காலக் கணிதம் 5
கடிகாரம், காலண்டர் போன்றவற்றை கொண்டு மட்டுமே காலத்தை காணும் சாமானிய மனிதர்களுக்கு அதற்கு அப்பால் காலத்தைக் கணக்கிடப் பிரபஞ்சத்தில் பலவழிகள் உள்ளன என்பது சிலருக்கு தெரியாது .
அந்த ரகசியத்தை கல்கி மற்றும் விக்கி அறியப் போகிறார்கள். சரி என்பது எப்பொழுதும் சரி அல்ல ... தவறு அவ்வாறே.
நேற்று என்பது இன்றாகவும் நாளையாகவும் மாற வாய்ப்புள்ளது.
அறிவழகன் மற்றும் மங்களம் தம்பதியினருக்கு வினோத், விக்னேஸ்வரன்(விக்கி) மற்றும் சவிதா என்று மூன்று பிள்ளைகள்.
அறிவழகன் தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார். மங்களம் இல்லத்தரசி. வசதியான குடும்பம்.
வினோத் பயோ டெக்னாலஜி படித்து அதற்கேற்ற நல்ல வேலை. விக்கி பி.ஈ. மெகானிக்கல் படித்து எம்.என்.சி.யில் வேலை. சவிதா தற்பொழுதான் பி.ஈ முடித்துள்ளாள்.
விக்கியின் பெற்றோரான மங்களம் மற்றும் அறிவழகன் மிகவும் நிம்மதியான மனநிலையிலிருந்தனர். தங்கள் மகளுக்கு அழகான வாழ்க்கை அமையப் போவதை எண்ணி சந்தோஷம். தங்கள் வீட்டு இளவரசி புகுந்த வீட்டில் மகாராணி போல வாழ வேண்டும் என ஆசைப்பட்டார்கள்.
தங்கள் செல்ல மகளுக்கு இத்திருமணத்தில் விருப்பம் உள்ளதா? என நேரிடையாக ஒரு வார்த்தை மட்டும் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் விக்கிக் கேட்க விடவில்லை என்பதை அவர்களுக்குத் தெரியாது பாவம்.
மூத்த மகன் வினோத் அகல்யா என்னும் பெண்ணை காதலித்தான். இருவீட்டார் சம்மதத்துடன் அவனுக்குத் திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பின் வினோத் மனைவி பக்கம் முழுவதுமாய் சாய்ந்துவிட்டான் என்னும் எண்ண ஓட்டம் அவர்களிடையே நிலவியது.
சில கசப்பான சம்பவங்கள் நடந்தேறின. அவற்றைக் கலந்து பேசி முடிப்பதற்குள் வேறொரு பிரச்சனை எழும்பியது. ஒரு கட்டத்தில் இனி இங்கு வரவே மாட்டேன் என சண்டை போட்டுக்கொண்டு மனைவியுடன் தனிக் குடித்தனம் சென்றுவிட்டான்.
வினோத்தின் செயல் அந்த குடும்பத்தை நிலைகுலையச் செய்துவிட்டது.
அதிர்ச்சியில் விக்கியின் தாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணம் ஆனார். அதனால்தான் சவிதாவிற்கு விரைவாகத் திருமண ஏற்பாடுகள் நடந்தேறின. குடும்பத்தின் மொத்த பாரத்தையும் விக்கிச் சுமந்தான்.
நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்ததும். விக்கி குடும்பம் வீட்டை அடைந்தனர். குடும்பத்தார் மனதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதி நிலவியது. வினோத் வராதது சற்றே குறைதான். ஆனால் எண்ணச் செய்ய முடியும் எனவிட்டு விட்டனர். அவரவர் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றனர்.
விக்கி சவிதா அறைக்கு வந்தவன் “கல்கி உன்கிட்ட என்ன சொன்னா?”பட்டென கேட்டான்.
“எதுவும் இல்ல”
“பொய் சொல்லாத சவிதா”
”விக்கி அதான் எதுவுமில்லனு சொல்லிட்டேன்ல. திரும்பத் திரும்ப கேட்காத. தலை வலிக்குது நான் ரெஸ்ட் எடுக்கணும் வெளியில போ ” என சவிதா தன் வெறுப்பைக் காட்டினாள்.
நேற்றுவரை பயந்து சோர்ந்து காணப்பட்டவளுக்கு இன்று எப்படி இத்தனை மாற்றம் என வியக்காமல் இருக்க முடியவில்லை.
“அம்மாவை நினைச்சி பார் சவிதா. அவங்க இதயம் பலவீனமா இருக்கு. எந்த அதிர்ச்சியும் தாங்க முடியாது. நீ எதாவது ஏடாகூடமா அந்த கல்கி பேச்ச கேட்டு செய்தா. அப்புறம் அம்மாவை உயிரோட பாக்க முடியாது” என சென்டிமெண்டலாக பேசி அத்தனை குற்றத்தையும் அவள் தலையில் ஏற்றினான்.
“எனக்கும் இதயம் இருக்கு”என்றாள்.
“பார் சவி இந்த குடும்பத்துல இருக்கிற ஒவ்வொருத்தரும் நீ நல்லா இருக்கணும்னு ஆசைப்படுகிறோம். வினோத் மாதிரி நீயும் ஏமாத்திடாத எங்களால , தாங்க முடியாது. உன் நிச்சயத்துக்குக் கூட அவன் வரலை பாரு” என்றவன் சட்டென நகர்ந்துவிட்டான்.
அவன் சொல்வது சரிதான் என மனம் ஒரு நொடி அவனுக்கு ஓட்டு போட்டது.
பிறகு ச்சே என்ன எண்ணம் இது எனத் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டாள்.
விக்கி அம்மாவைக் காணச் சென்றான். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அவன் தந்தை செல்போனை துழாவியபடி அருகில் படுத்திருந்தார் மகனைக் கண்டதும் என்ன என்பதாய் புருவத்தை உயர்த்தினார்.
அம்மா மாத்திரை எடுத்துக் கொண்டாரா என அவர் உறக்கத்தைக் கலைக்காமல் செய்கையில் கேட்க தந்தை அவனைப் போலவே பதில் சொன்னார். நிறைவுடன் தன் அறைக்கு வந்தான்.
விக்கி ஏசியை இயக்கிவிட்டு ஆடைமாற்றி கட்டிலில் படுத்தான். வினோத்தை எண்ண வருத்தமாக இருந்தது. மறுபக்கம் கல்கியின் மேல் கோபமும் சந்தேகமும் எழுந்தது.
கல்கியிடமிருந்து தன் தங்கையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் எனத் தீவிரமாக சிந்தித்தான்.
மனதின் ஓரமாய் மெல்லிய சாரலாய் தான் கல்கியிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறோம் எனப் புரியாமல் இல்லை.
அவள் சாகரின் தங்கையாக இல்லாமல் இருந்திருந்தாள். அவளை தன் நட்பு வளையத்திற்குள் வரவழைத்திருப்பான். காதல்கூட மலர்ந்திருக்கும். இதை எண்ணுகையில் அவனையும் அறியாமல் மெல்லிய கீற்றாய் புன்னகை அரும்பியது.
அனைத்து பிரச்சனைகளுக்கும் சாகர் மட்டுமே காரணம். அவன் மட்டும் இல்லாமல் இருந்தால் நிம்மதியாக இருக்கும்.
கல்கியிடம் தன்னை காப்பாற்றியதற்கு நன்றி கூடச் சொல்லவில்லை என மனம் குற்றம் சாற்றியது.
தென்னை ஓலை விழும் நிலையிலிருந்திருக்கும் அதைப் பார்த்து என்னைக் கவனமாக இருக்கும்படி சொல்லி இருப்பாள். இதற்குப் போய் அவளை சந்தேகப்பட்டு விட்டேன்.
மனது நிம்மதியில்லாமல் குடைய கல்கியிடம் பேசிவிடலாம் என நினைத்தான். அப்போதுதான் அவள் போன் நம்பர் தன்னிடம் இல்லை என்பது உரைத்தது.
நிச்சயமாகச் சவிதாவிடம் இருக்கும் ஆனால் கேட்கத் தயக்கமாக இருந்தது. உடனே தன் பைக்கை உதைத்து அவள் வீட்டிற்குக் கிளம்பினான்.
சாகர் வீடு பரிச்சயமான ஒன்று ஆயிற்றே. ஆனால் வீட்டிற்குள் செல்ல தயக்கம். அந்த தெரு முனையில் ஒரு அம்மன் கோவில் இருப்பது தெரியும். அதனால் அங்கே சாமி தரிசனம் செய்வது போல கல்கி வருகிறாளா? என ஆராயத் தொடங்கினான்.
“அடேய் பைத்தியமே .. என்னடா செய்யற?” என அவன் மூளை மனதை வினவ.
“கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம் ப்ரோ .. நீ சும்மா இரு” என மனது அடங்காமல் அவளின் வருகைக்கு காத்திருந்தது.
அதுதான் விக்கி பாசம் என்றால் கண்மூடித்தனமான பாசம் வெறுப்பு என்றாலும் அவ்வாறே.
விக்கி வீட்டைவிட்டுச் சென்றதைச் சவிதா கவனித்தாள். சவிதா ஏற்கனவே விக்கிப் பேசியதில் நிலைகுலைந்து போயிருந்தாள்.
அறைக் கதவை தாளிட்டவள் கல்கி கொடுத்த செல்போனை எடுத்தாள். கல்கியிடம் பேசலாம் என எண்ணியவள் பெற்றோர் இருக்கிறார் என்ற எண்ணம் தோன்றவே கல்கிக்கு டைப் செய்து மெசேஜ் அனுப்ப எண்ணினாள்.
அதில் “விக்கி மனது மாற வாய்ப்பே இல்லை. அவன் பிடிவாதம் தினம் தினம் அதிகமாகுது” என டைப் செய்யத் தொடங்கியவள் தன் மூத்த அண்ணன் வினோத் பற்றியும் அதன் விளைவாக தன் தாயின் உடல் நலம் குன்றியதுப் பற்றியும் விரிவாக டைப் செய்தாள்.
“இன்னொரு முக்கியமான விஷயம் கல்கி இந்த பிரச்சனைக்கு இன்னும் ஒரு காரணம் இருக்கு அது சாகர். விக்கியும் சாகரும் அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக் மாதிரி எப்பவும் சண்டைதான்.”
“காலேஜ் படிக்கும் போது இரண்டுபேரும் ஒரே கல்லூரினாலும் வேற வேற கிரிக்கெட் டீம்ல இருந்தாங்க. சாகர் டீம் அதிகமா வெற்றி பெற்றாங்க. அப்போ அவங்க விக்கி டீமை கேலி கிண்டல் பண்றது சகஜமா ஆயிடுச்சி.
ஒருசில சமயம் விக்கி டீம் வெற்றி பெற்றிருக்காங்க. இப்போ இது ஈகோ கிலாஷா மாறி இருக்கு. அடிதடி போலீஸ் ஸ்டேஷன் வரை போயிருக்கு. படிக்கிற பசங்கனு போலீசும் அடவைஸ் செஞ்சி அனுப்பிட்டாங்க. இதெல்லாம் உனக்குத் தெரியுமா? தெரியாதா?
விக்கி சாகரை வேண்டாம்னு சொல்லக் காரணமே இதுதான். ஆனா எனக்கு தெரியாம வேற எதோ பிரச்சனையும் இருக்கு நினைக்கிறேன். அதை கண்டுப்பிடிச்சி நீதான் சால்வ் பண்ணனும்.” என தன் மனதில் உள்ள அனைத்தையும் செல்லில் கொட்டி கல்கிக்கு அனுப்பினாள்.
ஆனால் கல்கி அதைப் படிக்கும் நிலையில் இல்லை. தன் ஸ்கூடிக்கு உயிர் கொடுத்தாள். சற்றெனப் பறந்தது ஸ்கூட்டி.
விக்கி அவளைத் தடுக்க முயன்று தோற்றான். கல்கி கண்ணில் விக்கிப் படவில்லை.
உடனே தன் பைக்கில் அவளை பின் தொடர்ந்தான்.
அவள் அந்த குறிப்பிட்ட வீட்டை பத்து நிமிடத்தில் அடைந்தாள்.
அவன்வெளியே கல்கிக்காகக் காத்திருந்தான். அவனைக் கண்டதும் விக்கி சட்டென் பிரேக் போட்டான்.
கல்கி அவசரமாக வண்டியை நிறுத்தி உள்ளே சென்றாள்.
“ இந்தாங்க பிளாங் செக் எவ்வளவு வேணா அமௌண்ட் எழுதிக்கோங்க.. எனக்கு அந்த டைரி வேணும்” என்றான் வினோத்.
“பழைய டைரிக்கு இத்தனை பணமா?” என வினோத்தை வினோதமாகப் பார்த்தாள் கல்கி.
கணிக்கும் …