• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காற்று - 03

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,340
556
113
Tirupur

அத்தியாயம் - 3


3
என் நியாபகங்கள்
உன்னில் உயிர்பெரும்

போதெல்லாம் எழுதிக்கொள்..

என் காதல் தொலைந்திருக்காது

தொலைத்து விட்டாயென…

அதுவரை அனைத்தையும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போலக் கூறியவள், அதற்கடுத்து எதையும் கூற முடியாமல் திணறினாள்.

அவளது தோள்களை இதமாக அழுத்தியவன்,



“கஷ்டமா இருந்தா சொல்ல வேண்டாம்டா, உன்னை வருத்திக்காதே, ப்ளீஸ்…” எனவும்,

“இல்லை. முதலும் கடைசியுமா இதை சொல்லி முடிச்சிடுறேன்…” என்றவள்,

“நான் அங்கே போனதை யாருமே எதிர் பார்க்கல போல, மூணு பேரும் என்னை ஷாக்கா பார்த்தாங்க, சந்தோசமே இல்லை. என்னன்னு கேட்கும் போது அப்பாவுக்கு ‘மைல்ட் அட்டாக்’ அப்படின்னு சொன்னாங்க. தாங்கவே முடியல. ரெண்டு நாளா அப்பா எதுவும் பேசல. அக்கா, அப்பாகிட்ட பேசுறதுக்குப் போறா, ஆனா அவர் இவளை அவாய்டு பன்றார். அம்மாவும் ஷ்ரவ் கிட்ட அதிகமா பேசல…”

“வீட்டுல வேற ஏதோ பிரச்சனைன்னு புரிஞ்சது. யாருக்கிட்ட கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க. ஷ்ரவ் அழுதுட்டே இருக்கா. காலேஜும் போகல.

பொறுக்க முடியாம அம்மாவை தனியாப் பிடிச்சு கேட்கும் போது,



‘ஷ்ரவ் ஒருத்தரை லவ் பண்றதாகவும், அது தெரிஞ்சு தான், இவ்ளோ பிரச்சனை என்றும் சொன்னாங்க…’ இந்த புள்ளப் பூச்சியா இப்படின்னு.. எனக்குக் கொஞ்சம் சிரிப்பு கூட வந்தது.

என்னோட முகத்துல சந்தேகத்தைப் பார்த்ததும், ‘அந்தப் பையனும் தமிழ் நாட்டுக்காரன் தான், நல்ல பையன் தான், அப்படின்னு அப்பா கூடச் சொன்னார். ஷ்ரவ் பிடிவாதம் அதிகமாகவும், அப்பா அவரைக் கூப்பிட்டுப் பேசினார்…’

“அவரும் நல்ல விதமா பேசிட்டுப் போனார். என்னோட வீட்டுல கண்டிப்பா ஒத்துக்குவாங்க, நீங்க என்னை முழுசா நம்பலாம்னு சொல்லிட்டுப் போனார். போனவர் தான் இப்போ வரைக்கும் வரவே இல்லை. ஒரு மாசம் முழுசா ஆகிடுச்சு, காலேஜுல கொடுத்த அட்ரஸ் எல்லாம் வச்சு விசாரிக்கும் போது, அப்படி ஒரு பையனே எங்களுக்கு இல்ல. இனி, இதைப் பத்தி விசாரிக்க எதுக்கும் இங்கே போன் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டாங்களாம்.”



“அதுவே பெரிய ஷாக் அப்பாவுக்கு, இதுல உன் அக்கா வேற, அவரைக் கண்டுபிடிக்கனும் சென்னைப் போக கிளம்பி இருக்கா, எங்களுக்குத் தெரியாம, அது தான் அப்பாவை படுக்க வச்சுடுச்சு. அவளை நம்பினதுக்கு எப்படி பண்ணிட்டா…?” என்று தாயின் அழுகை அவளை மிகவும் வருத்தியது.

அதையும் இதையும் சொல்லி, அவரை சமாதானப் படுத்தியவள், மற்றவர்களிடமும் பேசி ஓரளவுக்கு சரி செய்திருந்தாள். அவள் விடுமுறை முடிந்து கிளம்பும் நாளில் தான், அவளது அப்பா அவளிடம் நீண்ட நேரம் பேசினார். அப்போது தான், ஷ்ரவந்தியின் காதலனைப் பற்றி முழுமையாகத் தெரிந்தது.

“காலேஜில் நல்ல பையன்னு பேர் வாங்கினான்மா, பொண்ணுங்க கூட அளவாத்தான் பழகுவான். அவனுக்கு நம்ம ஷ்ரவந்தியை எப்படி பிடிச்சதோ தெரியல. முதல்ல யோசிச்சாலும், பிறகு நான் சரின்னு தான் சொன்னேன்… வீட்டுல பெரியவங்ககிட்ட பேசிட்டு வரேன்னு போனவர் தான், திரும்ப வரவே இல்லை.

நாங்க போன் செய்து பார்த்தும், எந்த ரெஸ்பான்சும் இல்ல. அவங்க வீட்டுல பேசினேன். ஒரு அம்மா பேசினாங்க. எங்களுக்கு அப்படி ஓரு பையனே இல்லை, உங்களை ஏமாத்திருக்கான்னு சொல்றாங்க… அந்தப் பையனோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டாலும் எந்தத் தகவலும் இல்லை… நான் சரியாகிடுவேன். ஆனா ஷ்ரவ் அவளை… அவளை… எப்படி சரி பண்றதுன்னே தெரியல… ‘She is mentally shock…’ கடவுள் தான் துணை இருக்கனும்.” என்று தன்னுடன் பேசிய தந்தை, தன்னை ரயில்வே ஸ்டேசனில் கையசைத்து வழியனுப்பிய தந்தை, அடுத்து, அவள் அவரைப் பார்த்தது உயிரற்ற உடலாக…! தலையில் அடித்துக் கொண்டு கதறினாள், சஷ்டி.

“அப்பாவுக்கு எங்க மூனு பேரையும் இப்படி விட்டுட்டுப் போக எப்படி மனசு வந்துச்சோ தெரியல… நான் பெங்களூர் வந்து சேரக் கூட இல்லை. எனக்கு மெசேஜ் வந்தது. மறுபடியும் என்னைத் தனியா அனுப்ப யோசிச்சு, வார்டன் ஸ்ருதியைக் கூட அனுப்பினாங்க…”

“காரியம் எல்லாம் முடிஞ்சது…. அப்பாவுக்கு மறுபடியும் அட்டாக். எங்க ரிலேட்டிவ்ஸ் எல்லாம் எங்களை தஞ்சாவூருக்குக் கூப்பிட்டாங்க. அடுத்து, அது தான் சரின்னு நான் கூட யோசிச்சேன். ஆனா அம்மா, இப்பவே வேண்டாம். கொஞ்ச நாள்ல நாங்களே வந்துடுறோம். உங்களை மதிக்காம பேசுறதா நினைக்காதீங்கன்னு சொல்லிப் போக மறுத்துட்டாங்க…”

“இத்தனை நாள் இங்க ஊரில் இருந்துட்டு, இப்போ போறதுக்கு வருத்தப்படுறாங்க போலன்னு நானும் நினைச்சேன். ஏன்னா, அப்பா இறந்த பிறகு அதுவரைக்கும் நாங்க மூனு பேரும், ஒன்னா எந்த விசயத்தையும் முழுசா பேசிக்கவே இல்லை…”

“ஒவ்வொருத்தரா எல்லாரும் போனாங்க. நாலு பேர் மூனு பேரானோம்… அன்னைக்கு நைட், அம்மா சொன்ன விசயம் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்துச்சு. எனக்கே இப்படி இருந்தா, அப்பாவுக்கு, அந்த அதிர்ச்சி தான் அவரைக் கொன்னுருக்கு…”

என்று அதுவரை அவன் கைகளுக்குள் இருந்தே சொல்லியவள், இப்போது அவனை விலக்கி நிறுத்தி விட்டாள்.

“என்ன சசி…” என்ற சிவாவின் குரலும் கலங்கித்தான் இருந்தது. ‘தன்னவள் கதறுவதை அவனாலும் தான் சகிக்க முடியவில்லையே. வேண்டாம்… சொல்ல வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டேன் என்று தன்னை முழுதாக வருத்திக் கொண்டு சொல்லிக் கதறுகிறாளே…’ என்று மனதுக்குள்ளே அழுதவன், அவள் விலக்கிய கைகளை மீண்டும் பற்றி, “உனக்கு எல்லா வகையிலும் துணை இருப்பேன். நீ அழக் கூடாது. உன்னோட இந்தப் பிரச்சனை இனி என்னோட பிரச்சனை. ப்ளீஸ் அழாத சசி… நீ விடுற ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் என் இதயத்துல இருந்து வர ரத்தக் கண்ணீர். ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா…” என்று கெஞ்சினான், சிவா.

“இல்ல சிவா… ஒரு தப்புமே செய்யாம எதுக்கு என்னோட அப்பா எங்களைவிட்டுப் போகனும்…? எங்களை விட மானம் மரியாதை முக்கியமா…?

நாங்க மூனு பேர்… மூனு பேரும் லேடீஸ்… யாரை நம்பி விட்டுட்டுப் போனார். எப்படி, அப்படி ஒரு மனசு வந்தது…? நானும் படிச்சுக் கூட முடிக்கல, அப்போ…” எனக் கத்தியவளை, என்ன சொல்லித் தேற்றுவது எனக் கூடத் தெரியவில்லை அவனுக்கு.

பிடித்திருந்த கைகளில் அழுத்தம் கொடுக்க, சஷ்டி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அதில் தெரிந்த வேதனையும் வலியும் அவனைக் கொல்லாமல் கொன்றது. அதே வலி சிறிதும் குறையாமல் அவனிடமும் உண்டாகி, அது அவன் விழிகளிலும் தெரிந்தது.

“என்னை அனுப்பிட்டு வீட்டுக்கு வந்த அப்பா, ஷ்ரவ் கிட்ட பேசியிருக்கார். அம்மா தான் சொன்னாங்க இதெல்லாம். ‘எல்லாத்தையும் மறந்துடு, நீ ஜாபுக்கு போறதுனாலும் சரி, உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்… உடனே முடியாது தான், எல்லாம் போகப் போக பழகிடும்… அப்பா உன் நல்லதுக்காகத் தான் சொல்றேன். உடனே உனக்கு நான் யாரையும் மாப்பிள்ளை பார்க்கல, பொறுமையாச் செய்யலாம்.

அப்பாவுக்காக, இதை நீ செய்டான்னு சொல்லிருக்கார்.”

“அவளும் அவர் மடியில் படுத்துக்கிட்டு, ‘என்னை மன்னிச்சிடுங்க டாடி, என்னைத் தப்பா நினைக்காதீங்கன்னு சொல்லிட்டே இருந்திருக்கா… ரெண்டு பேரையும் சமாதானம் செய்து, நான் தான் அனுப்பி வைச்சேன். நான் அப்பா கூட பேசிட்டு வரேன்னு, அவர் ரூமுக்கு போயிட்டு வரதுக்குள்ள, பேன்ல சேலையைப் போட்டு, இவ சேர் மேல நிக்குறா…”

“நான் என்ன செய்வேன், அவளைக் கீழே தள்ளி அப்பாவை வரச்சொல்லி, என் ஆத்திரம் தீரும் வரை அடிச்சுட்டேன். யாரோ ஒருத்தனுக்காக, எங்களை பத்தி யோசிக்கவே இல்லையே இவ…”

‘இல்லைம்மா… நீங்க நினைக்குற மாதிரி இல்லை, என்னால இனி வாழ முடியாதும்மா… நான் வாழத் தகுதியே இல்லம்மா… என்னைக் கொன்னுடுங்கம்மா, நான் உங்களை ஏமாத்திட்டேன், நான் தப்பு பண்ணிட்டேன்…’



தலையில அடிச்சிட்டு அழறா… ஏதோ பெருசா ஒன்னை சொல்லப் போறான்னு பயந்துட்டே அவளைப் பார்த்தேன். அவளோ, எங்க ரெண்டு பேரையும் பார்க்காம முகத்தை மூடிட்டு, ‘நான் கெட்டுப் போயிட்டேன் அவன் குழந்தை இப்போ என் வயித்துல வளருதுன்னு இடியைத் தூக்கித் தலையில போட்டுட்டா…”

“என்னடி சொல்ற, என்னடி சொல்ற? என்று அவளை நான் உலுக்க, உங்க அப்பாவோ “பத்மா” என்று அதட்டியவர் ‘அவளை உள்ளே கூப்பிட்டுப் போ… இப்போ எதுவும் பேசாத’ என்று மகளைக் கண் கொண்டும் பார்க்காமல் அறைக்குள் நகர,

“அப்பா” என்று கூவியவள் அவர் காலில் விழுந்து, ‘என்னை மன்னிச்சுடுங்க அப்பா… என் கூடப் பேசுங்க டாடி…. ப்ளீஸ் டாடி… என்னை அடிங்க டாடி, கொன்னுடுங்க டாடி…’ எனக் கதறியவளை பிடித்துத் தூக்கியவர்…

“உங்க ரெண்டு பேரையும் அவ்வளவு பலவீனமாவா வளர்த்தோம்” என்றார்.

ஒரே கேள்வி தான், அந்தக் கேள்வியிலேயே அவள் உயிர் கருகித் தான் போனது.

மனைவியைக் கண்ணால் அழைத்த அவர், “முதல்ல இவளை சமாதானப் படுத்தி தூங்க வை…” என்று கூறிவிட்டு அறைக்குள் போய்விட்டார். எதுவும் சொல்லாமல் அவளை அழைத்துச் சென்று படுக்க வைத்தாலும், இருவரது உடலும் அழுகையில் குலுங்கிக் கொண்டுத்தான் இருந்தது.

“அம்மா… ப்ளீஸ் ம்மா… நீயாச்சும் பேசும்மா…” என்றதும்,

“உன் கூடப் பேசாமல், வேற யார் கூட பேசப் போறோம். நீ கொஞ்சம் அமைதியா தூங்கு. அடுத்து என்ன செய்றதுன்னு அப்பாவும் நானும் யோசிக்கறோம்…”

மகளை கொல்லும் அளவுக்கு கோபம் இருந்தாலும், தாய் மனம் அல்லவா, ஈருயிராய் இருப்பவளிடம் எதையும் காட்ட முடியவில்லை. அதே சமயம் தனியாக இருக்கும் கணவனையும் காண மனம் நாடியது.

ஷ்ரவிடம், “நீ கொஞ்சம் படுடா, நான் அப்பாவைப் பார்த்துட்டு வரேன்…” என்று சமாதானப்படுத்தி கணவனைத் தேடிச் சென்றார்.

கட்டிலில் சாய்ந்திருந்தவரிடம் பதறிப் போய் வந்த மனைவியைப் பார்த்து, “எனக்கு ஒன்னும் இல்ல பத்மா பதறாம வா…” என்று சொன்னவர்,

“அழறாளா? படுத்துட்டாளா…?” என்றார்.

“ம்ம்…” என்றவருக்கு என்ன முயன்றும் தன் ஆதங்கத்தையும் அழுகையையும் நிறுத்தவே முடியவில்லை.

“நான் சரியா வளர்க்கலையாங்க, நம்ம பொண்ணுங்களை? எப்படி இந்தளவுக்குத் தைரியம் வந்துச்சு? நான் தான் சரியா கவனிக்காம விட்டுட்டேனா…! அவ மேல அந்தளவுக்கு நம்பிக்கை வச்சேனேங்க…” எனக் கதறிய மனைவியை, என்ன சொல்லித் தேற்ற எனக் கூடத் தெரியவில்லை ராஜவேலுவிற்கு.

அவருக்குள்ளும் அதே கேள்விகள் தானே, “அவ ஏன் அவனைத் தேடிப் போக இருந்தான்னு இப்போ தான் புரியுது. இந்த விசயம் நமக்குத் தெரியறதுக்குள்ள போயிடலாம்னு நினைச்சிருப்பா போல…” மெதுவாய் தனக்குத் தானேப் பேசிக் கொண்டார். பத்மாவுக்கும் புரிந்தது.

அடுத்து என்ன செய்வது என்று இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அறை முழுவதும் மௌனம் மட்டும் தான். கடிக்காரக் குயில் நேரம் இரவு எட்டு என்பதை எட்டு முறைக் கூவி நினைவு படுத்த,

“எனக்கு பால் மட்டும் போதும், அவளை சாப்பிட வை…” எதுவும் வேண்டாம் என்றால் மனைவி விட மாட்டாள் என்றுணர்ந்து சொன்னார் ராஜவேலு.

சிறிது நேரத்தில் பாலோடு வந்தவரிடம், “சாப்பிட்டாளா…” என,

“நல்லாத் தூங்குறா…” என்றார் பத்மா.

“ம்ம்… இத்தனை நாளா, நமக்குத் தெரியாம சொல்லப் பயந்து, மனசுக்குள்ள ரொம்ப பயந்து கஷ்டப் பட்டுருப்பா…

அதான் நமக்குத் தெரியவும் ரிலாக்ஸா தூங்குறா போல, விட்டுடு எழுப்ப வேணாம்…” என்பது தான் ராஜவேலு கடைசியாக மனைவியிடம் பேசியது.

அவர் கூறியதும் தலையசைத்து விட்டு மகளிடம் வந்த பத்மா, விடிந்து வெகு நேரமாகியும் கணவர் வராததை உணர்ந்து அறையில் சென்று பார்க்க, அவரது உயிர் பறவை உயிர்க் கூட்டை விட்டுப் பறந்து வெகு நேரமாகி இருந்தது.

அன்று நடந்ததை இளைய மகளிடம் கூறிய பத்மா, “அப்பா உடம்பு சரியில்லாம இறந்துட்டதாத் தான் எல்லாருக்கும் தெரியும். இப்போ, ஷ்ரவ் பத்தி தெரிஞ்சா என்ன ஆகும்…? தஞ்சாவூர் போனா எதையும் மறைக்க முடியாது. எல்லாரும் அசிங்கமா, கேவலமா பேசுவாங்க. அதனால தான் அங்க வரலேன்னு சொன்னேன்…” எனவும், அன்று தாய் எதற்காக தஞ்சாவூர் வரவில்லை என சொன்னார் என்று புரிந்தது.

“ம்ம்… புரியுதும்மா… ஷ்ரவ் எப்படிம்மா, எனக்கு இன்னும் நம்பவே முடியல. இனி என்ன செய்யலாம்மா…?

நீங்க ஏதோ ப்ளான்ல இருக்கீங்க போல…” எனவும்,

“ப்ளான்லாம் இல்லடா, உனக்கு இன்னும் 3 மாசம் தான காலேஜ். இங்கேயும் இருக்க முடியாது… இப்பவே நம்மளை பார்த்தும் பார்க்காத மாதிரி பேசுறாங்க, அதனால மூனு பேரும் பெங்களூர்ல செட்டில் ஆகிடலாம்னு தோனுது. பணம் நமக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. ஷ்ரவ், அவளை சரி செய்யனும். அது தான் பிரச்சனை…” என்ற தாய் கூறியதும் சரியே எனப்பட, அடுத்த ஒரே வாரத்தில் அனைத்தையும் முடித்து பெங்களூருவில் குடியேறினர், மூன்று பெண்களும்.
 
  • Like
Reactions: saru

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
389
8
28
Hosur
❤️❤️❤️❤️❤️