• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காலக் கணிதம் 12

MK20

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
90
29
18
Tamil nadu
காலக் கணிதம் 12

விக்கி கண்கள் மகிழ்ச்சியில் விரிவடைந்தது. அதற்கான காரணம் முற்றத்தில் கல்கி நின்றிருந்தாள், அவள் கையில் சூரிய ஒளி பட்டு பிரேஸ்லட்டின் நீலக் கல் மிகவும் சன்னமாக லோ வோல்டேஜ் மோட்டில் மிளிர்ந்தது. இதைக் கல்கியும் கண்டு பரவசமானாள். அவளுக்கு அந்த இடத்திலிருந்து கிளம்பினால் போதும் என்றிருந்தது.

விக்கி அவளின் பிரேஸ்லட்டை பரிசோதிக்கலாம் என எழுந்தான். அப்போது யாரோ ஒருவன் படபடப்புடன் அங்கே வந்து “தலைவரே நெக்ஸ் துரை இங்க வந்திட்டு இருக்கார்” என்றான்.

அதைக் கேட்ட அந்த நொடி அவ்விடத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. ஊர்த் தலைவர் தன் மனைவியைப் பார்த்தார். பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டு பெண்மணி தலையசைத்தார்.

கல்கியின் கரத்தைப் பிடித்து அவசரமாக அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார். கேள்வி கேட்க வந்த கல்கியைப் பேசாதே எனச் செய்கை செய்தார்.

ஊர் தலைவர் விக்கியிடம் “தம்பி சீமதுரை வராரு .. அவர்கிட்ட பார்த்து பக்குவமா பேசுங்க” என்றார். அவர் முகத்தில் வியர்வை துளிகள் மின்னின. ஊர்த் தலைவரின் இரண்டொரு ஆட்கள் மட்டுமே அங்கு இருந்தனர்.

குதிரை வண்டி நிற்கும் சத்தம் கேட்டதும் ஊர்த் தலைவர் பரபரவென வாசலுக்குச் சென்று அந்த ஆங்கிலேயனை வரவேற்றார்.

“வாங்கத் துரை” எனப் பணிவாக வரவேற்றார். நெக்ஸ் மமதையை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தவன் போல வண்டியிலிருந்து இறங்கினான்.

பூனை கண்கள் மின்ன அதில் திமிரும் குடிக் கொண்டிருந்தது. அனைவரையும் ஏளனமாகப் பார்த்தபடி வீட்டுக்குள் வந்தான். அவனுடன் அவன் மனைவி ஹெலன் மற்றும் பத்து வயது மகன் டைலர் வந்திருந்தனர்.

ஊர்த் தலைவரின் ஆட்கள், அவர்கள் அமர நாற்காலிகளைப் போட்டனர். அங்கு அம்மூவர் மட்டுமே அமர வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.

நெக்ஸ் பிரிட்டன் நாட்டு ராணுவ உடையில் கம்பீரமாகத் திகழ்ந்தான். அவன் மனைவி லாரா இளம் ரோஜா நிற கொளன் அணிந்திருந்தாள். தலையில் நெட் அமைப்பு கொண்ட ஹேட் அணிந்திருந்தாள். ஹீல்ஸ் காலணி என மிக நேர்த்தியாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். மகன் டைலர் தந்தையைப் போலவே ஆடை அணிந்திருந்தான்.

“யார் இவன்?” என விக்கியை பார்த்து ஆங்கிலத்தில் நெக்ஸ் சந்தேகமாகக் கேட்டான். அவன் அருகிலிருந்தவன் மொழி பெயர்த்தான்.

அவனின் மனைவி மற்றும் மகன் கூட விக்கியை பார்வையால் ஆராய்ந்தனர்.

“என் பெயர் விக்கி. நான் டிரீம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைல வேலை செய்கிறேன்” என விக்கி ஆங்கிலத்தில் பதிலளித்தான்.

“டிரீம்ஸ் ஆப் இந்தியா” என ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக சொன்ன நெக்ஸ் “இந்தியர்களுக்கு கனவு காணும் உரிமை உண்டா டார்லிங்?” என தன் மனைவி லாராவை கேட்டான்.

அவள் பதிலுக்கு எகதாளமாய் புன்னகைத்தாள்.

“நிச்சயமாய் எங்கள் கனவு நினைவாகும்” அதே அழுத்தத்துடன் விக்கி பதிலளித்தான்.

இந்த பதிலைக் கேட்டு நெக்ஸ் குடும்பத்தினர் புருவம் உயர்ந்தன.ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழி தெரியாதவர்கள் எதற்கும் பயனற்றவர். ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டுமே அறிவாளிகள் என்னும் எண்ணத்தை இந்தியர்கள் மனதில் ஆழமாக விதைத்திருந்தனர். இதனால் ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களை மட்டம் தட்டி வந்தார்கள்.

அப்படியிருக்க விக்கி சரளமாக ஆங்கிலம் பேசியது அத்துடன் அவனின் பதிலும் நெக்ஸ் மற்றும் அவன் உடன் வந்தவர்களுக்கு எரிச்சலை மூட்டியது.

அடுத்து நெக்ஸ் மற்றும் விக்கி ஆங்கிலத்தில் உரையாடினர்.

“ உன் ஆங்கிலம் வித்தியாசமாக இருக்கு” என நெக்ஸ் சொல்ல

இதற்கு என்ன பதில் சொல்லுவது “எங்க வாட்ஸ்அப் இங்லீஷை நீ பார்க்கலையே மவனே” என நினைத்தவன் “அப்படியா?” என நெக்சையே கேட்டுவிட்டான்.

கல்கியின் பை(bagpack) அருகிலிருந்தது. அதில் பையின் பிராண்ட்நேம் ஆங்கில வார்த்தைகளில் எழுதியிருந்தது.

”நீ எந்த ஊர்?” நெக்ஸ் பையைப் பார்த்தபடி கேட்க

“வடக்கில் ஜான்சி பகுதி” என்றான். அந்த தருணத்தில் இந்தியாவின் தற்பொழுதைய மாநிலங்கள் அமைக்கப் பெறவில்லை.

பதில் திருப்திகரமாய் இல்லை.

கதவின் இடுக்கிலிருந்து பார்த்த கல்கி “பயப்புள்ள நல்லாவே சமாளிக்கிறான்” என நினைத்தாள்.

கோபம் திசைமாறி “இவன் வந்ததைப் பற்றி எனக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை” என நெக்ஸ் ஊர் தலைவரைக் குற்றம் சாட்டினான். கேள்வி மொழிபெயர்க்கப்பட்டது. அதைக் கேட்ட ஊர்த் தலைவர் வௌவௌத்துப் போனார்.

“நாங்க இங்க வந்து சில நிமிடங்கள் தான் ஆகுது” என விக்கி அவரை காப்பாற்றினான். ஊர்த் தலைவருக்கு விக்கிச் சொன்னது புரியவில்லை திருதிருவென முழித்தபடி இருந்தார்.

“நாங்களா? அப்போது உன்னைத் தவிர இன்னொரு நபர் இருக்கிறாரா?” நெக்ஸ் கேட்க

“ஆமா என்னுடன் இன்னொருவர் வந்திருக்கிறார்” என்ற விக்கி மூடிய அறையை நோக்கி “கல்கி இங்க வா” என அழைத்தான்.

இதை புரிந்து கொண்ட ஊர்த் தலைவர் “துரை அவர்களுக்கு உடம்பு சுகமில்ல … உறங்கறாங்க” என அவசரமாகச் சொல்ல

விக்கி “ஏன் இவர் இப்படிக் கூறுகிறார்?” என அவரை வினோதமாகப் பார்த்தான்.

“நான் இப்போதே பார்க்கவேண்டும்” ஆணையாக நெக்ஸ் வார்த்தைகள்.

அறையைவிட்டு வந்து “ஹாய் ஐ'ம் கல்கி” என கல்கி கையை நீட்டினாள். நெக்ஸ் அவளை விழிகளால் விழிங்கிவிடுபவன் போல அவள் கைகளைப் பற்றி குலுக்கினான்.

விக்கி மற்றும் கல்கிக்கு இது சாதாரண நிகழ்வாகத் தோன்றியது. ஆனால் ஊர்த் தலைவர் மற்றும் அவர் ஆட்களுக்குத் தான் தெரியும். இந்த பெண் எத்தனை பெரிய சிக்கலில் சிக்கப் போகிறாள் என்று. அது 1944 என்பதை அவள் மனம் இன்னும் முழுதாய் ஏற்கவில்லை.

ஆங்கில சீமாட்டிகள் மற்றும் எலிசபத் ராணி கையை பரிவுடன் பற்றும் நெக்ஸ் கைகள் கல்கி கையை அவ்வாறு பற்றவில்லை. கல்கி மெல்ல தன் கைகளை விடுவித்துக் கொண்டாள்.

“இவர்கள் என் விருந்தாளிகள். இவர்கள் இருவரையும் என் விருந்தினர் மாளிகையில் சகல வசதிகளுடன் தங்க ஏற்பாடு செய். எந்த குறையும் இருக்கக் கூடாது” என நெக்ஸ் தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டான். சிரம் தாழ்த்தி ஆணைணை ஏற்றான் சேவகன்.

“கண்டிப்பாக என் கணவர் விக்கியுடன் வருகிறேன்” என கல்கி புன்னகையுடன் பதிலளித்தாள். இந்த வார்த்தைகள் விக்கிக்கு தேனாய் இனித்தது. தன்னை இயல்பாகக் காட்டிக் கொள்ளப் பெரும்பாடுபட்டான். காரணம் இல்லாமல் இத்தகைய வார்த்தைகளை உதிர்க்க மாட்டாள் என்றும் புரிந்தது.

ஊர்த் தலைவருக்கு நெக்சின் உடல்மொழியே அனைத்தையும் புரியவைத்துவிட்டது. அந்த பெண்ணின் தலை எழுத்தை யார் மாற்ற முடியும்? என வேதனையுடன் சிலையாக நின்றார். கல்கிக்காக மனம் பதைபதைத்தது. ஆனால் ஏதும் செய்ய முடியாமல் தன்னையே நொந்துக் கொண்டார்.

நெக்ஸ் பல பெண்களின் மானத்தை சூறையாடி பின் எச்சில் இலையை வீசுவது போல வீசுவது யாருக்குத்தான் அந்த ஊரில் தெரியாது. பலியிடப்படும் ஆட்டிற்கு அலங்காரம் செய்வது போலப் பெண்களை அழைத்து செல்வான் பிறகு அப்பெண்களுக்கு நரகத்தைக் காட்டுவான். சில பெண்கள் இவன் செயலை அறிந்து எங்காவது தப்பித்து ஓடிவிடுவர்.

இவன் ஆட்களிடம் சிக்கினால் சொல்ல முடியாத வேதனையை அனுபவிப்பார்கள். எத்தனையோ பெண்கள் மானத்திற்காக தன் இன்னுயிரைத் துறந்துள்ளனர்.

இவற்றை எப்படி விக்கி மற்றும் கல்கிக்குப் புரிய வைப்பது எனத் தெரியாமல் தவித்தார் பாவம். அவரின் மனைவி கூட கல்கியை அறையை விட்டுச் செல்ல வேண்டாம் என அப்போதே தடுத்தார். ஆனால் அவள் கேட்கவில்லையே.

நெக்ஸ் குடும்பம் கிளம்பிச் சென்றது. திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல வந்து சென்றுவிட்டனர். செல்கையில் நெக்ஸ் பார்வை கல்கியை வருடிச் சென்றது.

நெக்சின் ஆட்களில் ஒருவன் விக்கி மற்றும் கல்கியிடம் கிளம்புங்கள் என்றான்.

“கிளம்ப பத்து நிமிஷம் ஆகும். வெளியில் காத்திரு” என விக்கிச் சொல்ல அவன் முறைத்தான்.

மேலும் “நாங்க நெக்சின் விருந்தாளி கைதியில்ல” என விக்கிச் சொன்னதும். அவன் கேலி புன்னகை உதிர்த்து அகன்றான்.

ஊர்த் தலைவர் கவலையுடன் “தம்பி அவன் ரொம்ப மோசமானவன்” என அவர்களுக்கு மட்டுமே கேட்கும் வகையில் கூறினார்.

“ஐயா எங்களுக்கு நல்லாவே புரியுது … நாங்க பார்த்து நடந்துப்போம் கவலைபடாதீங்க” விக்கி சொன்னான்.

கல்கி “நாங்க வரும் போது தெருல ஒரு பெண்கூட இல்ல. அப்பவே ஏதோ சரியில்லைனு புரிஞ்சது” என்றாள்.

பின் இருவரும் கிளம்பினர். சாரட் வண்டி அவர்களுக்காகக் காத்திருந்தது. “வாவ்” என குஷியில் குதித்தாள் கல்கி. விக்கி போனில் செல்பீ எடுத்து தள்ளினாள்.

நெக்சின் அடியாளுடனும் செல்பீ எடுத்துக் கொண்டாள். “அவர்கள் என்ன இது? எப்படி? இதன் பெயர் என்ன? ” என வாயைப் பிளந்து பல கேள்விகளைக் கேட்டனர்.

“இந்த உலகத்திலேயே டைம் டிராவல் பண்ண லக்கேஜ் எடுத்துட்டு வந்தது நாமாத்தான் இருக்க முடியும்” எனப் பெரிதாகச் சிரித்தாள். இவள் செய்த அலப்பறையில் அத்தனை வீட்டிலிருந்தும் எட்டிப் பார்த்தனர். விக்கியும் அவளுடன் இணைந்து சிரித்துப் பேசினான்.

ஒருவழியாக சாரட் வண்டியில் விருந்தினர் மாளிகையை அடைந்தனர். உள்ளே செல்கையில் நெக்சின் மகன் டைலர் ஒருவரைக் காலால் எட்டி உதைத்து கீழே தள்ளினான்.

அவர் தான் கல்கியின் கொள்ளு தாத்தா என அடையாளம் காண இருவருக்கும் அதிக நேரம் ஆகவில்லை. டைரியின் முதல் பக்கத்தில் வரைந்திருந்த அதே முகம்.
அவரை நெக்ஸ் மகன் டைலர் வசைபாடிக் கொண்டிருந்தான்.



கணிக்கும் ….

























 
  • Wow
Reactions: savi3