• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறகு - 10

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 10

தன் படுக்கையறையில் இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன் உடையை பலமுறை சரிபார்த்துக் கொண்டிருந்தான் வசீகரன்.

கண்ணாடியில் தன்னருகே ஜேபி இருப்பது போல் கற்பனை செய்து கொண்டு, "ஏனுங்க அம்மணி! அலுவலகத்தில் உங்களோடு தனியாக பேச முடிகிறதா? உங்க மங்கி பிரதர்ஸ் எந்த பக்கம் திரும்பினாலும் கேட்டு (gate) போடுறாங்க.

உங்களை சுற்றி இருக்கும் உங்கள் பாடிகாட்சை மீறி எப்படித்தான் உங்களோடு பேச போகிறேனோ? நான் பேசி, அதற்கு பிறகு என் காதலைச் சொல்லி, உங்களை கல்யாணம் பண்ணி.... ம் " என்று பெருமூச்சு விட்டான் .

கண்ணாடிக்குள் இருந்த ஜேபி, "ஹலோ! அப்போ ஸ்ட்ரைட்டா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே?" என தன் இரட்டை புருவங்களை ஏற்றி இறக்கி கண்ணடித்து மறைந்தாள்.

தலையசைத்தபடி சிரித்த முகத்துடன் படி இறங்கும் வசீகரனை அவனின் தாய் வசுமதி, "வசீ..." என்று அழைத்து கையில் இருந்த ஆரத்தி தட்டை நீட்டினார்.

கற்பூர ஜோதியை கண்களில் ஒத்திக்கொண்டு, "ம்மா..." என்று அழைத்துவிட்டு, 'இல்லை' என்பது போல் தலையாட்டினான்.

"என்னப்பா?" என்றார் கண்களில் கனிவுடன்.

" இன்னைக்கு ஆபீஸ்க்கு லேட் ஆயிடுச்சு. நாளைக்கு கண்டிப்பா பேசலாம். பை... " என்று அவரது கேள்வியிலிருந்து தப்பித்து ஓட முயன்றான் வசீகரன்.

"வசீ. சாப்பிடாமல் உடம்பைக் கெடுத்துக் கொண்டு நீ சம்பாதிக்க ஓட வேண்டாம்" என்றவனை மிரட்டி உணவு மேசையில் அமரச் செய்து காலை உணவைப் பரிமாறினார்.

சாப்பிட அமர்ந்தும் சாப்பிடாமல் யோசனையுடன் இருந்த வசீகரனை கண்ட வசுமதி, உணவை அள்ளி அவன் வாயில் தந்தார்.

தன் கையால் ஆசையோடு உண்ணும் மகனைப் பார்த்து, " உன் மனதில் ஏதோ இருப்பதை உன் கண்கள் காட்டிக் கொடுக்குதே வசீ. தாய் அறியாத சூல் உண்டோ? இந்த அம்மாவிடம் எதை மறைக்கிறாய் கண்ணா? "

உணவு தரும் அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவரின் கண்களைப் பார்த்து, " பொல்லாத அம்மா! அது... எனக்கு ஒரு பொண்ண புடிச்சிருக்கு. ரொம்ப வருஷமா" என்றான் சிறு வெட்கம் கலந்த குரலில்.

" இதோ பூனை குட்டி வெளியில் வந்துவிட்டது... " என்று சிரித்தார் வசுமதி.

"ஆனால், அந்தப் பெண்ணிற்கு... என் காதலைப் பற்றி எதுவும் தெரியாது. அதனால்..."

"ம்... அதனால்..." என்று ராகமாக இழுத்தார் வசுமதி.

" காதலித்து திருமணம் செய்வதை விட, நான் திருமணம் செய்து அவளை காதலிக்க விரும்புகிறேன் காலம் முழுவதும்" என்றான் தவிப்புடன்.

"ம்... அப்புறம்... இதில் என்னுடைய பங்கு என்ன என்று சொன்னால் அதை நான் செவ்வனே செய்து விடுவேன்" என்று கிண்டல் அடித்தார் வசுமதி.

தன் அன்னையின் தோள்களில் இரு கரங்களையும் வைத்து, அவர் நெற்றியில் செல்லமாய் முட்டி, "அவர்களுடைய வீட்டில் பேசி இந்த திருமணத்தை, பெரியவர்கள் நிச்சயம் செய்த திருமணமாய் மாற்றித் தர வேண்டும். ப்ளீஸ்ம்மா..." என்று செல்லம் கொண்டாடினான்.

"அடேய்! உன் ஆளுமைக்கு நீ நின்றாலே ஆயிரம் பேர் போட்டி போட்டுக் கொண்டு பெண் தருவார்கள். அந்தப் பெண்ணா மறுத்து விடுவாள்? எதனால் இப்படி ஒரு முடிவு என்று நான் தெரிந்து கொள்ளலாமா சார்?"

" அம்மா நீங்கள் நினைப்பது போல் அவள் சாதாரண பெண் இல்லை. அவளை அடைவதும் எளிது இல்லை. மும்மூர்த்திகளின் காவல் கோட்டைக்குள் நிற்கும் அந்தப் பெண் தெய்வத்திற்கு என் காதல் அர்ச்சனைகளும், மந்திரங்களும் சென்றடைய வேண்டும் என்றால், தெய்வத்தின் சன்னதிக்குள் நிச்சயம் எனக்கு அனுமதி வேண்டும் உரிமையுடன்.

வானம் எப்படி பல வண்ணங்களை வாரி இறைத்து நம்மை ஆச்சரியப்படுத்துமோ, அதைப்போல வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவள் எண்ணங்களின் நிமிர்வில் அவளுள் எனை விழ வைக்கிறாள் "

" அது சரி வசீ! அந்தப் பெண்ணிடம் ஒருமுறை உன் காதலைக் கூறலாமே! கூறித்தான் பார்க்கலாமே! ஒருவேளை அந்தப் பெண்ணிற்கும் உன்னை பிடித்திருந்தால் இந்த திருமணம் இலகுவாக நடந்து முடிந்து விடுமே" என்றார்.

"ம்ஹூம்... என்னையவா? அந்த அம்மணிக்கா? காதலா? வாய்ப்பே இல்லை ராசா.

அந்த அம்மணிக்கு பிடிக்க வேண்டும் என்றால் அந்த மங்கி பிரதர்ஸ் போல் நானும் குட்டிக்கரணம் போடத்தான் செய்யணும். மரத்திற்கு மரம் தாவ வேண்டும் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

வளைந்து நெளிந்து ஓடும் நதிகள் போல் பெண்கள் ஒரு ரகம் என்றால், இந்த அம்மணியோ, கம்பீரமாய் நேர்கோடாய் அதிரடியுடன் விழுந்து எழும் அருவி... தன் வானில் சிறகை விரித்து பறக்கும் சிட்டுக்குருவி.

அந்த அம்மணியிடம் என் அன்பை வார்த்தைகளால் கொட்டித் தீர்த்தாலும், தட்டி விட்டு செல்வார்களே தவிர என்னை கட்டிக் கொள்ள சம்மதிக்க மாட்டார்கள் அம்மா.

நெருங்கவிட்டால் தானே காதல் சொல்ல முடியும். நெருப்பாய் தகித்தால்... அப்பப்பா! என்ற அம்மணி என்னை தலைகீழாய் தண்ணி குடிக்க விடுவார்களே அம்மா..." என்றான் பரிதாபமாக.

அவன் தலை முடியை செல்லமாய் கலைத்துவிட்டு வசுமதி, " அட போக்கிரி! என் மருமகளை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாயா? நீ சொல்லச் சொல்ல அவளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகரிக்குதே. பெண் என்றால் மண்ணை பார்த்து நடக்கும் உன்னை வசீகரித்து விட்டாளே. வசீகரனுக்கு ஏற்ற வசீகரி தான்" என்று சிரித்தார்.

காலை வேளையில் தன் வாக்கிங்கை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த தினகரன், இருவரின் சம்பாஷனைகளை கேட்டுவிட்டு, "ம்க்கும்... யார் அந்த வசீகரி? அதுவும் என் மகன் வசீகரனுக்கு ஏற்ற வசீகரி?" என்று கேட்டார்.

வசீகரன் தன் தாய்க்கு கண்களில் ஜாடை காட்ட, " சீர் தட்டை தூக்கிக்கொண்டு அவனுடைய மாமியார் வீட்டிற்கு நாம் செல்ல வேண்டுமாம்" என்று சிரிக்காமல் பேசினார் வசுமதி.

"பை..." என்று இருவருக்கும் பொதுவாக கூறிவிட்டு விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறினான் வசீகரன்.

" என்ன? திருமணம் என்றாலே பிடி கொடுக்காமல் ஓடும் என் மகன் வசீகரனா இது? வசுமதி இது நிஜம்தானா? " என்றார் ஆச்சரியம் மேலிட்ட குரலில் தினகரன்.

" நெடுநாள் வயல்ல காய்ச்ச காதல் கத்திரிக்காய் முத்தி, இன்னைக்கு கடை தெருவுக்கு வந்திருச்சு. நாம்தான் முன்னின்று ஏற்பாடு செய்ய வேண்டுமாம். காதல் திருமணமாய் இருப்பதை விட, பெற்றோர்கள் நிச்சயத்த திருமணமாய் இருக்க வேண்டுமாம் உங்கள் அருமை மகனுக்கு" அகம் மகிழ பதிலுரைத்தார் வசுமதி.

"அடடா... இந்த விசுவாமித்திரனின் தவத்தை கலைத்த அந்த மேனகையை நாம் உடனே பார்க்க வேண்டுமே. எப்பொழுது செல்லலாம் மதி? "

"ம்க்கும்... பெண்ணின் பெயரைக் கூட சொல்லாமல் ஓடி சென்று விட்டான். இனி தான் விவரங்கள் கேட்க வேண்டும். வசீகரின் இந்த மாற்றமே நமக்கு ஆனந்தம் தானே.

படிப்பு, தொழில் என்ற வட்டத்திற்குள் இருந்தவனை, கட்டம் கட்டிய அந்த கெட்டிகாரியை நாம் பாராட்டியே தீர வேண்டும்.
நான் கும்பிட்ட சாமி எல்லாம் எனக்கு வரம் கொடுத்து விட்டது" என்று கண் கலங்க தன் மகிழ்ச்சியை தன் கணவரோடு பகிர்ந்து கொண்டார் வசுமதி.

"ஹேய்... மதி! வசீகரனின் விருப்பம்தான் நம் விருப்பமும். வரப்போவது மருமகள் அல்ல. நம்முடைய மகள்.
நான் வசீகரனின் முதுகில் நான்கு தட்டு தட்டி நம் வீட்டிற்கு வர போகும் தேவதையின் முகவரியை விசாரிக்கிறேன். விரைவில் நம் வீட்டில் கெட்டி மேள சத்தத்தை கேட்போம்" என்றார் தினகரன் வசுமதியை தன் தோளில் சாய்த்து கொண்டு.

அலுவலகத்தில் நுழைந்ததும், தனக்கு வணக்கம் சொல்லிய அந்த நால்வரையும் கண்டும் காணாதது போல் கடந்து சென்றான் வசீகரன்.

கணினித்திரையிலிருந்து கண்ணெடுக்காமல், விழிகளும் விரல்களும் அபிநயம் பிடிக்க, நொடி நேரமும் கவனம் சிதறாமல் ஜேபி பார்க்கும் வேலையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான் தன்னறையிலிருந்த கணினித் திரை வழியாக.

அவள் கண்களில் மலர்ந்த சிரிப்பிலிருந்து கொடுக்கப்பட்ட பணியை முடித்து விட்டாள் என்று அறிந்து கொண்ட வசீகரன், தன்னாலே அலைபேசியை எடுத்து பிரைவேட் நம்பரில் இருந்து குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்தான்.

"என்னவளே!

உனக்காக காத்திருக்கிறேன்
பூங்கொத்துடன்...

மலர்களின் இதழ்கள்
உதிர்வதற்குள்,
உன் இதழ்கள் மலரட்டும்
என் காதலின் அதிர்வுகளால்..."


-ஜேகே

தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திருப்திகரமாக செய்த நிறைவுடன் தலையை நிமிர்த்தியவளின் பார்வையில் விழுந்தது, ஒளிர்ந்த செல்போனின் தொடுதிரை.

செல்போனில் வந்த குறுஞ்செய்தியை படித்தவளின் முகத்தில் யோசனை படிந்தது. பின் தளர்வாக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, அந்த வார்த்தைகளை ரசித்து ருசிக்க ஆரம்பித்தாள்.

அவள் முகம் காட்டும் ஒவ்வொரு உணர்வுகளையும் உள்வாங்கிக் கொள்ள. வசீகரன் தன் மேஜையில் இருந்த கணினித்திரையை பெரிதாக்கினான்.

இமைகள் அசையாது இருக்க உதடுகள் துடிக்க ஆரம்பித்தது. தன்னை மீறி இதழ்கள் பிரிந்து விடுமோ என்று நினைத்தவள், தன் சுட்டு விரலைக் கொண்டு இதழ் மீது வைத்து அழுத்தினாள்.

சிறிது நேரம் சென்றதும் கண்களை மெல்லத் திறந்து, தன் விரலில் சிறைப்பட்டிருந்த இதழ்களை விடுவித்து, தலையை அசைத்தபடி மெல்ல உதட்டசைத்தாள்.

"நைஸ்..." என்று ஒரு காபியை ரசிப்பது போல் கவிதையை ரசித்தாள்.

நட்சத்திரங்கள் எல்லாம் வானிலிருந்து உதிர்ந்து தன் மேல் விழுந்தது போல் மகிழ்ந்தான் வசீகரன்.

அவளிடமிருந்து பதில் செய்தி வந்ததும் பரபரப்புடன் திறந்து பார்த்தான்.

" இதழ்கள் மலர்வதால் மட்டும், காதல் மலராது" என்று பதில் செய்தி அனுப்பி இருந்தாள் ஜேபி.

" இதழ்கள் மலர்வதால் மட்டும் காதல் மலராது உண்மைதான் அம்மணி. உங்கள் இதயமும் மலர வேண்டுமே..." கைகளை தலைக்கு மேல் கட்டிக்கொண்டு, பெருமூச்சுடன் நாற்காலியின் பின் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

அனைவரின் அறிக்கைகளும் அவன் மேஜைக்கு வந்தது கிருஷ்ணாவின் அறிக்கையைத் தவிர.

நிமிர்ந்து அமர்ந்து கொண்டவன் கிருஷ்ணாவை அழைத்தான்.

" எக்ஸ்கியூஸ் மீ சார்... " வசீகரனின் அறைக்குள் நுழைய கிருஷ்ணா அனுமதி கேட்டான்.

" எஸ் கம்மின்... "

" உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை இன்னும் நீங்கள் முடிக்கவில்லை கிருஷ்ணா "

"அது..."

" பரவாயில்லை சும்மா சொல்லுங்கள். உங்களுக்கு ஏதாவது சிரமம் இருந்தால், அதனை முதலிலேயே நீங்கள் சொல்லிவிட்டால், அதற்கான தீர்வினை நாம் எளிதாகக் காணலாம்"

" இல்லை சார் கீபோர்டில் ஏபிசிடி வரிசைகள் தாறுமாறாக இருப்பதால், நம் வேலைகளின் வேகம் தடைபடுகிறது . ஏ பி சி டி வரிசைகளை சரியாக அடுக்க முடியுமா? என்று முயற்சி செய்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் பதவிசான குரலில்.

சுழல் நாற்காலியில் சுழன்றபடியே கிருஷ்ணாவை பார்வையால் அலசினான் வசீகரன்.

"என் புத்திசாலித்தனத்தை பாராட்டி எனக்கு உடனடியாக பதவி உயர்வு எல்லாம் கொடுக்க வேண்டாம் சார். ஏன்னா இன்னும் நான் ஏபிசிடி வரிசைகளை ஒழுங்காக அடுக்கி முடிக்கவில்லை. அதன் பிறகு வேண்டுமானால் யோசிக்கலாம் சார்" என்றான் கிருஷ்ணா தன் டையை சரி செய்தபடி.

"ம்... வேற..."

"வேற... கேண்டினில் சாப்பாடு கொஞ்சம் சுமார். இந்த கட்டிடத்தின் சுவற்றில் இருக்கும் லைட் கலர் பெயிண்ட்டுக்கு பதிலாக கொஞ்சம் டார்க் கலர் பெயிண்ட் அடிக்கலாம். என்னுடைய ஆறாவது அறிவுக்கும் மேல இருக்கிற ஏழாவது அறிவு என்ன சொல்லுதுனா..."

"ஓகே. ரைட்... கிருஷ்ணா. உங்களுக்கு கொடுத்திருக்க வேலைய நீங்க இன்றைக்கு முடிச்சு கொடுக்கலைன்னா, உங்களுடைய டெர்மினேஷன் ஆர்டரை வாங்கிக்கொண்டு செல்லலாம்"

"சார்..."

" யூ கேன் மூவ் நவ்... " என்று வாசலைப் பார்த்து கையை நீட்டினான் வசீகரன்.

சோர்ந்த முகத்துடன் வெளியே வந்தான் கிருஷ்ணா. நண்பர்கள் மூவரும் அவனின் முக மாற்றத்தை கண்டதும் யோசனையுடன் அவன் அருகே வந்தனர்.

"என்ன கிருஷ்? என்ன ஆச்சு?" என்றான் யாதவ்.

"இல்லை யாதவ். என்னால் முடியவில்லை. என்னால் வேலையில் முற்றிலும் கவனம் செலுத்த முடியவில்லை. வழக்கம்போல அம்மாக்கும், அப்பாக்கும் இன்றைக்கு பெரிய சண்டை. இவர்கள் இப்படி நித்தமும் சண்டை போட்டுக் கொண்டு சேர்ந்து வாழ்வதற்கு பதிலாக பிரிந்து இருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்" என்று பெருமூச்சு விட்டான்.

"ஏய்! எப்பொழுதும் நடப்பது தானே இன்றைக்கு எதற்கு இவ்வளவு தூரம் கவலைப்படுகிறாய்?" என்றான் மது.

" அட போடா! மனம் ஒப்பாமல் வாழும் வாழ்வு, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை பாதித்துவிடும் என்று கூட தெரியாமல் குழந்தைகளையும் பெற்று விடுகிறார்கள்.

பிடிக்காத திருமணத்தின் பாதிப்பை அவர்களுடன் நிறுத்திக் கொள்ளாமல் அடுத்த தலைமுறைக்கும் கடத்தி விடுகிறார்கள். அவர்களின் பொருந்தாத திருமணத்தால் பெரிதும் பாதிக்கப்படுவது அவர்கள் குழந்தைகள்தான்.

ஏன்? எதற்கு? என்று தெரியாமல் பிறந்த என்னைப் போன்ற பிள்ளைகள் அவர்களுக்கு தொல்லைகள் தானே" என்றான் கிருஷ் தலை குனிந்து கொண்டு.

அனைவரையும் பார்வையால் ஒதுங்க வைத்துவிட்டு கிருஷ்ணாவின் அருகில் வந்தாள் ஜேபி.

"கிருஷ் என்னை பார்" என்றாள் சத்தமாக.

கிருஷ்ணாவின் தலையோ நிமிரவே இல்லை.

" கிருஷ்ணாம்மா... " என்றாள் கனிவோடு.

இயலாமையை எதிர்கொண்டவனால், இயல்பான அன்பை எதிர்கொள்ள முடியவில்லை. அவன் தோள்கள் அதிர்வது மூலம் அவன் அழுவதை உணர்ந்தவளின் உள்ளம் வலித்தது.

எப்பொழுதும் குறும்புடன், விளையாட்டாய் வலம் வரும் தன் தோழனின் உள்ளம் உடைந்திருப்பதைக் கண்டவள், "டேய் கிருஷ்ணா!" என்று அதட்டினாள்.

அவளின் அதட்டல் குரலில் சட்டென்று நிமிர்ந்தவனை நோக்கி, "இதில் உன் தப்பு என்ன இருக்கிறது கிருஷ்? எதற்காக இந்த குற்ற உணர்வு உனக்கு? உன் அம்மாவிற்காக உன் அப்பாவிடமோ அல்லது உன் அப்பாவிற்காக உன் அம்மாவிடமோ பரிந்து பேச வேண்டிய அவசியம் இல்லை. நீ உன்னை புரிந்து கொண்டால் மட்டும் போதும்.

உன் உணர்வுகள் மிகச் சரியானவை. அவை சரியானவையா என்று நீ யோசிக்கவும் வேண்டாம். அவற்றை நீ அடக்க நினைக்கவும் வேண்டாம். அவர்களிடம் உனக்கு கேட்க வேண்டிய கேள்விகளை, அவர்களின் முகத்திற்கு எதிராக நேர்படப் பேசு.

உன் வலிகளை பகிர்ந்து கொள்ள உலகத்திலே உயர்ந்த நட்பாக நாங்கள் இருக்கிறோம் கிருஷ்ணா. உன்னுடைய மனப்போராட்டத்தை எங்களிடம் மறைக்காதே.

மரத்தின் நிழலிலேயே என்றும் விதை வளர்ந்து விட முடியாது. உனக்கான உலகம் இருக்கிறது. அதில் எங்களுக்கான இடம் இருக்கிறதா கிருஷ்ணா?" என்று கேட்டவளின் கைகளுக்குள் தன் முகத்தை புதைத்துக் கொண்டான் கிருஷ்ணா.

அவன் தோள் வளைவின் இரு மருங்கிலும் மதுவும், யாதவும் அணைத்துக் கொள்ள அந்த நொடியின் நெகிழ்வில், மகிழ்ச்சி பூத்தது அனைவர் உள்ளத்திலும்.

தூரத்திலிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த வசீகரன் முகத்திலும் புன்னகை பூத்தது.

சிறகுகள் நீளும்...
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
நண்பனின் கவலை தீர்க்க வேண்டுகிறவள், தன்னவனின் ஏக்கம் அறிவாளோ 😜😜😜