• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காலக் கணிதம் 11

kkp24

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
69
22
8
Tamil nadu
காலக் கணிதம் 11

விக்கியின் வரவு புயல் காற்று வீசிய கல்கி மனதிற்கு இதத்தை அளித்தது. விக்கியை அணைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்த கல்கி தன்னிலை உணர்ந்தவளாய் சட்டென விலகினாள்.

“சாரி” என கம்மிய குரலில் சொன்னவள் அவன் கண்களை நேருக்கு நேர் காணத் தயங்கியபடி இருக்க

அவள் நிலைப் புரிந்தவனாக “இட்ஸ் ஓகே …. ரொம்ப பயந்துட்டயா?” அக்கறையுடன் கேட்டான். அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

இல்லையெனத் தலையசைக்க நினைத்தவள் சிறுபிள்ளை போலத் துளிர்த்த கண்ணீரைத் துடைத்து மூக்கை உறிஞ்சி தயக்கத்துடன் ஆமென தலையசைத்தாள்.

“கவலைப்படாத உனக்காகத் தான் நான் வந்தேன்” எனச் சொல்ல வந்தவன். அவள் தவறாக எண்ணிவிடக் கூடாதென “ உன்னை அழைச்சிட்டு போகத்தான் நான் வந்தேன்” என்றான்.

“இது 1944ஆம் இந்த பொம்மை சொல்லிச்சி?” நம்ப முடியாமல் வினவினாள்.

“ஆமாம்”

“இப்பவே கிளம்பிடலாம் விக்கி” படபடப்பாகக் கேட்டாள். அச்சமும் குழப்பமும் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அந்த இடத்திலிருந்து அகன்றால் போதுமென நினைத்தாள்.

“அது இப்ப முடியாது கல்கி”

“ஏன்?”

“அது” என தயங்கியவன் “டைம் மிஷின் சார்ஜ் ஆகணும்” என்றான்

“புரியல” குழப்பமாக

அவன் கையை காட்டினான். விக்கி காண்பித்த அதே பிரேஸ்லட். ஆனால் நீலக் கல் மிளிரவில்லை.

“இதை ஒரு தடவை பயன்படுத்தின சார்ஜ் போயிடும். திரும்ப அது சார்ஜ் ஆனாதான் நாம பயன்படுத்த முடியும்” என்றான்.

“எப்படி சார்ஜ் செய்யணும்? எனக்கு இது இல்லையே?” பல கேள்விகள் விழ

“இதோ உனக்கானது” என நாய்க் குட்டி வயிற்றுப் பகுதியிலிருந்து எடுத்துக் காண்பித்தான்.

“அகல்யா அண்ணி அவங்க அப்பாகிட்ட இருந்த டைம் மிஷன் மூலமா என்னை அனுப்பி வைச்சாங்க”

“ஐயோ ரெண்டு டைம் மிஷனா?” அதிர்ந்தாள்

“இப்படி நிறைய டைம் மிஷன் செய்து இயற்கைக்கு மாறான உலகத்தை நிறுவ போறதுதான் வினோத் பிளான்”

“ அப்ப நிறைய மிஷின் இருக்கா?”

“இல்ல இரண்டுதான்”

“சரி சார்ஜர் எங்க?” அவள் கேட்க

“சூரியன்தான் சார்ஜ் செய்யணும். சோலார் சார்ஜர்”

“அட கடவுளே” எனத் தலையில் கைவைத்து கொண்டாள். இருப்பினும் இத்தனை நேரம் இருந்த மன இறுக்கம் முழுவதுமாக களைந்து முகத்தில் நிம்மதி படர்ந்தது.

“இந்த நாய் மூலமா உன்னோட ஒவ்வொரு அசைவையும் வினோத் கவனிச்சிருக்கான்” என்றதும்

அவனைத் திகிலுடன் பார்த்தாள்.

“இப்ப பிரச்சனை இல்ல அதை டிஸ்மேன்டில் பண்ணிட்டேன். இனிமே அவனால உன்னை டிரேஸ் பண்ண முடியாது” என்றவன் கல்கியின் பிரேஸ்லட்டை அவள் கையில் கட்டிவிட்டான்.

ஆசுவாசமானாள்

இருவரும் கல் மண்டபத்தில் அமர்ந்தனர். ஓய்வாகக் கால் நீட்டி அமர்ந்தாள். இரவை ரசித்தபடி

“சாகரும் சவிதாவும் வீட்டுல என்ன சொல்லி சமாளிக்கறாங்க?” கவலையான தொனியில் வினவினாள்.

“நானும் நீயும் லவ் பண்ணி ஊரைவிட்டு ஓடி வந்துட்டோம்னு சொல்ல சொல்லியிருக்கேன்” என சாதாரணமாகச் சொல்ல

“வாட்? என்ன செஞ்சி வெச்சிருக்க? அம்மாவும் அப்பாவும் என்னை மோசமா நினைக்கமாட்டாங்களா? உனக்கு அறிவே இல்ல விக்கி” கோபத்தில் பொரிந்து தள்ள

அவனுக்கும் சுற்றெனக் கோபம் எகிறியது “இப்படி சொல்லாம இருந்தா நம்ம பேரண்ட்ஸ் போலீஸ் கம்பிளைண்ட் குடுப்பாங்க. போலிசும் ஒரு டெட்பாடி கிடைச்சிருக்கு. உங்க பொண்ணா? பையனா? ஐடெண்டிபை பண்ணுங்கனா? அவங்க நிலைமை யோசி …. நாம திரும்பப் போனதும் எங்க போனீங்கனு போலீஸ் கேட்டா? 1944க்கு போயிட்டு வந்தோம்னு சொல்ல முடியுமா?”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மெளனமாகவே இருந்தாள்.

“இல்ல … ஆனா” என என்ன சொல்வதெனத் தெரியாமல் முழித்தவளிடம்

“என்ன நடந்ததோ அது நம்ம வீட்டுக்கு மட்டும் தெரிஞ்சா போதும். உலகத்துக்கே பிரேக்கிங் நியூஸ் ஆக வேண்டாம்” அவன் திடமாகச் சொன்னான்.

சொன்னது சொன்னாயிற்று இனி எதையும் மாற்ற முடியாது எனக் கஷ்டப்பட்டு மனதை அமைதியாக்கிக் கொண்டாள்.

“ஆனா வீட்டுக்குப் போனதும் லவ் இல்லைனு சொல்லிடனும்”

வந்த சிரிப்பை அடக்கி “சரி” என்றான்.

“இது எந்த இடம்?” அவள் கேட்க

“கல்கி எனக்குத் தூக்கம் வருது காலைல பேசிக்கலாம் … நீயும் படு” என்க கொட்டாவி விட்டான்.
“ உன் கூட ஒரு பை வந்திருக்கணுமே அது எங்க?” கேட்டவனிடம்

அவள் பேசாமல் கைக் காட்டினாள்.

பையிலிருந்து சாப்பிட அவளுக்கு பிஸ்கட்டை கொடுத்தான்.

“எனக்கு பசிக்கல்ல” என்றாள்.

“இதெல்லாமே அண்ணி உனக்காக பாத்து பாத்து எடுத்து வைத்தது. சாப்பிடு. உனக்காக அவங்க எத்தனை போராடினாங்க தெரியுமா? ஆனா வினோத் கொஞ்சமும் கேட்கலை.”

அவன் சொன்னதுதான் தாமதம் லபக்கென்று பிஸ்கட் பேக்ட்டை பிடுங்கிச் சாப்பிடத் துவங்கினாள். அதற்குள் அவன் சின்ன கொசுவலை குச்சி போன்றதை எடுத்து விரிக்க அது டெண்ட் ஆனது. தரை விரிப்பு காற்று தலையணை எனத் தயாரானது.

விலங்குகள் வராமல் இருக்கச் சற்று தள்ளிக் காய்ந்த சரகுகளைக் கொண்டு தீ மூட்டினான்.

“ உள்ள போய் படு” என்றவன் தரையில் படுத்து தன் கையை தலையணையாக்கிக் கொண்டான்.

அவளுக்கு மனம் கேட்கவில்லை. பையில் தேடி சில துப்பட்டாக்களைத் தரையில் வரித்துக் கொடுத்தாள்.

முற்றலும் புதிய சூழல். அடுத்து என்ன நடக்குமோ என்னும் அச்சம். வீடு திரும்ப முடியுமா என பல விடையில்லா வினாக்களுடன் இருவருக்கும் இரவு கடந்தது.

இருவருமே அதிகாலையில் தான் கண்ணயர்ந்தனர்.

“ஆஆஆ” என்னும் கல்கியின் அலறல் கேட்டு விக்கி எழுந்தான். பார்த்தவனுக்கு அதிர்ச்சியானது.

அந்த கல் மண்டபம் அருகில் மாடுகளாக இருந்தன. அதில் ஒரு கன்றுக் குட்டி கல்கி படுத்திருந்த டெண்ட் உள்ளே சென்று அவள் முகத்தோடு தன்முகத்தைப் பாசமாய் உரசியது. அதன் விளைவுதான் இந்த அலறல்.

இவள் அலறலைக் கண்டு அது பயந்து ஓடிவிட்டது. கல்கி திகிலுடன் வெளி வந்தாள்.

“நத்திங் டு வொரி” விக்கி

“யார் நீங்க?” மாடு மேய்ப்பவன் இருவரையும் அதிசயமாகப் பார்த்தபடி கேட்டான். அவர்கள் உடை டெண்ட் பை என அத்தனையும் பார்த்தான்.

“நாங்க பத்திரிக்கை காரங்க” என்றான் விக்கி

“எந்த ஊர்?”

“வடக்கு”

“யாரை பார்க்கணும்?”

“ ஊர் தலைவரை பாக்கணும் …”என்றான்

“ எங்க ஊர் கோயில் பத்தி பத்தரிக்கையில எழுதவா?”என அவன் ரகசியத்தை கண்டுபிடித்ததைப் போல வினவ

இருவரும் ஆமாம் என ஒரே சமயத்தில் மண்டையைப் பலமாக ஆட்டினர்.

விக்கி அருகிலிருந்த நீரோடை அருகில் இதே டெண்டை போட அது கல்கியின் பாத்ரூம் ஆனது. அவன் அவளுக்காக அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்தான்.

இருவரும் ஒரு சில நிமிடங்களில் தங்கள் உடைமைகளுடன் தயாராயினர்.

மாட்டுக்காரன் ஊர் தலைவரை காண இருவரையும் அழைத்துச் சென்றான். போகையில் விக்கி அங்கு என்ன சொல்ல வேண்டும் என்பதை ஆங்கிலத்தில் சுருக்கமாக கூறிவிட்டான்.

அவளுக்கு இஷ்டமில்லை இருப்பினும் வேறு வழியில்லை.

சுதந்திரத்திற்கு முந்திய இந்தியா. குதிரையில், சாரட் வண்டியில் என ஆங்காங்கே ஆங்கிலேயர்கள் தென்பட்டனர். ஆங்கிலேயரை கண்டால் பணிவுடன் ஒதுங்கி வழிவிட வேண்டும். அவர்களுக்கே எல்லாவற்றிலும் முதல் உரிமை.

இரண்டு பக்கமும் அழகான திண்ணைகளுடன் வீடுகள். முன்னே சாண நீர் தெளிக்கப்பட்டு பெரிய கோலங்கள் போடப்பட்டிருந்தன.

வீட்டின் முகப்பில் வெள்ளை சிகப்பு நிறங்களில் வண்ணம் கோடுகளாகப் பூசியிருந்தன.

“ஐயா .. ஐயா” என மாடு மேய்த்தவன் பெரிய வீட்டின் முன்பு போய் நின்றான்.

“யார்?” என ஒரு பெண் குரல் மட்டும் கேட்டது.

“யம்மா மாடசாமி வந்திருக்கிறேன். நம்ம ஊருக்குப் பத்திரிக்கை காரங்க வந்திருக்காங்க” எனக் காது கிழியுமளவு சத்தமாகக் கூவினான்.

வீட்டினுளிருந்த இருபது வயது மதிக்கத்தக்க வாலிபன் வந்தான்.

மாடசாமி தான் கண்டதை ரீப்பீட்டினான் பின்பு தன் வேலை முடிந்ததென சென்றுவிட்டான்.

“உள்ள வாங்க” என அழைத்துச் சென்றான் வாலிபன்.

அழகான வீடு. வீட்டின் நடுவே பெரிய முற்றம் அதில் துளசிச் செடி. முற்றத்தின் மேலே இரும்பு கம்பிகளால் மூடப்பட்டு இருந்தது. முற்றத்தில் காற்று, சூரிய கதிர் மற்றும் மழை நீர் தடையின்றி உள்ளே பிரவேசிக்கும். மழை நீர் தேங்காமல் வெளியே செல்ல வாட்டமாக அமைந்திருந்தது. அங்கே நின்று ஆகாயத்தின் அழகையும் ரசிக்கலாம். நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் எனப் பஞ்ச பூத சக்திகளும் நேரடியாக வீட்டினுள் நுழையும் இடமாக முற்றம் அமைந்திருந்தது. அதுவே வீட்டின் பிரம்ம ஸ்தானம் என்று அழைக்கப்படும் இடம்.

முற்றத்தைச் சுற்றி நடைபாதையில் இரண்டு பக்கமும் முறையே அறைகள் இருந்தன.

அடுத்த இரண்டாம் கட்டு (வீட்டின் அடுத்த பகுதி) தொடங்கியது. இடது பக்கத்தில் சமையலறையும் அதையொட்டி உணவுப் பொருட்கள் மற்றும் தானியங்கள் சேமித்து வைக்கும் அறையும் இருந்தது. அதன் முன்னே அனைவரும் சேர்ந்து அமர்ந்து உணவு உண்ண விசாலமான அறை.

“வணக்கம் … உட்காருங்க” என ஐம்பது வயது மத்க்கதக்க மனிதர் பெரிய மீசையுடன் மிடுக்கான வெள்ளை வேட்டி மேல் சட்டையுடன் வந்தார் ஊர்த்தலைவர். நெற்றியில் விபூதி பட்டை நடுவே குங்குமப் பொட்டு என கம்பீரமாக காட்சியளித்தார்.

“வணக்கம் நாங்க வடக்குல இருந்து வந்திருக்கோம். இந்த ஊரைப் பத்தி எங்க பத்திரிக்கைல எழுதலாம்னு. பத்து நாள்வரை இருப்போம்” என நிதானமாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான் விக்கி.

“ரொம்பச் சந்தோசம் தம்பி. நீங்கத் தாராளமா இங்கேயே தங்கி இருக்கலாம். நான் எல்லா ஏற்பாடும் செஞ்சி தாரேன்” என்றார்.

அதற்குள் அவர் மனைவி குடிக்கக் கருப்பாக எதோ திரவத்தைக் கொடுத்தார். அது கடுங்காப்பி எனப் புரிந்தது.

கல்கி வேண்டாம் என நாசூக்காகப் புன்னகையுடன் மறுத்தாள். அவர் மிகவும் பலவந்தம் படுத்த வேறு வழியில்லாமல் ஒரு வாய் கொஞ்சமாகக் குடிக்க முயன்றாள். அதன் ஒரு வகையான வாசம் குமட்ட விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவதிப்பட்டாள்.

“பிடிக்கலனா இங்க துப்பிடுமா” என அவர் மனைவி இடத்தைக் காட்டினார். அங்கே சென்று அவள் துப்பவும்

“ஏன் தம்பி பொஞ்சாதி மாசமா இருக்கா?” என அவர் விக்கியை கேட்கவும்.

விக்கி கல்கி இருவருக்கும் புரையேறியது.



கணிக்கும் ….