காலக் கணிதம் 10
வினோத்தின் கோரமான சிரிப்பு இன்னமும் கல்கியின் செவியில் ரீங்காரமிட்டது. கல்கி மெல்ல மயக்க நிலையிலிருந்து விழிக்கத் துவங்கினாள். கண்களைத் திறக்க இயலவில்லை இமை மூடிய நிலையிலும் கருவிழிகள் இங்கும் அங்குமாய் சிப்பிக்குள் முத்தாய் உழன்றது.
வினோத் தன் கழுத்து சங்கிலியை அறுத்தது ... அதில் உள்ள சிறிய கேமராவை உடைத்தது ... கல்கி கால்கள் தள்ளாடி. விழாமல் இருக்கச் சுவரை பிடித்துக் கொண்டது.
“குட்ஜாப் அகல்யா” என வினோத் கண்ணடித்தான்.
தன்நிலைக்குக் காரணம் தான் அருந்திய தேநீர் எனப் புரியத் தொடங்கிய நொடி கல்கி சரிந்தாள். இவை பிசுபிசுத்த நினைவுகளாய் மீண்டன.
“கல்கி …. கல்கி” என கீச்சுக் குரல் கேட்டது.
கல்கி மெல்லக் கண் விழித்தாள். தான் எங்கு இருக்கிறோம் எனப் புரியவில்லை. சுற்றிலும் மரங்கள் சில்லென்ற காற்று அருகில் சலசலக்கும் நீரோடை என அந்த இடமே புத்தம் புதிதாய் இருந்தது. மனித அரவமற்று காணப்பட்டது.
“ குட் ஈவினிங் கல்கி” என மீண்டும் அதே கீச்சு குரல்.
சட்டென எழுந்து அமர்ந்தாள் தலை சுற்றியது.
“நிதானம் கல்கி அவசரப்படாத” என்றது அக்குரல்.
குரலைக் கேட்டு ”யாரது?” கல்கி சுற்றும் முற்றும் கண்களைச் சுழலவிட்டுத் தேடினாள்.
பதில் இல்லை.
எழுந்து நிற்க முயன்றாள் கால்கள் தள்ளாடியது.
“கல்கி ஜாக்கிரதை” குரல் கேட்க
எச்சரிக்கை அடைந்தவளாய் “யாரது? முன்னாடி வந்து பேசுங்க” என்றாள். அவளுள் அச்சம் துளிர்விட்டது.
அவள் முன்னே வினோத் வீட்டில் சுற்றித் திரிந்த நாய்க் குட்டி போல ஒன்று வந்து நின்றது.
அதை முறைத்தவள் “யாரது முன்னாடி வாங்கனு சொன்னேன்ல” நாலாபுறமும் பார்த்தபடி அதட்டலான குரலில் சொன்னதும்
“நான்தான் உன்னோட பேசினது” என நாய்க் குட்டியிடமிருந்து சத்தம் வந்தது.
துணுக்குற்றவளாய் அதைப் பார்த்தாள்.
“என் பேர் ரதி நான் ஒரு ரோபோ. ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் மூலமா நான் இயங்குறேன்” என நாய்க் குட்டி பேச
அதிர்ச்சிக்கும் அப்பாற்பட்டவளாய் ஸ்மத்பித்தாள்.
“இங்க உனக்கு நிறைய வேலை இருக்கு கல்கி. உன்னை கெயிட் பண்ணத்தான் என்னை அனுப்பியிருக்காங்க” இடைவிடாமல் பேசியது.
செயலற்று நின்றாள் கல்கி. ஆனால் அவள் மூளை மட்டும் “இது எந்த இடம்? என்ன வேலை? இது எதற்குத் தன்னை கெயிட் செய்ய வேண்டும்?” என ஆயிரம் கேள்விகளை அடுக்கியது.
“கல்கி அதிர்ச்சி ஆகாதா .. உன் பீபி 140க்கு மேல போகுது. அது நல்லதுக்கு இல்ல”
இதற்கு மேல முடியாது என நினைத்தவளாய் அந்த நாய்க் குட்டியைக் கையில் எடுத்துப் பார்த்தாள். மிக உன்னிப்பாகப் பார்த்தால் மட்டுமே அது ரோபோ எனத் தெரிந்தது. அத்தனை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அவளையும் மீறி “வாவ்” எனப் பாராட்டினாள்
“வினோத்னா சும்மாவா?“ என அது சொன்ன அடுத்த நொடி
கோபத்துடன் அதை மரத்தின் மேல் வீசி எறிந்தாள். கீழே விழுந்து குட்டி கரணம் போட்டு எழுந்தது.
“எனக்கு எதுவும் ஆகாது பேபி” எனக் கூறி சிரித்தது. பின்பு வள்ளென குறைத்து “உன்னுடைய பாஸ் நான் … இனிமே இப்படி பிஹேவ் பண்ணாத …” எனக் காட்டமாகக் கீச்சியது.
இதைக் கேட்டதும் கல்கி சிரித்துவிட்டாள் “நீ என்னோட பாஸா?”
“ஆமா” என்றது வால் ஆட்டியபடி.
“வினோத் பயங்கர அறிவாளி. ஆனா அந்த அறிவை நேர்மையான வழியில் செலுத்தலாம் இல்லையா?” கல்கி கேட்டாள்.
“இதுக்கான பதில் என்னோட புரோக்கிராம்ல இல்ல” என்றது
“அது சரி” என்றாள்.
“உன்னோட உடன்பிறப்பு சாகருக்கு என்னைப் பத்தி தெரியில … வினோத் வீட்டு நாய்க்குட்டி பெல்ட்டுல கேமரா செட் பண்ணினான் … நான் ஜேம்மர்னால (jammer) அதைச் செயலிழக்க செய்திட்டேன்”
இதைக் கேட்டதும் விக்கி, சாகர் மற்றும் சவிதா நிலை என்ன ஆனதோ என்ற ஆதங்கத்துடன் “சரி நான் கிளம்பறேன்” என்றதும்
அந்த நாய்க் குட்டி ரோபோவிடமிருந்து கெக்கே பிக்கே எனச் சிரிப்பு சத்தம் வந்தது.
“இதுக்கு மேல சிரிச்சே அந்த மரத்துல கட்டி வெச்சிடுவேன்” என மிரட்டியதும்
கீ கொடுக்காமல் டப்பென சத்தம் அடங்கியது.
“நீ எங்க இருக்க கல்கி?” நக்கலாகக் கேட்டது.
“அது ...” எனச் சுற்றும் முற்றும் பார்த்தவள் “ என்னை எங்க கடத்தியிருக்கீங்க தெரியலையே … வினோத்கிட்ட அடியாட்கள் இல்லையா உன்னை மாதிரி பொம்மையை வெச்சிருக்கான்?”
“அடியாட்களுக்கு சம்பளம் சாப்பாடுனு நிறைய செலவு…. ஆனா மிஷின்கிட்ட பிரச்சனையே இல்லையே ”
“ அவனுக்கு நீ சரியான ஜால்ராதான். இது எந்த இடம்” கல்கி கேட்க .
“நீ இருக்கிறது ஒரு கிராமம். இது 1944வது வருஷம்” என்றது.
“வாட் டு யூ மீன்?” குழப்பமாக
”ஐ மீன் வாட் ஐ சே” ஸ்டைலாக அமெரிக்கன் ஸ்லேங்கில் பதிலளித்தது.
சட்டென தன் கையை பார்த்தாள் வினோத் காட்டிய காலப் பயண பிரேஸ்லெட் இல்லை.
அவள் மனதைப் புரிந்து “கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச டைம் மிஷினை பஸ்ட் டே பஸ்ட் ஷோபோட்டு வினோத் காட்டுவானா என்ன?. இன்னுமா உனக்கு வினோத் பற்றிச் சரியா புரியலை?”
ரதி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இடியாய் இறங்கியது. ஏற்கவும் இயலாமல் தவிர்க்கவும் முடியாமல் தவித்தாள்.
”கல்கி பயப்படாத நான் இருக்கேன். அந்த மரத்துக்கு பின்னால ஒரு முதுகுப்பை (bagpack) இருக்கு அதை எடு” என்றது.
கல்கி வேறுவழியின்றி சொன்னதைச் செய்தாள்.
“அதுல உனக்கு தேவையான எல்லாம் இருக்கு” என்றது.
கல்கி பையின் உள்ளே சோதித்தாள். அதில் அவளுக்குத் தேவையான ஆடைகள் சேனிடரி நேப்கின் மற்றும் துரிதமாகச் சமைத்தும் உண்ணும் வகைகளான மேகி ரெடிமேட் சப்பாத்தி, ரெடிமேட் உப்புமா போன்றவை இருந்தன. இன்னும் நிறையவே இருந்தன. அத்தனையும்ப் பார்க்கும் மனநிலையில் கல்கி இல்லை.
“நாம எத்தனை டைம் டிராவல் கதை சினிமா பார்த்திருப்போம். அந்த சினிமா இல்ல கதைல உணவு உடைக்கு பிரச்சனை வரும். ஆனா இங்க பாரு உனக்கு தேவையான எல்லாம் இருக்கு. உன் மேல வினோத்க்கு எத்தனை கருணை பாத்தியா?”
“பேக்ல டேப் (tab) இருக்கும் எடுத்து ஆன் செய்”
அப்படியே செய்தாள். அதில் ஒரே ஒரு வீடியோ மட்டும்தான் இருந்தது. அந்த வீடியோவில் விக்கி சாகர் மற்றும் சவிதா மூவரும் வினோத்திடம் சண்டையிடும் காட்சிகள் பதிவாயிருந்தன.
மனம் சோர்ந்தவளாய் கல்கி செயலற்று அமர்ந்துவிட்டாள். கண்ணீர் கன்னத்தில் உருண்டது.
தான் வினோத்திடம் தோற்றுவிட்டோம் என்னும் எண்ணமே அவளைப் பலவீனப்படுத்தியது. விரக்தியின் உச்சத்திற்குத் தள்ளப்பட்டாள்.
“இங்கிருந்து எப்படிச் செல்வது? எங்குச் செல்வது?” என சிந்திக்கக் கூட இயலவில்லை.
அந்த இடமும் அவள் மனம் போல் இருள்சூழத் தொடங்கியது.
“கல்கி இங்கிருந்து கிளம்பவேண்டும் … இது பாதுகாப்பான இடம் இல்லை கிளம்பு” ரதி அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது.
ஆனால் கல்கியிடம் எந்த அசைவும் இல்லை. நேரம் ஆக ஆக அவ்விடம் அச்சத்தை ஊட்டுவதாக இருந்தது.
அங்கிருந்து சிறிது தொலைவில் கல் மண்டபம் ஒன்று தென்பட்டது. கல்கி இனி என்ன ஆனாலும் சரி எனக் கல் மண்டபத்தில் அமர்ந்துவிட்டாள். பையிலிருந்த டார்ச் லைட் ஒன்றே அவளுக்கு துணையானது.
இரவு வெகு நேரம் ஆகிவிட்டது பசி வயிற்றைக் கிள்ளியது. மடிந்தே போனாலும் பரவாயில்லை என்றிருந்தாள்.
ரதி “சாப்பிடு உறங்கு அருகில் உள்ள கிராமத்திற்குச் செல்லலாம்” எனத் திரும்பத் திரும்ப கூறியது. இவை அனைத்தும் வினோத்தின் கட்டளைகள் எனப் புரியாமல் இல்லை.
எங்கு காணினும் இருள். கண்கள் இருளுக்கு சற்றே பழகிபோனது. விசித்திர சப்தங்கள். இரவின் கோரமான முகம் அச்சுறுத்தியது. கண்ணை மூடி மண்டபத்தில் சாய்ந்து கொண்டாள்.
சரக் சரக்கென மடிந்த சரகுகள் மேல் யாரோ நடக்கும் சப்தம் துல்லியமாய் கேட்டது. பிறகு சட்டென நின்றுவிட்டது.
திடுக்கிட்டவளாய் டார்ச் லைட்டை ஆன் செய்து பார்த்தாள். சிறிய வட்டவொளி ராட்ச இருளை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.
அருகில் ரதி பல பாகங்களாக பிரிந்து உயிரற்றதாக கிடந்தது. கரிய உருவம் அசைவது தெரிந்தது.
உடல் முழுக்க அச்சம் மின்சாரமாய் பாய ஓட துவங்கிய நொடி “கல்கி” என்னும் குரலால் சிலையானாள்.
குரலைக் கொண்டு யாரென தெரிந்தவளுக்கு வார்த்தை வரவில்லை. அவன் அவள் அருகில் வர அவனை சடாரென அணைத்து “விக்கி” என அழத் தொடங்கினாள்.
அவள் செயலால் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளான விக்கி திக்குமுக்காடிப் போனான்.
அவனுள் தஞ்சம் அடைந்தாள். விவரிக்க இயலா உணர்வு அவளை ஆட்டிப் படைத்தது. ஆனாலும் சில மணி நேரங்களாக ஏற்பட்ட அதிர்வின் தாக்கம் குறைந்தபாடில்லை. மனக் குமுறல் அழுகையாக வெடித்தது.
விக்கி மனதார தன் அண்ணி அகல்யாவிற்கு நன்றியுரைதான். அவளின் உதவியை என்றும் மறக்க இயலாது.
ஆனால் அகல்யா தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் கணவன் மற்றும் தந்தை கண்ணில் படாமல் தலைமறைவாக வாழ ஓடிக் கொண்டிருந்தாள்.
கணிக்கும் …