காலக் கணிதம் 4
கல்கி மண்டபத்தில் விக்கியின் கைபிடித்து இரண்டடி தள்ளி நிற்கவைத்துவிட்டு எதுவுமே நடக்காத்துப் போல உள்ளே சென்றுவிட்டாள்.
ஒரு சில நிமிடங்களில் தென்னை ஓலை அவன் முன்பு நின்ற இடத்தில் பொத்தென விழுந்தது. நல்லவேளையாக அங்கு வேறு எவரும் இல்லை.
விக்கி சற்றே அதிர்ந்தாலும் தன்னை சமாளித்தவனாகத் திரும்பி கல்கியைப் பார்த்தான்.
“இவளுக்கு எப்படித் தெரிந்தது தென்னை ஓலை விழும் என்று?” அவனுக்குக் குழப்பமாக இருந்தது. கல்கியைத் தேடிச் சென்றான்.
சவிதா அறைக்குள் கல்கி புகுந்து கொண்டாள். அறைக்கு வெளியே விக்கி வேலை செய்வதைப் போலப் பாவனை செய்தபடி கல்கியை கண்காணித்தான்.
கல்கி அதைக் கண்டதும் “சவி புடவை மாத்திக்கோ நான் ஹெல்ப் பண்றேன்” எனக் கதவை தாளிட்டாள்.
விக்கிக் கடுப்பானான்.
கல்கி தன் கைப்பையிலிருந்து கையடக்க போன் ஒன்றைச் சவிதா கையில் திணித்தாள்.
“பேசாதே” என ஜாடை செய்தவள்.
“இப்ப இந்த புடவை கட்டணுமா? இதோட மேட்சிங் பிளவுஸ் எங்க?” என ஏதேதோ சத்தமாக விக்கி காதை எட்டும்படி பேசி ஒரு காகிதத்தை எடுத்துக் காண்பித்தாள்.
அதில் “இந்த போனில் என் போன் நம்பரும் சாகர் போன் நம்பரும் இருக்கு. சைலண்ட் மோட்டில் வைத்திருக்கிறேன். அப்படியே இருக்கட்டும். இதன் மூலம் டெக்ஸ்ட் மட்டும் செய்யவும் பேச வேண்டாம் ” என எழுதியிருந்தது.
அதைப் படித்த சவிதா புரிந்ததெனத் தலையாட்டினாள். உடனே கல்கி அந்த காகிதத்தைக் கிழித்து கழிப்பறையில் பிளஷ் செய்தாள்.
இரண்டு நிமிடத்தில் சவிதா புடவை மாற்றிக் கொண்டாள். இல்லையெனில் வெளியே இருக்கும் விக்கிச் சந்தேகப்படுவான்.
சவிதா மற்றும் அவள் பெற்றோரிடம் விடைப் பெற்று கல்கி மண்டபத்திலிருந்து கிளம்பினாள். தான் நினைத்த அத்தனையும் செய்து முடித்துவிட்டாள்.
டைரியின் தாக்கம் இன்னமும் இருக்கிறது. கடந்த சில நாட்களில் அதை எப்படிச் சமாளிப்பது எனப் பழகிக் கொண்டாள்.
“கல்கி நில்லு” என விக்கி பின்னே அவசரமாகத் தொடர்ந்தான்.
“உள்ள வரும் போது கெட் அவுட் … கிளம்பும் போது நில்லு” “என்ன ஒரு ஹாஸ்பிடாலடி?” என்றவள் சொற்களை
அவன் காதில் வாங்கவே இல்லை “ஓலை விழும்னு உனக்கு எப்படித் தெரியும்? என்ன டிராமாவ?”
இதைக் கேட்டவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “உன்னை காப்பாத்தின பாரு என்னை” பற்களைக் கடித்தாள்.
“இன்னும் எனக்குப் பதில் வரல” என்றான்
“உனக்குப் புரியாது”
“புரியவை”
“உன்னால புரிஞ்சிக்க முடியாது”
“அப்ப தெரியாதுனு சொல்லு. எதோ சீன் போட்ட கிளிக் ஆகிடுச்சி இல்லையா?” பேச்சில் கிண்டல் மழை.
அவள் முன்னே நடந்தாள். அவன் வார்த்தைகள் எரிச்சலூட்டின.
அந்த மரத்தில் விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அது ரியல் எஸ்டேட் தொடர்பான விளம்பரம் ஒரு சதுர அடி ரூபாய் 8999 மட்டுமே என்று இருந்தது.
இந்த நம்பர் இருந்த்தனால உன்னை காப்பாத்தினேன். அந்த டைரியில் இருந்த இரண்டாவது நம்பர் இது என அவனிடம் சொல்ல முடியுமா?
அப்படியே சொன்னால் கேலியாக “ இந்த விளம்பரம் இருக்கிற எல்லா இடத்தலையும் விபத்து நடக்குமா?” எனக் கேட்பான். என தனக்கு தானே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டாள்.
மின்னலை போலப் பளிச்சிட்டது இந்த விளம்பரம் இங்கு மட்டுமா ஒட்டப்பட்டிருக்கும்? பதற்றமானாள் கல்கி.
அவனிடம் எதுவும் சொல்லாமல் அடுத்த அரைமணி நேரம் சுற்றியுள்ள இடங்களை ஸ்கூடியில் வளம் வந்தாள். எங்குமே அந்த விளம்பரம் இல்லை.
அப்பாடா என நினைக்கையில் ஓரிடத்தில் அந்த விளம்பரம் காணப்பட்டது. குறிப்பிட்ட தேதிக்குள் வாங்கினால் இந்த தொகை என அறிவிப்பு இருந்தது. அவை இரண்டு வருடங்களுக்கு முன்பான தேதிகள்.
ஆனால் அருகில் எவரும் இல்லை.
ஏன் இப்படி எண்கள் தோன்றுகின்றன? இதன் விளைவு என்னவாக இருக்கும்? யாரிடம் கேட்பது? ஒன்றுமே புரியவில்லை.
வீட்டை அடைந்ததும் சற்றே நிம்மதியாக உணர்ந்தாள். தன் அறைக்குச் சென்று உடைமாற்றிக் கண்மூடி உறங்க முற்பட்டாள்.
ஆனால் அந்த எண்கள் பற்றிய நினைவு அவளை எதையும் செய்யவிடாமல் கட்டிப் போட்டது.
நம்மை அறியாமல் சில பாடல்களை நாம் முணுமுணுப்பது உண்டு. சமீபத்தில் அந்த பாடலை கேட்டிருக்க மாட்டோம். ஆனால் மீண்டும் மீண்டும் அந்த பாடல் வரிகள் மனதை ஆக்கிரமிக்கும். அப்படிதான் கல்கியை எண்கள் படாதபாடு படுத்தியது.
வெளியே செல்ல பயமாக இருந்தது. அன்று கண்ட விபத்தைப் போல வேறொன்றைக் காணும் சக்தி அவளுக்கு இல்லை.
யூடியப் என எதோ ஒன்றில் மனதைச் செலுத்தி நேரத்தைக் கடத்தினாள்.
மாலையில் பெற்றோர் மற்றும் சாகர் வந்தனர். கனவு கலைந்ததை போல அவளுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
சாகரிடம் சவிதாவின் நிச்சயம் பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறினாள். அவன் மிகுந்த மன உளைச்சலுடன் இருப்பது நன்கு புரிந்தது.
“கவலைப் படாத உங்க கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்” என நம்பிக்கை வார்த்தைகளை ஊட்டினாள்.
சவிதாவிடம் கொடுத்த போனின் நம்பரைக் கொடுத்தவள் தயவு செய்து டெக்ஸ்ட் மெசேஜ் மட்டும் செய்யவும் என எச்சரித்தாள். சாகர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் மின்னியது.
அவனுக்கும் சவிதாவிற்கும் திருமணம் செய்து வைப்பது தன் கடமை இதை செய்தே தீருவேன் என தனக்குள் சங்கல்பம் செய்து கொண்டாள்.
அவள் போன் குறிக்கிட்டது “ஹலோ”
“ஹலோ கல்கி?” கேட்டது ஆண் குரல்
“யெஸ். நீங்க?”
“நான் உங்களை நேர்ல மீட் செய்யணும்”
“எதுக்காக?”
அவன் சொன்னவற்றைக் கேட்டவளுக்கு வியப்பாக இருந்தது.
“உங்க லொகேஷனை ஷேர் செய்ங்க .. வரேன்” என்றாள்.
கல்கியின் தரிசனத்திற்காக அந்த தெரு முனையில் விக்கிக் காத்திருந்தான்.
கணிக்கும் …