காலக் கணிதம் 6
கல்கி போனில் அழைத்த நபரின் வீட்டை நோக்கிச் சென்றாள். அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு.
கல்கி அடுக்குமாடி குடியிருப்பின் பிரதானம் கேட்டை அடையும் போதே செக்யூரிட்டி பக்கத்தில் கல்கிக்காக வினோத் காத்திருந்தான்.
“நீங்க … கல்கி?” என அவன் தொனியில் கேள்வி தொங்கி கிடக்க
”ஆம்” என தலையசைத்தாள் கல்கி. பின்பு வாகன நிறுத்துமிடத்தில் தன் ஸகூட்டியை நிறுத்தினாள்.
வினோத் லிப்ட்டை நோக்கி நடக்க உடன் சென்றாள் கல்கி. லிப்ட்டில் அந்த டைரிக்காக எத்தனை பணம் வேண்டுமானாலும் தரத் தயார் என்னும் ரீதியில் அவன் எடுத்த எடுப்பில் பேசினான் சற்றே அவன் பேச்சு கல்கிக்கு அதிர்ச்சி அளித்தது.
முதல் தளத்தில் அவர்கள் வீடு இருந்தது. கல்கி முகத்தை வைத்தே அவன் என்ன பேசியிருப்பான் என யூகித்த அகல்யா அவனை ஒரு பார்வை பார்த்தவள் “வாங்க கல்கி. உட்காருங்க” என மென்னகையுடன் உபசரித்தாள்.
வீட்டிற்கு வந்தவரை “உள்ள வாங்க .. உட்காருங்க .. சாப்பிடக் காபி இல்ல டீ சாப்பிடறீங்களா?” போன்ற உபசார சொற்கள் எதுவும் வினோத்திடமிருந்து வரவில்லை.
எடுத்தவுடன் டைரி பணம் எனத் திடுக்கிட வைத்துவிட்டான். ஆனால் வினோத்தின் மனைவி அகல்யா அப்படி இல்லை.
கல்கியின் நிலை புரிந்து மூச்சுவிடச் சற்றே அவகாசம் கொடுத்தாள்.
கல்கி எப்படித் தொடங்குவது என்று குழம்பியவளாக “கொஞ்சம் குடிக்க தண்ணி” என அகல்யாவிடம் கேட்டு இரண்டு நிமிடம் மௌனம் காத்தாள்.
சட்டென வினோத் கொடுத்த அதிர்விலிருந்து வெளி வர நேரம் தேவைப்பட்டது. சோபாவில் சாய்ந்தமர்ந்தவள் வீட்டை நோட்டம் விட்டாள்.
பளிச்சென்ற சுத்தமான பிளாட். வீட்டுப் பொருட்கள் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது. ஜன்னல், சோபா, சாப்பாட்டு மேஜை என அனைத்தும் ஆடை உடுத்தி அழகாக இருந்தன. மொசமொசவென நாய்க்குட்டி வெள்ளை பந்து போல இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தது.
ஹாலுக்கு அருகில் சிறிய பால்கனி. அதில் மனிபிளாண்ட், துளசிச் செடி என சில செடிகள் காற்றில் தலையாட்டிய வண்ணம் இருந்தன.
வினோத் ஒல்லியான தேகம். கூர்மையான பார்வை, அழுத்தமான சொற்கள், கரடுமுரடான முகம். ஆனால் சற்றும் தளராத உறுதி அவனுடன் இணை பிரியாமல் இழைந்தோடியது.
அவன் மனைவி அகல்யா தீர்க்கமாகச் சிந்தித்துச் செயல்படும் பெண்.
அகல்யா கண்ணாடி டம்பளரில் தண்ணீரைக் கொடுக் ககல்கி வாங்கி மடக் மடக்கென பருகினாள். சற்றே சுவாசம் சீரானது.
“சோ அந்த டைரியை பத்தி உங்களுக்கு எப்படித் தெரியும் மிஸ்டர்….. ???” என யோசிக்க
“வினோத்”என முடித்தான்.
“யெஸ். மிஸ்டர் வினோத்” என கல்கி வினவ
“அது எங்க குடும்ப சொத்து” வினோத் அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தான்.
“மன்னிக்கணும் அது என் கொள்ளு தாத்தாவோட டைரி” கல்கி பெருமையாகவும் அதே சமயத்தில் தங்கள் குடும்பத்தின் சொத்து என்பதில் அழுத்தமாகவும் கூறினாள்.
“ஒகே அது எங்க குடும்ப சொத்துனு நிரூபிக்க என்கிட்ட சாட்சி இல்ல … ஆனா அதை நான் பார்க்கலாமா? .. அதுல இருந்து எனக்கு சில இன்பர்மேஷன் வேணும்”
“லுக் மிஸ்டர் வினோத் எனக்கு நீங்க யாருனே தெரியாது. நீங்க டைரி பத்தி பேசணும்னு போன்ல சொன்னதும். நானும் யோசிக்காம ஒரு வேகத்துல கிளம்பிட்டேன்.
உங்களுக்கு என் போன் நம்பர் எப்படி கிடைச்சது? என்கிட்ட டைரி இருக்குனு எப்படித் தெரியும்?” சரவெடியாகக் கேள்விகளை அடுக்கினாள்.
“இப்ப அந்த டைரியில் இருக்கிற சில விஷயங்கள்னால தான் பெரிய பிரச்சனை தீர்க்க முடியும். அதனாலதான் கேட்கிறேன்” வினோத் சொல்ல
தலைவெடித்துவிடும் போல் இருந்தது கல்கிக்கு.
“எனக்கு விளக்கமா சொல்றதனா சொல்லுங்க இல்ல நான் கிளம்புறேன்” என கல்கி சலிப்புடன் எழ முயல
“வெயிட் கல்கி. உங்க போன் நம்பர் சவிதாகிட்டயிருந்து வாங்கினேன்” என்றான்
குழப்பமாக “சவிதாவை உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“அவ என் தங்கை. சில குடும்ப பிரச்சனை காரணமா அவ நிச்சயத்துக்கு நாங்க வர முடியல” என்றான்.
உடனே “அகல்யா கல்கி மேடம்க்கு காபி கொண்டுவா” என மனைவியை உள்ளே அனுப்பினான்.
“எங்க குடும்பத்துல ஒரு சாபம் இருக்கு. ஆண் வாரிசுகளுக்குப் பிரச்சனை இல்லை. பெண் பிள்ளைகள் தங்களுடைய முப்பதாவது வயசுல கணவனை இழந்திடுவாங்க. நான் சவிதா நல்லா இருக்கனும்னு தான் கேட்கிறேன்” என்றான் சோகமாக.
இதைக் கேட்டதும் ஒரு பயபந்து கல்கியின் அடிவயிற்றிலிருந்து மேலெழும்பி இதயத்தை அடைத்தது. சவிதா கணவன் என்றால் சாகர் என்றுதானே முடிவு செய்துள்ளாள் அப்படியெனில் அவன் பலியாக வேண்டுமா?
அவள் முகத்தை உன்னிப்பாகக் கவனித்த வினோத் மௌனமாகவே இருந்தான்.
“அதுக்கு இப்ப என்ன செய்யணும்?” கல்கி குரலில் ஸ்ருதி குறைந்திருந்தது.
“நான் சொல்ல போகிற விஷயத்துல உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ……….” என இழுத்தான்.
“பரவாயில்லை சொல்லுங்க” என்றாள் தன் சகோதரன் உயிருக்கு எந்த ஆபத்தும் நேரக் கூடாது என்பதால்.
அகல்யா காபியைக் கொடுத்தாள். வாங்கி கல்கி முன்னிருந்த டேபிளில் வைத்தாள். அதை பருகும் மனவோட்டத்தில் இல்லை.
“நான் டைம் மிஷின் கண்டுப்பிடிச்சிருக்கேன்” என வினோத் ஒவ்வொரு சொல்லையும் நிதானமாக உதிர்த்தான்.
“என்னது?” ஓசையெழாமல் அவள் உதடு மட்டும் அசைந்தது. விழிகள் வியப்பில் அகலமானது.
“ஏதோ வாஷிங் மெஷினை சொல்வது போல இவன் டைம் மிஷினை சொல்றானே. ஒருவேளை பைத்தியமோ? எஸ்கேப் ஆகிடலாமா ” என கல்கி மனதில் கலவையான எண்ணங்கள்.
அவள் அமைதியே அவனுக்கு அனைத்தையும் உரைத்தது.
“உங்களுக்கு நல்லா தெரிஞ்ச விஷயத்தை இப்ப சொல்லவா?” கேட்டான்.
“வேண்டானா விடவா போர. சொல்லித் தொலை” எனத் தன் அச்சத்தை மறைத்து சொல் எனத் தலையசைத்தாள்.
குரலைச் சற்றே செருகியவன் “உங்களுக்கு பாஸ்கராச்சாரியார் மகள் லீலாவதி கதை தெரியும்னு நினைக்கிறேன். அது திரும்ப நடக்கக் கூடாது. அதான் என் விருப்பம்” என்றான்.
கல்கிக்குத் தெரியாதா? கணித மேதை பற்றி. பாஸ்கராச்சாரியார் சுமார் 900 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மிகப் பெரிய கணித மேதை அதோடு வானியல் சாஸ்திரம் மற்றும் ஜோதிட சாஸ்திரத்திலும் வல்லுநர்.
சூரியன் மற்றும் சந்திர கிரகணங்களைப் பற்றி உலகத்திற்குப் பறைசாற்றியவர். ஒன்பது கோள்களின் நிலையை ஆராய்ந்தவர்.
அவருடைய மகள் லீலாவதி. அவளின் ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளதைக் கண்டறிந்தார். தன் பிரியமான மகளுக்கு எந்த தீங்கும் நேரக் கூடாது என எல்லா தந்தையைப் போல ஆசைப்பட்டார். ஒரு குறிப்பிட்ட மங்கள நேரத்தில் திருமணம் நடந்தால் தோஷம் பாதிக்காது எனக் கணித்தார்.
அதன்படி அவர் நீர் கடிகாரத்தை வைத்து நேரத்தைக் கணக்கிட முற்பட்டார்.
நீர் கடிகாரத்தில் மேலே பெரிய கண்ணாடிக் குடுவை போன்று காணப்படும். அதன் கீழே சிறிய கண்ணாடிக் குடுவை இருந்தது.
மேலிருந்து சொட்டு சொட்டாகக் கீழே நீர் விழும். லீலாவதியிடம் அதைத் தொடாதே என்று எச்சரித்துவிட்டுச் சென்றுவிட்டார்.
ஆறு வயதுக் குழந்தையான லீலாவதி ஆர்வத்தால் அதை எட்டிப் பார்த்தாள். அவள் அணிந்திருந்த மூக்குத்தியிலிருந்த சிறிய முத்து அந்த குடுவையில் விழுந்துவிட்டது. நீர் சொட்டுமிடத்தில் முத்து அடைத்துக் கொண்டது. நீர் சொட்டும் அளவு மாறுபட்டது.
அந்த முத்தை எடுக்க தெரியாமல் குழந்தை சென்றுவிட்டாள். திருமணம் நடந்து ஒரே வாரத்தில் விதவையானாள் லீலாவதி.
என்றென்றும் தன் மகள் பெயர் இவ்வுலகில் நிலைத்திருக்க வேண்டும் என பாஸ்கராச்சாரியார் தான் எழுதிய புத்தகத்திற்கு லீலாவதி எனப் பெயரிட்டார்.
“லீலாவதி நீர் கடிகாரத்தை எட்டிப் பார்க்காமல் இருந்திருந்தால் அவ வாழ்க்கை நல்லா இருந்திருக்கும். அதே மாதிரி எங்க குடும்பத்துல ஒரு சாபம் அது நிகழாம தடுக்க ஒரு முயற்சி” என வினோத் சொல்லிவிட்டு அமைதியானான்.
“கல்கி அந்த டைரில காலப் பயணத்துக்கான முக்கியமான தகவல் இருக்கு. அது இல்லாம சாத்தியம் இல்லை”
“இதைப் பத்தி தயவுசெய்து சவிதா விக்கி யாருக்கும் சொல்லிடாதீங்க. இந்த அதிர்ச்சியை தாங்க முடியாது” எனக் கோரிக்கை வைத்தான்.
கல்கி குழம்பிப் போனாள். இவன் சொல்வதை ஏற்பதா? விடுவதா?
“அந்த டைரில காலத்தை வெல்லும் கணிதம்னு எழுதியிருக்கும் அத்தோட சில நம்பர்ஸ் இருக்கும். அதுல ஒண்ணுதான் சவிதா கணவனுக்கு எமனா வரப்போகும் நம்பர்.” வினோத் சொல்ல
அவன் சொன்னதைக் கேட்டுத் திகைத்தவள் “எனக்கு யோசிக்க டைம் வேணும்” என எழுந்தாள்.
“அடுத்த வாரம் இதே நேரம் என் வீட்டுக்கு வாங்க” என்றான் சற்றே கட்டளையான தொனியில்.
எரிச்சலடைந்த கல்கி எதுவும் சொல்லாமல் வெளியேறினாள்.
தன் ஸ்கூட்டியில் கிளம்பினாள். தான் கேட்ட பல கேள்விகளுக்கு அவன் சரியான பதில் அளிக்கவில்லை என்று சிந்தித்தபடி வண்டியை ஓட்டினாள்.
மிக நெருக்கமாக எதோ வண்டி வருவதைப் போலத் தோன்ற திரும்பினாள். அது விக்கி.
வண்டியை ஓரமாக நிறுத்து என செய்கை செய்தான். முதலில் மறுக்க எண்ணியவள் பின்பு வண்டியை ஒரமாக நிறுத்தினாள்.
அவனும் அவள் அருகே வண்டியை நிறுத்தி புன்னகையுடன் “தேங்கஸ்2” (தேங்கஸ் ஸகொயர்) என்றான்.
“என்னது?” புரியாமல் விழித்தாள்
“என்னை காப்பாற்றினதுக்கு ஒரு தேங்க்ஸ் … இப்ப நான் கேட்டதும் வண்டியை நிறுத்தியதுக்கு ஒரு தேங்க்ஸ். ரெண்டு தேங்க்ஸ் இல்லையா அதான் தேங்கஸ்2. . மேத் டீச்சருக்கு ஏத்த மாதிரி” என்றான் விரிந்த புன்னகையுடன்.
“காலையில் வெளியே போ என்கிறான். இப்போது இப்படி வழிகிறான். என்னடா நடக்குது” என அவனை ஒரு மாதிரி பார்த்தாள்.
“குடும்பத்துல எல்லாமே லுசா. கடவுளே என்னை காப்பாத்து” என மனதில் புலம்பினாள்.
சட்டென “உங்க அப்பாக்கு அக்கா தங்கை இருக்கங்களா?”
“தங்கை இருக்காங்க … இன்னிக்கு நிச்சயத்துக்கு கூட வந்திருந்தாங்களே” என்றான்.
“ஐ சீ . . அத்தை மாமாவை நான் கவனிக்கல” வேண்டுமென்றே சொன்னாள்.
“மாமா உயிரோட இல்ல … அத்தைக்கு சுமார் முப்பது வயசு இருக்கும் போதே மாமா இறந்துட்டாங்க”
காதில் அமிலம் விழுந்தது போலத் துடித்துப் போனாள்.
விக்கித் தொடர்ந்து “ கார் விபத்துல இறந்துட்டாங்க. அவங்க கார் நம்பர் 8999. அந்த தென்னை மரத்துல கூட இந்த நம்பர் தானே எழுதியிருந்தது. என்னால அந்த விபத்தை மறக்கவே முடியாது” எனறான். சாதாரணமாகத்தான்
சொன்னான்.
ஆனால் அவளுக்கு நிஜமாகவே தலைசுற்றி விட்டது. தள்ளாடியவள் ஒரு நொடி தன்னை சமாளிக்க அவன் கையை பற்றினாள்.
“கல்கி ஆர் யூ ஒகே”? எனப் பதறியவன்
அவளுக்கு என்ன ஆனதோ என அவளைத் தாங்கி பிடித்து அருகில் உள்ள கல்லில் அமர்த்திவிட்டு விரைவாகக் கடையிலிருந்து தண்ணீர் பாட்டில் வாங்கி வந்தான்.
வினோத் வீட்டில் அகல்யா “எதுக்கு இப்படிப் பொய் சொன்னீங்க?” கோபமாகக் கேட்டாள்.
“என் ஆராய்ச்சிக்கு எலி தேவை அண்ட் ஐ காட் இட்” சந்தோஷத்தில் பெரியதாக சிரித்தான்.
கணிக்கும் …