• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
மாலைச் சூரியன் தனது சேவை முடிந்ததும் மெது மெதுவாக மேற்கு வானில் இறங்கிக் கொண்டிருந்தான்.

சூரியனது வேலை முடிகிறது என்பதைக் கூடுகளை நோக்கிப் பறக்கும் பறவைகளும், வீடு நோக்கிச் செல்லும் பசுக்களும், ஆலயங்களில் ஒலிக்கும் மாலை நேரத்துப் பூஜைக்கான மணியும், பறைசாற்றிக் கொண்டிருந்தன.

அதே நேரத்தில் வரிசை வரிசையாக நின்றிருந்த பனைமரங்களுக்கு ஊடாக ஊடறுத்துச் சென்ற ஒற்றையடிப் பாதையில் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு மாட்டு வண்டில்கள் பிரயாணப் பட்டுக் கொண்டிருந்தன.

மறைந்து கொண்டிருந்த சூரியனின் மஞ்சள் நிற மாலை நேரக் கதிர்கள் மாட்டு வண்டில்களில் இருந்தவர்கள் மீது மஞ்சள் பூசி அவர்களுக்கு மெருகேற்றிக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் மாட்டு வண்டில்களைப் பார்த்ததும் வயலில் முட்டையிட்டு இருந்த ஆட்காட்டிக் குருவிகள் பறந்து பறந்து கத்தத் தொடங்கி இருந்தது.

பொதுவாக மாலை நேரத்தில் கோவில் திருவிழாவுக்குப் புறப்பட்டு, இரவு முழுவதும் அங்கே சுவாமி தரிசனம் செய்து, மணிக் கடைகளை வலம் வருவதும் அங்கே ஏதாவது வாங்கிக் கொறிப்பதும் அனைவருக்குமே பிடித்த விஷயம்.

பௌர்ணமி தினமான இன்று வல்லிபுர ஆழ்வாரான மாயவர் கோவில் தீர்த்தத் திருவிழா அந்தத் திருவிழாவிற்கு இரவில் செல்வது தான் கனகாம்பரிக்கு அலாதிப் பிரியம்.

அவளுடைய எண்ணம் போலவே அவளது குடும்பமும் புவியரசனது குடும்பமும் வண்டி கட்டிக் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.

முதல் வண்டியில் சுந்தரவல்லியும் விஷ்ணுவும் மோகனாவும் இருக்க அழகரசன் வண்டிலைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

இரண்டாவது வண்டியை எழிலரசன் ஓட்டிக் கொண்டிருக்க மீனாட்சியும் மனோவும் கானப் பிரியாவும் அமர்ந்திருந்தாள்.

மூன்றாவது வண்டியைச் சின்னராசா செலுத்திக் கொண்டிருந்தார் வண்டிலில் கனகாம்பரியும் பர்வதப் பாட்டியும் அமர்ந்திருந்தார்கள்.
வண்டில் கம்பியில் கொழுவப் பட்டிருந்த கூண்டுக்குள் கண்மணி இருந்து சுற்றும்முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

நான்காவது மாட்டு வண்டிலைப் புவியரசன் ஓட்டிக் கொண்டு வந்தான்.
கனகாம்பரியும் புவியரசனும் அடிக்கடி பார்வையையும் பேச்சுக்களையும் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

“அத்தான் எனக்கு என்ன வாங்கித் தருவீர்கள்”

“உனக்குத் தானே பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுக்கிறேன்”

“உண்மையாகவா?”

“உண்மையாகத் தான்?”

“வெறும் பஞ்சு மிட்டாய் மட்டும் தானா?”

“வேறு என்ன வேண்டும் என்று சொல்லு வாங்கிக் கொடுக்கிறேன்”

“சுண்டல் வாங்கிக் கொடுங்கள் அத்தான்… அது மட்டும் இல்லை நிறைய சுண்டல் பொட்டலம் வாங்கிக் கொடுங்கள்… பிறகு விஷ்ணு என்னுடன் சண்டைக்கு வருவான்”

“அவன் இப்போதைக்கு உன்னிடம் சண்டைக்கு வர மாட்டான் அம்பரி… பெரியண்ணி ஒரு தூக்கிவாளி நிறையப் பலகாரம் நிரப்பி அவனிடம் கொடுத்து இருக்கிறார்கள் அதனால் நீ கவலைப் படாதே”

“உண்மையாகவா?”

“அம்பரி கொஞ்ச நேரம் இந்தத் தின்பண்டங்களைப் பற்றிப் பேசுவதை விட்டு அங்கே வானத்தைப் பாரேன் நிலவு எவ்வளவு அழகாக இருக்கிறது”

“ஆமாம் அத்தான் அப்படியே பாட்டி சுட்டுக் கொடுக்கும் தோசை போல நிலவு இருக்கிறது”

“என்னது”

“அத்தான் நிலவு அப்படித் தான் இருக்கிறது…"

"அது சரி... உன்னைப் போய்க் கேட்டேன் பார்..."

"அத்தான் நிலவு இன்னும் முழுமையாக வெளிச்சம் கொடுக்கவில்லை… இன்னும் நேரம் இருக்கிறது… பேசிய படியே கோவிலுக்கு வந்து சேர்ந்து விட்டோம்”
என்றபடி கீழே இறங்கி நின்று கோவில் கோபுரத்தைப் பார்த்துக் கை கூப்பினாள் கனகாம்பரி.

அனைவரும் வண்டிலை ஓரமாக நிறுத்தி விட்டுக் கை கால் அலம்பி விட்டு உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார்கள்.

சுவாமி தரிசனம் முடித்து விபூதி பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளியே வந்து வெண்மணலில் பாய் விரித்து அமர்ந்து கொண்டார்கள்.

கனகாம்பரிக்கு அருகே அமர்ந்திருந்த விஷ்ணு
“அக்கா… நீ சித்தப்பாவைத் திருமணம் செய்து கொண்டால் உன்னைச் சின்னம்மா என்றா அழைக்க வேண்டும்… ஆனால் என்னால் அப்படி அழைக்க முடியாது அக்கா”
என்றான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரவல்லி
“அடடா உங்கள் பழக்க தோஷத்தை மாற்றுவது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான் விஷ்ணுப்பா… உன் இஷ்டம் போல நீ அழைக்கலாம் கண்ணா…”
என்று சிரித்தாள்.

அவர்கள் அனைவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே கனகாம்பரிக்கு எழுந்து வா என்பது போல ஜாடை காட்டி விட்டு எழுந்து சென்றான் புவியரசன்.

அவன் கண் ஜாடையில் அழைப்பதைப் பார்த்த சுந்தரவல்லி லேசாகச் சிரித்தபடி கண்டும் காணாததும் போல இருந்தாள்.

அருகே இருப்பவர்கள் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு மெதுவாக நழுவிப் புவியரசனைத் தேடிக் கொண்டு போனாள் கனகாம்பரி.

கண்மணி இருந்த கூண்டை அவள் எடுக்க மறக்கவில்லை.

“கண்மணி… இந்த அத்தான் என்னை வரச் சொல்லிக் கண் காட்டி விட்டு எங்கே போனாரோ தெரியவில்லையே”

“கீகீ… கீகீ… கீகீ…”

“நீ கவலைப் படாதே கண்மணி… அத்தானிடம் சொல்லி உனக்கு ஏதாவது கொறிக்க வாங்கித் தருகிறேன் சரி தானா?”

“கீகீ… கீகீ… கீகீ…”

“ஆமாம் இந்த அத்தான் எங்கே போனார் இங்கே ஒரே கூட்டமாக இருக்கிறதே”
என்று தேடியவளின் பின்னே நின்று அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் புவியரசன்.

மணிக்கடைகள் வரிசையாகக் கண்ணைக் கவரும் அளவிற்கு அமோகமாக இருந்தன.

கனகாம்பரிக்கு முன்னால் தெரிந்த வர்ணக் கண்ணாடிகளில் அவளுக்கு பின்னால் நின்றிருந்த புவியரசன் தோற்றம் விழுந்தது.

“பார்த்தாயா கண்மணி நான் ஒருத்தி தேடுவது தெரிந்தும் பின்னால் நின்று வேடிக்கை பார்க்கிறார் இந்த அத்தான் இவரை என்ன செய்யலாம்”
என்று கண்மணிக்கு மட்டுமே கேட்குமாறு பேசியவள் சட்டென்று பக்கவாட்டில் திரும்பி ஒளிந்து கொண்டாள்.

ஏதோ சத்தத்தில் எங்கோ பார்த்து விட்டு மீண்டும் அவள் நின்றிருந்த பக்கம் திரும்பியவனோ அவளைக் காணாமல் சுற்றும்முற்றும் தேடத் தொடங்கினான்.

அவன் தன்னைத் தேடுவதை ஓரமாக இருந்து வேடிக்கை பார்த்தவளோ அங்கிருந்து மெல்ல நகர்ந்து வந்து அவனுக்குப் பின்னால் நின்று கொண்டாள்.

மெதுவாக அவனருகில் சென்று
“அங்கே யாரை அத்தான் தேடுகிறீர்கள்”
என்று சிரித்தபடி கேட்டாள்.

அவள் வேண்டுமென்றே தான் ஓரமாக மறைந்து நின்றிருக்கிறாள் என்பதை அறிந்தவனோ
வேண்டுமென்றே அவளுடன் வம்பிழுத்தான்.

“அதுவா அம்பரி கொஞ்ச நேரத்திற்கு முன்பாக இதே இடத்தில் ஊதா நிறப் பட்டுத் தாவணியில் ஒரு பெண் நின்றிருந்தாள்...அவள் என் கண்களுக்கு அப்படியே வானகத்தில் இருந்து வந்து குதித்த தேவதை போல் இருந்தாள்… அவளைத் தான் இரசித்துக் கொண்டிருந்தேன்”

“யார் அவள்… அத்தான் நீங்கள் என்னை விட்டு வேறு ஒருத்தியைப் பார்த்து இரசித்தீர்களா? நான் பார்ப்பதற்குத் தேவதை போல் இல்லையா? அதனால் தான் வேறொருத்தியைப் பார்த்தீர்களா? போங்கள் அத்தான் என்னுடன் பேசாதீர்கள்… “
என்றபடி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.

“பார்த்தாயா? கண்மணி யாரோ ஒருத்தி தேவதை போல் இருந்தாளாம் அதை இவர் பார்த்து ரசித்தாராம்… ஏதோ கொஞ்சம் கோப்பி நிறத்தில் இருக்கிறேன் மற்றபடி நானும் அழகு தான் தெரியுமா?”
என்றபடி தோள் பட்டையில் முகவாயை இடித்துக் கொண்டாள்.

அவளது பேச்சிலும் செய்கையிலும் பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டே சிரித்தான் புவியரசன்.

அவனது சிரிப்பில் மேலும் கடுப்பானவளோ
“அத்தான் சிரிக்காதீர்கள்… நீங்கள் நல்ல நிறமாக இருக்கிறீர்கள் என்பதால் ரொம்ப ஆடாதீர்கள் அத்தான்”
என்றபடி மூக்கை உறுஞ்சினாள்.

“ஏய் ஏய் இப்படி மூக்கை உறுஞ்சி முகத்தைச் சுருக்குவது தான் உங்கள் ஊரில் கோபமா?”

“ஏன் அத்தான் நீங்கள் என்ன பக்கத்து ஊரா?”

“சரி சரி சண்டை வேண்டாம் போதுமா?”

“என்னது சண்டை வேண்டாமா? தப்பிக்கப் பார்க்காதீர்கள் அத்தான்… நீங்கள் வேறொருத்தியை ரசித்தது எனக்குப் பிடிக்கவில்லை”

“அம்மா தாயே கொஞ்சம் குனிந்து நீ உடுத்தி இருக்கும் பாவாடை தாவணியைப் பார்த்து விட்டுப் பேசு”

“ஓகோ கதை அப்படிப் போகிறதா? நான் பாவாடை தாவணியில் அழகாகவே இல்லை என்று சொல்லாமல் சொல்கிறீர்களா?”

“அடிப்பாவி நான் எப்பொழுது அப்படி சொன்னேன். முதலில் சொன்னதைச் செய் அம்பரி”
என்றான் அவன் தனது தலையில் கையை வைத்துக் கொண்டு.

அவனைப் பார்த்து முறைத்தபடி தன்னைக் குனிந்து பார்த்தவளோ
“ஏன் என் பாவாடை தாவணிக்கு என்ன?”
என்று கடுப்புடன் கேட்டாள்.

“உன் பாவாடை தாவணிக்கு ஒன்றுமில்லை தாயே! அது என்ன நிறம் என்று பார்த்தாயா?”

“பார்க்காமலா உடுத்தி வந்தேன் அது ஊதா நிறம்”

“என்ன நிறம் அம்பரி”

“ஊதா நிறம்”
என்று சொன்னவளோ சட்டென்று நாக்கைக் கடித்தபடி அசடு வழிந்தாள்.

“அத்தான் என்னைத் தான் தேவதை என்றீர்களா? நீங்கள் ரசித்த பெண்ணும் நான் தானா?”
என்றபடி கண்களை விரித்தாள்.

அவளது முத்தைப் பார்த்தவன் ஒரு எட்டில் நெருங்கி அவளது காதுகளைப் பிடித்து வலிக்காமல் முறுக்கியபடி

“அறிவுக் கொழுந்து அம்பரி… உன்னைத் தான் சொல்கிறேன் என்பது கூடத் தெரியாமல் என்ன பேச்சுப் பேசினாய் இப்போது… எப்படி எப்படி நான் நல்ல நிறமாக இருப்பதால் ஆட்டம் போடுகிறேனா?”

“ஐயோ அத்தான் மன்னித்து விடுங்கள்”
என்றபடி சரணடைந்தாள்.

“அம்பரி நான் உன்னை விட்டு வேறு யாரைப் பார்க்கப் போகிறேன்… சும்மா பேச்சுக்குச் சொல்கிறேன் என்று நினைக்காதே… எனக்கு என்றுமே நீ தேவதை தான்”
என்றவனின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு மீண்டும் மன்னிப்புக் கேட்டாள்.

“சரி அதை எல்லாம் விடு… என்னைப் பற்றி நீ இப்படி நினைத்ததற்காக நான் பிறகு தண்டனை தருகிறேன்… இப்போது வேறொரு விஷயம் பேச வேண்டும்”

“என்ன விஷயம் அத்தான்”

“நம் திருமணத்திற்கு நாள் குறிப்பதற்கு முன்பாக நம் இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று சொந்தத்தினுள் தெரிந்தவர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.”

“அதற்கு என்ன அத்தான் நம் சம்பிரதாயப்படி ஜாதகம் பார்ப்பது வழமை தானே”

“ஏய் உனக்கு ஒன்றும் புரியவில்லையா?”

“ஏன் அத்தான் இதில் புரிய என்ன இருக்கிறது. இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் நன்றாகத் தான் இருக்கும்”

“நன்றாக இருந்தால் நல்லது தான் அம்பரி… ஆனால்…”

“ஆனால் என்ன அத்தான்”

“ஒரு வேளை ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது யாராவது ஒருவருக்குத் தோஷமோ குற்றமோ இருந்தால் நம் திருமணத்தை நடத்த மாட்டார்கள் அம்பரி…”

“என்ன அத்தான் சொல்கிறீர்கள்”

“ஏய் நீ ஏன் கவலைப் படுகிறாய்? உனக்குத் தான் நம் காதல் சுவாரஸ்யம் இல்லாமல் சேரப் போகிறதே என்ற வருத்தம் இருந்ததே… இப்போது பார் நம் திருமணம் நடக்குமா? நடக்காதா? தெரியவில்லையே”

“வாயை மூடுங்கள் அத்தான் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நம் திருமணம் நன்றாகத் தான் நடக்கும்”
என்றபடி கோபமாகத் திரும்பியவளின் கரத்தைப் பிடித்து நிறுத்தினான் புவியரசன்.

“விடுங்கள் அத்தான் நான் போகிறேன்.”

“எங்கே போகிறாய்”

“எங்கேயோ போகிறேன். கையை விடுங்கள் எல்லோரும் நம்மையே பார்க்கிறார்கள்”

“கோபத்தில் கூட நீ அழகாகத் தான் இருக்கிறாய் அம்பரி.”

“அத்தான் சமாதானப் படுத்தாதீர்கள் உங்களுடன் நான் பேச மாட்டேன்”

“அப்படியானால் சுண்டல் வாங்கித் தர வேண்டாமா?”

“தர வேண்டாம் போங்கள்”

“சரி நான் விஷ்ணுவுக்கு வாங்கிக் கொடுக்கிறேன்”
என்று அவளது கையை விட்டுச் சுண்டல் விற்கும் இடம் நோக்கிச் சென்றவனை நோக்கி அத்தான் என்று கத்தியபடி ஓடினாள் அம்பரி…

அவள் எப்படியும் வருவாள் என்பது தெரிந்தவனோ லேசாகச் சிரித்தபடி இரண்டு சுண்டல் பொட்டலங்களை வாங்கினான்.

அவனருகில் மூச்சு வாங்க நின்றவளோ
“அத்தான் இனிமேல் அப்படி எல்லாம் பேசாதீர்கள்”
என்றாள்.

“எப்படி எல்லாம் பேசக்கூடாது அம்பரி”

“கொஞ்சம் முதல் பேசினீர்களே அப்படிப் பேசாதீர்கள்”

“கொஞ்சம் முதல் என்ன பேசினேன்”

“அத்தான் கடுப்பேற்றாதீர்கள் நான் உங்களை மன்னித்து விட்டேன்.”

“அப்படியா சரி”

“என்ன அப்படியா சரி… அது தான் மன்னித்து விட்டேனே. சுண்டலைக் கொடுங்கள்”
என்றபடி கிட்டத்தட்ட அவனிடம் இருந்து சுண்டலைப் பிடுங்கி எடுத்தாள்.

அவளது செய்கையில் சிரித்தபடியே தலையை அழுந்தக் கோதியவன் அவளை அழைத்துக் கொண்டு போய் வெண்மணல் பரப்பில் அமர்ந்து கொண்டான்.

“ஏன் அத்தான் நிச்சயமாகவே ஜாதகப் பொருத்தம் சரியில்லை என்றால் திருமணத்தை நடத்த மாட்டார்களா?”

“ஆமாம் அம்பரி”

“அத்தான்…”

“ஆனால் அதெல்லாம் கல்யாணத் தரகர் மூலம் பார்க்கப்படும் திருமணத்திற்கு… நமக்கு இல்லை”

“புரியவில்லையே அத்தான்”

“காதல் திருமணம் செய்பவர்களுக்கு இங்கே எல்லாம் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதில்லை அம்பரி… அதனால் நமக்குப் பார்க்க மாட்டார்கள்”

“கொஞ்சம் முதல் ஏதோ சொன்னீர்களே”

“அது சும்மா உன்னை வம்பு இழுப்பதற்காக”

“நீங்கள் சரியான மோசம் அத்தான். இனிமேல் விளையாட்டுக்குக் கூட நம் திருமணம் பற்றி எதிர்மறையாகப் பேசாதீர்கள் அத்தான்”
என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னவளின் அருகே அவளறியாமல் நெருங்கி அமர்ந்து கொண்டு அவளைப் பார்த்தான் புவியரசன்.

திடீரென அவனின் ஸ்பரிசத்தை உணர்ந்தவள் திடுக்கிட்டுப் போய்த் தள்ளி அமர்ந்து கொண்டாள்.

“ஏன் அம்பரி”

“அத்தான் இது கோவில் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்”

“யாராவது பார்த்தால் நானும் நீயும் திருமணமான புது ஜோடிகள் என்று நினைப்பார்கள்”

“ஓ அப்படியா… இப்படித் தான் புதிதாகத் திருமணம் ஆன பெண் பாவாடை தாவணி உடுத்தி இருப்பாளா?”

“அதை விடு அம்பரி… ஆனால் உன் முகம் அந்தப் பால் நிலா போலப் பிரகாசமாக இருக்கிறது”

“உண்மையாகவா அத்தான்”

“பின்னே பொய்யாகவா?”

“அத்தான் உங்களை ஒன்று கேட்பேன் சிரிக்காமல் பதில் சொல்வீர்களா?”

“கேள் சிரிக்க வேண்டுமா இல்லையா என்று பிறகு பார்த்துக் கொள்ளலாம்”

“அத்தான் அங்கே நிற்கும் போது என்னைப் பார்த்து நீங்கள் ஒன்று சொன்னீர்களே அது உண்மையா அத்தான்”

“என்ன சொன்னேன் அம்பரி”

“அது தான் அத்தான்… கோபத்தில் கூட நீ அழகாக இருக்கிறாய் என்று சொன்னீர்களே அது உண்மையா? அல்லது என்னைச் சமாதானப் படுத்தச் சொன்னீர்களா?”
என்று தயங்கித் தயங்கிச் கேட்டவளைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தான் புவி.

அவன் சிரிப்பதைப் பார்த்தவளோ
“சிரிக்காதீர்கள் அத்தான்”
என்று சிணுங்கினாள்.

அவளது கையை எடுத்துத் தனது கரங்களுக்குள் வைத்துப் பொத்திக் கொண்டவன் அவளது விழிகளுக்குள் பார்த்தபடி
“உன்னிடம் நான் இதுவரை பொய் உரைத்ததே இல்லை அம்பரி”
என்றான்.
அவளும் அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

வானில் காய்ந்து கொண்டிருந்த வெள்ளி நிலா பூமில் இருந்த அந்த இளம் காதல் ஜோடிகளைப் பார்த்து நாணி மெல்ல முகில்களிடையே மறைந்தது.

அதே நேரத்தில் தொலைவில் நின்றிருந்த ஐஸ் வண்டியில்

“நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா வராமல் வந்த என் தேவி…
நானும் நீயும் நாளை தான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்…”
என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"தாவணிப் பெண்ணே தாரகைக் கண்ணே தந்து விட்டேன் என்னை

தாலி கட்டித் தாரமாகும் முன்பே என் தாயாய்க் கண்டேன் உன்னை

தவம் செய்தால் கிடைக்கும் வரம் போல எனக்கெனத் தந்தான் இறைவன் உன்னை

தரணி உள்ள காலம் வரையில் உன் இதயத்தில் சுமப்பாயா என்னை"

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top