• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காற்று - 04

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
46
35
18
Dindigul
காற்று - 04

அடுத்த நாள் காலையில் ஆன்டர்ஷன் தான் கூறியது போலவே ஆதிராவை அழைத்து போக வந்திருந்தான். தோழியின் முகத்தைப் பார்த்தே இரவெல்லாம் அவள் சரியாகத் தூங்கவில்லை என்று அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

தூங்கமுடியாது என்று அவனுக்கும் தெரியும். எப்படியும் இந்த நாளை அவள் கடந்துதான் ஆகவேண்டும். பயந்து பயந்து நாளைக் கடத்தினால் எப்போது தைரியமாக எதிர்கொள்வது. ஆதிராவிடம் இது பற்றி எதையும் பேசவில்லை.

“வாடா.. காஃபியா டீயா.?” என்று வந்த ஆராதனாவை நன்றாக பார்த்தவன், “நீங்களும் விடிய விடிய அழுதீங்களா, மாமா எப்படி விட்டாங்க..?” என கேட்க,

“நான் சொல்றதை அவ கேட்டுட்டுத்தான் மறுவேலை பார்ப்பா, ஏன்டா நீங்க வேற..” எனச் சலித்தபடியே அமரனும் வந்து அமர,

“ஆதி எப்படி இருக்கா மாமா.? நைட் ரொம்ப அழுதாளா.? அப்புறம் உங்க தம்பி வந்தாரா.?” என்றவனிடம்,

“ம்ம்ம் அழாம எப்படி இருப்பா.? கொஞ்ச நாளாகும் இங்க அவளுக்கு செட்டாக, எப்போ போறாளாம். அதபத்தி உனக்கு தெரியுமா.? ஏகன் நைட் வந்துட்டு உடனே போயிட்டான்.” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஆதிரா வந்து, “போகலாம் ஆன்ட்.” என்றதும்,

உடனே எழுந்த ஆன்ட்ரசனும் “ஓக்கே, கம்” என்றவன் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்தான்.

“அத்தான்.. நீங்க போயிட்டு அத்தையையும் பாட்டியையும் அனுப்பி வைங்க. ஈவ்னிங்க் தானே சர்ஜரி. அப்போ எல்லோரும் போயிடலாம்..” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியில் ஏகனின் ஜீப் சத்தம் கேட்க,

“அச்சோ, ஆதி கிளம்புற நேரம் இவன் ஏன் வந்தான்.” என புலம்பியபடியே வேகமாக இருவரும் வெளியில் வந்தார்கள்.

“அட டாக்டரம்மா தனியா சிக்குறதே இல்லையே.. எப்பவும் பாடிகார்ட்ஸ் கூடத்தான் இருப்பாங்க போல.” என ஆதிராவை கூர்மையாகப் பார்த்தபடி நக்கல் குரலில் ஏகன் பேச,

“ம்ச்.. டேய் நீ என்ன இங்க..” என அமரன் சலித்துக்கொண்டே, ‘இவனோட முடியல’ என மனதுக்குள் புலம்பிக்கொண்டான்.

“இதென்னடா வம்பா போச்சு. இந்த வீடு எனக்கும் தான் சொந்தம். என்னோட வீடும் கூட. நான் வரக்கூடாதா? என்ன கொடுமை சரவணா, யார் யாரோ எல்லாம் வர்ராங்க. போறாங்க. நான் வரக்கூடாதாம்.. நேரம்தான்..” என ஆதிராவை பார்த்துக்கொண்டே நக்கலை கொஞ்சமும் குறைக்காமல் பேச,

“ப்ச்..” என சலித்த ஆன்ட்ரசன், ”கெட் இன் ஆதி..” என அனேகனை முறைத்துக் கொண்டே கூற,

“கிளம்பு கிளம்பு… காத்து வரட்டும். பெரிய டேஷ்ன்னு நினைப்பு.. போடாங்க்..” என பல்லைக் கடித்தவன், ஆதிராவை பார்த்து தீயாக முறைத்தான்.

அவளோ அவன் பக்கம் திரும்பினால் தானே, காரில் ஏறியவள் ஆராதனாவிடம் தலையசைத்ததோடு சரி, மொபைலைப் பார்த்தபடி குனிந்துவிட்டாள்.

‘திமிர் திமிர் உடம்பு மொத்தமும் திமிர்’ எனப் பல்லைக் கடித்தவன் “ஏய்ய்..” என கார் கதவைத் திறக்க போக, வேகமாக வந்து அமரன் பிடித்துக்கொள்ள,

‘விடு விடுடா’ என திமிறியவனிடம் “டேய் உனக்கு வேற வேலையே இல்லையா.? நாலு வருஷம் கழிச்சு வந்தவளையும் உடனே துரத்தி விட்டுடு..” என அமரன் எரிச்சல் பட, ஆராதனா முறைத்தபடி நின்றிருந்தாள்.

“என்ன.. என்ன வேனும் உங்களுக்கு. எதுக்கு முறைக்கிறீங்க. நான் இப்படித்தான். இப்படித்தான் இருப்பேன். என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போனவக்கிட்ட போய் கெஞ்சி, கொஞ்சி பேசனுமா.? அதெல்லாம் எப்பவும் நடக்காது. இனி அவ இந்த வீட்டுக்குள்ள வந்தா நான் மனுசனாவே இருக்கமாட்டேன் பார்த்துக்கோங்க..” என இருவரையும் பார்த்துக் கத்தியவன், தன் ஜீப்பை எடுத்துக்கொண்டு போய்விட்டான்.

“இவன் ஏன் வந்தான், எதுக்கு கோச்சுக்கிட்டு போறான் ஒன்னும் புரியல..” என நொந்து கொண்ட அமரன், முறைத்த மனைவியை ஒருவழியாக சமாதானம் செய்துவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பினான்.

“ஆதி நீ ஒரு டாக்டர். அதை முதல்ல மைண்ட்ல ஏத்திக்கோ, டென்சன் ஆகக்கூடாது. அங்கிள் பத்தி உங்கிட்ட சில விஷயங்கள் பேசனும்..” என பீடிகையுடன் ஆரம்பித்தான் ஆன்ட்ரசன்.

“என்னடா, என்ன சொல்ல வர, அவருக்கு என்ன?” பதட்டத்துடன் கேட்டவளிடம்,

“அவருக்கு என்ன. மென்டலி பிசிக்கலி ஹீ இஸ் ஓகே. சர்ஜரிக்கு ஃபிட்தான். சர்ஜரி செய்தா போதும். பட் அவர் மார்னிங்க் நான் ரவுண்ட்ஸ் போகும் போது எனக்கு சர்ஜரி வேண்டாம். என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுண்னு சொல்றார்.” என்றான் சலிப்பாக.

“என்ன என்ன சொல்ற நீ.? ஏன் சர்ஜரி வேண்டாம் சொல்றார்.” பதட்டமும் பயமுமாக கேட்க,

“எனக்கு எப்படி தெரியும். நானும் முடிஞ்சவரை பேசி பார்த்துட்டேன், மனுஷன் கேட்கவே இல்ல. இனி நீயாச்சு அவராச்சு..” என அந்த சலிப்பு கொஞ்சமும் குறையாமல் சொல்லிவிட்டு அமைதியாகிவிட, ஏன் ஏன் என்னாச்சு என ஆதிராவுக்குத்தான் நெஞ்சம் தடதடக்க ஆரம்பித்தது.

ஏகன் அத்தான் எதுவும் பிரச்சினை செய்கிறாரோ, இல்லை சித்தியா.? என மூளை எதை எதையோ யோசிக்க ஆரம்பித்தது.

இங்கு மருத்துவமனையில் “என்னங்க நீங்க ஆபரேஷன் வேண்டாம் சொல்லிட்டீங்க, என்ன நினைச்சிட்டு இப்படியெல்லாம் பன்றீங்க.” என கணவரைப் பார்த்துக் கத்தி கொண்டிருந்தார் பாக்யா.

“கொஞ்ச நேரம் சும்மா இரு பாக்யா, நான் எப்போ பண்ணமாட்டேன்னு சொன்னேன், பண்ணிக்கிறேன். ஆனா அதுக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு. அந்த கண்டிஷன்ஸ்க்கு எல்லாரும் ஓக்கே சொன்னா நான் இந்த ஆபரேசனை பண்ணிக்கிறேன்.” என முடித்துவிட்டார் சுந்தரம்.

“உங்களுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு. எதுல விளையாடனும்னு இல்லையா.?”

“நீ அமைதியா இருந்தாலே எல்லாம் சரியாகிடும். நான் சொல்றதை கேளு. நான் கண்டிப்பா பண்ணிக்குவேன். ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு சில கடமை இருக்கு. இப்போ இந்த சூழல்ல அதை செய்யாம விட்டா அடுத்து எப்பவுமே செய்யமுடியாது. என்மேல நம்பிக்கை இருந்தா நீ அமைதியா இரு. இல்லைன்னா வழக்கம்போல உன் தம்பி பொண்டாட்டி கூட சேர்ந்து என்னமோ பண்ணு..” என்றார் சலிப்பாக.

“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க, நான் அப்படி என்ன தப்பு செஞ்சிட்டேன். இந்த குடும்பம் உடைஞ்சிடக்கூடாதுன்னு தான் அன்னைக்கு நான் உங்களுக்கு எதிரா நடந்துக்கிட்டேன்.. அதையே இன்னும் எத்தனை நாள் சொல்லி காட்டுவீங்க.” என்றார் பாக்யாவும்.

“சொல்லி காட்டுறேனா? அப்படியும் கூட வச்சுக்கலாம். ஆனா உன் குடும்பம் உடைஞ்சிடக்கூடாதுன்னு ஒரு சின்ன பொண்ணோட மனசை உடைச்சிட்டியே அது சரியா.?” என்றார் கோபமாக

“அது நான் அப்படி நினைக்கலங்க, அன்னைக்கு இருந்த சூழல். புனிதாவால இன்னும் இன்னும் பிரச்சினை பெருசாகிடக்கூடாதுன்னுதான், ஆதிம்மா நம்மளை புரிஞ்சிப்பான்னு நினைச்சேன்.” என்றார் உள்ளே போனக் குரலில்.

“கிழிச்ச.. ஒரு சின்ன பொண்ணு உன்னையும் இந்த சூழலையும் புரிஞ்சி நடந்துக்கனும். ஒரு குடும்பத்தயே கட்டி மேய்க்கிற பொம்பள அவங்க புரிஞ்சிக்க மாட்டாங்க. நல்ல நியாயம்டி உங்களோடது.” என்றார் எகத்தாளமாக

“ஏன்.? ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க. எனக்கு மட்டும் ஆதிரா இப்படி இருக்குறது கஷ்டமா இல்லையா?, அவளோட இந்த நிலமை என்னாலையும் தான் தாங்கிக்க முடியல. ஆனா நான் ஆதிராவுக்கு மட்டுமே அத்தை இல்லையே, ஆதிரா மாதிரி தானே தர்ஷினியும் எனக்கு தம்பி பொண்ணு, நான் அவளையும் தான் பார்க்கனும்.” என்ற மனைவியை முடிக்க விடவில்லை சுந்தரம்.

“போதும் நிறுத்து பாக்யா, நீயும் ஒரு பொண்ணுதானே, ச்சே மேல இருந்து பார்த்துட்டுதான் இருப்பான் உன் தம்பி. நீயா இப்படின்னு அவன் மனசு எவ்வளவு வேதனைப்படும் புரியுதா.? அதெல்லாம் மனுசத்தன்மை இருக்குறவங்களுக்குத்தான் புரியும். உனக்குப் புரிய வாய்ப்பில்ல.” என்றவர்,

“இதுவரை நீங்க பார்த்தது, பேசினது செஞ்சது எல்லாம் போதும். இனி யாரும் பேசக்கூடாது. இன்னைக்கு என்ன நடந்தாலும், யார் என்ன பேசினாலும் நீயோ, நம்ம பசங்களோ எனக்கு எதிரா, என் முடிவுக்கு எதிரா எதுவும் பேசக்கூடாது. அப்படி பேசினா அதுதான் நான் உங்ககிட்ட பேசுறது கடைசியா இருக்கும்.” என கண்டிப்பாக சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார் சுந்தரம்.

“என்னங்க நீங்க” என்றாலும், கணவரின் அந்த குரலில் அடுத்து எதுவும் வாதம் செய்யாமல் அமைதியாகிவிட்டார் பாக்யா.

சுந்தரத்தின் முடிவை கேட்டு அனைவரும் மருத்துவமனைக்கே வந்துவிட்டனர். புனிதாவுக்கு இவர் ஏதோ திட்டம் போடுகிறார் என்று புரிந்துவிட்டது.

வேதவல்லி வந்து தம்பியிடம் கெஞ்சிப் பார்க்க முடியவே முடியாது என்றுவிட்டார். பிராகாஷ் எதுவும் பேசவில்லை. அமரனும் சொல்லிப் பார்த்து அமைதியாகிவிட்டான்.

“சரி சொல்லுங்க என்ன உங்க கண்டிஷன்” என கடைசியாக வாயைத் திறந்தான் அனேகன். அவன் முகத்தில் அடக்கியிருந்த கோபம் அப்பட்டமாக தெரிந்தது.

உடல் இறுகிப்போய் அவர் பதிலுக்காக காத்திருந்தான். அவன் உடல்மொழியைக் கண்ட அமரன் வந்து அருகில் நின்று தம்பியின் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

“இப்போ இங்க உனக்கும் என் மருமகளுக்கும் கல்யாணம் நடக்கனும், அது நடந்தாதான் என் ஆபரேஷனும் நடக்கும்..” என அவனுக்குமேல் இறுக்கமான குரலில் சுந்தரம் சொல்ல,

“போதும் நிறுத்துங்க, உங்க உளறலுக்கு எல்லாம் நான் ஆள் கிடையாது.” என எரிச்சலாகக் கத்தியவன் “என்ன ப்ளாக் மெய்ல் பண்றீங்களா.? எப்பவும் நான் அமைதியாவே நீங்க சொல்றதுக்கு மண்டையை ஆட்டிக்கிட்டே இருப்பேன்னு நினைச்சீங்களா.?” என சுந்தரத்தைப் பார்த்து கிண்டலாகக் கேட்டுவிட்டு, பாக்யாவைப் பார்த்து “உங்க காத்து அவருக்கும் பட்டுருச்சு போல. உங்களமாதிரியே மிரட்டிப் பார்க்குறார்..” என தோளைக் குலுக்கிவிட்டு வெளியில் போக நினைக்க, ஆதிரா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். பின்னோடு ஆன்ட்ரசனும்.

ஆதிராவைப் பார்த்து புருவத்தை உயர்த்தியவன், பின்னால் வந்த ஆன்ட்ரசனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான்.

எல்லோரும் அங்கே இருப்பதைப் பார்த்ததும், தான் அங்கு இருப்பதா வேண்டாமா என தடுமாற்றத்தோடு சுற்றியும் பார்த்தவள், பார்வை தன்னால் சுந்தரத்திடம் போய் நின்றது. அவரும் அப்போது அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

விழியசைவில் தன்னிடம் வரச் சொல்ல, வேகமாக அவரிடம் சென்றவள் அவர் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள, அந்த விரல்களில் இருந்த நடுக்கம் அவருக்குள் தாளாத வேதனையைக் கொடுத்தது. அந்த விரல்களைப் பிடித்து வருடியபடியே “எப்படி இருக்கடா குட்டிம்மா, எப்போ வந்த” என மென்மையாகக் கேட்க,

“நைட் வந்தேன் மாமா, நீங்க ஏன் இப்படி, ஏன் இவ்ளோ ஸ்ட்ரெஸ் ஆகிட்டீங்க. ஏன் உங்க ஹெல்த்தை இப்படி கெடுத்து வச்சுருக்கீங்க..” என மெதுவாக பேசினாலும், மிரட்டலாகத்தான் பேசினாள் அவரிடம்.

“அதெல்லாம் சரியாகிடும், அதுதான் நீ வந்துட்ட தானே. இனி சரி பண்ணிக்கலாம். அதைவிடு நீ சாப்ட்டியா.?”

“ம்ம்.. ஆன்ட் வீட்டுல. ஆன்டி மார்னிங்க் அங்க வர சொல்லிருந்தாங்க அதான்.”

“என் பொண்ணு முகம் ஏன் இப்படி பன்னு மாதிரி வீங்கிருக்கு. நைட் ரொம்ப அழுதியா? இல்ல அந்த தடிமாடு உன்னைத் திட்டினானா?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல. தூங்கினது அப்படி இருக்கு போல. என்னை விடுங்க. நீங்க ஏன் இப்போ வீம்பு பண்ணிட்டு இருக்கீங்க” என இருவரும் குசுகுசுவென பேசிக் கொண்டிருக்க, மற்ற எல்லோரும் ஒவ்வொரு உணர்வில் பார்க்க, ஒருவனுக்கு மட்டும் உள்ளுக்குள் காந்தியது.

‘நம்ம முகத்தைக்கூட பார்க்கமாட்டேங்கிறா, அந்த மனுஷங்கிட்ட எப்படி இளிச்சு இளிச்சு பேசுறா. இருக்குடி உனக்கு இருக்கு.. எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா இருக்கு.’ என உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தவனை இப்போது நக்கலாக பார்த்தான் ஆன்ட்ரசன்.

“அண்ணா போதும். அடுத்து என்ன செய்யனுமோ அதை பாருங்க. அவளுக்கு என்ன? நீங்க என்னமோ சொல்லிட்டு இருந்தீங்களே, அதை தெளிவா சொல்லுங்க” என முகமெல்லாம் பூரிப்புடன் புனிதா கேட்க, பிரகாஷ் மனைவியை வெறித்துப் பார்த்தார்.

“ஹான் ஆமாம்மா பேசிட்டு இருந்ததை விட்டுட்டேன் பாரு, இந்த குடும்பத்திலயே நீதான்ம்மா அறிவாளி” என புனிதாவை புகழ்வது போல் பேசியவர், “என் மகன் கல்யாணம் இப்போ இங்க நடக்கனும். அதைதான் சொல்லிட்டு இருந்தேன்.” என முடிக்க,

“அய்யோ என்ன அண்ணா இப்படி திடீர்னு சொல்றீங்க, எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னு காலைலதான் தர்ஷினியை ஊருக்கு அனுப்பினேன்.. இப்போ எப்படி வர சொல்றது. ஏண்ணா இதை நீங்க முதல்லயே சொல்லமாட்டீங்களா? இப்போ என்ன பண்றது?” என புலம்பிக்கொண்டே கணவனைப் பார்க்க, அவரோ தன் மாமனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அதுவும் சரிதான் தர்ஷினி இல்லாம எப்படி கல்யாணம் நடக்கும். அவளை இப்போ வரச்சொல்ல முடியுமாமா.?” என முடிக்கும் முன்னே “அப்பா போதும்” என கத்திய அனேகன் அமரனிடமிருந்து திமிறினான்.

அவருக்கு அருகில் நின்றிருந்த ஆதிரையின் நிலையையோ சொல்லவே வேண்டாம். எதெல்லாம் தான் பார்க்கக்கூடாது, எதையெல்லாம் தான் கேட்க்ககூடாது என்று நினைத்தாளோ அதுவே இப்போது நடக்க, உடலெல்லாம் நடுங்கி, அவள் குட்டி இதயமோ இப்போதே வெடித்துவிடுவேன் என்பது போல படபடவென வேகவேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

மூளையோ இங்கிருந்து சீக்கிரம் ஓடிவிடு என எச்சரிக்கை விடுக்க, கலங்கிய விழிகளை மறைக்கும் வழிதெரியாமல், அங்குள்ள யாரையும் பார்க்கும் திரானியன்று முகத்தை மேலும் மேலும் குனிந்து கொள்ள, திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல, ஆதிரா படும் பாட்டை உணர்ந்த ஆன்ட்ரசன் அவளிடம் வரும் முன்னே, அண்ணனிடமிருந்து திமிறி புயல் வேகத்தில் வந்த அனேகன் தன்னவளை இழுத்து தனக்குள் இறுக்கி அனைத்துக்கொண்டு தன் தந்தையை முறைத்துப் பார்த்தான்.

 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
178
139
43
Theni
டேய் என்னடா நடக்குது இங்க..
ஆளாலுக்கு ஒரு பொண்ணை போட்டு இந்த டார்சர் பண்ட்ரீங்க
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
455
156
43
Dindugal
ஆதி நான் உனக்கு ஒரு ஐடியா தரேன்.
தயவு செஞ்சு இந்த கூட்டத்த விட்டுட்டு ஓடிரு..
 
  • Like
Reactions: Sailajaa sundhar

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
66
37
18
Tirupur
ஆளாளுக்கு ஆராவ பந்தாடுறாங்க 😢