• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காந்தள்-1

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
33
8
8
Chennai
அத்தியாயம் 1

'கண்ணுக்கு குளிர்ச்சியாக ஒரு பக்கம் செழித்து நின்ற நாத்துகளும், மறுபக்கம் வளர்ந்து நின்ற சோள மற்றும் கம்பங்கருதுகளும் காற்றிலாட, எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்து தென்றல் காற்று மேனியை சிலிர்க்க வைக்க, வாய்க்கால் வரப்புகளில் ஓடும் தண்ணீரில் கால் நனைத்து..' இப்படிலாம் ஆரம்பிக்க எனக்கும் ஆசை தான்.. ஆனால் அப்படியெல்லாம் சிவகாசியில் எல்லா நேரமும் செழித்துலாம் இருக்காது. மற்ற மாவட்டங்க்ளைக் காட்டிலும் வெயில் கொளுத்தி எடுக்கும்..

பட்டாசுத் தொழில் இந்த அளவிற்கு பெருக்கெடுக்காத முன்னாடி காலத்திலும், மற்ற மாவட்டங்களைப் போல் பச்சைப் பசேலென எக்காலமும் செழித்துக் கிடக்காது. கரிசக்காடு தான். முக்கால்வாசி நிலங்கள் வானம் பார்த்த பூமி தான். ஒன்றிரண்டு பம்ப்செட் இருக்கும் கிணற்றிலும் கோடை காலங்களில் நீர் வற்றிப்போய் தான் இருக்கும். அதனால் எல்லாக் காலங்களிலும் அனைத்து மக்களும் தோட்ட வேலைகளே நம்பியிருக்க முடியாது. அதனால் சிலர் பட்டாசு தொழிற்சாலையில் சேர்ந்து வேலை செய்து தான் தங்கள் குடும்ப சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். விவசாயமும் பட்டாசு தொழிலும் சரி விகிதம் இருந்த காலம் அது. பட்டாசு தொழிலை விட விவசாயத்தை பெரிதென மதித்த காலம் அது. கரிமருந்தில் கரியாய் கரைந்து சிறுக சிறுக உயிர் குடிப்பதற்கு கதிரவனின் கதிர்களின் தாக்கம் பரவாயில்லை தானே?..

கதிரவன் சோம்பல் முறித்து எழுந்து காலைக் கதிர்களை பூமியில் வீசி வெளிச்சம் தரும் முன்னே மக்கள் சோம்பலை விரட்டி விட்டு எழுந்து தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டனர்..

"ஏங்க.. சோத்தை இறக்கிட்டேன். ஆறப்போடுறேன். அவனுக்கு ரெண்டு வாயி ஊட்டிட்டு நீங்களும் சாப்டு சீக்கிரம் கெளம்புங்க. ஆவுசு வண்டி வந்துரும். அப்புறம் அரக்க பறக்க கெளம்பி இங்கருந்து நாலு கிலோமீட்டர் நடக்க வேண்டியது வரும்"

"சேரி செவந்தி.. நீ சோத்தை ஆறப்போடு. சூடா குடுத்தா சாப்ட மாட்டான் இவன். நீ ஆவுசுக்கு கூடைல சாப்பாட எடுத்து வச்சுட்டு நீயும் சாப்டு"

"சேரிங்க.."

"ஐயா.. ராசா வாடா.. இந்தா ஆ வாங்கிக்கோ. ஆவுசு பஸ்ஸூ வந்துரும்" என்று தன் ஏழு வயது மகனுக்கு சாதத்தைப் பிசைந்து கையில் உருட்டி சிறு சிறு உருண்டையாக கொடுத்துக் கொண்டிருந்தார் பேச்சியப்பன்.

தனக்கும் கணவனுக்கும் கூடையில் மதிய உணவை எடுத்து அடுக்கிய செவ்வந்தி, தனக்கும் ஒரு தட்டில் சாப்பாட்டை போட்டுக் கொண்டு அவர்களுடன் அமர்ந்தார்.

"ஏங்க அவன் என்ன சின்ன சின்னப்புள்ளையா. அவன் கைல குடுங்க எடுத்து சாப்டட்டும். ஏதோ பொம்பள புள்ள கணக்கா பொத்தி பொத்தி செல்லங்குடுத்துட்டு அலையுதீக. நல்லாத்தான் பண்றேங்க"

"என் புள்ள எனக்குச் செல்லம் தான்டி. என் புள்ள பெரிய படிப்பெல்லாம் படிச்சு இந்த ஜில்லாக்கே கலெக்டரா வரனும். அப்ப தான்டி எனக்கு பெருமை. எய்யா சாமி நீ நல்லா படிச்சுருவேலயா.. " என்று தன் மகன் செந்துரனிடமும் கேட்டுக் கொண்டார்.

"நான் நல்லா படிச்சு கலெக்டராயிருவேன் பா. பேச்சியப்பன் மவன் கலெக்டருனு எல்லாரும் சொல்ற மாதிரி பேரெடுப்பேன் பா" என்று சமர்த்தாக சொன்னான்.

"அப்படி சொல்லுயா என்னைப் பெத்தய்யா.." என்று தாயும் தந்தையும், மகனும் அகமும் புறமும் மகிழ்ந்து சிரித்தனர். அழகான மகிழ்ச்சியாய் வாழும் சிறு குடும்பம். பணம் பெரிதாய் இல்லாவிட்டாலும் தங்கள் உழைப்பில் அழகாய் குடும்பத்தை கொண்டு சென்று, மகனை பெரிய படிப்பு படிக்க வைத்து கலெக்டராக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.

"ஏலே பள்ளிக்கூடம் லீவுனா செவனேனு வீட்ல கெடக்காம ஏன்டா ஃபயர் ஆவுசுக்கு (பட்டாசு ஆலை) வந்து வெயிலுல புள்ளத் தொட்டில கெடக்கனும்ங்க. வீட்ல இரேன்டா" என்று தாயானவள் கொஞ்சி கெஞ்சிக் கொண்டிருக்க, "போ.. ம்ம்.. போமா.. நானும் வருவேன். நீங்க எப்டி வெடி செய்தேங்கனு பார்க்கனும். நானும் கத்துக்கனும்ல" என்று சினுங்கினான்.

"ஏலே.. உன்னை எப்டி படிக்க வைக்கனும்னு நானும் உங்கம்மாவும் கரிமருந்தைத் தின்னு வேலை செஞ்சு காசு சேர்த்து வச்சுட்டு இருக்கோம். நீ என்னடானா பயர் ஆவுசு வேலை கத்துக்கப் போறீயா?. இந்தப் பேச்சே உன் வாயில வரக்கூடாது ராசா.. நீங்க பெரிசா படிக்கனும். அப்பா கூட சும்மா வந்து அங்க புள்ளைத் தொட்டில அமைதியா வெளாடனும். அங்க வந்து அப்பாட்ட போறேன் அம்மாட்ட போறேன்னு அழுத அப்புறம் போர்மேன் ( கட்டிட தொழிலில் இருக்கும் மேஸ்திரி மாதிரி) எங்களைத் தான் வைவாரு. சரியா செல்லம் அங்க வந்து சமத்தா இருக்கனும்.." என்று இருவரும் மகனுக்கு அறிவுரை சொல்லி அழைத்துச் சென்றனர். இப்போது செல்பவர்கள் திரும்பி அந்த வீட்டுக்கு வந்து மூவரும் சேர்ந்து இருக்கப்போவதில்லை என்பதறியாமல்.

அவர்கள் வீடு நடுத்தெருவில் இருந்தது‌. மெயின் ரோட்டிற்கு தான் பட்டாசு ஆலை பேருந்து வந்து நிற்கும். வீட்டிலிருந்து நடந்து சென்றனர். போகும் வழியில் இரண்டு மூன்று பேர் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

போகும் வழியில் இருந்த பெட்டிக் கடையில் தன் மகனுக்குத் தேவையான நொறுக்கிந் தீனி திண்பண்டங்களையும் வாங்கி கூடையில் போட்டுக் கொண்டார் செவ்வந்தி.

தன் அண்ணன் வீட்டைக் கடக்கும் போது தன் அண்ணியைக் கண்ட செவ்வந்தி, "என்ன மதினி இன்னைக்கு ஆவுசுக்கு வரலயா?. சாவகாசமா இருக்கேக".

"இல்லை செவந்தி இன்னைக்கு லீவு.. உங்க அண்ணன் தான் காட்டுல ரெண்டு நெரை(நான்கு ஐந்து பாத்திகள் சேர்ந்து நேராக இருப்பது ஒரு நிரை) கத்திரிக்கா போட்டுருக்காருல. அதை எடுத்துப் போடனும். எடுத்துப் போட்டு நேரமிருந்தா வரனும். இல்ல லீவு தான். லேட்டா வந்தா அந்த போர்மேன் பய உள்ளே விட மாட்டான்ல"

"அதுவும் சரி தான் மதினி. லேட்டா ஆவுசுக்கு வந்து உள்ளே விடாம வீட்டுக்கு வர்றதுக்கு செவனேனு காட்டுக்கு போயிட்டு வீட்ல இருங்க. அண்ணே போயிருச்சா?"

"இப்போ தான் போறாரு. பஸ்ஸூ வந்துரும் சீக்கிரம் போ. இந்தப்பயல எதுக்கு இழுத்துட்டு போறவ. வீட்ல விட்டு போவ வேண்டியது தான?"

"இது கழுத எங்க சொன்னதைக் கேட்குது. சரி மதினி வாறேன்.. பஸ்ஸூ வந்துரும்" என்று வெக்கு வெக்கென்று எட்டு வைத்து கிட்டத்தட்ட ஓடினார் பட்டாசு ஆலை பேருந்தைப் பிடிக்க. பேச்சியப்பனும் செந்தூரனும் முன்னாலே போய் செவ்வந்தியின் அண்ணன் தங்கவேலுடன் வளவளத்துக் கொண்டிருந்தனர். செந்தூரன் தன் மாமனுடன் ஐக்கியமாகி பேசி சிரித்துக் கொண்டிருந்தான்.

செவந்தி பிறந்தது அதே ஊர் தான். தன் அண்ணன் தங்கவேல் மற்றும் அவரது மனைவி கலைவாணி. அவர்களுக்கு மூன்று வயது பெண் குழந்தை அன்புச்செல்வி மற்றும் ஒரு வயது ஆண் குழந்தை காளிராஜ். தங்கவேலுக்கு தன் தங்கை மகன் செந்தூரனுக்கு தான் தன் மகள் என்று சிறு வயதிலிருந்து எண்ணமும் ஆசையும். ஆனால் இதே எண்ணம் வருங்காலத்திலும் மாறாமல் இருக்குமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

பட்டாசு தொழிற்சாலை பேருந்து வரவும் மக்கள் ஏறி அமர்ந்து ஆலை வந்திறங்கினர்.

ஆங்காங்கே சில பெரிய பட்டாசு ஆலைகள் மட்டுமே இருந்த காலம் அது. அந்தக் காலத்தில் முதலாளித்துவம் அதிகமாக இருந்தது. அரசு அலுவலகம் போல் கரெக்ட் டைம்க்கு வர வேண்டும். தாமதமாக வந்தால் உள்ளே அனுமதி இல்லை. அதே போல் அவ்வளவு எளிதில் வெளி‌ ஆட்கள் யாரும் பட்டாசு ஆலைகள் உள்ளே நுழைந்து விடவும் அனுமதி இல்லை. பின்னே ஏதாவது விபத்து என்றால் யார் அவர்களுக்கு அரசிடம் பதில் சொல்வது, யார் அவர்களுக்கும் சேர்த்து பணம் அழுவது. காலையில் ஆறு மணிக்கு பட்டாசு தொழாற்சாலை பேருந்தில் ஏறினால், ஆதவன் ஆழியில் புதைந்த பின் தான் வீட்டுக்கு வர முடியும்.

பட்டாசு ஆலை உள்ளே நுழைந்தவுடன் செவந்தி செந்துரனை புள்ளத்தொட்டியில் விட்டு விட்டு அவனுக்கு வாங்கி வந்த தின்பண்டங்களை கொடுத்து விட்டு, "கேன்டீன் டீ வரும் போது அம்மா டீயும் வடையும் வாங்கிட்டு வாரேன். நீ எங்கட்டும் போயிடாம சுப்பு பாட்டிக் கிட்டயே இருந்து வெளாடனும். சுப்பு பெரிம்மா புள்ளைய பார்த்துக்க" என்று அவர் வேலை செய்யும் அறைக்குச் சென்றார்.

புள்ளத்தொட்டி என்றால் இப்போதெல்லாம் வீட்டில் ஆண் பெண் இருவரும் வேலைக்குச் சென்றால் டேகேரில் விட்டுச் செல்கிறார்களே அதுபோல் பட்டாசு ஆலையில் வேலை செய்பவர்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வீட்டில் ஆள் இல்லாவிடில் இங்கு கொண்டு வந்து விடுவர். அதற்கென்று பட்டாசு வேலை செய்யும் இடத்திலிருந்து சிறிது தூரத்தில் ஒரு அறை ஒன்று வைத்திருப்பர். அவர்களைப் பார்த்துக் கொள்ள ஒரு பாட்டி இருப்பார். அங்கு தான் செந்தூரனை விட்டுச் செல்கிறார் செவ்வந்தி.

இரண்டு பக்கமும் வழி கொண்ட பத்துக்கு பத்து அறையில் கோனிச்சாக்கை விரித்து ஒரு பெட்டியில் மிளகாய் பழத்தை அள்ளி வைத்திருந்தது போல் சிவப்புக் கலரில் இருந்த வெடியை அள்ளி சாக்கின் ஒரு முனையில் குவித்து வைத்து, மறுமுனையில் ஒரு காலை மடக்கி மறுகாலை நீட்டி அமர்ந்து, மடக்கிய காலின் அடியில் நூல்கண்டை ஒரு அட்டையில் சுற்றி வைத்து ஒவ்வொரு வெடியாக எடுத்து வைத்து நூலில் சுற்றி சரம் (சரவெடி) பின்ன ஆரம்பித்தார் செவ்வந்தி.

இங்கே இவரது வேலையை ஆரம்பிக்க, செவ்வந்தியின் அண்ணன் கம்பெனி வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். கம்பெனி வேலை என்பது சரம் பின்னுபவர்களுக்கு வெடியை பெட்டியில் அள்ளி வைப்பது, வெடியை காய வைப்பது, கெட்டு (பேப்பர் டியூப்களால் அடுக்கப்பட்ட வட்டமாக உள்ள ஒரு இரும்பு வளையம்) தூக்கி வைப்பது, திரி அறுப்பது போன்ற வேலைகளை செய்பவர்கள். கம்பெனி வேலைக்கென்றே நிறைய பேர் வேலை செய்வார்கள். ஆளுக்கொரு வேலையை பிரித்துக் கொள்வர்.

இந்த வேலை கூட பரவாயில்லை. பவுடர் செலுத்துதல் (வெடி மருந்தை டியூப்பில் அடைப்பது) என்று சொல்வார்கள். அதுதான் மிக ஆபத்தான வேலை. முழுக்க முழுக்க கரிமருந்திலே கிடக்க வேண்டும். அலுமினியக் கலரில் இருக்கும் அந்த மருந்தால் மட்டும் வெடி வெடித்து விடாது‌. முதலில் ஒருபக்கம் சிவப்பு மண்ணால் பூசப்பட்ட வட்ட வளையத்தின் மறுபக்கத்தில் சாம்பலை டியூப்பில் பாதி அளவு நிரப்பிய பின், அதனுடன் உப்பு, சல்பர் மற்றும் வெடிமருந்து மூன்றையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து வைத்தக் கலவையையும் சேர்ந்து அடைப்பார்கள். அதன் பின் மறுபக்கம் மண் பூசி, சிறு கம்பியால் திரும்ப ஓட்டை போட்டு அதில் கருப்பு மருந்தில்(பசை மற்றும் கரியால் செய்வது) வெள்ளைத் திரியை நனைத்து ஒவ்வொரு ஓட்டையிலும் நுழைத்து, அதை காய வைத்து, சரம் போட்டு, பேக்கிங் செய்து.. இது போல் பல வேலைகள் உள்ளது. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு ஆட்கள் செய்வார்கள். இது சாதாரண சரவெடி மற்றும் லட்சுமி போன்ற வெடிகளுக்கு. இதுவே ஃபேன்ஸி ரகம் என்றால் அதற்கான வெடிமருந்தும் செய்முறையும் வேறுபடும். அது மிக ஆபத்தான வேலை. எல்லா மக்களும் அதை செய்ய ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதற்கான கூலியும் அதிகம். பணம் அதிகம் வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே அதை செய்வார்கள்.

பேச்சியப்பன் பவுடர் தான் செலுத்துவார். அன்று வேலைக்கு ஓரளவு பவுடர் செலுத்தி முடித்து விட்டார். தலையில் கட்டிய துண்டு முதல் ஆடை வரை முழுதும் மினுமினுவென்று கரிமருந்து மின்ன கேன்டீன் டீ வரவும் டீ குடிக்க வந்தார். கேன்டீன் என்றால் தனியாக அலுவலகத்தில் உள்ளது போல் கேன்டீன் என்றெல்லாம் இல்லை. டீ போடும் பெரிய கின்டிலில் டீ எடுத்து வருவார்கள். அது தான் கேன்டீன் டீ என்பர்.

தனக்கு ஒரு டீயை வாங்கிக் கொண்டு, தன் மகனுக்கும் டீ, வடை சகிதம் வாங்கிக்கொண்டு புள்ளத்தொட்டிக்கு வந்தார். முகம் முழுதும் மருந்தில் மூடிக் கொண்டதால் அவரின் முகத்தைக் காணவே அடையாளம் தெரியவில்லை. அதைக் கண்ட செந்தூரன், "அப்பா.. உன் முகமே தெரியல. ரொம்ப கஷ்டப்படுதேல.. நான் படிச்சு வேலைக்கு போனப்புறம் நீ இந்த வேலைலாம் பார்க்க வேண்டாம்பா" என்ற தன் மகனை தூக்கி அள்ளி முத்தமிடும் எண்ணத்தை உடலில் மருந்தாக இருப்பதால் தள்ளி வைத்து விட்டு அகம் மகிழ்ந்தார்.

அப்போது அவர்களை கடந்த தங்கவேலை பார்த்து, "என்ன மச்சான் இந்த நேரம் வெளில போறேங்க?" என்றார்.

"ஒரு சோலி இருக்கு. வீடு வரைக்கும் போயிட்டு வந்துரேன் மாப்ள" என்றார்.

"சரி சரி போயிட்டு வாங்க".

--------

"எப்பா ஏப்பா வேலைக்கு கூட சீக்கிரம் போயித் தொலையாம காலங்காத்தால தண்ணிய போட்டு வந்து இப்படி விழுந்து கெடக்க. எந்திரிக்க கூட முடியாம கெடக்க" என்று மூத்த பெண் கமலா அழுக, அவளுக்கு இளையவள் சுந்தரியும் இரண்டு வயது கடைக்குட்டி பெண் தாமரையும் என்ன ஏதென்று தெரியாமல் அவர்களைப் பார்த்து அழுதது.

அவர்கள் மூவரையும் பெற்றவள் சங்கரேஸ்வரி, குடம் நிறைய தண்ணீர் எடுத்து வந்து ஊற்றினார் அவரின் தலையில். "ஏய்யா நாலு புள்ளைக்கு தகப்பன் மாதிரி நடக்குரியா?. ரெண்டு வயசுக்கு வந்த புள்ளைக இருக்கு. ரெண்டு சின்னப் புள்ளைக கெடக்குது. அதுகளுக்கு பசியாத்தவே உழைக்கனுங்குற எண்ணம் வருதா?. உன்னை நம்பி நாலு புள்ளைய பெத்தேன் பாரு.. என்னைய தான் நான் செருப்பாலே அடிச்சுக்கனும்" என்று அமர்ந்து சேலை நுனியால் மூக்கைச் சிந்தி அழுக ஆரம்பித்து விட்டார்.

"ஏம்மா இப்போ புத்தி வந்து என்ன பண்றது?. இவருக்கு நீ சாப்பாடு போடுறதே தப்புங்குறேன். இவரலாம் வீட்டை விட்டு வெளியே தள்ளுமா" என்று முளைத்து மூனு இலை கூட விடாத எட்டு வயது மூன்றாவது பிறந்தவன் பரமேஸ்வரன் சிங்கக்குட்டியாய் கர்ஜனை செய்தான்.

"உங்களைப் பாத்துக்க சிங்ககுட்டி மாதிரி என் ராசா இருக்குறப்போ எதுக்கு கவலப்படுதேங்க. அவன் எல்லாத்தையும் பார்த்துப்பான். போறேன் போறேன் ஆவுசுக்கு போறேன். எதுக்கு இளவு வீடு மாதிரி ஒப்பாரி வைக்கிறேங்க பொட்டைக்கழுதேகளா?. உங்க எளவுக்கு செய்ய தான வேலைக்கு போறேன். தண்ணி போடாம என்னால போய் பவுடர் செலுத்த முடியல அலுப்பா இருக்கு" என்று தானே ஏதேதோ புலம்பித் தள்ளி விட்டு மூன்று பெண் பிள்ளைகளையும் திட்டி தீர்த்து விட்டு கிளம்பினார் பட்டாசு ஆலைக்கு.

அவர் உள்ளே வரும் வேளை, பேச்சியப்பன் செந்துரனுக்கு டீயைக் கொடுத்து விட்டு கிளம்பத் தயாரானார்.

"ஏ கதிரேசா.. உனக்கு இப்பத்தான் விடிஞ்சுச்சாக்கும்.. வேலைக்கு வர்ற நேரத்தைப் பாரு" என்றார் பேச்சியப்பன்.

"அட போப்பா.. உப்பைத் தேய்ச்சு தேய்ச்சு கையெல்லாம் காப்புக் காச்சுப் போச்சு. இன்னும் கொஞ்ச நாள் போனா கைல ஓட்டையே விழுந்துடும் போல" என்றார் கதிரேசன்.

"மூனு பொம்பளைப் புள்ளைகளை கரை சேர்க்க வேண்டாமா?. வேலை செஞ்சு தான்யா ஆகனும். வா வா போய் வேலையை பார்ப்போம்"

"அட போப்பா.. உன்னை மாதிரி கம்பெனி வேலையா.. நமக்கு எத்தனை கிலோ உப்புச் சலிக்குறோமோ அவ்வளவு தான சம்பளம். எம்புட்டு வேலை செய்றேனோ அவ்வளவு சம்பளம் வாங்குனா போதும். மெதுவா ஆரம்பிப்போம். நீ போ நான் ஒரு பீடி இழுத்துட்டு வாறேன்" என்று அசால்டாக இருந்தார்.

"என்னமோ போ. வெளிய இருந்து தான வந்த அங்கனே புடிச்சுட்டு வர வேண்டியதுனு தான?. அங்குட்டு தூரமா போ சாமி. காத்துக்கு சின்ன கங்கு பறந்து வந்தாலும் போச்சு"

"சரி போப்பா நான் அங்குட்டு ஒதுங்குற இடத்துக்கு தான் போறேன்" என்று இவர் இந்தப்பக்கம் கிளம்ப பேச்சியப்பன் தான் விட்ட வேலையைத் தொடர கிளம்பினார்.

கதிரசனுக்கு உப்பு சலிக்கும் வேலை. வெடி மருந்துடன் கலக்கும் உப்பு மற்றும் சல்பர் கட்டி கட்டியாக இருக்கும். அதை அப்படியே உபயோகிக்க முடியாது. சல்லடையில் வைத்து தேய்த்தால் தான் உதிரி உதிரியாக வரும். உப்பில் உள்ளங்கையை அழுத்தி சல்லடையில் தேய்த்தால் தான் சலிக்க முடியும். கையெல்லாம் எரிச்சல் எடுத்து காப்பு காய்த்து விடும்.

தீப்பெட்டி மற்றும் எளிதில் தீ பற்றி எரியக்கூடிய எந்த பொருளும் ஆலைக்குள் உள்ளே அனுமதி இல்லை. ஆனால் கதிரேசன் மறைத்து வைத்து எடுத்து வந்து விடுவார். ஆண்கள் ஒதுங்கும் இடம் தூரமாய் சென்ற கதிரேசன், மறைத்து வைத்து எடுத்து வந்த பீடியை பற்ற வைத்து அதன் புகையை உள்ளிழுத்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே இந்தக் கரிமருந்து வாடையும் தூசும் வயிற்றுக்குள் சென்று நுரையீரலை பாதி கெடுத்து விடும். இதில் இவர் பீடி, மது என்று எல்லாவற்றையும் உள்ளே இறக்கினால் அந்த நுரையீரலால் என்ன தான் செய்யும். என்ன செய்ய அனுபவிக்கும் போது தானே புத்தி வருகிறது சிலருக்கு.

மெதுவாக புகையை உள்ளிழுத்து அது காலியானவுடன் அப்படியே கீழே போட்டு விட்டு அணைக்காமல் சென்று விட்டார். அது மெது மெதுவாக புகைந்து கொண்டிருந்தது. உச்சி வெயிலில் வியர்க்க விறுவிறுக்க மேனியில் பட்ட கரிமருந்தில் கலந்து வியர்வை வடிய மக்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

திடீரென சிறு காற்று வீசயதில், தரையில் காயந்து சருகாக கிடந்த புல் நுனியொன்று பறந்து வந்து புகைந்து கொண்டிருந்த பீடியின் அருகில் விழ, அதன் கங்கு புல்லில் மெதுமெதுவாக ஏறி புல்லும் புகைய ஆரம்பித்து அது சென்று பெரிய தார்ப்பாயில் பரப்பி காய வைத்திருந்த வெடியின் அருகில் சென்று விழுந்தது.

ஒருபக்கம் வெடியைக் காய வைத்துக் கொண்டிருந்த ஆட்கள், ஒருபக்கம் சரம் பின்னிக் கொண்டிருந்த ஆட்கள், இன்னொரு பக்கம் கெட்டுக் குத்திக் கொண்டிருந்த ஆட்கள் இன்னொரு பக்கம் பேக்கிங் செய்து கொண்டிருந்த ஆட்களென நாலா பக்கமும் ஆட்கள் அவரவர் வேலையை மும்மரமாக செய்து கொண்டிருந்தனர்.

செந்தூரன் புள்ளத்தொட்டியில் இருந்த மற்ற சிறுவர்களுடன் கிட்டி விளையாடிக் கொண்டிருந்தான். "ஏய் அடுத்து நான் தான்" என்று சிறிய குச்சியை எடுத்து கீழே வைத்து பெரிய குச்சியை எடுத்து அதைக் கீண்ட தயாராக இருந்தான்.

திடீரென காற்று கொஞ்சம் பலமாய் வீசியதில் புல்லின் நுனியில் இருந்த கங்கு சென்று பக்கத்தில் வெடியின் திரியில் பட்டுவிட்டது. காயவைத்திருந்த வெடி ஈரமாக இருந்ததால் திரி கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து நுனியில் பட்டு, கொஞ்ச நேரத்தில் பட்டென்று வெடித்தது. அது வெடித்து சிதறி காய வைத்திருந்த மொத்த வெடியிலும் பட படவென்று வெடித்து நாலாபக்கமும் வெடி சிதறி அறைக்குள்ளும் சிதறி ஓடியதில் 'டமால்' என்ற சத்தத்துடன் அருகில் இருந்த அறை வெடித்துச் சிதறியது.

கையில் பெரிய குச்சியுடன் நின்றவன், டமாலென கேட்ட சத்தத்தில் திரும்பியவன் முன்னால் வந்து விழுந்தது இரண்டு பக்கமும் பக்கத்திற்கு ஒன்று என்று கறுத்துப்போன காசும், இருபக்கமும் பிளாஸ்டிக் சிவப்பு குண்டுமணியும் கோர்த்த செந்தூரனின் அன்னையின் கழுத்தில் கிடந்த தாலி..


தொடரும்..


( நிறைய பேருக்கு சிவகாசி வட்டார பட்டாசு பேச்சு வழக்கு தெரியாது என்பதால் அங்கங்கே விளக்கம் கொடுத்திருப்பேன். முதல் இரண்டு மூன்று பாகங்களுக்கு கொடுத்தால் அதன் பின் புரிவதற்கு ஈசியாக இருக்கும் என்பதால் கொடுத்திருக்கிறேன். அது படிக்கும் போது சங்கடமாக இருக்கலாம். முதல் மூன்று பாகங்களுக்கு புரிந்து கொள்வதற்காக.. அதனால் பொறுத்துக் கொள்ளுங்கள்.. நன்றி 🙏)