காலக் கணிதம் 1
“கல்கி நீ ரொம்ப அழகாஇருக்க .. கயல் போல விழிகள் .. எடுப்பான மூக்கு … சிவந்த உதடுகள்” என அவளிடம் காதல் மொழி பேசினாள்.
“செருப்பால அடிப்பேன்” எனச் சொல்லும் ஒரு வித்தியாசமான பெண்.
“கல்கி நீ ஒரு கணித மேதை” என்று கூறினால் போதும். ஐஸ்கீரீமாய் உருகிவிடுவாள்.
கல்கி கணிதத்தைக் காதலிப்பதால் வேறு எவரையும் காதலிக்கவில்லை. அவளுக்குப் பெற்றோர் ஏற்ற வரன் தேடிக் கொண்டிருந்தனர்.
“கல்கி உனக்கு ரெண்டு மூணு வரன் வந்திருக்கு .. நீ யாரையாவது லவ் பன்றியா? இல்ல நாங்க பார்க்கவா?” அம்மா லலிதா கேட்க
“நான் யாரையும் லவ் செய்யலை அம்மா.. நீங்க யாரை சொன்னாலும்.. அவர் தான் என் லைப் பார்ட்னர்” எனச் சொன்னதும் அம்மா மனம் குளிர்ந்து போனவராக அவளை அணைத்து “என் தங்கம்” என உச்சி முகர்ந்தார்.
“ஆனா ஒரு கண்டிஷன் அம்மா .. கல்யாணத்துக்கு முன்ன நீங்கப் பார்த்த பையனை நாலு பார்முலா கேட்பேன். சரியா சொன்னாதான் கல்யாணம்” எனக் கல்கி குண்டுவீச
அம்மா “அடியேய்”என ஷாக்காகிவிட்டார்.
அம்மாவின் ரியாக்ஷனைப் பார்த்து பெரியதாக நகைத்துக் கண்ணடித்தவள் “கமான் மா ஜஸ்ட் கிட்டிங்” என கூலாக நகர்ந்தாள்.
கல்கி நம் கதையின் நாயகி. அவள் அம்மா லலிதா அப்பா சங்கரன் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தொடங்கியலெதர் எக்ஸ்போர்ட் பிசினசை நடத்துகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல எனப் பல தருணங்களில் நிரூபித்துள்ளனர். அண்ணன் சாகர் எம்.பி.ஏ. முடித்து பெற்றோருடன் பிசினசில் ஐக்கியமாகிவிட்டான்.
கல்கிமிகப் பெரிய தனியார்ப் பள்ளியில் ஒன்பது, பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டு வகுப்புகளுக்குக் கணித ஆசிரியையாக வேலைப் புரிகிறாள்.
அவள் குடும்பத்தில் யாருக்கும் இந்த வேலையில் பிடித்தம் இல்லை. இருப்பினும் அவள் ஆசைக்கு யாரும் குறுக்கே நிற்கவில்லை.
கல்கி சிறுவயதில் இருந்தே அதிகம் கஷ்டமில்லாத வாழ்க்கையைப் பார்த்தவள். மேல் தட்டு வர்க்கம். நன்கு படித்தாள். வேலைக்குச் செல்லும் அவசியம் இல்லை. எனினும் அவளின் கணித காதல் அவளை விடுவதாக இல்லை.
கல்கி பள்ளியில் கணித ஆசிரியையாகச் சேர்ந்தாள் காரணம் கற்பதைக் காட்டிலும் கற்பிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது.
குழந்தைகள் கணிதம் என்றால் தெரித்து ஓடும். ஆனால் கல்கி மிகவும் எளிதான முறையில் கற்றுத் தந்தாள். புரியும் படியாகவும் இருந்தது. விரைவில் குழந்தைகள் மனதில் இடம் பெற்றாள். அக்குழந்தைகளுக்குக் கணிதம் மிகவும் பிடித்தமானதாகிவிட்டது.
சிறு வயதிலிருந்தே அவளுக்குக் கணிதம் என்றால் உயிர்.அல்ஜிப்ரா, டிரிக்னாமன்டரி, கேல்குலஸ் போன்ற கணக்குகளை எல்லாம் சர்வ சாதாரணமாக அவளால் முடிக்க முடிந்தது.
வகுப்பில் கணக்குகளை விரைவாக முடித்து ஆசிரியர் முன் கெத்தாக நிமிர்ந்து அமர்ந்த பொழுதெல்லாம் பொன்னால் பொரிக்கப்பட வேண்டிய தருணங்கள் என நினைப்பாள்.
அனைத்து ஆசிரியர் பாராட்டையும் பெற்றாள். வகுப்பில் பல மாணவர்கள் பொறாமையால் அவளை சுட்டெரிப்தை கண்டும் காணாததைப் போல இருப்பாள். உள்ளூரமகிழ்ச்சியின்பிரவாகம் கரையைத் தாண்ட துடிக்கும் . அவளுள் கர்வம் இல்லாமல் இல்லை.
அன்றுகாலைவெளியேவானம் இரண்டாகக் கிழிந்து மொத்த நீரையும் பூமியில் கொட்டியது போல அப்படி ஒரு பேய் மழை.
தலையிலிருந்த ஹேர்கிலிப்பை எடுத்து கூந்தலுக்கு விடுதலை தந்தபடியே தன் செல்போனில் வாட்சப் மெசேஜை வாசித்தாள் இரண்டு இன்ச் புன்னகையுடன்.
தொலைக்காட்சியில் பள்ளி விடுமுறை என அறிவிப்பு முக்கிய செய்தியாக உருண்டது.
கல்கி தன் பள்ளிக்கு போன் செய்து விடுமுறையை உறுதிப்படுத்திக் கொண்டாள்.
குடும்பத்தில் அனைவரும் காலை உணவு உண்ண மேஜையில் அமர
“நான் மெதுவா சாப்பிடறேன் மா. இன்னிக்கு ஸ்கூல் லீவ்ல ” என கல்கி கூற
” நானும் ஸ்கூல்ல வாத்தியா வேலைக்குப் போயிருக்கலாம்?” தன் தங்கையைக் காலையிலேயே வம்பிழுத்தான் கல்கியின் அண்ணன் சாகர்.
அப்பா அவன் சொல்வதைப் புரிந்து புன்னகை செய்ய .. “உனக்கு டீச்சிங் அத்தனை சுலபமா போச்சா?” கல்கி தன் பணியின் தீவிரத்தைப் புரிந்தவளாகக் கேட்க
“பின்ன வெயில் கொளுத்தினா லீவு மழை அடிச்சா லீவு. காத்து வீசினா ஸ்கூல் லீவ். நாளைக்கு மழை வந்தால் வரலாம்னு சொன்னா போதும் அதுக்கும் லீவ். யூ பீப்பிள் ஆர் வெரி லக்கி. ஆனா நாங்க அப்படி இருக்க முடியுமா? இப்ப எப்படி இருந்தாலும் மழைல ஓடனும்” மனக் குமுறலைக் கொட்டினான்.
“தட்ஸ் யூர் பிராப்ளம் அனுபவி. எனிவே கார்ல தானே போற ? அண்ட் எல்லாரும் மேத்ஸ் டீச்சர் ஆகிட முடியாது” எனக் கர்வத்துடன் தோளைக் குலுக்கினாள்.
“ஹலோ, மேத் உனக்குத் தனியா வரல .. நம்ம கொள்ளு தாத்தா கிரேட் மேதமேடிஷியன். நீயும் அதே டி.என்.ஏ தானே அதான் உனக்கும் மேத்ஸ் வருது” என்றான் சாகர் கிண்டலான தொனியில்.
“ரியலி?” என ஆச்சரியத்துடன் கல்கி தன் அப்பாவைப் பார்த்தாள்.
“ஆமா கல்கி என் தாத்தாக்கு மேத்ஸ் நல்லா வரும். ஹீ இஸ் எ ஜீனியஸ் ” என அப்பா பெருமையாகக் கூற
”இதை ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல?” குறைபட்டுக் கொண்டாள்.
“நீ கேட்கவே இல்ல” என அப்பா சாப்பிட்டு முடித்துக் கைகழுவ எழுந்து சென்றுவிட்டார்.
“தாத்தாவோட மேத் கேல்குலேஷன் நோட்ஸ் மாடி ரூம்ல இருக்கு” சாகர் கொசுறு செய்தியை உதிர்த்துச் சென்றான்.
சாகரை முறைத்த அப்பா “கல்கி நீ அங்க போயி அதை எடுக்க வேண்டாம். குப்பையா இருக்கும். அங்க ஒரு பச்ச கலர் டைரி இருக்கும். அதை தொடதே” இதை அவர் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்.
அப்பொழுதே கல்கி அதை எடுக்க முடிவு செய்துவிட்டாள். பெற்றோருடன் சாகர் கிளம்பிவிட வேலை செய்யும் பெண் மட்டுமே இருந்தாள்.
அவள் தன் வேலையை கவனிக்கச் சென்று விட்டாள். கல்கி தனியே தன் அறையில் உலாவிக் கொண்டிருந்தாள்.
மாடி அறைக்குச் செல்ல துடிக்கும் தன் மனதைச் சமாதானம் செய்தபடி தொலைக்காட்சியைச் சத்தமாக வைத்தாள்.
சரியாக இருபது நிமிடங்களுக்குப் பிறகு அவள் தந்தை போன் செய்தார்.“என்ன அப்பா இருங்க டீவி மியூட் பண்றேன்” என சொன்னதும்தான் தந்தை மனம் சமாதானம் ஆனது. ஆனாலும் முழுதாய் மகளை நம்பவில்லை. தன்னைப் பற்றி தந்தை என்ன நினைப்பார் என கல்கியும் உணர்ந்திருந்தாள்.
போன் பேசிமுடித்ததும்அவசரமாக மாடிக்குச் சென்றாள்எத்தனை முறை இங்கு வந்திருப்போம் ..ச்ச மிஸ் பண்ணிட்டனே எனத் தன்னையே அங்கலாய்த்தபடி அறை முழுவதும் தேடினாள்.
பரணையில் ஒரு தகரப் பெட்டி இருந்தது. ஏணியை வைத்து மேலே ஏறினாள். சந்தரயாண் ஏவுகணை போலத் தூசி அவள் மூக்கை அடைய தஸ்புஸ் என பத்து தும்மலுடன் மூக்கை உறிஞ்சியபடி பெட்டியைத் திறந்து சில தாள்களையும் டைரியையும் தன் வசப்படுத்தினாள். வேறு எதுவும் அதில் இல்லை.
தன் அறைக்கு வந்தவள் அந்த தாள்களை ஒவ்வொன்றாகப் பார்த்தாள். பழுப்பு நிறத்தில் எந்த நொடியும் கிழிந்துவிடும் நிலையிலிருந்தன. சிலது கிழிந்து தொங்கியது.
எல்லாமே கணிதம் தொடர்புடையது. மிக எளிய நடையிலிருந்தன. முத்து முத்தான கையெழுத்து.
அதையெல்லாம் பார்த்தவள் விசிலடித்தபடி “ கொள்ளு தாத்தா யூ ஆர் கிரேட்” என வாய்விட்டு மெச்சினாள்.
அந்த பச்சை கலர் டைரியை எடுத்தாள். பச்சை வண்ணம் முழுவதுமாய் சாயம் இழந்து ஏதோ புதிய நிறத்திற்கு மாறியிருந்தது.
நிதானமாகத் திறந்தாள். உரை உதிர்ந்தது. உள்ளே முதல் பக்கத்தில் ஒரு மனிதரின் உருவம் பென்சிலால் வரையப்பட்டிருந்தது. அது கொள்ளு தாத்தாவாக இருக்கக் கூடும் என நினைத்தாள்.
அந்த டைரியின் பக்கங்கள் எண்களால் குவிந்திருந்தன. காலத்தால் அழியாதது கணிதம் என எழுதிக் குறிப்பிட்ட சில எண்கள் ஒன்றன்பின் ஒன்றாக இருந்தது. கல்கிக்கு அது எதுவும் புரியவில்லை.
பிறகு சில வரிகள் “இறைவன் எப்படி தூணிலும் துரும்பிலும் உள்ளானோ அப்படிதான் கணிதமும் அனைத்திலும் வியாபித்துள்ளது. கணிதத்தைத் தவிர்க்கவே இயலாது”.
நாம கணிதத்தை விட்டாலும் அது நம்மை விடாது. எண்களைக் கொண்டுதான் நாம அனைத்தையும் அளவிடுகிறோம்.
மும்மூர்த்திகள், நான்குவேதங்கள், பஞ்சபூதங்கள், அறுசுவை, சப்த ரிஷிகள், அஷ்டதிக்குகள், நவகிரகங்கள் என அனைத்திற்கும் எண்களைப் பிரதானமாகக் கொண்டுதான் அளவிடுகிறோம்.
சாதாரண மளிகை சாமானின் முதல் காய்கனிகள் என அனைத்தும் படி, வீசம் என்பன போன்ற அளவுகளைக் கொண்டு கணக்கிடப்பட்டன.
அந்த வரிகளை உள்வாங்கியபடி கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கண்மூடினாள். ஏதோ சொல்ல முடியாத உணர்வு உள்ளத்தில் ஊஞ்சலாடியது.
கண்களை மெதுவாகத் திறந்தாள் கல்கி. மூச்சை நன்றாக உள்ளிழுத்து நிதானமாக வெளியிட்டாள். இரண்டு மூன்று முறை இப்படி செய்த பின் மனம் சற்று அமைதி அடைந்ததை போல உணர்ந்தாள்.
கையில் இன்னமும் அந்த பழைய டைரி நொடிக்கு நொடி பாரமாகி தன் இருப்பை காட்டியது போல தோன்றியது. அவளுக்கு பாரம் கையில் இல்லை மனதில் என புரியாமல் இல்லை. இந்த டைரியில் ஏதோ ஒரு செய்தி மறைந்திருப்பதாய் உணர்ந்தாள்.
விக்கிரமாதித்தியனின் வேதாளம் போல அவளை விடாது தொடர்ப் போகிறதுஎன்பதை அவள் அறியாள். அதைப் பார்க்க இன்று இயற்கையே வழி செய்தது.
ஆனால் ஒரு நாள் தான் கணிதம் பக்கம் செல்லாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றஉள்ளது. அதனால் தான் இந்தனை பிரச்சனையோ? என நொடிக்கு நொடி எண்ணி வருந்தப் போகிறாள் என்பதைக் காலம் அவளுக்கு விரைவில் உணர்த்தும்.
கணிக்கும் …