காலக் கணிதம் 7
கல்கி இரவில் புரண்டு புரண்டு படுத்தாள். உறக்கம் வேலை நிறுத்தம் செய்து இம்சித்தது.
வினோத் சொன்ன விஷயங்கள் அதற்கு அடுத்து விக்கியின் திடீர் மாற்றம்.
டைரி, எண்கள், சவிதா, சாகர், சாபம் என அத்தனை விஷயங்களையும் கிரைண்டரில் போட்டு அரைக்காத குறையாக அவள் சிந்தையில் அரைக்கப்பட்டது.
தன் பிரச்சனைகளை யாரிடமாவது சொல்லி மனம் விட்டுப் பேச வேண்டும் போல இருந்தது. ஆனால் அதற்குச் சரியான நபர் கிட்டவில்லை.
வீட்டில் சொன்னால் பயந்துவிடுவார்கள். “அதையெல்லாம் தலைசுத்தி தூக்கிப் போடு” என ஒருவரியில் முடித்துவிடுவார்கள்.
அவளுக்கு மனம் திறந்து பேச நெருக்கமான நட்பு வட்டம் இல்லை. இருப்பவர்கள் எல்லாம் ஹாய் பாய் என நட்பு புன்னகையுடன் விலகும் ஆட்கள்.
சவிதாவிடம் சொல்ல முடியாது. சாப விமோசனத்திற்கான வழியைக் கண்டு பிடிக்க வேண்டும். அதன் பிறகு தான் சவிதா சாகர் திருமண பற்றி நினைக்க வேண்டும்.
வினோத் அவன் சொல் செயல் என அனைத்தும் சந்தேகமாக உள்ளது. இதில் டைம் மிஷின் கண்டுபிடிப்பு தான் ஆகச் சிறந்த காமெடி.
இதில் கொசுறு பிரச்சனை என்பது சாகர் விக்கியின் கிரிக்கெட் ஈகோ “என் உசுர வாங்கறதுக்குனே .. வந்து சேருதுங்க” என பல்லைக் கடித்தாள்.
ஆனால் விக்கி காலையில் உதவியதுதான் நம்ப முடியாத செயலாகத் தோன்றியது. அவன் கோபம் வெறுப்பு எல்லாம் பனிக்கட்டியாக உருகிப் போனது. அவளுக்குத் தண்ணீர் வாங்கி கொடுத்து பத்திரமாக அவளை அனுப்பிவைத்தான். அதில் துளிக் கூட பாசாங்கு இல்லை.
இப்போது சாகர் சவிதா திருமணம் பற்றிப் பேசினால் விக்கி சம்மதிப்பான் எனத் தோன்றியது. ஆனால் விக்கிச் சம்மதித்தாளும் தனக்குள் ஒரு நெருடல் இருப்பதை கல்கி உணர்ந்தாள். வினோத் சொன்ன சாபம் பலித்துவிட்டால் என்ன செய்வது? என்னும் அச்சம் மனதை குடைந்தது.
விக்கியிடம், வினோத் சொன்னவை மற்றும் இந்த டைரி இது இரண்டையும் சொல்ல முடிவெடுத்தாள். மனம் சற்று அமைதியடைந்தது.
இப்படியே தனக்குள் பிரச்சனைகளை அலசிக் கொண்டிருந்தவள் இரவு ஒரு மணிக்கு மேல் உறங்கினாள்.
மாணவர்களுக்குத் தேர்வுகள் நெருங்குவதால் தன் நேரத்தை முழுமையாக அவர்களுக்காகச் செலவிட்டாள். தன்னை நம்பி படிக்கும் பிள்ளைகளுக்கே முதல் உரிமை என திட்டமிட்டாள். அதிலும் அவளுக்குப் பிடித்த கணிதம் விட முடியுமா?
நாட்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. ஞாயிற்றுக் கிழமை வினோத்தைச் சந்திக்க வேண்டும். அதற்கு முன் விக்கியிடம் பேசலாம் என முடிவெடுத்தாள்.
“விக்கி போன் நம்பர் என்ன?” சாகரிடம் கேட்க … அவனோ ஆச்சரியமாய் பார்த்தான்.
“உன் கல்யாணத்துக்காக தான்டா” மிரட்டலான தொனியில் அவனிடமிருந்து வாங்கினாள்.
“விக்கி மற்றும் சாகர் இரண்டுமே டாம் அண்ட் ஜெர்ரி இதுல விக்கி போன் நம்பர் இவனிடம் எப்படி இருக்கு?” எனக் கேட்கத் தோன்றியது.
இதுக்கு ஒரு பஞ்சாயத்து தொடங்குவான். “முடியலடா சாமி” பிறகு கேட்கலாம் என விட்டுவிட்டாள்.
விக்கியிடம் தனியே பேச வேண்டும் எனக் கேட்க அவனும் பீச்சிற்குச் செல்லலாம் என்றான்.
அலைகள் மீண்டும் மீண்டும் சளைக்காமல் கரையைத் தொட்டு தன் முயற்சியை என்றும் கைவிட மாட்டேன் என உலகிற்கு உதாரணமாகத் திகழ்ந்தது.
முதல் முறை அலை கல்கி காலை தொட்டுச் செல்ல சில்லென்ற உணர்வு இதமாக இருந்தது. அடுத்த அலைக்கு என்ன கோபமோ கல்கியை இழக்க முற்பட விக்கி லாவகமாக அவளை விழாமல் பிடித்துக் கொண்டான்.
சிறு குழந்தை போல சிறிது நேரம் அலைகளில் விளையாடினாள். அவன் அவளைத் தொட்டு உதவியதை அவளும் தவறாக நினைக்கவில்லை. அவனிடமும் எந்த மாற்றமும் இல்லை.
பின்பு இருவரும் மணலில் அமர்ந்தனர். காற்று வீச கல்கிக்குக் குளிர் எடுத்தது. வெளியே காட்டிக் கொள்ளாமல் சமாளித்தாள்.
விக்கி புரிந்து கொண்டான். சூடாகக் காபி வாங்கிக் கொடுத்தான். மறுக்காமல் குடித்தாள். அப்பாடா என்றிருந்தது.
“என்ன பேசணும்?”விக்கி விஷயத்திற்கு வர
கல்கி வினோத் வீட்டிற்குச் சென்றதையும். அங்குக் கேட்டதையும் ஒன்றுவிடாமல் கூறினாள்.
இதைக் கேட்ட விக்கி சற்று பெரியதாகவே சிரித்துவிட்டான். சுற்றியிருந்த சிலர் இருவரையும் திரும்பிப் பார்த்தனர்.
“நீ வினோத் வீட்டுக்குப் போனதை பார்த்தேன். ஆனா எதுக்குனு கேட்கறது அநாகரீகமா இருக்கும் அதான் கேட்கலை” என்றான்
கல்கி மௌனமாகக் கேட்டபடி இருந்தாள்.
காபியை உறிஞ்சியவன் “வினோத் சொன்ன சாபக் கதை சுத்தப் பொய்” என்றான்
இதைக் கேட்ட கல்கி நிமிர்ந்து உட்கார்ந்தாள். பெரிய பாரம் மனதைவிட்டு இறங்கியது போலத் தோன்றியது.
“டைரி எங்க குடும்ப சொத்து இல்ல … ஆனா டைம் மிஷின் அவனுடைய லட்சியம். அவனோட மாமனாருக்கு நிறைய பணம் இருக்கு. சாதாரணமா இல்ல பல நாட்டுப் பணம் அவர் ஒரு சைன்டிஸ்ட். ”
“அப்ப டைம் மிஷின் வினோத் கிட்ட இருக்கா?” ஆர்வமாகக் கேட்டாள்.
“இருக்கலாம் .. எனக்குத் தெரியாது”
அவனே தொடர்ந்தான்“வினோத் அகல்யாவை காதலிக்கவில்லை ….. அவன் மாமனாரோட அளவு கடந்த சொத்து அவரோட சேர்ந்து வேலை செய்யணும்ன்ற ஆர்வம். அவன் மாமனாருக்கும் வினோத் அறிவு மேல ஒரு ஈர்ப்பு இருந்தது. மாமனார் மருமகன் ரெண்டு பேரும் அறிவாளி. அதுதான் இப்ப பிரச்சனை”
“டைரி பத்தி எப்படித் தெரியும்?” கல்கி
“சமீபத்துல உங்க வீட்டுக்கு பிலம்பர் எலக்டீஷியன் இப்படி யாராவது வேலை செய்ய வந்தாங்கலா?”
“ஆமா என் ரூம் ஏசி வேலை செய்யலை ரிப்பேர் செய்ய வந்திருந்தாங்க”
“அப்ப வீட்ல யார் யார் இருந்தாங்க?”
“வீட்ல வேலை செய்யும் பொண்ணு மட்டும்தான் இருந்தா”
“பதில் கிடைச்சுதா கல்கி. இது மாமனாரோட திருடற ஸ்டைல” கசப்பாக சிரித்தான். வெறுப்பு மண்டிக் கிடந்தது.
“சரி என் வீட்ல டைரி இருக்குனு எப்படி தெரிஞ்சது. டைரி இருக்குனு தெரிஞ்சா தானே வர முடியும்”
“ இதுக்கு என்கிட்ட சரியான பதில் இல்ல. ஆனா டைரி இருக்கானு செக் பண்ணக் கூட வந்திருக்கலாம்” எனத் தோளை குலுக்கினான்.
“அப்படி இருந்தா டைரியை அப்பவே திருடி இருக்கலாமே?” சந்தேகமாய் கேட்டாள்.
“உன்னை இதுல இன்வால்வ் பண்ண வைக்கிறாங்கனு தோனுது.” விக்கி சொன்னதும்
கல்கி வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி. மிடறு விழுங்கியதை போல நெளிந்தவள் “எல்லாம் இந்த டைரியால. அப்பா சொன்ன பேச்சை கேட்டிருக்கணும்” வருத்தப்பட்டாள்.
“அப்படி என்னதான் இருக்கு டைரில?”
சுற்றும் முற்றும் பார்த்தவள் தன் ஹேண்ட் பேக்கிலிருந்து ரகசிய பொக்கிஷத்தை எடுப்பது போல எடுத்துக் கொடுத்தாள்.
அதை ஒரு நொடியில் புரட்டி எண் குவியல்களைப் பார்த்த விக்கித் திரும்பிக் கொடுத்துவிட்டான். அவனுக்கு எதுவும் புரியவில்லை “இதுல என்ன இருக்கு ஸ்பெஷலா? டைம் டிரேவல் பத்தி எதாவது இருக்கா?”
“டைம் டிராவல் பத்தி சில தியரி இதுல இருக்கு. ஆனா எப்படி வேலை செய்யும்னு தெரியில” என்றாள் பக்கங்களைப் புரட்டியபடி
“எந்த வருஷ டைரி இது?” என்றபடி அவள் அருகில் நெருக்கமாக அமர்ந்து டைரியை எட்டிப் பார்த்தான்.
அவள் “ 1930 … ஆனா” என்றபடி அவனிடம் சில இடங்களைச் சுட்டிக் காட்டினாள்.
கையில் எழுதப்பட்ட கணக்குகளுக்கு மேல் அன்றைய தேதி குறிப்பிட்டிருந்தது. 1940 வரை இந்த டைரி பயன்படுத்தப்பட்டுள்ளது எனப் புரிந்தது.
அதைப் பார்த்தவன் “நீதான் முடிவு செய்யணும் கல்கி. வினோத்தைப் பார்க்க போ இல்ல எல்லாத்தையும் விட்டுடு”
“நான் விட்டாலும் இது என்னை விடாதுனு தோனுது” கண்களை டைரியிலிருந்து எடுக்காமலே பேசினாள்.
“எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை … ஒரே ஒரு ஆசைதான்” என நிறுத்தினாள்.
“என்ன?” என்பதாய் அவன் பார்க்க
“விக்கி சவிதா சாகர் கல்யாணம் பண்ணலாமா?” எனக் கேட்டவுடன் படக்கென்று கீ கொடுத்த பொம்மை போல எழுந்துவிட்டான்.
“எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன். இதுதான் சாக்குனு சவிதாவ மாத்த டிரை பண்ணாத” என்றுவிட்டு விறுவிறுவென்று கிளம்ப முயன்றான்.
“விக்கி ப்ளீஸ“” எனச் சற்றே சத்தமாக அழைத்தாள்.
“ஏம்பா காதலிச்சிட்டு இப்படி கைவிட்டுப் போரியே இது நல்லா இல்ல” எனச் சுண்டல் விற்கும் பாட்டி இலவசமாக அட்வைஸ் அள்ளி வீசியபடி சென்றார்.
இதைக் கேட்டதும் இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“கல்கி … சாகர் சவி கல்யாணம் இந்த ஜென்மத்துல நடக்காது. இனிமே இதைப் பத்தி பேசாத” எனத் தெளிவாகக் கூறினான்.
“ஏன்?” எனத் தொண்டைவரை வந்த கேள்வியை விழுங்கினாள்.
கல்கி ஞாயிறு அன்று வினோத் வீட்டிற்குச் சென்றாள்.
“டைம் டிராவல் செய்யத் தயாரா கல்கி” வினோத் கேட்க
“நான் தயாரா இருக்கேன் வினோத்” கல்கி ஸ்திரமாகப் பதிலளித்தாள்.
இவற்றை விக்கி தன் செல்போனில் பார்த்தபடி கேட்டுக் கொண்டிருந்தான். அவன் மனதில் சொல்ல முடியாத துக்கம் மனதை அழுத்தியது. கல்கி உயிர்க்கு நிச்சயம் ஆபத்து எனத் தோன்றியது.
காதல் இந்த நேரத்திற்குக் குறிப்பிட்ட விமானத்தில் உன் இதயத்திற்குள் தரையிறங்குவேன் எனச் சொல்வதில்லை. விக்கி விரைவில் காதலை உணர்வான்.
கல்கியின் சங்கு கழுத்தில் அணிந்திருந்த செயினில் பட்டன் கேமரா அழகான பெண்டண்ட் போல அனைத்தையும் பதிவு செய்தபடி ஊஞ்சலாடியது.
கணிக்கும் …