காலக் கணிதம் 9
வினோத் முகத்தில் கால இயந்திரத்தை கல்கியிடம் காட்டுகையில் கர்வம் தாண்டவமாடியது. கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலம் என அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவன் நான் என்னும் இறுமாப்பு சற்றே அதிகமாகப் பரிமளித்தது.
காலப் பயண இயந்திரம் அழகு நிலையங்களில் இருக்கும் நாற்காலி போலச் சற்றே பெரியதாகச் சாய்ந்தும் அதன் முன்னே வருடம் இடம் போன்றவற்றைக் குறிப்பெடுக்கக் கணினி போன்ற அமைப்பும் கொண்டிருக்கும் என கல்கி எதிர்பார்த்தாள். அவள் சினிமா மற்றும் கதைகளில் கண்டவற்றைக் கொண்டு இப்படி கற்பனைச் செய்திருந்தாள்.
ஆனால் வினோத்தின் காலப் பயண இயந்திரத்தைக் கண்டவள் உண்மையில் அவனை மனதார பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவன் அறிவாற்றல் மெச்சதகுந்தாகவே இருந்தது.
வினோத் அவள் முகமாறுதல்களை உன்னிப்பாகக் கவனித்தான். அவளின் வியப்பு அவனுக்கு அந்த இயந்திரத்திற்கு நற்சான்றிதழை வழங்கிவிட்டது.
கல்கிக்கு தேநீரைக் கொடுத்தாள் அகல்யா.
“தேங்கஸ் அகல்யா.. உங்க ஹஸ்பெண்ட் ரியலி கிரேட்” என கல்கி தேநீரை வாங்கியபடி மனதார புகழ்ந்தாள்.
அந்த அறை முழுவதும் பல கடிகாரங்கள் இருந்தன. ஒவ்வொன்றும் வெவ்வேறு நாடுகளின் நேரங்களைக் காண்பித்தன. ஆராய்ச்சி கூடம் போலிருந்தது அறை.
வினோத் அவளிடம் கையில் அணியும் தங்க பிரேஸ்லட் போன்ற ஒன்றைக் காட்டினான். அதில் சிறியதாக இதய வடிவில் நீலக் கல் பதித்திருந்ததைக் காண்பித்தான்.
அதில் நீல வண்ணம் அவ்வப்பொழுது மிளிர்ந்தது. வினோத் லாவகமாக அந்த நீல கல்லின் நடுவில் அழுத்த அது இரண்டு பகுதியானது. அதைப் பார்க்க இதயம் இரண்டாக உடைந்தது போல இருந்தது.
இரண்டு பகுதியானதும் கீ கீ என ஒலி எழுப்பியது.
“இந்த பிரேஸ்லட்டை நீ போட்டுக்கணும். இந்த இன்னொரு பார்ட் என் கிட்ட இருக்கும். இது இரண்டும் காமா ரேஸ் மூலமா கனெக்ட் ஆகுது. இதை நீ மிஸ் பண்ணிடா திரும்ப வர முடியாது”
அனைத்தையும் பொறுமையாக கேட்டாள் கல்கி எந்த இடை கேள்வியும் இன்றி.
அடுத்து செல்போனைப் போன்று கருவியைக் காண்பித்தான். அது ஜிபிஎஸ் அமைப்புடன் இடம் மற்றும் வருடம் தேர்ந்தெடுக்கும்படி இருந்தது.
“இதில் தான் இன்னும் சில மாறுதல்கள் செய்யணும். அதுக்கு உன் தாத்தாவுடைய டைரி தேவை.”
“கொள்ளு தாத்தா” என அவன் வாக்கியத்தை சரி செய்தாள்.
சாகர் மெதுவாகத் தான் செய்ய வேண்டியவற்றைச் செய்து நாய்க் குட்டியை மீண்டும் வினோத் வாசல் கதவு அருகில் விட்டுவிட்டான். அதுவும் வீட்டினுள் ஓடிவிட்டது.
சாகர் படிகளில் இறங்கி அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் பின் பக்கமாக வந்து சுவர் ஏறி குதித்து சென்றுவிட்டான்.
சில மக்கள் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள நண்பர்கள் உறவினர்களுடன் தினமும் அளவளாவுவார்கள். ஆனால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் பெயர் கூடத் தெரியாது.
வினோத் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் பெரும்பாலும் இத்தகைய நபர்கள் வசிப்பதால் சாகர் வந்து சென்றதை யாரும் கவனிக்கவில்லை.
இந்த கட்டிடத்தின் பின்பகுதியில் காலி மனை இருப்பதால் இன்னமும் வசதியாயிற்று. அத்துடன் எங்கும் சீசீ கேமராவும் இல்லை.
முன் வாசலில் உள்ள வாட்ச்மேன் தனக்கென அமைக்கப் பெற்ற புறாக் கூண்டு போன்ற அறையில் மதியம் உணவு உண்டதும் சிறிது நேரம் நித்திராதேவியை ஆலிங்கனம் செய்வான்.
இவை அனைத்தையும் கல்கி கணக்கில் கொண்டுதான் தன் திட்டத்தை வகுத்தாள்.
சாகர் உச்சபட்ச பதட்டத்துடன் விக்கி மற்றும் சவிதா இருக்கும் இடத்தை வந்தடைந்தான். கட்டை விரலை உயர்த்தி வெற்றி என இருவருக்கும் செய்கையால் உணர்த்தினான்.
விக்கி தன் அலுவலகத்தில் ஓர் அறையில்தான் தற்காலிகமாக இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தான். ஞாயிறு என்பதால் கேட்க எவரும் இல்லை. விக்கி சில விடுமுறை நாட்களில் வேலைக்கு வந்துள்ளான். அதனால் செக்யூரிட்டிக்கு அவன் வருகையில் ஆச்சரியம் இல்லை.
மூவர் கண்களும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் கவனிக்கத் தொடங்கியது.
கல்கி தானாகவே டைரியை வினோத்திடம் கொடுத்தாள். பிரேஸ்லட்டை முன்னிருந்த டேபிளில் வைத்துவிட்டு டைரியை வாங்கிக் கொண்டான். டைரியில் ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்குத் திருப்பி அதிலிருந்த எண்களைக் கொண்டு சில கணக்குகளை வகுத்தான்.
“ இங்க நேரத்துக்கான கேல்குலேஷன் ரொம்பவே முக்கியமானது. இந்திய நேரமும் அமெரிக்க நேரத்துலையும் வித்தியாசம் இருக்கு இல்லையா? அதே பிளாணட்ஸ் அதாவது கோள்கள் எடுத்துகிட்டா பூமியில ஒரு நாள் என்பது மெர்குரில 1408 மணி நேரம் … வீனஸ்ல 5832 மணி நேரம். காரணம் அதன் குறைவான சுழற்சி.
மார்ஸ் 25 மணி நேரம், ஜீபிடர் 10, சேட்ரான் 11, யூரானஸ் 17, நெப்ட்யூன் 16 … இந்த கிரகங்கள் சுழற்சி எ லிட்டில் பிட் பாஸ்டர்.”
“உன் தாத்தா இதை அருமையான முறையில் விளக்கியிருக்கார். அதைச் சமன் செய்யும் முறை அபாரம்” என்றான்.
“இந்த டைரியை இதுக்கு முன்ன பாத்திருக்கியா?” கல்கி நீண்ட இடைவெளிக்குப் பின் பேசினாள்.
வினோத் பதில் சொல்லாமல் கண்களைக் கால இயந்திரத்திலிருந்து எடுக்காமல் புன்னகைத்தான்.
“பதில் சொல்லு?”
“கல்கி இதற்கான பதில் நீயே தெரிஞ்சிப்ப .. இப்ப இதைப் பத்தி பேச வேண்டாம். நீ இன்னும் பத்து நாள்ல கிளம்ப வேண்டி இருக்கும் தயாரா இரு” எனப் பேச்சை மாற்றினான்.
அவன் பதில் சொல்ல மறுப்பது கல்கிக்குப் புரிந்தது “சரி பத்து நாள்ல பள்ளி எக்சாம் முடிஞ்சிடும். எனக்கு ஒகே தான்” என்றாள்.
“கல்கி இந்த விஷயங்கள் இரகசியமா இருக்கணும். கண்டிப்பா உன்னைத் தவிர யாருக்கும் இந்த விஷயம் போகக் கூடாது” சாதாரணமாக அவன் சொன்னதே மிரட்டலாகத் தோன்றியது.
“கண்டிப்பா” என்றவள் “எனக்கு ஒரு சந்தேகம் என்றாள்”
“என்ன?” என்பதாய் அவன் பார்க்க
“என்னை ஏன் தேர்ந்தெடுத்த?”
“உன்னை எந்த வித்திலும் நிர்பந்தம்படுத்தவே இல்ல. இப்பக் கூட உனக்கு இஷ்டம் இல்லனா நீ போகலாம். எனக்கு ரெபரன்சுக்கு டைரி மட்டும் கொஞ்ச நாள் வேணும்” என்றான்.
அவன் சொன்னது உண்மையாக தோன்றவில்லை. மிகச் சிறந்த நடிகன் என மனதில் எண்ணிக் கொண்டாள்.
பிரேஸ்லட்டை கையில் எடுத்துப் பார்த்தாள். அதன் நீல நிறம் மிளிர்ந்தது. தன் இடது கையில் அதை லேசாக மாட்டிக் கொண்டாள். ஸ்மார்ட் வாட்ச்சை போல ஸ்மார்டாக கியூட்டாக இருந்தது.
நீல நிற கல்லை அழுத்த அது முன்பு போலப் பிரியவில்லை. வினோத் செய்தது போலவே மீண்டும் முயன்றாள். அப்பொழுதும் முடியவில்லை.
வினோத் அவளுக்கு மிகவும் நெருக்கமாக வந்து நின்றான். அவன் அருகாமையால் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
“இங்க கேமரா இருக்கு அதனால தான் வேலை செய்யலை” என பட்டென அவள் கழுத்து சங்கிலியை அறுத்தான்.
கல்கி முகம் வெளிறிப் போனது. எப்படி இவன் கண்டு பிடித்தான்? எனக் குழம்பி விழித்தவளை கண்டு அரக்கனைப் போலப் பலமாக நகைத்தான். அவன் பார்வையில் ஏளனம்.
கல்கி அப்படியே மயங்கி சரிந்தாள்.
விக்கி, சவிதா மற்றும் சாகர் மூவரும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வினோத்தின் நடவடிக்கையால் அதிர்ந்தார்கள். சில நொடிகளில் திரை கருப்பாகியது. ஆடியோ வீடியோ என எதுவும் இல்லை. கல்கிக்கு என்ன ஆனதோ என மூவர் இதயமும் பதறியது. சாகர் அவள் செல்போனை தொடர்பு கொண்டான். சுவிட்ச் ஆப் என பதில் வந்தது.
சாகர் கழுத்து நரம்புகள் புடைக்க “நான் அப்பவே சொன்னேன் இதெல்லாம் வேண்டாம்னு .. கேட்டியா?” என விக்கி சட்டையைப் பிடித்து இழுத்துச் சண்டையிட்டான்.
“எனக்கு மட்டும் இப்படியெல்லாம் ஆகும்னு தெரியுமா?” என விக்கி பதிலுக்கு எகிறி அவன் சட்டையைப் பிடித்தான்.
“உன்னாலதான் எல்லா பிரச்சனையும்” சாகர் விடுவதாக இல்லை.
“சாகர் நானும் டென்ஷன்ல இருக்கேன் அனாவசியமா சீன் கிரியேட் பண்ணாத” என கறுவினான்.
“ஷட் அப்” என கத்தினாள் சவிதா “முதல்ல வினோத் வீட்டுக்குப் போகலாம். கல்கிக்கு அங்க இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்து” என அவர்களை திரும்பிக் கூட பார்க்காமல் முன்னேச் சென்றாள்.
இருவரும் மௌனமாக அவளைத் தொடர்ந்தனர்.
சவிதா காரின் டிரைவிங் சீட்டில் அமர சாகர் அவளுடன் முன் சீட்டில் அமரலாம் என மறுபக்கம் சென்று கார் கதவைத் திறந்தான்.
விக்கி, சாகர் முதுகைத் தட்டி “தம்பி உனக்குப் பின் சீட்” என்பது போல கை காட்டினான்.
ஆத்திரத்துடன் டமார் எனக் கதவை சாற்றிய சாகர் பின்னே சென்று அமர்ந்தான்.
விக்கி முன்னே அமர்ந்தான். இருவரின் செயலையும் சவிதா கண்டும் காணாதது போல இருந்தாள். அவள் உள்ளத்தில் கல்கி முன்னுரிமை பெற்றுவிட்டாள். இந்த நேரத்தில் இவர்களின் சண்டையை கேட்பது தேவையற்றது எனக் காரை வேகமாக ஓட்டினாள்.
பதினைந்து நிமிடத்தில் வினோத் வீட்டை அடைந்தாயிற்று. மூவரும் லிப்டிற்கு காத்திராமல் படிகளில் அவசரமாக ஏறினர்.
காலிங் பெல்லை ஆத்திரத்துடன் ஐந்தாறு முறை அழுத்தினான் விக்கி.
வினோத் கதவைத் திறந்தவன் சிரித்த முகத்துடன் “ விக்கி சவிதா வாட் எ சர்பிரைஸ்? உள்ள வாங்க” என வரவேற்றான்.
பல நாள் காணாத தன் உறவுகளை கண்ட மகிழ்ச்சி அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“கல்கி எங்க?” விக்கிக் கர்ஜித்தான்
“யாரு கல்கி” நிதானமாக வினோத் கேட்க
“என் கல்கிக்கு எதாவது ஆச்சுனா உன்னைக் கொலையே செஞ்சிடுவேன்” என அடிக்க முற்பட்டான் சாகர்.
அவன் கையை லாவகமாகத் தடுத்து இறுக்கப் பிடித்த வினோத் “நீ யாருடா?” எனச் சந்தேகமாகக் கேட்டான். வினோத் செயலில் எந்த பதட்டமும் இல்லை.
சவிதா இவனுடன் பேசி பயனில்லை எனப் புரிந்தவள். வீடு முழுக்க தேடினாள். இறுதியாக கல்கிக்குக் கால இயந்திரத்தைக் காட்ட வினோத் அழைத்துச் சென்ற அறைக்குள் சென்றாள்.
உள்ளே சென்றவள் அதிர்ந்து போனாள். ஆராய்ச்சி கூடமாக இருந்த அறை தற்பொழுது படுக்கை அறையாகக் காட்சி தந்தது. பீரோ கட்டில் என மிகச் சாதாரணமாக இருந்தது.
குழப்பத்துடன் விக்கி என அழைத்தாள். அவள் குரலைக் கேட்டு விக்கியும் சாகரும் அறைக்குச் சென்று வாயைப் பிளந்தனர்.
இவை அனைத்தையும் அகல்யா சிலை போல நின்று வேடிக்கை பார்த்தபடி இருந்தாள். அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
“அண்ணி கல்கி எங்க அவ உயிரோட இருக்காளா? சொல்லுங்க அண்ணி ப்ளீஸ்” கண்ணீர் மல்க சவிதா கெஞ்சினாள்.
அகல்யா ஒருமுறை வினோத்தைக் கண்டவள் பின்பு “கல்கி யாரு?” எனக் கேட்கச்
சவிதா தாங்க மாட்டாமல் பெரியதாக அழுதுவிட்டாள்.
“வினோத் கல்கியை விட்டுடு .. அவளுக்குப் பதில் உன் ஆராய்ச்சிக்கு என் உயிரை எடுத்துக்கோ .. கல்கி எங்க இருக்கா சொல்லு?” சமரசம் பேசும் வகையில் விக்கி இறங்கி வந்தான்.
“கடவுளே … யார் இந்த கல்கி?” என வினோத் குழப்பமாக அவர்களைப் பார்த்து வினவ அடுத்த நொடி பளார் என அவன் கன்னத்தில் அறைந்தான் சாகர்.
கல்கி இந்த சம்பவங்களைக் கணினி திரையில் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கணிக்கும் …