• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் 29

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 29

"ராம்க்கு இப்ப இல்லைனா மூணு வருஷம் கல்யாணம் தள்ளி போகும்னு ஜோசியர் சொல்லறாரு.. ரெண்டு பேருமே பிடி கொடுக்கலைனா எப்படி? அவனை கூட முன்ன மாதிரி இல்லை அதுனால சமாளிச்சுக்கலாம்.. நீ தான் டா மா சொல்லணும்.. நிச்சயம் வச்சுக்கலாமா?" சித்ரா ஆசையாய் கேட்டுக் கொண்டிருக்க,

"இவளுக்காக எல்லாம் உடனே ஓகே சொல்லிடாத கீர்த்தி.. அம்மாவும் புள்ளையும் சரியான ஆளுங்க.. நினைச்சதை சாதிக்குற வரை ஆட்டம் தான் ஆடுவாங்க" என்றபடி அவர்கள் அருகே வந்து அமர்ந்தார் தங்கராஜ்.

"மாமா!" என்றபடி கீர்த்தி சிரிக்க,

"உங்களுக்கு ஏதாச்சும் குறை சொல்லிட்டே இருக்கனும்.. நாங்க தான் பேசிட்டு இருக்கோம்ல? என்ன இடையில வந்து தலையை விடறது?" என்றார் சித்ரா.

"தலை, காலு எல்லாத்தையும் விடுவேன் சித்து மா.. போகும் போது கண்ணா சொல்லிட்டு தான் போயிருக்கான்.. அம்மா கீர்த்தியை அடிச்சு கூட சம்மதம் கேட்பாங்க.. கூட இருந்து பார்த்துக்கோங்கனு.." தங்கராஜ் கூறவும் கீர்த்தி சிரிக்க,

"அவனுக்கு இதே வேலையா போச்சு" என்று புலம்ப துவங்க,

"உன் அத்தை ஆரம்பிச்சுட்டா கீர்த்தி" என்றார் தங்கராஜ் கீர்த்தியிடம் சிரிப்புடன்.

"உனக்கு என்ன தோணுது அதை சொல்லு கீர்த்தி.. உன் அத்தையை எல்லாம் நினைக்காத.. உனக்கு ராம் ஓகேவா இல்லையா? உன் மனசு என்ன சொல்லுதோ அதை சொல்லு.. நிச்சயமா நானோ உன் அத்தையோ எந்த முடிவா இருந்தாலும் ஏற்த்துப்போம்" என்றார் தங்கராஜ் தன்மையாய்.

இது தான் சரியான நேரம் என தோன்றியது கீர்த்திக்கு. கூறிவிடலாம் என்ற முடிவிற்கும் வந்துவிட்டவள் முதலில் தயக்கமாய் சித்ராவை தான் பார்த்தாள்.

என்ன நினைப்பரோ என்ற அச்சம் இருந்தாலும் இதில் இருவர் வாழ்க்கையுடன் இரு குடும்பத்தின் உறவும் உள்ளதே! என நினைத்தவளாள் மறைக்க முடியவில்லை.

"சொல்லு கீர்த்தி மா" என்று சித்ராவும் ஊக்கப்படுத்த,

"அத்தை! மாமா! நான் சொல்றதை நீங்க முழுசா கேட்கணும்.. என்னை புரிஞ்சிப்பீங்கனு நம்புறேன்.. அப்புறம் முடிவை நீங்களே சொல்லுங்க.. ஆனா என்னை தப்பா மட்டும் நினைச்சுடாதிங்க" என்று தயங்கி தயங்கி கீர்த்தி கூற,

சித்ரா எதுவோ சொல்ல வரவும், கையமர்த்தி தங்கராஜ் மனைவியை தடுத்தவர்,

"நீ சொல்லு டா" என்றார் கீர்த்தியிடம்.

ராம்! இவனைப் பற்றி தனது எண்ணவோட்டம் என ஆரம்பித்தவள், அவன் தனக்கு எவ்வளவு முக்கியமானவன் என்பதை தெளிவாய் கூறினாள்.

தனக்கு பிடிக்கும் என்று சொல்வது வேறு! அதை கூறும் பொழுது தன்னை என்ன நினைப்பார்களோ என்ற பயம் வேறு!

அதற்காக எதையும் மறைக்க விரும்பவில்லை கீர்த்தி. இவ்வளவு பாசமாய் உரிமையாய் கேட்பவர்களிடம் போனால் போகிறது என்பதை போல சம்மதம் கூற மனம் வரவில்லை.

உண்மையை கூறிவிட்டு அவர்கள் பதிலுகாக வேண்டி பார்த்து நின்றாள்.

"அவங்களை எனக்கு எப்பவுமே பிடிக்கும் அத்தை.. இப்ப இதை உங்ககிட்ட சொல்லாம மறைச்சு உங்களுக்காக நான் சம்மதம் சொல்றது மாதிரி சொன்னா எனக்கே அது கில்ட்டியா பீல் ஆகும்.. அதுனால தான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்.. கண்ணாக்கு கூட முன்னாடியே தெரியும்... நீங்க என்னை தப்பா நினைக்கல தானே?"

எங்கே எதுவும் நினைத்து விடுவார்களோ என்ற தவிப்பு கீர்த்தி கண்களில் அப்பட்டமாய் தெரிய, ஆச்சர்யமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தனர் சித்ராவுடன் தங்கராஜும்.

சில நொடிகளில் அந்த ஆச்சர்ய பாவம் மறைந்து கொஞ்சம் கொஞ்சமாய் இருவர் முகத்தினிலும் புன்னகை பரவ, அதுவரையுமே கீர்த்தி தவிப்புடன் தான் அமர்ந்திருந்தாள்.

"எனக்கு தெரியும்ங்க என் மருமகளை பத்தி.. நான் தான் அப்பவே சொன்னேனே! இது சாமி போட்ட முடிச்சுங்க" சந்தோஷத்தில் கீர்த்திபுறம் வந்து அவளை அணைத்தபடி சித்ரா ஆனந்த கூச்சலிட, மென்னகையுடன் பார்த்திருந்தார் தங்கராஜ்.

"மாமா! நீங்க எதுவும்...?" அத்தையின் மனம் புரிந்து கொண்டாலும் கீர்த்தி தயங்க,

"ராம் ஏதோ புண்ணியம் பண்ணியிருக்கான் டா.. வேற என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல.. நாங்க எல்லாம் இப்ப மாறின ராம்க்காக தான் உன்கிட்ட பேசினோம்.. ஆனா ராமை அப்போ இப்போனு இல்லாமல் ராமாவே உனக்கு பிடிக்கும்னு நீ சொன்னதும் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. நீங்க சந்தோசமா இருப்பிங்க டா" என்றார் கொஞ்சம் உணர்ச்சி பூர்வமாய்.

"தேங்க்ஸ் மாமா" நெகிழ்ந்து போய் கீர்த்தி கூற,

"இந்த கண்ணா சரியான பைய தான்.. இதை பத்தி வாயை திறந்திருப்பானா? ஐயோ! இதை நான் இப்ப அண்ணன்கிட்ட சொல்லியே ஆகணும்" என்ற சித்ரா மொபைலை கையில் எடுக்க,

"இனி உன் அத்தையை கையிலேயே பிடிக்க முடியாது கீர்த்தி" என்று கிண்டல் செய்தார் தங்கராஜ்.

"என்னை சொல்றது இருக்கட்டும்.. எவ்வளவு வேலை இருக்கு? நாள் பார்க்கணும், மண்டபம் பார்க்கணும்.. இப்பல்லாம் மண்டபம் கிடைக்குறதே குதிரைக் கொம்பா தான் இருக்கு.. அப்பாவா கொஞ்சம் பொறுப்பா இருங்க" என்று அறிவுரை வேறு கணவனுக்கு சித்ரா வழங்க,

சிவந்த முகத்துடன் புன்னகையுமாய் நின்றிருந்தாள் கீர்த்தி.

"பார்த்தியா! இனி கல்யாணம் முடியுற வரை நான் காதுல பஞ்சு தான் வச்சுக்கணும் கீர்த்தி!" என்று ரகசியமாய் கூறி சிரிக்க, வீட்டிற்குள் நுழைந்தனர் ராமுடன் கண்ணன், அபர்ணா, லதா.

சித்ரா ஜெகனிடம் கீர்த்தியின் சம்மதத்தை கூறிவிட்டு திரும்பிட, தங்கராஜ் கீர்த்தியும் உள்ளே வந்தவர்களை கவனித்து நின்றனர்.

முதலில் அவள் பார்வை ஒரு நொடி என்றாலும் ராமை கவனித்துவிட்டு தான் திரும்பியது.

பின் அபர்ணா கையில் இருந்த பாக்ஸை பார்த்த கீர்த்தி அவள்புறம் செல்ல போக, அபர்ணாவிற்கு முன் வந்து நின்றான் கண்ணன்.

என்ன என பார்வையால் கீர்த்தி நிற்க, பதில் பார்வை பார்த்து கண்ணன் நிற்க, சிரித்தபடி கடந்து உள்ளே நுழைந்தான் ராம்.

"என்ன அப்பு கையில?" கீர்த்தி கண்டிப்பாய் கேட்க,

"அக்கா! போனை கீழே போட்டதுல சார்ஜ் ஏறவே இல்ல.. அதான் அத்தான்.." என்று இழுக்க, கீர்த்தி முறைக்க,

"அட நல்லாருக்கே! என்ன மொபைல்?" என்றபடி அதை வாங்கிப் பார்த்தார் தங்கராஜ்.

அந்த இடத்தினில் எதுவும் பேச முடியாமல் போக கீர்த்தி அமைதியாய் இருந்து கொண்டாள்.

"எனக்கு கூட ராம் அண்ணா பவர்பேங்க் வாங்கி குடுத்தாங்க பா" என லதாவும் தந்தையிடம் காட்டினாள்.

"கீர்த்தி! அப்புவை வீட்டுல போயும் எதுவும் சொல்லாதே! ஏன் நாங்க வாங்கிக் கொடுக்க கூடாதா?" என்ற கேள்வி கண்ணனிடம் என்று எதிர்பார்க்க வேண்டாம்.. அது ராம் தான் ராமே தான்.

கீர்த்தி 'பே' என அதில் விழித்து நிற்க, கண்ணன் கூட 'இன்ட்ரெஸ்ட்டிங்' என ரசித்து நிற்க,

"வர்ற வழி எல்லாம் அப்பு ஒரே புலம்பல் ம்மா.. அக்கா திட்டுவாங்க.. அக்கா திட்டுவாங்கனு.. இல்ல டா கண்ணா?" என்று கண்ணனையும் துணைக்கு அழைக்க, தலையை மட்டுமே ஆட்டினான் கண்ணன்.

"என்ன! திட்ட மாட்ட தானே?" என்ற கேள்வி வேறு கீர்த்தியிடம் ராம் கேட்டு வைக்க, அதை அனைவரும், குறிப்பாய் இத்தனை நேரம் தன் கதையை கேட்ட அத்தை மாமா இருவரும் இவர்களை சிரிப்புடன் பார்ப்பதைக் கண்டு, இப்போது கண்ணம் சிவந்து போக, அங்கே கோபம் வர வழியே இல்லாமல் போனது கீர்த்திக்கு.

சித்ரா வேகமாய் சர்க்கரை டப்பாவை உள்ளே போய் எடுத்து வர,

"ம்மா! இருங்க.. இப்ப என்ன சொல்லிட்டான்னு இந்த சுகரு?" என்று கண்ணன் கிண்டல் செய்ய,

"அவசரத்துக்கு இது தான் டா ஸ்வீட்டு" என்றவரிடம்,

"ஸ்வீட் செய்ய பத்து நிமிஷம் ஆகுமா? அதுக்கு ஒரு சோம்பேறித்தனம்.." என்றவனை,

"அந்த பத்து நிமிஷம் எல்லாம் என்னால காத்திருக்க முடியாது" என்றபடி ராமிடம் தான் நேரே வந்தார்.

'இதெல்லாம் ஓவர்.. கேள்வி கேட்டதுக்கே சுகரா?' என்று தான் அனைவரும் பார்த்து நிற்க, சித்ரா கூற போகும் செய்தி புரிந்ததில் கீர்த்தி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கீழே ஓடிவிட, அவளை கவனிக்கவில்லை யாரும் ராமை தவிர.

"என்ன ம்மா?" வாயில் சர்க்கரையை வாங்கியபடியே ராம் கேட்க,

"வீட்டுல முதல் கல்யாணம்.. இனி சும்மா இருக்குமா சித்து வாய்?" என்ற தங்கராஜின் வார்த்தைகளில் ராம், கண்ணன் இருவருக்கும் உடனே புரிந்து போனது.

"வாவ்! நிஜமாவா? என்னம்மா இப்ப சொல்றிங்க?" என்றபடி கண்ணன் கீர்த்தி நின்ற இடத்தை பார்க்க, அங்கே அவள் இல்லை.

"ஓடிட்டாளா? ண்ணா! காங்கிரட்ஸ் ண்ணா.. வெரி ஹாப்பி ஃபார் யூ" என்று அணைத்துக் கொண்டவன் உணர்ச்சி மிகுதியில் தான் இருந்தான்.

"டேய்! அன்னைக்கு அவ்வளவு பேசின வேண்டாம்னு.. இப்ப இவ்வளவு எக்ஸ்ஸைட் ஆகுற? புரியவே இல்லையே" என்றான் ராம்.

அவ்வளவு புன்னகை ராம் முகத்தினில் இருக்க, மகிழ்ச்சியை காட்டும் வழி தான் தெரியவில்லை. அமைதியாய் தான் நின்றிருந்தான் கண்ணன் வந்து அணைத்துக் கொள்ளும் வரை.

ஆனாலும் அவனின் சம்மதத்தையும் சந்தோஷத்தையும் அந்த புன்னகையிலேயே தெரிந்து கொண்டது மொத்த குடும்பமும்.

"அதெல்லாம் அப்ப ண்ணா! என்னோட குழப்பம் எல்லாம் உன்னாலேயே தான் சரி ஆச்சு.. ஹேய் குண்டம்மா.. இந்தா மொத்தமா கொட்டிக்கோ" என சர்க்கரை டப்பாவை வாங்கி லதா வாயினில் திணிக்க, லதா, அபர்ணாவிற்குமே அப்போது தான் புரிய ஆரம்பித்திருந்தது.

"அப்பு நீயும்" என அவளுக்குமே கொடுக்க,

"அக்கா ஓகே சொல்லிட்டாங்களா அத்தை?" என்றாள் அபர்ணா.

"ஓகே மட்டுமா? எல்லாமே சொல்லிட்டா" என்று சித்ரா கண்ணனை முறைக்க, அவனுக்கு அது புரியவில்லை.

"எல்லாமேன்னா?" என ராம் கேட்க,

"இப்ப வந்து கேளு! போ டா.. உன்னை திட்டனும் போலவும் இருக்கு.. கொஞ்சனும் போலவும் இருக்கு" என்று சித்ரா கொஞ்சலாய் கூற,

"டேய் தடியா! இனி அம்மா கண்ணுக்கு நாம எல்லாம் தெரியவே மாட்டோம் இல்ல" என்று லதாவும் கிண்டல் செய்ய,

"நான் போய் அக்காவை பாக்குறேன்" என்று ஓடினாள் அபர்ணாவும்.

"ம்மா! எப்படி ம்மா? என்ன நடந்துச்சு? கம்பெல் பண்ணலையே?" கண்ணன் கேட்க,

"நீ பேசாத டா.. உன்கிட்ட அவன் கல்யாணம் முடியிற வரயும் நான் பேச போறது இல்ல.. நிச்சயதார்த்தம் வெள்ளி கிழமை.. யார் யார்க்கு வேணுமோ எல்லாரும் லீவ் போட்டுக்கோங்க.. வேலை தலைக்கு மேல கிடக்கு" என்றபடி சர்க்கரை டப்பாவை பிடுங்கிக் கொண்டு சித்ரா நகர,

"அம்மாக்கு என் மேல என்ன ப்பா கோபம்?" என்றான் கண்ணன் புரியாமல்..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல டா.. ஆமா இப்படி சித்து சொல்லிட்டு போறாளே.. ஒருவேளை ராம்க்கு வெள்ளி கிழமை லீவ் கிடைக்கலைனா என்ன டா பண்றது" என்ற தங்கராஜ் கேள்விக்கு,

"அதெல்லாம் கிடைக்கும் பா" என்ற ராம் கூறிய பின் தான், தந்தை தன்னை கிண்டல் செய்ததையே புரிந்து கொண்டான்.

"ப்பா!" என்று அவன் செல்லமாய் முறைக்க, கண்ணனும் தங்கராஜும் சிரித்துக் கொண்டனர்.


தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
இருவரும் சம்மதம் கேட்டு நிற்க இவளின் நிலைமையோ பாவமாய் இனி முடியாது என
இவள் பக்கம் நியாயத்தை
இவளின் காதலை பதட்டமாய்
இதமாய் சொல்லி முடிக்க
இன்ப சேதியாக ......
இவளின் சம்மதம் தெரிவிக்க.....
இனி சித்துவ கையில் பிடிக்க முடியாது
இனிப்புடன் எல்லோரும்
இன்பமாக அனைவரும்....