• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சக்கரையின் உதிரம் 1 - #திரமிசு

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
அத்தியாயம் 1

தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்தாள் மித்ரா.

மித்ரா சுதாகர். நம்ம ஹீரோயின். அவ யாரு என்ன செய்யுறா அப்டிங்கிறதை கதையோட போக்கிலேயே பார்க்கலாம்.

வெளியே தெரிந்த காட்சிகள் மெதுவாக நகர ஆரம்பித்தன. சில நிமிடங்களில் காட்சிகளின் வேகம் கூட கூட மெல்ல அவள் அமர்ந்திருந்த விமானம் வேகம் பிடித்து மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தது. விமானம் தரையில் இருந்து மேலேறி ஒரு உயரம் அடைந்து நிலைப்படும் வரை அடி வயிற்றில் விவரிக்க முடியாத ஒரு உணர்வு ஏற்படும். அதை எப்போதுமே ரசிப்பாள் மித்ரா. அந்த உணர்வுகளுடனே அவள் வெளியில் பார்ப்பதை தொடர்ந்தாள். சற்று முன் தரையில் இருந்த போது பூத கிங்கரணர்கள் போல பெரிது பெரிதாக இருந்த மற்ற விமானங்கள் சிறிது சிறிதாக தெரிய ஆரம்பித்து இப்போது மறைந்தே விட்டிருந்தன.

வாழ்க்கையும் இப்படி தான் என்று எண்ணிக் கொண்டாள் மித்ரா. நாம் அருகிருந்து பார்க்கும் போது பெரிதாக தெரியும் கஷ்டமோ சந்தோஷமா சற்று விலகி நின்று பார்த்தால் ஒன்றும் இல்லாதது போலவும் காலத்தின் போக்கில் மறைந்தே போகும் இயல்பும் இருக்கிறது என்று எண்ணியபடி மெல்ல கண்களை மூடினாள்.

என்ன இது இவ்வளவு ஆழ்ந்த கருத்து அதுவும் இவ்வளவு காலையில் என்று தன்னை தானே மனதில் பரிகாசித்துக் கொண்டாள். பின்னே விடியற்காலை விமானம் என்று இரவு முழுவதும் சரியான தூக்கமின்றி மூன்று முழூ எஸ்ப்ரெஸ்ஸோ குடித்தால் இது என்ன ஓஷோ போல புத்தகமே எழுதலாம் என்ற எண்ணம் தோன்றி மறைய மெல்ல நித்திரைக்கு செல்லலானாள்.

அந்தோ பாவம் அவளுக்கும் தூக்கத்திற்கும் அன்று ராசியில்லை போல. சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த குழந்தை சிணுங்கலில் ஆரம்பித்து அழுகைக்கு போனது. கண்கள் திறந்து இவள் பார்க்கும் போது அந்த குழந்தையை வைத்திருந்த அதன் தந்தை அதை சமாளிக்க தெரியாமல் தவிப்பது புரிந்தது. இன்னும் சில நிமிடங்களில் வேறு இருக்கையில் இருக்கும் அதன் தாய் வந்து உதவுவாள் என்று எண்ணி இவள் மீண்டும் தூங்க முயன்றாள்.

ஆனால் நேரம் சென்றதே ஒழிய யாரும் உதவிக்கு வரவில்லை அந்த குழந்தையும் அழுகையை நிறுத்தவில்லை. விமானத்தில் இருப்பவர்களுக்கு காலை உணவை விநியோகித்துக் கொண்டு இருந்த விமானப் பணிப் பெண்களாலும் உதவ முடியவில்லை.

தூக்கம் நன்றாக கலைந்துவிட அந்த தந்தை குழந்தை ஜோடியை கவனிக்க ஆரம்பித்தாள் மித்ரா. அவள் பார்த்தவரையில் அவனுக்கு அந்த குழந்தையை கையாளவே தெரியவில்லை. ஏதோ அணு குண்டை வைத்திருப்பது போல தள்ளியே வைத்திருந்தான். அவன் பிடிக்கும் விதத்திலேயே குழந்தை இன்னும் மிரண்டது போல இருந்தது. இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த இருக்கையில் குழந்தையின் பையை வைத்திருந்தான். அந்த இருக்கை தான் தாயின் இருக்கை என்று மித்ரா ஆரம்பத்தில் நினைத்து இருந்தாள். ஆனால் இப்போது பார்த்தால் அப்படி யாரும் அந்த விமானத்தில் இருப்பது போல தெரியவில்லை.

இவன் நிஜமாகவே அந்த குழந்தையின் தந்தை தானா என்ற சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது மித்ராவிற்கு. ஆனால் அந்த குழந்தைக்கு உரியவன் அவன் இல்லாவிட்டால் லண்டன் விமான நிலையத்தில் இவனை இந்த விமானத்தில் ஏறவே விட்டிருக்க மாட்டார்கள். உரிய ஆவணங்கள் அவனிடம் இருந்ததால் தான் லண்டனில் இருந்து சென்னை சென்று கொண்டிருக்கும் இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் அவனையும் குழந்தையையும் அனுமதித்து இருப்பார்கள்.

இருந்தாலும் முன் பின் அனுபவம் இல்லாதவன் எப்படி இப்படி ஒரு சிறு குழந்தையை (உருவத்தை வைத்து பார்த்தால் கிட்ட தட்ட ஒரு வயது போல தெரிந்தது) எப்படி இவன் பத்து மணி நேர விமான பயணத்தில் அழைத்து வந்திருக்கிறான்? என்ன தைரியம்? நன்று பழகிய பெற்றோருக்கே அது அசாத்திய காரியம். சில நேரம் குழந்தைகளை எடுத்து செல்லும் பெற்றோர் வெளி நாடுகளில் சக பயணிகளுக்கு மிட்டாய்களோ சத்தம் ரத்து செய்யும் காதணிகளோ கொடுத்து மன்னிப்பு வேண்டுகிறார்கள் என்று படித்து இருக்கிறாள் மித்ரா.

அப்படி பட்ட கடினமான காரியத்தை இவன் எப்படி மேற்கொண்டான்? அவனை ஆராய்ந்தாள் மித்ரா. பின் இருபதுகளில் இருப்பான். ஓரளவு வளமான குடும்பத்து வளர்ப்பு என்பது அவன் உடைகளில் அவன் முக பாவங்களில் தெரிந்தது. அமர்ந்து இருந்ததால் உயரம் தெரியவில்லை. ஆனால் அவன் கால்களின் நீளம் வைத்து ஓரளவு உயரமானவனே என்று கணித்தாள். உடற்கட்டு கட்டுக் கோப்பாக இருப்பது போல இருந்தது. கை விரலைகளை பார்த்தால் தன் தோற்றத்தில் கவனம் செலுத்துபவன் என்பது தெரிந்தது. அப்படியே அவன் முகத்தை ஆராய்ந்தாள். ஏனோ அந்த திருந்த வெட்டப் பட்டிருந்த சிகையுடன் திருத்தமான புருவத்துடன் சற்றே நீண்ட மூக்கும் அழுத்தமான உதடுகளின் பின்னால் ஒரு மெல்லிய சோகம் இழை ஓடியது போல இருந்தது மித்ராவிற்கு. இந்த வயதில் என்ன சோகம் இவனுக்கு என்று எண்ணியவள் அது சரி நீ எப்படியாம் என்ற மனதின் குரலில் ஆராய்ச்சியை தொடர்ந்தாள்.

இன்னும் அவனால் அந்த குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. குழந்தையை ஒரு தொடையில் இருத்தி ஒரு கையால் பற்றியபடியே மற்றொரு கையால் அருகில் இருந்த பையில் இருந்து எதையோ எடுக்க முயன்று கொண்டிருந்தான். குழந்தை நெளியவும் அவனால் இரண்டையும் செய்ய முடியவில்லை.

மித்ராவிற்கு உதவ வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி எடுத்துக் கொள்வானோ என்று தயக்கமாகவும் இருந்தது. இந்த காலத்தில் யாரும் யாரையும் நம்புவது இல்லையே! அதுவும் குழந்தைகள் விஷயத்தில்!! நடப்பவைகளும் அதற்கு தகுந்தார் போல தானே இருக்கின்றன. இருப்பினும் மனது தாளாமல் கையை நீட்டினாள் மித்ரா.

"குழந்தையை என்னிடம் தாருங்கள் இல்லை பையில் என்ன எடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள். நான் உதவுகிறேன்."

திரும்பி அவளை முதல் முதலாக பார்த்தான் அவன். அவன் முகத்தில் அவள் சொல்வதை புரிந்துகொண்டது போல கூட தெரியவில்லை. சில கணங்களின் பின் மீண்டும் கேட்கலாமா என்று அவள் யோசிக்கும் போதே ஏதோ யோசனைக்கு பின் குழந்தையை அவளிடம் நீட்டினான். இவள் வாங்கவும் ஊவ்ப் என்று பெருமூச்சுடன் நெட்டி முறித்தான்.

அவனை மித்ரா ஆச்சரியமாக பார்த்தால் மித்ராவை அவன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தான். முக்கியமாக அவள் கையில் சமர்த்தாக கை சப்பிக் கொண்டிருந்த குழந்தையை.

"உங்களுக்கு ஏதேனும் மாயமந்திரம் தெரியுமா? இவ்வளவு நேரம் அடங்காதவன் உங்கள் கைகளுக்கு வந்தவுடனே அமைதியாகி விட்டானே." என்று ஆச்சரியமாக கேட்டான் அவன்.

"அதெல்லாம் இல்லை. நாம் குழந்தையை பிடிக்கும் விதத்தில் தான் இருக்கிறது. இப்படி நம்மோடு சேர்த்து பிடித்தால் அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள்." என்று பிள்ளையை தட்டிக் கொடுத்தபடி சொன்ன மித்ரா "இது தற்காலிகம் தான். அவன் கை மாறிய வித்தியாசத்தில் அமைதியாக இருக்கிறான். அவனுக்கு சீக்கிரம் உணவு தந்துவிடுங்கள் இல்லையேல் மீண்டும் ஆரம்பித்துவிடுவான்." என்று மிரட்டவும் செய்தாள்.

மறுபடியுமா என்ற மிரட்சியுடன் வேகவேகமாக பாட்டிலை எடுத்து அதன் மேல் ஒட்டியிருந்த அளவுகளின் படி பால் கலக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு முறையும் அவன் அதில் இருந்த குறிப்புகளை பார்த்து பார்த்து செய்த விதமே சொன்னது இது அவனுக்கு பழக்கமற்ற செயல் என்று.

"பாப்பா பெயர் என்ன?" என்று மெல்ல பேச்சு கொடுத்தாள் மித்ரா மனதில் தோன்றியதை பற்றி எதுவும் சொல்லாமல்.

"ஆதவன்." என்று சொன்னவன் குரலில் இருந்தது என்ன? வலியா? வேதனையா? ஆனால் அந்த பாவம் மித்ராவை தாக்கியது என்னவோ உண்மை.

அவன் கலந்து கொடுத்த பாட்டிலை கொண்டு குழந்தையை அவள் மடியிலேயே வைத்து கொடுத்தாள் மித்ரா. அவன் குடித்து முடித்ததும் தோளில் தட்டி ஏப்பம் வரவும் மடியில் இருத்திக் கொண்டாள். இந்த சாதரண செயல்களால் அவன் பாவம் ஏற்படுத்திய அசாதாரண உணர்வுகளை கடக்க முயன்றாள் மித்ரா.

இது எதையும் உணராமல் அவள் செய்வதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தவன் "உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?" என்றான் ஒரு பிரமிப்புடன்.

தலை நிமிர்ந்து பார்த்த மித்ராவின் முகத்தில் ஒரு வலியின் சாயல் வந்து போக தலையை திருப்பி வெளியே பார்த்தபடி "ஒன்று கூட இல்லை" என்றாள் மெல்லிய குரலில்.

ஏதோ தோன்ற அவளை ஆராய்ந்தவன் அவளின் மெட்டியற்ற கால்களையும் வெறும் கழுத்தையும் பார்த்து தன் கேள்வியின் மடத்தனத்தை உணர்ந்தான்.

"சாரி. நீங்கள் எல்லாமே தெரிந்தது போல செய்யவும்...." என்று அவன் தயங்கவும் "எனக்கு இல்லை ஆனால் பார்த்துக் கொண்ட பழக்கம் இருக்கிறது." என்றதோடு முடித்துக் கொண்டாள்.

வயிறு நிரம்பிய நிலையில் குழந்தை தானாக கண்கள் சொருகி மித்ராவின் கைகளிலேயே தூங்கிவிட்டான். அதே நேரம் அவர்களுக்கான உணவுடன் விமான பணிப்பெண் வரவும் இருவருக்கான உணவையும் சைவமா அசைவமா என்று கேட்டு பெற்றுக் கொண்டான் அவன். அதே பணிப்பெண்ணிடம் குழந்தையை படுக்க வைக்கும் பாசிநெட் தருமாறு வேண்டினாள் மித்ரா. அவள் அதை எடுத்து வந்து தரவும் அதில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு உணவு உண்ண தொடங்கினாள். இருவருமே என்னவோ அந்த குழந்தையின் பெற்றோர் போல இருந்தன அவர்களின் நடவடிக்கைகள். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் மித்ரா.

அவள் செயல்களையே பார்த்துக் கொண்டிருந்தவன் "இது எதுவுமே எனக்கு தெரியாதே! இப்படியெல்லாம் தருவார்களா என்ன?" என்றான் ஆச்சரியமான குரலில்.

"இது தெரியாமலா குழந்தையை தூக்கிக் கொண்டு விமானத்தில் கிளம்பிவிட்டீர்கள்? எப்படி இப்படி ஒன்றும் தெரியாத உங்களிடம் குழந்தையை குடுத்தனுப்பினாள் இவன் அம்மா?" என்று சிறு காட்டத்துடன் கேட்டாள் மித்ரா. அவளுக்கு என்ன வலியோ வேதனையோ! அவள் எண்ணங்கள் அவளுக்கு தான் தெரியும்.

"என்னிடம் தரலாமா கூடாதா என்று முடிவு செய்யும் நிலையில் அவள் இல்லை" என்றான் கசங்கிய முகத்துடன்.

ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது மித்ராவிற்கு அவன் முகத்தில் இருந்த வலியை கண்டு. அவன் பாவங்களை வைத்து பார்க்கும் போது இந்த சின்ன குழந்தையின் தாய் ஏதோ பெரும் சிக்கலில் இருக்க வேண்டும் அல்லது இப்போது இந்த உலகில் இல்லை. ஐயோ பாவம் என்று இருந்தது நிர்மலமாக தூங்கும் அந்த குழந்தையை பார்க்கும் போது.

இருப்பினும் அவன் மனைவிக்கு ஏதேனும் ஆகி இருந்தால் கூட இந்த ஓர் ஆண்டு வரை குழந்தையை இவன் கையாண்டதே இல்லையா? அப்படி பட்டவன் எத்தகைய தகப்பனாக இருப்பான்? உண்மையிலேயே இவன் இந்த குழந்தையின் தகப்பன் தானா? ஏன் இப்படி திணறுகிறான்? மீண்டும் சந்தேகம் வந்தது மித்ராவிற்கு.
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
சூப்பரான ஆரம்பம் 👌

அந்த அவன்... நெடியவனோட பேர் என்னப்பா? 🧐

அப்படி என்ன பிரச்சினை? 🤔

ஆதவனோட அம்மா எங்க? 🧐

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
 
  • Like
Reactions: MK8

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
நன்றி... இன்று இரவு சந்திக்கலாம்
 

MK20

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
90
29
18
Tamil nadu
கதை தொடக்கம் அருமை... பாவம் டா நீ ... ஒரு குழந்தையை ஹேண்டில் பண்ணத் தெரியாம இருக்கியே... உன்ன என்ன னு சொல்றது...
 
  • Like
Reactions: MK8

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
கதை தொடக்கம் அருமை... பாவம் டா நீ ... ஒரு குழந்தையை ஹேண்டில் பண்ணத் தெரியாம இருக்கியே... உன்ன என்ன னு சொல்றது...
பச்ச பிள்ளைங்க அவன்