• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கார்கோள் கொண்ட குமரியாள் -09

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
குமரியாள்-09

அவர்கள் நால்வரும் அங்கு மிகுந்த உற்காசத்தோடும் சந்தோஷத்தோடும் நின்றிருக்க, வெற்றி வாகையை சூடிக் கொடுத்த சங்கரநாராயணன் அவ்விடம் வந்து சேர்ந்தார்.

அவரைக் கண்டதும் மிகுந்த மரியாதையோடு கைகூப்பிய சமுத்திரா தன் வணக்கத்தைத் தெரிவிக்க,

தானும் புன்னகையோடு தன் வணக்கத்தைத் தெரிவித்தவர் மகன் மற்றும் வருங்கால மருமகளை ஏறிட்டார்.

அவர் சற்றும் எதிர்பாராத வகையில் அவர் முன் வந்த அகரயாழினி அவர் பாதம் பணிந்து வணங்க, முதலில் அதிர்ந்து போனவர், “என்னம்மா நீ? இப்படி பொதுவிடத்தில் எதற்கு இந்த சம்பிரதாயம் எல்லாம்?” என்று கேட்டார்.

அவர் பாதம் பணிந்து எழுந்தவள் கண்களில் கண்ணீரோடு, “இது உங்க மகனோட வருங்கால மனைவியா, உங்களை என் மாமனாரா நினைச்சு செய்யலை மாமா. உங்க திறமைக்கும், நீங்க கொடுத்த வெற்றிக்கும் கொடுக்கும் மரியாதையா செய்யுறேன்” என்று கூற,

நெகிழ்ந்து போனவர் அவள் தலைகோதி, “உன்னைப் பற்றி நிறைய சொல்லிருக்கான்டா” என்றார்.

சிறு புன்னகையுடன் தன் கண்ணீர் துடைத்தவள், “அசத்திட்டீங்க மாமா. இவர் அடிக்கடி என்னை நீ வக்கீலாகியிருக்கலாம்னு சொல்லுவார். ஆனா உங்களைப் பார்க்கும் போது அவ்வளவு பிரம்மிப்பு எனக்கு. அனுமானைப் போன்ற சொல்லின் செல்வரா செயல்படும் நாக்கு, சாணக்கியரைப் போன்ற புத்தி கூர்மை, நக்கீரர் போன்ற நன்னெறினு ரொம்ப அற்புதமா கையாண்டீங்க. அதிலும் உங்க அமைதியான நிர்மலமான முகம்.. நிஜமா அந்த இடத்தில் நான் இருந்திருந்தா எனக்கு நெஞ்சே வெடிச்சிருக்கும். ஒரு வக்கீலுக்கு தேவையான அடிப்படையே அந்த பொறுமைதான்னு ரொம்ப அழகா உணர்த்திட்டீங்க. நீங்க பெற்றுக் கொடுப்பது நம்ம வெற்றியை மட்டுமில்ல மாமா. நம்ம உரிமையை, நம்ம பெருமையை. நினைக்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கு” என்று உணர்ச்சி பூர்வமாக அவள் பேச, அவள் கண்களில் துடைக்கத் துடைக்க தாராளமாய் கண்ணீர் பெருகியது.

அவள் முகம் காட்டும் உணர்வே அவளது மன திருப்தியை எடுத்துக் கூறியது.

கண்ணீரோடு வந்து தோழியின் தோளில் கரமிட்டு தட்டிக் கொடுத்த சமுத்திரா, “ரொம்ப நன்றி சார்” என்று கூற,

“உங்க ரெண்டு பேருக்கும் கூட நான் நன்றி சொல்லணும். நிஜமா நீங்க ரெண்டு பேரும் வயதுக்கு மீறின அறிவை சுமக்குறீங்க. அதுல தலைக்கனம் வராமலும் பார்த்துக்குறீங்க. உங்க கிட்டருந்து நானும் நிறைய கற்றுக்கணும்டா” என்று கூறினார்.

“இது எங்களுடைய கடமை மாமா” என்று யாழினி கூற,

“அதேபோல் இந்த வெற்றி என்னுடைய கடமை” என்றார்.

சிறு புன்னகையுடன், “தேங்ஸ் வாபஸ்” என்று அவள் கூற,

“ஹாஹா..” என்று வாய்விட்டு சிரித்தவர் செல்லமாய் அவள் கன்னம் தட்டினார்.

மகிழ்ச்சி என்ற ஒன்றே அங்கு பிரதானமாய் எதிரொளித்தது.

தனது தந்தையையும் காதலியையும் அழகிய புன்னகையோடு பார்த்து நின்ற வேள்பாரியின் தோள் இடித்த பூமி, “அப்பாக்கு தெரியுமோ?” என்று கேட்க,

மேலும் ஒரு ‘இன்ச்’ புன்னகை அதிகரிக்க ஆமென்று தலையசைத்தான்.

“லக்கி ப்ரோ நீங்க. எங்க வீட்டில் எல்லாம் கன்வின்ஸ் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. இன்னும் சொல்லப்போனா எங்க வீட்ல கன்வின்ஸ் பண்ண பிறகுதான் இவளுக்கு ப்ரபோஸே பண்ணேன்” என்று பூமி கூற,

“ஏதே?” என்று கேட்டவன் வாய்விட்டு சிரித்தான்.

அவன் சிரிப்பில் மற்ற மூவரும் இவர்களை நோக்க,

“பாஸ்..” என்ற பூமி அவர்களைப் பார்த்து அசடுவழிந்தான்.

மகனை நெருங்கிய சங்கரநாராயணன், “என்னடா எப்ப இந்தியா வரப்போற? இப்பவே வந்துடுவியா இல்ல..” என்றவர், “ரெண்டு நாள் சுற்றிப் பார்த்துட்டு வரியா?” என்று கேட்டார்.

அதில் முகம் சிவக்க தலைகுனிந்த யாழினி ஓரக்கண்ணால் தன்னவனை நோக்க,

அவள் ஓரவிழிப் பார்வையைக் கண்டு சிரித்தவனாய், “ராத்திரி ஃப்ளைட் ப்பா” என்றான்.

சமுத்திரா அதிர்வோடு, “அதுக்குள்ளயா? ஒருநாள் இருக்கலாம்ல?” என்று கேட்க,

“ஆமா பாஸ்.. நாம நாலுபேரும் ஒன்னா எங்கேயும் போகலையே?” என்றான்.

“நீங்க ரெண்டு பேரும் உங்களுக்கான நேரத்தை என்ஜாய் பண்ணத்தான் ஹனிமூன் வந்திருக்கீங்க. அடிக்கடி அதை மறந்துடுறீங்கனு நினைக்குறேன்” என்று யாழினி கூற,

பூமியும் சமுத்திராவும் சிரித்துக் கொண்டனர்.

“அங்க அத்தை தனியாருக்காங்க ப்பா. துணைக்கு ஆள் ஏற்பாடு செய்திருந்தாலும் அகரா வரும்வரை அவங்க மனசு ஆறாது” என்று வேள்பாரி கூற,

“இப்பவே மாமியாரைப் பயங்கரமா தாங்குறாப்படி” என்று சமுத்திரா கூறினாள்.

அதில் சிரித்த யாழினி, “ஆமா ஆமா.. பணியாரத்தை வாங்கி காக்காயும் பிடிச்சாச்சு” என்று கூற,

“நீயும்தான் கால்ல விழுந்து பெர்ஃபாமென்ஸ் பண்ணி எங்கப்பாவை காக்காய் பிடிச்ச” என்று பாரி கூறினான்.

அவனை முறைத்தவள், “எங்க மாமாவை கால்ல விழுந்து காக்காய் பிடிக்கணும்னு எனக்கென்ன இருக்கு?” என்று கேட்க,

“அதேபோல எனக்கும் எங்கத்தைய காக்காய் பிடிக்கணும்னு என்னருக்கு?” என்றான்.

மகன் மற்றும் மருமகளின் வாதத்தினை மாற்றி மாற்றி பார்த்த பெரியவர், “இனி தினமும் வீடு ஹை கோர்ட் தான் போலயே?” என்று கேலி செய்ய,

“அப்பா..”

“மாமா..”

என்று சிணுங்களாய் இரு ஒலிகள் எழுந்தது.

அதில் வாய்விட்டு சிரித்தவர் தன் இருகரங்களையும் நீட்டி இருவரையும் இருபுறமும் தோளோடு அணைத்துக் கொள்ள,

“நீங்க எப்ப கிளம்புறீங்க மாமா?” என்று கேட்டாள்.

“நான் நாளைக்கு கிளம்புறேன்டா” என்று அவர் கூற,

“பார்த்து வாங்கப்பா” என்று கூறினான்.

“நீ என் மருமகளை பார்த்து பத்திரமா கூட்டிட்டு போடா” என்றவர் யாழினியைக் கண்டு, “நீ உங்க வீட்டில் பேசிட்டு சொல்லுமா. குடும்பத்தோட வந்து பொண்ணு கேட்குறேன்” என்று கூற,

மனம் நிறைந்த புன்னகையுடன், “சரி மாமா” என்றாள்.

நால்வரிடமும் விடைபெற்றுக் கொண்ட பெரியவர் சென்றுவிட,

நால்வருமாக சேர்ந்து மதிய உணவு உண்ண நல்ல உணவகம் ஒன்றை சென்று சேர்ந்தனர்.

வெற்றியின் சந்தோஷத்தோடு மகிழ்வாக உணவை உண்டு முடித்தவர்கள், அவர்களது விடுதிக்கு செல்ல, யாழினியும் வேள்பாரியும் அவர்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு வந்தனர்.

நால்வரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ள,

“இன்னும் ஃப்ளைட்கு நேரமிருக்கு தானே?” என்று பூமி கேட்டான்.

“உள்ள செக்கிங் எல்லாம் இருக்குமே. அதான் சீக்கிரமே போயிடலாம்னு” என்று பாரி கூறினான்.

சரியென்று விடைகொடுத்தவர்கள் அவர்களுக்கு பத்திரம் கூறி அனுப்பிவைக்க,

இருவரும் புறப்பட்டு விமான நிலையம் வந்தனர்.

அமைதியான நிர்மலமான முகத்துடன் வரும் தன்னவளை அவ்வப்போது திரும்பிப் பார்த்தவனும் அவளது அமைதியை கலைக்கவில்லை.

அனைத்து சோதனைகளும் முடிய இருவரும் உள்ளே சென்று அமர, அவளுக்கான தேநீரோடு வந்து அமர்ந்தான்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?” என்று அவள் தன் பேச்சைத் துவங்க,

“உன் அமைதியே சொல்லுது” என்றான்.

“ஹா.. ஒன்னுமே சொல்லாமலிருப்பதால தான் அதுபேரு அமைதி” என்று சிறு நக்கலோடு அவள் கூற,

“ஓஹோ?” என்றபடி அவளை நெருங்கி இடித்துக் கொண்டு அமர்ந்தான்.

சட்டென அவன் அப்படி அமரவும் உடலுரசி கங்குகள் பறந்ததைப் போன்ற ஒரு உஷ்ணம் அவள் உடலோடு ஓடி உள்ளம் தொட்டது!

விறைத்துப் போன உணர்வுதான் அவளுக்கு!

அந்த அமைதியை ஆழ்ந்து அனுபவித்தவன், “இதோ.. இந்த அமைதி பேசுற வெட்கம் மற்றும் நாணத்தோட சத்தம் என் மனசு பூரா பெரும் இறைச்சலோட ஒலிக்குதே” என்று கிசுகிசுப்பான குரலில் கூற,

அவள் முகமெங்கும் செஞ்சாந்தாய் சிவந்தது.

“ஒத்துக்குறியா?” என்று அவன் கேட்க,

“தள்ளி உக்காருங்க” என்று மென் குரலில் சிணுங்கினாள்.

“ஒத்துக்கோடி.. நகர்ந்துக்குறேன்” என்று அவன் கூறியபடி மேலிதழ் கடித்து சிரிப்பை அடக்க,

இடவலமாய் தலையசைத்தவள் நாணம் பொங்கும் விழிகளோடு, “ஒத்துக்கிட்டா தள்ளி உக்காந்துடுவீங்களே?” என்று கூறினாள்.

அவ்வளவே! உடலெங்கும் மின்சாரம் பாய்ந்த உணர்வு தான் அவனுக்கு! அதனோடு அட்டகாசமாய் ஒரு சிரிப்புச் சத்தம்.

“அச்சோ பாரி.. எல்லாரும் பாக்குறாங்க” என்று அவள் கூற,

“பார்க்கட்டுமே” என்று அவள் தோளைச் சுற்றி கரமிட்டவன், அவள் நெற்றி முட்டி, “உரிமை வந்துடுச்சு போல?” என்று கேட்க,

“வராம என்ன?” என்றாள்.

“ஹ்ம்!” என்று புருவம் உயர்த்தியவன் கண்களிலும் மனதிலும் அத்தனை நிறைவான புன்னகை!

“பாரி சார்ர்ர்… இப்ப பாரியாயிடுச்சே” என்று அவன் கூற,

“தெரியலை.. கூப்பிட வருது..” என்றாள்.

“வருதா பிடிக்குதா?” என்று அவன் கேட்க,

“பிடிக்காம வருமா?” என்று பதில் கேள்வி கேட்டாள்.

இந்த உரையாடல் யாவும் நெற்றி மோதும் நிலையில் அமர்ந்தவண்ணமே நிகழ்ந்தது!

ஒரு இதயத்தின் தாளம், மற்றவர் இதயத்தைத் துடிக்க வைத்திடும் பதிலோசையாய்!

“லவ் பண்ணலாமா?” என்று அவன் கேட்க,

“இத்தனை மாசமா லவ் பண்ணலையா அப்போ?” என்று கேட்டாள்.

“ம்க்கும்.. நீ அப்படியே லவ் பண்ணிட்டாலும். தமிழ் இலக்கியம், குமரிக்கண்டம் வரலாறெல்லாம் பார்த்து நீ ரொம்ப அறிவாளினு நினைச்சேன். அது உண்மையும் கூட. ஆனா காதல் பாடத்தில் நீ சரியான சாம்பிராணி தெரியுமா? இல்லனா தேன்நிலவுக்கு காசி ராமேஸ்வரம்னு யோசனை சொல்லிருப்பியா?” என்று அவன் கேட்க,

“இன்னும் கல்யாணமே ஆகலை. அதுக்குள்ள ஏன் ரொம்ப அட்வான்ஸா யோசிக்குறீங்க?” என்று கேட்டாள்.

“யாரு நான் அட்வான்ஸா யோசிக்குறேனா? அதுசரி.. இப்பவுள்ள பிள்ளைகள்லாம் காதலிக்கும்போதே..” என்று அவன் முடிக்கும் முன் அவள் விழிகள் அதிர்ந்து விரிய,

“நிறையா பியூச்சர் ப்ளான் பண்ணிடுறாங்கனு தான் சொல்ல வேந்தேன். சத்தியமா” என்று தொண்டையைக் கிள்ளிக் கொண்டு கூறினான்.

அதில் பக்கென்று சிரித்துவிட்டவள், “எல்லாரும் நாமளும் ஒன்னா?” என்று கேட்க,

“ஆமானு சொல்லவே இல்லை. அதேபோல தேன்நிலவு உடலால் இணைய மட்டுமே போறது கிடையாது. நமக்கே நமக்கான தனிமை, உரிமை, நேசம் எல்லாம் நம்மிடையே ஒரு புரிதலையும் பிடிப்பையும் உருவாக்கும். அதுக்குத்தான் தேன்நிலவு போறது” என்றான்.

“எல்லாம் சரிதாங்க.. கல்யாணமே இன்னும் முடிவாகலையே.. அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு தூரம் யோசிக்கணும்?” என்று அவள் அடக்கப்பட்ட சிரிப்போடு கேட்க,

“என்னடி கலட்டிவிடப் போறவ மாதிரி பேசுற?” என்று பீதியோடு கேட்டான்.

அதில் வாய்விட்டு சிரித்தவள் அவன் கன்னம் பற்றி கிள்ளி, “கியூட்” என்று கூற,

“அடபோம்மா.. உன்னையெல்லாம் வச்சு காதலிச்சு கரை சேர்த்து, நானும் கரை சேர்ந்து, பிள்ளை குட்டி பெத்து ஆளாக்கி.. ஹ்ம்..” என்று பெருமூச்சு விட்டான்.

“இப்பவே இவ்வளவு சலிச்சுக்குறீங்களே கல்யாணம் ஆகி பிள்ளையெல்லாம் பிறந்துட்டா நான் ரொம்ப சலிச்சுடுவேன் போலயே?” என்று அவள் கேட்க,

அவள் கண்களை நோக்கியவன், “சலிக்காது.. ஆனா பெரும் இம்சையா இருக்கும்” என்றான்.

அதில் அவளுக்கு துளியும் கோபம் வரவில்லை. அவன் கூறிய குரலே அதன் உள்ளர்த்தத்தை விளக்கியதே!

“அன்பான இம்சை, காதலான இம்சை.. ரெண்டு பிள்ளை பெத்த பிறகும் உன்னையே சுத்தி உன்னையே லவ் பண்ணி, உன்னை மட்டுமே முதலாவதா பார்க்க வைக்கும் அந்த இம்சை.. இப்படி சொல்லிட்டே போகலாம்” என்று அவன் கூற,

“ஆஹாங்? பயங்கரமா காதலிப்பீங்க போலயே?” என்றாள்.

“கட்டிக்கோ.. எப்படி காதலிப்பேன்னு காட்டுறேன்” என்று அவன் கூற,

“அச்சோ.. போதும் போதுங்க. எனக்கு வெட்கமெல்லாம் சுட்டு போட்டாலும் வராது.. ஆனா இப்பல்லாம் அடிக்கடி வெட்கப்பட வைக்குறீங்க” என்றாள்.

அதில் காதலனாய் அவனிடம் அலாதியானதொரு கர்வம்!

முறல்கள் மின்ன புன்னகைத்தான்.

அந்த புன்னகை தானே அவள் அடிமன தாபங்களை அவிழ்த்துவிடும் ஒற்றைச் சாவி!

உடல் சிலிர்த்து அடங்கவும், “அட உங்களுக்கு ஒரு கவிதை எழுதினேன்” என்றபடி தனது அலைபேசியின் பின்புறமிருந்து ஒரு சின்ன காகிதத்தை எடுத்துக் கொடுத்தாள்.

‘அச்சிரித்த முகம்
உனக்கு அப்படியென்ன செய்திடுகிறது?
என்கின்றாய்...
என் நாடி துடிப்பே
அப்புன்னகையின் இசைக்கு
எதிர்வினைதான் என்பதை
எப்படி விளக்கிடுவேன்?!’
என்ற அந்த வரிகளைப் படித்தவன் இதழ்கள் மேலும் அல்லிமலராய் விரிந்தது.

பெண்கள் புன்னகையை வர்ணிக்க பலகோடி கவிகள் உள்ளனர்… ஆனால் காதலுற்ற இவ்வாணின் புன்னகையை அவள் எத்தனை ரசித்திருந்தாள், அவளது நாடிதுடிப்பே அந்த புன்னகைக்காக எதிர்வினையென்று எழுதியிருப்பாள்? என்று நினைக்கவே அவன் உடல் சிலிர்த்தது!

“ரொம்ப அழகாருக்குடா” என்று அவன் கூற,

“நான் இப்படி அடிக்கடி எழுதிவைப்பேன். என்னமோ இந்த கவிதை எழுதும்போது உங்கக்கிட்ட கொடுத்தா நான் ரசித்த அந்த சிரிப்புக்காகவே நீங்க சிரிக்கும் அந்தச் சிரிப்பு கிடைக்குமேனு ஒரு ஆசை. அதான் இதை அப்படியே கொண்டு வந்துட்டேன்” என்று கூறினாள்.

அவள் கண்கள் பேசிய வர்ணஜாலங்கள் தான் எத்தனை அழகு!

“நீ ஏற்கனவே எழுதி வச்சதுலாம் எங்கருக்கு?” என்று அவன் கேட்க,

“ம்ம்.. வீட்ல தான்.. அங்க அங்க எழுதி ரூம்ல ஒட்டி வச்சிருப்பேன்” என்றாள்.

“நாம போனதும் அதையெல்லாம் கலெக்ட் பண்ணி எனக்குக் குடு” என்று அவன் கூற,

“ம்ம்” என்று புன்னகையாய் தலையசைத்தாள்.

காதல் எத்தனை அழகான உணர்வென்று இருவரும் அணுவணுவாக உணர்ந்தனர். காதலுக்கு சிரிப்பே அறியாதவனையும் சிரிக்க வைக்கும், அழத் தெரியாதோனையும் அழ வைக்கும். அஞ்சா நெஞ்சனையும் அஞ்சி கெஞ்ச வைக்கும், கெஞ்சி குழைபவரையும், எதிர்த்து மிரட்ட வைக்கும். பிடிக்காததை பிடிக்க வைக்கும், பிடித்ததை மறக்க வைக்கும், அறியாததை அறியவைக்கும் அறிந்ததையும் மறக்க வைக்கும். மொத்தத்தில் காதல் இல்லாத குரங்கு சேட்டைகள் அத்தனையும் செய்ய வைத்திடும் மழலை போன்றது!

இருவருக்குமான விமானப் பயணம் தயாராக, இருவருமாக சென்று தங்கள் விமானத்தில் ஏறி இருக்கையைத் தேடிக் கொண்டு அமர்ந்தனர்.

'ஹப்பா..’ என்று அமர்ந்தவள் காதொலிப்பானை எடுத்துப் போட்டுக் கொண்டு பாடலைக் கேட்க,

சில நிமிடங்களில் அவளது ஒருபக்கக் காதிலிருப்பதை எடுத்துத் தனது காதில் மாட்டிக் கொண்டான்.

‘யார் புன்னகையும் உன் போல் இல்லையடா
யார் வாசனையும் உன் போல் இல்லையடா
அய்யோ ஆனதே ஆனந்தம் போனதே
ச்சீ ச்சீ ச்சீ சிந்தனை சிரிப்புக்குள் வேதனை
போடி வராதே மனம் போனால் வராதே
உன்னை பெற்ற ஒரு அன்னை கொண்ட வேதனைகள் தருகிறாய் போதுமே……’

என்ற பாடல் ஒலிக்க, தன் இதழ் கடித்துப் புன்னகையை அடக்கியபடி கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்தவளைப் பார்த்து நிறைவான புன்னகை பூத்தவன் தானும் நிம்மதிமாய் சாய்ந்து அமர்ந்து பாடலினை ரசித்தான்.


-தொடரும்...

அத்தியாயம்-10

 
Last edited:

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️ரெம்ப சுவாரஷ்யமா இருக்கு அகரா வெட்கம் 😄😄😄😄😄
ஆஹா🤩 கேட்கவே சந்தோஷமா இருக்கு உங்க கருத்து 😍 ரொம்ப நன்றி சகி 💖