• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கார்கோள் கொண்ட குமரியாள் -03

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
குமரியாள்-03

அன்று...
சில மாதங்கள் முன்பு...

குமரியாள் புகைப்படம் கிடைத்ததை அடுத்து பெரும் சந்தோஷமான செய்தியொன்று மொத்த இந்தியா மற்றும் இலங்கையை மகிழ்வுக்கு உட்படுத்தியது.

கடலின் அடியாழம் வரை செல்லும் இயந்திர மனிதனின் கண்டுபிடிப்பு அது!

கடந்த சில வருடங்கள் முன்பாகவே இயந்திர மனிதர்களின் கண்டுபிடிப்பு பல நாடுகளில் சிறப்பாய் இயற்றப்பட்டு வந்திருந்தாலும், அதைப் பயன்படுத்த பெரும் கட்டுப்பாடுகள் உலகமெங்கும் விரவியிருந்தன.

'ஏ.ஐ’ என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவின் இயக்கம் பல நன்மைகளைக் கொடுத்ததோடு அல்லாமல் பல தீமைகளையும் செய்வித்ததன் விளைவே இந்தக் கட்டுப்பாடுகள். முக்கியமான ஆராய்ச்சிகளுக்கு, மற்றும் ராணுவ அமைப்பிற்கு மட்டுமே இயந்திர மனிதர்களின் உற்பத்தி இருக்க வேண்டும், மேலும் அரசின் ஆணையின்றி உற்பத்தி இருக்கக் கூடாதென்ற வலுவான சட்டத்தின் கீழ் தான் இதன் பயன்பாடு இருந்து வந்தது.

இந்த நிலையில் குமரியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கான இயந்திர மனிதனை உருவாக்கும் பணியானது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பின் வெற்றியைத் தழுவியிருந்தது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறை கடந்த மூன்று ஆண்டுகள் முன்பாக ‘ஸ்கான் ஸோனார்' கருவி மூலம் குமரிக்கண்டத்தின் புகைப்படங்களைத் எடுத்திருந்ததையடுத்து இது அவர்களது இரண்டாம் வெற்றி!

புகைப்படங்கள் யாவும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறைக்கே உறித்தாக அமைந்திருக்க, புகைப்படங்களைக் கொண்டு அவ்விடத்தில் இன்னமும் சிதிலமடையாமல் ஓரளவேனும் பாதுகாக்கப்பட்ட சில கட்டிடங்களைக் கண்டுகொண்டனர். இதைக்கொண்டு தான் அவர்களது அடுத்த திட்டமும் அமைந்தது.

“ஏன் யாழ், அத்தனை ஆழத்திலிருக்கே நம்ம ரோபோட் ஒழுங்கா போகுமா? ஏற்கனவே இரு முறை முயற்சி பண்ணி அழுத்தம் தாங்காம ரோபோட் பாதியிலேயே வெடிச்சுடுச்சு. இந்தமுறை என்ன ஆகுமோ?” என்று சமுத்திரா கூற,

“ம்ம்.. பார்ப்போம்டி. நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்” என்று அகரயாழினி கூறினாள்.

இருவரும் ஒன்றாகவே கல்லூரியை முடித்து, ஒன்றாகவே ஒரு தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் வேலைக்கு சேர்ந்து, பின் ஒன்றாகவே தில்லியிலுள்ள தலைமை ஆய்வகத்தில் வேலைக்கு விண்ணப்பித்து, இதோ வேலையும் கிடைத்து ஒன்றாகவே தில்லிக்கு இடம் பெயர்ந்திருந்தனர்.

“ரொம்ப படபடப்பா இருக்கு யாழி” என்று சமுத்திரா கூற,

“ஓவர் படபடப்பு உடம்புக்கு ஆகாதுடி தங்கம். நம்பிக்கையோட இரு” என்று கூறிய அகரயாழினிக்கும் மனதில் படபடப்பு இருந்தது தான்.

“ரோபோட் போயிடுமா?” என்று சமுத்திரா மீண்டும் கேட்க,

“சமு.. ரோபோட் போறது மட்டுமே நம்ம சாதனை இல்ல. அத்தனை ஆழத்திலிருந்து நாம எடுக்கும் ஆதாரம் சிதையாம வர்றதுல தான் சாதனை இருக்கு. உனக்கு டைட்டானிக் பற்றி நான் சொல்லித்தான் தெரியணுமா என்ன? அந்த கப்பல் கடலோட அடியாழத்திலிருக்கு. நம்மால போக முடிஞ்ச தூரம் தான். இருந்தும் அதை ஏன் மேல கொண்டு வர முடியலை? அத்தனை ஆழத்திலிருந்து அதை எடுக்கும்போது மாறுபடும் கடல் அழுத்தத்தால் வெளிய வர்றதுக்குள்ள அது நொருங்கி கரைஞ்சுடும்னு தான்.

அதைவிட ஆழம் இது! நாம ஆதாரமா எடுக்கப்படும் கல்லிலிருந்து, அதோட ஏஜ் தான் கண்டுபிடிக்கப் போறாங்க. அதுக்கு அது உடைந்தே இருந்தாலும் பிரச்சினை இல்லைனு தான் சொல்றாங்க. இருந்தாலும் அதை பத்திரமா மேல கொண்டு வரணுமே?

இதெல்லாம் ரொம்ப நுணுக்கமான செயல்கள். இரண்டு முறைகூட சொதப்பாம போனாதான் ஆச்சரியம். இன்னும் அடுத்த சப்மெரின் கண்டுபிடிக்கும் வேலை துவங்கிடுச்சு. இது முதல் இரண்டை போல அத்தனை சாதாரணம் இல்ல. இதுக்கும் டைட்டானிக்கயே உதாரணமா எடுத்துக்கோயேன், சப்மெரின் வச்சு டைட்டானிக்க சுற்றிப் பார்க்க போனவங்களுக்கு என்னாச்சுனு நான் சொல்லிதான் தெரியணுமா?” என்று அகரயாழினி கூறினாள்.

“சப்மெரின் பற்றின செய்தி பார்த்ததும் எனக்குமே டைட்டானிக் தான்டா நினைவு வந்தது. ஆனா யோசித்துப் பாரு, இந்த சப்மெரின் ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆச்சுனா நாம குமரிக்கண்டத்திற்கு போகமுடியும். நம்ம ஆதிகுடி தோன்றின இடம், வாழ்ந்த இடம்னு ஒவ்வொன்னா ரசிக்க முடியும். அங்க கோவில் கட்டிடங்கள், சிலைகள்னு சிதைந்து கிடந்ததையெல்லாம் அன்னிக்கு நியூஸ்ல பார்த்தோமே.. ஹப்பா.. புல்லரிச்சுடுச்சுடி” என்று சமுத்திரா கூற,

“ஆனா இது சும்மா இல்லை சமு, இதுக்கு எப்படியும் பல வருஷம் ஆகும். நீயும் நானும் உயிரோட இருப்பதற்குள் வந்துட்டாளே ஆச்சரியம் தான்” என்று அகரயாழினி கூறினாள்.

“அப்படியில்ல யாழி. எங்க மாமா சொல்வாங்க, அவங்க ஸ்கூல் முடிச்சு மொபைல் டெக்னாலஜி தான் படிக்குறதா சொன்னாங்களாம். அப்ப அவங்க அப்பா.. அதான் என் தாத்தா, தெருவுக்கு ஒன்னுனு இருக்குற இதைவச்சு உன்னால என்ன வியாபாரம் பார்க்க முடியும்? வேற எதாவது படிடானு சொல்லிட்டாராம். ஆனா இப்பப் பாரு.. வீட்டுக்கே நாலு இருக்கு. நம்ம தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் ரொம்ப அபாரமா இருக்கு. இதோ இந்த குமரியைக் கண்டுபிடிக்கும் விஷயம் கூட பத்து வருஷம் முன்ன சாத்தியமே இல்லாத ஒன்றா இருந்தது. ஆனா இப்பப் பாரு.. இத்தனை தூரம் முன்னோக்கி வந்துருக்கோம். நீ வேணும்னா பாரு.. சாகுறதுக்குள்ள நீயும் நானும் ஒன்னா சேந்து அந்த சப்மெரின்ல போய் குமரிக்கண்டத்தை ரசிச்சுட்டுத்தான் வரப்போறோம்” என்று சமுத்திரா கூறினாள்.

அதில் சிரித்துக் கொண்ட அகரயாழினி, “சரிதான்டி சமு. நீ சொல்றதும் ஏற்கும்படியானதுதான்” என்று தோழியின் கூற்றை ஒப்புக்கொள்ள, சிரித்தபடி மீண்டும் செய்திகளில் மூழ்கினர்.

பெரும் பரபரப்போடு கூடிய நற்செய்தியாய், எந்தவித சேதமும் இன்றி, இயந்திர மனிதன் கடல்கொண்ட குமரியை அடைந்திருந்தது!

அங்கிருந்து ஏதேனும் ஒரு சிறியளவு சிற்பத்தையோ, கட்டிட பாகத்தையோ எடுத்து வருவதே அவர்கள் நோக்கம். அதைக்கொண்டு வரலாறைப் புரட்டி மீண்டும் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே இப்பணிக்கான காரணமாக இருந்தது.

“ரோபோ என்னத்த எடுக்கப்போகுதோ?” என்று அகரயாழினி கேட்க,

“சின்னதா எடுப்பதும் பிரச்சினை பெருசா எடுப்பதும் பிரச்சினை. ரோபோ கையோடு கொண்டு போன பாதுகாப்புப் பெட்டி ஒழுங்கா உதவணும். ஹை-ப்ரஷர தாங்கக் கூடிய வகையில் தான் பெட்டி இருக்கு. அந்த பெட்டிக்குள் வைப்பதற்கு அடக்கமா இருக்கணும்” என்று சமுத்திரா கூறினாள்.

இருவருடன் சேர்ந்து பலகோடி மக்களின் வேண்டுதலை பொய்யாக்காமல், குமரியாளின் உடைமையோடு இந்தியக்கடலின் மேல்பரப்பிற்கு வந்து சேர்ந்தது இயந்திர மனிதன்.

“ஏ...” என்று தோழியர் இருவரும் ஆர்ப்பாட்டமும் குதூகலமுமாய் எம்பிக் குதிக்க,

“அடடடடா.. உங்க அட்டூழியம் தாங்க முடியலை பிள்ளைகளா” என்றபடி சாரு வந்தார்.

“அம்மா.. நம்ம சாதிச்சுட்டோம்” என்று அகரயாழினி அன்னையைப் பிடித்துக் கொண்டு சுற்ற,

“ஜெயிச்சுட்டேம் ஜெயிச்சுட்டோம் ஜெயிச்சுட்டேம் ஹே சொல்லு பேக் பேக்” என்று சமுத்திரா குதித்தாள்.

அதில் சிரித்து அவள் தோளில் அடித்து, “நாளைக்கு பாரு.. நம்ம ஆஃபிஸே பயங்கர ஹைப்பா இருக்கும்” என்று கூறிய யாழினி என்னவோ சந்தோஷத்தைக் குறிப்பிட்டுத்தான் கூறினாள். ஆனால் நடந்ததே முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது!

இயந்திர மனிதனின் உதவியோடு கொண்டுவரப்பட்ட கல், மிக பழமையாகவும், கடலுக்கு அடியில் பல ஆயிரம் வருடங்கள் மூழ்கிக்கிடந்ததாலும் சேதமடைந்தே இருந்தது. ஆனால் அது ஏதோ செதுக்கப்பட்ட சிலையின் ஒரு பாகம் என்பது அதைக் கண்ட அனைவராலும் புரிந்துகொள்ள முடிந்தது.

“இது ரொம்ப நல்ல விஷயம். சும்மா சாதாரணமா ஒரு கட்டிடத்தோட துண்டா இல்லாம நமக்கு ஒரு சிலையோட பாகமே கிடைச்சிருக்கு” என்று ஆராய்ச்சிக் கூடத்தில் பேசப்பட,

தோழிகள் இருவரும் வெகு ஆர்வமாயினர்.

அதுபற்றிய ஆராய்ச்சிகள் முடியவும், அதனை இந்திய தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு ஒப்படைப்பதாய் முடிவாகியிருந்த நிலையில் தான் பெரும் இடி ஒன்று வந்து சேர்ந்தது, ஆஸ்திரேலிய அரசாங்கம் அந்த கல்லிற்கு உரிமை கேட்டு தொடுத்த வழக்கு.

பெரும் பரபரப்பு ஒன்று சூழ்ந்தது!

இரண்டு நாட்டிற்கும் இடையான வாதப்பிரச்சனை, உரிமை பிரச்சினையாக அமைந்திருந்தது அவ்வழக்கு.

“என்னடி இது? நம்ம இந்தியக்கடல் எல்லைக்குள், நம்ம அரசாங்கம் எடுத்த பொருளுக்கு அவங்க எப்படி உரிமை கேட்கலாம்?” என்று யாழினி கோபத்தில் கொந்தளிக்க,

“எனக்கும் ஒன்னுமே புரியலை யாழி. என்ன யோசனையோட இந்த வழக்கை போட்டாங்கனே புரியலை” என்று சமுத்திரா குழம்பிப் போனாள்.

இரண்டு நாட்களை பெரும் குழப்பத்துடனே கடந்த இருவரும் அன்று மிகுந்த சோர்வோடு அலுவலகம் வந்தனர்.

இருவருக்கும் ஆர்வம் அதிகமிருந்தாலும், அனுபவம் குறைவு!

முதன்மை அலுவலகத்தில் வேலை கிடைத்தாலும் அவர்கள் அடிநிலை ஆய்வாளர்கள் தான் என்பதால், இதனை பெரும் அனுபவம் கொண்ட முதன்மை ஆய்வாளர்களே கையாண்டு வந்தனர்.
ஆக என்ன நடக்கின்றது, என்ன பிரச்சினை என்றே புரியாமல் சோர்வாக அலுவலகம் வந்து சேர்ந்தனர்.

வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியவள், சாவியை எடுக்க மறந்த நினைவோடு சட்டெனத் திரும்ப, யார் மீதோ மோதிக் கொண்டு கையிலுள்ளவற்றையெல்லாம் கீழே சிதறவிட்டாள்.

“அச்சோ.. சாரி சாரி” என்றவள் அவற்றை எடுக்கக் கீழே குனிய, தானும் அவளுக்கு உதவ வேண்டி அவற்றை எடுத்துக் கொடுத்த ஆடவன், “சாரிம்மா” என்றபடி அவளை நோக்கினான்.

வழக்கறிஞர்களின் பிரத்யேக உடையில், ஆறடிக்கும் கூடுதல் உயரத்தில், திராவிட நிறமும், ‘ட்ரிம்’ செய்யப்பட்ட தாடியும், சீரான மீசையமைப்பும், அடர்ந்த புருவங்களுக்குக் கீழ் அழகாய் செதுக்கி வைக்கப்பட்ட விழிகளும் என நின்றிருந்தான், வேள்பாரி!

அங்கு வந்த சமுத்திரா, “ஏ யாழி.. என்னாச்சு?” என்று அவள் பொருட்களை கையில் வாங்க,

“சாரி சார்.. கவனமின்மையால இடிச்சுட்டேன்” என்று யாழினி மன்னிப்புக் கேட்டாள்.

அழகான புன்னகையைப் பரிசாய் கொடுத்தவன், “இருக்கட்டும்மா” என்றுவிட்டு முன்னே செல்ல,

சில முதன்மை அதிகாரிகள் அவனை வரவழைத்து உள்ளே சென்றனர்.

“ஏ யாழி.. இந்த வழக்கைப் பற்றி பேசத்தான் வந்திருக்கார் போலடி” என்று சமுத்திரா கூற,

“ஆமா சமு.. முடிஞ்சா இவர்கிட்ட இந்த வழக்கைப் பற்றி கேட்டுப் பார்ப்போமா?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

“ம்க்கும்.. நம்ம அதிகாரிகளே என்னனு சொல்ல மாட்டேங்குறாங்க. இதுல இவர் சொல்லிடப் போறாரா?” என்று நம்பிக்கையின்மையோடு சமுத்திரா கேட்க,

ஏனோ யாழினிக்கு அவன் கூறுவான் என்று ஒரு நம்பிக்கை தோன்றியது.

“கேட்டுதான் பார்ப்போமே” என்று அவள் கூற,

“சரிவா” என்றபடி உள்ளே சென்றாள்.

இவளது நல்ல நேரமோ என்னவோ?

அங்கு வந்த ஆய்வாளர் ஒருவர், “யாழினி ஒரு சின்ன உதவி. நம்ம அலுவலகத்துக்கு டெல்லி ஹை-கோர்ட் வக்கில் வந்திருக்கார். அவரை நம்ம கேன்டீன் கூட்டிட்டுப் போக முடியுமா? என்கிட்ட தான் கேட்டாங்க. எனக்கு வேற ஒரு வேலை இருக்கு” என்று அவர் கூற,

கரும்பு தின்ன கசக்குமா அவளுக்கு?

“ஒன்னும் பிரச்சினை இல்லை சார். நாங்க கூட்டிட்டுப் போறோம்” என்றவள் தோழியைப் பார்த்து கண்ணடிக்க, அவளும் உற்சாகமடைந்தாள்.

இருவருமாய் அவனிருக்கும் அறைக்கு வந்திருக்க, உள்ளிருந்து முதன்மை ஆய்வாளரிடம் பேசியபடி வெளியே வந்தான் வேள்பாரி.

பெண்கள் இருவரையும் பார்த்த ஆய்வாளர் புருவம் சுருக்க, “சார கேன்டீன் கூட்டிட்டுப் போக சொன்னாங்க” என்று யாழினி கூறினாள்.

“அதுக்கு ரெண்டு பேரா?” என்று கேட்டவர், வேள்பாரியிடம் திரும்பி, “ஓகே சார். சாப்பிட்டு வாங்க” என்று கூற,

“சரி சார்” என்று அவருடன் கை குலுக்கிவிட்டுத் திரும்பினான்.

பெண்கள் இருவரும் தங்களுக்குள் கிசுகிசுத்தவர்களாய் அவனை அழைத்துச் சென்றனர்.

அவர்களது நடவடிக்கைகளை அவதானித்தபடியே வந்தமர்ந்தவனுக்கு உணவை வாங்கிக் கொண்டு வந்து வைத்தனர்.

“நன்றிம்மா” என்றவன் உண்ணத் துவங்கிட, அவனுக்கு எதிரிலேயே அமர்ந்து கொண்டனர்.

“என்னடி கேட்க?” என்று யாழினி கிசுகிசுக்க,

“முதல்ல கேட்டா சொல்லுவாரானு பாரு” என்று சமுத்திரா கிசுகிசுத்தாள்.

அவர்கள் இருவரையும் ஏறிட்டவன், “என்கிட்ட என்ன கேட்கணும்?” என்று கேட்க,

திருதிருவென விழித்த இருவரும் அசடு வழிய சிரித்தனர்.

“ம்ம்?” என்று புருவம் உயர்த்தி மீண்டும் அவன் கேள்வியாய் நோக்க,

“அது சார்.. இப்ப ஆஸ்திரேலியா தொடுத்திருக்கும் வழக்கைப் பற்றி செய்திகளிலும் எதுவும் தெளிவா வரமாட்டேங்குது. இது என்னனே எங்களுக்குப் புரியலை. எதுக்கு வழக்கு தொடுத்திருக்காங்க? இதுபற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா ப்ளீஸ்?” என்று யாழினி கேட்டாள்.

இருவரையும் தன் அடர்ந்த விழிகளின் பார்வையில் அளவிட்டவனுக்கு அவர்களின் ஆர்வம் புரிந்தது.

“வெல்.. இப்ப நாம கண்டுபிடிச்சுருக்குற இந்த குமரிக்கண்டத்தோட எச்சங்கள் இருக்கில்லையா? இதுக்கு எங்களுக்கும் உரிமை இருக்கு. அதை கொடுங்கன்னு கேட்டுத்தான் ஆஸ்திரேலிய அரசாங்கம் வழக்கு தொடுத்திருக்காங்க” என்று வேள்பாரி கூற,

“அதெப்படி சார் சாத்தியமாகும். இதை நாம கண்டுபிடித்தது இந்தியக்கடலில் நம்ம எல்லைக்கு உட்பட்ட இடத்துல. அதுவும் நம்ம அரசாங்கத்தின் முழு உழைப்பு. அவங்களுக்கு எப்படி உரிமையை பங்கு கொடுக்க முடியும்?” பட்டாசாய் சமுத்திரா பொறிந்தாள்.

அவளைத் தொடர்ந்து, “அதானே சார். நாம எடுத்ததுக்கு எதுக்கு அவங்க உரிமை கேட்குறாங்க?” என்று யாழினி கேட்க,

“எடுத்த பொருள் நம்ம உழைப்பால் எடுக்கப்பட்டது தான். அதுக்கான ராயல்டியை அவங்க தர்றதா தான் சொல்றாங்க. ஆனா சம அளவு உரிமையாவது அவங்களுக்கு வேண்டுமாம்” என்று கூறினான்.

“சம அளவு உரிமைனா? கல்லை பாதியா உடைச்சுத் தரணுமாமா?” என்று யாழினி சற்றே கடுப்போடு கேட்க,

லேசாய் சிரித்துவிட்டவன், “இல்லம்மா.. குமரிக்கண்டத்தின் வரைபடம் பார்த்திருக்கீங்க தானே?” என்றபடி தனது அலைப்பேசியை எடுத்துக் காட்டினான்.

“இந்தியா, மடகாஸ்கர், ஸ்ரீலங்கா மற்றும் ஆஸ்திரேலியா மொத்தத்தையும் இணைக்கும் விதமா தான் இந்த குமரிக்கண்டம் இருந்திருக்கு. நான்கு நாடுகளையே இணைச்சு வச்ச கண்டம் இது. அப்ப இதுக்கான தொடர்பு நான்கு நாடுகளுக்குமே இருக்கு தானே?” என்று அவன் கேட்க,

“அது சரிதான் சார்.. அதுக்காகவா உரிமை கேட்குறாங்க? நம்ம ஸ்ரீலங்கா கூட இது கிடைச்சப்போ பாராட்டி தானே செய்தி வெளியிட்டாங்க. இவங்க என்ன பங்கு கேட்டு வாராங்க?” என்று சமுத்திரா கேட்டாள்.

இந்த இரண்டு பெண்களுக்கும் இன்னும் தெளிவடையவில்லை என்பது புரிந்தவன், “பொருள் எடுக்கப்பட்டது நம்மால தான் என்றாலும் அதன் தொன்மையான வரலாறுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இருக்கு. அதனால அதை எங்க ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் வைக்க உரிமை இருக்குனு கேட்குறாங்கமா. இதுக்கான ராயல்டியை கட்டவும் நாங்க தயாரா இருக்கோம்னு சொல்றாங்க” என்று தெளிவாய் கூற,

“என்னது?” என்று இருவரும் அதிர்ந்தனர்.

“இது நம்ம வரலாறு. நம்ம தமிழ் மற்றும் தமிழர்களோட வரலாறு. இதை எப்படி அவங்களுக்குக் கொடுக்க முடியும்? குமரிக்கண்டம் கொஞ்சூண்டு போய் ஒட்டிக்கிட்டதுக்காக பங்கு கேட்டு வருவாங்களா? என்னதிது?” என்று யாழினி கோபத்துடன் வெடிக்க,

“நாம கஷ்டபட்டு பல வருஷமா போராடி கண்டுபிடிப்போமாம். இவங்க சாதாரணமா வந்து பணம் வெச்சு விலை போசுவாங்களாமா? என்ன சார் இது?” என்று சமுத்திராவும் கேட்டாள்.

அவர்களது நியாயமான கோபத்தில் புன்னகைத்தவன், “வழக்கு நிற்காதுமா. நமக்கு சாதகமா தான் வரும். ஆனா ஹியரிங் கண்டிப்பா இருக்கும். அவங்க பக்கமிருந்து குமரிக்கண்டம் ஆஸ்திரேலியாவை இணைக்கும் பாலமா இருந்திருக்குனு சாடிலைட் சென்ஸிங் புகைப்படங்கள் எல்லாம் தயார் செய்து வச்சுருக்காங்க” என்று கூற,

“இருக்கட்டமே சார். எப்படியானாலும் காசு கொடுக்க அவங்க தாயாரா இருந்தாலும் விற்க நாம தயாரா இருக்கணும் தானே?” என்று சமுத்திரா கேட்டாள்.

“அதெப்படி விற்போம்? இது நம்ம வரலாறு. தெரிஞ்சோ தெரியாமலோ பல நாடுகளுக்கு நம்ம தொன்மங்கள் திருடு போனது போதாதா? இப்ப இதையும் பிடுங்கிக்கப் பார்ப்பாங்களா?” என்று யாழினி கோபமாகக் கேட்க,

“கூல் கூல்..” என்றவன் “உங்க பெயரென்ன?” என்று கேட்டான்.

“சமுத்திரா”

“அகரயாழினி”
என்று இருவரும் தத்தமது பெயரை முறையே அறிமுகம் செய்துக் கொள்ள,

“நான் வேள்பாரி. தில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞரா பணியாற்றுறேன்” என்றான்.

“நீங்க தான் இந்த வழக்கை எடுத்து நடத்தப் போறீங்களா?” என்று கேட்ட யாழினி தற்போது அவனை சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்வையிட்டாள்.

உண்மையில் இவன் நேர்மையாக செயலாற்றுவானா? என்ற சந்தேகம் அவள் கண்களில் தெரிந்தது.

அதைக் கண்டு வாய்விட்டு சிரித்தவன், “இது சும்மா ரெண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையில் நடக்கும் சண்டை இல்லைம்மா. நான் வெறும் சாதாரண உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் தான். இந்த வழக்கை என்னால எடுத்து நடத்த முடியாது. இதுக்கு இந்தியாவையே ரெப்ரஸென்ட் பண்ணிதான் ஒருத்தர் போவார்” என்று கூற,

“யாரு போவாங்க? இந்த வழக்கு எங்க நடக்கும்?” என்று சமுத்திரா ஆர்வமாய் கேட்டாள்.

“இந்தியாவின் நடுவண் அரசுத் தலைமை வழக்குரைஞர், solicitor general திரு சத்தியநாராயணன் தான் போவாங்க. United Nations convention of law on sea (UNCLOS). கடல் சட்டம் பற்றிய ஐக்கிய நாடுகளின் மாநாடு ஒன்னு இருக்கு. அங்க தான் இந்த வழக்குக்கான வாதம் நடக்கும். இந்தியாவை மையப்படுத்தி இந்திய அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் ஆஸ்திரேலியாவை மையப்படுத்தி ஆஸ்திரேலிய அரசு தலைமை வழக்கறிஞர் தான் தங்களோட வாத பிரதிவாதங்களை முன் வெச்சுப் பேசுவாங்க.

கடல் மீதான சர்வதேச நீதிமன்றம் (international tribunal of law on sea) அப்படினு சொல்லப்படும் அமைப்பு தான் இந்த UNCLOS கீழ துவங்கப்பட்டு இப்ப ஜெர்மனில இயங்கி வருது. இரண்டு நாட்டுக்கு இடையில் கடல் சார்ந்த எல்லா வழக்குகளுக்கும் இவங்க தான் தீர்ப்பு சொல்வாங்க. நம்ம இந்தியாவுக்கும் பங்கலாதேஷுக்கும் வங்கக் கடலில் 2014ல எல்லை வகுத்துக் கொடுத்ததும் இவங்க தான்” என்று வேள்பாரி கூற,

அவனை வியந்துபோய் பார்த்தப் பெண்கள், “அப்ப நீங்க?” என்று கேட்டனர்.

“நான் இங்கவுள்ள முதன்மை ஆய்வாளர்கள் கிட்ட பேசி, அவங்க இந்த வழக்கை தங்கள் பக்கம் தக்க வைக்க என்ன மாதிரியான ஆதாரங்களைச் சொல்றாங்கனு தெரிஞ்சுக்கிட்டு திரு.‌ சத்தியநாராயணன் அவர்களுக்குத் தெரிவிச்சுட்டே இருப்பேன்” என்று அவன் கூற,

“ஓ நீங்க அவங்களோட காரியத்தரசியா?” என்று யாழினி கேட்டாள்.

அதற்கு சிரிப்பை மட்டுமே பதிலாய் கொடுத்தவன் உண்டுவிட்டுப் புறப்பட, செல்பவனையே விசித்திரமான உணர்வோடு பார்த்து நின்றவள் மனதில் பல எண்ணங்கள் தோன்றின!


-தொடரும்...

அத்தியாயம்-04


 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
Wow dear 🤩 This epi is fully loaded with lots of information 🤩

Fantastic work u have done for this story 😍

Very much informative & also interesting ❤️

Waiting for next epi ❤️
 
  • Love
Reactions: MK18

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
Wow dear 🤩 This epi is fully loaded with lots of information 🤩

Fantastic work u have done for this story 😍

Very much informative & also interesting ❤️

Waiting for next epi ❤️
சிஸ் 🥰😍 ரியலி உங்க கமென்ட்ஸ் செம்ம ஹாப்பி அன்ட் பூஸ்டிங்கா இருக்கு 😍 ரொம்ப ரொம்ப நன்றி 🥰🤗
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
சிஸ் 🥰😍 ரியலி உங்க கமென்ட்ஸ் செம்ம ஹாப்பி அன்ட் பூஸ்டிங்கா இருக்கு 😍 ரொம்ப ரொம்ப நன்றி 🥰🤗
Keep writing dear ❤️ Worthy information u r giving in ur story.

உங்க கதைகளில இந்த கதை தான் நான் முதன்முதலா படிக்கிறது ❤️
 
  • Love
Reactions: MK18

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
Keep writing dear ❤️ Worthy information u r giving in ur story.

உங்க கதைகளில இந்த கதை தான் நான் முதன்முதலா படிக்கிறது ❤️
Thank you so so much sis 💖💖💖
 

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
சூப்பர் சூப்பர் சகி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ரெம்ப விஷயங்கள் சேகரிச்சு வித்யாசமா குடுத்திருக்கீங்க 👍👍👍👍👍👍👍👍👍👍
மிக்க நன்றி சகி😍❤️ உங்க கருத்துக்களைப் பார்க்க அத்தனை சந்தோஷமா இருக்கு 😍