• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கார்கோள் கொண்ட குமரியாள் -10

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
குமரியாள்-10

மிகுந்த பரபரப்பு அவ்விடத்தைச் சூழ்ந்திருந்தது.

பெரும் பாதுகாப்புக்கு உட்பட்டு பல காவல் அதிகாரிகள், கருப்புடை உடுத்திய பாதுகாவலர்கள் சூழ அவ்விடமே மிகக் கட்டுப்பாடான பாதுகாப்புடன் இருந்தது.

அது சென்னையில் அமைந்திருக்கும் அரசு அருங்காட்சியகமாகும்!

ஆம்! நமது கார்கோள் கொண்ட குமரியாளிடமிருந்து எடுத்துவந்த கல்லினை சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கவுள்ளனர். அதற்காக இந்தியக் குடியரசுத் தலைவரின் வருகையும் இருப்பதால் மிகுந்த பாதுகாப்புடன் சென்னையே பயங்கர கெடுபிடிகளுக்குக் கீழ் இருந்தது.

அன்று பெரும்பான்மையான பள்ளி, கல்லூரி மற்றும் வேலை நிறுவனங்களுக்கு விடுப்பு வழங்கியிருக்க, அருங்காட்சியகத்தில் நடப்பவை யாவும் நேரடி ஒளிபரப்பாக அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தன.

பெரும் பாதுகாப்புடன் குடியரசுத்தலைவர் விமான நிலையம் வந்திறங்கியது, மகிழுந்தில் அருங்காட்சியகம் நோக்கி செல்வதென யாவும் கடந்த சில நிமிடங்களாகவே தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருப்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்‌.

அவ்வீட்டில் பூமி, சமுத்திரா, வேள்பாரி மற்றும் அகரயாழினி அமர்ந்திருந்தனர்.

“ச்ச! இவ்வளவு தூரம் கிளம்பி சென்னைக்கு வந்து, இதோ அருங்காட்சியகத்து ரொம்ப பக்கத்திலும் தங்கிருக்கோம். ஆனாலும் அதை வைக்கும்போது அங்க போய் நேரில் பார்க்கும் குடுப்பனை இல்லாமபோச்சே” என்று சமுத்திரா வருத்தமாகக் கூற,

“ப்ரஸிடென்ட் வந்து கல்லுக்கான மரியாதை செய்து அதை நிறுவிட்டு போறாங்க சமுமா. அவருடைய பாதுகாப்பு முக்கியமாச்சே. அதான் பொது மக்களுக்கு அனுமதியில்லை.‌ கல்லை வைக்கும்போது இல்லைனா என்ன? அதான் நாளைக்கு அனுமதி தராங்களே. அப்ப போய் பார்ப்போம்டா” என்று பூமி கூறினான்.

இவர்கள் பேச்சுவார்த்தைக்கு நடுவே மற்ற இருவரின் தலையீடு இல்லாமலிருக்க, பூமியும் சமுவும் நாயகன் மற்றும் நாயகியை ஏறிட்டனர்.

வேள்பாரி தொலைகாட்சியில் ஓடும் காட்சிகளை சலிக்காமல் பார்த்துக் கொண்டிருக்க,

அகரயாழினி கண்களில் பெரும் காதலோடு அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

'என்னத்த பாக்குறா?’ என்று அவளது அலைபேசியை எட்டிப் பார்த்த சமுத்திரா,

“இன்னுமாடி இந்த ஃபோட்டோவையே பார்த்துட்டு இருக்க?” என்று கேட்க,

அவளை நிமிர்ந்து பார்த்த அகரயாழினி கண்கள் சிமிட்டி சிரித்தாள்.

“வச்ச கண்ணு வாங்காம ரொம்ப நேரமா அதை ரசிப்பதும் அதோட வந்த ஆர்டிகலை படிப்பதுமா தான் இருக்கா அவ” என்று வேள்பாரி கூற,

“ரொம்ப பெருமையா இருக்கு சமு இதைப் பார்க்கும்போது” ஏன்றாள்.

“எனக்குமே இந்த செய்தி வந்ததுல அவ்வளவு சந்தோஷம்டி யாழு” என்று சமுத்திரா கூற,

“என்ன செய்தி பற்றி பேசுறீங்க?” என்று பூமி கேட்டான்.

‘'ரைட்டு.. செய்தி தெரிஞ்ச எனக்கே அறுபது முறை ரிபீடட் மோட்ல சொல்லிட்டா.. நீ மாட்னடா' என்று மனதோடு வேள்பாரி நினைத்துக் கொள்ள,

“இதோ.. இதுபற்றினது தான்” என்று அந்த கல்லின் புகைப்படத்தைக் காட்டினாள்.

“இதுதான் நம்ம குமரிக்கண்டத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்த கல். இதிலிருந்து தமிழ் எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டதா சொன்னாங்க இல்லையா? அந்த ஆராய்ச்சியில் எழுத்துக்களை ஓரளவு அனுமானிச்சு எடுத்தவங்களுக்கு ‘வெண்டேர்’ என்ற வார்த்தை கிடைச்சுருக்கு” என்று யாழினி கூற,

“வெண்டேர்?” என்று புரியாது விழித்தான்.

“ஆமாங்க.. வெண்டேர் வார்த்தை பிடிபடலையா? வெண்டேர் செழியன். முதலாம் பாண்டிய மன்னன்” என்று உணர்ச்சிப் பூர்வமான குரலில் கூறிய சமுத்திரா, “முதலாம் பாண்டிய மன்னனான இந்த வெண்டேர் செழியன் இடைச்சங்கம் நிறுவப்பட்ட கபாடபுரத்தை ஆண்டதா இறையனார் அகப்பொருள் நூல் சொல்லுது” என்று கூற,

“அதுவுமில்லாம கபாடபுரம் ரத்தினச்சுரங்கத்துக்குப் பெயர் போனது. ரத்தினங்கள் கொண்ட பல பல அழகான தேர்களைக் கொண்ட படையை அந்த மன்னன் பயன்படுத்தியதால தான் அவருக்கு வெண்டேர் செழியன் என்ற பெயர் வந்ததா இலக்கியம் சொல்லுது. சோழர்களை விடவும் மிகத் தொன்மமானவர்கள் நம்ம பாண்டியர்கள். காவிரிப்பூம்பட்டினத்தைப் போல இந்த கபாடபுரமும் ஒரு துறைமுகம் தான். இப்போதுள்ள சிங்கப்பூர் மற்றும் மலேசிய துறைமுகங்களைவிட மிகப் பிரம்மாண்டமான துறைமுகமாக அது இருந்திருக்கு” என்று யாழினி கூறினாள்.

“சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அற்புதமா இந்த ஊரை உருவாக்கிய பெருமை இந்த வெண்டேர் செழியன் என்ற மன்னரைத் தான் சேரும். இவருக்கு அனாகுல பாண்டியர் அப்படினு ஒரு மகனும், சாரகுமரன் என்ற பேரனும் இருந்ததா சொல்லப்படுது. வருஷா வருஷம் சித்திரை மாதம் சித்திரைத் திருநாள் அன்னிக்கு நகர் மங்கள விழானு ஒன்னு அங்கு நடைபெற்றதாவும் சொல்லப்படுது. இதையெல்லாம் பார்த்தசாரதி அப்படிங்குற ஒருத்தர் கபாடபுரம் அப்படினு ஒரு நூலிலும் குறிப்பிட்டு இருக்கார். அந்த நாள்ல முத்து குளித்தல் ரத்தின மணி குவியல்னு பல விசேஷ வைபவங்கள், போட்டிகள் எல்லாமே நடக்கும்னு சொல்லப்படுது” என்று சமுத்திரா கூற,

“அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், புதபுராணம், இசை நுணுக்கம்னு ஐந்து நூல்கள் இந்த சங்கத்தில் தான் இயற்றப்பட்டது. வெண்டேர் செழியனில் துவங்கி, முதல் முடத் திருமாறன் என்ற அரசர் வரை மொத்தம் ஐம்பத்தி ஒன்பது அரசர்கள் இந்த சங்கத்தை ஆதரிச்சிருக்காங்க” என்று யாழினி கூறினாள்.

“அதாவது ‘வெண்டேர்’ அப்படினு ஒரு வார்த்தையைத்தான் சட்டுனு நினைவு வராமா யோசிச்சேன். என் யோசனை துவங்குறதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் மொத்த வரலாறையும் ஒப்பிக்குறீங்க பார்த்தீங்களா?” என்று கேட்டு பூமி சிரிக்க,

“முதல் தடவைக்கே இப்படியா? நானெல்லாம் ஆறுபது முறை ரீபீடட் மோட்ல கேட்டுட்டேன்டா” என்று வேள்பாரி சிரித்தபடி கூறினான்.

பெண்கள் இருவரும் அசடுவழிய சிரித்துவைக்க,

“வேற என்னெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க?” என்று பூமி கேட்டான்.

“வேற என்ன? தமிழ்ச்சங்கம் வளர்க்கப்பட்டதைப் பற்றிய இலக்கிய ஆதாரங்களை வாசிச்சுப் பார்த்தோம். அரசவையில் மகாபாரதத்தை தமிழில் மொழிபெயர்க்கும் பணியும் தமிழ்சங்கத்தில் நிறுவப்பெற்றதா ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்ற வரிகள் கூறுது. இது சின்னமன்னூர் செப்பேடுலருந்து கிடைக்கப்பெற்ற வரிகள்” என்று யாழினி கூற,

“இரண்டாம் சங்கம் பற்றிக்கூட ஓரளவு தெரிஞ்சுது. ஆனா முதல் சங்கம் பற்றி பெருசா எதுவும் தெரியலை எங்களுக்கு. சரியான இலக்கிய ஆதாரங்கள் எங்க கண்ணில் படலைனு சொன்னாத் தகும். ஆனா முதல் சங்கத்தில் சிவபெருமான், முருகன் அகத்தியர் போன்றோர் இருந்ததா சொல்லப்படுது” என்று சமுத்திரா கூறினாள்.

“அப்படினா கபாடபுரம் இருந்ததுக்கான ஆதாரமும், வெண்டேர் செழியன் என்ற மன்னர் இருந்ததும் உண்மை” என்று பூமி கூற,

“நிச்சயமான உண்மை” என்று பெண்கள் இருவரும் கூறினர்.

அப்போது குடியரசுத் தலைவரும் அருங்காட்சியகம் வந்து சேர்ந்துவிட,

செய்தியாளர்களும் பரபரப்பாயினர்.

“குடியரசுத் தலைவர் என்னப் பண்ண போறாங்க?” என்று சமுத்திரா கேட்க,

“தொல்பொருள் ஆராய்ச்சி மையத்திலிருந்து எடுத்துவரப்பட்ட கல்லை அதற்குறிய இடத்தில் வைச்சு அதுக்கான வரலாற்றை பதிச்சிருக்கும் கண்ணாடி தகடை அது பக்கத்தில் நிறுவப் போறாங்க” என்று வேள்பாரி கூறினான்.

“நமக்கு நாளைக்கு அனுமதி உண்டுதானே?” என்று யாழினி வினவ,

“உண்டுமா. இன்னிக்கு ப்ரஸிடென்டுக்காக தான் பாதுகாப்பு. நாளைக்கு பொதுமக்கள் அல்லோவ் பண்ணிடுவாங்க” என்று பூமி கூறினான்.

“ஹ்ம்.. நம்ம அருங்காட்சியகத்தில் நின்னு நம்ம குமரிக்கண்டத்தோட வரலாறைப் பார்க்கப் போறோம். எப்படியான தருணம்ல அது?” என்று பூரிப்புடன் யாழினி கேட்க,

“எனக்கும் ரொம்ப ஆர்வமா இருக்கு அகரா” என்று வேள்பாரி கூறினான்.

அதன் பிறகு அங்கு அருங்காட்சியகம் வந்து சேர்ந்த குடியரசுத்தலைவர் குமரிக்கண்டத்திலிருந்து எடுத்துவரப்பெற்ற கல்லை அதற்குறிய கண்ணாடி பேழைக்குள் வைத்து அருகே கண்ணாடி தகட்டினுள் காகிதத்தில் அச்சிட்ட குமரியாள் வரலாறைக் கொண்ட தகடையும் வைத்து பேழையை மூடினார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம், வரலாறானாது தமிழில் அச்சிடப்பட்டிருக்க, பேழைக்குக் கீழே ‘குமரிக்கண்டத்திலிருந்து எடுக்கப்பெற்ற கல்' என்பதற்கு அருகே அந்த வரலாறு ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருப்பதும் தான்!

கண்களில் கண்ணீரோடு பெண்கள் உடல் சிலிர்க்க அக்காட்சியைக் காண,

“ரொம்ப பெருமையா இருக்குல?” என்று பூமி உணர்வுப் பூர்வமான குரலில் கூறினான்.

“ரொம்ப..” என்று அழுத்தமாய் மொழிந்த வேள்பாரி தன்னவளை நோக்க, கண்களில் கண்ணீர் வழிய, இதழில் பெருமிதத்தின் சாயலை அணியாய் சூடிக் கொண்ட புன்னகையுடன் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நால்வரின் உடலெங்கும் அப்படியொரு சிலிர்ப்பு!

தங்களது மறுக்கப்பட்ட வரலாறு ஒன்று சபையேறிய சிலிர்ப்பு! 'இவனெல்லாம் என்ன படித்துவிடப் போகின்றான்?’ என்று கேட்டவர்கள் முன் முதல் மதிப்பெண் வாங்கிக் காட்டிய மாணவனின் பெருமிதம் அவர்களிடம்!

இதைவிட என்ன சந்தோஷமுள்ளது என்று நினைக்கும் நொடி யாவும் அதைவிட ஒரு மாபெரும் சந்தோஷம் வந்து சேர்ந்ததாய் பூரித்தனர்!

“நம்ம கபாடபுரத்தில் ரத்தினச் சுரங்கங்கள் இருந்ததால, கடலுக்கடியில் ரத்தினங்கள் இருக்குதானு ஆராய்ச்சி பண்ணப் போறாங்களாம். கபாடபுரத்திலிருந்த ரத்தினச் சுரங்கம் மட்டும் இப்ப இருந்திருந்தா நம்ம இந்தியாவே பெரும் பணக்கார நாடாயிருக்கும்னு கேள்விப்பட்டேன். அதுபற்றி எதுவும் தெரிய வருதானு பார்க்க நம்ம சைட் ஸ்கேன் சோனாரை அனுப்பிப் பார்த்துட்டு எதுவும் தடயம் கிடைச்சா நம்ம ரோபோர்ட அனுப்ப போறாங்களாம்” என்று சமுத்திரா கூற,

“ஹே சூப்பர் சமு” என்று யாழினி உற்சாகமாய் கூறினாள்.

“நம்ம பொக்கிஷமெல்லாம் ஒவ்வொன்னா வெளிவருதுடி யாழு” என்று சமுத்திராவும் உணர்ச்சி பூர்வமாய் கூற,

“குமரிக்கண்டத்தை ஆண்ட மன்னர்களும், வாழ்ந்த மக்களும், சங்கம் நிறுவிய புலவர்களும் இதையெல்லாம் பார்த்து உள்ளம் பூரிச்சு ஆத்ம சாந்தியடைவாங்க” என்று வேள்பாரி கூற,

“நிச்சயமா” என்று பூமி உறுதியுடன் கூறினான்.

அன்றைய பொழுதை மிகுந்த சந்தோஷத்தோடு கழித்த நால்வரும் ஆனந்தமாய் உறக்கம் தழுவிட,

மறுநாள் மிகுந்த உற்சாகத்தோடு எழுந்தனர்.

தூங்கி எழுந்த அகரயாழினி தனது அறையில் புதிதாய் கண்ணை உறுத்திய ஒரு பெட்டியைக் கண்டு புருவம் சுருக்க, சென்று புத்துணர்ச்சிப் பெற்று வந்து அதைப் பிரித்துப் பார்த்தாள்.

அழகே அழகாய் வான்நீல நிறத்தில், இளம் ரோஜா நிற பட்டைக் கரையோடு பெரிய வேலைபாடுகள் இன்றி சாதாரணமாக இருந்த ‘சில்க் காட்டன்’ புடவை ஒன்று அந்த பெட்டியினுள் இருந்தது. உடன் சிறு காகிதக் குறிப்பு!

'ரூமை கலைச்சுபோட்டு தேடவேண்டிய அவசியமில்லை. லக்கி கலர்லயே எடுத்துட்டேன்' என்று அதில் எழுதியிருக்க, அழகிய புன்சிரிப்பை சிந்தியவள் குளித்துத் தயாராகி அப்புடவையை திருத்தமாய் அழகுபட கட்டிக் கொண்டாள்.

'இதுக்குத்தான் அன்னிக்கு சமு மூலமா என் அளவு சட்டையைச் சுட்டாரா?’ என்று எண்ணியவளுக்கு சிரிப்புதான் வந்தது!

உடனே தன் அன்னையிடம் வந்து அவன் பெண் கேட்ட காட்சியும் விரிந்தது! அவனது மாயக்கண்ணன் சிரிப்போடு அவள் வீட்டில் வந்து அவளைச் சேர்த்த கையோடு அவள் அன்னை கரம் பற்றியவன், “அத்தை.. உங்களை அத்தைனு மனசாரதான் கூப்பிடுறேன். உங்க மருமகனா என்னை நினைக்குறீங்க தானே?” என்று கேட்டான்.

“அட என்னப்பா நீ? நானும் உன்னை மனசார எம்மருகனா தான் பாக்குறேன்பா” என்று வாஞ்சையோடு அவர் கூறியிருக்க,

“நான் உங்க பொண்ண மனசார விரும்புறேன் அத்தை. எனக்கு அவளைக் கட்டித்தருவீங்களா?” என்று கேட்டிருந்தான்.

சட்டென அவன் கேட்டதும் அவருக்கு அதிர்ச்சிதான்! அவனை அவருக்கு நிரம்பப் பிடிக்கும். ஆனால் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைத்திடவெல்லாம் அவர் நினைத்ததேயில்லை. அதற்கு முக்கியக் காரணம் அவனது வசதி தான்.

“நீங்க எதை நினைச்சுப் பயப்படுவீங்கனு எனக்குத் தெரியும் அத்தை. எங்க வீட்டில் உள்ளவங்களுக்கும் அகராவையும் அவமேல நான் வச்சிருக்கும் காதலையும் நல்லாவே தெரியும். அத்தனை பேருக்கும் இதில் பரிபூரண சம்மதம். என்னை நம்பி அவளைக் குடுங்க அத்தை” என்று அவன் கூற, அவர் தன் மகளை நோக்கினார்.

அழகான அமைதியான புன்னகையோடு, தனது மன ஆசையை அவள் வெளிப்படுத்த, அவனிடம் முடியாதென்று கூற அவருக்கு மனம் வரவில்லை. இருந்தும் ஒரு அன்னையாய் அவள் வாழ்வைப் பற்றி யோசிக்க அவகாசம் கேட்டவர் இரண்டு நாட்களுக்குப் பின் தன் சம்மதத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதன்படி இருவீட்டாரும் கலந்து பேச, நாள் குறிக்கப்பெற்று விரைவே திருமணமும் செய்துகொள்ள உள்ளனர்.

அந்த நினைவுகளை அசை போட்டபடி மனத்திருப்தியோடு தயாரானவள் வெளியே வர, அதே நிறத்தில் சட்டையும் வேட்டியுமென அவனும் தயாராக இருந்தான்.

சமுத்திரா மற்றும் பூமிகூட பச்சை மற்றும் நீலம் கலந்த நிறத்தில் தான் உடை உடுத்தியிருந்தனர்.

“அடப் பாருடா!” என்று ஒன்றுபோல கூறிக் கொண்ட பெண்கள் கலகலவென்று சிரிக்க, மிகுந்த சந்தோஷம் ஒன்று அலைபாய்ந்து அவர்களை நனைத்தது.

நால்வருமாய் புறப்பட்டு அருங்காட்சியகத்தை அடைய, உள்ளே செல்வதற்கான அனுமதி சோதனைகள் மற்றும் அனுமதிச் சீட்டு பெறுவது என யாவும் முடிவடைந்தது.

சுற்றிமுற்றி உள்ள ஒவ்வொன்றையும் ஆசைதீர பார்த்து வந்தனர். சுமார் 16 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட அவ்வருங்காட்சியகம் ஆறு கட்டிடங்கள் மற்றும் 49 காட்சியகங்களைக் கொண்டுள்ளது.

அவ்வருங்காட்சியகத்தில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை வரலாறு, சிற்பங்கள், பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அமராவதி ஓவியங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

இரண்டாயிரத்தி மூன்றாம் ஆண்டு நிறுவப்பட்ட கையெழுத்துப் பிரதிகளுக்கான தேசிய இயக்கத்தின் கீழ் இவ்வருங்காட்சியகம் ‘கையெழுத்துப் பாதுகாப்பு மையம்' என்ற பெருமை பெற்றது!

சோழர் காலத்தைச் சேர்ந்த வெங்கலத்தால் ஆன விஷ்ணு பெருமானின் சிற்பம், தட்சிணாமூர்த்தியின் சிற்பம், மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம், அசாமிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பழங்குடி மக்களின் கலைப்பொருட்கள் ஆகியவற்றைக் கண்டு ரசித்து வந்த நால்வரும் அப்பிரிவிற்குள் நுழைந்தனர்.

உடலோடு ஓடிக் கொண்டிருந்த ரத்தத்தில் புது உற்சாகம் புகுந்துகொண்ட உணர்வு!

அழகிய கண்ணாடி பேழைக்குள் தன் மாபெரும் வரலாறை தாங்கிய கல் ஒன்றும், அது கூறும் பாண்டிய மன்னரின் வரலாறும் ஒளிர்ந்தது!

அதன் அருகே வந்து நின்றனர்.

கரும் நிறக் கல்… ஆங்காங்கே சிதைவுகளும் நீருக்குள் வெகுநாள் நான் தூங்கிக் கொண்டிருந்தேன் என்பதைக் கூறிடும் சான்றாய் சில பாசம் பிடித்து கல்லோடு ஒட்டிக் கொண்ட நீக்கமுடியா தடயங்களும் அதனில்…

அதிலிருந்து எடுக்கப்பெற்ற ‘வெண்டேர்’ என்ற சொல்லுக்கான பிரதியின் புகைப்படும் அந்த கண்ணாடி தகட்டில் இருந்தது.

அவற்றை ஆசைதீர பார்த்து நின்றனர்!

“ரொம்ப சந்தோஷமா இருக்குல?” என்று அகரயாழினி கூற,

“பெருசா எதையோ சாதிச்சுட்ட போல இருக்கு” என்று சமுத்திரா கூறினாள்.

“ம்ம்..” என்று உணர்வுப் பிரவாகத்தில் சிக்கிய குரலில் பூமி தலையசைக்க,

“நம்ம வரலாறோட முக்கிய ஆதாரம். இல்லவே இல்லைனு போட்டிகளும் வாதங்களும் நடத்தப்பட்ட ஒன்று இருக்குனு சொல்லும் சான்று… இதைவிட வேறென்ன வேண்டும்?” என்று வேள்பாரி கூறினான்.

அவன் கரத்தை இறுக்கமாய் பற்றிக் கொண்ட அகரயாழினி, கண்கள் பனிய புன்னகைக்க,

“இந்த குமரியாள் எனக்குக் கொடுத்த பரிசுக்குமரியாள்டி நீ” என்றான்.

அவளிடம் அழகான புன்னகை!

நால்வரும் அங்கிருந்து வெகுநேரம் நகரவில்லை. அப்படிக் கூறுவதை விட அவர்களுக்கு நகரத்தோன்றவில்லை என்றால் தகும்!

அவர்கள் அந்தக் கல்லை பெருமையும் ஆசையும் காதலும் கர்வமும் ஒருசேர பார்த்து நிற்க,

மொத்த கண்டத்தையே தன்னுள் கொண்ட அந்தக் கடல் தன் ஆரவாரத்தை பொங்கி வெளிப்படுத்தியது!

கார்கோள் கொண்ட குமரியாள் நீருக்குள் மீன்களோடும் செடிகளோடும் இன்றளவும் சுவாசித்துக் கொண்டு தன் உலகின் வாசத்தை உணர்த்திவிட்ட திருப்தியை அங்கு வாழ்ந்து ஆண்டு அனுபவித்த ஒவ்வொரு உயிர்களுக்கும் உணர்த்தியிருந்தது!

பூமியில் பெரும் பங்குவகித்த ஒரு மாபெரும்கண்டம் வரலாறிலும் சேர்க்க இயலாது, நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருந்த ஒரு உயிர்ப்பு இன்று உலகமறிய கொண்டுவரப்பட்டது! நிச்சயம் அங்கு வாழ்ந்த மாபெரும் முனிகளின் ஆன்மா தங்களது ஆனந்தத்தை வெளிப்படுத்தியிருப்பர் என்ற நம்பிக்கையோடு நாமும் விடைபெருவோம்!

மூச்சுவிடும் குமரியாள்

கடலலையாய் பொங்கிவருவாள்,

எங்கள் பேச்சுதனில் கலந்துவிட்டாள்,

கார்கோள் கொண்ட குமரியாள்!



-சுபம்…


கதையை முழுதாகப் படித்து என்னோடு பயணித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இக்கதை முழுக்க முழுக்க என் கற்பனையே! குமரிக்கண்டம் என்ற நமது வரலாறு உண்மையென்று நிரூபிக்கப்பட்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையையே இக்கதையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளேன். நன்றி வணக்கம்.

கதை சார்ந்த உங்கள் நிறை மற்றும் குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே 🥰
 

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
69
40
18
Tamilnadu
கதை அருமை ❤ so informative ❤ romba ஆராய்ச்சி பண்ணீருகீங்க great 👏👏 learned lot of new tamil words and lot of information ❣️ awesome effort 👏👏👏 kavithai ellam super ❣️❣️all the best 👍
 
  • Love
Reactions: MK18

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
கதை அருமை ❤ so informative ❤ romba ஆராய்ச்சி பண்ணீருகீங்க great 👏👏 learned lot of new tamil words and lot of information ❣️ awesome effort 👏👏👏 kavithai ellam super ❣️❣️all the best 👍
ரொம்ப நன்றி சிஸ் 🥰 மிகவும் சந்தோஷமா இருக்கு உங்க கருத்து 😍 தேடிய தேடல்கள் அத்தனைக்கும் பலன் கிடைத்ததைப்போல் அவ்வளவு ஆனந்தமா இருக்கு🤗 உங்க கருத்துக்களுக்கு மிக்க நன்றி சிஸ் 🥰😍
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அருமை அருமை ❤️👌 கூடவே பயணித்ததுபோல் இருக்கு. தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்ட உணர்வு ❤️

சூப்பரா இருந்தது ❤️👌
 
  • Love
Reactions: MK18

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
அருமை அருமை ❤️👌 கூடவே பயணித்ததுபோல் இருக்கு. தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்ட உணர்வு ❤️

சூப்பரா இருந்தது ❤️👌
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் 🥰 அத்தியாயம் பதிவிட பதிவட உங்க கருத்துக்களைக் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றி 🥰💖