன்னும் குறையில்லை, போடி அங்கிட்டு" என்று லேசாகத் தள்ளி விட, அக்ஷயா நடிப்பின் உச்சத்தை காட்டி அப்படியே வசதியாய் சென்று சோபாவில் விழுந்தவள், "ஐயோ! இந்த உலகத்துல ரெண்டாவது பொண்ணுக்கு பாதுகாப்பு இல்லப்பா" என்று குரளிவித்தையை தொடங்கியிருந்தாள்.
அதில் கீதாவும் ரஞ்சினியும் சிரித்துவிட, ரஞ்சினி மேலும் விடாமல் "இது உலக நடிப்புடா சாமி" என்று தங்கையை வார, அவளோ "யூ டூ ப்ருட்ஸ்" என்று வாயில் புறங்கையை வைத்துப் பழைய நடிகைகள்போல மீண்டும் நடிப்பை தொடர, இறுதியில் கீதாஞ்சலி அவளை அடித்து இழுத்து சென்றது தான் மிச்சம்.
______________
"நரேன் இன்னுமா எழுந்துக்கல நீ, லீவ் வந்துட்டா போதும் உன்ன எழுப்பப் போராட வேண்டி இருக்கு. இப்போ வந்தேன்னு வையேன், பெட்ல படுத்தபடியே குளிக்கப் போற பாரு" என்று சமையறையிலிருந்து சத்தமாய் ரதி கத்திக்கொண்டிருக்க, அந்தக் குரல் கேட்டும் எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே படுத்திருந்தான் நரேந்திரன்.
அந்த நேரம் வீட்டில் அழைப்பு மணி ஒலிக்க, சமைத்துக்கொண்டிருந்த ரதி நரேந்திரனின் அறைக்கதைவை ஒரு பார்வை பார்த்தபடி சென்று திறக்க, வெளியில் ரஞ்சிதன் நின்றிருந்தான்.
ரஞ்சிதனோ "நரேந்திரன் இல்லையாம்மா?" என்று கேட்டான்.
"தூங்குறான்ப்பா, உள்ள வா.. இதோ நான் அவன எழுப்பிக் கூட்டிட்டு வரேன்" என்று அவன் உள்ளே வர வழி விட்டு, அவனுக்குக் குடிக்க நீரைக் கொடுத்துவர் மகனை எழுப்புவதற்காக உள்ளே நுழைந்திருந்தார்.
"டேய் நரேன் எழுந்துகோடா" என்க அவனோ அவரை இழுத்து அமர வைத்தவன் அவர் மடியிலேயே படுத்து மீதி தூக்கத்தை தொடர, "நரேன் உன்ன பார்க்க ஹவுஸ் ஓனர் தம்பி வந்திருக்காருடா எந்திரி" என்றார்.
தாயின் குரல் கேட்டாலும் பேசியவை மூளையில் பதியவில்லை என்பதால் "ம்ம்மா இன்னும் டென் மினிட்ஸ்மா" என்றவன் தூக்கத்தை தொடர்ந்த படியே அவரது கரத்தை எடுத்துத் தன் கேசத்துக்குள் வைத்திருந்தான்.
நரேந்திரனது அறை ஹாலுக்கு அருகில் இருபதாலும் அறைக்கதவு திறந்திருந்ததனாலும் அங்கு அமர்ந்திருந்த ரஞ்சிதனுக்கு அவர்கள் பேசிய அத்தனையும் கண்களாலும் பார்த்தும் காதால் கேட்கவும் முடிந்தது.
நரேந்திரனின் செய்கையில் அவனுக்கு இதழ்கள் விரிந்திருந்தது. அவனது தாயுடன் இருந்த நாட்கள், அவன் மூளையில் சுகமான உணர்வாகப் பதிந்திருந்தது.
காலையிலிருந்தே அவன் தாயின் எண்ணம் அதிகமா வந்தததே இப்போது அவன் இங்கு வரக் காரணம்.
கண்களை மூடித் திறந்தவன் அப்படியே அமர்ந்திருக்க, ரதி தான் வெளியே வந்தார்.
"நீ ஒன்னும் நினைச்சிக்காத ப்பா.. சண்டே ஆனா மட்டும் அவன் கும்பகர்ணன் ஆகிடுறான். ஃப்ரஷ் ஆகிட்டு இப்போ வந்துடுவான். என்ன சாப்பிடுறப்பா, டீ ஆர் காஃபீ" என்க, "அவனும் எதுவா இருந்தாலும் உங்களுக்கு இஷ்டம் ம்மா" என்றான்.
"என் இஷ்டம்னு சொன்னா பிரேக்பாஸ்ட்டே சாப்பிடணும் ஓகேவா" என்றார் சிரிப்புடன். அவர் பேச்சில் அவனும் புன்னகைக்க, "இன்னைக்கு இடியப்பம் தான் பண்ணி இருக்கேன் வா ப்பா சாப்பிடலாம்" என்று அவனை அழைக்க, அவனும் அவருடன் சென்று சாப்பாட்டு மேசையில் அமரவும், நரேந்திரன் வரவும் சரியாய் இருந்தது.
சாப்பிட்டு முடியும் வரை நரேந்திரனும் என்னவென்று கேட்டிருக்கவில்லை, ரஞ்சிதனும் என்னவென்று சொல்கியிருக்கவில்லை..
சாப்பாடு முடிந்ததும் மீண்டும் ஹாலில் வந்து அமர, ரஞ்சிதன் பேச்சைத் தொடங்கியிருந்தான்.
"ம்மா, எனக்கு நாளைக்கு கல்யாணம் நடக்க இருக்கு, நரேந்திரன் சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன்" என்க ரதிyயும் ஆமோதிப்பதாய் தலையசைத்தார்.
மீண்டும் ரஞ்சிதனே "எனக்குன்னு என் சைட்ல சொல்லிக்கிறதுக்கு சொந்தம்னு யாருமில்லமா, நல்லது கெட்டதோ எனக்கு நான்தான் இவ்வளவு நாளா செஞ்சேன். ஆனா இப்போ என் வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு ட்ராவல் ஆகப் போகுது. இந்த நேரம் எனக்குனு என் சைட்ல யாராவது இருக்கானும்னு தோணுது. அப்படி யார்கிட்டயாவது கேட்கணும்னு இருக்குறப்போ எனக்கு முதல்ல உங்க எண்ணம் தான் வந்திச்சு, என் கல்யாணத்துல, என் அம்மா என் தம்பியா நீங்க அந்த இடத்துல இருப்பீங்களாமா?" என்று சொல்ல வந்த விடயத்தைச் சொல்லி முடித்திருந்தான்.
ரதியோ சமையலறையின்னுள்ளே நுழைந்து, போன சில நொடிகளில் வெளியே வந்திருந்தவர் "ஆஆஆஆ காட்டுப்பா" என்க, ரஞ்சிதன் எதுவும் கேட்கவில்லை வாயைத் திறந்திருக்க அவன் வாய்க்குள் கையில் எடுத்து வந்திருந்த சக்கரையை ஊட்டியிருந்தார் ராதிதேவி.
"ரொம்ப இனிப்பான செய்தி சொல்லியிருக்க, ஸ்வீட் இல்லாமலா? இது உன் கல்யாணம் இல்ல நம்ம வீட்டு கல்யாணம் ஓகேவா? என்ன நரேன் அம்மா சொல்றது?" என்றவர் ரஞ்சிதனின் பார்வை நரேனிடம் இருப்பதை உணர்ந்து அவனிடமும் கேட்டிருந்தார்.
"அண்ணா கல்யாணத்துல நம்ம இல்லாமலா?" என்று தன் சம்மதத்தையும் சொல்லி இருக்க, ரஞ்சிதன் உண்மையில் நெகிழ்ந்திருந்தான்.
எங்கெங்கோ தனியாய் பறந்து திரிந்த பறவைகள் உணர்வுகள் என்னும் வீட்டினுள்ளே ஒரு குடும்பமாய் ஆத்மார்த்தமாய் இணைந்து கொண்ட தருணம்.
_______________________
காலை உணவைத் தன் குடும்பத்துடன் முடித்த பாலசந்திரன், அங்கே அவர் அறையில் அமைதியாய் அமர்ந்திருக்க, அவரைத் தேடி அவர் மனைவி கோகிலா வந்திருந்தார்.
"என்னங்க இங்க உக்காந்திருக்கீங்க, அங்க அவ்வளவு வேலை இருக்கே" என்று கேட்டபடி அவருகில் வந்து தோளில் கை வைக்க, மாணவியின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக்கொண்டார் பாலச்சந்திரன்.
"என்னங்க?" என்று அழைத்த கோகிலா அவர் அருகில் அமர்ந்ந்தார்.
"நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி பார்க்க நமக்குக் கொடுத்து வைக்கலல கோகிலா? எவ்வளவு கனவு வெச்சிருந்தோம் எல்லாம் ஒரு நொடில காணாம போய்டிச்சே.. எப்படி எல்லாம் வருவான்னு நம்ம எவ்வளவு பேசி இருப்போம், டாக்டரா வக்கீலானு நமக்குள்ளேயே அவ்வளவு வாக்குவாதம் வந்தப்போலாம், சிரிச்சிட்டே எவ்வளவு கேலி பண்ணுவா நம்மல, அவ கூட இன்னும் கொஞ்ச நாள் வாழ நமக்குக் கொடுத்து வைக்கலையே!" என்று உடைந்து பேச, கோகிலாவுக்கும் கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
"அவளை ஒரு வாட்டிக் கூடப் பார்க்க முடியாம போச்சேங்க, எப்படி இருக்காளோ? சின்ன வயசுல கல்யாணம் பண்ணி அவ வாழ்க்கை தொலைச்சிளே" என்க, மனைவியின் வாயை மூடியிருந்தார் பாலச்சந்திரன்.
"வேணா கோகிலா, பேச்சுக்கும் அப்படி சொல்லாத, அவ நல்லா இருப்பாங்கிற எண்ணத்த மட்டும் மனசுல வெச்சிப்போம். எதிர் மறையா, எண்ணங்கள் கூட வேண்டாமே" என்றார் அந்தப் பாசமிகு தந்தை.
எண்ணங்களில் கூட மகள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர் எண்ணம் பொய்யாகி போனதை அறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை..
கானல் தொடரும்.
இப்படிக்கு
உங்கள் பெப்பர் மின்ட் மிட்டாய்
(MK31)
Last edited: