• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் 25

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 25

"ராம் ஒரு நிமிஷம்" என்ற அழைப்பிற்கு கொஞ்சமும் செவி சாய்க்காமல் ஆபீஸ் வாசலை நோக்கி நடந்து கொண்டிருந்தான் ராம்.

"ராம்! ராம்! ராம் ப்ளீஸ்" என்றபடி அவன் பின்னோட வந்த ராஜேஷ் வேகமாய் வந்து ராம் முன்பு நின்றான்.

மெதுவாய் மட்டுமே அவர்களை தொடர்ந்து கொண்டிருந்தாள் நிஷா.

வரவே மாட்டேன் என்றவளை ராஜேஷ் தான் வழுக்கட்டாயமாய் இழுத்து வந்திருந்தான்.

ராஜேஷ் மன்னிப்பு கேட்க என வந்திருக்க, நிஷாவிற்கு அந்த எண்ணம் துளியும் இல்லை.

தெரியாமல் செய்த தவறிற்கு மன்னிப்பு கேட்கலாம்.. தெரிந்தே செய்த தவறுக்கு என்னவென்று அவன் முன் சென்று மன்னிப்பு கேட்க?

அதுவும் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு சிறிய தவறா அவளுடையது? எந்த முகத்தை வைத்து அவன்முன் நிற்பது என தெரியாமல் குற்ற உணர்வில் தான் அவள் அவன் அருகே வரவில்லை.

ராஜேஷ் நிஷாவிற்கும் சேர்த்து பேசவே வந்திருந்தான். ஒரு வகையில் தனக்காக தன் மனைவி சய்த தியாகம் தானே இது? என்பது தான் அவனுடைய வாதம்.

பலமுறை சண்டையிட்டு வரவே முடியாது என்றவளை பிடித்து இழுத்து தான் அவன் சொல் படி அவனே தான் இழுத்து வந்திருந்தான்.

"யார் நீ?" முதல் வார்த்தையாய் இது தான் வந்தது ராமிடம்.

"நான் ராஜேஷ்! நிஷாவோட..." என்று ராஜேஷ் பேச வர, கைநீட்டி தடுத்திருந்தான் ராம்.

கோபம் அத்தனை வந்தது தான்.. அவ்வளவு பொறுத்து போகிறவனும் இல்லை தான்.. ஆனால் இருந்தான் பொறுமையாய் அந்த நிமிடம்.

கைநீட்டி தடுத்தவன் அதே கோபத்தில் ஒற்றை விரலை நீட்டி பார்வையால் எச்சரிக்க, நிஷா ஓடி வந்திருந்தாள் அடுத்த நொடியினில்.

"ராம் ப்ளீஸ்!" என்றபடி அவள் வர,

"ஏய்!" என்றவன் அதே விரலை அவள்முன் நீட்டிட, அவளுக்கு முன் வந்து நின்றிருந்தான் ராஜேஷ்.

ஒரு நொடி மட்டுமே இருவரையும் பார்த்தவன், முகத்தில் இகழ்ச்சியைக் கொண்டு வந்து கையை உதறிவிட்டு நடக்க,

நிஷா கைகளை அழுத்திக் கொடுத்துவிட்டு ராம் பின் நடந்த ராஜேஷ், ராமின் கோப நடைக்கு ஈடு கொடுத்து வந்து பேசினான்.

"ராம்! ஐம் ரியல்லி சாரி.. நிஷா சார்பா நான் மன்னிப்பு கேட்க தான் வந்தேன்.. நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கணும்" என்று பேசியபடியே ராம் பின்னே நடக்க,

"ஷட்டப்! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின..." என்று மீண்டும் ஒற்றை விரலை ராஜேஷை நோக்கி நீட்டியவன்,

"இன்னொரு முறை இப்படி வந்து நின்னுடாத.. இதே பொறுமை எப்பவும் என்கிட்ட இருக்காது" என்றவன் பார்வை, சொன்னதை செய்வதாய் இருக்க, அதன்பின் அவனை தொந்தரவு செய்யவில்லை ராஜேஷ்.

ராம் ரத்தம் முதல் நரம்புகள் வரை அனைத்தும் கொதித்து தான் போயிருந்தது. பார்த்த அடுத்த நிமிடமே அறைந்து தள்ளும் வேகமும் வந்தது.

தன்னை ஏமாற்றியது தான் ஏமாந்தது ஒரு புறம் என்றாலும் கண்ணனின் செயல் மட்டுமே கண்முன் வந்து நின்றது.

தன்னால் தானே கண்ணன் அன்று இன்னொருவன் காலில் விழும் நிலை? இனி தன்னால் எந்தவித பிரச்சனையும் குடும்பத்திற்கு வரவிடக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்தான்.

ராஜேஷை பார்வையால் எச்சரித்த நிமிடம் கண்ணன் தான் கண்முன்னே வந்து நின்றான்.

தனக்காக எதையும் செய்பவனை எதையும் செய்ய வைக்க கூடாது தானே? அதனால் மட்டுமே இந்த பொறுமை கூட.

இன்னும் ஒன்று என்னவென்றால் வரும்போது இருந்த மனநிலை தான். கீர்த்தியைப் பார்த்து அவளைப் பற்றி என நினைத்து வந்தவனுக்கு கோபத்தை அடக்குவதும் பொறுமையை கைபிடிப்பதும் பெரிதாக தெரியவில்லை.

இதமான மனநிலையை கெடுப்பது போல இருந்தாலும் அது தந்த இதம் தான் ராமின் மாற்றம்.

"என்ன நிஷா! கொஞ்சமாச்சும் புரிஞ்சிப்பார்னு நினச்சேன்" ராஜேஷ் கவலையாய் கூற,

"எனக்கு தெரியும் ராஜேஷ்.. ஆனா இதைவிட அதிக கோபத்தை தான் எதிர்பார்த்தேன்.. உங்க மேல கை வச்சுட கூடாதுன்னு தான் நான் வந்தேன்.. என்னவோ ராம் இவ்வளவு பொறுமையா போனது அதிசயம் தான்.." என்றாள் நிஷா.

"அந்த அண்ணாமலை வேற உன்னையும் என்னையும் வாழ விட மாட்டேன்னுறான்.. அன்னைக்கு ராம் தம்பி அவன் காலுல விழுந்த அப்ப எனக்கே ஒரு நிமிஷம் ஆடி போச்சு நிஷா.. அண்ணனுக்காக தான் ஆனாலும் அப்படி செய்ய நல்ல மனசு வேணுமே! ரொம்ப நல்ல குடும்பம் தான்.. நாம தான் அவங்களை கஷ்டப்படுத்திட்டோம்" உணர்ந்து கூறினான் ராஜேஷ்.

"எல்லாமே மாறும் ராஜேஷ்! ராம்க்கு ஒரு நல்ல பொண்ணு மனைவியா வந்தா என்னை மன்னிக்க வாய்ப்பு இருக்கு.. காலம் வரணும்.."

"ஆனா இப்ப எப்படி அவரை சமாதானப்படுத்துறது?" ராஜேஷ் கேட்க,

"ராம்கிட்ட நாம நினச்ச நேரம் மன்னிப்பு கேட்க முடியாது ராஜேஷ்.. ராம் மனசு வச்சு நம்மை மன்னிச்சா தான் உண்டு.. அதுக்கு ஒரு காலம் வரும்" ராம் போன திசை பார்த்து நிஷா கூற, அதை அமோதித்து நின்றான் ராஜேஷ்.

"உங்களுக்கு என்ன? நானே லீவ் போட சொன்னா கூட போட மாட்டிங்க.. இன்னைக்கு டையர்டுன்னு சொல்றிங்க?" சித்ரா தங்கராஜிடம் கேட்க,

"என்னவோ மனசு சரி இல்ல சித்து.." என்றவர் முகமே அவர் கவலையை கூறியது.

"நீங்க பொங்கல் அன்னைக்கே சரி இல்ல.. நானும் நீங்களே சரி ஆகிடுவீங்கனு நினச்சேன்.. என்ன தான்ங்க உங்க பிரச்சனை?" கணவனின் கவலையில் சித்ராவும் கவலை கொள்ள,

"நம்ம பசங்களை தவிர வேற எதை நான் நினைக்க போறேன் சித்து.. நல்லா வளர்ந்துட்டாங்க.." கண்ணில் தோன்றிய புன்னகையுடன் அவர் கூற,

"ராம்க்கு கல்யாணம் பேசுறோமே! அதை தான் சொல்றிங்களா? நீங்க தானே அவங்க பக்குவம் பத்தி பேசுவீங்க? இப்ப என்ன?" என்றார் புரியாமல்.

"சரி தான்.. ஆனாலும் என்னவோ தோணிச்சு.. அதான் கிளம்பவே தோணல.." என்றார்.

"கவலைப்பட என்ன இருக்கு.. மூணு பசங்களையும் நல்லா வளர்த்துருக்கோம்.. அதுக்கே நாம சந்தோசப்படனும்.. ராம் கூட பாருங்க.. அந்த நிஷாவை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துடுவானோன்னு நினச்சேன்.. ஆனா அந்த நிஷா ஏதோ பெருசா பண்ணிருக்கா.. இல்லைனா அவன் வேண்டாம்னு சொல்ல மாட்டான்.. ராம் அப்படிபட்டவனும் இல்ல.. ஏதோ நடந்திருக்கு" சித்ரா கூற,

"ப்ச்! அதான் முடிஞ்சு போச்சே சித்து.. விடு.. ஆமா ஜெகாவை பார்க்க போனியே! என்ன சொன்னான்?" பேச்சை மாற்றினார் தங்கராஜ்.

"என்ன சொல்லுவாங்க.. பொண்ணை நினச்சு ரொம்ப கவலை அண்ணனுக்கு. ரெண்டு நாள் பார்ப்போம்.. இல்லைனா நிச்சயத்த வச்சுப்போம்னு சொன்ன பிறகு தான் கொஞ்சம் தெளிவா தெரிஞ்சது அவரு முகம்.."

"அதுக்காக பசங்க விருப்பம் இல்லாம பண்ணிட முடியுமா? உன்கிட்ட எவ்வளவு சொல்றது சித்து?"

"நானும் உடனே பண்ணனும் சொல்லலங்க.. ரெண்டு நாள் பார்ப்போம் பதில் வரலைனா தான் செய்வோம்னு சொல்றேன்.. அதுவும் ராம் தான் தெளிவா சொல்லி இருக்கானே! கீர்த்திகிட்ட கூட என்னால பேசி புரிய வைக்க முடியும்" என்று தெளிவாய் சித்ரா சொல்ல,

"பசங்களுக்கு தெரியாம எதுவும் செஞ்சு வைக்காத சித்து.. பாவம்! அவங்க வாழ்க்கையை அவங்க தான் வாழனும்" தங்கராஜ் சொல்ல,

"கொஞ்ச நாளா நீங்க ஆளே சரி இல்ல.. என்னென்னவோ பேசுறீங்க.. ராம் தான் என்ன பண்ண போறானோனு பயந்தேன்.. இனி அந்த பயம் கூட எனக்கு இல்ல.. அடுத்து கண்ணனுக்கு அப்புவையும் முடிச்சுட்டா லதாவை ரெண்டு பேரும் சேர்ந்து கரை ஏத்திடுவாங்க.. எங்க அண்ணி ஆத்மா கூட அப்ப தான் சாந்தி அடையும்" சித்ரா உணர்ந்து சொல்ல,

"நாம நினைக்குறது எல்லாம் நடந்திடுமா மா? ஆனாலும் நல்லதே நினைப்போம்.. உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்" தங்கராஜ் மனைவியை வாஞ்சையுடன் பார்த்து சொல்ல,

"அப்படி நல்ல வார்த்தையா சொல்லி பழகுங்க" என்று சிரித்தவர் எழுந்து சென்றார்.

தங்கராஜ் இன்னும் முன்பு நடந்ததையே தான் நினைத்து நின்றார். நிஷா, காதல் இதையெல்லாம் தவிர்த்து ராம் வாழ்வில் பல மாற்றங்கள். இப்போது பார்த்தால் அனைத்தும் ஏற்க கூடியதும் தான்.

ராமிடம் இருக்கும் மாற்றங்கள் அவருக்கு புரியாமல் இல்லை. கோபத்தை குறைக்கும் வழி எளிது தான் ஆனால் அதை கடைபிடிப்பது கடினம் என்பதை அறிந்தவர் தங்கராஜ்.

கண்ணன் தன் அண்ணனுக்காக செய்த செயலில் ராம் சற்று நெகிழ்ந்திருக்கிறான் என்பதும் அவருக்கு புரிந்தது.

ராமின் தற்போதைய மாற்றங்கள் மனதிற்கு அத்தனை சந்தோஷம் கொடுத்தாலும் இது நிரந்தரமாய் இருக்க வேண்டுமே என்ற எண்ணமும் இருந்தது.

கீர்த்தியையும் மனதில் வைத்து தான் யோசித்தார் தங்கராஜ். கீர்த்திக்கு ராம் பற்றி அனைத்தும் தெரிந்திருக்கும் கண்ணன் மூலம் என்பது அவன் அறையில் அன்று நடந்ததை வைத்தே முடிவு செய்ய ஏதுவாய் இருக்க, இதனால் பின்னாளில் இருவருக்கும் பிரச்சனைகள் வர கூடாதே என்றும் தோன்றாமல் இல்லை.

'ஒருவேளை கீர்த்தி ராமை ஏற்று கொள்ள தயங்குவதும் இதனால் தானோ?' என்று தான் அவர் மனம் அரித்துக் கொண்டிருந்தது.

ராம் கீர்த்தியை ஏற்று கொள்ள ஆயிரம் காரணம் இருக்கலாம் ஆனால் கீர்த்தி மறுக்க காரணம் ஒன்று ராமின் குணம், இல்லையென்றால் அவனின் முந்தைய வாழ்க்கை.. இதை தவிர என்ன இருக்க முடியும்? இந்த ஒன்றை தவிர்த்து பார்த்தால் ராமிடம் எந்த ஒரு தவறும் இல்லை என்று அடித்து சொல்ல முடியுமே!

இப்படி நினைத்து கவலை கொண்டிருந்ததில் அந்த நாள் அமைதியாய் கழிய, இதைப் பற்றி யாரிடம் பேசுவது என தெரியாமல் குழம்பி தான் முடிந்தது.

மாலை வேலை முடிந்து கண்ணன் வாசலில் பைக்கை நிறுத்திய போது வாசலில் அமர்ந்திருந்தார் ஜெகன்.

"என்ன மாமா இந்நேரம் வீட்ல? லோட் போகல?" கண்ணன் கேட்டபடி பைக் சாவியை எடுத்துக் கொண்டு அவர் அருகே வர,

"மாணிக்கம் பாத்துக்குறான் கண்ணா! நம்ம கீர்த்திக்கு லேசா ஜுரம் மாதிரி இருக்கு.. காலையில லேட்டா தான் போனா..மூணு மணிக்கா பிரண்ட்ஸ் வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு போறாங்க.. ஹாஸ்பிடல் போலாமானு பார்த்தா எழுந்துக்கவே மாட்டுக்குறா.. அதான் சித்ரா வரட்டும்னு பார்த்துட்டு இருக்கேன்" என்றார்.

"அம்மா எங்க மாமா? வீட்ல இல்லையா? கீர்த்தி எப்படி இருக்கா?" கண்ணன் கேட்டபடி கீர்த்தி அறைக்கு செல்ல, பின்னோடே சென்றார் ஜெகன்.

"கோவிலுக்கு போயிருக்கா போல கண்ணா.. அப்பா மட்டும் தான் வீட்டுல இருந்தாரு"

"என்ன மாமா நீங்க? அப்பாகிட்ட சொன்னா கார் எடுத்துட்டு கூட்டிட்டு போயிருக்க போறாங்க.. இப்படி பார்த்துட்டு இருப்பிங்களா?" என்று கீர்த்தியின் நெற்றியை தொட்டுப் பார்க்க, நன்றாய் சூடு தெரிந்தது.

தொடரும்..
 
  • Like
Reactions: Vinolia Fernando

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
தன் தம்பியின் பாசத்தால்
தன் கோபத்தை கட்டுப்படுத்தி
தன்னை தேடி வந்த ராஜேஷை
தள்ளி வைத்து முறைத்து விட்டு
தள்ளி ராம் செல்ல....
தன் தவறை உணர்ந்த நிஷாக்கு
தவறுக்கு மன்னிப்பு கிடைக்காது
தவிக்க மட்டும் தான் முடியும்....
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
தன் தம்பியின் பாசத்தால்
தன் கோபத்தை கட்டுப்படுத்தி
தன்னை தேடி வந்த ராஜேஷை
தள்ளி வைத்து முறைத்து விட்டு
தள்ளி ராம் செல்ல....
தன் தவறை உணர்ந்த நிஷாக்கு
தவறுக்கு மன்னிப்பு கிடைக்காது
தவிக்க மட்டும் தான் முடியும்....
😍😍😍