காலக் கணிதம் 2
கல்கி கொள்ளு தாத்தாவின் டைரி மற்றும் தாள்களையும் தன் அறையில் மறைத்து வைத்திருந்தாள். அவ்வப்பொழுது யாரும் அறியாமல் அவற்றை ஆராய்வாள். இப்படியே சில நாட்கள் சென்றன.
அவள் அப்பாவிற்கு மட்டும் சந்தேகம் இருந்தது. இரண்டொரு முறை அவள் அறைக்குள் வந்து “லேப்டாப் சார்ஜர் கொடு கல்கி” ”என் போன்ல என்ன பிரச்சனை பார்” என போனை கொடுத்துவிட்டு, அவள் போனை ஆராய்கையில் அவர் அறையைக் கண்களால் துழாவினார். இதெல்லாம் கல்கிக்குப் புரியாமல் இல்லை.
ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்புகையில் அவள் ஸ்கூடியோடு கீழே விழுந்து லேசான அடி. வீட்டில் சொல்லவில்லை. அந்த டைரியினால் தான் இப்படி நடக்கின்றதா என மனதில் லேசான சஞ்சலம் ஏற்பட்டது.
ஆனால் இதை முழுவதுமாக ஏற்கவும் இயலவில்லை. இதற்கு முன்பும் ஒருமுறை விபத்து நடந்துள்ளது. அப்போது டைரி இருந்ததா என்ன?
குழப்பத்திலிருந்தவள் அந்த டைரியை இறுதியாக ஒருமுறை பார்த்தாள். பின்பு யாரும் அறியாமல் மாடி அறையில் மீண்டும் வைத்துவிட்டாள்.
எப்பொழுதும் அவள் கணிதத்தோடு விளையாடுவாள். ஆனால் அன்று கணிதம் அவளுடன் விளையாடிய முதல் நாள்.
அவள் அண்ணன் சாகர் காதலுக்கு ஒருமுறை தூது சென்றாள்.
காலையில் “கல்கி இன்னிக்கு ஷாப்பிங் போறேன் உனக்கு எதாவது வேணுமா?” என்றபடி சாகர் அவள் அறைக்கு வந்தான்.
அவள் அறை பக்கம் அதிகம் வராதவன் இன்று வரவே “எலக்சன் டைம்ல வர்ற அரசியல்வாதி மாதிரி சுத்தற … சரியில்லையே?” என்றாள் அவனைக் கேலியாக மேலும் கீழுமாகப் பார்த்து
“சரி சரி ஓவரா ஓட்டாத .. எனக்கு ஒரு ஹெல்ப்” எனக் கெஞ்சலாக அவன் கேட்க
நான் நினைத்தது சரிதான் என்பதைப் போல அவள் முகபாவம் மாறியது. பாண்டுரங்கனைப் போல கைகளை இடுப்பில் வைத்தபடி என்ன? என்பதாய் புருவத்தை உயர்த்தினாள்.
“ நான் சவிதானு ஒரு பொன்னை லவ் பண்றேன்” என்றான் நெளிந்து வளைந்து. முதல் முறையாக தன் அண்ணனை இப்படி ஒரு வெட்க மோட்டில் பார்த்ததில் அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அதோடு ஆச்சரியம் அதிர்ச்சி இல்லாமல் இல்லை.
“அதுக்கு?” எனச் சிரிப்பை அடக்கியபடி
“இந்த லவ் லெட்டரை அவகிட்ட கொடுத்திடேன்”
தலையில் அடித்துக் கொண்டு “ஏன்டா டெக்னாலஜில நாம எங்கேயோ இருக்கோம். பேஸ்புக் டிவிட்டர்னு நீ இன்னும் லெட்டர் கொடுத்திட்டு இருக்கையே?”
“இதெல்லா எனக்குத் தெரியாதா? அவ போனை அவளுடைய அண்ணன் பிடுங்கி வெச்சிட்டான்” என்றான் கோபமும் சோகமும் கலந்த முகத்தோடு
“அப்ப அவங்க வீட்ல எல்லாருக்கும் தெரியுமா?”
“எல்லாருக்கும் இல்ல அவ அண்ணனுக்கு மட்டும்”
“சோ அவன்தான் வில்லனா?”
“ஆமா”
“நான் என்ன செய்யணும்”
“இந்த லெட்டரை கொடு” என மடித்த காகிதத்தை நீட்டினான்.
வாங்கியபடி “நான் என்ன போஸ்ட்மேனா?” வேண்டுமென்றேதான் ஏனெனில் இப்படியான பொன்னான தருணங்கள் எப்பொழுதும் அமைவதில்லையே
“உனக்கு என்ன வேணுமோ வாங்கி தரேன் ப்ளீஸ்” எனப் பாவமாகக் கெஞ்ச அவள் மனம் உருகியது.
“எங்க இருப்பாங்க?”
“இன்னிக்கு உங்க ஸ்கூல் போகும் இன்டர் ஸ்கூல் மேத் காம்படிஷன் வென்யூ பக்கத்துல ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்க இருப்பா.” என்றான்.
அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவளுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினான்.
கல்கி அதைப் பார்த்துவிட்டு “ரொம்ப அழகா இருக்கா. நமக்கும் அழகுக்கும் சம்பந்தம் இல்லை” என நினைத்துக் கொண்டாள்.
கல்கி ஐந்தடி. பருமனான உடல். அவள் உடல் எடையைக் குறைக்க எத்தனை முயன்றும் முடியவில்லை.
வாணி மெட்டிரிக்குலேஷன் என்னும் பெயர் கொட்டை எழுத்துகளில் அந்த மஞ்சள் வேனில் எழுதியிருந்தது. கல்கி, பள்ளியின் துணை ஆசிரியர் மற்றும் தம் பள்ளியில் போட்டிக்காகத் தேர்ந்து எடுக்கப்பட்ட பத்து மாணவர்களுடன் இன்டர் ஸ்கூல் மேத் காம்படிஷன் நடக்கும் இடத்திற்கு வேன் சென்றது. அது ஒரு பெரிய மைதானம் அங்கே இந்த நிகழ்ச்சி நடக்கவிருந்தது.
வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் அந்த போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். கல்கியின் பள்ளி மாணவர்கள் அமர குறிப்பிட்ட ஓரிடம் கொடுக்கப்பட்டது.
போட்டித் தொடங்க இன்னும் ஒருமணி நேரம் இருந்தது. சாகர் குறிப்பிட்ட ரெஸ்டாரண்ட் அருகில்தான் இருந்தது. அங்கே சென்றாள்.
கல்கி உணவகத்தினுள் செல்லும் போதே ஒருவன் அவள் மேல் மோதினான். அவனை முறைத்துவிட்டு உள்ளே சென்றாள். அவன் மன்னிப்பு கூட கேட்கவில்லை என்பதில் கோபம் வந்தது. ஆனால் இது சண்டை போடத் தக்க தருணம் அல்ல என விட்டுவிட்டாள்.
அந்த உணவகத்தில் அதிகம் கூட்டம் இல்லை. ஐந்து நட்சத்திர உணவகம்.
சாகர் குறிப்பிட்ட பெண் இருந்தாள். முகம் முழுவதும் சஞ்சலத்துடன் பரிதாபமாக காட்சியளித்தாள். ஒரு டேபிளில் அமர்ந்திருக்க அவள் அருகில் ஒரு இளைஞன் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் சவிதா அருகிலிருந்தவனை ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை மௌனமாக இருந்தாள். கை விரல்கள் சேர்ப்பதும் விடுவிப்பதுமாக அவள் படபடப்பை அடக்க முயல்வது நன்றாகவே தெரிந்தது.
பக்கத்து டேபிளில் கல்கி அமர்ந்தாள். அவன் பேசிய வார்த்தை காதில் விழவில்லை “கொஞ்சம் சத்தமா பேசினால்தான் என்னவாம்” என மனதில் அவனைத் திட்டி குறைபட்டாள்.
ஐந்து நிமிடத்தில் அவன் சொற்பொழிவை நிறுத்தி எழுந்து கிளம்புகையில் அவன் பேசிய சில வார்த்தைகள் காதில் விழுந்தது. அது பெண் பார்க்கும் படலம் எனவும் புரிந்தது. அவன் சென்றுவிட்டான்.
உடனே அப்பெண்ணிடம் சென்று “சவிதா?” என அழைத்து
“சாகர் உங்ககிட்ட கொடுக்க சொன்னான்” எனக் கடிதத்தைக் கொடுத்தாள்.
படக்கென அதை ஒருவன் பறித்தான். சாட்சாத் உள்ளே வரும்போது இடித்தவன்தான்.
சுமாரான உயரம், மூக்குக் கண்ணாடி, கம்பளிப் பூச்சி மீசை, படிந்த தலைமுடி என ஏனோ சட்டென அவன் உருவம் ஹிட்லரை நினைவு படுத்தியது.
சவிதா சக்தியில்லாமல் “அண்ணா” என அச்சத்துடன் அழைத்தாள்
அவன் அவளிடமிருந்து பிடுங்கிய காகிதத்தைப் படித்தான்.
வெகுண்டவனாக “என்ன இது?” எனக் காட்டமாக கல்கியிடம் வினவியபடி அதை அவளிடமும் காட்டினான்.
உதட்டை சுழித்து தெரியாது என்றவளாய் காகிதத்தை அப்போதுதான் பார்ப்பதைப் போல வாங்கி கண்களை ஓடவிட்டாள்.
“அரிசி10கிலோ, வெல்லம் 1கி, புளி1கி” எனப் படித்தவள் “உங்க வீட்டு மளிகை சாமான் லிஸ்ட் போல இருக்கு” என்றாள் ஒன்றுமே தெரியாதது போல
“இவங்க பக்கத்தில் கீழ இருந்தது. அதான் எடுத்துக் கொடுத்தேன்” என முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டாள்.
அவன் பக்கம் கல்கி முழுவதுமாக திரும்பி நின்றாள். அவன் அந்த தாளை வாங்கி பார்க்கையிலேயே சாகர் கொடுத்த கடிதத்தை அவனறியாமல் இடக்கையில் சவிதாவிடம் கொடுத்துவிட்டாள். சட்டெனச் சவிதா அதை வாங்கி மறைத்தாள்.
அவனை ஏமாற்றியதில் இருபெண்களுக்கும் சந்தோஷம் ஆனால் அதை வெளிக்காட்ட இயலவில்லை.
“அடேய் இதையெல்லாம் கணக்கு பண்ணாமயா நான் வந்திருப்பேன்?” என அவள் மைண்ட் வாய்ஸ் கூற
“சாகர்தானே உன்னை அனுப்பினான்?” என ஏளனமாக அவன் கேட்க ..“உனக்கு நான் சளைத்தவனில்லை” என்றது அவன் மைண்ட் வாய்ஸ் மெளனம் காத்தாள் கல்கி மனதில் வேறொரு புதிய கணக்கு தோன்றியது.
“எனிவேஸ் நான் சவிதாவோட அண்ணா. என் பேர் விக்கி. சவிதாக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுச்சி. இனி சாகர் இவ பக்கம் தலை வெச்சி படுக்கக் கூடாது. சொல்லி வை” என பல்லைக் கடித்தபடி கோப தொனியில் சொன்னான்.
“டேய் ஹிட்லர் இப்ப பாருடி” என மனதில் நினைத்த கல்கி
“நான் சாகருடைய தங்கை கல்கி. இங்க உன் தங்கையை மீட் பண்ணத்தான் வந்தேன்” என்றாள்
ஏதோ மிகப் பெரிய குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட்ட தோரணையில் எகத்தாளமாக அவன் அவளைப் பார்த்தான்.
“சாகர்க்கு தெரியாமல் வந்திருக்கேன். காரணம் எங்க ஸ்டேடஸ்க்கு உன் தங்கச் சரிவரமாட்டா. சாகருடைய அழகென்ன படிப்பென்ன அந்தஸ்து என்ன? … இதுல எதாவது ஒண்ணாவது உன் தங்கையால் ஈடுச் செய்ய முடியுமா? அதனால இந்த காதல் கல்யாணம் நடக்க கூடாது அதை சொல்லத்தான் இங்க வந்தேன்”
“இப்ப பேசிட்டு போனானே ஒட்டடை குச்சி அவன்தான் உன் சவிதாவுக்குச் சரியான ஜோடி” என சொல்லி சற்று பெரியதாகவே நகைத்தாள் கல்கி.
அவன் முகம் ருத்திரமானது. அதுதானே கல்கிக்கு வேண்டும். மனதில் வெற்றி பெற்ற நிறைவுடன்.
சவிதாவிடம் திரும்பி “இனிமே சாகரை மீட் பண்ணாத சவிதா. அது உனக்கு நல்லதில்ல” எனக் காட்டமாக சொல்வதைப் போல நடித்துவிட்டுக் கண்ணடித்து முகபாவனையில் மன்னிப்பு கோரினாள். விக்கியை திரும்பி முறைத்துவிட்டு அப்படியே அவன் கோபத்தை ரசித்தபடி விடுவிடுவென வெளியேறினாள் கல்கி.
“கொஞ்சம் ஓவராதான் பேசிட்டோமோ?. பாவம் சவிதா. சாரி சவி” என மனதில் மன்னிப்பு கோரினாள்.
தான் பேசிய வார்த்தைகள் மட்டும் சாகருக்குத் தெரிந்தால் அவ்வளவுதான் எனப் புலம்பியபடி போட்டி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.
அடுத்த மூன்று மணி நேரம் கணிதத்தோடு ஐக்கியமானதில் உலகையே மறந்தாள். அந்த போட்டியில் கல்கியின் மாணவர்கள் வென்றனர். அவளின் மாணவர்கள் “எல்லா புகழும் எம் ஆசிரியருக்கே (கல்கி)” என அவளைப் புகழ ரக்கை இல்லாமல் பறந்தாள்.
அவளோ “என் மாணவர்களின் கடும் உழைப்பே காரணம்” என தன் மாணவர்களை மனதார பாராட்டினாள்.
போட்டி முடிந்து வெற்றி களிப்புடன் கல்கி தன் குழுவுடன் வேனில் மீண்டும் தங்கள் பள்ளிக்குக் கிளம்பினார்கள். அப்போது ஓரிடத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பத்து நிமிடத்திற்கும் மேல் ஒரே இடத்தில் வேன் நின்றிருந்தது. அனைவருக்கும் கல்கி உட்படச் சலிப்பு ஏற்பட்டது.
“என்னவா இருக்கும்?” கல்கி முணுமுணுக்க
“எதாவது அரசியல்வாதி நாளைக்கு இந்த வழியில் போக போறாங்க போல அதான் இப்பவே நிறுத்திட்டாங்க” உடன் வந்த ஆசிரியை கேலியாய் சிரிக்க கல்கியும் சிரித்துவிட்டாள்.
வேன் டிரைவர் “என்ன பிரச்சனைனு பார்த்துட்டு வரேன் மேடம்” என்றபடி வண்டியிலிருந்து இறங்கிக் கூட்ட நெரிசலில் மிதந்து சென்றான்.
மாணவர்கள் பொறுமையிழந்தனர். எத்தனை நேரம் இப்படிக் காத்திருப்பது என கல்கியும் டிரைவர் சென்ற திக்கில் சென்றாள்.
கோர விபத்து நடந்திருந்தது. தண்ணீர் லாரியின் கீழே நசுங்கிய நிலையில் ஒரு பைக் காணப்பட்டது. சற்று தள்ளி இரண்டு இளைஞர்கள் சடலம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதைக் கண்ட கல்கி அதிர்ந்துவிட்டாள். இதயம் வாய்வழியே வெளியே வந்துவிடாத குறையாக தடதடவென துடித்தது.
டிரைவர் கல்கியைக் கண்டுவிட்டான் “மேடம் நீங்க போங்க இதை பார்க்காதீங்க. ஏம்புலன்ஸ் வந்திட்டு இருக்கு இப்ப கிளியர் பண்ணிடுவாங்க” என்றான்.
அதை காணும் சக்தியற்றவளாய் திரும்பினாள். அப்போது தான் நசுங்கிய பைக் நம்பர் அவள் கண்ணில் பட்டது 9556.
கொ. தாத்தா டைரியில் காலத்தை வெல்லும் கணிதம் என எழுதி இதே எண்களை ஒரு வட்டத்தினுள் குறிப்பிட்டிருந்தார்.
உள்ளத்தில் மின்னலாய் அக்குறிப்பிட்ட எண்கள் தோன்றி மறைந்தன. கல்கியின் ரத்தம் உறைந்தது.
கணிக்கும் …