• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் 24

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 24

"ராமை விட நல்ல பையனுக்கு எங்கே போக? அதுவும் இப்படி பக்கத்துல இருந்தே வளர்ந்த பையன்.. ஒரு குறை சொல்ல முடியுமா? ஏன் இப்படி பன்றா?" என்று கேட்ட ஜெகனின் குரலில் அத்தனை ஆதங்கம்.

இதை மகள் தட்டி கழித்தால் அதைவிட முட்டாள்தனம் எதுவும் இல்லை என்று தான் அபர்ணாவிடம் கோபமாய் பேசிக் கொண்டிருந்தார்.

'ஒருவேளை இடையில் ராமின் காதல் அது தான் பிரச்சனையாய் இருக்குமோ கீர்த்திக்கு?' என்று ஜெகனின் மனம் கேள்வி எழுப்ப,

எந்த பெண்ணும் எதிர்பார்ப்பது தான்.. தன்னை திருமணம் செய்பவன் தனக்கானவனாய் இருக்க வேண்டும் என்று நினைப்பது தான்.

ஒரு முடிவு தவறாகும் பட்சத்தில் அதையே பிடித்தபடி இருக்க முடியாதே! அதன்பின் மாற கூடாதா இல்லை முடியாதா என்ன?

நிஷாவினைப் பற்றி முழுதாய் தெரியாவிட்டாலும் நிச்சயம் ராம் மேல் தவறு இருக்காது என முழுதாய் நம்பினார் ஜெகன்.

இப்படி ராமே வந்து பேசியும் கீர்த்தி பதில் சொல்லவில்லை என்றால் மகளுக்கு இதில் விருப்பம் இல்லையோ என்று கவலை கொண்டார்.

எத்தனை யோசித்தும் இதை கீர்த்திக்கு எப்படி எடுத்து சொல்வது என்று தெரியவில்லை.

'கௌசல்யா! நீ தான் மா அவ மனச மாத்தணும்' என மனதார வேண்டியவருக்கு வேறு என்ன செய்வது என தெரியவில்லை.

அபர்ணாவிடம் இதைப் பற்றி பேசி எடுத்து சொல்ல, அவளின் வயதும் பக்குவமும் தடுக்க,

சித்ராவிடம் இதைப் பேசலாம் என்றால் ஏற்கனவே கீர்த்தியின் முடிவில் புலம்பிக் கொண்டிருப்பார் என்றே தோன்ற, முடிவாய் சுற்றி சுற்றி கண்ணனிடம் தான் ஜெகனுமே வந்து நின்றார்.

சித்ராவிடம் காரணம் சொல்லிவிடுவாள் மகள், லதா, அபர்ணாவிற்கு அனுபவம் போதாது, ராம் பேசியும் கேட்கவில்லை, தன்னை போலவே தான் தங்கராஜீடமும் இடைவெளி விடுவாள்.

இப்படி அனைவரையும் நினைத்தவர் முடிவில் கண்ணனின் எண்ணம் தான். கண்ணன் ஒருவன் தான் சொல்ல வந்ததை அதட்டி அவளை கேட்க வைப்பான். அவளும் கொஞ்சமாவது காது கொடுத்துக் கேட்பாள்.

எனவே மீண்டும் ஒரு முறை கண்ணனை பேச சொல்ல வேண்டும் என்ற முடிவுடன் தான் உறங்கவே சென்றார் ஜெகன்.

"ண்ணா! எங்க கிளம்பிட்டீங்க?" காலையில் கண்ணன் வேலைக்கு கிளம்பி வெளியே வர, அதே நேரம் ராமும் கிளம்பி வருவதைக் கண்டு கேட்டான்.

"வேற எங்கே டா? ஆபீஸ் போக வேண்டாமா? ஓவர் லீவ்.. அதான் சரி ஆயாச்சே!" என்றவன் சட்டையின் முழுக்கையை மடித்துவிட,

"நானும் ரெண்டு நாள் கழியட்டும் சொல்றேன்.. கேட்க மாட்டுறான்" என்றபடி பாக்ஸில் இட்லிகளை வைத்தார்.

"இதென்ன மா டிபன்? யாருக்கு?" என்று கண்ணன் கேட்க,

"ராம் மார்னிங் ஷிப்ட்னா எப்பவும் கொண்டு தானே டா போவான்? அதான் பேக் பண்றேன்" என்றார்.

"ம்மா! மத்த டைம் ஓகே! இப்ப டேப்லெட் போடணும்ல? ஹால்ப் அன் ஹவர் லேட்டா போனா ஒன்னும் இல்ல.. அவனை சாப்பிட வச்சு டேப்லெட் போட்டதும் அனுப்புங்க" என்றான்.

"ஆமா டா நான் கூட மறந்துட்டேன்" என்ற சித்ரா, அதை அப்படியே பிளேட்டில் மாற்ற, எதுவும் கூறாமல் புன்னகையுடனே சாப்பிட அமர்ந்தான் ராம்.

"நம்ம வீடு தானா? காலையிலே களைகட்டுது?" என்று தங்கராஜ் வர,

"நீங்க கிளம்பலையா?" என்றான் கண்ணன்.

"இல்ல டா.. கொஞ்சம் டையார்ட்.. நீ கார் வேணா எடுத்துட்டு போயேன்" என்று கேட்க,

"எனக்கு பைக் போதும் பா" என்றான் கண்ணனும்.

"ஹாஸ்பிடல் வேணா போகலாமா பா?" ராம் கேட்க,

"இல்ல டா.. கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.. அவ்வளவு தான்" என்று அமர்ந்திருக்க, கண்ணன் கூறிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

"லதா எங்க?" தங்கராஜ் கேட்க,

"அவளுக்கு மதியம் எக்ஸாம்னு காலையிலே எழுந்து படிச்சுட்டு இருக்குறா" என்றார்.

"சரி மா நானும் கிளம்புறேன்.. ப்பா வர்றேன்" என்று ராம் கிளம்ப, கீழே ஸ்கூட்டியை துடைத்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி.

"குட் மார்னிங்!" என்ற குரல் புதிதில்லை. கேட்டதும் புன்னகை முகத்தில் ஒட்டிக் கொள்ள, திரும்பாமல் நின்றாள் கீர்த்தி.

கார் லாக்கை ரிலீஸ் செய்தபடி "தேங்க்ஸ் கீர்த்தி" என்று சொல்ல, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் ஏன் என்ற கேள்வியுடன்.

"இவன் வேணுமா வேண்டாமான்னு நீ யோசிக்குறதா சொன்னதா கேள்விபட்டேன்.. அதுக்கு" என்று பதில் கூற, முறைத்தவள் பின் அவன் கைகளை கவனித்தாள்.

"அதெல்லாம் சரியா போச்சு" அவள் பார்வைக்கு இவன் பதில் சொல்ல, உள்ளுக்குள் சாரலாய் புதுவித அனுபவமாய் உணர்ந்தாள் கீர்த்தி.

"நல்லா தான் இருக்கு!" சொல்லியவன் கார் கதவைத் திறந்து ஏறி அமர்ந்து கேட்டை கடந்து செல்லும் வரையுமே அவளை கவனித்து தான் இருந்தான்.

'என்ன நல்லாருக்காம்?' நினைத்தவள் தன்னை, வண்டியை என மாறி மாறி பார்க்க, பின் புரியாமல் தோள்களை குலுக்கிக் கொண்டாள்.

இதுவும் ஒருவித பரவசத்தை உண்டு பண்ண மாறாத புன்னகை ராம் முகத்தினில். நிறையவே வேறுபாடு தன்னையே மீறி தனக்குள் உருவாவதை உணர்ந்திருந்தான் ராம்.

இது காதலா என்றால் நிச்சயம் இல்லை தான். இன்னும் சொல்ல போனால் கண்ணன் கூறியது போல தானுமே காதல் என்பது என்ன என்று கற்று கொள்ள வேண்டும் தான்.

நேற்று அந்த நேரத்தில் அந்த இடத்தில் தோன்றியது தான் கீர்த்தியை திருமணம் செய்ய வேண்டும் என்று. உடனே அதை சொல்லவும் செய்து காத்திருப்பதாகவும் கூறிவிட்டான்.

இப்போதும் அவளைப் பார்த்ததும் வம்பிழுக்க தோன்றிய மனதை என்னவென்று சொல்வதென தெரியவில்லை.

ஆனால் ஒன்று! ஒரு புன்னகை மாறா முகம், சிரிக்கும் கண்கள், ஸ்டீயரிங்கில் தாளமிடும் விரல்கள் என அனைத்தும் புதிதாய் மனதும் புத்துணர்ச்சியாய் இருந்தது ராமிற்கு.

இறுதியாய் ஆபீஸ்ல் இருந்து வந்த அன்று, விபத்திற்கு முன் இருந்த ராமிற்கும் இப்போது இருக்கும் ராமிற்கும் ஆன வித்யாசங்கள் எளிதாய் அகப்படும்.

அதை நினைக்கையில் இன்னுமே புன்னகை அதிகரிக்க, பல நாட்களுக்கு பின் தான் தானாய் இருந்து புதிதாய் பிறந்தது போல உணர்ந்தான்.

காதல் என்று ஆன பின் ராம் நிறைய எதிர்பார்த்த உணர்வுகள் இவையெல்லாம். எத்தனை எதிர்பார்திருப்பான் அவளிடம்? ஆனாலும் குணம் இது தான் என்று மாற்றி நினைத்துக் கொண்டவனுக்கு அப்போது தெரியாதது இப்போது புரிந்தது.

ஆனாலும் உணரவில்லை இன்னும்.. விரைவில் புரிந்து கொள்ள கூடுமோ?

கீர்த்தி பேங்க்கிற்கு கிளம்பிக் கொண்டிருக்க, அபர்ணா லதாவுடன் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தாள் மேலே.

ஜெகன் இன்னும் படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளவில்லை. எப்போதோ கிளம்பிய கீர்த்தியும் எதையாவது எடுக்கும் சாக்கில் அவர் அறையை பார்ப்பதும் சுற்றி வருவதுமாக இருந்தாள்.

அவர் கிளம்பிய பின் தான் கீர்த்தி கிளம்புவது வழக்கம். இன்னும் கிளம்பாமல் இருப்பவரிடம் நேரே சென்று கேட்க மனமில்லை.

உடல்நலம் சரியில்லையோ எனும் எண்ணம் வேறு அவளை கிளம்பவிடவில்லை.

காலையில் வைத்த காபியும் அப்படியே அவர் அறை டேபிளில் இருந்தது.

அபர்ணாவிற்கு அழைத்து பேசலாம் என நினைத்து மொபைலை எடுக்கவும் சித்ரா வந்திருந்தார் கீர்த்தி வீட்டிற்கு.

"இன்னும் கிளம்பலையா கீர்த்தி?" சித்ரா கேட்டவாறு உள்ளே வர,

"கிளம்பிட்டேன் அத்தை.. சாப்பாடு எடுத்து வச்சுட்டேன்.. அப்பு வர்றாளானு கேட்க தான் போனை எடுத்தேன்" என்று கூற,

"அப்பு படிக்குறா டா.. நான் சாப்பாடு குடுத்துக்குறேன் நீ கிளம்பு.." என்ற சித்ரா,

"ஆமா! அண்ணன எங்கே?" என்று கேட்க,

"அவரு... தூங்குறாங்க அத்தை" என்றாள் மெதுவாய்.

"என்ன இன்னும் தூக்கம்? அது தான் நீயும் கிளம்பாமல் நிக்குறியா? நல்ல பொண்ணு ம் நீ! சரி நீ கிளம்பு நான் பாத்துக்குறேன்" என்று சொல்ல, சரி என்று கிளம்பிவிட்டாள் கீர்த்தி.

"அண்ணே!" என்றபடி ஜெகன் அறை வாசலில் நின்று சித்ரா அழைக்க,

"உள்ளே வா சித்ரா" என்றபடி எழுந்து அமர்ந்தார் ஜெகன்.

"என்னண்ணே! உடம்பு சரி இல்லையா? இன்னும் எழுந்துக்காமலே இருக்கீங்க?"

"எழுந்துட்டேன் மா.. கொஞ்சம் யோசனை.. அப்படியே சாஞ்சுட்டேன்" ஜெகன் சொல்ல,

"காபி கூட ஆறி போச்சு" என்றவர்,

"சூடு பண்ணி கொண்டு வர்றேன்" என்றபடி காபியை கொண்டு சென்று மிதமான சூட்டில் கொண்டு வந்தார்.

முகத்தை அலசிவிட்டு ஜெகன் வரவும் காபியுடன் சித்ரா வர வாங்கி கையில் வைத்த ஜெகன் இன்னும் தெளிந்திருக்கவில்லை.

"என்னண்ணே! அப்படி என்ன யோசனை உங்களுக்கு? முகமே சரி இல்லையே?" என்று சித்ரா கேட்க,

"வேற என்னம்மா கீர்த்தி கல்யாணம் பத்தி தான் யோசிக்குறேன்.. கல்யாணத்துக்கு சரினு சொல்லலையாமே? அதான் கவலையா இருக்கு" என்று ஜெகன் கூறவும், சித்ராவும் அதைப் பற்றி தான் பேச வந்திருந்தார்.

"வயசு பொண்ணு! நாலு இடத்துக்கு போறவ.. அதான் மனசு கேட்க மாட்டுது" என்றார் இன்னும் கவலையாய் ஜெகன்.

"அட! அண்ணே நானும் கீர்த்தியை பத்தி பேச தான் வந்தேன்.. ஆனா நீங்க நினைக்குற மாதிரி பொண்ணு இல்ல நம்ம கீர்த்தி.. அதுவும் அவ என்ன வேண்டாம்னா சொன்னா? யோசிக்குறேன்னு தான சொல்லி இருக்கா? ரெண்டு நாள் பார்ப்போம்.. இல்லையா நாம பேசி நிச்சயத்த வச்சுப்போம்.. நாம சொன்னா நம்ம பசங்க கேட்பாங்க" என்று சித்ரா சொல்ல,

"நான் கூட கண்ணா மூலமா கீர்த்திகிட்ட பேசணும் நினச்சேன் சித்ரா.. நீ சொல்றதும் சரி தான்.. சின்ன பசங்களுக்கு என்ன தெரிய போகுது! நாம தான் முடிவு செய்யணும்" என்றவர் சித்ரா சொல்வதை தான் சரி என்று நம்பினார் இப்போது.

"அவ்வளவு தான் ண்ணே! இதுக்கு போய் கவலைபட்டுகிட்டு" என்றவர்,

"பட்டுனு கிளம்பி வேலைக்கு போங்க.. இவ்வளவு நேரமும் உங்களுக்கு என்னவோன்னு கீர்த்தி உங்க ரூமையே பார்த்துட்டு இருந்தா" என்றும் சொல்ல,

மெலிதாய் புன்னகைத்தவர் "ஏதோ நியாபகத்துல படுக்கையிலே இருந்துட்டேன்..அக்கறை ஜாஸ்தி" என்றபடி காபியை குடித்து முடித்தார்.

"நல்ல அக்கறை தான்.. ஆனா பேச மட்டும் மாட்டாளாக்கும்" என்றவர்,

"பொண்ணுக்கு கல்யாணம் பேசியாச்சுல்ல.. இனிமேல் தூக்கம் வந்தபாடு தான்.." என்று சொல்லி சிரித்தவரும், ஜெகனிற்கு தேவையானதை எடுத்து வைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

அவள் பேசாத காரணத்தை நினைக்கும் போது முகம் முழுதும் ஜெகனிற்கு வெந்து போவதை தடுக்க முடியவில்லை.

ஆபீஸ் வாசலில் காரை நிறுத்திய ராம் பேக்குடன் திரும்ப, அங்கே அவனுக்காக காத்திருந்தனர் நிஷாவுடன் புதியவன் ஒருவனும்.

தொடரும்..
 
  • Like
Reactions: Vinolia Fernando

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
அப்பாவுக்கும் கவலை
அத்தைக்கு கவலை
ஆனால் கவலையில்லாமால்
அவனும் அவளும்.....
அவன் முகத்தில் ஒரு தெளிவு
அவள் நினைவில் மாற்றம்....
💐💐💐💐💐💐💐💕💕💕💕
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அப்பாவுக்கும் கவலை
அத்தைக்கு கவலை
ஆனால் கவலையில்லாமால்
அவனும் அவளும்.....
அவன் முகத்தில் ஒரு தெளிவு
அவள் நினைவில் மாற்றம்....
💐💐💐💐💐💐💐💕💕💕💕
Wowwww