காலக் கணிதம் 8
விக்கி நெஞ்சில் கல்கி சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது . வினோத் வீட்டிற்குச் சென்று சட்டையைப் பிடித்து நான்கு அடி கொடுக்கலாம் என்று அனல் கொண்டு கொதித்த மனதை அடக்க வழியின்றி தனக்குள்ளே அரற்றினான்.
அறிவியல் என்பது சமூகத்துக்கு நன்மை பயக்குவதாக இருக்க வேண்டும். ஆனால் வினோத் மற்றும் அவன் மாமனார் அசோகன் போன்றவர்கள் அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் செய்யும் நாச வேலைகள் அத்துமீறல்களாகவே தோன்றின.
அதிலும் கல்கி அன்று சொன்ன வார்த்தைகள் விக்கியை அசைத்துவிட்டது. அவளுக்காகத் தான் அவன் மனம் இத்தனை துடிக்கிறது எனப் புரியாமல் இல்லை. கல்கியை அவன் காதலிப்பதை எண்ணி அவனே வியந்தான்.
கல்கியுடன் பீச்சில் பேசியது அனைத்தையும் வீட்டிற்கு வந்து அசைப் போட்டான்.
மறுநாள் தானே போனில் பேசி அவளைச் சந்திக்க அழைத்தான்.
“டைம் மிஷின் சம்பந்தமா எத்தனை சினிமா … கதைகள் வந்திருக்கு. அதைப் பார்க்கும் போது ஆசையா இருக்கு. நாமும் ஒருமுறை டைம் டிராவல் பண்ணா என்னனு?” கல்கி சொன்னதும்.
திடுக்கிட்டவனாக “வினோத் மாதிரி நீயும் உளற ஆரம்பிச்சிட்ட …” உரிமையுடன் கடிந்து கொண்டான்.
“இல்ல விக்கி நான் டைம் டிராவல்க்கு சம்மதிக்கப் போறேன்” உறுதியாகப் பதிலளித்தார்.
“வினோத்தை நம்ப முடியாது கல்கி … ” சங்கடத்துடன் சொன்னான்.
பதறியவனைப் பார்த்து முறுவலித்தவள் “நானும் அவனை நம்பலை ஆனா பிரச்சனை வந்தா அதுக்கு பேக்அப் பிளான் வேணும்.”
“என்ன சொல்ற?”
“சொல்றேன் விக்கி. முதல்ல நம்ம இரண்டு பேர் மட்டும் இல்லமா நம்பகமான இன்னும் ரெண்டு பேர் வேணும். ஒரு டீமா நாம செயல்படணும்”
அவள் சொல்வது சரிதான் என அவனுக்குத் தோன்றியது. இருவரும் இரண்டொரு நொடிகள் மௌனமாகச் சிந்தித்தபின் விக்கி “சவிதா” என்றும், கல்கி “சாகர்” என்றும் ஒரே சமயத்தில் கூறினார்கள்.
உடனே விக்கி முகம் கோப மோட்டிற்குத் தாவ அதைப் புரிந்தவளாக “உன் தங்கச்சியை அந்த ஒட்டக் குச்சிக்கே கட்டிவை. சாகருக்கு திரிஷா இல்ல சமந்தானு வேற பொண்ணு கிடைக்காமலா போயிடுவாங்க.”
முன்னொரு முறை இதையே அவள் கூறும்போது கோபம் வந்தது. ஆனால் இப்போது சிரிப்புதான் வந்தது.
கல்கி தொடர்ந்தாள் “இப்ப சாகர் இருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். நான் டைம் டிராவல் போக போறேன். திரும்ப வர முடியுமா முடியாதானு தெரியாது? ஒருவேளை வர முடியலைனா? என் பேரண்ட்ஸ்கிட்ட இதைச் சொல்ல நம்பகமான ஆள் தேவை. வேற யார் சொன்னாலும் அவங்க நம்ப மாட்டாங்க”
ஆனால் அவளால் திரும்ப முடியாமல் போனால் என்னும் எண்ணம் மனதை உறுத்தியது. நிச்சயம் வினோத் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் கல்கியைக் காப்பாற்ற முன் வர மாட்டான். இவளைவிட்டு மற்றொரு ஆளை தேடிப் பிடிப்பான். கல்கியை மீட்டெடுக்க மாட்டான்.
“இந்த ரிஸ்க் தேவையா உன்னால திரும்ப முடியாம போயிட்டா?” விக்கி ஆதங்கத்துடன் வினவினான்.
“ஹிட்லருக்கு என் மேல என்ன அத்தனை கரிசனம்?” என்றுதான் கல்கிக்குத் தோன்றியது. எனினும் வெளிக்காட்டக் கொள்ளவில்லை.
“நான் திரும்பி வரணும்னா அது உங்க மூணு பேர் கையில் தான் இருக்கு” என்றாள் பூடகமாக
“எல்லாத்தையும் இப்பவே சொல்ல முடியாது விக்கி … முதல்ல நம்ம டீமை தயார் செய்யணும்” என்றுவிட்டாள்.
விக்கியால் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஆனால் எப்படியும் சொல்ல மாட்டாள். மீண்டும் கேட்க அவனின் ஈகோ தடுத்தது.
வீட்டிற்குச் சென்றவனுக்கு இதே நினைவுகள் அலைக்கழித்தன. எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் தடுத்தது.
அடுத்த நாள் காலை அலுவலகம் கிளம்பும் முன் சவிதாவிடம் “மதியம் வெளியில போகணும் தயாரா இரு.” என்றான்.
சவிதா “என்னால வர முடியாது” என பட்டெனக் கூறினாள்.
அன்று இப்படிதான் உணவகம் போகலாம் என அழைத்தான். அங்கு எதிர்பாரா விதமாகப் பெண் பார்க்கும் படலம் நடந்தேறியது. அதுபோலத் தான் இன்றும் அந்த சங்கரைக் காணத்தான் அழைக்கிறான் என எண்ணினாள்.
“சவி ப்ளீஸ்டா” எனக் கொஞ்சலாகக் கோரிக்கை வைத்தான்.
சவிக்குஇவனிடம் ஏதோ ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளதாகவே கடந்த சில தினங்களாகத் தோன்றியது. எப்பொழுதும் கடுகடுப்பாக இருப்பவன் இப்பொழுது தன்மையாக நடந்து கொள்கிறான்.
இருந்தாலும் அவனை முழுமையாக நம்ப முடியாதவளாக “யாரைப் பாக்க போகணும்?” என முகத்தை உர்ரென்று வைத்தபடி கேட்டாள்.
“கல்கி” என்ற பதிலைக் கேட்டதும் வாயை பிளந்தாள்.
“வாயை மூடு டைனோசர் உள்ள போயிடப் போகுது” எனச் செல்லமாகத் தலையில் கொட்டினான் சிரித்தபடி. இன்னமும் நம்ப முடியாமல் விழித்தாள். விக்கி அலுவலகம் சென்றுவிட்டான்.
சவிதா கல்கிக்கு போனில் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பி விசாரித்தாள். மிகவும் முக்கியமான வேலை வந்து சேர் என கல்கியிடமிருந்து பதில் வந்தது.
“சாகர் வருகிறானா?” எனக் கேட்கத் தோன்றியது. ஆனால் கல்கி தன்னைப் பற்றி தவறாக நினைத்துவிடக் கூடாது என விட்டுவிட்டாள்.
கல்கி வேலை செய்யும் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் ஒரு ஓரமாக நால்வரும் சேர்ந்தனர் . சாகர் சவிதா இருவருக்கும் ஒருவரைப் பார்த்து மற்றவருக்கு அதிர்ச்சி. சவிதா வருவாள் என சாகர் எதிர்பார்க்கவில்லை.
கல்கி சவிதாவை புன்னகையுடன் எதிர் கொண்டாள். சவிதாவும் அவ்வாறே செய்ய. சாகரும் விக்கியும் ஆளுக்கு ஒரு திசையில் முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.
மதிய நேரம் என்பதால் பள்ளி வளாகத்தில் உதிர்ந்த பூச்சரம் போல இங்கும் அங்கும் சில மாணவர்கள் என வெறிச்சோடிக் காணப்பட்டது.
கல்கி தொண்டையை செருமியபடி “உங்க இரண்டு பேர் கிட்டையும் முக்கியமான விஷயத்தைச் சொல்ல போறேன். அது நம்ப முடியாத மாதிரி இருக்கலாம் ஆனா நம்பிதான் ஆகணும் வேற வழியில்ல”
“இன்னும் ஒரு கண்டிஷன் இங்க காதலுக்கு இடமில்ல” என்றபடி குறும்பு புன்னகையுடன் விக்கியை நோக்கினாள்.
சாகர் சவிதா இருவருக்கும் குபீரென்று வந்த சிரிப்பை அடக்கினர் .
தன்னைதான் குறிப்பிடுகிறாளோ என விக்குக்குச் சுறுக்கென்றிருந்தது.
பின்பு கல்கி நிதானமாக டைரி முதல் வினோத் வரை சொல்லி முடித்தாள். முதலில் சவி மற்றும் சாகருக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதிலும் தன் அண்ணன் வினோத் இப்படிச் செய்வான் எனச் சவி நினைத்துக் கூட பார்க்கவில்லை.
“கல்கி ஒரு வாரம் நல்ல துங்கி ரெஸ்டு எடு எல்லாம் சரியாகிடும்” என தன் தோளோடு அணைத்த சாகர் கவலை தேய்ந்த குரலில் கூறினான்.
இதையெல்லாம் எதிர்பார்த்த கல்கி டைரியிலிருந்த எண்களைக் காண்பித்தாள். இரண்டு சம்பவங்களையும் கூறினாள்.
அப்போது தடால் என்ற சத்தம். ஒருவன் ஐயோ என அலறினான். கூடைப் பந்து கம்பம் சாய்ந்தது. அங்கு வேலை செய்யும் ஊழியன் ஒரு நொடியில் நகர்ந்து தப்பினான். இருப்பினும் தலையில் இடித்து ரத்தம் லேசாகக் கசிந்தது. அனைவரும் சென்று அவனுக்கு உதவினர்.
எப்படி அத்தனை கணமான கம்பம் சாய்ந்தது என அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
அவன் விழுந்த நேரம் சரியாக 12 : 24. கல்கியின் ஸ்மார்ட் வாட்ச் அந்த குறிப்பிட்ட எண்களைக் காட்டியது. முன்னர் கல்கி டைரியை பார்க்க மூன்றாவது எண் 1224. மற்றவர்களுக்கும் காண்பித்தாள்.
சாகர் இவற்றை ஏற்கவில்லை. தற்செயலான விஷயமாகவே கருதினான். சவிதாவிற்கும் முழுமையாக ஏற்க இயலவில்லை. இருப்பினும் தன் சகோதரன் வினோத் பற்றி நன்றாக தெரியும். ஆதலால் மறுக்கவில்லை.
கல்கி அடுத்துச் செய்ய வேண்டியவற்றைக் கூறினாள். மற்ற மூவருக்கும் இது அசாத்தியமாகவே தோன்றியது.
“பைத்தியமா உனக்கு? இதுல ஒண்ணு மிஸ் ஆனாலும் மொத்தமா வாழ்க்கை முழுக்க களி திங்கணும்.” சாகர் ஏற்க முடியாமல் கத்தினான்.
“எனக்கு தெரியும்டா” அவனை ஆசுவாசப்படுத்த முயன்றாள் கல்கி
“அவன் சைன்டிஸ்ட்னு சொல்ற… அவன் நீ சொன்னதைக் கண்டுபிடிக்க முடியாதா? இதெல்லாம் சரியா வராது கல்கி முதல்ல கிளம்பு” என தைய்யாதக்காவென குதித்தான் சாகர்.
“சாகர் இதெல்லாம் நாம செய்யலைனா .. உன் அக்காவை மொத்தமா நாம இழந்திடுவோம்” முதல் முறை சாகரிடம் தன்மையாகப் பேசினான் விக்கி. அவன் சொற்களில் இருந்த அழுத்தம் இது உண்மை என உணர்த்தியது.
சாகர் கண்களில் நீர் கோர்க்க எதுவும் சொல்ல முடியாமல் கல்கி தோளில் சாய்ந்தான்.
“என் அக்காக்கு எதுவும் ஆகாம பாத்துகோ விக்கி” எனச் சட்டென விக்கி கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான் சாகர்.
இருவருக்கும் நடுவே இருந்த பனி சற்றே விலகியது. ஆனால் முழுமையாக அல்ல. விக்கி சாகர் கையை பிடித்து தைரியம் தந்தான்.
வேறுவழி தெரியவில்லை என்பதால் சாகர் அவர்கள் வழிக்கு வந்தான்.கல்கி இதிலிருந்து எந்த ஆபத்தும் இல்லாமல் வெளிவர வேண்டும் என்பதே மற்ற மூவருடைய எண்ணமாக இருந்தது. ஆதலால் கல்கி சொன்னவற்றை ஏற்றனர்.
ஞாயிறு சரியான நேரத்திற்கு வினோத் வீட்டிற்குச் சென்றாள்.
சோபாவில் அவள் அமர
வினோத் மனைவியிடம் “ஸ்டராங்கா டீ ப்ளீஸ்” என்றாள் கல்கி. அகல்யா டீ கொண்டுவர உள்ளே சென்றுவிட்டாள்.
வினோத் “டைரி பார்க்கணும்” என்றான்
கல்கி டைரியை அவனிடத்தில் நீட்டினாள்.
அந்த நொடி வினோத் போன் அலறியது டைரி வாங்காமல். போனை காதில் வைத்து “ஹலோ .. ஹலோ” என சிக்னல் சரியில்லாமல் பால்கனிக்கு நகர்ந்தான்.
கல்கி அவசரமாக நாய்க் குட்டியைப் பிடித்து படிகளில் இருந்து சாகரிடம் கொடுத்துவிட்டு தன்னிடத்தில் அமர்ந்து கொண்டாள். வாங்கியவுடன் நாய் வாயில் பிஸ்கட்டை திணித்தான். அது மௌனமாகியது.
“சிக்னல் சரியா கிடைக்கல” என்றபடி வினோத் கல்கி முன் அமர்ந்தான்.
“யார் டைம் டிராவல் செய்ய போறாங்க வினோத்?” கல்கி ஆர்வம் தாளாமல் கேட்க
“டைம் டிராவல் செய்ய நீ தயாரா கல்கி?” வினோத் அலட்சியமாகக் கேட்டான்
தன் வழிக்கு அவன் வந்துவிட்ட மகிழ்ச்சியில் “நான் தயாரா இருக்கேன் வினோத்” கல்கி ஸ்திரமாகப் பதிலளித்தாள்.
“டைரி?” என விட்ட இடத்தை அவன் தொடர
“நான் டைம் டிராவல் டிவைசை பார்க்கணும்” டைரி இன்னமும் அவள் வசமிருந்தது.
“ஷ்யூர் … கம், வில் ஷோ யூ ” எழுந்து வேறு அறைக்குச் செல்ல கல்கி அவனைத் தொடர்ந்தாள்.
அவன் டைம் டிராவல் செய்யும் கருவியை அவளிடம் காட்டினான். அவள் கண்கள் அகல விரிந்தன.
டைரியில் உள்ள சில கணக்குகளைக் கொண்டு மாற்றங்கள் செய்ய வேண்டியவற்றையும் கூறினான்.
கல்கியால் எப்படி தன் கொள்ளு தாத்தாவால் இவற்றைக் கண்டு பிடிக்க முடிந்தது என வியக்காமல் இருக்க முடியவில்லை.
விக்கியும் சவிதாவும் கூட நம்ப முடியாமல் வியப்பில் ஆழ்ந்தனர்.
கணிக்கும் …
Last edited: