• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காற்று - 09

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
76
63
18
Dindigul
காற்று - 09

“புனி இன்னும் நாம வீட்டுக்கு போகாம இருக்குறது ரொம்ப தப்பு. பெரியவங்க ரெண்டு பேரும் அங்க தனியா இருக்காங்க..” என மிகவும் பொறுமையாக எடுத்து சொன்னார் பிரகாஷ்.

“அதுக்கு நான் என்ன செய்ய.? உங்களுக்கு அடிச்சிக்கிட்டா நீங்க போய் பாருங்க. எனக்கு எந்த அவசியமும் இல்ல.” என புனிதா பட்டென்று சொல்ல,

“இனி நாம செய்ய ஒன்னுமே இல்ல புனிதா. நம்ம மேல தப்பை வச்சிக்கிட்டு, அவங்களை குறை சொல்ல முடியாது. அதோட அங்க இருக்குறது என்னோட அம்மாவும் அப்பாவும். அவங்களை பார்த்துக்க வேண்டியது என்னோட கடமை..” என சற்றே குரலை உயர்த்த,

“என்ன? இல்ல என்னனு கேட்குறேன். சத்தமெல்லாம் உசருது. உங்க அண்ணன் பொண்ணு வாழ்க்கையை காப்பாத்திட்டோமேன்னு வந்த தைரியமா.? இன்னுமே என் கைலதான் உங்க குடும்பத்தோட குடுமியே இருக்கு அதை மறந்துடாதீங்க.” என் எள்ளலாக சொல்ல,

“நான் மறக்கல.. என்னை மறக்கவும் நீ விடமாட்டன்னு எனக்குத் தெரியும். நீயும் தர்ஷன் சொன்னதை மறந்துடாத.” என மனைவியைப் பார்த்து கிண்டலாக சொன்னவர்,

“இதுக்கு மேலயும் இங்க இருக்க முடியாது. நீ வந்தா வா.. இல்லையோ இப்படியே இருந்துக்கோ. நான் பெரிய வீட்டுக்கு போறேன்..” என புனிதா ஆத்திரமாக முறைத்ததை கூட கண்டுகொள்ளாமல் கிளம்பிவிட்டார் பிரகாஷ்.

தர்ஷன் பேசி சென்றதில் இருந்தே புனிதாவிற்கு மனதே சரியில்லைதான். ஏன் அதற்கு முன்னமே அவருக்கு மிகுந்த குற்றவுணர்ச்சிதான். ஆதிராவின் இடத்தில் தர்ஷினியை வைத்து அவர் யோசிக்காமல் இருந்ததில்லை. ஆனால் தன் மகள் என்று வரும்போது மற்றது எல்லாம் பின்னுக்கு சென்றுவிட்டது என்பதுதான் உண்மை.

தர்ஷினியின் மனதில் வேறு ஆசையை வளர்த்துவிட்டோமே என்ற குற்றவுணர்வும் இப்போது சேர்ந்துகொள்ள அவரால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை.

அவருடைய பெரிய கவலையே மகளை எப்படி இதிலிருந்து மீட்டெடுப்பது என்பதுதான். ‘கடவுளே தன் மகள் ஏகனின் மேல் எந்த ஆசைகளையும் வளர்த்திருக்கக்கூடாது’ என்று நூறாவது முறையாக அப்போதும் அவசரமாக கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.

இப்படியான யோசனைகளில் இருந்த நேரம் சரியாக புனிதாவின் தாய் அழைக்க, எடுக்கவா வேண்டாமா என சில நொடி யோசித்தவர், பின் எடுத்து “என்னம்மா..” என சோர்வாக ஆரம்பிக்கும் முன்னே,

“புனி இப்போதான் விசயம் கேள்விப்பட்டேன், என்னடி இதெல்லாம்..?” என அங்கலாய்த்தவர், “சரி விடு, இதெல்லாம் நல்லதுன்னு நினைச்சிக்கோ. அங்க நம்ம தர்ஷொ இருந்தாலும் எப்போ பாரு நம்ம பிள்ளையை, வாழ்க்கையை பிடுங்கிட்டு வந்த மாதிரியே எல்லோரும் பேசுவாங்க. அது எதுக்கு நமக்கு. அவங்க எப்படியோ போயிட்டு போறாங்க விட்டுத்தள்ளு..” என கொஞ்சமும் கோபமில்லாமல் தெளிவாக பேச, புனிதாவிற்கு தலையே சுத்தியது.

அமரன் ஆராதனாவை திருமணம் செய்து வந்ததுமே இப்படியொரு திட்டத்தை போட்டுக்கொடுத்ததே அவர்தான். அதுவரை புனிதா கூட இப்படியொரு கோனத்தில் யோசித்ததில்லை.

அந்த நிமிடம் வரை அவருக்கு அப்படியொரு யோசனையும் இல்லை. ஆனால் முன்னமே வீட்டில் இந்த பேச்சு இருந்ததுதான்.

அதை இப்படியொரு சூழலில் தன் தாய் பயன்படுத்துவார் என்று புனிதா நினைக்கவில்லை. ஆதிரா சற்று அடமாக இருந்திருந்தால், அப்போதே இந்த பிரச்சினையை முடித்திருப்பார்தான்.

ஆனால் அவள்தான் தியாக செம்மல் போல, உடனே அங்கிருந்து கிளம்பிவிட, எல்லோருக்கும் வசதியாகி போய்விட்டது.

இதில் புனிதா செய்த தவறு மகளை, ஆரம்பத்தில் இருந்தே தன் தாய் வீட்டில் விட்டு வளர்த்ததுதான். பெரிய வீட்டில் விட்டு வளர்த்திருந்தால், தர்ஷனை போல அவளும் எல்லோரோடும் பாசமாக இருந்திருப்பாள்.

இருவருமே வேலைக்குச் செல்வதால் தாயிடம் விட, அவரோ பாசத்தோடு சேர்த்து அவள் மனதில் பொறாமையையும் விதைத்திருக்கிறார். இவரை என்ன செய்ய, என யோசித்த நேரம் “ஏய் புனி.. புனி இருக்கியாடி..” என புனிதாவின் தாய் பலமுறை கத்திவிட,

“ம்ச் என்னம்மா.. லைன்லதான் இருக்கேன். என்னனு சொல்லித்தொலை..” என கடுப்பாகவே கத்த,

“எங்கிட்ட ஏண்டி கத்துற. நீ கத்த வேண்டியது உன் மாமியாருக்கிட்டயும், நாத்தனாருக்கிட்டயும்..” என அவரும் கடுப்பாக சொல்ல,

“அத சொல்லத்தான் கூப்பிட்டியா.? எரிச்சல் பண்ணாம என்னனு சொல்லிட்டு வைமா.?” என புனிதாவும் எரிச்சலாகி விட

“அதை சொல்றதுக்குள்ளத்தான் நீ எங்கையோ போய்ட்டியே,” என மகளுக்கு ஒரு குட்டு வைத்தவர், “உங்க பெரியம்மா போன் பண்ணாடி, உன் அண்ணன் பையனுக்கு பொண்ணு பார்க்கிறாங்களாம். தர்ஷியை கேட்கலாமான்னு கேட்குறா.? எனக்கு சம்மதம்தான். நான் உங்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன்..” என பரபரப்பாக சொல்ல,

“என்னம்மா உளர்ர, இங்க என்ன பிரச்சினை நடந்துட்டு இருக்கு. நீ என்ன பேசிட்டு இருக்க. நானே தர்ஷி என்ன செய்ய போறாளோன்னு பயத்துல இருக்கேன். நீ வேற புதுசா ஒரு பிரச்சினையை ஆரம்பிக்காத.?” என கோபமும் எரிச்சலுமாக கத்திவிட,

“எல்லாம் தெரிஞ்சிதான் பேசுறேன். நம்ம கையை மீறி நடந்து முடிஞ்சதுக்கு நாம என்ன செய்ய முடியும். இனி அந்த பையன்கிட்ட போய் தர்ஷியை பத்தி பேச முடியுமா சொல்லு.. ஆரம்பத்துல இருந்தே அவன் பிடி கொடுக்கலத்தானே.” என்றவர்,

“ஏற்கனவே நிசாந்துக்கு நம்ம தர்ஷி மேல விருப்பம் போலடி. அவன்கிட்ட பொண்ணு பார்க்கலாமான்னு கேட்டதுக்கு, முதல்ல தர்ஷியை கேளுங்க, அப்புறம் வெளிய பாருங்கன்னு சொல்லிருக்கான். அதுலையே அவனுக்கு விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சிடுச்சு, அதான் உன்னை கேட்குறேனு அக்கா சொல்றா..” என அவர் மகிழ்ச்சியாக சொல்ல,

“ம்மா எனக்குமே விருப்பம்தான். நிசாந்தை நான் வேண்டாம்னு சொல்வேனா.? நான் தூக்கி வளர்த்தவன்மா. என் பயமே தர்ஷியை நினைச்சுத்தான். அவ என்ன ஆட்டம் ஆடி முடிப்பாளோ.?” என புனிதாவும் வருத்தமாக சொல்ல,

“தர்ஷிக்கிட்ட நான் பேசிக்கிறேன். அந்த கவலையை விடு. இப்போ நீ மாப்பிள்ளைக்கிட்டயும் உங்க வீட்டுலயும் பேசிட்டு எனக்கு முடிவு சொல்லு. சுந்தரம் தம்பி ஆபரேஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்த பிறகு ஒரு நல்ல நாளா பார்த்து பொண்ணு பார்க்குற விசேஷம் வச்சுக்கலாம். எல்லாமே பெரிய வீட்டுல நடக்கிற மாதிரி பார்த்துக்கோடி.” என நீளமாக மகளிடம் பேசி வைத்துவிட,

புனிதாவிற்கு இப்போதுதான் மனதே நிம்மதியானது. மூச்சுக்கூட சீராக விட முடிந்தது. இந்த திருமணம் எப்படியாவது நடந்துவிட வேண்டுமே என்ற எண்ணம் மட்டும்தான் இப்போது பெரிதாக இருந்தது.

அடுத்து ஒரு நிமிடம் கூட தாமதிக்கவில்லை புனிதா. உடனே பெரிய வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.

அவர்களிடம் எப்படி பேசுவது என ஒருமுறை உருப்போட்டுக் கொண்டார். சட்டென்று மனதுக்குள் ஒரு எண்ணம், உடனே அமரனுக்கு அழைத்து பேச,

“ரொம்ப ரொம்ப சந்தோசம் அத்தை. இது நான் ஆதிக்காவோ, ஆராவுக்காகவோ சொல்லல, என் குட்டித்தங்கச்சி தர்ஷிக்காகத்தான் சொல்றேன். நீங்க நம்பினாலும், இல்லைனாலும் அவ எங்க எல்லாருக்கும் செல்லத் தங்கச்சி அத்த..” என மகிழ்வும் பூரிப்புமாக சொல்ல, புனிதாவிற்கு மேலும் குற்றவுணர்ச்சி ஆகிப்போனது.

“அமர்..” என அவர் மேலும் இழுக்க,

“அத்தை நீங்க வீட்டுக்கு போங்க, நான் ஆராவையும் பாப்பாவையும் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடுறேன்.” என குதுகலமாக சொல்ல,

“இல்ல இல்ல அமர். அது நானே போய் ஆராவையும், பாப்பாவையும் அழைச்சிட்டு வரேன். அங்கதான் போயிட்டு இருக்கேன். நீ அங்க அண்ணன்கிட்டயும், அண்ணிக்கிட்டயும் விசயத்தை சொல்லிட்டு, வீட்டுக்கு வந்துடு..” என்றவர் ஆன்டர்ஷன் வீட்டிற்கு காரை விட்டார்.

ஆன்டர்ஷன் அம்மாவிடம் பேசி, ஆராதனாவையும் குழந்தையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

அவர் வீட்டிற்கு வருவதற்குள்ளாகவே புனிதாவின் அம்மா, பெரியவர்களிடம் பேசியிருந்தார். அது அவர்கள் முகத்திலே தெரிந்திருந்தது.

தன் வயதையும் மீறி வேகமாக வந்த வேதவல்லி, மருமகளின் கையைப்பிடித்து “வாக்கு தவறின எங்களை மன்னிச்சிடுமா.?” என தழுதழுக்க, “அய்யோ அத்தை” என அவரிடமிருந்து தன் கையை வேகமாக விலக்கிக்கொண்டார் புனிதா.

“தப்பில்லம்மா.. நாங்க செஞ்சது தப்புத்தானே..” என்றவர், “ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம வீட்டுல நடக்குற விசேஷம். இந்த ஊரே மெச்சுற மாதிரி பண்ணிடனும்..” என்று அவர் தன் மகிழ்ச்சியை கூற, எல்லோருக்குமே அதே எண்ணம்தான்.

அதை கேட்ட அமர், மருத்துவமனையில் அவர்கள் பேசியதையும் கூற, “ஆமா வல்லி, ஆராவுக்கு சீமந்தம் வைக்கிற அன்னைக்கு பொண்ணு பார்க்குற ஃபங்சனையும் வச்சிடலாம். முகூர்த்த நாள் பக்கமா இருந்த ரெண்டு பேருக்கும் ரிசப்ஷன் ஒன்னா வைக்கலாம். இல்லைன்னா ஆதிக்கு தனியா, தர்ஷிக்கு தனியா வச்சிடலாம்..” என பெரியவரும் கூற, எல்லோருக்குமே மனம் நிறைந்து போனது.

புனிதாவிற்குத்தான் மிகுந்த குற்றவுணர்ச்சி. தன்னுடைய சுயநலத்தால் குடும்பத்தின் நிம்மதியையே கெடுத்துவிட்டோமே என வருந்த ஆரம்பித்துவிட்டார்.

அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க, பிரகாஷ் மட்டும் ஏதோ யோசனையிலேயே இருந்தார். அவரை கவனித்த அமர் அருகில் வந்து “என்ன மாமா உங்களுக்கு விருப்பம் இல்லையா.? நாம வேற பார்க்கனும்னா பார்க்கலாம்..” என ஆதரவாக கேட்க,

“அப்படியெல்லாம் இல்ல அமர். என்னோட சந்தோசத்தையும் நிம்மதியையும் சொல்ல வார்த்தையே இல்லை தெரியுமா.? எங்க இந்த குற்றவுணர்ச்சியோடவே வாழ்க்கை முடிஞ்சிடுமோன்னு பயந்துட்டு இருந்தேன். இப்போ அந்த கஷ்டமே இல்ல.” என மகிழ்வும் பூரிப்புமாக சொல்ல,

“அப்புறம் என்ன மாமா.? ஏதோ யோசனையாவே இருக்கீங்க. ஆதி என்ன சொல்வாளோன்னு நின்னைக்கிறீங்களா..?” எனவும,

“இல்ல இல்ல அமர். ஆதிக்குட்டியை இனி ஏகன் பார்த்துப்பான். எனக்கு அந்த கவலை இல்ல. என்னோட கவலையே தர்ஷியை நினைச்சுத்தான். இது தெரிஞ்சு அவ என்ன ஆட்டம் ஆடப்போறாளோ தெரியல. எனக்கு தெரிஞ்சி அவளுக்கு ஏகன் மேல விருப்பமெல்லாம் இல்ல, ஆனா ஆதி கூட இந்த கல்யாணம் நடக்கக்கூடாதுன்னு தான் அவ இவ்வளவும் பண்ணது. இப்போ என்ன செய்வாளோன்னு இருக்கு. அவளோட பிடிவாதமும் முரட்டு குணமும் தான் உனக்கே தெரியுமே.” என்றவரின் கவலை அமரனுக்கும் புரிந்தது.

“விடுங்க மாமா.. அதெல்லாம் சரியாகிடும். நிஷாந்துக்கு விருப்பம்னு தெரியும் போது அவளுக்கும் மனசு மாற வாய்ப்பிருக்கு மாமா.. அப்படியே பிரச்சினையானாலும் சமாளிச்சிக்கலாம். ஆனா தர்ஷி பெருசா பிரச்சினை செய்யமாட்டன்னு தான் தோனுது..” என அமரன் கூற, பிரகாஷிற்கு நம்பிக்கை இல்லை.

மகளைப்பற்றித்தான் அவருக்கு தெரியுமே. தன் காரியம் சாதிக்க எந்தளவிற்கும் இறங்குவாள் என்று அவருக்கும், அநேகனுக்கும் மட்டும் தானே தெரியும்.

அவர் பயந்தது போலவேத்தான் அங்கு கத்திக் கொண்டிருந்தாள் தர்ஷி.

புனிதாவின் அம்மா தர்ஷியிடம் பொறுமையாக எடுத்து சொல்ல, ஆனால் அதை கேட்கும் பொறுமைதான் தர்ஷிக்கு இல்லை.

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க எல்லாரும். நீங்க நினைச்சு நினைச்சு பேசுறதை கேட்க நான் என்ன முட்டாளா.? எனக்கு ஏகன் அத்தான் தான் வேணும். நீங்க எல்லாரும் சேர்ந்துதானே இப்படியொரு ஆரம்பிச்சு வச்சீங்க, இப்போ மாத்தி பேசினா நான் கேட்டுக்கனுமோ, முடியாது. முடியவே முடியாது. எனக்கு அத்தான் வேனும். அதுக்கு என்ன செய்யனுமோ செய்ங்க. இல்லன்னா நான் என்னமோ செஞ்சிடுவேன்..” என ஆத்திரமாகக் கத்திக் கொண்டிருந்தவளை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் புனிதாவின் தாய் ஆனந்தி.