காலக் கணிதம் 3
விக்கிரமாதித்தியனின் வேதாளம் போல மீண்டும் டைரியின் ஆதிக்கம் தொடங்கியது.
இதே எண்கள் தானே டைரியில் பிரத்தியேகமாகக் குறிப்பிட்டிருந்தது என என்னுகையில் கல்கியின் மனம் அச்சத்தில் துவண்டது.
“மேடம் நீங்க வேனுக்கு போயிடுங்க” என டிரைவர் அக்கறையுடன் கேட்டுக் கொண்டான்.
அவன் பேசுவது அவள் காதை எட்டவில்லை. சடலங்களைப் பார்த்தாள். அவர்களை அடையாளம் தெரியவில்லை.
“மேடம் .. மேடம் நீங்க வேன்ல போயி உட்காருங்க” என மீண்டும் உரைத்த டிரைவர் கல்கியை பாதுகாப்பாக வேனில் ஏற்றினான். யாரையும் வெளியே இறங்கி வர வேண்டாம் எனவும் சொல்லி வைத்தான்.
அன்று பள்ளி முழுவதுமே கல்கியை மற்றும் அவள் மாணவர்கள் பெற்ற வெற்றி இரண்டையும் கொண்டாடி மகிழ்ந்தது. ஆனால் கல்கியால் அதில் முழு மனதுடன் ஒன்ற முடியவில்லை.
ஏன் அந்த குறிப்பிட்ட எண் டைரியில் இருந்தது ? எனத் தன்னையே மீண்டும் மீண்டும் பல்லாயிரம் முறை கேட்டுவிட்டாள். ஆனால் பதில் தான் கிட்டியபாடில்லை.
வீட்டிற்கு வந்ததும் அதையே சிந்தித்தவள் மற்றவர்களிடம் சகஜமாகப் பேச முடியாமல் திணறினாள்.
அவள் வரவுக்காக காத்திருந்த சாகரிடம் மட்டும் தான் கண்டு பேசியதை ஒரு வார்த்தை அச்சு பிசகாமல் அப்படியே கூறினாள்.
அவளிருந்த குழப்பத்தில் அவன் முக மாற்றத்தைக் கவனிக்கத் தவறினாள்.
அன்று இரவே மீண்டும் டைரியைக் கொண்டு வந்து எண்ணை சரிபார்த்தாள். அதே எண்கள்தான் சந்தேகமே இல்லை. அதற்குக் கீழே பத்து வெவ்வேறு எண்கள் எழுதி இருந்தது.
அடுத்து இத்தனை விபத்து தன் கண் முன் நடக்க உள்ளதா? என நினைக்கக் கூட அஞ்சியது மனம்.
பள்ளியில் இறுதி ஆண்டு தேர்வு நெருங்கிக் கொண்டுள்ளதை அவள் உணராமல் இல்லை. தன் பிரச்சனையால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என எண்ணினாள். இந்த பிரச்சனையைச் சற்றே தள்ளி வைத்தாள். தன் முழுகவனத்தையும் மாணவர்கள் பக்கம் திருப்பினாள். விடாது அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க துவங்கினாள்.
அடுத்த நாட்களில் அந்த அதிர்ச்சியின் தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்தது. அந்த நினைவுகளும் மனதின் ஆழத்திற்குச் சென்றுவிட்டது.
கடந்த சில நாட்களாகவே சாகர் தன்னிடம் பேசுவதில்லை என்பது நன்குத் தெரிந்தது. அவன் கோபம் நியாயமானது எனவும் விட்டுவிட்டாள்.
சாகர் நேரிடையாக “நீ எப்படி சவிதாவை அப்படி பேசலாம்?” என கோபித்துக் கொண்டான்.
“ஐயோ சாகர். அந்த ஹிட்லரை வெறுப்பேத்த தான் அப்படிப் பேசினேன். வெரிசாரி”
“ஹிட்லரா?”
“சவிதாவோட அண்ணன் மங்கி”
“விக்கி” சாகர் திருத்தினான்.
“ஏதோ ஒண்ணு அவன் ஈகோவ தூண்டத்தான் அப்படிப் பேசினேன்” தன் வாதத்தை விடாமல் தொடர்ந்தாள்.
“அதுக்கெல்லாம் மசிகிற ஆளா விக்கி?” கசப்பாக சாகர் வார்த்தைகளை உமிழ்ந்தான்.
“நாம சவிதா பேரண்ட்ஸ் கிட்ட நேரா பொண்ணு கேட்டிடலாம்” அரிய கண்டுபிடிப்பாக அவள் கூற
“ சவிக்குக் கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சி” சொல்லும்போதே அவன் கண்களில் லேசாக கண்ணீர் கார்பிரேஷன் குழாயின் விளிம்பில் நிற்பது போல எட்டிப் பார்த்தது.
“உனக்கு எப்படி தெரியும்?”
“சவி பிரெண்டு மூலமா” என்றான்.
கல்கிக்கு தன் சகோதரனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. எப்படியும் அவனின் காதலியுடன் அவனை சேர்த்து வைப்பது என்ற முடிவுக்கு வந்தாள்.
“கல்யாணம் எப்ப?”
“இன்னும் மூணு மாசத்துல …”
“நமக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு” உற்சாகமாகக் கூறினாள்.
“அடுத்த வாரம் நிச்சயம் பண்றாங்க” அவசரமாகச் சென்று வந்தவன் கையில் ஒரு அழைப்பிதழை அவளிடம் காட்டினான். சவி நண்பி மூலம் பெற்றது.
“நான் நிச்சயத்திற்கு போறேன்… ஆனா சத்தியமா கல்யாணம் நடக்க விட மாட்டேன்” என மனதில் உறுதி பூண்டாள். சாகரிடம் எதுவும் கூறவில்லை.
நிச்சயதார்த்த மண்டபமே மிகப் பெரியதாக இருந்தது. தன் ஸ்கூட்டியை மண்டபத்திற்கு முன்னால் நிறுத்தினாள். ஆர்ப்பாட்டமும் ஆடம்பரமும் சற்று அதிகமாகத்தான் காணப்பட்டது.
அத்தனை நபர்கள் இருப்பார்கள் என கல்கி எதிர்பார்க்கவில்லை.
“இங்க எதுக்கு வந்த?” குரல் கேட்ட திசையில் திரும்பினாள்.
விக்கி கண்களில் கோபம் கொப்பளிக்க நின்றிருந்தான்.
மீண்டும் அவனே “ உங்க அழகு படிப்பு அந்தஸ்துக்கு? நீங்கலாம் இந்த ஏழை வீட்டுக்கு வரலாமா?” என ஏளனமாகக் கேட்க
“மிஸ்டர் விக்கி” என நிதானமாக பேசத் தொடங்கிய கல்கியிடம்
நிறுத்து எனக் கையை காட்டியவன் “ப்ளீஸ் கெட் அவுட்” எனச் சொல்ல வாயைத் திறக்க
“விக்கி .. விக்கி” என அவன் அம்மா மங்களம் வரவும் .. அவன் வார்த்தைகள் வாய்க்குள் குப்புற விழுந்தது.
“ விக்கி அங்க டெகரேஷன் சரியில்லையாம். என்னனு நீ போய் பாரேன்” என்றார். அப்படியே கல்கி பக்கம் திரும்பி “ உள்ள வாம்மா .. ஏன் வெளியே நிக்கற” என வரவேற்றார்.
விக்கி அவசரமாக “அம்மா இவங்க” எனத் தொடங்க ”நம்ம சவியோட பெரண்ட் தானே?” என அம்மா முடிக்க
“ஆமா ஆண்ட்டி நான் சவியோட பிரண்ட் தான்” என முகம் மலர கல்கி நிலைமையை தனக்குச் சாதகமாக்கினாள்.
” விக்கி நீ போ .. நான் சவிதா ரூம்க்கு இந்த பொன்ன கூடிட்டு போறேன்” என முன்னே சென்றார்.
“நாசமா போச்சு” எனப் பதறிய விக்கி பின்னே ஓட்டமும் நடையுமாக முந்தினான்.
“அம்மா நான் சவி ரூம்க்கு இவங்கள கூடிட்டு போறேன். நீங்க மத்த வேலையை பாருங்க” என வராத புன்னகையை வம்படியாக இழுத்துப் புன்னகைத்தான்.
“அட!!! ஹிட்லருக்குச் சிரிக்க கூட தெரியும் போல” என மனதில் நினைத்தாள்.
“டேய் … சவி அங்க டிரஸ் பண்ணிட்டு இருக்கா. இப்ப நீ போக முடியாது” எனப் பதிலை எதிர்பார்க்காமல் முன்னே சென்றார்.
கல்கி பை என அவனுக்கு கையசைத்தாள் புன்னகையுடன்.
விக்கி செய்வதறியாது அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“லவ் பன்றியா? பொண்ணு அட்ரஸ் சொல்லுப் பேசி முடிக்கலாம் .. இப்படி எல்லார் முன்னாடி முறைச்சி பார்க்காதடா” என விக்கியின் அப்பா அறிவழகன் அவன் முதுகைத் தட்டிக் கூற .. அதிர்ந்து போனான் விக்கி.
“அப்பா?” எனக் கோபித்தவனை
“ஓவர் ஏக்டிங் உடம்புக்கு ஆகாது மவனே” என்று சொல்லி புன்னகையுடன் அகன்றார்.
தலையில் அடித்துக் கொண்டான் விக்கி.
கல்கியைக் கண்டதும் சவிதா அவளைக் குழந்தையைப் போல அணைத்துக் கொண்டாள். ஓவென அழ வேண்டும் போல இருந்தது. சுற்றி பெண்கள் இருந்ததால் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“சாரி சவிதா .. அன்னிக்கு ரெஸ்டாரன்ட்ல ஏதேதோ பேசிட்டேன்” மன்னிக்கும் குரலில் கல்கி பேச
”எனக்கு புரியுது கல்கி. நான் தப்பாவே எடுத்துகல”
இரண்டே சந்திப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டனர்.
“மத்தவங்க ஆசைப்படி இந்த நாள் போகட்டும் சவி. நமக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு” கல்கி மிக மிருதுவாக சவிக்கு மட்டுமே கேட்கும்படி பேசினாள்.
“உனக்கு விக்கியோடப் பிடிவாதம் தெரியாது” என அச்சத்துடன் சவி சொல்ல
“எனக்கும் பிடிவாதம் இருக்கு. உன் ஹிட்லர் அண்ணன் விட டபிள் ஸ்டாராங்காக” என கல்கி சொன்னதும் சவி சிரித்துவிட்டாள்.
ஒவ்வொரு நொடியும் விக்கிப் பயந்தபடி இருந்தான். என்ன பிரச்சனை எழுப்புவாளோ என்று.
விக்கியின் சந்தேகம் அதிகமானது. ஏனெனில் நிச்சயத்தில் ஆர்வமில்லாமல் இருந்த தங்கை கல்கி வந்ததும் சகஜமாகச் சிரித்தபடி வளைய வருவது அவன் சந்தேகத்தை இன்னும் பலப்படுத்தியது. அவனால் முடிந்தவரை கல்கி பின்னால் ஆராய சென்றான். ஆனால் எந்த தடையமும் கிடைக்கவில்லை.
அடுத்து நிச்சயதார்த்த ஓலை படித்து பெண்ணும் மாப்பிள்ளையும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
அவன் சுவாசம் சீரானதே நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்த பின்னர்தான்.
கல்கி சவிதா அருகிலிருந்து ஒவ்வொன்றையும் அவளுக்குப் பார்த்துப் பார்த்து செய்தாள்.
நிச்சயதார்த்தம் நல்லவிதமாக முடிந்தது. சவிதாவிற்கு முள்ளில் நிற்பது போல இருந்தது. ஆனால் வேறு வழியில்லை. தன் அண்ணன் விக்கி மீது கோபம் வந்தது. ஆனால் அவன் சாதுரியமாகக் காய்களை நகர்த்துகிறான். அந்த அளவு சவிதாவால் இயங்க இயக்க முடியவில்லை.
கல்கிக்குக் குற்றவாளியைத் துரத்தும் போலீஸ் போல விக்கி எப்பொழுதும் தன்னை சுற்றி வருவது சங்கடமாக இருந்தது.
அவனிடம் சண்டை போடத் துடித்த நாக்கை மிகவும் சிரமப்பட்டு அடக்கினாள். ஏனெனில் மற்றவர் பார்வைக்கு வேறு விதமாக தோன்றலாம்.
அவன் நண்பர்களும் சில உறவினர்களும் அவனையும் கல்கியையும் சேர்த்து வைத்து பேசினர்.
அவனிடமே சிலர் “அடுத்து உன் கல்யாணம் தானே பொண்ணு ரெடி போல?” எனக் கேட்டுவிட்டனர்.
ஆனால் விக்கி என்ன நடந்தாலும் யார் பேசினாலும் கவலைப்படாமல் அந்த சாகருடன் தன் தங்கை இணைய கூடாது என்பதில் குறியாக இருந்தான்.
பிறகு சாப்பாட்டுப் பந்தி தொடங்கியது.
சவியை அவன் வருங்கால கணவன் என்னும் மகேசுடன் அமர்த்தினர். சவிக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் வேறு வழியில்லை.
கல்கி வேண்டுமென்றே விக்கியை தன்னுடன் அமர்த்தி உணவு உண்டாள்.
“நீங்க சாப்பிடுங்க கல்கி. எனக்கு வேலை இருக்கு” என மற்றவர்முன் நழுவப் பார்த்தான்.
ஆனால் அவன் அப்பா “ஆசையா கேட்கறாங்கல சாப்பிடுடா” என அவனைப் பலவந்தமாக அமர்த்தினார்.
விக்கியும் தலையெழுத்தே என அமர்ந்தான். ஆனாலும் சும்மா இருக்கவில்லை “என்ன ரொம்பச் சந்தோஷமா இருக்க? கல்யாணத்த நிறுத்த சதி திட்டம் ரெடியா?” என நக்கலாகக் கேட்க
கல்கி “ அப்பளம் இதயங்கள் பத்திரம் ரெமோ” என மெதுவாகப் பாடி டப்பென்று அப்பளத்தை உடைத்தாள்.
அவள் செயல்கண்டு அவன் முறைக்க “சாப்பிடுங்க ஹிட்லர். பைனாபில் அல்வா செம டேஸ்ட். சாகர் சவிதா கல்யாணத்துக்கு இதே கேட்டரிங் வெச்சிகலாம்” என்றாள்.
“கல்கி என்னைப் பத்தி உனக்குத் தெரியாது விளையாடாத” என அடிக்குரலில் மிரட்டினான்.
“உங்க பயோடேடா அனுப்புங்க .. பார்த்து தெரிஞ்சுக்கிறேன்” என்றாள் அதே மோட்டில். அவனை வெறுப்பேற்றவே நன்றாகச் சாப்பிட்டாள்.
“முன்ன பின்ன சோத்த பார்த்ததில்லையா” எனத் தோன்றியது.
ஒருவழியாய் சாப்பிட்டு முடித்தார்கள்.
கல்கி சவிதாவைக் கண்டு பேசிவிட்டுக் கிளம்பலாம் என எண்ணினாள்.
அந்த திருமண மண்டபத்தில் சிலரை வழியனுப்ப விக்கி வெளியே நின்றிருந்தான். அருகில் பெரிய தென்னை மரம் இருந்தது.
கல்கி விக்கியிடம் சென்றாள். அவனுடன் இருந்தவர்கள் கிளம்பியதும் அவன் கல்கியிடம் “இப்பாவது கிளம்புறியா?” எனக் கேட்டான்.
“இந்த மரம் பக்கத்தில் நிக்காத .. நாட் சேப்” என்றாள்
“இவள் என்ன சம்பந்தமே இல்லாமல் உளறுகிறாளா இல்லை எப்போதும் போலக் கிண்டலா?” என அவளை குழப்பமாகப் பார்த்தான்.
“நான் சொன்னதைச் செய்” என அவன் கையை பிடித்து சற்று தள்ளி நிறுத்திவைத்தவள் உடனே சவிதாவைக் காண உள்ளே சென்றுவிட்டாள்.
இரண்டொரு நொடியில் தென்னை ஓலை தொப்பென விழுந்தது.
தன்னை கொலை செய்ய முற்படுகிறாளா இவள் என அவனுக்குச் சந்தேகம் துளிர்த்தது.
கணிக்கும் …