• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சக்கரையின் உதிரம் 2 - #திரமிசு

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
அத்தியாயம் 2



சிறு குழந்தைகளை கையாண்டு பழக்கம் இருந்த மித்ராவிற்கு ஆதவனின் உறக்கம் சில மணி நேரம் தான் இருக்கும் என்று தோன்றியது. அதை சொல்லி ஆதவனை வைத்து இருந்தவனிடம் உறங்கி ஓய்வெடுக்க சொன்னாள். அவளும் அப்படியே செய்தாள்.

கடந்த கால் மணி நேரத்தில் அவள் செய்த மாயாஜாலத்தை பார்த்து அசந்துவிட்டிருந்த அவனும் எதிர் பேச்சு இல்லாமல் அவள் சொல் பேச்சு கேட்டு கண்களை மூடிக் கொண்டான்.

மித்ராவின் சொல்லை மெய்ப்பிப்பது போல ஒரு மணி நேரத்திலேயே விழித்துவிட்டான் ஆதவன்.

மீண்டும் குழந்தையை சமாளிக்க கஷ்டமாக இருக்கவே மித்ராவை பரிதாபமாக பார்த்தான் அவன்.

குழந்தையை வாங்கியவள் அவனுக்கு டயப்பர் மாற்ற வேண்டும் என்று உணர்ந்து வேண்டியதை கேட்டு வாங்கிக் கொண்டு கழிப்பறையினுள் சென்றாள். மித்ராவிற்கு நன்றாகவே தெரிந்துவிட்டது அவனால் இதை செய்ய முடியாது என்று. "அந்த வேலைக்கு இவன் சரிப்பட்டு வரமாட்டான்" என்று சினிமா பாணியில் மனதினுள் சொல்லிக் கொண்டே வேண்டியதை செய்தாள். பொக்கை வாய் சிரிப்புடன் அவள் தோள் மீது சாய்ந்திருந்த குழந்தையுடன் இருக்கையில் அவள் வந்து அமர அவளையே ஏதோ வேற்று கிரக வாசியை பார்ப்பது போல பார்த்தான் அவன்.

"எப்படி? எப்படி உங்களால் இதையெல்லாம் செய்ய முடியுது? முக்கியமா இவன் எப்படி உங்க கிட்ட அழாம இருக்கான்? உண்மையை சொல்லுங்க. உங்களுக்கு ஏதோ மந்திரம் தெரியும் தானே?" அவன் குரலில் இருந்த நம்பாத தன்மை அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது.

"அதெல்லாம் இல்லை. ஆனால் நீங்க ஒன்று சொல்லுங்கள். இப்படி குழந்தையை பற்றி ஒன்றுமே தெரியாமல் எப்படி அவனை தைரியமாக தூக்கிக் கொண்டு விமானத்தில் வந்தீர்கள்? இது நாள் வரை நீங்கள் இவனை பார்த்துக் கொண்டதே இல்லையா? அப்படியானால் யார் கவனித்துக் கொண்டது? அவர்கள் எங்கே?" என்று இதுவரை மனதில் இருந்த அனைத்தையும் கேள்விகளாக அடுக்கிவிட்டாள்.

{ஒரு வேளை கணக்கில் வீக்கோ? ஒன்று சொல்லுங்கள் என்று சொல்லி இவ்வளவு கேள்வி கேட்கிறாள்? சரி விடுங்க.. நமக்கும் இதுக்கெல்லாம் பதில் வேணுமே. என்ன சொல்லுறான்னு பார்ப்போம்.}

அவன் முகத்தில் விவரிக்க முடியாத அளவு வேதனை வந்து அமர்ந்தது. ஏதேதோ எண்ணங்களின் பிடியில் அவன் கட்டுண்டு இருப்பதை உணர்ந்த மித்ரா இதற்கு மேல் எதுவும் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்து குழந்தைக்கு விளையாட்டு காண்பிக்க ஆரம்பித்தாள்.

சில நிமிடங்களுக்கு பின் அவனே பேச ஆரம்பித்தான். இப்போது அவன் உணர்வுகள் சற்று கட்டுக்குள் வந்திருந்து போல தெரிந்தது.

"உங்கள் கேள்விகளுக்கு அப்படியே பதில் சொல்கிறேன். நான் இவனை அழைத்து வரவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். இது நாள் வரை நான் இவனை பார்த்துக் கொண்டதே இல்லை. இன்னும் சொல்லப் போனால் இரண்டு நாட்களுக்கு முன் தான் நான் இவனை நேரில் சந்தித்ததே. அது வரை வீடியோ கால் மட்டும் தான். அப்போதும் சிறு குழந்தைக்கு மொபைலின் ஒளி நல்லது இல்லை என்று பின் காமெராவில் தான் இவனை பார்ப்பேன். அதனால் இவன் என்னை அதிகம் பார்த்ததே இல்லை. இது நாள் வரை இவனை இவன் அப்பா விஜய் பார்த்துக் கொண்டான். அவன் மனைவி திவ்யாவின் உதவியுடன். இப்போது அவர்கள் இருவரும் இந்த உலகத்தில் இல்லை. சென்ற வாரம் நடந்த ஒரு விபத்தில் அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர்." என்று சொல்லிக் கொண்டே வந்தவன் குரல் கமறியது. கண்களும் கலங்கிவிட்டன.

என்னது? இந்த சின்ன குழந்தையின் பெற்றோர் இப்போது இந்த உலகில் இல்லையா? என்ன அநியாயம்? பாவம் இந்த குழந்தை. ஒரே நேரத்தில் பெற்றோர் இருவரையும் இழந்து தான் இழந்தது என்ன என்று புரியாமலேயே யாரோ ஒரு புதியவனுடன் இது வரை பார்த்திராத ஒரு நாட்டிற்கு சென்று கொண்டு இருக்கிறதே!!! எத்தனை மாற்றங்கள் அதன் சின்னஞ்சிறிய வாழ்க்கையில். குழந்தையை இறுகக் கட்டிக் கொண்டாள் மித்ரா. சில மணி நேரங்களே அந்த பிஞ்சுடன் செலவழித்து இருந்தாலும் ஏதோ ஆண்டான்டு கால பந்தம் போன்ற உணர்வு தோன்றியது. அந்த குழந்தைக்கும் அவள் அரவணைப்பு தேவை பட்டதோ? இரு கரங்களையும் அவள் கழுத்தை சுற்றி வளைத்துக் கட்டிக் கொண்டது.

பொது இடத்தில் கண்ணீர் விட்டோமே என்று எண்ணியவன் அவளிடம் சொல்லிக் கொண்டு கழிவறை சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு தன்னை தானே சமன் படுத்திக் கொண்டு வந்தான்.

மீண்டும் வந்து அமர்ந்தவன் ஒரு மரத்த குரலில் பேச ஆரம்பித்தான். "விஜய் என்னுடைய அண்ணன். அவன் விரும்பி மணந்த பெண் திவ்யா. மிக மிக திறமைசாலி. திருமணம் முடிந்து ஒரு ஆண்டிலேயே அவளுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயோ கெமிஸ்ட்ரியில் முனைவர் படிப்பு படிக்க முழூ உதவி தொகையுடன் வாய்ப்பு கிடைத்தது. பணம் ஒரு பெரிய விஷயம் இல்லை. முழூ உதவி தொகை கிடைப்பது என்றால் அவள் சாதனைகள் அப்படி. ஒரு வித ப்ரோடிஜி (prodigy) என்று வைத்துக் கொள்ளுங்கள். அவள் சென்று படிக்க ஆசைப்பட்டாள் என்று அண்ணனும் சரி என்றான். என் அப்பா எனக்கு பதினான்கும் அண்ணனுக்கு பதினேழும் இருக்கும் போதே மாரடைப்பில் இறந்துவிட்டார். அப்போதில் இருந்தே அவன் பொறுப்புகள் ஏற்றுக் கொண்டவன். படித்துக் கொண்டே ஊழியர்கள் உதவியுடன் தொழிலையும் கவனித்துக் கொண்டான். எனக்கு எந்த ஒரு கஷ்டமோ வலியோ இல்லாமலேயே. திவ்யா கேம்பிரிட்ஜில் சேர்ந்த நேரம் நானும் பட்டப் படிப்பு முடித்து தொழிலில் கால் பதிக்க ஆரம்பித்து இருந்தேன். அதனால் அண்ணன் என்னிடம் பொறுப்புகளை விட்டுட்டுவிட்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அங்கே சென்றுவிடுவான். கடவுள் அருளால் எங்களுக்கு பணம் ஒரு குறையில்லை. அதனால் தான் ஆண்டவன் வேறு நிறைய குறைகளை கொடுத்துவிட்டானோ!!! திருமணமாகி ஐந்து வருடங்களின் பின் இன்னும் படிப்பு முடிக்க ஒரு ஆண்டு தான் என்ற நிலையில் திவ்யா கருவுற்றாள். அவர்கள் இருவருக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. கருவை கலைக்க கூடாது என்று அம்மா திட்டவட்டமாக சொல்லிவிட்டார். திவ்யாவிற்கு அப்பா மட்டும் தான். அவரும் இவர்கள் திருமணதிற்கு பின் தவறிவிட்டிருந்தார். அதனால் வீட்டிற்கு பெரியவராக அம்மா சொன்னதை தட்டி செய்ய யோசனையாக இருந்தது. அதிலும் அவர்களுக்கே அதில் பெரிய விருப்பம் இல்லை எனும் போது. ஆனால் படிப்பை முடிப்பது எப்படி??? அண்ணன் தயங்கியபடி என்னிடம் வந்தான். நான் தொழிலில் அப்போது ஓரளவு காலூன்றிவிட்டேன். நான் தொழிலை முழூ மூச்சாக இங்கே பார்த்துக் கொண்டால் அண்ணனால் அங்கே சென்று அவளுக்கு துணை இருந்து படிப்பை முடிக்க முடியும் என்றான். உடனே ஒப்புக் கொண்டேன் நான். என்னை பொறுத்தவரை அண்ணன் செய்திருப்பதற்கு இது ஒரு சிறிய கைமாறு. அண்ணன் அங்கே சென்றான். மசக்கையிலும் பிள்ளை பேறிலும் அவளுடன் இருந்தான். அம்மாவிற்கு மூட்டு வலி அதனால் அவர்கள் போகவில்லை. பிள்ளை பிறந்த பிறகும் அண்ணனே மொத்தமாக பார்த்துக் கொண்டான். மசக்கை பிள்ளை பேறு என்று ஒரு ஆண்டில் முடிய வேண்டிய படிப்பு இரண்டு ஆண்டுகள் ஆனது. அண்ணன் அதுவரை அங்கேயே தான். நாங்கள் ஆதவனை வீடியோ காலில் கொஞ்சிக் கொள்வோம். அடுத்த மாதம் இவனுக்கு முதல் பிறந்த நாள். வெகு விமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஏனென்றால் திவ்யாவும் படிப்பு முடிந்து தாயகம் திரும்ப வேண்டிய நேரமிது. மற்றும் வளைகாப்பு தொட்டில் என்று எதுவுமே செய்யவில்லை. அதனால் எல்லாருமே சேர்ந்து திட்டமிட்டுக் கொண்டு இருந்தோம். நான்கு நாட்களுக்கு முன் திவ்யாவிற்கு அவளது சாதனைகளை பாராட்டி கல்லூரியில் ஒரு விழா வைத்து இருந்தார்கள். அதில் கலந்துகொள்ள விஜயும் திவ்யாவும் ஆதவனை ஒரு பேபி சிட்டரிடம் விட்டுவிட்டு சென்றனர். அந்த இடத்தில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. விழா முடிந்து திரும்பி வரவும் வழியில் கட்டுப்பாடு இழந்த ஒரு இளைஞனின் டிரக் இவர்கள் வண்டியில் மோதிவிட்டது. அந்த இடத்திலேயே இருவரும்....." அதுவரை சொல்லிக் கொண்டு வந்தவனின் குரல் உடைந்தது. அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஆதவன் ஏதோ புரிந்தது போல சித்தப்பாவின் கன்னத்தை தடவினான். ஆறுதல் போல. மித்ராவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது அதை கண்டு.

எத்தகைய இழப்பு. அதுவும் எப்படிப்பட்ட நேரத்தில். இதை இவன் அம்மா எப்படி தாங்கி கொண்டார்கள்.

அவன் தொடர்ந்து சொன்னான். "அம்மா இடிந்து போய் விட்டார்கள். அவர்களால் எதையுமே சிந்திக்கவோ செய்யவோ முடியாத நிலையில் ஒரு பொம்மையை போல இருக்கிறார்கள். என்னால் அப்படி இருக்க முடியாதே. விவரம் அறிந்த உடனே பறந்து வந்தேன். சிதிலம் அடைந்து இருந்த அவர்கள் உடல்களை எடுத்து செல்ல முடியவில்லை. அதனால் அங்கேயே கடைசி காரியங்களை முடித்துவிட்டேன். அவர்கள் பொருட்களை பெட்டிக்கட்டி இந்தியாவிற்கு அனுப்பி இருக்கிறேன். அவர்கள் நினைவாக எங்களுக்கு இதோ முக்கியமாக இவனுக்கு எஞ்சி இருப்பது அவை தானே. அதுவரை அரசின் பாதுகாப்பில் இருந்த இவனை பெற்றுக் கொண்டு இதோ திரும்பிக் கொண்டு இருக்கிறேன். உங்கள் கேள்விகளுக்கு இதில் பதில் இருக்கிறதா?"

மித்ராவிற்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. மெல்ல கை நீட்டி அவன் கைகளை ஆறுதலாக பற்றி அழுத்தினாள்.

"எனக்கு உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்று தெரியவில்லை. என்னுடைய எந்த வார்த்தையும் உங்கள் பேரிழப்பை போக்கும் வல்லமை கொண்டது இல்லை. ஆனால் வாழ்க்கையில் நான் இன்பமோ துன்பமோ எப்போதுமே சொல்லிக் கொள்ளும் ஒன்றை சொல்கிறேன். இதுவும் கடந்து போகும். இந்த துயரத்தில் இருந்து உங்களை மீட்டுக் கொள்ள மற்றும் இவனையும் உங்கள் அம்மாவையும் பார்த்துக் கொள்ளும் மனோ திடத்தை கடவுள் உங்களுக்கு தருவார்."

அதுவரை அந்த நான்கு நாட்களாக நெஞ்சை அழுத்திக் கொண்டு இருந்த பாரத்தில் ஒரு சதவிகிதம் குறைந்தது போல தோன்றியது அவனுக்கு. இப்படி ஒருத்தியின் துணை இருந்தால் வாழ்க்கையின் எந்த துன்பத்தையும் சந்தித்துவிடலாம் என்றும் தோன்றியது ஆதவனின் திடீர் தந்தைக்கு. தன் எண்ணப் போக்கின் வீரியம் உணர்ந்து திடுக்கிட்டான் அவன். எந்த மாதிரி நிலையில் என்ன எண்ணம் இது? ஏன் இப்படி? இவ்வளவு தானா நான்.
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
சூப்பர் எபி👌❤️

நான் சின்ன வயசுல சிறுவர்மலர்ல படிச்சு மனசுல பதிஞ்சு இன்னைக்கு வரைக்கும் ஃபாலோ பண்ற அந்த வாக்கியம் 'இதுவும் கடந்து போகும்' ❤️

இன்பமும் துன்பமும் நிலையானதல்ல 👌❤️

ஆதவன் குட்டிக்கு ஏதோ புரிஞ்சு தான் சித்தப்பா கண்ணீரை துடைச்சிருக்கான் 😍

மனசுல அழுத்திட்டு இருந்த துக்கத்தை பகிர்ந்ததும் சாருக்கு வாழ்க்கை துணையா ஆக்கிக்க எண்ணம் வருதே 🤩

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
 

MK20

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
90
29
18
Tamil nadu
மனசுல இருக்குற பாரத்தை வெளியே பகிர்ந்தாலே முன்னால பாதை சரியாகும்
 
  • Like
Reactions: MK8

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
மனசுல இருக்குற பாரத்தை வெளியே பகிர்ந்தாலே முன்னால பாதை சரியாகும்
உண்மைதான்