• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் - 24

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
920
481
93
Tirupur

அத்தியாயம் - 24


24
பவித்ராவும் முகுந்தனும் ஹோமத்தில் அமர்ந்திருந்து ஐயர் கூறும் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருக்க, அந்த வீட்டின் பெரியவர்கள், சிறியவர்கள் வரை அத்தனை பேர் முகத்திலும் மகிழ்ச்சித் தாண்டவமடியது. பெற்றோரின் திருமண நாளுக்காக ஆதித்யன் வாங்கிய வீட்டில் இன்று கிரகப்பிரவேசம் குருவம்மாவின் மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்தது.
வீட்டுக்கு பெரியவர்கள் என அவர்கள் வந்துவிட, ஆதித்யனுக்கு சற்று வேலை குறைந்தது. அதோடு அவனுக்கும் தேனி கல்லூரியில் இரண்டு நாட்கள் தொடர் வேலையாக இருக்க, பாட்டியிடம் அனைத்தையும் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு கிளம்பிவிட்டான்.

பாண்டியனுக்கும் லீவு முடிந்து விட, சேலம் சென்றவர் இன்று காலை தான் விஷேசத்திற்கு என வந்திருந்தார். ஆதனுக்கு வீட்டிலிருந்தே வேலைப் பார்க்கலாம் என்றுவிட, அவனுக்கு ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை. குருவம்மாவுடன் சேர்ந்து ஃபங்க்சனுக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தாலும், பழைய குறும்புக்கார ஆதனைத் தேடத்தான் வேண்டியிருந்தது.

அன்று நிகிதாவின் வீட்டினர் அவளை அழைத்துச் சென்ற பிறகு போனில் கூட ஆதனை அழைக்கவில்லை. அவன் அழைப்பையும் எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சித்தவனுக்கு தோல்வியே பதிலாக கிடைக்க, எரிச்சலும் கோபமும் வர தன் முயற்சியை நிறுத்தியிருந்தான்.

ஆரணியோ தனது ப்ராஜெக்டில் கவனம் செலுத்தி, ஆதித்யனை கண்டு கொள்ளாமல் விட, ஆதித்யனால் பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது.

இவர்களின் சண்டையைப் பார்த்த பெரியவர்களுக்குத்தான் பயம் பிடித்துக் கொண்டது. ஆனால் அவர்களுக்கு ஆதித்யனைப் பற்றித் தெரியவில்லை. ஆரணியை அப்படியே விட்டு விடமாட்டான் என்று யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் பாண்டியன் அதை உணர்ந்தார். காவலதிகாரி அல்லவா, மருமகனின் கண்களில் தெரிந்த தீவிரம், அவன் எந்த வகையிலும் தன் மகளை விட்டுவிட மாட்டான் என்று உணர்ந்து கொண்டார்.

அதனால் தான் விசேஷத்திற்கு ‘வரமாட்டேன்’ என பிடிவாதம் பிடித்த மகளை வற்புறுத்தி அழைத்து வந்தார். அதோடு பல சமாதானங்களையும் ஆதித்யன் பக்கமிருந்து சொல்லி அழைத்து வந்திருந்தார்.

தந்தை சொன்னதால் வேறுவழியின்றி கேட்டவள், ஏனோ தானோவென்று தான் அந்த விசேஷத்திற்கும் வந்திருந்தாள்.

தேனி – மதுரை நெடுஞ்சாலையில் இருந்து ஒரு சாலைப் பிரிந்து சற்றே உள் சென்றால் மலைக் குன்றுகள் அரணாக, அதன் அடிவாரத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட இரண்டு மாடிகள் கொண்ட அழகான வீடு. இரண்டு பெட்ரூம், ஹால், கிட்சன், மற்றும் ஸ்டோர் ரூம், பூஜையறை அதே போலவே மாடியிலும் அமைந்திருந்தது.

வீட்டைச் சுற்றிலும் மரங்கள், பூச்செடிகள், மூலிகைச் செடிகள் என பார்க்கவே ரம்மியமாக இருந்தது அந்த வீடு. மாடி பால்கனியை ஒட்டி மரக்கிளைகள், அந்த மரக்கிளைகள் உள்ளே வராமல் இருக்க, இரும்பினால் ஆன கதவுகள் கொண்ட ஜன்னல். பால்கனியில் ஒரு மூங்கில் ஊஞ்சல், பக்கத்திலே ஒரு டீப்பாயோடு இரண்டு மூங்கில் சேர்கள். அதனருகே ஒரு புக் செல்ஃப். ரசனைக்காரன் தான். இதமான புன்னைகை ஆரணியின் முகத்தில்.

வீட்டில் குழுமியிருந்த யாரையும் கண்டு கொள்ளாமல் ஆதித்யனைத் தவிர்க்கும் பொருட்டு, வீட்டைச் சுற்றிப் பார்க்கும் சாக்கில் வந்தவள் அந்த இடத்தைப் பர்த்ததும் மெய் மறந்து போனாள்.

கம்பி கதவில் படர்ந்திருந்த ஜாதி முல்லையின் வாசம் அந்த இடைத்தையே நிரப்பி, அவளது மனக் கசப்புகளை மெல்ல மெல்ல அழித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த ஊஞ்சலைத் தடவிப் பார்த்தவள் அதில் அமர்ந்து மெதுவாக கால்களை ஊன்றித் தள்ள, ஊஞ்சல் மெல்ல ஆட ஆரம்பித்தது.

அதில் சாய்ந்து அமர்ந்தவள் அந்த நிலையை உணர்ந்து கண் மூட, அப்போது அவளது தோலை இரண்டு கரங்கள் மென்மையாக வருட, கண் விழிக்காமலே அது யாரென்றுப் புரிய உடல் சிலிர்த்து மெல்ல நடுங்கத் தொடங்கியது.

அவள் தள்ளிவிட்டு ஓடாமல் இருந்ததே தனக்கு கிடைத்த பெரிய வெற்றி என அறிந்த ஆதி, அவளது நிலவு போன்ற முகத்தைத் தன் கைகளில் தாங்கி நெற்றியில் மென்மையாக, மிக மிக மென்மையாக இதழ் பதித்தான்.

இதழ் பதித்த நொடி அவள் விழிகளில் இரிஉந்து முல்லைச் சரமாய் நீர் இறங்க, அதில் பதறியவன், “அம்மு.. ப்ளீஸ் அம்மு… அழாதடி, தப்பு எல்லாம் என் மேலதான். ப்ளீஸ்டி குட்டி..” எனக் கெஞ்சியபடியே அவளைத் தன் வயிற்றோடு கட்டிக் கொண்டான். கட்டிக் கொண்டவனின் கண்களும் கலங்கித்தான் போனது.

சில நிமிட அமைதிக்குப்பின் அவளை எழுப்பி, முகத்தைத் துடைத்து விட்டவன், அங்கிருந்த சேரில் அமர்ந்து, அவளையும் தன் அருகிலேயே அமர வைத்துக் கொண்டு அவளின் கைகளை தன் கைகளுக்குள் பொதிந்து வைத்துக் கொண்டான்.

“ம்ம்ம்” என்று பெருமூச்சு விட்டு, “உனக்கு முதல்ல இருந்து முழுசா சொன்னாதான் எல்லாம் புரியும்,” என்றவன் தன் பெற்றோரின் திருமணத்தைப் பற்றிச் சொல்லி, அதனால் குடும்பங்களுக்குள் நடந்த பிரச்சனைகளை எடுத்து சொன்னவன்,

“அம்மாவுக்கு ஊருக்கு வரனும்னு ரொம்ப ஆசை. அப்பாவுக்கும் தான். ஆனால் மாமாவும், தாத்தாவும் எப்படி எடுத்துப்பாங்க, எந்த மாதிரியான மனநிலையில் இருக்காங்க எதுவும் தெரியாம என்ன செய்றதுனு அப்பா எல்லாத்தையும் தள்ளிப் போட்டுக்கிட்டே இருந்தாங்க. ஆனா அம்மாவோட ஏக்கம் அதிகமாகி அது பிரசர்ல கொண்டு போய் விடவும் எல்லாருமே ரொம்ப பயந்துட்டோம்.”

“இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்னு முடிவு செய்து தான் அப்பாக்கிட்ட விவரமா எல்லாத்தையும் கேட்டேன். கேட்டுட்டு அடுத்து என்ன செய்றதுன்னு யோசிக்கும் போது தான், சென்னைல கதிரை மீட் செய்ற சூழல் வந்தது.”

“கதிரும் நானும் யுஜில காலேஜ் மேட், அவனோட ஊர் தேனி அப்படிங்கிறதை தவிர அவனைப் பத்தி ஒன்னும் தெரியாது. ஆனா அந்த ஊர் தான் அடுத்தடுத்து அவன் கூட என்னைப் பேச வச்சது. ப்ரண்டாக வச்சது. மத்தபடி ஃபேமிலி மேட்டர் பத்தி எல்லாம் பேசிக்கிட்டது இல்ல நாங்க. யுஜி முடிஞ்சி நானும் வேற காலேஜ், அவனும் வேற காலேஜ். சோ டச் விட்டுப் போயிடுச்சு.”

“நான் அம்மா பிரச்சனைல என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது தான் அவனை மறுபடியும் பார்த்தேன். அவன் மூலமா எதுவும் ஹெல்ப் கிடைக்குமான்னு பேசிப் பார்க்கும் போது தான், கதிர் நமக்கு க்ளோஸ் ரிலேட்டிவ்னே தெரிஞ்சது.”

“இப்போ அங்க எப்படி என்ன சூழல்னு தெரிஞ்சி, அடுத்து என்ன செய்யலாம்னு ப்ளான் பண்ணோம். அதோட ஃபர்ஸ்ட் ஸ்டெப் தான் தாத்தாவை பார்த்தது.

கதிர் தான் கூட்டிட்டு வந்தான். முதல்ல ரொம்பவே கோபப்பட்டார். பேசி பேசி தான் சரி செய்ய முடிஞ்சது.”

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள் “அவரோட கோபம் தப்பில்லையே” என்றாள் ஆரணி மெல்ல.

“இல்ல.. நான் தப்புன்னு சொல்லவே இல்ல. இங்க தப்பு செய்தது எல்லாரும் தான். ஆனா... அதிகமான தப்பு என் பேரன்ட்ஸ் மேலதான் இருக்கு. அதை நான் இல்லைன்னு சொல்லவே இல்ல. சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி எல்லாத்தையும் பேசி அன்னைக்கே இல்லைன்னாலும், நாங்க பிறந்த கொஞ்ச நாள்லயே சரி செய்துருக்கலாம், ஆனா செய்யல.”

“காலம் தாழ்த்தி கேட்கப்படுற ஒவ்வொரு மன்னிப்புக்கும் மதிப்பே இல்லைன்னு எனக்குப் புரிஞ்சது. அம்மாவோட பயம் தான் அப்பாவை எதுவும் செய்ய முடியாம செய்திருக்கு. ஆனா.. அப்பா சும்மா இல்லை. கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள் வரைக்கும் கதிரோட அப்பாக்கூட கான்டாக்ட்ல இருந்திருக்கார். நீ ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழாம நான் வாழமாட்டேன்னும் சொல்லிருக்கார்.”

“அப்பா முடிவா சொல்லவும் கேசவ்..அப்பாக்கும் வேற வழி தெரியாம, சுந்தரிம்மாவை அவசர அவசரமா கல்யாணம் செய்துருக்கார். அதுக்குப் பிறகுதான் அம்மாவும் அப்பாவும் நிம்மதியா வாழ்ந்துருக்காங்க..” எனப் பெருமூச்சு விட்டவன், மரக்கிளையில் அமர்ந்திருந்த குருவியைப் பார்க்க, அவன் பார்த்த நேரம் அது சிறகடித்து பறந்து அவனருகே வந்து அமர்ந்தது.

அவனருகே அமர்ந்த நேரம் எங்கிருந்து வந்ததோ திடீரென்று மற்றொரு குருவியும் அந்தக் குருவியை ஒட்டி அமர்ந்தது. மற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் அதுகளிரண்டும் ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டது, இறக்கைகளை கொண்டு அடித்துக் கொண்டது.

அதையே பார்த்துக் கொண்டிருந்த அவனின் கைகளை பெண்ணவள் அழுத்த, அதில் தன்னிலை வந்தவன், அவளைப் பார்க்க, ‘ம்ம் என்னாச்சு’ எனும் விதமாக புருவம் உயர்த்த, தன் கைகளுக்குள் இருந்த ஆரணியின் கைகளை எடுத்து தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டவன், “என் பேரன்ஸ் லவ் பார்த்து, அதனால ஏற்பட்ட சிக்கல பார்த்து இந்த லவ் மேல அவ்வளவு எரிச்சல், கோபம். எங்கேயாவது ஜோடியா லவ்வர்ஸ பார்த்தா நாலு அறை விட்டா என்னன்னு கூட தோனும். எல்லாம் உன்னைப் பார்க்குற வரைக்கும் தான்.” என்றான் ஆத்மார்த்தமாக.

‘ம்ம் பொய்..’ என வம்பிழுக்க நினைத்தாலும் முடியவில்லை பெண்ணால். அவனது ஆழ்ந்த குரல் அவளை கட்டிப் போட்டிருந்தது.

“தாத்தாவைப் பார்த்து பேசி சமாதானம் செய்த பிறகு தான் எல்லாம் ப்ளான் செஞ்சோம். என்ன தான் இன்னைக்கு சமுதாயத்துல கலப்புத் திருமணம் பெரிய அளவுல பேசப் பட்டாலும், அப்பாவுக்கு அதை ஏத்துக்க முடியல. தாத்தா வீட்டுல வேலை செஞ்சிட்டு, சூழ்னிலை தான் என்றாலும் அவங்க பொண்ணையே கல்யாணம் செய்தது எல்லாம் ரொம்பவே குற்ற உணர்ச்சியக் கொடுத்துடுச்சு. அதனால அவரால் அந்த வீட்டுல வந்து இருக்க முடியும்னு எனக்கு தோனல.”

“அவர்கிட்ட பேசி இங்க வீடு வாங்கனும்னு முடிவு பண்ணேன். அதுவும் அவங்க வெட்டிங்க் டே அப்போவே ப்ரெசென்ட் செய்யனும்னு யோசிச்சு, கட்டின வீடாவே வாங்கினேன்.”

“கதிர் எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணான், அவன் மூலமாதான் உன்னை எனக்கு முதல்ல் தெரியும். ‘எனக்கு ஒரு அத்தைப் பொண்ணு இருக்குடா அது ஒரு அராத்து’ காலேஜ் டைம்லயே இப்படி தான் சொல்வான். இப்போ அது கொஞ்சமும் குறையல, இன்னும் அதிகமாச்சு, அவன் வாய் திறந்தாளே உன்னைப் பத்தி தான் பேசிட்டே இருப்பான். அதைக் கேட்டு கேட்டு எனக்கு உன்னைப் பார்த்தே ஆகனும்னு தோனுச்சு. தாத்தாக்கிட்ட கேட்டேன். வீட்டுக்கு வாங்கன்னு சொல்லவும் தான், நானும் ஆதனும் ஊருக்கு வந்தது.”

“ஆனா.. நீ மரத்துல இருந்து குதிக்கவும் எப்பா..” என்றவன் அன்றைய நிகழ்வை நினைத்து இப்போதும் வாய்விட்டு சிரித்தான். அவன் சிரிப்பதைக் கண்டு “ஏய் சிரிக்காதீங்க.. சிரிக்காதீங்க சொல்றேன்ல..” எனச் சிணுங்கிக் கொண்டே அவன் கைகளில் இருந்த தன் கையை உருவி, தொடையில் கிள்ளி வைக்க,

“லூசி..” என கையைத் தட்டிவிட்டவன், கிள்ளிய இடத்தைத் தடவி விட்டவாறே

“அதெப்படி நிக்கியையும் உன்னை மாதிரியே மாத்தி வச்சிருக்க, ஒரு வீட்டுக்கு வர்ற ரெண்டு மருமகளும் ஒரே மாதிரி இருந்தா என்னடி செய்ய.? பாவம் எங்க அம்மா..” என மேலும் சிரிக்க,

“ம்ச்.. சும்மா இருங்க. அதெல்லாம் அப்போ மாறிடுவோம். ஆதன் எப்படி இருக்கார்.? நிக்கிக்கிட்ட பேசினாரா.?” என வருத்தமாகக் கேட்க

“ம்ம்… நிக்கி போனை எடுக்கவே இல்ல போல. இவனும் டென்சன் ஆகிட்டான். அடுத்து போனே பண்ணல. ஆனா எல்லாம் சரியாகிடும். சங்கர் அங்கிள்கிட்ட பேசிட்டு தான் வந்துருக்கேன்னு மாமா சொன்னார். நல்ல முடிவா தான் எடுப்பாங்கன்னு நம்புவோம். இந்த ரெண்டு லூசும் தப்பா எந்த முடிவும் எடுக்காம இருந்தா சரி..”

“ம்ம்.. நிக்கிக்கு ரொம்ப பயந்த சுபாவம். யாரும் எதுவும் தப்பாச் சொல்லி விடுவாங்களோன்னு எப்பவும் யோசிச்சிட்டே இருப்பா. அவளோட லவ் மேட்டரை எங்கிட்ட சொல்லாததுக்கு இதுவும் ஒரு காரணமா இருக்கும். அவ எங்கிட்ட சொல்லாம இருந்தது கோபத்தைக் கொடுத்தாலும், நிக்கியோட மனசு எனக்குப் புரிஞ்சதால அதை ஈசியா எடுக்க முடிஞ்சது.

ஆதனும் இப்படி இருக்கனும்னு சொல்ல வரல. பட் புரிஞ்சிக்கிட்டா நல்லா இருக்கும்.” என்றவள், “நீங்க அப்படியே பேசி டாப்பிக்க மாத்தாதீங்க..” என்றதும், பக்கத்தில் இருந்தவளை அள்ளித் தன் மடியில் அமர்த்தியவன்,

“அதுக்கு வாய்ப்பே இல்லடி ராஜாத்தி, இன்னைக்கு எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிடனும்னு ஒரு முடிவோட தான் இருக்கேன்..” என்று அவள் இடையை இறுக்கிக் கொண்டு கழுத்தில் முகம் புதைத்தான்.

“நீங்க செய்றத பார்த்தா பேச வந்த மாதிரி தெரில ஆஃபிசர்..” என அவன் தொடுகைக்கு நெளிந்தபடி சொல்ல,

“ம்ம்.. மேடம் இத்தனை நாளா என்னை டென்சன் பண்ணதுக்கு எல்லாம் மொத்தமா வசூலிச்சுக்கிறேன், அப்புறமா எல்லாம் சொல்றேன்..” என்றவன் கழுத்தில் தன் மீசை ரோமங்கள் உரச உதடுகளை மேலும், கீழும் இழுக்க,

“ம்ம்… ச்ச் மாமா கூசுது. என்ன பன்றீங்க,” என அவனைத் தள்ளிவிட,

“ஓ.. மாமான்னே மேடம் வாயில இருந்து இப்போதான் வருது. இவ்வளவு நாள் எங்கே போச்சாம்.” என அவள் தள்ளியதை கண்டு கொள்ளாமல் மேலும் தன்னிடம் இழுக்க, அப்படியே அவன் சாய்ந்தவளின் கைகளும் இப்போது அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள,

“இப்படி இருக்குறது எவ்வளவு சுகம் தெரியுமா.?” என்றபடியே கட்டிக் கொண்டவனின் முகத்திலும் சரி, கட்டுண்டவளின் முகத்திலும் சரி ஆயிரமாயிரம் வர்ணஜாலங்கள் வந்து போனது.
 
Last edited:

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
251
158
43
Theni
ஆரு.. இதென்ன உடனே சமாதானம் ஆகிட்ட
இவ்லோதான் உன் கோபமா?
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
39
7
8
Ullagaram
ஐய்யய்யே...! இந்த ஆரு என்ன உடனே சமாதானம் ஆகிட்டா... ? இது ரொம்ப தப்பாச்சே. எப்படியும், பொய் சொல்லி ஏமாத்துனதுக்கும், லவ்வே பண்ணலைன்னு பொய் சொன்னதுக்கும், ஒரு பத்து இருபது சவரன்ல ஆரம் வாங்கிடணும் இல்லை. இவ சுத்த வேஸ்ட்.
ஒரு முத்தத்துக்கே மொத்தமா தூக்கி கொடுத்துடுவா போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Last edited: