• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சந்தன பூங்காற்றே 5

kkp42

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2023
Messages
10
பூங்காற்று 5

"க்கா!" என அழைத்தபடி உள்ளே வந்தான் கிருஷ்ணன்.

"வா கிருஷ்! என்னாச்சு? எல்லாம் ஓகே தானே?" லதா தம்பியிடம் கேட்க,

"எல்லாமே ஓகே க்கா.. இன்னும் ஒரு பத்து நாள் தான்.. விசா எல்லாம் ரெடி ஆகிட்டா ஒன் மந்த்ல கிளம்பிடுவேன்!" என்றான் சந்தோசமாய்.

"அவ்ளோ சீக்கிரம் வந்துடுமா?" என்று லதா கேட்ட பின் தான் அவள் முக மாற்றத்தையே கவனித்தான் கிருஷ்..

"க்கா!" என்று முறைக்க முயன்று அவன் சிரிக்க,

"சிரிக்காத டா.. இங்க இல்லைனா சென்னை கூட போனு தாத்தா சொல்றாங்க.. நீ தான் கண்டம் தாண்டி போறேன்னு இவ்வளவு சந்தோசமா கிளம்புற.. நாங்க எல்லாம் உனக்கு முக்கியமே இல்லை டா!" என்று கோபம் போல சொல்ல,

"நான் என்ன பண்றது? இந்த ஆசை வந்ததே தாத்தாவால தான்.. உனக்குன்னு ஒரு எயிம் வேணும்னு சொல்லி சொல்லி வளர்த்தாரு.." என்று கூறவும்,

"உன்னை ஃபாரின் போக சொல்லி வளர்க்கல இல்ல?" என்றாள்.

"எனக்கு அது தான் புடிச்சிருக்கு.. ஆசைக்கு ஒரு நாலஞ்சு வருஷம் போய் ஒர்க் பண்ணிட்டு வர்றேனே.." என்றான் சமாதானமாய்.

"இப்படி தான் சொல்லுவ.. யாருக்கு தெரியும்.. அங்கேயே எதாவது பொண்ணை புடிச்சி கல்யாணமும் பண்ணிக்கிட்டா.." என்றாள் லதா கிண்டலாய்.

"அப்படி பண்றதா இருந்தா ப்ளீஸ் எனக்கு மட்டுமாச்சும் இன்ஃபார்ம் பண்ணுங்க.. உங்க புண்ணியத்துல நான் ஃபாரினை ஒருவாட்டி பார்த்துக்குறேன்!" என்று வந்தாள் யசோதா.

கிருஷ்ணன் சிரிக்க, "ஏன் யசோ! உனக்கு வேணும்னா திக்ஷி மாதிரி ஃபாரின் மாப்பிளையே பார்த்துட்டுவோமே!" என்றார் கண்ணபிரான்.

"மாமா! அதெல்லாம் எனக்கு வேண்டாம்.. வத்தலோ தொத்தலோ.. எனக்கு நம்ம ஊர் பையன் போதும்.. சுத்தி பார்க்க மட்டும் தான் ஃபாரின் எல்லாம்.. மிஞ்சி மிஞ்சி போனா ஒரு மாசத்துக்கு மேல ஃபாரின் போய் மனுசனால நிம்மதியா இருக்க முடியுமா?" என்று கேட்டு திரும்ப, கிருஷ்ணன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

"இல்ல இல்ல நான் அந்த மீனிங்ல சொல்லல!" என்றவள் பாவமாய் விழிக்க, கிருஷ்ணனோடு, லதா, கண்ணபிரான் என அனைவருமே சிரித்துவிட்டனர்.

முகம் கொள்ளா புன்னகையோடு வாழை இலையுடன் வீட்டிற்குள் நுழைந்தார் நீலகண்டன்.

சிரிப்பு சத்தம் காதை எட்டி இருக்க, இப்படி இத்தனை பேர் இந்த வீட்டில் இருந்து எத்தனை வருடங்கள் ஆகிறது என நினைத்தவருக்கு கொண்டாட்டமாய் இருந்தது.

"கிருஷ்ணா! வீட்டுக்குள்ள வரவே அவ்வ்ளோ ஒரு சந்தோசமா இருக்கு டா.. சிரிப்பு சத்தம் காதை நிறைச்சுடுச்சு.. வேற என்ன வேணும் எனக்கு?" என்று கூறி இலையை டேபிளில் வைக்க, கண்ணன் அறையில் இருந்து வெளிவந்தான்.

"வாங்க மாமா!" என சிறிதாய் புன்னகைத்துவிட்டு, தாத்தாவின் புறம் திரும்பினான் கிருஷ்ணன்.

லதா அதை கவனித்தாலும் "தாத்தா! சார்க்கு விசா எல்லாம் ரெடியாம்.. எப்ப உங்களுக்கு டாட்டா காட்டிட்டு போக போறானோ!" லதா கூற,

"அதெல்லாம் எவ்வளவோ சொல்லி பார்த்தாச்சு.. அவன் போயே ஆவேன்னு நிக்குறான்.. என்ன செய்ய.. போய் தான் பாக்கட்டும்!" என்றார்.

"தாத்தா! எனக்கு புரியுது.. அண்ணி எங்க வீட்டுக்கு வந்துடுவாங்க.. கிருஷ் அத்தான் ஃபாரின் பறந்துடுவாரு.. தனியா இருப்போமேனு உங்களுக்கு கவலையா இருக்கு தானே? கவலையே படாதீங்க.. இவங்க போனா போகட்டும்.. நான் இருக்கேன் உங்களுக்கு.. நான் வந்து இங்கயே உங்களோட இருந்து உங்களை பார்த்துக்குறேன்!" என்று யசோதா கூற,

'கிருஷ் அத்தானா?' என கிருஷ்ணன் பார்க்க, யசோதா அங்கே பேசி சிரித்துக் கொண்டிருந்தாள் சாதாரணமாய்.

"சுடு தண்ணி கூட வைக்க தெரியாது.. நீங்க சமைச்சு போட்டா நல்லா சாப்பிட்டு தெம்பா வாய் வலிக்க பேசவேணா செய்வா!" என்றார் கண்ணபிரான்.

"அதுக்கு கூட ஆள் வேணுமே! நீ வாடா ம்மா.. நாம என்ஜோய் பண்ணுவோம்!" என்று நீலகண்டன் கூற, மற்றவர்களுக்கு ஒழுங்கு காட்டி குதித்தாள் யசோதா.

"சரி சரி சாப்பிட வாங்க!" என லதா முன்னே செல்ல, அனைவரும் நகரவும் இறுதியாய் செல்ல இருந்தவ கிருஷ்ணனை அழைத்தான் கண்ணன்.

"கிருஷ்ணா!" என்று அழைக்கவும்,

"மாமா! சொல்லுங்க!" என அவனருகே கிருஷ்ணன் சென்றாலும் நேற்று பழகிய அந்த நெருக்கம் இல்லாமல் இடைவெளி விட்டு நிற்கிறான் என புரிந்து கொள்ள முடிந்தது கண்ணனுக்கு.

"என்னாச்சு மாமா.. எதாவது வேணுமா?" கிருஷ்ணன் மீண்டும் கேட்க,

"ம்ம்ஹும்.. இல்ல!" என்றவன், யோசித்து நின்றான்.

லதாவிடம் பேசவோ சண்டையிடவோ கூட இவ்வளவு யோசிக்கவில்லை. தன்னைவிட சிறியவன் எனினும் நேற்று தன்னிடம் பேசினான் சகோதரியை நன்றாய் பார்த்துக் கொள்ளும்படி புன்னகை முகமாய் நம்பிக்கை கொண்டு.

அதற்கு இப்படி அடுத்த நாளே தான் நம்பிக்கையை இழக்கும் வண்ணம் நடந்திருக்க, அது அவனை பாதித்திருக்கும் என புரிந்தது. என்னபா லதாவிடம் போல இவனிடம் நடந்து கொள்ள முடியவில்லை.

தானும் ஒரு தங்கைக்கு அண்ணன் என்பதால் இருக்கும் என நினைத்து அவன் சிந்தித்து நிற்க,

"எதாவய் ப்ரோப்லேமா மாமா? அன்கம்ஃபார்டேபிலா பீல் பண்றீங்களா?" என்றான் கிருஷ்ணன்.

காலையில் இங்கே தங்க மாட்டேன் என்றவன் இவ்வளவு தயங்க அதுவாய் தான் காரணம் இருக்கும் என நினைத்து கேட்டான் கிருஷ்ணன்.

"ச்ச.. ச்ச! அதெல்லாம் இல்ல.. நான் வேற யோசிச்சுட்டு இருந்தேன்.." என்றவன்,

"ஐம்.. ஐம் ரியால்லி சாரி கிருஷ்ணா.. மார்னிங் சம் ஒர்க் இஸ்யூ போய்ட்டு இருந்துச்சு.. அதே மைண்ட்டுல யோசிக்காம பேசிட்டேன்.." நெற்றியை ஒரு கையால் நீவிக் கொண்டு கண்ணன் தன் மன்னிப்பை கேட்க, ஆறுதல் தான் அது கிருஷ்ணனுக்கு.

இப்படி தான் இவனோ என்றொரு எண்ணம் காலையில் கண்ணன் பேசியதில் இருந்து மனதை உறுத்திக் கொண்டு அவனிடம் சாதாரணமாய் பேச விடாமல் செய்திருக்க, இப்பொழுது மன்னிப்பு கேட்ட இந்த குணம் கிருஷ்ணனை கவர்ந்திருந்தது.

அப்படி தான் பேசுவேன் என்பது போல நடக்க எவ்வளவு நேரம் ஆகும்? முயன்று தானே அழைத்து மன்னிப்பு கேட்பவன் நிச்சயம் கெட்டவனாய் இருக்க வாய்ப்பில்லை என நினைத்து புன்னகைத்தவன்,

"பரவால்ல மாமா.. வாங்க சாப்பிடலாம்.." என்றான்.

"சூர்! ஐ க்நொவ்.. னே ஹர்ட் ஆயிட்ட தானே?" கண்ணனே கேட்க,

"இல்லனு சொல்ல மாட்டேன்.. பட் இப்ப நான் ஓகே தான்.. இப்பவும் எப்பவும் உங்களை நம்புறேன்.. அக்கா சந்தோசமா இருந்தா அது போதும் எனக்கு!" என்றவன் கண்ணனை கைப்பிடித்து சாப்பிட அழைத்து செல்ல, மீண்டும் மனம் சுருங்கியது கண்ணனுக்கு.

லதா இருவரும் ஒன்றாய் வருவதை பார்த்து நிற்க, கண்ணன் கண்டும் காணாமல் பேசியபடி சாப்பிட அமர்ந்தான்.

"எனக்கு இந்த பாப்பாவை ரொம்ப பிடிச்சிருக்கு.. நான் இங்கேயே வச்சுக்கவா?" நீலகண்டன் கண்ணபிரானிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

"பாப்பாவா? பொம்மையை கேட்குற மாதிரி கேட்குறீங்க தாத்தா.. நான் எம்பிஏ முடிச்சி ஜாப் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. பெரிய பொண்ணாக்கும்.." யசோதா கூற,

"நீ பெரிய பொண்ணுன்னு சொல்றதே எனக்கு குட்டி பொண்ணு சொல்ற மாதிரி தான் இருக்கு!" என்ற நீலகண்டன் பேச்சில் அனைவருமே சிரித்தனர்.

"இந்த அவமானம் தேவையா?" தன்னை தானே விரலால் காட்டி யசோதா கேட்க, மீண்டும் அனைவரும் சிரிக்க என சாப்பிடும் நேரம் நன்றாய் கழிந்தது.

மாலை வரை இருந்து பேசி சிரித்துவிட்டு கிளம்புவதாய் கூறினார் கண்ணபிரான்.

"அப்புறம்.. நாங்க கிளம்புறோம்.. நீங்களும் வீட்டுக்கு வாங்க..!" என கண்ணபிரான் அழைத்தார் நீலகண்டனை.

"அதுக்குள்ளவா? நீங்களும் தங்கிட்டு நாளைக்கு போலாமே! பாப்பா இருந்தா நேரம் போறதே தெரில இந்த கிழவனுக்கு!" என்றார் நீலகண்டன்.

இடைப்பட்ட நேரத்தில் பாப்பா என்ற பெயரே யசோதாவிற்கு முழு பெயர் ஆனது அந்த வீட்டில்.

"எங்களுக்கும் இங்க வந்ததுல ரொம்ப சந்தோசம்.. விசா தனியா இருப்பா.. இன்னொரு நாள் கண்டிப்பா வர்றோம்!" என்று கூற,

"யசோ! நீ இரேன் எங்களோட!" என்றிருந்தாள் லதா.

யசோதா தன் மாமாவை பார்க்க, "உனக்கு ஓகேன்னா இரு யசோ.. அண்ணா கூட வா.. நான் விசாகிட்ட சொல்லிடுறேன்..!" என்று கண்ணபிரான் கூற,

"தேங்க்ஸ் மாமா.. நான் அண்ணாவோடவே வர்றேன்..!" என்றுவிட்டாள் அவளும்.

கண்ணபிரான் மட்டும் கிளம்ப, மீண்டும் முன்னறையில் அனைவருமாய் அமர்ந்து கதை பேச, அவர்களுக்கு கொஞ்சம் தூரமாய் தள்ளி அமர்ந்து கொண்டான் கண்ணன் தனியாய்.

"இந்தா ஜூஸ்!" என யசோதாவிற்கு கொடுத்து லதா அவளருகே அமர்ந்து,

"என்ன ஜாப் அப்ளை பண்ணிருக்க யசோ?" என்றாள் லதா.

"பேங்க்ல தான் இன்டெர்வியூ போனேன் அண்ணி.. ரிசல்ட் இன்னும் வரல.. வேற ட்ரை பண்ணிடும் இருக்கேன்.." என்றாள்.

"ஓஹ்!" என்ற ஸ்வர்ணலதாவிற்கு, 'யசோதா வேலைக்கு போனா மட்டும் இவங்க ஸ்டேட்டஸ் குறையாதாமா?' என நினைக்காமல் இருக்க முடியவில்லை.

"வீட்டுல யாருக்கும் நான் வேலைக்கு போறதுல விருப்பம் இல்ல அண்ணி.. அண்ணாவுமே வேண்டாம்னு தான் சொல்றாங்க.. ஆனா சும்மா இருக்கதுக்கு ஏன் இவ்வளவு படிக்க வைக்கணும்.. அதனால தான் நான் போவேன்னு அடம் பண்ணி ட்ரை பண்றேன்!" என்றாள் அவளாகவே.

"ஓஹ்..!" என்று கேட்டுக் கொள்ள,

"நீங்க என்ன படிச்சிருக்கீங்க த்தான்!" என்றாள் கிருஷ்ணனை யசோதா.

"என்ஜினீயரிங்.. கம்ப்யூட்டர்..!" என்றான் சிறு புன்னகையோடு..

"ரெண்டு வருஷம் இதே ஊர்ல தான் ஒர்க் பண்ணினான்.. இப்ப தான் ஃபாரின் பேய் புடிச்சி ஆட்டுது..!" என முறைத்தாள் லதா.

"விடுங்க அண்ணி! நீங்க சொன்ன மாதிரி ஃபாரின் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்தாலும் நமக்கு ஜாலி தானே? எங்களுக்கு வேர்ல்டு முழுக்க ரிலேட்டிவ் இருக்குன்னு பெருமை பட்டுக்கலாம் பாருங்க!" என கிண்டல் பேச, கண்ணனும் கூட சிரிக்க,

"பாப்பா!" என முறைத்தான் கிருஷ்ணன்.

"உங்களுக்கும் பாப்பாவா?" என பதிலுக்கு முறைத்தாள் யசோதா பாப்பா.

உரிமையாய் எளிதாய் அந்த வீட்டில் அவள் இணைந்து கொண்டு, இயல்பாய் பேசி வர, நீலகண்டன் அவளுக்கு வைத்த பெயர் சரி தான் என சிரித்துக் கொண்டனர்.

தீப கண்ணனின் மொபைல் சத்தம் கேட்டதும் எடுத்து பார்த்தவன் முகம் மாற, வேகமாய் எழுந்து அறைக்குள் சென்றான்.

லதாவும் அதை கவனித்தவள் அவளாய் இருக்குமோ என நினைத்து அவன் சென்ற அறையையே பார்த்து இருக்க, நீண்ட நேரமாகியும் வெளிவரவில்லை அவன்.

காற்று வீசும்..
 
Top