• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதியில்லா தீபாவளி🌺🌺🌺15 (இறுதி அத்தியாயம்)

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
பெங்களூரில் மாறன் தங்கியிருக்கும் அந்த அடுக்கு மாடி குடியிருப்பின், வெளிப்பகுதியில் இருந்த அந்த பார்க்கில் அமுதனும், ஆனந்தியும் தன்னுடைய சக தோழர்களுடன் பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்...ஆம் அன்று மீண்டும் ஒரு தீபாவளி...மூன்றாண்டுக்கு பிறகு வந்திருக்கும் தீபாவளி..

ரஹீமுடன், சொக்கநாதனும், அன்னமும் அந்த அடுக்கு மாடி கட்டிடத்தின் வாசலில் கேபில் (cab) வந்து இறங்கினார்கள்..காரின் வாடகை தொகையை டிரைவரிடம் கொடுத்தான் ரஹீம்..

ரஹீம் முன்னால் செல்ல பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தனர் முதியவர்கள்..பெரிதாக நகரத்து நாகரீகத்தின் சூழல் தெரியாத, இரு முதியவர்களுக்கும் அந்த நவ நாகரீக கட்டிடம் சற்று பிரமிப்பை ஏற்படுத்தியது...அந்த கட்டிடத்தின் நடைவழி பாதைக்கு இடது புறம் இருந்த பார்க்கில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்..

தூரத்தில் வந்து கொண்டிருந்த ரஹீமை பார்த்த ஆனந்தி ஓடிவந்தாள்..

ஹாய், ரஹீம் அங்கிள்,.....என்று சத்தமாக கூறியபடி ஓடி வந்த ஆனந்தி, சற்று அருகில் வந்த பிறகுதான் ரஹீமுக்கு பின்னால் வந்து கொண்டிந்த அன்னத்தை கண்டாள்..சந்தோஷ மலராய் விரிந்த ஆனந்தியின் முகம் அன்னத்தின் பின்னால் வந்து கொண்டிருந்த சொக்கநாதனின் முகம் பார்த்து சட்டென சுருங்கியது..சட்டென பிரேக் போட்டு நின்று விட்டாள்..

அவள் நின்றவுடன் காரணத்தை புரிந்து கொண்டாள் அன்னம்..ஆனந்தி முன்பை விட வளர்ந்திருந்தாள்...ஆனந்தி முகம் பார்த்து அன்னம் பூரித்தாள்..

ஆனந்தி...ஹவ் ஆர் யூ..............கேட்டான் ரஹீம்..

ஃபைன் அங்கிள்.......... என்றவளின் பார்வை தன் தாத்தாவின் மீதே படிந்தது..அந்த பார்வையில் ஆழ பதிந்திருந்தது பயம்..அந்நேரம் ஆனந்தியை தேடி வந்தான் அமுதன்..

இப்போது அவன் பதின்மூன்று வயது சிறுவன்..முன்பை விட, சுறு சுறுப்பும், தைரியமும் அதிகமாகி இருந்ததை அவனுடைய நிமிர்வான நடை சொல்லிற்று..இப்போது அமுதனிடம் சொக்கநாதனின் சாயல் இன்னும் மிளிர்ந்தது...

ஹாய்,...அப்பத்தா வாட் ய சர்ப்ரைஸ்...........என்றவன்,

ஹாய் அங்கிள்...ஹவ் ஆர் யூ..........என்று ரஹீமையும் கவனிக்க தவறவில்லை...தமையன் அருகில் வந்ததும் அவனின் கைகளை இறுக பற்றிக் கொண்டாள் ஆனந்தி..தங்கையின் பயத்தை உணர்ந்து கொண்டான் அமுதன்..

ஹேய் ஆனந்தி, உன் கை ஏன் இப்படி நடுங்குது...ஓ...இவரு மீசையை பார்த்து பயந்திட்டியா?...மீசைதான் இப்படி பயமுறுத்தும்..நம்ம அம்மா ஒரு தடவை முறைச்சா போதும், அவரு நடுங்கி போயிடுவாரு. .அவரை பார்த்து பயப்படுறியே..............அமுதன் தங்கையிடம் சொல்ல, அன்னமும் ரஹீமும் சிரித்தனர்..பாவமாக நின்றார் சொக்கநாதன்..குழந்தைகள் அன்று நடந்த சம்பவத்தை மறக்க வில்லை என்பது மிக தெளிவாக தெரிந்தது..

அப்பத்தா, கொஞ்சம் உங்க காதை கொடுங்க...............அமுதன் சொல்ல அவனை நோக்கி குனிந்தாள் அன்னம்..

ஆமா, இவரை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்க...காட்டூர்ல சண்டை போட ஆள் கிடைக்கலையா...........அன்னத்தின் காதுக்குள் அமுதன் கேட்க, வாய் மூடி சிரித்தாள் அன்னம்..புரியாமல் விழித்தார் சொக்கநாதன்...

டேய் அமுதா, அப்பா எங்கேடா..........கேட்டான் ரஹீம்..

வழக்கம் போல தான் அம்மா கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருப்பாரு..............சொல்லி கண்ணடித்தான் அமுதன்..அவனின் தலையில் கொட்டினாள் ஆனந்தி..சிரித்தான் ரஹீம்..

ஏய், ஏண்டி அடிச்ச..........அமுதன் கேட்க,

போடா, உன்னை திருத்தவே முடியாது...........சொல்லி விட்டு தன் வீட்டை நோக்கி ஓடினாள் ஆனந்தி...

ஏலே ரஹீம், இவன் என்னல சொல்லுறான்?...மாறன் எங்கேயாம்?..........அன்னம் கேட்க,

ம்ம்....அது...மாறன் வீட்ல இருக்கிறதா சொல்றான்..வேற ஒண்ணும் இல்லம்மா............ சமாளித்தான் ரஹீம்..

சரி இங்கேயே நின்னு பேசிட்டு இருந்தா எப்படி?..வீட்டுக்கு போவோம்.........அன்னம் சொல்ல,

யா, யூ ஆர் ரைட்..வாங்க.........சொல்லி கொண்டே அமுதன் முன்னால் நடக்க மூவரும் பின்னால் நடந்தனர்..

அங்கு வீட்டின் சமையலறையில் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த மாறன்,

வெங்காயம் நறுக்கியாச்சி எழிலு..இனி எதை நறுக்கணும்?............என்று கேட்டான்..

நீங்க எதையும் நறுக்க வேணாம்..போய் பசங்க எங்கேன்னு பார்த்துட்டு வாங்க............சொல்லிக் கொண்டே வெங்காயத்தை எடுத்து வாணலியில் தட்டி வதக்க ஆரம்பித்தாள் எழில்..

அவங்க என்ன இன்னும் சின்ன பசங்களா..வெளியே போனா அவங்களே வருவாங்க...............சொல்லி கொண்டே எழிலின் பின்னால் வந்து அவளை மாறன் கட்டிக் கொள்ள, எழிலின் இதழில் இதழ் விரியா புன்னகை இதமாய் ஒட்டிக் கொண்டது..

என் மாறனுக்கு என்ன வேணும்............ஆசையோடு எழில் கேட்க, அவளின் முகத்தை தன் பக்கம் திருப்பி,

இந்த மாறனுக்கு என்ன வேணும்ன்னு என் எழிலுக்கு தெரியாதா?............கேட்டு புருவம் உயர்த்தி, கண்ணடித்து அழகாய் சிரித்தான் மாறன்..

ம்ம்...ஐயாவுக்கு இன்னும் புது மாப்பிள்ளைன்னு நினைப்பா?..உங்க பொண்ணு இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல பெரிய மனுஷி ஆயிடுவா...ஞாபகம் இருக்கட்டும்..........சொன்ன எழில் வெட்டி வைத்திருந்த இறைச்சி துண்டுகளை வாணலியில் கலந்து கிளற ஆரம்பித்தாள்..

இருக்கட்டும்..என் எழில் எப்போவும் எனக்கு புது பொண்ணுதான்..........என்று கூறி மீண்டும் எழிலின் தோளில் முகம் புதைத்து கொண்டான் மாறன்..இதழ் விரித்து அழகாய் சிரித்து மாறனின் முகம் பார்த்தாள் எழில்..அவளை தனக்குள் அடக்கி கொண்டான் மாறன்..காதல் பார்வைகள் மோதிக் கொண்டன.. அவளின் புன்னகை தாங்கிய உதடுகள் நோக்கி மாறன் நெருங்க,

அய்யோ..........என்று சொல்லி தலையை பின்னால் இழுத்து கொண்டாள் எழில்..

என்ன?...........

அடுப்பில குழம்பு.............என்று எழில் சொல்லும் போதே மறு அடுப்பில் இருந்த சோற்று உலை கொதித்து, உலை மூடி ஆடியது...உலை மூடியை திறந்து இரு அடுப்புகளையும் சிம்மில் வைத்தாள் எழில்..மீண்டும் காதல் பார்வைகள் நெருங்கி வரும் போது, ஆனந்தி ஓடி வரும் காலடி சத்தம் கேட்க, இருவரும் வெட்க புன்னகையுடன் விலகினர்.. எழிலின் கன்னத்தை கிள்ளி தன் இதழில் ஒத்திக் கொண்டு நகர்ந்தான் மாறன்...வெட்கி சிரித்தாள் எழில்..

அப்பா,......அப்பத்தா.............ஓடி வந்த ஆனந்தி மூச்சிறைக்க சொன்னாள்..

ஃபோன் பண்ணாங்களா?........

நோ,...இங்கே வந்துருக்காங்க............

ஏய் ரோட்ல யாரையாவது பார்த்திட்டு உளறாதடி..........சொன்னாள் எழில்..

இல்லம்மா, அப்பத்தா, தாத்தா, ரஹீம் அங்கிள் எல்லாரும் வந்திருக்காங்க.............சொன்ன ஆனந்திக்கு இன்னும் மூச்சிறைப்பது நிற்கவில்லை..

மாறனின் கை புஜத்தை இறுக பற்றினாள் எழில்..அவளின் பயம் உணர்ந்தான் மாறன்..

அங்கே அமுதனுடன் மூவரும் அடுக்கு மாடி கட்டடத்தின் லிஃப்ட்டின் மூலம், அந்த ஏழாவது ஃப்ளோரை அடைந்தனர் .., மூவருக்கும் முன் நடந்த அமுதனுக்கு எதிரில் வந்த அவன் வயதையொத்த சிறுவன் ஒருவன் கேட்டான்,

ஹாய் அமுதன், ஹூ இஸ் திஸ்..தீஸ் ஆர் யுவர் ரிலேஷன்...........என்று..

யா, ஹர்ஷ், திஸ் இஸ் மை கிரான்மா, திஸ் இஸ் மை கிரான்பா, அண்ட் திஸ் இஸ் மை அங்கிள் ரஹீம்..தே ஹேவ் கம் ஃபார் தீவாலி செலிபிரேஷன்..............என்றான் அமுதன்..

வாவ், குட்,. எஞ்சாய் அமுதன்...........சொல்லி அவர்களை கடந்து சென்றான் அந்த சிறுவன்...அமுதன் முன்னேறி நடந்தான்..

ஏலே, ரஹீமு, அமுதன் எங்களை கைகாட்டி என்னல சொல்லிட்டு போறான்?........அன்னம் கேட்க,

இவங்க என் தாத்தாவும், அப்பத்தாவும், ஊர்ல இருந்து தீபாவளி கொண்டாட வந்திருக்காங்கன்னு சொல்றான்........என்றான் ரஹீம்...

நெசமாவா?..என் பேரன் என்னை தாத்தான்னு சொன்னானா?.......ஏக்கமாக கேட்டார் சொக்கநாதன்..

ம்ம்...இவ்வளவு நாள் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிட்டு, இப்போ பாசத்துல மீசை துடிக்குதோ...............ரஹீம் கேட்க, சிரித்தாள் அன்னம்..

ஏலே, நான் இன்னும் அதே காட்டூர் சொக்கநாதன்தேன்...என் புள்ளைக இருக்கிற இடத்த காட்டி கொடுத்துட்டியா...ஊரை பார்த்து கெளம்பி போயிட்டே இரு..அதை விட்டுட்டு இந்த நையாண்டி பண்ற வேலை வச்சிகிட்ட, பனை மரத்தில் தலை கீழா கட்டி தொங்க வுட்டுருவேன்..சாக்கிறதை............. சொல்லி விட்டு அமுதனின் பின்னால் மீசை முறுக்கி நடந்தார் சொக்கநாதன்..வாயை பிளந்து பார்த்து நின்றான் ரஹீம்..

என்னலே வாயை பொளந்துட்டு நிக்கிற..நடலே.........சொல்லிக் கொண்டே நடந்தாள் அன்னம்..

ம்ம்..இருக்குற வேலையெல்லாம் விட்டுட்டு வந்தேன்ல..எனக்கு இது தேவைதான்........தனக்குள் புலம்பிக் கொண்டே வந்தான் ரஹீம்...

அமுதன் முன்னே வர, சொக்கநாதன் வீட்டு வாசலில் நின்றார்.. ரஹீமும் அன்னமும் பிறகே வந்தனர்..

அப்பா, அப்பத்தா,..........என்று அமுதன் சொல்லும் முன்னரே வாசலில் நின்ற தந்தையை கவனித்து விட்டான் மாறன்..ஏனோ முகத்தில் எந்த உணர்வும் தோன்றவில்லை.. எழிலின் பயம் அதிகரித்ததை மாறனை இறுக பற்றியிருந்த அவளின் பிடியில் இருந்த அழுத்தம் காட்டிக் கொடுத்தது..அனுமதி எதிர்பார்க்காமேலே வீட்டிற்குள் வந்தான் ரஹீம்..

என்ன மாறா இது?..இத்தனை வருஷம் கழிச்சி அப்பாவும் அம்மாவும் வந்திருக்காங்க..உள்ளே கூப்பிடு...........சொன்னான் ரஹீம்..

வாங்கம்மா, வாங்க...........மெல்லிய குரலில் மாறன் அழைக்க இருவரும் உள்ளே வந்தனர்..மாறனின் கை புஜத்தை எழில் இறுக பற்றியிருக்க, எழிலின் சேலையை இறுக பற்றி நின்றாள் ஆனந்தி..சில மணித்துளிகள் மெளனம்...

உட்காருங்க அப்பத்தா...திடீர்னு உங்களை பார்த்த ஷாக்ல அப்பா அப்படி நிக்கிறாங்க...........நிலைமை அறிந்து மெளனம் கலைத்தான் அமுதன்..

எய்யா மாறா,..எப்படியா இருக்க?.. உன்னைய பார்த்து வருஷம் மூணு ஓடி போச்சி..........அன்னம் கேட்க,

நல்லா இருக்கேன் மா..நீங்க எப்படி இருக்கீங்க........கேட்டான் மாறன்..

எனக்கு என்னயா கொறைச்சல்.........என்றவள் எழிலை பார்த்து,

நல்லா இருக்கியா எழிலு...........என்று கேட்க பதில் இல்லை எழிலிடம்....மாறன் உணர்வின்றி கேட்டான்,

இவுகளை ஏன்மா இங்கே கூட்டிட்டு வந்தீக............என்று..

அப்பா, உன்னைய பார்க்கணும்ன்னு ஆசை பட்டாக மாறா............என்று அன்னம் சொல்லி முடிக்கும் முன்,

இன்னுமா இவுகளை நம்புறீக.............கேட்டான் மாறன்..

இல்லய்யா...அப்பா முன்ன மாதிரி இல்ல.இப்போ ரொம்ப மாறிட்டாக........அன்னம் சொல்லி வாய் மூடும் முன், மாறன் சொன்னான்,

இவுக மாற மாட்டாக அம்மா... இவுகளால மாற முடியாது............என்று...

இல்லையா, நான் மாறிட்டேன்..மனுஷன் உடம்புல இருக்குற பலமெல்லாம் போயி படுக்கையில் கிடக்கும் போதுதேன் அவனுக்கு வாழ்க்கைன்னா என்னான்னு வெளங்குது..நாலு மாசம் படுத்த படுக்கையா கெடந்தேன்..எனக்காக, என் மேல இருக்குற அன்புக்காக என்னய பார்க்க எவனும் வரல..என் பணத்துக்காதேன் வந்தானுக..அப்போ எனக்காக என் கூட இருந்தவ என் பொஞ்சாதி மட்டும்தேன்..இந்த மூணு வருஷமா அவளே என்னய ஒதுக்கி வச்சிருந்தப்போதான் சொந்தம்னா என்னன்னு புரிஞ்சிகிட்டேன்..........என்று சொக்கநாதன் சொல்ல, தாயின் முகம் பார்த்தான் மாறன்..கண்ணீருடன் தலை குனிந்தாள் அன்னம்..

ஆம், அன்னம் சொக்கநாதனுக்கு அளித்த தண்டனை பற்றி இதுவரை மாறனுக்கு தெரியாது.. அன்னம் சொல்லவில்லை.. அதிர்ந்து தாயின் முகத்தையே பார்த்து நின்றிருந்தான் மாறன்..

ஆமா மாறா,... அம்மா மூணு வருஷமா அப்பாகூட பேசவே இல்ல.. ஒரே வீட்டுல ரெண்டு பேரும் தனி தனி தீவா இருந்து தண்டனையை அனுபவிச்சாங்க..இது ஊருக்கே தெரியும்...........சொன்னான் ரஹீம்..

சற்று நேரம் யோசித்து விட்டு,
தலையை இட வலமாக ஆட்டினான் மாறன்...

இவுக ஒரு நேரம் இருக்குற குணத்தில் இன்னொரு நேரம் இருக்க மாட்டாக..இவுக நடிக்குறாகம்மா..எதுக்கோ நடிக்குறாக..........மாறன் சொல்ல,

இல்ல மாறா என்னய நம்பு நான் நடிக்கல...............கெஞ்சினார் சொக்க நாதன்..

இல்ல, இன்னொரு தடவை உங்களை நம்பி, என் எழில் அசிங்க படுறதை என்னால பார்க்க முடியாது..நான் உங்க சொத்துக்கும் பணத்துக்கும் என்னைக்கும் வர மாட்டேன்..உங்க மொவன் செத்தது செத்ததாவே இருக்கட்டும்..தயவு செய்து இங்கே இருந்து போயிடுங்க................

என்னய்யா இது இத்தனை வருஷம் கழிச்சி வந்துருக்கிற அப்பாவை இப்படி விரட்டுற..........சொன்ன அன்னம் கண்களில் நீர் தாங்கினாள்..

என்னம்மா இது?.. எல்லாம் தெரிஞ்சிருந்தும் நீங்களும் இப்படி பேசுறீக..அவுக எப்போ எப்படி மாறுவாகன்னு யாருக்கும் தெரியாது..........

சொன்னா கேளு சாமி, அம்மா நல்லா தெரிஞ்சிகிட்டுதேன் சொல்லுறேன்.........என்று அன்னம் முடிக்கும் முன்

இல்லம்மா,.. இவுகளை என்னால நம்ப முடியாது........உறுதியாக சொன்னான் மாறன்..

இல்லைய்யா.........என்று அன்னம் சமாதான பேச்சை ஆரம்பிக்கும் முன்,

நான் போயிடுறேன்..........என்று சற்றே உரத்த குரலில் சொன்னார் சொக்க நாதன்..எல்லோரும் அவர் மேல் கவனம் கொண்டனர்..

நான் போயிடுறேன் மாறா..போறதுக்கு முன்னாடி என் மருமொவகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு போயிடுறேன்...............என்றார் சொக்கநாதன்..

ஏளனப் புன்னகையுடன் மாறன் சொன்னான்,

மருமொவளா, யாருக்கு யாரு மருமொவ? உங்க மொவன்தேன் பதினாலு வருஷத்துக்கு முன்னாடியே செத்துப் போயிட்டானே.. உங்க மொவனே செத்தபிறகு மருமொவ எங்கே இருந்து வந்தா?.........சற்றே ஆவேசமான குரலில் சிதறின சொற்கள்..

தப்புதேன்,..நான் நிறைய பாவம் செஞ்சிட்டேன்..பெத்த மொவன் உயிரோட இருக்கும் போதே அவன் செத்துட்டான்னு வாய் கூசாம சொன்ன பாவி நான்..என் மருமொவ உத்தமி..அவளை நான் தப்பு சொன்ன பாவத்துக்குதேன் கோயில் காளை என்னய குத்திடுச்சி...நான் பண்ண பாவத்துக்கு அந்த சாமியே தண்டனை கொடுத்திருச்சி.........என்று தன் மகனிடம் பேசிய சொக்க நாதன், தன் மருமகளிடம் சொன்னார்,

என்னய மன்னிச்சிடு தாயி...குலம் காக்க வந்த சாமி நீ...இந்த உடம்பில கடைசி சொட்டு ரத்தம் இருக்கிற வரைக்கும் உன்னய மருமொவளா ஏத்துக்கிட மாட்டேன்னு சொன்னேன்..ஆனா இப்போ இந்த உடம்புல ஓடுற இரத்த ஓட்டமே நீ போட்ட பிச்சைதேன்...........என்று சொக்கநாதன் சொல்ல அனைவரும் வியந்து பார்த்தனர்...

என்ன பார்க்குறீக?..நான் சாவ கிடந்தப்போ எனக்கு இரத்தம் கொடுத்து காப்பாத்துனது என் மருமொவதேன்னு எனக்கு தெரியும்.........என்று சொன்னவர் மீண்டும் எழிலிடம் சொன்னார்,

உன் இடத்தில நான் இருந்திருந்தா எதிரியை சாகட்டும்ன்னு விட்டுருப்பேன்..ஆனா நீ மனுஷி இல்ல, என் குல சாமி.. அதேன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம என்னய காப்பாத்தியிருக்க... குலம் காக்குற சாமிக்கு ஏது சாதி...சாமி முன்னால மனுஷனுக்கு ஏது ஆணவம்?..என் ஆணவத்தையும் என் சாதி வெறியையும் உன் காலடியில் போட்டுட்டேன் தாயி...இப்போ என் மனசுக்கு நிம்மதியா இருக்கு..இதுக்குதேன்,.. இதுக்கு மட்டும்தேன் இம்புட்டு தூரம் என் குல சாமியை தேடி வந்தேன்..என்னய மன்னிச்சிடு........சொன்னவர் எழில் முன் கை கூப்பி நிற்க,

அய்யோ, நீங்க பெரியவக, நீங்க போயி என்னய,..வேண்டாம், தப்புய்யா...கையை கீழே இறக்குங்க.........
என்று மாமனாரிடம் சொன்னவள்,

என்ன அத்தை பார்த்திட்டு நிக்குறீக?...சொல்லுங்க அத்தை........என்றாள் அன்னத்திடம்...

இந்தா என்னய அத்தைன்னு கூப்பிடுறவளுக்கு என் புருசன் என்ன முறை?..மரியாதையா மாமான்னு கூப்பிடு..அவுக கையை இறக்கிருவாக...........என்று எழிலிடம் சொன்ன அன்னம்,

இந்தாங்க, அவ மாமான்னு கூப்பிடுற வரை கையை இறக்காதீக.........என்று சொக்கநாதனிடம் சொன்னாள்..

என்ன இது?..நீங்களாவது சொல்லுங்க?..........என்று மாறனிடம் சொன்னாள் எழில்..

திகைப்பின் உச்சத்தில் இருப்பவன் எப்படி பேசுவான்?.. பேச்சின்றி நின்றான் மாறன்..சிரித்தான் ரஹீம்..சற்றே பயம் தெளிய ஆரம்பித்தது ஆனந்திக்கு..

ஒரு தடவை மாமான்னு கூப்பிடு தாயி.........சொக்கநாதன் சொல்ல,

ம்ம்..கூப்பிடுறேன்..கையை இறக்குங்க........என்றாள் எழில்.

இந்தா நீ மாமான்னு கூப்பிடு,.. அவுக கைய இறக்கிடுவாக..இல்ல இப்படியேதான் நிப்பாக......... மிரட்டினாள் அன்னம்..

சரி...கையை கீழே இறக்குங்க மாமா..பிளீஸ்............எழில் சொல்ல சந்தோஷம் கொண்டார் சொக்கநாதன்..கையையும் இறக்கினார்..தன் ஆணவத்தையும் இறக்கினார்..தன் சாதி வெறியையும் இறக்கினார்...

நெகிழ்வாக சிரித்தான் மாறன்..மனம் நிறைந்தாள் எழில்..அன்றைய தீபாவளி அவர்களுக்கு பெரிய சந்தோஷத்தை அள்ளி கொடுத்தது..தன் பேரப் பிள்ளைகளுடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார் சொக்கநாதன்..இப்போது சொக்கநாதனின் செல்ல பேத்தியாகி போனாள் ஆனந்தி...

பிறகென்ன?..அன்னத்தின் ஆசைப்படி தாய் மண்ணின் வாசத்தில், தன் எழில் மேல் கொண்ட காதலில் இதமாய் மகிழ்வுடன் வாழ்ந்தான் மாறன்..சொக்கநாதன் பரம்பரையை ஆட்சி செய்து காத்தாள் எழில்..

முதியோர் முதுமை பருவத்தை முழு மகிழ்ச்சியுடன் நிறைவாக வாழ்ந்தனர்..

அதன் பிறகு வந்த அனைத்து தீபாவளிகளும் சொக்க நாதன் குடும்பத்துக்கு சாதியில்லா தீபாவளி ஆகி போனது..சந்தோஷம் பூத்தது..குலம் தழைத்தது..தழைத்த குலத்தில் சாதி வெறி ஒழிந்து மனிதம் பூத்தது..சுபம்...சுபம்...எங்கும் சுபம்..


பரவட்டும் மனிதம்.....


காற்றுக்கு ஏது சாதி
கடலுக்கு ஏது சாதி

வானுக்கு ஏது சாதி
பூமிக்கு ஏது சாதி

நீருக்கு ஏது சாதி
நெருப்புக்கு ஏது சாதி

நம்மை ஆளும்
இயற்கைக்கு ஏது சாதி

நாம் என்ற சொல்லில்
சாதி வெறி அழிப்போம்

நல்லதொரு மனிதம்
நாடுதோறும் வளர்த்து
நலம் காண்போம்....


ஆதரவு கொடுத்த சகோக்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள்.....

சக்திமீனா என்கிற M.மீனாம்பிகை
 
Top