• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காற்று - 01

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,341
556
113
Tirupur

அத்தியாயம் - 1

உன்னுடன் வாழும் கனவு

வாழ்க்கையை நிஜமாக்கி,

கொடுத்து விடு என்னிடம்…!

இல்லையென்றால்…

கனவோடு சேர்ந்து நானும்

கரைந்து போவேன் காற்றில்…!

திருவனந்தபுரம், பன்னாட்டு விமான நிலையம்…!

அந்த அதிகாலை வேளையிலும் ஜனத் திரலோடும், விமானங்களின் அறிவிப் போடும் பரபரப்புடன் காட்சி அளித்தது. அடுத்து வரும் ‘மலேசியன் ஏர்லைன்ஸ்’ விமானத்திற்காக, பயணிகள் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தாள், சஷ்டிகா.

தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்வையைச் சுழற்றியவள், உடைகளையும் உடமைகளையும், ஒரு பார்வை பார்த்து விட்டு, கண்ணீர் பொங்கி அவளது செவியின் ஓரம் வழிய, அதை ஒரு பொருட்டாய்க் கூட உணராமல்,

‘எப்போது அழைப்பார்களோ?’ என்று ஒருவித அவசரத்துடனே, தலையை பின்னோக்கிச் சாய்த்து அமர்ந்திருந்தாள்.

நொடிகள் நிமிடங்கள் ஆனதோ, நிமிடங்கள் மணிகள் ஆனதோ, ஒர் இரும்புக்கரம் தன் தோள் மேல் கொடுத்த அழுத்தத்தில், பட்டென்று விழித்தவள்,



எதிரே சிவந்த விழிகளுடன் முகமெல்லாம் கோபத்தில் ஜொலிக்க, இறுகிய தோற்றத்துடன் நின்று இருந்தவனைப் பார்த்து, அரண்டு போய் எழுந்து நின்றாள்.

‘சென்னையில் இருப்பவன், அதற்குள் இங்கு எப்படி வந்தான்…’ என்ற குழப்பத்தில் நெற்றி சுருங்க நின்றவளுக்கு, விடை கொடுத்தது போல் அவனுக்குப் பின்னே,

“பாலா… வெயிட் பாலா…” என்று மூச்சிரைக்க, கிட்டத்தட்ட அவனைத் தள்ளிவிடுவது போல் வந்து நின்றாள், ஸ்ருதி. பாலனின் தங்கை, சஷ்டிகாவின் உயிர்த்தோழி.

மூன்று கோணங்களாய் நின்று கொண்டிருந்த மூவரின் மத்தியிலும், அடுத்த சில நொடிகள் அமைதியே ஆட்சி செய்தது. அந்த அமைதியை கலைக்கும் பொருட்டு,

“சஷ்டி… நான் வந்து…” என்று தோழியை சமாதானம் செய்ய முயன்ற ஸ்ருதியை ஒரு பொருட்டாய்க் கூட மதிக்காமல்,

அங்கே இருந்தவர்கள் அவர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலை கூட இல்லாமல், தன்னுடன் வந்த தங்கையையும் கவனிக்காமல், சஷ்டியை இழுத்துக் கொண்டு நகர்ந்தான், சிவபாலன்.

“விடு… விடுடா…! என்னை விடுடா…!” என்றவளின் திமிறலை சற்றும் பொருட் படுத்தாமல் இழுத்துக் கொண்டு போய் காரில் தள்ளியவன், தானும் ஏறி அதை புயல் போல் இயக்கினான்.

பாலனின் இந்தச் செய்கையைக் கண்டு, அவனிடம் உண்மையைக் கூறிய தன்னையே நொந்து கொண்ட ஸ்ருதி, அங்கிருந்த சஷ்டியின் லக்கேஜைப் பார்த்தபடி, தன்னை தனியாக அம்போவென்று விட்டுச்சென்ற தன் அண்ணனை என்ன செய்வது என்ற யோசனையில், அங்கிருந்த சேரில் பொத்தென்று அமர்ந்தாள்.

ஆனால், அதற்கு நேர்மாறாக அவளது எண்ணங்கள் தன் உயிர்த் தோழியான சஷ்டியிடமே சென்றது.



காரின் உள்ளே இருந்தவள், தன் இருபக்கமும் உள்ள கதவுகளைத் திறக்க முயற்சித்து, தோற்றுப் போய் அவனை முறைத்துக் கொண்டிருக்க, அவனோ முகத்தில் இருந்த இறுக்கம் குறையாமல், காரை ஓட்டுவது மட்டுமே தன் வேலை என்பது போல், அதிலேயே குறியாக இருந்தான்.

தன்னுடைய எந்தச் செயலுக்கும், அவனிடம் ஒரு பிரதிபலிப்பும் இல்லை என்று உணர்ந்தவள், தலையைக் கைகளில் தாங்கிய படி குனிந்திருந்தாள்.

கண்களில் உதிரும் நீர், அவளது மனதின் வலியைக் கூறியது.

முன்பக்கம் இருந்த கண்ணாடியின் வழியே, அவளது ஓய்ந்த தோற்றம் தெரிய, அவன் முகமும் வலியைக் காட்டியது. மனம் அவளுக்காய் இளகத் தொடங்கியது. அதுவும் ஒரு நொடியே…!

‘அவள் தன்னை விட்டுப் போவதற்கான முடிவை எடுத்தவள்’ என்ற உண்மை உரைக்க, முகத்தை மீண்டும் கடுமையாக்கினான்.

கார் மார்த்தாண்டத்தை தாண்டிய நெடுஞ்சாலையில் செல்லாமல், கிளைச் சாலையில் செல்லவுமே அவளுக்குப் புரிந்துவிட்டது.

‘கடவுளே…!’ என்று மனம் கூக்குரலிட, தனக்குள் உருவாக்கிய கட்டுப்பாட்டையும் மீறி,

“சிவா… ப்ளீஸ்! நான் உன்கிட்ட சொன்னேன் தானே, மறுபடியும் நீ அதையே செய்தா என்ன அர்த்தம்? ப்ளீஸ், அண்டர்ஸ்டன்ட்… யூ ஆர் போர்ஸிங் மீ, நான் ஒன்னும் சென்டிமென்டல் இடியட் இல்ல. இப்படியெல்லாம் செய்து என்னை மயக்க முடியாது…!”

“எத்தனை தடவை, எங்கே வச்சு எப்படி கேட்டாலும், என்னோட பதில் ஒன்னே ஒன்னுதான்…! ஐ ஹேட் யூ…! நான் உன்னை வெறுக்கிறேன்! என்னால உன்னை மேரேஜ் பண்ணிக்க முடியாது…! எப்பவுமே முடியாது…! நான் என் பேமிலிக்கு, துரோகம் செய்யமாட்டேன்…!” என்று பலவாறு கத்திக் கொண்டே வந்தாள்.



சடன் ப்ரேக் போட்டு காரை நிறுத்த, அதுவும் ஒரு குலுக்கலுடன் நிற்க, அதிர்ந்து போய் பயத்துடன் அவனையே பார்த்தாள், சஷ்டிகா…!

“என்னைக் கல்யாணம் செய்துக்க மாட்ட? ரைட்.. ஓகே… நான் உன்னை போர்ஸ் பண்ணல, யூ டோண்ட் வொரி… ஐ ப்ராமிஸ் யூ. பட்..” என்று நிதானமாய் இழுத்தவன்,

“நான் உன்னை மேரேஜ் செய்து இருக்கேனே, அதை என்ன செய்ய, அதுவும் ரிஜிஸ்டர் மேரேஜ்…! உன்னால எதுவும் செய்ய முடியாது…! இப்போ நான் என்ன செய்யனும்னு சொல்லிட்டா, நான் என்னோட வேலையைப் பார்த்துட்டு போயிட்டே இருப்பேன்…” மிகவும் கூலாக வந்தது அவனிடமிருந்து பதில்.

“வாட்…! மேரேஜா…? அதுவும் ரிஜிஸ்டர் மேரேஜ்…! இது எப்போ நடந்தது…? நான் எப்போ சைன் பண்ணேன்…? நோ… நோ…. நீ என்னை ஏமாத்துற…! பொய் சொல்ற…!” அவனது மனநிலைக்கு எதிராய் கத்தினாள், சஷ்டி.



அவளது கத்தலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், காரின் டேஷ் போர்டில் இருந்து ஒரு கவரை எடுத்து அவளிடம் நீட்டினான். அதைப் பறித்து வேகவேகமாய் பார்வையை ஓட்டியவளின், முகத்தில் தெரிந்த உணர்வுகளை மௌனமாய் பார்த்துக் கொண்டிருந்தான், சிவா என்ற சிவபாலன்.

‘இது எப்படி சாத்தியம்….’ கண்களை மூடி யோசித்தவளுக்கு நொடியில் விடை கிடைத்தது.

‘ஸ்ருதி… ஸ்ருதியோட வேலைதான் இது…’ அன்று ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் தன்னிடம் கையெழுத்து வாங்கியது ஞாபகம் வந்தது. ஆனால், அது ப்ரொபசர் கேட்டதாகத்தானே சொன்னாள்.

படிக்காமல் அவள் மேல் இருந்த நம்பிக்கையில் செய்ததன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டு, அனல் பார்வையை அவனை நோக்கி வீசினாள், சஷ்டி.



பெண்ணவள் முகத்தில் தோன்றிய அடுத்தடுத்த உணர்வுகளை, மௌனமாய் உள்வாங்கியவன்.

அவளுக்கு எதிரே வந்து நின்று, “நீ என்னை அவாய்டு பண்றது கூடத் தெரியாத அளவுக்கு, நான் என்ன முட்டாளா…? லாஸ்ட் டைம், நீ என்கிட்ட இயல்பா பேசினது, நடந்துக் கிட்டது, உன்னோட காதலை உணர்ந்து, என்னை காதல் மழையில் நனைய வச்சது. எல்லாம் இதோ இந்த அருவிக் கரையில் தான்… தெரியுமா..?” என்று ரசனையாய் சொன்னவன், அன்றைய நாளை நினைவு கூர்ந்தான்.

சிவா அவளிடம் காதலைச் சொல்லி, பதிலுக்காக காத்திருந்த சமயம் அது. எத்தனை முறை முயன்றும், அவள் அவனுக்கான பதிலைக் கொடுக்க முன் வர வில்லை. ஆனால், அவனை மனதளவில் உயிராக விரும்புகிறாள் என்று அவனுக்குப் புரியத்தான் செய்தது. அவள் வாய் வழியாக சம்மதத்தைப் பெற்றே ஆகவேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக ஒரு திட்டமும் தீட்டினான்.

‘இயற்கையின் அழகை ரசிப்பதில் அவளைப் போல் யாரையும் பார்த்ததில்லை என்று ஒரு முறை ஸ்ருதி கூறக் கேட்டு இருக்கிறான். அப்படியான இடத்திற்கு அழைத்துச் சென்றால், தன்னைச் சுற்றிப் போட்டு வைத்திருக்கும் வேலியை உடைத்து வெளியே வந்துவிடுவாள்’ என்று நினைத்தான்.

அதன் படியே, அவளை அழைத்துக் கொண்டு அருவிக் கரைக்குச் சென்றான். சுற்றிலும் மரங்கள் சூழ, சூரியனின் கரங்கள் அந்த இடத்தை முற்றிலும் அணுகாமல், ஆங்காங்கே தன் கதிர்களைப் பரப்பியிருக்க, அது கொட்டும் அந்த அருவியின் நீரில் பட்டு, வெள்ளியாய் தகதகத்தது.

சுற்றிலும் பசுமை, பாலாய் கொட்டும் அருவி, அருவி நீரில் பட்டுத் தெரிக்கும் வெள்ளிக் கம்பிகளாக சூரியனின் கதிர்கள் என, அத்தனை ரம்மியமாய் அந்த இடம் அமைய, அருகில் நின்றவனின் கைகளைப் பற்றி இருந்தவளின் இறுக்கம் மெல்ல மெல்ல கூடிக் கொண்டே போக,

ஒரு கட்டத்தில் அவன் தோள் வளைவில் சாய்ந்த படியே, அந்த இயற்கையின் வரப்பிரசாதத்தை அள்ளிப் பருக ஆரம்பித்து இருந்தாள்.

அவளது மோன நிலையை அறிந்தவன், சற்றும் யோசிக்காமல் தன் கைகளுக்குள் அள்ளி, கொட்டும் நீரின் நடுவில் நிற்க, மேலும் அவனோடு ஒண்டிக் கொண்டாள், பெண். அன்றைய நாளின் தாக்கத்தில் அவன் முகத்தில் மலர்வும், அவள் முகத்தில் இறுக்கமும் ஒரு சேர வந்தமர்ந்தது. அவனை வெறுமையாய் பார்த்தவள், தலையைக் குனிந்து கொண்டாள்.

“நீ ஹர்ட் ஆகனும்னு சொல்லல, இட்ஸ் மை ஃபீல்..” என்ற படியே தலையை வருட,

பட்டென்று அவனைத் தள்ளிவிட்டு, “ஏன்டா.. உன்னை நான் பார்க்கனும்…? எதுக்கு உன் மேல லவ் வரனும்…? என்னோட சிச்சுவேஷன் தெரிஞ்சும், நான் ஏன் இப்படி பண்ணேன். உன்னை விடவும் முடியாம, விலக்கவும் முடியாம, நான் படுற கஷ்டம் உனக்குப் புரியுதா…?”

எனக் கத்தியவளின் இரு கைகளையும் பிடித்தவன்,

“எனக்கு புரியாம வேற யாருக்குப் புரியும். நீ ஒட்டி வரது போலத் தெரியும். ஆனா, அப்படி எதுவுமே நடக்காத மாதிரி ஒதுங்கிப் போயிடுவ. உன்னை உனக்குத் தெரியனும். என் மேல இருக்க லவ், உனக்குப் புரியனும்னு தான், அன்னைக்கு இங்கே கூப்பிட்டு வந்தேன். இந்த மாதிரி ஒரு சூழல்ல, நீ வேற எதைப் போட்டும் குழப்பிக்க மாட்டேன்னு நம்பினேன். அது தான் நடக்கவும் செஞ்சது.”

“இங்க வந்ததும் உன்னைச் சுத்தி இருக்குற எல்லாத்தையும் மறந்துட்ட. உன் முன்னாடி நான் மட்டும் தான் தெரிஞ்சேன். உன்னால என்னைத் தள்ளி வைக்க முடியல. உன் ஆழ் மனசுல இருக்குற நேசத்தை வெளியில் கொண்டு வரனும்னு தான், இப்படியெல்லாம் பண்ணேன்…”

“ஏன்னா, நான் உன்னை என்னோட உயிருக்கும் மேலா விரும்புறேன். ‘ஐ லவ் யு, சோ மச்..’ உன்னை எப்பவும் எந்த சூழ்நிலையிலையும் விட முடியாது.

விடவும் மாட்டேன்…!” என தீர்மானமாய் ஆழ்ந்த குரலில் கூறினான், சிவா.

“நோ… சிவா… உனக்கு என்னைப் பத்தி தெரிஞ்சா… நான் இங்கே ஏன் வந்துருக்கேன்னு தெரியும் போது, உனக்கு என்னை பிடிக்காது… யு ஹேட் மீ… ஐ நோ…” என்றவள்,

பின், “நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கேன் தெரியுமா…? கடவுளே..! இது வெளியே தெரிஞ்சா, உன்னோட பேரன்ட்ஸ் என்னைப் பார்க்குற பார்வை எப்படியும் மாறும். அதை நினைக்கும் போதே, நான் ஏன் உயிரோட இருக்கேன்னு தோனுது. என்னையே நம்பி இருக்க என் அம்மா, என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க…? அவங்க வளர்ப்பு தப்பாயிடுச்சோன்னு தினம் தினம் அவங்க மனசளவுல செத்துப் போயிடுவாங்க…” என்று முகத்தை மூடிக் கதறியவளை, தன்மேல் வலுக்கட்டாயமாய் இழுத்துப் போட்டுக் கொண்டவன், இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.



“சசிம்மா… ப்ளீஸ், இவ்வளவு எமோசன் ஆகாத, நான் சொல்றதை பொறுமையா கேளு. நீ பயப்படுற அளவுக்கு இன்னும் எதுவும் நம்ம கையை விட்டுப் போயிடல. புரிஞ்சுக்கோடா, தப்பு உன்மேல இல்ல… எல்லாத் தப்பும் என்னோடது தான். நான் தான் வேண்டாம் வேண்டாம்னு விலகிப் போனவளை வலுக்கட்டாயமா காதலிக்க வச்சேன். உன்னைப் பற்றி யோசிக்காம, சுயநலமா இருந்துட்டேன்…! சாரிடா…! வெரி சாரி…! தயவுசெய்து மன்னிச்சுடு. ப்ளீஸ், அழாதே…! என்னால உன்னை இப்படி பார்க்க முடியல…” என்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் அவனது இறுக்கம் கூடிக்கொண்டே போனது.

அவனது செய்கையில் முதலில் திமிறியவள், அது முடியாமல் போக, அவனது மேலேயே சாய்ந்து கதறினாள். மங்கையவள் முதுகை வருடிவிட்டவன், அவள் இயல்புக்கு வந்துவிட்டாள் என்று புரிய, நேராக நிமிர்த்தி அவளது விழிநீரைத் துடைத்து விட்டவன், மீண்டும் தன்மேலே சாய்த்துக் கொண்டான்.



அவளுக்கும் அது தேவையோ என்பது போல், வாகாய் சாய்ந்து கொண்டாள். நிமிடங்கள் கடந்த நிலையில், தன் உணர்வு பெற்றவள் அவனிடம் இருந்து விலகி, காரைவிட்டு வெளியே வந்தாள்.

“ஹேய் சசி… சசி… என்ன…” என்றபடியே அவளை பின் தொடர்ந்தவன், அவள் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் அவன் முகமும் தீவிரமடைந்தது. ஏதோ, கிறுக்குத் தனமாகப் பேசப் போகிறாள் என்றும் புரிந்தது, மன்னவனுக்கு.

மீண்டும் சில நொடிகள் மௌனம்…

எதிரில் ஆர்ப்பரித்துக் கொட்டிய அருவியின் நீரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், ஒரு பெரு மூச்சுடன் திரும்பி,

“சிவா… நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும், நீங்க அதை முழுசா கேட்கனும்… அதுக்குப் பிறகு உங்க முடிவை சொன்னாப் போதும். சரியா…?” என்று பீடிகையுடன் ஆரம்பித்தாள்.



அவளது ஆரம்பமே சிவாவுக்குப் பயத்தைக் கொடுத்தது. அவன் எதிர் பார்த்ததைப் போலவே, இவள் ஏதோ விபரீதமாக பேசப் போகிறாள் என்று புரிகிறது. என்ன தான் சொல்லப் போகிறாள் அவள்… தீர்க்கமாய் அவளையே பார்த்தான்.

“ஹலோ…! ஸ்ருதி…! ஸ்ருதி இருக்கியா…? என்னாச்சு? ஏன்..? இவ்வளவு நேரம் போன் எடுக்காம இருந்த…? ஹலோ ஸ்ருதிம்மா என்னடா…?” என்று படபடப்புடன் கத்தியவன்,

மறுமுனையில் ‘இம்சை’ என்று இவளால் அன்பாய் அழைக்கப்படும், அவள் இம்சைக் காதலன் அரவிந்த்…!

“ஹேய்… ஸ்டாப்… ஸ்டாப்… எதுக்கு இப்படி கத்துற? நான் நல்லாத்தான் இருக்கேன். முதல்ல நீ எங்க இருக்க? இந்த பாலா என்னை ஏர்போட்ல அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டான்…” என அவனின் படபடப்பைக் கண்டுக் கொள்ளாமல், தன் பிரச்சனையை எரிச்சலாய் கூறிக் கொண்டிருந்தாள்.



ராட்சசி என்று அவனால் காதலாய் அழைக்கப்படும் காதல் ராட்சசி ஸ்ருதி…!

இவள் பேசி முடிக்க, அவள் முன்னே வந்து நின்றான், அரவிந்த். அவனைப் பார்த்ததும் ‘ஊப்ஸ்’ என்று தன் பெருமூச்சை எல்லாம் ஊதியவள்,

“ஷ்ப்பா… வந்துட்டியா…? எங்கடா இவ்வளவு லக்கேஜையும் அள்ளிக்கிட்டு, எப்படிடா தனியா மேனேஜ் பன்றதுன்னு நினைச்சேன். நல்லவேளை வந்துட்ட, வா.. வா…! சீக்கிரம் இந்த லக்கேஜை எடு போவோம். டென்ஷன்ல அலைஞ்சது பசி எடுக்குது…” என்று நிறுத்தாமல் பேச,

அவளை முறைத்தவன், ஒன்றும் பேசாமல் அனைத்தையும் அள்ளிக் கொண்டு, இவளைக் கண்டு கொள்ளாமல் முன்னே நடக்க, அதில் கடுப்பானவள்,

“ஏய்… இருடா… என்னை விட்டுட்டுப் போற… லூசு… லூசு…” என்று கத்திக் கொண்டே, அவன் பின்னாடியே ஓடினாள்.



லக்கேஜை காரில் அடுக்கியவன் முன்புறம் அமர்ந்து இருந்தவளிடம், “லக்கேஜை மட்டும் தான் உன் பாசமலர் எடுத்துட்டு வரச் சொன்னான். நீ என்ன எக்ஸ்ட்ரா லக்கேஜா..” என்று வார்த்தையைக் கடித்துத் துப்ப…

“என்ன சொன்ன? எக்ஸ்ட்ரா லக்கேஜா…! என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது? இரு உன்னை…” என்று அவன் மேல் பாய்ந்தவளை, ஒரு கையால் அடக்கி,

“பின்னே பாரு, நீ எப்படி இருக்க…? உன்னை கண்ணாடியில் நீ பார்க்குறியா இல்லையா…? உருளைக் கிழங்குக்கு ட்ரஸ் மாட்டிவிட்ட மாதிரி, உருண்டையா சேப்பா இருக்க. உன்னை லக்கேஜ்னு சொல்லாம, வேற என்ன சொல்லச் சொல்ற…?” என மீண்டும் சீண்ட,

அவன் பேசப்பேச முகம் சிறுத்து, மூக்கு நுனி மேல் கோபம் வந்து உட்கார்ந்து கொள்ள,

“நான் உருளைக் கிழங்கா… உன்னைக் கவனிச்சுக்கறேன்டா…”

அவன் கைகளை தட்டிவிட்டு, மேலே பாய்ந்து முடியை பிடித்து ஆட்ட,

“ஏய் ராட்சசி! விடுடி… விடுடி…” என அவளிடமிருந்து தன்னை பெரும்பாடுபட்டு விடுவிடுத்துக் கொண்டவன், அவளை உள்ளே தள்ளி விட்டுவிட்டு, மறுபக்கம் அமர்ந்து காரை எடுத்தான், அரவிந்த்.
 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
389
8
28
Hosur
❤️❤️