• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் 1

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
789
597
93
Chennai
அத்தியாயம் 1

“க்கா! உனக்கு பேங்க்கு டைம் ஆகலையா இன்னும் கிளம்பாம நிக்குற?” அபர்ணா தன் சகோதரியிடம் கேட்க,

“கிளம்பிட்டேன் அப்பு! இந்த ஸ்கூட்டி சாவியை தான் அப்ப இருந்து தேடுறேன்” என வீடு முழுதும் அலசிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

“அப்பா தான் நைட் எடுத்துட்டு போனாங்க! போய் அவரை எழுப்பி கேளு. நான் லஞ்ச் பாக்ஸை எடுத்து வைக்குறேன்” என்றதும் கோபமாய் தன் தந்தை அறைக்குள் நுழைந்தாள் கீர்த்தனா.

உறங்கிக் கொண்டிருந்த தந்தையை பார்த்தவள் அறையை சுற்றிலும் கண்களை சுழல விட அங்கிருந்த டேபிளில் கிடந்தது இவள் தேடிய சாவி.

‘இதே வேலையா போச்சு! வந்து பார்த்துக்குறேன்’ நினைத்துக் கொண்டவள் தங்கை கொடுத்த பேகை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தாள்.

அது ஒரு மாடி வீடு. கீர்த்தனை இல்லம் என்பது தான் வீட்டின் பெயர். தரை தளத்தில் தந்தை மற்றும் தங்கையோடு கீர்த்தனா குடும்பம் இருக்க, மாடியில் இவர்களின் தந்தை வழி அத்தை குடும்பம் வசிக்கிறது.

கீர்த்தனா கல்லூரி படிப்பை முடித்து கடந்த இரண்டு வருடமாக தனியார் வங்கி ஒன்றில் போதிய வருமானம் கிடைக்கும் அளவு நல்ல வேலையில் இருக்கிறாள். அபர்ணா இப்போது தான் கல்லூரி முதல் வருடம் செல்கிறாள்.

பத்து வருடங்களுக்கு முன் கீர்த்தனா அபர்ணா இருவரின் பள்ளி பருவத்தில்
தாய் கெளசல்யா இறந்துவிட அந்த வயதிலேயே அபர்ணாவிற்கு தாயாய் மாறிப் போனவள் தான் கீர்த்தனா.

தந்தை ஜெகன். சொந்தமாய் இரண்டு கார், இரண்டு ஆம்னி பேருந்து வைத்து அதை வாடகைக்கு கொடுத்து தொழில் செய்கிறார். அன்னை இறந்த பிறகு கீர்த்தனா தன் தந்தையிடம் பேசியதே இல்லை. ஏன் என அபர்ணா எத்தனைமுறை கேட்டாலும் அதற்கு பதில் சொல்ல மாட்டாள் இவள்.

“அப்பு! அந்த மாணிக்கம் அங்கிள் நேத்து நைட் வந்து ஆம்னி சாவி வாங்கிட்டு போனாங்க. அவர் எழுந்ததும் சொல்லிடு. டிவியே பார்த்துட்டு இருக்ககூடாது. நாளைக்கு எக்ஸாம் தானே ஒழுங்கா படி” தங்கைக்கு அறிவுரை கூறியபடி வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

“கீர்த்தி ஒரு நிமிஷம்” என்றபடி வேகமாய் மாடிப்படிகளில் இறங்கினார் சித்ரா. ஜெகனின் அக்கா.

“என்ன அத்தை?” – கீர்த்தனா.

“நீ வச்ச ரோஜா செடி பூ பூத்திடுச்சு டா” என்றவர் கொண்டு வந்த அந்த மஞ்சள் ரோஜாவை அவள் தலையில் சொருகினார்.

“அத்தை! லதாக்காக தான் வாங்கினேன். அவ தானே பூ வைக்கணும்னு ஆசைப்படுவா? அவளுக்கே நீங்க கொடுத்திருக்கலாம்” கீர்த்தனா சொல்ல,

“இன்னும் நிறையா மொட்டு இருக்கு கீர்த்தி! முதல் பூவை உனக்கு தான் கொடுக்கணும் நினச்சேன்” என்றவர் “சரி நேரம் ஆச்சு! பார்த்து போய்ட்டு வா” என்றபடி வழியனுப்ப, மாடிப்படியில் நின்றவனைப் பார்த்துவிட்டு சென்றாள் கீர்த்தனா.

“எனக்கெல்லாம் பூ இல்லையா அத்தை?” அபர்ணா கேட்க,

“உனக்கில்லாமலா டா. நாளைக்கு காலேஜ் போகும்போது நீ வச்சுட்டு போ” என்று சித்ரா சொல்லிக் கொண்டிருக்க,

“ம்மா! காபி கூட தராமல் இங்கே என்ன வெட்டிக் கதை பேசிட்டு இருக்கீங்க? “ என்று மேலிருந்தே கத்தினான் சித்ராவின் மூத்த மகன் ராம்.

“தோ வரேன் டா. அப்பு சாப்பிட மேலே வா” என்று அழைத்துவிட்டு செல்ல,

“இல்ல அத்தை! கீர்த்தி இன்னைக்கு டிபன் செஞ்சுட்டா. லதா எழுந்ததும் வர சொல்லுங்க” என்று சொல்ல,

“சரி மா” என்று ராமிடம் வந்தார்.

“ஏன் டா கத்துற? காபி போட்டு வச்சுட்டு தானே வந்தேன்! அதை எடுத்து குடிக்க உனக்கு என்னவாம்?”

“ஆமா ஜான்சி ராணியை வழியனுப்பி வைக்கலைனா தான் உங்களுக்கு குளிர் ஜுரம் வந்திடுமே!” அன்னையை கிண்டல் செய்தான் ராம்.

“உனக்கு அவளை ஏதாவது சொல்லிட்டே இருக்கனும். போய் கிளம்புற வழியை பாரு டா” – சித்ரா.

“நான் ஏன் சொல்ல போறேன்” என்றவன் “மதிய ஷிப்ட் தான் மா. ஆனா மார்னிங் நிஷாவை பார்க்க வர்றதா சொல்லியிருக்கேன்” அவன் சொல்லிவிட்டு காபியை பருகியபடி செல்ல, எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தது சித்ராவின் முகத்தில்.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு ஊர்ல இருக்குற எல்லாரையும் குறை சொல்வான். இவனுக்கு பேரு மட்டும் தான் நான் உருப்படியா வச்சிருக்கேன். படைக்கும் போதே குரங்கு புத்தியோட தான் கடவுள் படைச்சிருப்பான் போல” மகனை வாய்க்குள் திட்டிக் கொண்டு சமையல் பாத்திரங்களை சித்ரா உருட்ட, மகள் லதா கணவர் தங்கராஜ் இருவரும் பின்நின்று சிரித்துக் கொண்டிருந்தனர்.

“என்ன இன்னைக்கு தாளிப்பு கொஞ்சம் தூக்கலா தெரியுது.. எதாவது ஸ்பெஷலா லதா?” தங்கராஜ் கிண்டல் செய்ய, “ப்பா வேணாம்! அண்ணாகிட்ட காட்ட முடியாத கோபத்தை அம்மா உங்ககிட்ட தான் காட்டும் ஜாக்கிரதை” என எச்சரித்தாள் மகள்.

“அதுவும் சரி தான் டா. எதுக்கு வம்பு” என்றவர் “சித்தும்மா டிபன் எங்கே டா. எனக்கு லேட்டாச்சு” என்று கேட்க,

“எல்லாம் கேட்டுச்சு! மகனை ஒரு வார்த்தை சொல்றது இல்ல.. என்கிட்ட மட்டும் வம்புக்கு வாங்க” என்றவர் நங்கென்று சாப்பாட்டை எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்தார்.

“ப்பா! அமைதியா சாப்பிட்டு கிளம்பிடுங்க.. இல்ல உங்களுக்கு தான் சேதாரம்” என்றாள் மகள்.

“அவன் என்ன சொன்னான் தெரியுமா? நிஷாவை பார்க்க போறானாம். இவனுக்கு ஏன்க இந்த விஷயத்துல மட்டும் புத்தி இப்படி போகுது?” சித்ரா மீண்டும் புலம்ப ஆரம்பிக்க,

“சித்ரா! ஒரு வயசுக்கு மேலே பசங்களை நாம கேள்வி கேட்க கூடாது புரியுதா? அவன் விருப்பம் என்னவோ அதையே அவன் பண்ணட்டும். நீ ஏன் டென்ஷன் ஆகுற?” தங்கராஜ் சொல்ல,

“அதானே! நீங்க அப்படி தானே சொல்விங்க! உங்க ஆசை மகனாச்சே! என் கவலைய கேட்க யார் இருக்கா?” கன்னத்தில் கைவைத்து சித்ரா அமர,

“ப்பா சொன்னேனே கேட்டீங்களா? இனி உங்க பாடு கஷ்டம் தான்” என லதா சொல்லும் நேரம்

“யாரது என் அம்மாவை அழ வச்சது?” என வந்து சேர்ந்தான் கண்ணன். சித்ரா தங்கராஜின் இரண்டாவது மகன்.

“இவனும் வந்துட்டானா?” லதா சொல்ல,

“என்னாச்சு மா? என்ன பிரச்சினை? ஏய் குண்டு! நீ எதாவது பண்ணியா?” என லதாவிடம் கண்ணன் கேட்க,

“டேய்! குண்டுன்னு சொல்லாதன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன். நான் ஒன்னும் செய்யல.. எல்லாம் ஹரே ஹரே ராமா தான்” லதா சொல்ல,

“அப்ப நிஷா மேட்டாரா தான் இருக்கும்.. என்னம்மா? கல்யாணம் பண்ணி வைங்கனு வந்து நிக்குறானா? இல்ல கல்யாணமே பண்ணிட்டு வந்து நிக்கிறானா?” - கண்ணன்

“இன்னும் அது மட்டும் தான் பாக்கி கண்ணா! நிஷா பைத்தியம் புடிச்சி அலையுறான். அதுக்கு உங்க அப்பா சப்போர்ட் வேற!”

“ம்மா! ஏன் இவ்வளவு டென்ஷன்? போனா போறான் விடுங்க மா. அவனை தனிக் குடித்தனம் வச்சுட்டு நாம ஜாலியா இருக்கலாம்” என்று சொல்லி முடிக்கவும் ராம் அறைக் கதவு திறக்கவும் சரியாய் இருந்தது.

கூட்டம் அமைதியாய் சாப்பிட ஆரம்பிக்க, ராமும் அமர்ந்தான். “ஏன்டா நேத்து ஷிப்ட் முடிஞ்சு லேட் நைட் தானே வந்த? தூங்கி எழுந்து ஆபீஸ் போக வேண்டியது தானே? அப்படி என்ன தூக்கத்தை கெடுத்து அலையுறது?”

கேட்காதே! கேட்காதே! என மனம் எவ்வளவு எச்சரித்தும் நிஷா என்ற பெயரை கேட்டால் வரும் எரிச்சலை சித்ராவால் அடக்க முடியவில்லை. கேட்டே விட்டார்.

ராமிற்கும் நன்கு தெரியும் தன் குடும்பத்தை பற்றி. அன்னையை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் சாப்பிட, மீண்டும் கோபம் தான் வந்தது அன்னைக்கு.

‘நிஷாவை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. திருமணம் ஆனபின் எல்லாம் சரியாகிவிடும்’ என நினைத்துக் கொள்வான். நிஷாவை போக போக புரிந்து கொள்வார்கள் என்று தான் இப்போதும் நினைத்துக் கொண்டான்.

அதையும் மீறி அன்னைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் எப்போதாவது வரும். அப்படி வந்தால் உடனே வீட்டை மாற்றிடலாம் என்று தான் நிற்பான் ராம்.

இந்த வீடு கெளசல்யாவினுடையது. அவர் இறந்தபின் ஜெகன் கேட்டுக் கொண்டதற்காக தான் சித்ரா குடும்பம் இவர்களுடன் இந்த வீட்டிற்கு வந்தது. ராமிற்கு அப்போதிருந்தே கீர்த்தியுடன் சண்டை தான். அவளின் பக்குவத்தையும் இவனின் செயல்களையும் ஒப்பிட்டு சித்ரா பேச பேச நாளடைவில் அவள்மேல் ஒரு கோபம் இவனுக்கு.

ராம் சம்பாதிக்க ஆரம்பிக்கவும் வீடு வாங்குவதாய் வந்து நின்ற போது அது தவறாய் தெரியவில்லை சித்ராவிற்கு. அவரும் சம்மதம் சொல்லிவிட உடனே மாறிடலாம் என சொல்லி அடுத்த நாளே வீடு பார்த்து வந்து நின்றான்.

தாயின்றி இரண்டு பெண் பிள்ளைகளை அப்படியே விட்டுவிட மனமில்லை சித்ராவிற்கு. கெளசல்யா நாத்தனார் என்பதை தாண்டி இருவரும் நல்ல நண்பராய் தான் இருந்தார்கள். வீட்டை வாங்கலாம் ஆனால் இப்போது அங்கே போக வேண்டாம் என ராமிடம் சொல்ல அதன்பின் ஒரே சண்டை தான்.

எதற்கெடுத்தாலும் வீட்டில் தான் வந்து நிறுத்துவான். அதற்காகவே அவனிடம் வாயை கொடுக்க மாட்டார் சித்ரா.

முதலில் எழுந்த தங்கராஜ் வேலைக்கு கிளம்பிவிட, பின்னேயே எழுந்து கொண்டான் ராம். அவன் சென்றபின் மீண்டும் கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டார் சித்ரா கவலையில்.

“ம்மா! நடக்குறதை தடுக்க யாரால முடியும். இந்த ஜென்மத்துல உங்க மூத்த மருமக நிஷான்னு ஆண்டவன் சொல்லறான்.. அதை ராம் முடிக்குறான். விடுங்க மா.. அதான் ரெண்டாவது மருமக உங்க சாய்ஸ்னு சொல்லியிருக்கேனே! சும்மா ஜம்முன்னு செலக்ட் பண்ணுங்க இப்பவே கூட தாலி கட்டுறேன்” கண்ணன் சொல்லி விட்டு அவன் தோள்பையை குறுக்காக மாட்டிக் கொண்டு கிளம்ப,

“பேசாம போய்டு! சொல்ல சொல்ல கேட்காம போறான்னு நானே செம்ம கடுப்புல இருக்கேன்” என சித்ரா சொல்ல,

“நீங்க திருந்த மாட்டிங்க! நான் கிளம்பறேன். குண்டு பை” என சொல்லிவிட்டு தன் ஐடி நிறுவனத்திற்கு கிளம்பினான் கண்ணன்.

“அத்தான்! லதா எழுந்துட்டாளா?” கீழே வந்த கண்ணனிடன் அபர்ணா கேட்க,

“அம்மா கூட பேசிட்டு இருக்குறா அப்பு! கீர்த்தி கிளம்பிட்டாளா?” என்றான்.

“ம்ம் போய்ட்டா! நான் கேட்ட புக் எப்ப வாங்கி தர்றிங்க அத்தான்? “ என்றவளிடம்

“இந்த சண்டே கண்டிப்பா வாங்கித் தர்றேன் டா” என்று சொல்லி கிளம்பிச் சென்றான் கண்ணன்.

தொடரும்..
 
  • Like
Reactions: Vinolia Fernando