கானல் - 4
ஜோதி மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமயம், அவர் பள்ளியில் ஆண்டு விழா இருப்பதால், ஆண்டு விழாவின் போது ஆடல் பாடல் என்று நிறைய கலை நிகழ்ச்சிகள் நடக்க இருந்ததால் மாணவர்கள் அனைவரும் அதற்கான பயிற்சிகள் எடுத்து கொண்டிருந்தனர்.
பாடம் வேலை முடிந்து இடைவேளை நேரத்தில் தோழிகள் உடன் வெளியே வந்த ஜோதியின் கண்ணில் பட்டது என்னவோ மைதானத்தில் ஆண்டு விழா நிகழ்ச்சிக்காக பரதம் பயிற்சி செய்து கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரண்டு ஆக்காமார்கள் தான்,
சிறிது நேரம், அவர்கள் ஆடலை பார்த்தவாறு நின்றவறுக்கு அவர்களின் ஆடல் பிடித்ததோ என்னவோ, அவர்களின் ஆடல்களை ரசிக்க தொடங்கியவரோ, உச்சி முதல் பாதம் வரை, அவர்களின் ஒவ்வொரு அசைவையும் ரசனையாக கவனித்தவாறே நிற்க, இடைவேளை முடிந்து வகுப்புக்கான மணி அடித்தது,
அவ்விடத்தை விட்டு செல்ல மனமில்லாதவரோ வேறு வழியின்றி தோழிகளுடன் தன் வகுப்பை நோக்கி நடந்தாலும் வகுப்பை அடையும் வரை திரும்பி திரும்பி அவர்களின் ஆடலை பார்த்தவாறே வகுப்பினுள் நுழைந்தார்.
வகுப்பில் பாடத்தை கவனித்தாலும் எண்ணமெல்லாம் அவர்களின் ஆடலின் அசைவை நினைவு படுத்தி கொண்டே தான் இருந்தது, அதன் நினைவிலே பள்ளி நேரத்தை கழித்து வீட்டிற்கு வந்தவரோ நேராக தன் அறைக்குள் தான் ஆர்வமாக சென்றார்.
அறைக்குள் சென்று பள்ளி பையை வீசியவரோ, அவர்களின் ஆடலின் அசைவை நினைவு கூர்ந்து அவர்களின் ஒவ்வொரு அசைவையும் தான் கவனித்ததை வைத்து ஆடி கொண்டிருக்க,
அப்போது அறைக்குள் வந்த அவரின் அன்னையோ "என்னடி பண்ணிகிட்டு இருக்க" என்று கேட்க,
அன்னையின் குரல் கேட்டு ஆடலை நிறுத்திவிட்டு, அவர் அருகில் சென்றவரோ "அதுவா அம்மா.. எங்க ஸ்கூல்ல ஆண்டு விழா வருதா.. அதுக்கு எல்லாரும் டான்ஸ் பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்தாங்க.. அதுல ஒரு ரெண்டு அக்கா மட்டும்.. நான் இப்போ ஆடினேன்ல அந்த மாதிரி வித்தியாசமா ஆடுனாங்க.. பாக்கவே அவ்வளவு அழகாக இருந்துச்சு.. அதான் எனக்கும் வருதான்னு ஆடி பாத்துட்டு இருக்கேன்"
அவர் கூறியதை வைத்தே, தன் மகளுக்கு பரதம் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது என்பதை புரிந்த தாயோ, தன் மகளுக்கு பரதம் என்று பெயர் கூட தெரியாமல் வந்த ஆசை என்பதால், மகளே தானே வந்து பரதம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று வாய்விட்டு கேட்கும் வரை அமைதியாக இருக்க எண்ணியவரோ "இந்த டான்ஸ்க்கு பேரு பரதம்ன்னு சொல்லுவாங்க.. இது நம்ம கலாச்சார நடனும்ன்னு கூட சொல்வாங்க.. நடராஜர தெய்வமா வழிபட்டு தான் ஆடுறது தான் பரதம்" என்று அவருக்கு தெரிந்ததை மகளிடம் கூற,
அதை வியப்புடன் கேட்டவரோ "பரதமா..?"
"ஆமா.. பரதநாட்டியத்த சுருக்கி பரதம்ன்னு சொல்லுவாங்க"
அதைக் கேட்டவரோ "பரதம்.." என்று அதன் பெயரை திரும்ப திரும்ப சொல்லி மனனம் செய்து புன்னகைத்து கொண்டார்.
இப்படியே பள்ளி செல்வது இடைவேளை நேரங்களில், அவர்களின் நடனத்தை பார்ப்பது, அதை வீட்டில் வந்து ஆடுவது என்று அப்படியே ஒரு வாரத்தை கழித்தவருக்கோ, பரதத்திற்கான உரித கலை வரவில்லையென்றாலும், அவர்களின் நடனத்தை கவனித்ததை வைத்தே ஓரளவு கற்று கொண்டார்.
இப்படி தான், ஒருநாள் பள்ளிவிட்டு வந்து அவர்கள் ஆடியது போல் ஆடிவிட்டு வீட்டு பாடம் எழுதியவாரே "என்ன தான்.. அவங்க ஆடுனத பாத்து நமக்கு தெரிஞ்சத ஆடினாலும்.. அவங்க அளவுக்கு ரசனையா வர மாட்டிக்கே ஏன் எப்படி.. ஒருவேளை நான் தான் நல்லா கவனிக்கல போல.. நாளைக்கு நல்லா கவனிச்சிட்டு வந்து ஆடுறேன்.. அப்படியில்லேன்னா அவங்ககிட்டயே ஏன்னு கேக்குறேன்" என்று சிந்தனையில் இருந்தவரை கண்ட, அவரின் தாயோ
"ஏன்டி.. வீட்டு பாடம் எழுதும் போது கவனம் அதுல தான் இருக்கணும்.. நீ என்ன எழுதாம விட்டத்த பாத்துட்டு இருக்க"
"அது ஒன்னுமில்ல அம்மா.. நான் ஏற்கனவே ஸ்கூல் ஆண்டு விழாவுக்கு ரெண்டு அக்கா பரதம் ஆடுறாங்கன்னு சொன்னேன்ல.. அது எனக்கு பிடிச்சி இருக்கா.. அதான் அவங்க ஆடுறத பாத்து நானும் டெய்லி வீட்டுக்கு வந்து ஆடி பாக்குறேன் தான்.. ஆனா, அவங்க அளவுக்கு ஆட வர மாட்டிக்கு"
அதைக் கேட்டு புன்னகைத்த அன்னையோ "நான் தான் சொன்னேன்ல அது நம்ம கலாச்சார நடனம்.. அவ்வளவு சீக்கிரம்லாம் கத்துக்க முடியாது.. நாள் எடுக்கும்" என்று கூறி, அவர் தலையை வருடிவிட்டு சென்றார்.
அவர் நினைத்தால் தன் மகளை பரத வகுப்பில் இணைத்திருக்கலாம் ஆனால் இது தான், என் மகளின் ஆசை என்று தானே முடிவெடுத்து சேர்ப்பதை விட தன் மகளே அதன் முடிவை எடுக்க வேண்டும் என்றும், அப்போது தான் அதில் அவளால் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார்.
அப்படியே, அன்றைய நாட்களை கழித்து மறுநாள் பள்ளிக்கு சென்ற ஜோதி வழக்கம் போல் இடைவேளை நேரம் அவர்களின் ஆடலை காண சென்றார், அவர்கள் முடிக்கும் வரை ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கி கொண்டிருந்தவரோ, அவர்கள் ஆடல் முடிந்து ஓய்வெடுக்க அமர்ந்த நேரம் அவர்களின் அருகே சென்ற ஜோதியோ "அக்கா.. நீங்க ரெண்டும் பேரும் சூப்பரா டான்ஸ் ஆடுறீங்க.. டெய்லி இன்டர்வல் டைம்ல வந்து உங்க டான்ஸ் பாப்பேன்.. எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு"
அதற்கு, அவர்களும் "தேங்க்ஸ் பாப்பா"
"ஆமா அக்கா.. எப்படி இவ்வளவு அழகா ஆடுறீங்க.. எனக்கு சொல்லி தருவீங்களா"
"பரதத்துக்குன்னு தனியா டான்ஸ் கிளாஸ் இருக்கு பாப்பா.. அங்க போய் கத்துகிட்டோம்.. நீயும் அங்க போய் கத்துக்கோ.. எங்கள போலவே நல்லா ஆடலாம்" என்று கூற, பிறகு அவர்களிடம் பரதம் வகுப்புக்கான விலாசம் என்று இன்னும் சில விஷயங்களை கேட்டு தெரிந்தவரோ, அவர்களிடமிருந்து விடைபெற்று வகுப்புக்கு சென்று பாடத்தை கவனித்து கொண்டிருந்தவரின் எண்ணத்தில், அவர்கள் பேசியது அடிக்கடி நினைவிற்கு வர எப்போது பள்ளி முடியும் வீட்டிற்கு சென்று அன்னையிடம் எப்போது கூறுவது என்று பள்ளி முடியும் நேரத்திற்காக காத்து கொண்டிருக்க, அவரை அதிகம் நேரம் காக்க வைக்க வேண்டாமென்று கடவுள் எண்ணினாரோ என்னவோ உடனே மணி அடிக்க வீட்டிற்கு சிட்டு போல் பறந்து சென்றார்.
வீட்டிற்கு வந்ததும் பையை பறக்க விட்டவரோ "அம்மா அம்மா.." என்று கத்தியவாறே வீட்டை சுற்றி அன்னையை தேட, அவரின் தேடல் அறிந்த தாயோ பின் வாசல் வழியே வந்து "என்னடி வந்ததும்.. என் பேர ஏலம் விடுற"
அவர் கூறியது ஜோதியின் காதில் விழுந்ததே ஐயம் தான், அன்னையை கண்டவரோ ஓடி சென்று அவர் கைபிடித்து இழுத்து கொண்டு வர, அவரோ "ஏய் என்னன்னு சொல்லுடி.. எனக்கு நிறைய வேலை கிடக்கு.. நீ உன் இஷ்டத்துக்கு இழுத்துட்டு போற.. விடு டி"
"வேலை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் இப்படி வந்து உக்காரு உன்கிட்ட பேசணும்" என்று தன் அன்னையின் கரம்பற்றி அமர வைத்துவிட்டு, அவர் அருகில் அமர்ந்த ஜோதியோ "அம்மா.. நான் பரதம் ஜாயின் பண்ணலாம்ன்னு இருக்கேன்.. என்ன சேத்து விடுவியாவா"
தன் மகளுக்கு இருக்கும் ஆசையை, அவளே வாய்விட்டு கூற வேண்டுமென்று தானே ஆசைப்பட்டார், தன் ஆசையை மகள் கேட்டதில் மகிழ்ச்சி கொண்டவர் எப்படி மறுப்பு தெரிவிப்பார் "என்னடி சொல்லுற"
அதைக் கேட்டு, இன்று பள்ளி கூடத்தில் அவர்களிடம் பேசியதில் இருந்து பரத வகுப்பிருக்கும் இடத்திற்கான விலாசம் வாங்கியது வரை அனைத்தையும் கூற,
அவர் கூறியதை கேட்டு மகளை சந்தோஷம் கலந்த வியப்புடன் கண்ட தாயோ "பரதம் கிளாஸ்ல சேத்து விடணும் அதான.. நாளைக்கே சேந்துருரலாம்"
"நிஜமாவா அம்மா.. அப்பா ஓகே சொல்லுவாங்களா.."
"அதெல்லாம் ஓகே சொல்லுவார்.. பேசி சம்மதம் வாங்க வேண்டியது என்னோட பொறுப்பு.. பரதம் கத்துக்கிட்டு எல்லா போட்டிலயும் கலந்துகிட்டு பரிசு வாங்க வேண்டியது உன்னோட பொறுப்பு.."
"என் செல்ல அம்மா" என்று கூறி, அவர் கன்னத்தில் இதழ் பதித்து அறைக்குள் சென்றவருக்கோ எல்லை இல்லா ஆனந்தம் தான், தன்னாலயும் பரதம் கற்றுக்கொள்ள முடியும், அவர்களை போல நானும் ஆட போகிறேன் என்று, மறுநாள் பரதம் வகுப்பிற்கு செல்ல போவதை நினைத்து வானத்தில் பறந்து கொண்டிருந்தார்.
அவர் அன்னை கூறியது போல், அன்று இரவு கணவனிடம் மகளின் ஆசையை பற்றி கூறி சம்மதம் வாங்கியவரோ மறுநாளே இருவரும் அவர்கள் கூறிய விலாசத்தில் இருக்கும் பரத வகுப்பிற்கு வந்து, தன் மகளின் ஆசையை நிறைவேற்றி விட்டு தலையை வருடியவரோ "நீ சொன்னது போல.. உன்ன பரதம் கிளாஸ்ல சேத்து விட்டு.. உன் வாழ்க்கைகான கோடு போட்ருக்கேன்,
அத வரஞ்சு சித்திரமா மாத்த வேண்டியது உன் கைல தான் இருக்கு.. இன்னைக்கு நீ இந்த பரதம் ஸ்கூல்ல பரதம் கத்துக்க போற.. ஆனா நாளைக்கு எல்லாரும் உன்கிட்ட வந்து கத்துக்கணும்.. பொண்ணுங்க படிக்க கூடாது வீட்டுல வேலை தான் பாக்கணும்ன்னு நினைக்கிற, இந்த காலத்துல ஒரு பொண்ணா நீ எல்லாருக்கும் சான்றா இருக்கணும்.. இன்னொரு விஷயம் சொல்றேன் பொண்ணா பிறந்த ஆசையெல்லாம் அடக்கி வைக்கணும்ன்னு அவசியம் இல்ல.. அதே சமயம் நமக்கு வேண்டியத வாய்விட்டு கேட்டா மட்டும் தான் கிடைக்கும்.. உனக்கு வேண்டியத அம்மாகிட்ட தைரியமா கேளு" என்று கூறியவருக்கு தான் கூறியது மகளுக்கு
புரிந்து இருக்குமா என்று கூட தெரியவில்லை இருப்பினும் ஒரு தாயாக கூற நினைத்ததை கூறிவிட்டு சென்றார்.