• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கார்கோள் கொண்ட குமரியாள் -07

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
குமரியாள்-07

முந்தைய நாள் போல் அல்லாது இன்று வெகு விரைவாய் எழுந்துவிட்டாள் அகரயாழினி. படபடத்து அடித்த மனதை சமன் செய்து கொண்டு, விறுவிறுவென தயாராகியவள் மனவறையை திறந்தவன், அறைக்கதவைத் திறக்க அனுமதி வேண்டி தட்டினான்.

சென்று கதவைத் திறந்தவள் முன், சிறு பரிசுப் பெட்டியோடு நின்றவன், “டென்ஷனா இருக்கியா?” என்க,

“உப்..” என்று இதழ் குவித்து ஊதியவள் விழிகள் அகல விரித்து, “ரொம்ப” என்றாள்.

லேசான சிரிப்போடு உள்ளே நுழைந்தவன், பதட்டமாக அவள் பார்த்த வேலைக்கு சான்றாய் அறையில் சிதறிக் கிடக்கும் அவள் உடைகளைக் கண்டு சிரிக்க,

'அச்சுச்சோ..’ என்று அவளுக்கு சங்கோஜமாய் ஆனது.

“அ..அது.. முதல்ல மஞ்சள் நிற சட்டைதான் எடுத்தேன். அப்றம் நம்ம லக்கி கலர் ப்ளூ தானேனு அதைத் தேடினேனா.. அந்த அவசரத்துல எல்லாம்..” என்று தயக்கமாய் கூறியபடி சிதறிக் கிடக்கும் துணிகளை அள்ளினாள்.

வாய்விட்டு சிரித்த வேள்பாரி, “நீ என்னை வசியம் பண்ற தெரியுமா?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்க,

கையில் கிடந்தவை கீழே நழுவப் பார்க்கவும் சுதாரித்து உறைநிலை மீண்டாள்.

அவளோடு சேர்ந்து அந்தத் துணிகளை அள்ளியவன் மடிக்க முற்பட, “இல்ல வேணாம் பாரி சார்.. நானே எடுத்து வச்சுடுவேன்” என்று கூறினாள்.

“ஏனாம்? உங்க பாரி சார்கிட்ட என்ன தயக்கம்?” என்று அவன் புருவத் தூக்கலோடு துணியை மடித்தபடி கேட்க,

“எல்லாமே தயக்கம் தான்.. சும்மா இருந்த புள்ளைய கட்டிபுடிச்சு உச்சந்தலைலயே ஒன்னு போட்டீங்களே.. இப்பவர குளிரடிக்குது” என்று மெல்லிய முனகலோடு கூறினாள்.

அதில் வாய்விட்டு சிரித்தவன், “நல்லா யோசிச்சுப் பாரு.. நேத்து நானாவா உன்னை கட்டிபுடிச்சேன்?” என்று கேட்க,

'அச்சோ.. சொதப்புற யாழ்’ என்று நாக்கைக் கடித்துக் கொண்டு அசடு வழிந்தவள், “சரி சரி.. நான் தான்.. இப்ப என்ன அதுக்கு?” என்றாள்.

“அதுக்கு எதுவுமே நான் சொல்லலையே” என்றவன், “சரி சரி.. இந்தா” என்றபடி தான் கொண்டு வந்த பரிசை நீட்டினான்.

“என்னதிது?” என்றபடி அவள் அதை வாங்கிப் பார்க்க,

“இந்த நாள் நமக்கு ரொம்ப ஸ்பெஷல் இல்லையா? அதனால் ஒரு சின்ன பரிசு கொடுக்கணும்னு தோனிச்சு.. அதான்” என்றான்.

“ஹ்ம்..” என்று சிரித்தபடி அவள் அதை வாங்கிப் பிரித்துப் பார்க்க,

கடலுக்கு அடியில் உள்ள உலகத்தினை பின்னணி புகைப்படமாய் கொண்டு, அவர்கள் இருவருமாய் எடுத்துக்கொண்ட சுயமிகளின் தொகுப்பு மென்தகடாய் மின்னியது! புகைப்படத் தகடின் ஓரங்களில் கண்ணாடி குழாய் போன்று அமைத்து, திரவம் நிறப்பப்பட்டு நிஜ கடலைப் போன்ற உருவகத்தைக் கொடுத்து மேலும் அந்தத் தகடை மெறுகேற்றியது!

“ஹே.. ரொம்ப அழகாருக்குங்க” என்று மனமார ரசித்துக் கூறியவள் ஆசை தேங்கிய நுனிவிரல் கொண்டு அதனை வருடினாள்.

“இந்த தீம்..” என்று அவன் கூற வர,

“புரியுது” என்று கூறி புன்னகையாய் அவனைக் கண்டாள்.

அன்றைய நினைவு இருவரது காதல் ஊறிய நயனங்களில் மலர்ந்தது!

கடலுக்கடியில் உள்ள குமரிக்கண்டத்தை ரசித்திடவே சிறப்பாக ‘குமரியாள்’ என்ற பெயரில் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

அன்று அவளைக் காணவந்த வேள்பாரி, “அகரா.. நான் உனக்காக ஒரு பரிசு கொண்டு வந்திருக்கேன்” என்று கூற,

“பரிசா? என்ன பரிசு?” என்றாள்.

அவள் முன் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் பிரயாணம் செய்வதற்கான பயணச்சீட்டுகளைக் காட்டினான்.

“பாரி சார்.. நிஜமாவா? வாங்கிட்டீங்களா?” என்ற குதூகலத்துடன் அவனை தாவி அணைத்துக் கொண்டவள், “ரொம்ப சந்தோஷமா இருக்கு பாரி சார்” என்க,

“வா வா.. நேரத்தை வீணாக்காம போயிட்டு வருவோம்” என அவளோடு துறைமுகம் வந்தான்.

அங்கு அவர்களுக்கான நீர்மூழ்கிக் கப்பல் தயாராக இருந்தது.

இருவரும் தங்களது பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டு உள்ளே செல்ல, சில நிமிடங்களில் கப்பல் நீருக்குள் மூழ்கிப் பயணிக்கத் துவங்கியது.

அவர்களோடு சில வெளிநாட்டுப் பயணிகளும் அங்கு இருந்தனர்.

“ஹே யூ.. ஐ திங் யூ ஆர் டமில் பீப்பில் ரைட்? கேன் யூ சே திஸ் ஹிஸ்ட்ரீ (நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே? இதன் வரலாற்றைக் கூற இயலுமா?)” என்று குமரியாளின் வரலாறை ஒரு பெண் வேள்பாரியிடம் கேட்க,

“ஷீ இஸ் மை வுட்பீ. ஷி க்னோ எவ்ரிதிங் அபௌட் இட். ஷீ வில் எக்ஸ்பிலைன் (இவள் நான் திருமணம் செய்யவுள்ள பெண். இவளுக்கு இதைப்பற்றி அனைத்தும் தெரியும். இவளே அதனை விவரிப்பாள்)” என அகரயாழினியைக் காட்டிக் கூறினான்.

வேள்பாரியைக் கண்டு புன்னகைத்தவள், “இது குமரிக்கண்டம். இந்தியா, மடகாஸ்கர் தீவு, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று இடங்களையும் இணைக்கும் அளவு நீண்டிருந்தது. இதுக்கு லெமூரியானு சில ஆய்வாளர்களால் பெயர் சூட்டப்பட்டது! இதைபற்றி முதன் முதலா சொல்லப்பட்டபோ யாரும் பெருசா ஏற்கலை. லெமூர் அப்படினு ஒரு குரங்கு இனம் மடகாஸ்கர் தீவில் தான் அதிகம் இருக்கு. அந்த குரங்கினத்தின் எச்சம் கன்னியாகுமரியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. சார்லஸ் டார்வின் தன்னோடு ஒரு கூற்றில் உலகத்துல குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் வாழும் உயிரினம், இணைப்பு ஏதுமில்லாம அதிலிருந்து தொலைவில் இருக்கும் வேறு இடத்திலும் இருந்தா, அந்த இடங்களை இணைக்கும்படியா ஒரு நிலப்பரப்பு இருந்திருக்கும்னு சொல்லியிருந்தார். அதன் அடிப்படைல தான் இந்த கண்டம் இருப்பது பற்றிய பேச்சு பேசப்பட்டுது.

மேலும் தமிழ் இலக்கியங்கள்ல குமரிக்கண்டம் இருந்ததற்கான சான்றுகள் நிறையவே இருக்கு. அதுபோக ராமாயணம், வராக புராணம், கந்த புராணம்னு பல ஆன்மீக நூல்களிலும் குமரிக்கண்டம் இருந்ததுக்கான ஆதாரங்கள் இருக்கு. அதையெல்லாம் கொண்டு இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டுபிடிச்சு இதோ இப்ப நேரில் பார்க்க நீர்மூழ்கிக் கப்பல்களும் விட்டிருக்காங்க” என்று ஆங்கிலத்தில் விவரித்தாள்.

“வாவ் இன்டிரஸ்டிங்” என்று அவர்கள் கூற,

“இங்கதான் முதன் முதலில் மனிதர்கள் தோன்றியதாகவும், தமிழ் மொழி தோன்றியதாகவும் சொல்லப்படுது. வானிலவியல் ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, பதினைந்தாயிரத்திலிருந்து பதினான்காயிரம் ஆண்டுகள் முன்பும், பன்னிரெண்டாயிரத்திலிருந்து பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், எட்டாயிரத்திலிருந்து ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் சுனாமி மாதிரியான பெரும் கடற்கோல்கள் வந்ததா சொல்லப்படுது. அந்தக் கடல்கோல்களால தான் குமரிக்கண்டம் மொத்தமா கடலுக்குள் போயிடுச்சு. இதுபற்றிய குறிப்புகள் இலக்கியங்களிலும் இருக்கு. மணிமேகலை அப்படிங்குற ஒரு நூல்ல மாபெரும் கடற்கோல் ஒன்னு வந்து மொத்த குமரியும் கடலுக்குள் போனதுனு சொல்லப்படும் பாடலும் இருக்கு” என்று ஆங்கிலத்தில் கூறினாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம் கப்பல் குமரியாள் பகுதியை அடைந்தது!

இடிந்திருக்கும் பல சிதிலமடைந்த கட்டிடங்கள், கோபுரங்கள், சிதைந்துகிடக்கும் சிற்பங்கள் அவர்களைச் சுற்றி...

அகரயாழினியின் கண்கள் கலங்கின. என் மூத்தோன் வாழ்ந்த பூமியல்லவா இது என்று அவள் மயிற்சிகைகள் கூச்செரிந்து எழுந்தன!

வேள்பாரியின் கரத்தினை இறுகப் பற்றிக் கொண்டவள் அவனைக் கண்கள் கலங்க ஏறிட்டு, “நன்றிங்க” என்று மனமார கூறினாள்.

கடலால் சூழ்ந்து கடலுக்குள் வாழும் குமரி, காதலால் சூழ்ந்து தன் அகத்தினுள் வாழும் குமரி... இரண்டு குமரிகளையும் ரசித்தவன் அவளை அணைக்க வேண்டி நெருங்க, படுக்கையிலிருந்து உருண்டு விழுந்தாள் பெண்!

'கனவா?’ என்று மனதோடு சலித்துக் கொண்டவளுக்கு உருண்டு விழுந்ததன் வலிதான் கண்டவை கனவென்று உறுதி செய்தன.
முதலில் பெரும் ஏமாற்றம்! 'எப்படியொரு அழகிய காட்சி? இதைக் காண நிஜத்தில் கொடுத்து வைத்திடுமா? இந்த வாழ்வின் பரிபூரணத்தை ஒற்றைக் கனவு காட்டிவிட்டதே!’ என்று உள்ளம் பூரித்து உடல் சிலிர்த்து எழுந்து அமர்ந்தாள். ஆர்வம் தாளாமல் அக்கனவை அப்போதே அவளவனுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பியிருந்தாள்.

அன்றைய நினைவில் அசையாதிருக்கும் பாவையை உலுக்கிய பாரி, “என்ன மேடம்.. கனவுலகத்துக்குப் போயாச்சா?” என்று கேட்க,

நினைவு மீண்டவளிடம் சிறு சிரிப்பொலி.

“அன்னிக்கு உன் கனவை நீ சொன்னதில் உன் ஆர்வம் தெரிஞ்சுது. ஆசை புரிஞ்சுது. அதை நினைவா மாற்றிக் காட்டனும்னு தான் ஆசை. ஆனா இப்பதிக்கு அது சாத்தியமில்லயே! அதான் நிழலாவாவது நம்மோட இருக்கட்டும்னு இதை தயார் பண்ணேன்” என்று வேள்பாரி கூற,

“ரொம்ப அழகாருக்கு.. இதுவும்.. நீங்களும்.. உங்க எண்ணமும்.. எண்ணங்கள் அழகாருந்தா முகமும் வாழ்வும் வண்ணங்கள் பெருமாம்.. சரியாதான் இருக்கு” என்று கூறி கிளுக்கிச் சிரித்தாள்.

“ஆஹாங்?” என்று புருவம் உயர்த்திக் கேட்டவனுக்கு முறல்கள் மின்ன புன்னகை நீண்டது!

'ச்ச.. சிரிச்சுதான்யா நம்மை கவுக்குறார்’ என்று மனதோடு சிணுங்கியவள் விழிகள் அவனை ஆர்வமாய் ரசிக்கவும் தவறவில்லை.

“ரசிச்சு முடிச்சாச்சுனா.. நாம கிளம்பலாம்” என்று குறும்பு மின்னும் கண்களோடு அவன் கூற,

அதில் நாணச்சிவப்புப் பூசிக் கொண்ட முகத்துடன் மெல்லத் தலையசைத்தாள்.

இருவரும் வெளியே வர, சமுத்திரா மற்றும் பூமிநாதனும் தயாராக இருந்தனர்.

நால்வருமாய் புறப்பட்டு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரத்தில் உள்ள கடல் சட்டம் பற்றிய ஐக்கிய நாடுகளின் மாநாட்டு கூடத்தை அடைந்தனர்.

அத்தனை எளிதில் உள்ளே அனுமதியெல்லாம் கிடைத்துவிடாது தான். எனினும் அவ்விடத்தின் வரவேற்பறையில் காத்திருந்தனர்.

வேள்பாரி மட்டும் உள்ளே சென்றான். அங்கு நடப்பவை காட்சிகளாய் ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதை வரவேற்பறையின் தொலைகாட்சியில் மற்ற மூவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இன்னும் வழக்கு துவங்கியிருக்கவில்லை.

வியர்வையின் ஈரம் யாழினியின் உள்ளங்கையில் ஆட்சி நடத்தத் துவங்கியிருந்தது. அவ்வப்போது பகைநாட்டு வேந்தனாய் அவளது கைக்குட்டை போர் புரிந்து சென்றபோதும், மீண்டும் பிறப்பெடுத்துத் தன் ஆட்சியை நிலைநாட்டிக் கொண்டிருந்தது அவள் உள்ளங்கை உவர் நீர்.

அங்கு சமுத்திராவிற்கும் கொஞ்சம் பதட்டம் இருந்தது தான். ஆனால் துணையாக இருந்த துணைவனவன் அவளைத் தோளோடு அணைத்து ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தான்.

அவன் கரத்தின் அழுத்தம் சமுத்திராவை மெல்ல புன்னகைக்கவும் ஆசுவாசம் அடையவும் செய்தது.

அதைக் கண்டு புன்னகைத்துக் கொண்ட அகரயாழினிக்கு அன்றைய நினைவுகள் அழகோவியமாய் வந்து சென்றன...

அன்று...

சமுத்திராவின் வீட்டில் அமர்ந்து கையில் உள்ள புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள் யாழினி.

“அய்யோ அப்பா.. சொல்ற பேச்சைக் கேட்பீங்களா மாட்டீங்களா நீங்க? சுவீட் எடுக்காதீங்கனு சொன்னா ஏன் கேட்கவே மாட்றீங்க? இதுக்கு தான் உங்க வருங்கால மருமகன் கிட்ட உங்களையும் கூடவே கூட்டிகிட்டு தான் வருவேன்னு சொன்னேன்” என்று தன் தந்தை ஆனந்தோடு சமுத்திரா சண்டை பிடித்துக் கொண்டிருக்க,

“யாழுமா.. பாருடா இவள. ஒன்னு சாப்பிட்டதுக்கே இப்படி சண்டை பிடிக்குறா என்னோட. இவளை கட்டிக்கப்போறவன் ரொம்ப பாவம்” என்று பாவம் போல் யாழினியை துணைக்கு அழைத்தார்.

“நீங்களாச்சு அவளாச்சு உங்க மருமகனாச்சு. ஸ்வீட் சாப்பிடாதீங்கனு அவ சொல்றதை நீங்களும் கேட்க மாட்டீங்க, அதுக்கு பதிலா கூடுதலா ஒரு ரௌண்ட் வாக்கிங் போயிடுறேன்னு நீங்க கெஞ்சினாலும் அவளும் காதுல வாங்கமாட்டா. ஆளை விடுங்க சாமிகளா” என்றபடி திரும்பி அமர்ந்தவள் தனது புத்தகத்தில் ஐக்கியமானாள்.

சில நிமிடங்களில் தந்தையும் மகளும் ராசியாகி கொஞ்சிக்கொள்ளத் துவங்க, வேள்பாரி அவ்விடம் வந்தான்.

இந்த சில மாதங்களில் அகரயாழினி மற்றும் சமுத்திராவின் வீட்டிற்கு அவனும் செல்லப்பிள்ளையாகிப் போனானே!

“ஹே..” என்று கத்தத் தயாரான சமுத்திராவைக் கண்டு வாயில் விரல் வைத்து இடவலமாய் தலையாட்டியவன், சிறு குறும்புப் புன்னகையுடன் பூனை நடையிட்டு யாழினியை நெருங்கினான்.

தந்தையும் மகளும் அவனது செயலை சுவாரசியத்தோடு நோக்க, யாழினியின் கண்களை பின்னிருந்தே பொத்திக் கொண்டான்.

நொடியும் தாமதிக்காத தாரகையவள், “பாரி சார்..” என்று மெல்லிய குரலில் புன்னகை பூக்க‌க் கூறிட,

அனைவருக்குமே பெரும் ஆச்சரியம் தான்!

“ஹே.. எப்படி கண்டுபிடிச்ச?” என்று உண்மையான ஆச்சரியத்தோடு அவள் முன் வந்து நின்ற வேள்பாரி வினவ,

ஆனந்தும் சமுத்திராவும் அவள் முன்னே வந்து, “எப்படி சரியா கண்டுபிடிச்ச யாழி?” என்றனர்.

சமுத்திரா மட்டுமே இருந்திருந்தாலும் கூறியிருப்பாள். ஆனந்தும் இருந்தது அவளுக்குச் சற்றே வெட்கமாக இருந்தது கூறுவதற்கு. சிறு சிரிப்போடு “அதொல்லாம் அப்படித்தான்” என்றாள்.

சிரித்துக் கொண்ட பெரியவர் பாரியின் தோள்தட்டி, “எப்படி இருக்கப்பா? ரொம்ப நாளாச்சு வீட்டு பக்கம் வந்து?” என்று கேட்க,

“உங்க பொண்ணுதான் வரக்கூடாதுனு சொல்லிட்டா ப்பா” என்றான்.

“ஏதே.. ஹலோ.. நான் எங்க அப்படி சொன்னேன்?” என்று சமுத்திரா கேட்க,

“போன முறை கால் பண்ணி உங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னப்ப நீதான வேணாம்னு சொன்ன?” என்று தீவிரமான பாவனையில் கூறினான்.

“அட கொடுமையே.. அப்ப யாருமே வீட்ல இல்ல. நானும் யாழு வீட்ல இருந்தேன்னு அங்க வரதானே சொன்னேன்” என்று அவள் கேட்க,

“அதெல்லாம் எனக்கு தெரியாது. வராதனு நீதானே சொன்ன” என்று அவள் முடியை கலைத்துவிட்டான்.

இவர்கள் சேட்டையைக் கண்டு சிரித்த பெரியவர் மூவருக்கும் உண்ணுவதற்கு ஏதேனும் தயாரிக்க சென்றிட,

பரபரப்பாய் யாழினி அருகே சென்று அமர்ந்தவன், “சொல்லு அகரா” என்றான்.

சிறுபிள்ளை போல் அவன் காட்டிய பரபரப்பில் பெண்கள் இருவருமே சிரிந்துவிட்டனர்.

“கொஞ்சமாவது ஹீரோ மெடீரியல் மாதிரி நடந்துக்குறீங்களா? பச்ச பிள்ளையாட்டமே நடந்துக்குறது” என்று சமுத்திரா கூற,

“ஏன்? ஹீரோனா வெறுப்பா கஞ்சி போட்ட காட்டன் சட்ட மாதிரி தான் இருக்கணுமா? சிஃபான் சேலை போல வளவளனு இருந்தா ஏத்துக்க மாட்டீங்களா?” என்று மிடுக்காய் கேள்வி எழுப்பினான்.

“யாரு இல்லனு சொன்னா? ஆனா அப்படி ஹீரோஸ் நான் தெய்வத் திருமகன்ல தான் பார்த்துருக்கேன்” என்று கேலியாய் கூறி சமுத்திரா சிரிக்க,

“அடிங்கு” என்று அவள் தலையில் வலிக்காது குட்டியவன், “நாம எப்பேர்பட்ட முரடனா இருந்தாலும் நமக்குள்ள ஒரு குழந்தைத்தனம் பசுமையா இருந்துட்டே இருக்கும். அது ஒரு தாய் வாசம் மட்டுமே பழகின குழந்தை மாதிரி. அத்தனை சீக்கிரம் எல்லார்கிட்டயும் வெளிப்பட்டுடாது” என்று உணர்ந்து கூறி, “என் அகரா என்கிட்ட வெளிப்படுத்தினதைப் போல” என்று அவளைக் கண்டான்.

அழகிய புன்னகையோடு அவன் கரம் பற்றி உள்ளங்கையில் தன் கரம் வைத்தவள், “இந்த உள்ளங்கைச் சூடு எனக்கு பழக்கம்.. என்னைத் தாங்கி பிடிச்ச கரத்தோட தொடுகை எனக்கு அத்துப்படி. ஆஸ்பிடல்ல ஒருமுறை ஃபுட் பாய்சன்ல படுத்திருந்தப்போ வந்துத் தாங்கினீங்களே.. அந்த அரவணைப்பை இந்த கையில் உணர முடியும்” என்று உளமாரக் கூற,

அவளையே விழிகள் மின்னப் பார்த்தான்.

“ச்ச!.. உங்க கூட இருந்தா எனக்கும் லவ் பண்ற ஆசை வந்துடும் போலயே” என்ற சமுத்திரா அவ்விடம் விட்டு விலக,

“அவ்ளோ நோட் பண்ணியாடி?” என்று கேட்டான்.

அரிதிலும் அரிதாய் அவன் மொழியும் ‘டி’ சில்லென்று தான் இருந்தது!

“நோட் பண்ணாமயா?” என்றவள் புத்தகத்தில் மூழ்கிட,

“என்ன கதை?” என்று கேட்டான்.

“கதையில்ல.. கட்டுறை. கடலுக்கு அடியில் இருக்கும் பல இடங்களைப் பற்றியது எல்லாம் சேகரிச்சு பைன்ட் பண்ணி வச்சிருக்கேன்” என்று அவள் கூற,

“வாவ் அகரா.. என்ன என்ன இடங்கள் இருக்கு?” என்று கேட்டான்.

“இந்தியால உள்ள துவாரகா, பூம்புகார், மகாபலிபுரம், எகிப்து நாட்டுல உள்ள தோனிஸ் எராக்லியன், கிளியோபட்ரா அரண்மனை, சீனாவில் உள்ள ஷிச்செங் இப்படி பல” என்று அவள் கூற,

“ஹே.. நல்லா சுவாரஸ்யமா இருக்கும் போலயே?” என்றான்.

“ஆமாங்க. அதுலயும் இந்த கிளியோபட்ரா அரண்மனை இருக்கே.. இது கடலுக்கு அடியில் 1600 வருஷம் முன்னவே மூழ்கிப் போனதா சொல்லப்படுது. இதுல கிளியோபட்ரா மகனோட சிலை, எகிப்த் கடவுளோட சிலைகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கு. இதுல முற்றும் சுவாரசியமான மற்றும் ஆச்சரியமான விஷயம் அந்த அரண்மனையில் உள்ள பொருட்கள் வச்சது வச்சபடியே இன்னும் அசையாம இருக்காம்” என்று நயனங்கள் கதைபேச யாழினி கூற,

“அதெப்படிமா? அத்தனை வருஷம் ஆனபோதும் அது நகராம இருக்கு?” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

“உலகில் அதிசயங்களுக்கா பஞ்சம்?” என்று அவள் கேட்க,

“அதுவும் சரிதான்” என்றான்.

“இதுல பாவ்லோனியானு கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஒரு இடத்தைப் பற்றியும் இருக்கு. இது ரொம்ப பழமையான இடமாம். இங்கருந்து மனுஷங்க எலும்புகூடெல்லாம் நிறையா எடுத்ததா சொல்லப்பட்டிருக்கு” என்று யாழினி கூற,

“ம்ம்.. நம்ம நாட்டில் உள்ளதையெல்லாம் சொல்லுவனு பார்த்தா வரிசையா வெளிநாட்டில் உள்ளதையா சொல்றியே?” என்று சின்ன சிரிப்போடு கேட்டான்.

“நம்ம நாட்டில் உள்ளதோட பெருமைய நாம தான் தெரிஞ்சுகிட்டு பிற நாட்டைச் சேர்ந்தவங்களுக்கு சொல்லனும்‌. வெளிநாட்டு பெருமைகளைத் தெரிஞ்சுகிட்டு அதை பாராட்டிக்கனும்” என்று கூறியவள், “பிற நாட்டோட தொன்மங்களை ஆராயும்போது அதுசார்ந்த நம்ம நாட்டு விஷயங்கள் நினைவு வரும். இதுமாதிரி விஷயம் பல புது கருத்துக்கள் மற்றும் கேள்விகள கொடுக்கும். அதாவது.. இப்ப லெமூர் குரங்கினத்தோட எச்சம் நம்ம நாட்டில் கிடைச்சுது. மடகாஸ்கர்ல லெமூர் இனங்கள் இருப்பது பற்றி தெரிஞ்சதால தான இந்தத் தொடர்பை தெரிஞ்சுக்க முடிஞ்சுது? அப்படிதான்.. பிற நாட்டு செய்திகளைத் தெரிஞ்சுக்கும்போது அதுகூட நம்ம நாட்டு தொடர்புகள் இருந்தா அதையும் தெரிஞ்சுக்கலாம்” என்று கூற,

“நீ நிஜமாவே ரொம்ப தனித்துவமானவ தெரியுமா?” என்றான்.

தன்னவன் பராட்டில் மனம் குளிர புன்னகைத்தவள், “கடைசி ஹியரிங்கு நானும் உங்கக் கூட வரவா?” என்று ஆசையாகக் கேட்க,

“பாருடா.. இதென்ன கேள்வி? டிக்கேட்டே உனக்கும் சேர்த்து தான் போடுவேன்” என்று கூறினான்.

“ஹ்ம்.. எனக்கு தெரிஞ்சு சமுவோட ஹனிமூன் ஜெர்மன்ல தான்” என்று யாழினி சிரிக்க,

அதில் தானும் சிரித்துக் கொண்டவன் அவள் கரம் பற்றி, “நாம எங்க போலாம்?” என்று கேட்டான்.

விழிகள் அகல அவனைப் பார்த்தவள், “ஹல்லோ..” என்க,

“என்னவாம்?” என்று கேட்டவனிடம் தான் எத்தனைக் குறும்பு!

அவன் குறும்பு புரிந்தவளாய், “மகாபலிபுரம் கடற்கரை கோவில், தஞ்சை பெரிய கோவில், ஒடிஷால உள்ள கோனார்க் சூரியக் கோவில், இலங்கைல உள்ள புத்த கோவில், அப்றம்..” என்று அவள் யோசிக்க,

“ஏ ஏ… நான் உன்ன என்ன கேட்டா நீ என்னடி சொல்ற? நாம பத்து ஸ்கூல் பிள்ளைகள டிரிப் கூட்டிட்டு போறோமா? இல்ல பத்து ஆன்மீக வாசிகல ஆன்மீக உலா கூட்டிட்டு போறோமா? ஹனிமூன் போறதைப் பற்றி கேட்டா நீ வரிசையா கோவில் பெயரா சொல்லிகிட்டு இருக்க?” என்று நிஜமான பீதியோடு கேட்டான்.

அதில் வாய்விட்டு சிரித்தவள் சிரிப்பு ஐந்து நிமிடம் மேலான பின்பும் நின்ற பாடில்லை.

கண்களில் நீர் வர சிரித்தவள், “உ.. உங்களுக்கு மட்டுந்தான் கலாய்க்க தெரியுமா?” என்க,

'ஹப்பா..’ என்று பெருமூச்சு விட்டவன், “சத்தியமா பயந்துட்டேன் அகரா..” என்றான்.

அவன் கன்னம் பற்றி ஆட்டியவள், “கடைசி ஹியரிங்கு முதல்ல கூட்டிட்டு போங்க. அங்க என் பக்கத்துல உங்களால இருக்க முடியுமா தெரியலை.. ஆனா உங்க ப்ரஸன்ஸ உணரணும். நான் கண்டிப்பா பதட்டமா இருப்பேன். அந்த பதட்டத்தில் என் வியர்வை கூட உங்க அரவணைப்பை உணரணும். அந்த ஒரு உணர்வு போதும், நீங்க எனக்கே எனக்குனு சொல்ல. அப்ப சொல்றேன் எங்க தேன்நிலவுக்கு போலாம்னு” என்று கூற,

“முதல்ல கல்யாணம் பண்ணனும்னு நினைவிருந்தா சரி” என்றபடி சமுத்திரா வந்தாள்.

“யாழி..” என்று சமுத்திரா அவள் தோள்பற்றி உலுக்க,

மீண்டும் நினைவு மீண்டவள் சமுத்திராவையும் பூமிநாதனையும் கண்டாள்.

“சங்கர் அங்கிள்” என்று அங்குள்ள தொலைகாட்சித் திரையை சமுத்திரா காட்ட,

தன் வாதத்தை முன் வைக்க வேள்பாரியின் முதுமை தோற்றம் போன்ற கம்பீரமான அந்த பெரியவர் முன்வந்து நின்றதை தொலைக்காட்சி காட்டியது!

மூச்சை ஆழ்ந்து இழுத்து வெளியேற்றியவள் தன் உள்ளக்கையை இறுக மூடிக் கொள்ள, அதில் சேர்ந்த வியர்வைத் துளிகள் யாவும், வேள்பாரியின் அரவணைப்பை உணர்த்தும் விதமாய் அதன் பிசுபிசுப்பை உணர்த்தியது உணர்வுபூர்வமாய்!


உவர்நீருள் மூழ்கிய

கர்கோள் கொண்ட குமரியாள்,

என் உள்ளங்கையை

வியர்வையில் மூழ்கடிக்கும்

விந்தை என்னவோ!?


-தொடரும்...

அத்தியாயம்-08

 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
புதிய தகவல்களை அறிந்துகொண்ட எபி🤩 இன்னும் அறிய தெரிய புரிய பல விஷயங்கள் ஆழிக்குள் ஆழமாய்! ❤️

Awesome ❤️
 
  • Love
Reactions: MK18

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
புதிய தகவல்களை அறிந்துகொண்ட எபி🤩 இன்னும் அறிய தெரிய புரிய பல விஷயங்கள் ஆழிக்குள் ஆழமாய்! ❤️

Awesome ❤️
நாம அறியாத அதிசயங்கள் தான் இந்த உலகத்துல அதிகமாருக்கு சிஸ்😍 இது கடலில் ஒரு துளி😍 ரொம்ப நன்றி சிஸ் 🥰
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
ஆத்தாடி ஆத்தாடி எவ்வளவு திரட்டல்கள் writer சகி செம போங்க உங்க கதைல ஒரு முக்கியமான விஷத்தை நான் ரெம்ப நாளா follow பண்ணுறேன். வீட்டுல கிரிக்கெட் பார்க்குறப்ப என்னோட husband அடுத்த நாடு ஜெயிச்சா ரெம்ப tension ஆகி நம்ம வீரர்களை திட்டுவாரு அதுக்கு நான் நாமளே எப்போவும் ஜெயிப்போம்னு நினைக்க கூடாது எல்லாருக்கும் chance உண்டுன்னு அதே கருத்து இங்க ஆணி அடிச்சாமாதிரி சொல்லுருக்கீங்க அகரா மூலம் சூப்பருங்க 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
  • Love
Reactions: MK18

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
ஆத்தாடி ஆத்தாடி எவ்வளவு திரட்டல்கள் writer சகி செம போங்க உங்க கதைல ஒரு முக்கியமான விஷத்தை நான் ரெம்ப நாளா follow பண்ணுறேன். வீட்டுல கிரிக்கெட் பார்க்குறப்ப என்னோட husband அடுத்த நாடு ஜெயிச்சா ரெம்ப tension ஆகி நம்ம வீரர்களை திட்டுவாரு அதுக்கு நான் நாமளே எப்போவும் ஜெயிப்போம்னு நினைக்க கூடாது எல்லாருக்கும் chance உண்டுன்னு அதே கருத்து இங்க ஆணி அடிச்சாமாதிரி சொல்லுருக்கீங்க அகரா மூலம் சூப்பருங்க 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
நிச்சயமான கருத்து சகி‌. எப்போதுமே நாமளே ஜெயிச்சா எப்படி? ஏற்றம் இறக்கம் இரண்டும் இருந்தா தான் சிறப்பா இருக்கும்😍 ரொம்ப ரொம்ப நன்றி சகி 😍